மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழுணர்வு பொங்கட்டும்

ஆச்சாரி

Jan 14, 2012

இந்த வார்த்தைகளைக் கேட்டாலே உலகத் தமிழர் எல்லோருக்கும் தேன்பட்ட நாவைப் போல செவிஇனிக்கும். மற்ற விழாக்கள்- தாமரை இலைத் தண்ணீர். பொங்கல் விழா தமிழர்களுக்கு உணர்வுள் ஊற்றெடுக்கும் விழா. உயர்ந்த இனத்தின் பண்பாட்டைத் தெரிவிக்கும் விழா. நாகரிகத்தின் முன்னோடி நானே என நெஞ்சுயர்த்தி வாழும் தமிழ்க் குலத்தின் தனிப்பெரும் விழா.

உலகத்தின் மற்ற விழாக்கள் எல்லாம் பெரும்பாலும் – ஒரு நாட்டின்  அரசன் குறித்தோ- ஒரு இனத்தின் தலைவனைக் கொண்டாடவோ அல்லது ஏதோ ஓர் மாயத் தோற்றத்தைப் போற்றவோ இப்படித்தான் அந்த விழாக்களின் பின்புலம் அமைந்திருக்கும். ஆனால் இயற்கையோடு இயைந்து இயற்கைக்கு உளப்பூர்வ நன்றி பாராட்டி- உழைப்பின் உன்னதத்தைப் போற்றுவது தமிழர் கொண்டாடும் தைப் பொங்கல் விழா. உவகை பொங்கும் விழா. இந்தப் பொங்கல்  விழா எந்தவித மதச் சார்புமற்ற ஒரு பொதுமை விழாவாகத் திகழ்கிறது.

தமிழர்கள் கொண்டாடுகின்ற விழாக்களில் இந்த விழா மட்டுமே மிச்சமுள்ள ஒரேயொரு தனித் தமிழர் விழாவாக இருக்கிறது. இயற்கையே அனைத்தும் கடந்து நிற்பது என்கின்ற பகுத்தறிவுத் தத்துவத்தை பறைசாற்றும் விழாவாகவும் இது அமைகிறது.

மூத்த தமிழ்க் குடியினர் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகக் கொண்டாடிக் களிப் பேருவகை கொள்ளும் தைத் திங்கள் முதல் நாள் பொங்கல் விழா பற்றி சங்கப் பாடல்களில் காணக் கிடைக்கின்றன.

காவிரிபூம்பட்டிணத்தில் இருபத்து எட்டு நாட்கள் ‘இந்திர விழா” எனும் பெயரில் இந்த விழா கொண்டாடப்பட்டதாக மணிமேகலை இலக்கியத்தில் விழாவறை காதையில் கூறப்பட்டுள்ளது.

“தைஇத் திங்கள் தண்கயம் படியும்” என்று நற்றிணையும்
“தைஇத் திங்கள் தண்ணிய தரினும்” என்று குறுந்தொகையும்
“தைஇத் திங்கள் தண்கயம் போல்” என்று புறநானூறும்
“தைஇத் திங்கள் தண்கயம் போல” என்று ஐங்குறுநூறும்
“தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ” என்று கலித்தொகையும்

கூறுகின்றன.

மனித வாழ்வியல் கூறுகளில் தலையானதாக விளங்கும் பண்பாட்டை உலகுக்குக் கற்றுத்தந்த தமிழினம்தான்  இந்தப் பொங்கல் விழாவின் வழி இயற்கையை வணங்குதலையும் சொல்லிக் கொடுத்திருக்கும். உழவன் சேற்றில் கால் வைத்தால்தான் மற்றோர் சோற்றில் கை வைக்க முடியும் என்பதால்தான்

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்

தொழுதுண்டு பின்செல் பவர்” என்று வள்ளுவரும்-

“உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்” என்று பாரதியும் பாடினார்கள். அந்த உழவுத் தொழிலை மெச்சிப் போற்றும் விழாவாக தமிழர் திருநாள் விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.

நன்செய், புன்செய் நிலங்களானாலும் வானம் பார்த்து மழைக்கு ஏங்கும் பூமியானாலும்  இரவு பகலாக உழைத்து உழைப்பின் செல்வம் அறுவடைக்கு வருகிற நாள் ‘ தை ‘ யில்தான். உழைப்பை அறுவடை செய்து செல்வம் வீட்டுக்கு வந்து சேர்ந்ததும் பலன் பெறக் காரணமாக இருந்த நிலம், நீர், காற்று, சூரியன், கால்நடைகளுக்கு நன்றிப் பெருக்கோடு எடுக்கும் விழாதான் பொங்கல் பெருவிழா.

தை மாதம் கொண்டாடப்படுவதால்” தைத் திருநாள் ” என்றும் அழைக்கிறோம். உழுது, நாற்று நட்டு, களை எடுத்து, உரமிட்டு, நீர் பாய்ச்சி கண்ணின் கருமணி போல பாதுகாக்கிற உழவனின் அந்தக் காலங்களில் மடியில் காசு இருக்காது. அறுவடை முடிந்தால் தான் அவன் மடியும் கனக்கும்; மனமும் நிறைந்திருக்கும்.

தை பிறந்தால் வழி பிறக்கும் எனும் முதுமொழி- வெறும் வார்த்தை அலங்காரத்துக்காக சொல்லப்படுவதில்லை. தமிழரின் அக மகிழ்ச்சியோடும் அவர்களின் இன்ப நிகழ்ச்சிகளோடும் தொடர்புடையது அம் முதுமொழி. ஆமாம் தங்கள் இல்லத் திருமணம் போன்ற மங்கல விழாக்களை தையில்தான் நடத்துவர் தமிழர். “இந்தத் தை மாதம் என் பிள்ளைக்கு திருமணம் முடித்துவிட வேண்டும்” “தை வந்தால் மகளுக்கு ஒரு நல்லதை செய்திடணும்” இப்படிப்பட்ட பேச்சுக்களை தமிழர்கள் இல்லங்களில் கேட்கலாம். இப்படி தமிழ் மக்களின் வாழ்க்கையோடு பிணைந்தது தை.

மகிழ்ச்சியை ஏற்படுத்தும் விழாக்கள் நடைபெறப்போகின்றன என்பதற்கு முன்னோட்ட விழாவாகவும் தை முதல் நாளான பொங்கல் அமைந்திருக்கிறது.

பொங்கலன்று அதிகாலையிலேயே எழுந்து நீராடிவிட்டு  வாசலில் வண்ண வண்ணக்  கோலங்களிட்டு அதன் நடுவில் பூசணிப் பூ வைப்பார்கள். பிறகு மண்ணால் பினையப்பட்ட அடுப்பில்  புதுப் பானை  வைத்து அதில் புது அரிசி இட்டு  வைப்பார்கள். பின்பு அதில் பாலூற்றி புதிய பானைக்கு புதிய மஞ்சளைக்  காப்பாக அணிவர். புதிய மஞ்சள் கொத்தையும் புதிய கரும்பையும் புதிய காய்கறிகளையும் அன்று பயன்படுத்துவர். பிறகு புதுப் பானையில் பால் பொங்கி வரும்வேளையில்  விளக்கேற்றி- இளம் கதிர் பாய்ச்சி எழுந்திருக்கும் ஞாயிறைப் போற்றி வணங்கி பொங்கலிடுவார்கள்.

பொங்கல் பொங்கி வரும் வேளையில் குடும்பத் தலைவன், மனைவி மக்களுடன் கூடி நின்று “பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!” என்று அகம் மகிழக்  கூவி பொங்கிய தண்ணீரை  அள்ளித் தெளிப்பார். உழுத நிலத்தில் பெற்ற தனது முதற் பயனை  கதிரவனுக்குப் படைத்துப் பின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் உவகை பொங்க கொடுத்து மகிழ்வர்.

பொங்கல் என்பதற்கு “பொங்கி வழிதல்”, “பொங்குதல்” என்பது பொருள். புதிய பானையில், புத்தரிசியிட்டு, அரிசியில் இருந்து பால் வழிந்து பொங்கி வருவதால், தை பிறந்துள்ள புத்தாண்டு முழுவதும் நம் வாழ்வும், வளமும் அந்தப் பால் போன்று பொங்கிச் சிறக்கும். மகிழ்ச்சியும், திளைப்பும் ஒருசேரப் பல்கிப் பெருகுவதோடு, கழனியெல்லாம் பெருகி, அறுவடை மென்மேலும் அதிகரிக்கும் என்பதே இந்தப் பண்டிகையின் மேலோங்கிய தத்துவமும், தொன்றுதொட்டு வரும் நம்பிக்கையுமாகும்.

அடுத்த நாள் மாட்டுப் பொங்கல் எனச் சொல்லப்படும் கால்நடைகளுக்கு மரியாதை செலுத்தும் விழா. மாடு, ஆடு இவைகளெல்லாம் தமிழர்களின் இல்லங்களில் அவர்களின் குடும்பத்தினர் போல பாவிக்கப்பட்டு வளர்க்கப்படுபவை. தன்னுடன் வயலில் உழைத்த மாட்டுக்கு மரியாதை தரும் பொருட்டு மாட்டுப் பொங்கலன்று மாடுகள் கட்டும் தொழுவத்தினைச் சுத்தம் செய்வார்கள்.

கால்நடைகளை குளிப்பாட்டி சுத்தம் செய்வார்கள். மாடுகளின் கொம்புகள் சீவப்பட்டு பளபளக்கும் வகையில் வண்ணம் பூசி, கூரான கொம்பில் குஞ்சம் அல்லது சலங்கை கட்டிவிடுவார்கள். கழுத்துக்கு தோலிலான வார் பட்டையில் சலங்கை கட்டி அழகுபடுத்துவார்கள்.  குங்குமப் பொட்டிட்டும் புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு அணிவித்தும் தயார் செய்வார்கள்.

உழவுக்கருவிகளை சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைப்பார்கள். உலகிற்கே அச்சாணியாகத் திகழும் விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படும் அனைத்து கருவிகளையும் இதேபோல செய்வார்கள். தாம்பாளத் தட்டுகளில் தோட்டம் காடுகளில் விளைந்த பயிர், பச்சைகளை வைத்தும் தேங்காய், பூ, பழம், நாட்டுச் சர்க்கரை என எல்லாம் ஆராதனைக்காக  எடுத்து வைப்பார்கள். இதன் பின் பசு, காளை,  என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழம் கொடுப்பார்கள்.

அடுத்த நாள் காணும் பொங்கல். காணும் பொங்கலை கன்னிப் பொங்கல் என்றும் கூறுவார். உற்றார், உறவினர், நண்பர்களை காணுதல் மற்றும் மூத்தோரிடம் வாழ்த்துப் பெறுதல் இந் நாளில்தான். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், உரி அடித்தல், வழுக்கு மரம் ஏறுதல் என்று வீர சாகசப் போட்டிகளில் இளைஞர்கள் ஆர்வமுடன் கலந்து கொள்வார்கள். கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் என்று தமிழர்களின்  தொன்மையான கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

இம் மூன்று பெரு விழாக்களும் இன்பத்தை அள்ளித் தந்து துள்ளிக் குதிக்க வைக்கும் விழாக்களாகவும் தமிழர்களின் வாழ்வியலோடு தொடர்பு கொண்ட விழாக்களாகவும் அமைந்தவை. இந்தவிழாக்களைக் கொண்டாடுவது கொஞ்சம் அருகிக்கொண்டு வந்தாலும் கிராமங்களில் இன்னும் சிறப்புறவே பேணப்பட்டு வருகிறது.

உலகின் பழமையான இனமாகிய தமிழினம் தலைநிமிர்ந்து வாழ வேண்டுமானால், நம் பண்பாடு சார்ந்த விழாக்களைக் கைவிடாது காக்க வேண்டும். அதற்கு தமிழரின் வாழ்வியல் தமிழியலைச் சார்ந்திருக்க வேண்டும்; தமிழியத்தின் விழுமியங்களைத் தாங்கியிருக்க வேண்டும்; தமிழின் மரபு வேர்களில் எழுந்துநிற்க வேண்டும்.

Remember, your ideas should drive the paper, and quotations should be https://justbuyessay.com/ used to support and enhance your points

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

3 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “தமிழுணர்வு பொங்கட்டும்”
  1. carolynkirubakaran says:

    மிக தெளிவாக அழுத்தமாக உள்ளது.

  2. kasi visvanathan says:

    பொங்கட்டும் தமிழர் உள்ளம், பெருகட்டும் தமிழர் வாழ்வு.

  3. ராஜபாளயத்தான் says:

    வரலாற்று நிகழ்வுகளையே நாம் பகிர்ந்து கொண்டு உள்ளோம் . தை திருநாள் உழவன் திருநாளா அல்லது தமிழன் திருநாளா ? இன்று உழவன் தமிழகத்தில் இருக்கிறனா ? இருக்கும் உழவனின் இன்றைய வாழ்வு நிலை என்ன ? உணவு உற்பத்தில் நாட்டின் நிலை என்ன ? தமிழகத்தின் நிலை என்ன ? சென்ற ஆண்டு உணவு உற்பத்தி என்ன ? இந்த ஆண்டு உணவு உற்பத்தி என்ன ? கட்டுரையில் கூறியது போல் தமிழக உழவன் இன்று சந்தோசமாகவா இருக்கிறானா ? , இது போன்ற வினாக்களுடன் விவாதங்கள் இருந்தால் இதழ் இன்னும் சிறப்பாக இருக்கும்

    ராஜபாளயத்தான்

அதிகம் படித்தது