மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழினம் மேன்மையுற ….. செம்மையாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்.

ஆச்சாரி

Oct 1, 2013

செப்டம்பர் 11 ஆம் நாளை எவரும் மறக்க முடியாது. ‘விதியே, விதியே, தமிழ்ச் சாதியை என்செய் நினைத்தா யெனக்குரை யாயோ?’ என்று தமிழ் மக்களின் நிலையை நொந்த மகாகவியின் நினைவு நாள். சமூகப் போராளியான இமானுவேல் சேகரனின் நினைவு நாளும் இன்று. தமிழுக்காக தன் இன்னுயிர் நீத்த அனைத்து மாவீரர்களுக்கு வீர வணக்கம். தமிழகத்தின் இன்றைய நிலையை நினைத்துப் பார்க்கிறேன். உலகிற்கு வீரத்தைக் காட்டிய வன்னி மக்கள் இன்று அடிமைகளாக வாழ்வதைப் பார்க்கிறேன். செய்யாதத் தவறிற்காக 22 ஆண்டுகள் கடுஞ்சிறையில் வாடும் அண்ணன்களைக் காண்கிறேன். காந்தியம் என்றால் என்ன என்பதை காந்தி நாட்டிற்கு பாடம் எடுத்துவரும் கூடங்குள உறவுகளைக் காண்கிறேன். தமிழகம் அழிந்தாலும் பரவாயில்லை, தஞ்சைத் தரணி அழிந்தாலும் பரவாயில்லை, காவிரி வாடினாலும் கவலையில்லை, முல்லைப் பெரியாறு வற்றினாலும், பாலாறு வற்றினாலும் எனக்கு 2 மணிநேர மின்சாரம் மட்டும் வந்தால் போதும், செல்லும் வண்டிக்கு எரிபொருள் (காருக்கு பெட்ரோல்) கிடைத்தால் போதும் என்று சுயநலத்தின் உச்சியில் வாழும் தமிழுறவுகளை இன்று பாரதி கண்டிருந்தால் எப்படியெல்லாம் பாடியிருப்பானோ?

ஒருமகன் அல்லது இல்லோள் செறுமுக நோக்கிச் செல்என விடுமே    -புறம் 279’

என்றிருந்த வீரம் எங்கு போனது? கூடங்குளத்திற்குள்ளும், வன்னிக்காட்டிற்குள்ளும் ஓடி ஒளிந்துக் கொண்டதோ? ’பிச்சை புகினும் கற்கை நன்றே’, ‘கல்வி சிறந்த தமிழ்நாடு’ என்றெல்லாம் பாடப்பட்டத் தமிழினத்திற்கு ஏனிந்த நிலை? கல்வியை வெறும் ஏட்டுக் கல்வியாகப் பாவித்ததுதான் காரணம். கல்வி என்பது பரந்துபட்ட அறிவை எட்டுவது என்பதை தமிழர்களும், ஆசிரியர்களும், அரசுகளும் மறந்துவிட்டதனால் தான் இந்த இழிநிலை. அன்னைத் தமிழை மறந்ததினால் வந்த அவலமிது. பிறந்தவுடனே எந்தப் பொறியியல் கல்லூரியில் அல்லது எந்த மருத்துவக் கல்லூரியில் படிக்க வைக்க வேண்டும் என்கிற மனப்பான்மையினால் வந்த விளைவு இது. தன் மக்களை நல்ல குடிமகனாக வளர்த்து நாட்டின் நலன் கருதாமல், பிறந்தவுடனே அடிமைகளை வளர்க்கும் ஆங்கிலவழிப் பள்ளியில் சேர்க்கும் மனப்பான்மையினால் இந்நிலை அடைந்துள்ளோம்.

கல்வி என்பது என்ன? மேலை நாடுகளில் கல்வி எப்படி அளிக்கப்படுகிறது? மேலை நாடுகளில் சிறந்த பல்கலைக்கழகங்கள் எப்படி மாணவர்களைத் தெரிவு செய்கிறது என்பதை நாம் புரிந்துக் கொண்டால் தமிழினம் இனிமேலாவது மேன்மையுற வழி செய்ய முடியும். மழலைக் கல்வியை எடுத்துக் கொள்வோம். தமிழகத்தின் ஆங்கில வழி மழலைப் பள்ளிகளின் (LKG/UKG) நோக்கம் என்ன? வெறும் எண்ணும் எழுத்தும் தான். ‘ஓடி விளையாடு பாப்பா’ என்று கூறிய பாரதியை இந்நாளைய குழந்தைகள் கண்டால் என்ன சொல்லும்?  தமிழகத்திலுள்ள மழலைப் பள்ளிகளில் நூலகம், விளையாட இடம், ஓவியம் தீட்ட இடம், கலையை மற்றவர்களுக்குக் காட்ட அரங்கம் போன்றவை உள்ளனவா? வெறும் ஏட்டுச் சுரைக்காயை சமைக்க மட்டும் இப்பள்ளிகளில் கற்றுக்கொடுக்கப்படுகிறது, இந்நிலை மாற வேண்டும். அரசுப் பள்ளிகளில் இவ்வசதியை ஏற்படுத்தி மாணாக்கர்களுக்கு பரந்துபட்ட அறிவை அளிக்க நாம் அரசிற்கு நெருக்கடி கொடுக்க வேண்டும்.

மேலை நாட்டுக் கல்வி முறை:       

இனி மேலை நாடுகளிலுள்ள கல்வி முறையைச் சற்றுப் பார்ப்போம். இங்கு அரசுப் பள்ளிகளில் சேர மாணாக்கர்களுக்கு 5 வயது முடிந்திருக்க வேண்டும். அதற்குப் பின்தான் அவர்கள் எழுதவும், படிக்கவும் துவங்குவார்கள். கலிபோர்னியாவிலும் வேறு பல மாநிலங்களிலும் ஆங்கிலம் தெரியாத மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க சீனமும், சுபானியமும் (Spanish) தெரிந்த ஆசிரியர்கள் உள்ளார்கள். ஆங்கிலம் பேசுவது அமெரிக்காவிலும் ஒன்றும் பெருமைக்குரியது அல்ல. ஆனால் தமிழகத்திலோ ஆங்கிலம் பேசுவதைக் கண்டு பெருமைப்பட்டாலும் ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் தமிழில் பேசுவதை இழிவாகவும், பள்ளியில் அவர்களை கொடுமைப்படுத்துவதும் வன்மையாக கண்டிக்கப்படவேண்டியது. இது உடனடியாக மாற்றப்பட வேண்டிய கடுநோய். இங்குள்ள மாணவர்களுக்கு இளம் வயதிலேயே நூலகம் சென்று நூல்கள் பல படிப்பதற்கு பள்ளிகள் ஊக்கமளிக்கிறது. அவர்களாகவே புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து அதைக் குறிப்பிட்ட நாட்களுக்குள் படித்து திரும்பக் கொடுக்கும் வழக்கம் கற்றுக்கொடுக்கப்படுகிறது. அதிக புத்தகங்கள் படிப்பவர்களுக்கு பரிசு, பள்ளி இதழில் அவர்களது பெயர் போன்றவையினால் புத்தகங்கள் படிக்கும் வழக்கம் இளம் வயதிலேயே ஏற்படுகிறது.

இங்கு படிக்கும் மாணாக்கர்கள் தினமும் உடற்பயிற்சி செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வகுப்பிற்கும் குறிப்பிட தூரம் ஓடினால் தான் தேர்ச்சி பெறமுடியும். பாடல், நடனம், நடிக்கும் திறமை போன்றவை மழலை (LKG) வகுப்பிலிருந்தே ஊக்கமளிக்கப்படுகிறது. வகுப்பில் பேசுவதற்கு முதன்மை கொடுக்கப்படுவதால் ‘மேடை வெட்கம்’ இந்நாட்டு மாணவர்களுக்கு என்னென்றே தெரியாது. மேலும் தமிழகப் பள்ளிகள் போல் காலாண்டு, அரையாண்டு, இறுதித்தேர்வு இங்கு கிடையாது. தேர்வு முதல் சில ஆண்டுகளில் கிடையாது. அதற்குப் பின்பு தேர்வு ஒவ்வொரு வாரமும் உண்டு, மேலும் வீட்டுப்பாடம் (home work) செய்து வருவதற்கும் மதிப்பெண்கள் உண்டு. வார தேர்வு முறையினால் தினமும் படிக்க வேண்டும். தேர்வு வெறும் எண், எழுத்தினால் மட்டுமல்ல, வினாடி வினா, பேசுவது, போன்றவையும் தேர்வின் பல முறைகள். நன்னடத்தைக்கும் மதிப்பெண்கள் உண்டு.

இதற்கெல்லாம் மேல் ஒன்றை குறிப்பிட வேண்டும், அது மாணவர்களுக்கு நாட்டு நடப்பு, அரசியல், முக்கிய நிகழ்வுகள் குறித்த அறிவு பள்ளிகளில் கொடுப்பதுதான்.  எடுத்துக்காட்டாக, அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறும் வாரத்திற்கு முன்பு, ஒவ்வொரு வகுப்பில் தேர்தல் நடக்கும். மாணவர்கள் தனக்குப் பிடித்த வேட்பாளர்களுக்கு வாக்களிப்பார்கள். வகுப்பிலிருந்து ஒருவர் தேர்தல் அதிகாரியாக இருப்பார். இதனால் மாணவர்கள் தங்கள் பெற்றோர்களிடம் இது குறித்து கதைக்க வாய்ப்பளிக்கப் படுகிறது.

தமிழகத்திலோ இதை ‘அதிகபிரசங்கித்தனம்’ என்று கூறி மாணவர்களை சோர்வடைய வைப்பதுதான் நடக்கிறது. முக்கிய விழா நாட்களிலும் அது குறித்து மாணவர்களை உரையாற்ற ஊக்கமளிக்கப் படுகிறது. இங்குள்ள மாணவர்கள் பெரும்பாலோருக்கு அமெரிக்க வரலாறு தெரியும், முக்கியத் தலைவர்கள் குறித்து நல்ல அறிவுபெற்றிருப்பார்கள். இசையைக் குறித்த அறிமுகம் துவக்கப் பள்ளிகளிலேயே இவர்களுக்கு கிடைத்து விடுகிறது.

இருமொழிப் பள்ளிகளில் ஆங்கிலமும், சுபானியமும் கல்வி மொழிகளாக இருப்பதினால் ஆங்கிலம் தெரியாமல் வரும் மழலைகள் கல்வி கற்பது எளிமையாகப்பட்டிருக்கிறது. ஆங்கிலம் இங்கு முதல் மொழி, அமெரிக்காவின் அலுவல் மொழி, ஏன் தாய்மொழியென்றே கூறலாம். எனவே ஆங்கிலத்தில் படிப்பது இங்கு நன்மைகொடுக்கிறது. ஆனால் தமிழகத்தில் மழலைகளுக்கு ஏன் ஆங்கில வழிக்கல்வி? புரியாத மொழியில் கணிதமும், வரலாறும், அறிவியலும் ஏன் கற்றுக்கொடுக்கப்படவேண்டும்? துவக்கப் பள்ளியில் தாய்மொழி வழிக் கல்விதான் சிறந்தது என்று பல பெரும் கல்வியாளர்கள் கூறியும் பெற்றோர்களின் ஆங்கில மோகம் வருத்தத்திற்குரியதுதான்.

அரசுப் பள்ளியிலாவது தமிழ் வழிக்கல்வி தொடர்கிறதே என்று அமைதியுறும் வேளையில் அங்கும் அரசு தனது அறிவில்லாத்தனத்தை திணிக்க முயலுவது வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டும். அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தி, நல்லாசிரியர்களை வேலைக்கமர்த்தி நல்மாணவர்களை வளர்க்க வேண்டிய அரசே தமிழை அழிக்கும் வேலையில் இறங்குவதைக் கண்டும் காணாமல் இருப்பது வேதனைக்குரியது. தமிழ் மொழியின் மீதும், தமிழகத்தின் வளர்ச்சியின் மீதும் பற்றுள்ளவர்கள் போராட வேண்டிய தருணமிது.  தமிழ் வழிக்கல்வியின் தேவை குறித்து நாம் அனைவரும் சிந்தித்து செயல்பட வேண்டிய தருணம் இது.

தமிழகம் சிறக்க, தமிழ் மொழி மேன்மையடைய நம்மிடையே ஒரு பயனுள்ள விவாதம் வேண்டும். அரசுப் பள்ளிகளில் இம்முறைகள் சிறிது சிறிதாக செயல்படுத்தப் படவேண்டும். நகரங்களிலுள்ள ஒரு சில தனியார் பள்ளிகளில் மேல் கூறிய வசதிகளும், பாடத்திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக நண்பர்கள் மூலம் அறிகிறேன். நல்லது, ஆனால் கிராமங்களில் வாழும் ஒடுக்கப்பட்ட மக்கள் எங்கு போவார்கள்? அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்துவது தான் சிறந்த வழி. இதுவரை மழலைக் கல்வியை மட்டும் பார்த்தோம், இனிவரும் வாரங்களில் மற்ற கல்வி முறையையும் பார்ப்போம். இக்கட்டுரையின் நோக்கம் இங்குள்ள முறையை அப்படியே தமிழகத்தில் திணிக்க வேண்டும் என்பதல்ல. மேலை நாட்டு கல்வி முறையில் உள்ள நல்லவைகளை தமிழகத்திலும் செயல்படுத்த வேண்டும் என்பதுதான்.

Feedback on compositions teacher extraordinary info and student verbal reports

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

முதற் கருத்து பதிவாகியுள்ளது- “தமிழினம் மேன்மையுற ….. செம்மையாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்.”
  1. Prabaharan Alagarsamy says:

    சார், தமிழத்தின் தற்போதைய கல்விதுறையின் நிலையை அமெரிக்கா அல்லது மேலை நாடுகளின் நிலையோடு ஒப்பிட்டு பார்ப்பதைவிட , ஒரு 50 – 60 ஆண்டுகளுக்கு முன் இருந்த நம்முடைய நிலையோடு ஒப்பிட்டுப்பார்ப்பதுதான் பொருத்தமாக இருக்கும்.

அதிகம் படித்தது