மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழிசைக் கலைஞர் ஆத்மநாதனுடன் ஒரு சந்திப்பு

ஆச்சாரி

Jul 1, 2013

தமிழிசைக் கலைஞர் ஆத்மநாதனுடன் ஒரு சந்திப்பு

இந்துஸ்தானி இசை, கர்நாட்டிக் இசை, மேற்கத்திய இசை, தெலுங்கு கீர்த்தனை, பாப், ராப் என இசைகளில் பல வடிவங்கள் தமிழகத்திற்குள் நுழைந்து விட்டது.  தமிழரையும் அதனை கேட்கும் நிலைக்குத்  தள்ளப்பட்ட இக்காலச் சூழலிலும் தமிழிசை ஒன்றையே தன் ­மூச்சாகக் கருதி இசைத்தும், பாடியும் வரும் தமிழிசைக் கலைஞர் திரு.ஆத்மநாதனைப் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டாமா?

இவரின் பூர்வீகம் தஞ்சை மாவட்டம்  சாலிய மங்கலத்தை அடுத்த திருபுவனம் என்ற கிராமம். அப்பா குருமூ­ர்த்தி, அம்மா சந்தான லஷ்மி. விவசாயத்தொழிலை அடிப்படையாகக் கொண்டு இக்குடும்பத்தில் உள்ள குரு­மூர்த்தி அப்பொழுதே 15  ஆண்டுகளாக, பஞ்சாயத்துத் தலைவராக பதவி வகித்தவர், அம்மா சந்தான லக்ஷ்மியின் அப்பா பெயர் நாகலூர் கண்ணுச்சாமி. இவர் அன்றே ஆர்மோனியம் வாசிக்கும் கலைஞராகவும், தெருக்கூத்தில் நடிக்கும் நடிகராகவும் விளங்கியவர். இரணியன் நாடகத்தில் நாவலூர் கண்ணுச்சாமி அவர்கள் நடித்துப் புகழ்பெற்றவர். அதுபோல் குரு­மூர்த்தி அவர்களும் மகாபாரத்தில் அபிமன்யுவாக நிடித்துப் புகழ்பெற்றவர். இப்படிப்பட்ட கலைக்குடும்பத்தின் வாரிசாக வந்தவரே நம் தமிழிசைக் கலைஞர் ஆத்மநாதன்.

குழந்தைப் பருத்தில்:

நாகலூர் கண்ணுச்சாமி அவர்கள் ஆர்மோனியம் வாசிப்பார், பாடுவார். இவர் தமிழ் சினிமாவில் பாடிய பழம்பெரும் பாடகரான கிட்டப்பா நிறுவனத்தில் வேலை பார்த்துள்ளார். இந்தப் பெருமைக்குச் சொந்தகாரரான நாகலூர் கண்ணுச்சாமி அவர்கள் ஆத்மநாதன் குழந்தையாக இருக்கும் போது பக்திப்பாடல்கள் பலவற்றை கற்றுக்கொடுத்துள்ளார். தியாகராஜ பாகவதர், கே.பி சுந்தராம்பாள், செருகளத்தூர் சாமா போன்றவர்கள் பாடிய பக்திப் பாடல்களை ஆத்மநாதனுக்குக் கற்றுக்கொடுத்து குழந்தைப் பருவத்திலேயே இசை மீது ஆர்வத்தை ஏற்படுத்தியவர் நாகலூர் கண்ணுச்சாமி.  தாத்தாவான இவர் வீட்டிலேயே வளர்ந்த ஆத்மநாதனுக்கு அப்போது வயது பத்து.

பள்ளிவாழ்க்கை:

தனது 10ம் வகுப்பு வரை இசை கற்றுக் கொள்ளாமல் இருந்த ஆத்மநாதன், இதற்குப் பிறகு இசைக் கற்றுக் கொண்டார். தஞ்சாவூரில் கலைமாமணியான போலக்குடி  கணேசய்யர் என்பவரிடம் முறையாக 16ஆம் வயதில் சங்கீதம் கற்றார். இவரிடம் முதலில் வாய்ப்பாட்டு இசை கற்ற ஆத்மநாதனுக்கு, இசை என்பது உணர்விலேயே கலந்து இருந்ததால் இசை கற்ற 2ம் வருடத்திலேயே தஞ்சையில் முருகபக்தரான கிருபானந்த வாரியார் தலைமையில், கிருஷ்ணன் கோவிலில் தனது இசையை அரங்கேற்றம் செய்தார். ஆத்மநாதன். 10 வருடம் இசை கற்ற பின்பே அரங்கேற்றம் செய்யும் வழக்கத்தை உடைத்து இரண்டு வருடத்திலேயே அரங்கேற்றம் செய்தாறென்றால் இவரின் இசைப் புலமையை நாம் அறிந்து கொள்ள முடியும்.

ஆனால் இந்த இரண்டு வருடமும் இசையை அன்றி இவர் நேசித்தது, சுவாசித்தது எதுவுமில்லை என்றே கூறலாம். விளையாட்டு, சினிமா என எந்தப் பொழுது போக்கிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாமல் இரவு, பகலாக பாடுவது ஒன்றையே தனது குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்ததின் பலனை இன்று இவர் அறுவடை செய்துள்ளார் என்பது உலகம் அறிந்த உண்மையாகும். இவர் வாழ்ந்த கிராமத்தில் ஆற்றங்கரை, குளத்தங்கரை என தான் சென்ற இடத்திலெல்லாம் பாடிக்கொண்டே சென்றதைக் கண்ட ஊர் மக்கள், இவரைப் பார்த்து, “விவசாயம் பாக்கமா இப்படிப் பாடிக்கொண்டு சுத்திட்ருக்கானே இந்தப் பய” என கிண்டல் சொல்வதைக் கூட இவர் கண்டுகொள்ளாத அளவிற்கு இசை இவரைப் பிடித்து வைத்திருந்தது.

கிருபானந்த வாரியார் தலைமையில் இவரின் அரங்கேற்றத்திற்குப் பின் கிண்டல் செய்த இந்த ஊர் மக்கள் இவரை மதிப்புடனும்,  மரியாதையுடனும் பார்த்தனர்.

இசைகுருக்கள்:

புரந்தர தாசன் அவர்களின் பாடல்களை தஞ்சை பிரேமா அவர்களிடம் கற்றுக்கொண்டார். அபூர்வ ராகங்களை தஞ்சை ஜெயசங்கர் ஜோஷி அவர்களிடம் கற்றுக்கொண்டார். அபூர்வ ராங்கள் என்பது கைக்கவசி, பிந்துமாதவி, நாசிக்க பூசணி போன்ற ராகங்கள். மேலும் தமிழ் கீதம், தமிழ் வர்ணம் போன்ற தமிழ் வர்ணனைகளை இவர்களிடம் ஆத்மநாதன் கற்றுக்கொண்டார்.

குருகுல வாசம் போல இசை படித்த இவர் தஞ்சை மாவட்டத்தில் உளள பல பகுதிகளுக்குச் சென்று கச்சேரி நடத்தியதோடு, புதுக்கோட்டை, மதுரை, திருச்செந்தூர், நாகர்கோவில் எனப் பல மாவட்டங்கள் தோறும் சென்று பாடி தமிழிசை வளர்த்தார், தானும் வளர்ந்தார்.

சென்னை வருகை:

1992ம் ஆண்டு சென்னை செல்ல வேண்டும் என இவருக்கு தீராத ஆசை தோன்றியது. இந்த ஆசையை அறிந்த இவரின் குரு போலக்குடி கணேசய்யர் “சென்னை என்பது இசை கடலாச்சே அங்க போய் நீ எப்படி வாழப்போற” என்று அறிவுறுத்தியதோடு ஆத்மநாதன் இன்று  வரை மறக்க முடியாத ஒரு அறிவுரையை வழங்கினார்.

“உனது உயர்வுக்கு உதவுகின்றர்களை நீ நினைத்துக்கொண்டே இருந்தால், நீ உயர்ந்து கொண்டே இருக்கலாம்”  எனக்கூறி ஆத்மநாதனை ஆசீர்வதித்து அனுப்புகிறார் போலக்குடி கணேசய்யர். இந்த வார்த்தைகயை இன்றுவரை நான் கடைபிடிப்பதால் தான் இன்று வரை உயர்ந்து வருகிறேன் என ஆத்மநாதன் கூறுகிறார்.

1992ஆம் ஆண்டு சென்னை வருகிறார். வயலின் சக்ரவர்த்தியான பத்மஸ்ரீ குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களைச் சந்தித்து உதவிகேட்க, இதன் மூ­லம் இவரது இசையமைப்பில் 8 ஆண்டுகள் உதவியாளராக ஆத்மநாதன் இருந்தார். இவரின் இசையில் தேவாரம், திருவாசகம், திருப்பாவை, போன்ற பக்திப்பாடல்களை ஆத்மநாதன் பாடியிருப்பது பெருமைக்குரியதாகும். இன்று நான் இசையமைப்பாளராக இருக்கக் காரணம்  குன்னக்குடி அவர்களிடம் எட்டு ஆண்டுகள் நான் கற்ற அந்த இசை அனுபவமே எனப் பெருமையாகக் கூறுகிறார் ஆத்மநாதன்.

இசைப்பணி:

1997-ல் சென்னையில் உள்ள தமிழிசைக் கல்லூரியால் விரிவுரையாளராக 3 ஆண்டுகள் இருந்தார். அப்போது மாணவர்களுக்கு  தமிழ் கீதம், தமிழ் வர்ணனை, தமிழ் கீர்த்தனைகள் போன்றவற்றை பயிற்சி அளித்தார். தமிழிசையில் அதிக ஈடுபாடு வந்ததற்கு இக்கல்லூரியில் பணியாற்றியதே காரணம் என்கிறார். காலை நேரம், மாலை நேரம் என இரு நேரமும் கல்லூரியில் பணியாற்றி இவர் மாலை நேரக் கல்லூரி மாணவர்கள் 20 பேருக்கு பயிற்சி அளித்து “சேர்ந்திசை”  நிகழ்தியது  இவரைப் பலரும் புகழச் செய்தது.

2000ம் ஆண்டில் கல்லூரிப் பணியை விட்டு வெளியே வந்தவர் “சங்கீதி சாகர் இசைக் கடல் பண்பாட்டு அறக்கட்டளை” என்ற இசை மையத்தை ஆரம்பித்தார். இங்கு வாய்ப்பாட்டு இசை மட்டுமே கற்றுக்கொடுத்தார். இதில் படித்து பல மாணவர்கள் பயனடைந்தனர் ஸ்ரீமுத்தரா, நித்திய சீனிவாசன், மார்க்கபந்து, யாழினி நிம்பி (USA) சத்திய சீலன், பெங்களூர், ரூபராஜ், தாமிணி சௌந்தர்யா, சிரன், யாழினி குமரன் (USA) ஐஸ்வரியா, யாழினி பொற்செழியன், நம்பி பொற்செழியன் (USA FETNA) போன்று நன்கு மேடைகளில் பாடிவரும் மாணவர்களை உருவாக்கியிருக்கிறார்.

இசையில் சாதித்தவை:

* இதுவை (1978 முதல் 2013 வரை) 1000 தமிழிசை மேடைக் கச்சேரி நகழ்த்தியுள்ளார்.

* 20 (ஆல்பம்) குறுந்தகடு பாடி வெளியிட்டுள்ளார்.

* 10 (ஆல்பம்) குறுந்தகடு இவர் இசை அமைத்தார்.

*  இவரின் இசையின் பாடிய பிரபல பாடகர்கள் க.சுசிலா, வாணி ஜெயராம், மகாநிதி ஹோபனா, L.R..ஈஸ்வரி, ஸ்ரீ உத்ரா, ஐஸ்வர்யா, சத்யசீலன், காயத்திரி, சிரன், அனுராதா தினகரன், மருத்துவர். எஸ். வெங்கடேசன், மஹதி போன்றவர்கள் பாடியுள்ளனர்.

பெற்ற விருதுகள்:

1.    கிருபானந்த வாரியார் தலைமையில் திருச்சி பாரதன் எழுதிய முருகன் பக்தி பாடல்களை பாடியுள்ளார். இதற்குப் பெரிய விழாவாக சீர்காழி கோவிந்த ராசன் முன்னிலையில் கிருபானந்த வாரியார் ஆத்மநாதனுக்கு வழங்கிய பட்டம் “குகன் இசைச் செல்வர்” என்ற பட்டம் வழங்கப்பட்து. 1985 ல் 25 வயதில் பெற்ற பட்டமாகும்.

2.    ராஜராஜன் கல்விப் பண்பாட்டுக் கழகத்தின் சார்பாக சந்திரகாசன் மாவட்ட ஆட்சியல் தலைமையின் சார்பில், மருந்துவர் செல்லப்பா அவர்களால் பட்டுக்கோட்டையில் “இன்னிசை ஏந்தல்” என்ற விருது வழங்கப்பட்டது.

3.    நாகராஜனார் அறக்கட்டளை சார்பாக ஆர்.எம்.விரப்பன் அவர்களால் “நல்லிசைத் திலகம்” என்ற பட்டம் சென்னை தியாகராசர் கல்வி அரங்கத்தில் வழங்கப்பட்டது.

4.    வடலூர் அருளப்பா இசைச் சங்கத்தின் சார்பாக “அருட்பா இசைமணி” என்ற பட்டத்தை பழனிச்சாமி (மாவட்ட ஆட்சியர்) அவர்கள் வழங்கினார்.

5.    திருவருள் திருச்சபை சார்பாக “குகஸ்ரீ” என்ற பட்டம் 2001-ல் வழங்கப்பட்டது.

6.    2010-11 ம் வருடம் தமிழ் நாட்டு அரசு கலைப் பண்பாட்டுத்துறை சார்பாக “கலைஞன் மணி” என்ற பட்டம் வழங்கப்பட்டது.

7.    தென்கை கலை இலக்கியக் கழகம் சார்பாக திருச்சியில் “தமிழ் இசைத் திலகம்” என்ற பட்டத்தை வைரமாலை அந்தோணி சாமி அவர்கள் வழங்கினார்.

8.    Ministry of Culture என்ற இந்திய கலை மையத்திலிருந்து Karnatic Music award, Wocal award karnatic Music Seanior Followship- 2008 என்ற விருது வழங்கப்பட்டு மாதம் 12 ஆயிரம் ரூபாய் என 2 வருடத்திற்கு வழங்கியது இந்திய அரசு.

அமைப்பும் பொறுப்பும்:

* சங்கீத சாகர் கல்சுரல் டிரஸ்ட் -ன்  நிறுவனர்.

* வடலூர் அருட்பா இசைச் சங்கத்தின் செயலாளர்.

*  தஞ்சை புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில்  நவராத்திரி விழாவின் செயலாளர்.

*  திருவையாறு ஆராதனை விழாவின் நிர்வாக உறுப்பினர்.

இப்பெருமைக்குரிய தமிழ் இசை அறிஞர் திரு.ஆத்மநாதன் அவர்களை கீழ்பாக்கம் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினேன்,அவற்றில் சில…

கேள்வி  : தமிழிசை வரலாறு பற்றிக் கூறுங்கள்?

ஆத்மநாதன்  :  தமிழிசை என்பது 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவானது. நம் இசை பற்றிய இலக்கண நூல்கள் அன்றே இருந்தன, அதில் களரியா, விரை, முதுநாரை, முதுகுருகு, இசை நுணுக்கங்கள், பஞ்ச மரபு போன்ற நூல்கள் குறிப்பிடத்தக்கவை. பரதநாட்டியக் கலை என்பது தமிழ் நாட்டிற்கு உரிய கலையே,, தவிர இயல், இசை நடனமும் தமிழகத்தில் தொன்றுதொட்டு வந்த இரட்டைக் கலைகளாகும்.

13-ம் நூற்றாண்டின் பின் தமிழர் இசை அந்நியர் படையெடுப்பால் தாழ்ந்தது. நாயக்கர்கள் படையெடுப்பால் தெலுங்கு இசையானது முக்கியத்துவம் பெற்றது. தமிழிசை பாடியவர்கள் அரசவையில் அரசனை மகிழ்விக்க தெலுங்கு கீர்த்தனைப் பாடல்களையே பாடி பிழைத்து வந்தனர். தமிழ்ப்புலவர்களுக்கு இதைப் பாடிப்  பிழைப்பதைத் தவிர வேறு வழியில்லை. இந்தப் பழக்கத்தால் தெலுங்கு, கர்நாட்டிக் பாடல்கள் பரவியது.

தியாகராஜர், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் தெலுங்கிலும், வடமொழியிலும் கீர்த்தனைகளை எழுதினர். தமிழிசை மும்மூ­ர்த்திகளான முத்துத்தாண்டவர், அருணாச்சல கவிராயர், மாரிமுத்து கவிராயர் தமிழிசைக்குப் பெருமை சேர்த்தனர்.

தமிழிசையானது கீர்த்தனை வடிவத்தில் எடுப்பு, தொடுப்பு, முடிப்பு என்று  இருந்த பாடல் முறையை  முதன் முதலாகக் கொண்டு வந்தவர் முத்துத்தாண்டவரே. இதையே பிற்காலத்தில் பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற முறையில் கீர்த்தனை  எழுதத் தொடங்கினர்.

கர்நாடகம் என்றாலே பழமையைக் குறிக்கும் சொல். தமிழிசையும் பழமையானது என்பதால் இது பொருத்தமானதே. எனவே உலகின் தொன்மையான இசை தமிழிசை மட்டுமே. 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இசையை (ச,ரி,க,ம,ப,த,னி) ஏழாகக் கண்டவர்கள் தமிழ்கள். இன்றுவரை 8 வது இசையை எந்த அறிஞனும் கண்டுபிடிக்க முடியவில்லை.

பண் என்பதை ராகம் என்றும், ஆலத்தியை ஆலாபனை என்றும், இசையை சங்கீதம் என்றும் மாற்றிவிட்டனர். வடமொழியாளர்கள்  “இசைத்தமிழ்” என்றாலே அது தமிழ் நாட்டு சங்கீதம் தான் என நாமக்கல் கவிஞர் தெள்ளத் தெளிவாகக் கூறுகிறார்.

இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்திலும், அடியார்க்கு நல்லார்  உரையிலும்  கூறிய இசைக்கலைதான் காலத்திற்கேற்ப மாறுபட்டு கர்நாடக சங்கீதமாக நம் காதில் விழுகிறது இன்று.

தமிழகத்திலுள்ள தமிழ் மக்களும், அமெரிக்காவிலுள்ள தமிழ் மக்களும் தங்களின் இசைப்பாட்டு தாய்மொழியில் தான் இருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். ஆனால் தமிழ்நாட்டு இசை அரங்குகளில் இசைவாணர்கள்  தமிழிசை பாடல்களியே பாடவேண்டும் என வலியுறுத்த வேண்டும்.

கேள்வி    : உங்களின் நாடக (நடிப்பு) அனுபவம் பற்றி

ஆத்மநாதன்     : 1986ல் இந்திரா, பார்த்த சாரதி எழுதிய “நந்தன் கதை” என்ற நாடகத்தில் பாடிக்கொண்டே நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்நாடகத்தை தமிழ் பல்கலைக்கழகத்தின் பேரா.  ராஜு இயக்கினார். இந்த நாடகம் தென் மாநில நாடகப்போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றது. டெல்லியில் “சங்கீத நாடக அகாதெமு” -யில் நடைபெற்றது.  இந்த நாடகத்தை விமர்சகர் சுப்பிடு அவர்கள் பார்த்து”  Times of India பத்திரிக்கையில் “இசையும் நாட்டியமும் இந் நாடகத்திற்கு ஜீவன் உண்டாக்கியது” என எழுதினார்.

பல மாநிலங்களில் அரங்கேறியது இந்த நந்தன் கதை. 2013ல் வட அமெரிக்க தமிழ்ச் சங்க பேரவை சார்பாக நியூஜெர்சியில் இந்நாடகம் அரங்கேறியது. இதில் நான் நந்தனாக நடித்தேன். இதை இயக்கியவர் ராமசாமி அவர்கள். இந்நாடகத்தைப் பார்த்து (FETNA) அமெரிக்க தமிழ்மக்கள் வியந்து போனார்கள். எங்கள் வாழ்வில் இதுபோல ஒரு நாடகத்தைப்  பார்த்ததில்லை என புகழ்ந்தனர்.

மேலும் இந்திரா பார்த்த சாரதியின் கதையை பேரா. ராஜீ அவர்கள் நாடகமாக இயக்கினர். “கொங்கைத்தீ” எனற பெயர் கொண்ட இந்நாடகத்தில் நான் கோவலனாக நிடித்துப் புகழ்பெற்றேன்.

கேள்வி    :  2011ல் வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்க விழாவில் தாங்கள் கலந்து கொண்டது பற்றி:

ஆத்மநாதன்    :  இசைப் பயணமாக அமெரிக்காவில் (FETNA)  சார்லஸ்டன் என்ற நகரத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. நான் பாடிய தமிழிசையை அம்மக்கள் ரசித்து அனுபவித்துக் கேட்கின்ற மக்களை அங்குதான் சந்தித்தேன். எனக்கு இந்த நில்ல வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர் பொற்செழியன்  என்பவர்.

மேலும் அமெரிக்காவில் நியூஜெர்சி, அட்லாண்டா, மின்னியா போலிஸ் போன்ற இடங்களில் தமிழிசை நிகழ்ச்சியை நடத்தினேன். இந்தத் தமிழிசையை மேலும் வளர்க்க வேண்டும், உலகமெலாம் பரவவேண்டும் என்பதே என் ஆசை. இந்த ஆசையானது அமெரிக்கா போன பின் தான் எனக்குள் தீவிரமாக ஏற்பட்டது. தவிர அமெரிக்கத் தமிழ் மக்களின் தமிழ் பற்றைப் பார்க்கும் போது என் நெஞ்சம் நெகிழ்ந்தது.

கேள்வி   :  தமிழிசை வளர்த்த சீர்காழி ­மூவர் குறித்த அறிவு, இசை வல்லுனர்களிடமும், இசை ஆர்வலர்களிடமும் எப்படி உள்ளது?

ஆத்மநாதன்   :  தமிழிசை பாடும் வாய்ப்பு கிடைத்தால் இசைக்கலைஞர்கள் எங்கும் அதை நாடி செல்வார்கள். காரணம் இசைக் கலைஞர்கள் பொதுவானவர்கள். தமிழிசைக்கு மேடை அமைத்துக்கொடுத்தால் எல்லோருமே பாடுவார்கள். வள்ளலாருக்கு வடலூரில் பாடுவது போல, திருவையாரில் பாடுவது போல் தமிழிசைக்கும் ஒரு மிகபெரும் நகழ்ச்சியை ஆண்டுதோறும் நடத்த தமிழர்கள் முயற்சி எடுத்தால் சிறப்பாக இருக்கும்.

கேள்வி    :  கீர்த்தனையின் தந்தை என்று வழங்கப்பட்டவர் முத்துத்தாண்டவர். இவர் வாழ்ந்த காலம் 1500. ஆனால் கீர்த்தனைகளாக இவர் எழுதிய பாடல்களை வெகுவாகப் பாடாமல் தெலுங்கு கீர்த்தனைகளையே இசையறிஞர்கள் பாடுவது ஏன்?

ஆத்மநாதன்    :  தமிழிசையைப் பாடுவதற்கென்று தமிழ் நாடு முழுதும் தமிழர்கள் மேடை அமைத்துக்கொடுத்தால் நிச்சயம் தமிழிசைப் பாடல்களையே பாடுவார்கள்.

கேள்வி    :   தமிழகத்தின் இசை மேடைகளில் தமிழ் எந்த அளவு உள்ளது.

ஆத்மநாதன்   :  தமிழிசை மேடையில் தமிழ் 10 சதவீதம் தான் உள்ளது. தெலுங்கு, சமஸ்கிருதம், கன்னடம் பாடுவர்களுக்கு 1000 மேடைகள் கிடைக்கின்றனர்.

கேள்வி    :     தொல்காப்பியத்திலே இசை குறித்த குறிப்புகள் உள்ளன. பரிபாடல் போன்றவைகளிலும் இசை குறித்த விவரங்கள் வெகுவாக உள்ளன. சிலப்பதிகாரமே இசையும், கூத்தும் கலந்த காவியம். ஏன் இதிலிருந்து பாடல்களை தமிழிசைப் பாடல்கள் பாடுபவர்களே பாடுவதில்லை?

ஆத்மநாதன்   : *  திங்களைப் போற்றதும்

திங்களைப் போற்றதும்

                *மாசறு பொண்ணே

                   வலம்புரி முத்தே

-போன்ற சிலப்பதிகாரப் பாடல்களை மேடைதோறும்  நான் பாடி வருகிறேன்.

கேள்வி    : இசையால்­ மூளை வளர்கிறது என்று மேலை நாட்டு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இசையினால் ஏற்படும் நன்மைகள் என்ன?

ஆத்மநாதன்:

1.    இசை கற்றுக் கொள்வதால் ­மூச்சுப்பயிற்சி பெறுகிறோம். ஒரு சுரத்தைப் பாடும்போது மூ­ச்சு உள்ளே செல்கிறது. மற்றொரு சுரத்தைப் பாடும் போது ­மூச்சு வெளியேறுகிறது. இது சிறந்த மூ­ச்சுப்பயிற்சியாகும்.

2.    இசை கற்றுக்கொள்வதால் சிறந்த நினைவாற்றல் பெருகும். எடுத்துக்காட்டாக எனது மாணவர்களான ஸ்ரீ உத்ரா (1178/1200) மதிப்பெண்ணும், நிதின் சீனிவாசன் (1182/1200) மதிப்பெண்கள் பெற்றும் முதலிடம் வசித்தார்கள்.

3.    இசை கற்றுக் கொள்வதால் தாய், தந்தையர், குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்காமலேயே இரக்கம், கருணை, மனிதநேயம் போன்ற நற்பழக்கம் தானாக வரும்.

4.    18 வயதில் சுயக்கட்டுப்பாடு ஏற்படும்.

கேள்வி    :  தமிழிசைக்கு தமிழகத்தில் வரவேற்பு எப்படி உள்ளது?

ஆத்மநாதன்     :   சுமாராகத்தான் இருக்கிறது. காரணம் தமிழர்கள்.

கேள்வி    :     தங்களிடம் அமெரிக்காவிலிருந்து தமிழ் மாணவர்கள் இசை கற்று வருகிறார்கள். அவர்களின் ஆர்வம் எப்படி உள்ளது? அவர்களுக்கு எப்படிக் கற்றுக்கொடுகிறீர்கள்?

ஆத்மநாதன்    :  என்னிடம் தமிழிசை பாடுகின்ற மாணவர்களை மேடை ஏற்றம் பண்ண வைத்து ஊக்குவிக்கவே முழு ஆவலாக இருக்கிறேன். அவர்களிடம் அந்த ஆர்வம் சிறப்பாக இருக்கிறது. தவிர ஆண்டு தோறும் “இசைவிழா” என்று மாணவர்களுக்கு மேடை அமைத்துப் பாடவைப்பதற்காக ஏப்ரல் மாதத்தில் சித்ரா பௌர்ணமி அன்று மாவட்டம் தோறும் வள்ளலார் விழா வைத்து என் மாணவர்களை அருட்பா பாடவைக்கிறேன்.

* மேலும் சங்கீதசாகர்  இசைப்பள்ளி சார்பாக ஆண்டு விழா நிடத்தி மாணவ-மாணவிகளைப் பாடவைக்கிறேன்.

*  டிசம்பரில் சென்னையில் ஆண்டுதோறும் மாபெரும் இசைவிழா நிடத்தி மாணவர்களைத்  தவிர மற்றவர்களையும் தமிழிசையாகவும், நாடகமாகவும், நாட்டியமாகவும் 5 நாட்கள் நடத்துகின்றேன்.

கேள்வி    :   உலகத் தமிழர்களுக்குத் தாங்கள் கூற விரும்புவது?

ஆத்மநாதன்     :  தமிழிசையை உங்கள் சந்ததியினருக்கு கற்றுக்கொடுக்க முயற்சி எடுங்கள். அது உங்கள் குடும்பத்தையே உயர்த்தும். தமிழிசை பாடும் கவிஞர்களுக்கு மேடை அமைத்துக் கொடுங்கள் அது உங்களைப் புகழுக்குக் கொண்டு செல்லும்.

Text on this page does http://customwritingassistance.com not need to be in english

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

முதற் கருத்து பதிவாகியுள்ளது- “தமிழிசைக் கலைஞர் ஆத்மநாதனுடன் ஒரு சந்திப்பு”
  1. நாகலூர் கண்ணுச்சாமி அவர்கள் ஆர்மோனியம் வாசிப்பார், பாடுவார். இவர் தமிழ் சினிமாவில் பாடிய பழம்பெரும் பாடகரான கிட்டப்பா நிறுவனத்தில் வேலை பார்த்துள்ளார். இந்தப் பெருமைக்குச் சொந்தகாரரான நாகலூர் கண்ணுச்சாமி அவர்கள் ஆத்மநாதன் குழந்தையாக இருக்கும் போது பக்திப்பாடல்கள் பலவற்றை கற்றுக்கொடுத்துள்ளார். தியாகராஜ பாகவதர், கே.பி சுந்தராம்பாள், செருகளத்தூர் சாமா போன்றவர்கள் பாடிய பக்திப் பாடல்களை ஆத்மநாதனுக்குக் கற்றுக்கொடுத்து குழந்தைப் பருவத்திலேயே இசை மீது ஆர்வத்தை ஏற்படுத்தியவர் நாகலூர் கண்ணுச்சாமி. தாத்தாவான இவர் வீட்டிலேயே வளர்ந்த ஆத்மநாதனுக்கு அப்போது வயது பத்து.

அதிகம் படித்தது