மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழ்க் கொடையாளர் மா.நன்னன்! (கவிதை)

இல. பிரகாசம்

Nov 11, 2017

Siragu tamil4

அள்ளி யள்ளிக் கொடுத்தாய் தமிழை
அன்பால் தமிழ்மொழி வளர்த்தாய் புலவ!
எண்ணும் எழுத்தும் ஓதுவித்து பாமரர்
ஏழைகள் தமிழ்படிப் பறிவுபெற உழைத்தாய்
கண்ணும் கருத்தாய் இருந்து அன்புடனே
கருத்தும் செயலாய் உழைத்தாய் புலவ!

தமிழ்நூல் போற்றும் நல்லுரை தந்து
தீந்தமிழ்ப் புகழை வளர்த்தாய் புலவ!
அன்பும் அறச்சீற்றம் கொண்டு உழைத்தாய்
அறக்குறள் ஓங்கநீ குரலெடுத்தாய் புலவ!
துணைநின்ற எழுத்தே போல்நின்று பொருள்
துணையாய் ஏடுகளில் தமிழ்ப்பொருள் தந்தாய்!

எப்படி ஏற்பாளவள் அந்தோ! புலவ!
ஏந்திய சுவடி கொண்டாள் உனையிழந்து
புலம்பும் சொற்களை தமிழகம் காண்பதோ!
புகழா பெற்றாய் இல்லை! புகழாய்நீ
போற்றும் பெருந்தமிழ் அன்றோ புகழ்கிறது!
சாற்றுதும் உன்செயலை! போற்றுதும் உன்புகழை!

நன்னன் என்பானை யான்கண்டே னில்லை
நன்னன் எனும்தமிழ்க் கொடையாளன் நீயன்றோ!
கொண்ட கொள்கை பிறழாது வாழ்ந்தாய்
கொடையாய் தழிழுக்குத் தொண்டு செய்தாய்
நன்னன் பெயரேபோல் நீசெய்த அருங்கொடையால்
நல்நெஞ்சில் தமிழ்போல் வாழ்வாய் புலவ!


இல. பிரகாசம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழ்க் கொடையாளர் மா.நன்னன்! (கவிதை)”

அதிகம் படித்தது