மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழினம் மேன்மையுற ….. (பாகம் 2)

ஆச்சாரி

Nov 15, 2013

“தமிழினம் மேன்மையுற”  என்ற தலைப்பின் முதல் பாகத்தில் துவக்கக் கல்விமுறை  குறித்து விவாதித்தோம். இக்கட்டுரையில் மேல்நிலைப்பள்ளி கல்விமுறை குறித்துச் சிறிது அலசுவோம். கடந்த வாரத்தில் 10-ம்வகுப்புப் படிக்கும் மாணவியுடன் பேச வாய்ப்புக் கிடைத்தது. நானும் சில நண்பர்களும் ஈழச்சிக்கல் குறித்து காரசாரமாக விவாதித்துக் கொண்டிருந்தோம். அமைதியாக எங்கள் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த அம்மாணவி ஒரு மணிநேரத்திற்குப் பின்பு எங்களிடம் வந்தாள். அங்கிள், எங்கள் பள்ளியின் விவாதிக்கும் குழுவில் (debate club) நான் தலைவியாகவுள்ளேன்.

சிரியா போர் குறித்து அடுத்த வாரம் விவாதிக்கவுள்ளோம். நீங்கள் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்கும் போது இலங்கையில் நடந்த போர் குறித்தும் நான் பேச விரும்புகிறேன்.என்று கூறியது எங்களுக்கு இன்ப அதிர்ச்சியைத் தந்தது. மகிழ்ச்சியாகப் பேசுவோம் என்று அழைத்து நீண்ட நேரம் விவாதித்தோம். பல சிக்கலான கேள்விகளுக்கு எங்களுக்கே பதில் கூறமுடியவில்லை. முடிவில் அவள், நிறைவான முகத்துடன் எங்களிடம் நன்றி கூறிப்  பள்ளி விவாதத்தில் நிச்சயம் தமிழர்களுக்கு நேர்ந்த சிக்கலைப் பற்றிப்  பேசுவேன் என்று கூறி விடைபெற்றாள்.

பல மணிநேரம் கனத்த நெஞ்சுடம் பேசிய எங்களுக்கும் மனநிறைவு கிடைத்தது. மாணக்கர்களும், இளைஞர்களும் தான் நமக்கு நம்பிக்கை என்று பல்லாயிரமுறை கூறியிருக்கிறோம். ஆனால் அவர்களை ஈடுபடவைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோமா? என்கிற கேள்விக்கு பதில் காண வேண்டும் நாம். இருந்தாலும் நம்பிக்கைக் கீற்று தோன்றத்தான் துவங்கியுள்ளது. 

கடந்த வாரம் அமெரிக்காவிலுள்ள நியூசெர்சியில் இலங்கைத் தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த தமிழர் சங்கமம்நிகழ்வில் கலந்து கொள்ள வாய்ப்புகிடைத்தது. அங்கு பல இளைஞகள் கனடா, இங்கிலாந்து மற்றும் பல அமெரிக்க நகரங்களிலிருந்து வந்த இளைஞர்களின் விவாதத்தைக் காணும் போது அந்த நம்பிக்கைத் தோன்றியது. தமிழர் சிக்கலை அவர்களின் கண்ணோட்டத்தில் காணும் போது நாம் செய்து கொண்டிருக்கிற தவறு வெளிச்சமாகிறது. 

வரும் வழியில் எனது மகன் படிக்கும் நகரில் ஓரிரவு தங்கி அவனிடம் ஒரு சிலமணி நேரங்கள் இது குறித்து விவாதித்தேன். சேனல்-4 தயாரித்த காணொளியைத்  தனது நண்பர்களுக்கு காண்பித்து பின்பு அவனிருக்கும் குழுவில் திரையிட முயற்சி செய்துவருவதாகக் கூறிய போது, ‘தந்தை மகற்காற்றும் கடமையைநான் சிறிது செய்திருக்கிறேன் என்கிற மனநிறைவுடன் வீடு வந்து சேர்ந்தேன். இது போன்று தமிழகத்திலும் மாணவர்களும் இளைஞர்களும் வீறுகொண்டு எழுந்திருப்பது மனநிறைவையும், ஊக்கத்தையும் தருகிறது என்பதை  இங்கு குறிப்பிடவேண்டும். இருந்தாலும் அவர்களின் எண்ணிக்கை கவலையைத் தருகிறது. பெரும் எண்ணிக்கையில் இளைஞர்கள் வீதிக்கு வந்து போராடும்போதுதான் வெற்றியடைய முடியும். அவர்களுக்குப் பெருமளவில் தமிழின உணர்வை ஊட்டுவது குறித்துச் சற்றுப் பார்ப்போம்.

சமூக உணர்வு பலருக்கு ஏதாவது ஒரு பேரழிவிற்கு பின்பு ஏற்படும், ஆழிப்பேரலை பேரழிவு, முள்ளிவாய்க்கால் அவலம் போன்ற அழிவிற்குப் பின்பு பலர், குறிப்பாக இளைஞர்கள் மக்களுக்கு உதவ முன்வந்ததை நாம் கண்டோம். ஆனால் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் சில வாரங்களுக்குப் பின்பு தங்கள் தம்தம் பணிகளைப் பார்க்கச் சென்றுவிட்டார்கள். நடந்த அவலங்களை மறந்து விட்டதாக நான் கூறவில்லை. ஆனால் சமூகப் பணி கடைசியிடத்திற்குச் சென்றுவிட்டது, அது மனித இயல்புதான். 

நீண்ட காலம் மக்கள் பணியிலிருப்பவர்கள் பலர் தமது பள்ளி, கல்லூரி காலத்திலிருந்து இந்த உணர்வைப் பெற்றவர்கள். மக்களின் வலி உணர, மொழி இனஉணர்வு வரஇனத்தின் உண்மை வரலாறு தெரிந்திருக்க வேண்டும். பள்ளியில் படிக்கும் போது வரலாறு படிப்பது எளிது, நல்லாசிரியர் மூலம் அது சாத்தியம். மொழி உணர்வும் இன உணர்வும் எனக்கு ஊட்டியது எனது உயர்நிலைப்பள்ளி தமிழாசிரியர்தான். அன்று அவர் எழுப்பிய கேள்விகளுக்குப்  பதில் காண பின்னாளில் நான் பெரியாரையும், பாவாணரையும் படிக்கத் துவங்கினேன்இன்றும் அவ்வுணர்வு மங்காமல் தொடர்கிறது. 

பள்ளியில் எப்படி இதைத் தூண்டுவது? மேலை நாட்டுப் பள்ளிகளில் உள்ளது போல் அனைத்துச் சிக்கல்களையும் தயங்காமல் விவாதிக்கும் வசதியைக் கொடுத்தாலே போதும். இங்குள்ள மாணவர்கள் ஒரு சிக்கலை விவாதிக்கும் முன்பு நுலகம் சென்று பல நூல்கள் படிப்பார்கள், பெற்றோர்களுடன் விவாதிப்பார்கள். பின்பு தம் நண்பர்களுடன் விவாதித்த பின்புதான் பள்ளியில் அதைப் பற்றிப்  பேசுவார்கள். இதனால் நூலகம் செல்லும் வழக்கத்துடன் எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவுஎனும் வள்ளுவநெறிக்கேற்ப வளர்வார்கள். 

தமிழகத்திலிருக்கும் ஒருபெரும் நோய், பெரியவர்கள் கூறியதை அப்படியே கண்மூடித்தனமாக நம்பி அப்படியே கூறுவது. மூடநம்பிக்கைகள், சாதி, மத வெறியுணர்வு இதனால்தான் தமிழக இளைஞர்களிடம் வளர்கிறது. பலநூல்கள் படித்துச், பல சான்றோர்களின் கட்டுரைகளைப்  படித்து விவாதிக்கும் பழக்கம் வரவேண்டும். உண்மை வரலாறு படிக்கப் பலர் எழுதிய நூல்கள் படிக்க வேண்டும். அமெரிக்காவில் வாழும் முனைவர் சுடலைமுத்து பழனியப்பன் அவர்கள் தமிழ்ச் சமூகம் சார்ந்த பல கட்டுரைகள் எழுதி வருகிறார், அவரது கட்டுரைகள் பல இளைஞர்களுக்கு பல தெளிவுகளைத் தரும். 

அவரது கட்டுரைகள் (www.sarii.org) என்கிற பக்கத்தில் காணலாம். ரோமிலா தாப்பர் (history of india), டி. என். ஜா (the myth of the holy cow), ஏ.எல்.பாஷம் (the wonder that was india), மைக்கல் விட்சல் (http://en.wikipedia.org/wiki/michael_witzel)  போன்ற வரலாற்றுப் பேராசிரியர்கள் எழுதிய நூல்களைப் படிக்க வேண்டும். தமிழ் மொழி மற்றும் தமிழிலக்கிய வரலாறு பற்றி அறிய செக்கசுலோவிய தமிழறிஞர் பேராசிரியர் கமில் சுவலபில் எழுதிய “the smile of murugan of tamil literature of south india” என்கிற நூலைத் தவறாமல் படிக்க வேண்டும். தமிழ்ப் பேராசிரியர்கள் திரு. கைலாசபதி போன்றவர்கள் எழுதிய மேலும் பலநூல்களுள்ளன.  அவர்கள் எழுதிய நூல்களும் படிக்கும் வழக்கம் வந்தால் தான் உண்மையான தமிழுணர்வு நம் மாணவர்களுக்கு வரும்.

சிறுவயதில் இவ்வுணர்வை ஊட்டுவது முதன்மையானது, அது பள்ளிக்காலங்களில் தான் முடியும். தமிழ்வழிக் கல்வியினால் தான் இது பேரளவில் சாத்தியம். கிராமங்களில் வாழும் பெரும்பாலான தமிழ் மாணவர்கள் தமிழ் வழியில் தான் படிக்கிறார்கள். அவர்களுக்கு எளிதான தாய்மொழியில் படித்தால் தான் கடைசிவரை நினைவிலிருக்கும். ஒழுக்கம், நேரம் தவறாமை, கடுமையான உழைப்பு, சகமாணவர்களுடன் இணைந்து பணிபுரிவது, கேள்விகள் கேட்பது போன்ற நல்லொழுக்கங்களை வளர்க்கப் பள்ளிகள் இடமளிக்க வேண்டும், இதற்கு பெற்றோர்களும் உதவவேண்டும். 

இழிநிலையிலிருக்கும் நமது தாய்த்தமிழகமும், தமிழீழமும் மீண்டும் பொற்காலத்தை எட்டப் பள்ளிகளின் தரம் மிகவும் முக்கியம். ஒவ்வொரு பள்ளியிலும் நல்ல தரமான நூலகம், கணினிக்கூடம், போன்றவை முக்கியம். மாணவர்களின் கேள்விகளுக்கு அவரவரே பதில் காணும் முறையை அறிமுகப்படுத்தி அதற்கு வசதியும் ஏற்படுத்தினால் சிந்திக்கும் திறன் பெருகும், இம்முறையைப் பின்பற்றி வளரும்போது பின்னாளில் இம்மாணவர்கள் நல்ல சான்றோர்களாக உருவெடுப்பார்கள். 

ஆண்ட பரம்பரை இன்று ஆண்டியாக கையேந்தி நிற்கும் நிலை மாற நாம் அனைவரும் உழைக்க வேண்டும். நமது குழந்தைகளுக்கு, தமிழ் மொழியும், வரலாறும் சொல்லிக்கொடுக்க வேண்டும். அவர்களுக்கு நல்ல தமிழ்ப் பெயர் வைத்து அதன் முக்கியத்தை உணர்த்த வேண்டும். மிக முக்கியமாக நம் பிள்ளைகளை நல்ல குடிமகன்களாக வளர்க்க வேண்டும், படித்துப் பெரும் பணக்காரர்களாக மட்டும் வளர்க்காமல், நல்லாசிரியர்களாகவும், நல்ல அரசுப் பணியாளர்களாகவும், நல்ல வழக்குரைஞர்களாகவும், ஒழுக்கமான தொழில் முனைவோராகவும், வளர்ப்பது பெற்றோர்களிடத்தில் தான் உள்ளது.

அரசின் உதவியும் இதற்குத் தேவை, ஆனால் கடந்த 45 ஆண்டுகள் நம்மையாண்ட அரசுகள் நம்மைச் சாதி, மதம், திரைப்படம், தொலைக்காட்சி, கிரிக்கெட், மது  போன்ற போதையில் ஆழ்த்தி இல்லாத தேசிய மாயையில் அனைத்துத் தமிழர்களையும் வீழ்த்தி வைத்திருக்கின்றன. உண்மையான தமிழ்த் தேசியத்தில் நாம் நம் பிள்ளைகளை வளர்க்க வேண்டும். மற்றவர்களைக் குறை கூறி வாழாமல் தமிழுக்காக, தமிழர்களுக்காக, தமிழ் மண்ணிற்காக ஒன்று படவேண்டும். நம்மிடம் பல கருத்து வேற்றுமைகள் இருக்கலாம், ஆனால் நம்மினத்திற்குச் சிக்கல் என்று வரும் போது அனைவரும் ஒன்று கூடுவதுதானே உண்மையான தமிழ் உணர்வு? மாறுவார்களா தமிழர்கள்? 1947-ல் மண்ணிற்கு விடுதலை கிடைத்தது என்று சாதி, மத, அரசியல் அடிமைத் தளைகளை அறுத்து, சமத்துதுவம் பெற்று  மனிதவிடுதலை அடைய அனைவரும் பாடுபடுவோம்.


ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழினம் மேன்மையுற ….. (பாகம் 2)”

அதிகம் படித்தது