மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழர் வாழ்வின் ஓர் அங்கமான தங்கம் எப்படி உருவாகிறது?

ஆச்சாரி

Jul 19, 2014

thangam 8இருபது ஆண்டுகளுக்கு முன்னர் உங்களை சுற்றி இருந்த பொருள்களை நினைவிற்கு கொண்டுவந்து பாருங்கள். இன்று உங்கள் கையருகில் இருக்கும் கணினி, அலைபேசி போன்ற பொருள்கள் உட்பட பல பொருள்கள் அன்று இருந்திருக்காது. ஐம்பதாண்டுகள் மின் சென்று பார்த்தோமேயானால் இன்று வீட்டில் நிறைந்து இருக்கும் முக்கால்வாசிப் பொருள்கள் யாவும் அன்று இருந்திருக்காது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சென்றால் வீட்டின் பொருள்கள் மட்டுமல்ல வீட்டின் வடிவம், கட்டுமான பொருள்கள் அனைத்துமே மாறியிருக்கும். ஆனால் மனித நாகரிகம் தொடங்கிய காலம் முதல் இன்று வரை வீட்டில் மாறாமல் இருக்கும் ஒரே பொருள் தங்க நகை மட்டுமே.

அப்படி ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மனிதனுடன் பயணிக்கும் தங்கம் ஒன்றும் மனிதன் உயிர்வாழ அத்தியாவசமான பொருளல்ல. மாறாக தங்கம் மனித இனத்திற்கு கொடுத்த மகிழ்வை விட, துயரங்கள் அதிகம். உலகில் எத்தனை படையெடுப்புகள் தங்கத்திற்காக மட்டுமே நடத்தப்பட்டிருக்கின்றன.  அப்போர்களில் இழந்த உயிர்களை விட தங்கம் மேலானதாக இருந்து வந்திருக்கின்றது.

தங்க வேட்டைக்கு பெயர் போன கலிபோர்னியாவில் தங்க வேட்டையின் பெயரில் உண்மையில் நடந்தது மனித வேட்டை தான். தங்க வேட்டை காலங்களில் ஒரு இலட்சம் அமெரிக்க இந்தியர்களை கொன்று குவித்து தங்கத்தை தேடியிருக்கிறார்கள். கலிபோர்னியாவில் 1845 ஆம் ஆண்டு 150,000 மக்களாக இருந்த அமெரிக்க இந்தியர்கள் 1870 ஆண்டில் 30,000 மக்களாக குறைக்கப்பட்டனர். அமெரிக்க இந்தியர்கள் மட்டுமல்ல தங்க வேட்டைக்கு சென்ற வெள்ளைக்காரர்களும் கூட கடும் அழிவை சந்தித்திருக்கின்றனர். 1849 முதல் 1854 வரை ஐந்தாண்டுகளில் தங்க வேட்டையில் ஈடுபட்டவர்களின் இழப்புகளை ஹிண்டன் ஹெல்பர் என்பவர் கீழ்கண்டவாறு பட்டியலிட்டிருக்கின்றார்.

கொலை செய்யப்பட்டவர்கள் : 4200

தற்கொலை செய்து கொண்டவர்கள்: 1400

மன நோயாளியாகியவர்கள்: 1700

நீர் மற்றும் நில வழி பயணத்தில் இறந்தவர்கள் : 2200

அமெரிக்க இந்தியர்களால் கொல்லப்பட்டவர்கள்: 1600

சுரங்கத்தில் உணவு மற்றும் மருந்து பற்றாக்குறையால் இறந்தவர்கள்: 5300

மொத்தம் 16400

கலிபோர்னியாவில் கிடைத்த தங்கம், இதை விட அதிகமான எண்ணிக்கையிலான மனிதர்களையா வாழ வைத்திருக்கின்ற போகின்றது? ஒரு இலட்சம் மக்களின் உயிரைப் பறித்து எத்தனை கோடி மக்களுக்கு மகிழ்வை கொடுத்தாலும் எப்படி உயர்வான பொருளாக இருக்க முடியும்?

இருப்பினும் இன்றும் தங்கம் தான் உலகை ஆள்கின்றது. மனிதனின் உடைமையாக இருக்க வேண்டிய தங்கம் இன்று மனிதனை  உடைமையாகக் கொண்டிருக்கின்றது.

thangam10தங்கத்திற்கு முன்னும் பின்னும் கண்டுபிடிக்கப்பட்ட எத்தனையோ பொருள்கள் மதிப்பிழந்துவிட்டன. 1820 ஆண்டு அலுமினியத்தை மண்ணிலிருந்து அல்ப்ரெட் வில்ம் என்ற ஜெர்மன் வேதியாளர் பிரித்து காட்டிய பொழுது உலகமே அலுமினியத்தை கொண்டாடியது.  பிரெஞ்ச் அரசு அரச நகைகளுடன் அலுமினிய கட்டிகளை அடுக்கி காட்சிப்படுத்தியது. பிரெஞ்ச் பேரரசர் மூன்றாம் நெப்போலியன் மிக மதிப்பு மிக்க விருந்தினருக்கு அலுமினிய கரண்டிகளில் உணவு பரிமாறினார் (மற்றவர்களுக்கு தங்க கரண்டிகள் பயன்படுத்தப்பட்டன). அமெரிக்கா தனது அலுமினிய செல்வாக்கைக் காட்ட வாசிங்டன் நினைவு சின்னத்தின் உச்சியில் ஆறு பவுண்ட் எடை உள்ள அலுமினிய பிரமிடை நிறுவியது. ஆனால் இன்று அலுமினியத்தின் நிலை என்ன? அலுமினியத்தை தங்கத்தின் அருகில் வைப்போமா? பலரும் பிராணிகளுக்கு கூட அலுமினிய பாத்திரத்தில் உணவு வைப்பதில்லை. உச்சிக்கு சென்ற அலுமினியம் ஒரு நூற்றாண்டுகளுக்குள்ளாகவே வீழ்ச்சி அடைந்துவிட்டது. ஆனால் தங்கம் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக மனிதனை ஆண்டு வருகின்றது.

thangam11அப்படி என்ன தான் இருக்கின்றது இந்த தங்கத்தில்? இதை நாமே உற்பத்தி செய்துவிட முடியாதா என்று பல ஆராய்ச்சியாளர்களும் முயன்று பார்த்துவிட்டனர். 1924 ஆம் ஆண்டே ஒரு ஜப்பானிய வேதியாளர் பாதரசம் அணுவை மாற்றி தங்க அணுவை உருவாக்கினார். அதன் பின்னர் பல ஆராய்ச்சியாளர்களும் பாதரசத்தில் இருந்து தங்கத்தை உருவாக்கும்  பல வழிகளை கண்டறிந்துவிட்டனர். 1980 ஆம் ஆண்டு கிலென் ஸீபோர்க் என்பவர் பிஸ்மத் உலோகத்தில் இருந்து தங்கத்தை உருவாக்கி காட்டினார். இருப்பினும் இம்முறைகளின் மூலம் ஒரு கிராம் தங்கத்தை உருவாக்க ஆகும் செலவிற்கு ஒரு பவுன் தங்கத்தையே வாங்கிவிடலாம். சென்ற ஆண்டு நச்சு வேதிய திரவத்தில் வாழும் பாக்டீரியா நுண்ணியிர்கள் தங்கத்தை உருவாக்குவதை கண்டறிந்து இருக்கின்றனர். ஆராய்ச்சியாளர்களை விட குறைந்த செலவில் பாக்டீரியாக்களால் தங்கத்தை உருவாக்க முடியுமா என்ற ஆராய்ச்சி இப்பொழுது முடுக்கிவிடப் பட்டிருக்கின்றது. பாக்டீரியா தங்கம் நகைக்கடைக்கு வரும் பொழுது தான் நம் குடும்பத்தினர்  நம்புவார்கள்.

இப்படி அனைத்து புதிர்களையும் உள்ளடக்கிய தங்கத்தை எப்படி தான் உருவாக்குகிறார்கள் என்று பார்க்கலாமா?

thangam4ஆண்டுதோறும் உலகத்திற்கு தேவையான தங்கத்தில் பாதி தென்னாப்பிரிக்கச் சுரங்கங்களில் இருந்து தான் உருவாகின்றது. அனைத்தும் வெறும் கருப்பு களிமண்ணிலிருந்துதான் தயாராகிறது என்றால் வியப்பாக இருக்கும். மண்ணில் பளபளவென்று தெரிந்தால் அது தங்கம் என்று சொல்லிவிட முடியாது.

10,000 அடிக்குக் கீழே கிடைக்கும் உலோக மண்ணை மழமழவென்று பொடிசெய்து நீரிலும் சயனைடிலும் கழுவிய பின்தான் மஞ்சள் பொன் துளிகள் கண்ணுக்குத் தெரியும். குழகுழ என கருப்பு களிமண் கலந்து இருக்கும்.

thangam2இந்தக் கருப்பு தங்கத்தை துத்தநாகப் பொடி சேர்த்து உருக்கினால் ‘புல்லியன்’ என்னும் பளபளப்பான மஞ்சள் கட்டித் தங்கம் (பார்) கிடைக்கிறது. இப்படி ஒவ்வொரு கட்டியும் டிராய் எடைப்படி 1,000 அவுண்ஸ் இருக்கும். சுரங்க வேலை நடக்கும் போது நாள் ஒன்றுக்கு இப்படி 45 தங்கக் கட்டிகள் தென்னாப்பிரிக்காவில் தயாரிக்கப்படுகின்றன. சுரங்கங்களிலிருந்து இந்தத் தங்கக் கட்டிகள் மோட்டார், புகைவண்டி, வானூர்தி மூலமாக ஜெர்மிஸ்டன் என்ற நகருக்குச் செல்லும். இந்த நகரம் ஜோஹென்ஸ்பர்க்குக் கிழக்கில் 12 மைல் தொலைவில் உள்ளது. தங்கத்தை சுத்தம் செய்வதில் உலகத்திலேயே மிகப்பெரிய தொழிற்சாலை ராண்டு ரிஃபைனரிஜெர்மிஸ்டனில்  இருக்கிறது. அங்கே தங்கக் கட்டிகளை மறுபடியும் நிறுத்திச் சரியாக இருக்கின்றதா என்று பார்வையிடுவார்கள். பிறகு கிராஃபைட் என்னும் பென்சில் கரியாலான கொப்பறைகளை உருவாக்குவார்கள். இந்தக் கொப்பறைகளை கொதித்துக் கொண்டிருக்கும் தணலில் கழுத்து மட்டத்திற்கு புதைத்திருப்பார்கள். இப்படி உருக்கியதும் அந்தத் தங்க குழம்பை நன்றாக கலக்குவார்கள். சிறு கிண்ணங்கள் போல பல இடங்களில் பொருத்தி, மாதிரி பார்ப்பதற்கு என்று அமைந்த ஒரு கப்பியை உருகும் தங்கத்தில் தோய்த்து எடுப்பார்கள்.

thangam3இதிலிருந்து பிறகு அந்தத் தங்கக் கட்டிகளில் தங்கமும் வெள்ளியும் எவ்வளவு என்று தீர்மானிப்பார்கள். இப்படி சுரங்கத்தில் இருந்து கிடைத்த தங்கக் கட்டி ஒவ்வொன்றிலும் 874 அவுன்ஸ் தங்கமும், 90 அவுன்ஸ் வெள்ளியும் மீதம் 36 அவுன்ஸ் மற்ற உலோகங்களான துத்தநாகம், இரும்பு, செம்பு, ஈயம் முதலியவை கலந்திருக்கும்.

மாதிரி பார்த்தப் பிறகு இந்த தங்கக் கட்டிகளை சுத்தம் செய்வதற்காக 400 அவுன்ஸ் கொண்ட மொத்தைகளாக்குவார்கள். அந்த மொத்தைகளைக் களிமண்ணால் செய்த கொப்பறையில் போட்டு உருக்குவார்கள். பிறகு போரக்ஸ் உப்பை அதில் சேர்த்து குளோரின் ஆவியை அந்த தங்கத்திரவத்தில் செலுத்துவார்கள். போரக்ஸ் மட்ட ரகமான உலோகப் பொருள் கலந்த ஆக்ஸைடுகளோடு சேர, குளோரின் ஆவி, மட்டரக உலோகங்கள்,வெள்ளி இவற்றோடு கலந்து அந்த  உலோகங்கள் அடங்கிய குளோரைடுகளாக மாறி மேலே மிதக்கும். அப்போது இவற்றை நீக்கி விடலாம். இப்படிச் சுத்தமாக்கிய தங்கத்தை வேறொரு அடுப்பில் வைத்து காய்ச்சி நன்றாகக் கலக்கிய பின் மாதிரி எடுத்து சோதிப்பார்கள்.

பிறகு 400 அவுன்ஸ் எடை கொண்ட அசல் தங்க கட்டியாக்கி உலக தங்கமார்க்கெட்டுக்கு அனுப்புவார்கள். உலோகம் குளோரைடுகளிலிருந்து வெள்ளி கிடைக்கின்றது. அதை 1000 அவுன்ஸ் கட்டிகளாக்குகிறார்கள். தென்னாப்பிரிக்கத் தங்கம் பெரும்பாலும் லண்டன் தங்க மார்க்கெட்டில் விற்பனை ஆகிவருகிறது. புகைவண்டி மற்றும் கப்பல் வழியாக அனுப்புவது வழக்கம். சுத்தமாக்கிய தங்க கடடிகளை மரப்பெட்டிகளில் மூடிவைப்பார்கள்.

லண்டனில் உள்ள திராக் மார்ட்டன் தெருவில் உள்ள இங்கிலாந்து வங்கியில் கொண்டு போய் சேர்ப்பார்கள். அங்கிருந்துதான் உலகம் முழுவதும் உள்ள வியாபாரிகளுக்கு அனுப்பி வைப்பார்கள். இங்கிலாந்து வங்கி மூலம்தான் இந்த தங்கத்தை விற்க ஏற்பாடு செய்கிறார்கள். தென்னாப்பிரிக்கா ரிசர்வ் வங்கியின் ஏஜென்ட்டாக இங்கிலாந்து வங்கி செயல்பட்டு வருகிறது. லண்டன் மார்க்கெட் விலையையே ஆதாரமாகக் கொள்கிறார்கள்.

thangam5ராண்டு ரிபைனரி என்னும் தங்கம் சுத்தப்படுத்தும் ஆலையில் மின்சாரத்தின் மூலம் காற்றிலிருந்து தங்கம் எடுக்கும் முறையை கடைபிடித்து ஆலையில் மின்சாரத்தின் மூலம் காற்றிலிருந்து தங்கம் எடுக்கும் முறையை கடைபிடித்து வருகின்றனர். இதனால் அடுப்பில் தங்கம் உருக்கும் போது உஷ்ண ஆவி கிளம்பி தங்கம், வெள்ளி தூள்கள் வெளிக்கிளம்பி காற்றோடு போய் விடாமல் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பவுன் தங்கத்தை சேமிக்க முடிகின்றது. இது இல்லாமல் இன்னும் பல வழிகளில் தங்கம் வீண்போகாமல் பார்த்துக் கொள்கின்றார்கள்.

இத்தனை செயல்முறைகளையும் தாண்டி தான் தங்கம் உங்கள் கைகளில் வந்து சேர்கின்றது. அடுத்த முறை நீங்கள் தங்க நகைகளை பார்க்கும் பொழுது உங்களுக்கு கொல்லப்பட்ட மக்களோ, அலுமினியமோ, பாக்டீரியாவோ நினைவிற்கு வரலாம்.

Loughborough university toolbox for sustainable design essay corrector online free education

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழர் வாழ்வின் ஓர் அங்கமான தங்கம் எப்படி உருவாகிறது?”

அதிகம் படித்தது