டிசம்பர் 3, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழ்தேசிய விடுதலையில் எடுத்துக்கொள்ளப் படவேண்டியவையும் எறியப்பட வேண்டியவையும்

ஆச்சாரி

Sep 15, 2013

நாம் இன்று ஒரு புதிய வரலாற்றின் நுழைவாயிலில் நின்று கொண்டிருக்கிறோம். அதுவே இரண்டாம் உலகப்போருக்குப் பின் எழுந்த தேசிய இனங்களின் விடுதலை என்ற கருத்தாக்கத்தினையொட்டி ஒழுகப்படும் தமிழ்தேசியம் என்னும் புதுவேகத்துடன் எழுந்து வரும் புதிய வரலாறு. இந்தியத்தில் தமிழ்தேசியம் மட்டுமில்லை, கஷ்மீரிய, அஸ்ஸாமிய, போடோவிய, கூர்க்காவிய, நாகாவிய, மேலும் பல போராடும் தேசிய இனங்கள் உண்டு. நமது தமிழ்தேசியம் இன்று அடைந்திருக்கும் புத்தெழுச்சி தானாக ஏற்பட்டதல்ல. சரியாகச் சொன்னால் தோழர் தமிழரசனுக்கு முன்னதாக தமிழ்தேசியம் அதன் தற்போதைய புதிய உலகப்பொருளில் உருப்பெற்றிருக்கவில்லை. தனித்தமிழ்நாடு போன்ற திராவிடத்தின் பகுதிக் கொள்கையாகவே திராவிட அரசியலில் இருந்தது. சோமசுந்தரபாரதி போன்றோர் தனித்தமிழ்நாட்டுக் கோரிக்கையை முதலில் எழுப்பியிருந்தாலும், அது மிகச் சிறிய அளவிலும், திராவிடத்தால் மூழ்கடிக்கப்பட்டு கரைக்கப்பட்டதாகவும் ஆயிற்று. மேலும் அன்றைய தனித்தமிழ்நாட்டுக் கோரிக்கை இந்தியாவின் ஒரு மாகாணமாக தமிழ்நாடு விளங்க வேண்டும் என்ற அளவிலேயே சோமசுந்தரபாரதியாலும், திராவிடக் கொழுந்துகளாலும் முன்வைக்கப்பட்டது. இந்தியத்திலிருந்து விடுதலை என்பதை யாரும் சிந்தித்துப் பார்க்கக் கூடத் துணியவில்லை.

ஆகவே தனித் தமிழ்நாட்டு தேசியம் தோழர் தமிழரசனிடமிருந்து தொடங்குகிறது எனலாம். அதற்கு இரண்டாம் காரணியாக அதேகாலக் கட்டத்தில் எழுந்த தமிழீழ தேசியமும் விளங்குகிறது. இந்தத் தேவையை முன்னிட்டு தோழர் தமிழரசனே தமிழீழக் கோரிக்கையை முன்வைத்து முதன் முதலாக மாநாடு நடத்தினார். அவருக்கு தமிழ்தேசியம் வளர்த்தெடுக்க மேலும் அடிப்படைகளாக இருந்தவை பஞ்சாப், மணிப்பூர், நாகாலாந்து, காசுமீர் போன்ற மொழி நாட்டினங்களின் கருவிப் போராட்டங்களும் மற்றும் தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டங்களுமாகும். இவ்வாறு உருவான புதிய தமிழ்தேசியத்தில் திராவிடத்திற்கு இடமில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர் 1985-ஆம் ஆண்டு மே திங்கள் 15,16 ஆகிய நாட்களில் பெண்ணாடத்தில் தமிழீழ ஆதரவு மாநாடும், இந்தியாவில் தேசிய இனங்களின் விடுதலை” எனும் தலைப்பில் நடத்தப்பட்ட மாநாடும்தமிழக பொதுமையர் மட்டத்தில் மிகப் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தியது.

எனவே தமிழரசனின் வழியிலும், திராவிடத்திலிருந்து விடுபட்டு, தமிழீழ தேசியத்தால் கவரப்பட்டதாகவும், அனைத்து இந்திய தேசிய இனவிடுதலைப் போராட்டங்களின்பாற்பட்டதாகவும், லெனினிய – ஸ்டாலினிய வழியிலானதுமாகிய தற்போதைய புதிய முழுமை வாய்ந்த தமிழ்த்தேசியம் வெளிவந்துள்ள இக்காலப்பகுதியானது நமக்கு வரலாற்றின் ஒரு புதிய நுழைவாயிலை திறந்து விட்டுள்ளது. இந்த நுழைவாயிலை கடப்பதற்கு முன் நம்மோடு இதுவரை இருந்தவற்றுள் எவ்வெவற்றை விட்டுச்செல்வது, எவ்வெவற்றை எடுத்துச் செல்வது என்பதைச் சரியாகத் தீர்மானிக்கத் தவறினோமெனில் அந்த வரலாற்றுப்பிழை பல தீங்குகளை வரும் எதிர்காலத்தில் ஏற்படுத்திவிடும். எனவே இதுவரை இருந்தவற்றுள் ஆகப்பெரியதான பெரியாரியம் என்று வருணிக்கப்படும் ஈ.வெ.ரா. வின் சிந்தனை, செயல்பாடுகளை நாம் சீர்தூக்கிப் பார்க்கவேண்டியுள்ளதை இக்கட்டுரை வலியுறுத்துகிறது. இதனை இக்கட்டுரையின் முதற் பகுதியில் விவரித்துள்ளேன். இரண்டாவது பகுதியில் தமிழ்தேசிய விடுதலையின் செயல்பாடுகளையும், மூன்றாம் பகுதியில் கட்சிகள் இயக்கங்களுக்கிடையே எடுக்கவேண்டிய நிலைப்பாடுகளையும் விவரிப்பேன்.

பகுதி 1:

கடந்த நூற்றாண்டின் சரிமுக்கால் பகுதி முழுதும் தமிழக அரசியலில் தனது குரலை ஒலித்த பெரியார் என்றழைக்கப்பட்ட ஈ.வெ.ரா. தமிழக மக்களுக்கு விட்டுச்சென்றவைப் பற்றி ஆராயாமல் இருப்பதும், ஆராயாமல் அவரை பெரியார் என்று ஏற்றுக்கொள்வதும் வரலாற்றுத் தவறுகளாகும். பெரியார் குறித்த ஆய்வுகள் நூற்றுக்கணக்காக வெளிவந்து கொண்டிருப்பினும், இன்றைய தமிழ்த்தேசிய எழுச்சியில் அவரைப் பொருத்தி வைத்துப் பார்க்கும் ஆய்வுகள் குறைவாகவேச் செய்யப்படுகின்றன. ஏனெனில் தமிழ்ச்சூழலில் பெரியாரை பொருத்திப் பார்ப்பது எப்படி இந்திய தேசியவாதிகளுக்குப் பிடிக்காதோ, அதுபோலவே திராவிடவாதிகளுக்கும் பிடிக்காத ஒன்று. மூன்றாமிடத்தில் தலித்தியவாதிகளுக்கும் அது வேண்டாத ஒன்று. இந்தக் கட்டுரையில் ஈ.வெ.ரா. -வின் மீதான ஒரு ‘விளைவுநோக்குப் பகுப்பாய்வு’ செய்யப்படுகிறதே தவிர இது ஓர் முழுமையான ஆய்வல்ல. விளைவு வழிமுறையின் நியாயத்தைக் காட்டும்;

எனவே ஈ.வெ.ரா.வின் செயல்பாடுகள் மற்றும் அவர் வளர்த்த திராவிட அரசியலின் விளைவுகளை ஒரு சிறிது தூக்கிப்பார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கம். ஏனென்றால் அதற்குரிய அரசியல் இதுவரையான சொல்லாடல்களில் இல்லை. அவரை அவராக மட்டும் பார்க்கப்படுகிறது. ஆனால் அவரை அரசியாலகப் பார்ப்பதே பொருத்தம். அவரது அரசியல் தமிழர் சமுதாயத்திற்கு விட்டுச்சென்றது என்னவென்று பார்ப்பதே இனி நாம் மேற்கொள்ள வேண்டிய ஆய்வு. அவரை அவராக மட்டும் பார்ப்பதால் அவர் ஒரு தவறான கருத்தை சொல்லியிருக்குமிடத்திலும், அவரது மனநிலையைத் தோண்டித் துருவி சிலர் ஆராய்ச்சி செய்து, அவர் மனநிலை அப்படிபட்டதல்ல, எனவே அவர் சொன்ன தவறான கருத்தின் பொருள் நேர்மையானதை முன்னிட்டே என்று சொல்லத் தலைப்படுகின்றனர். இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக வெண்மணி நிகழ்வு குறித்து அவரது தவறான பதிவுகளாகும். ஆனால் அவரது அரசியலே அவரை அவ்வாறு சிந்திக்கவும், பேசவும், எழுதவும் தூண்டியது என்பதே நமது கண்ணோட்டத்தின் அடிப்படை. எனவே பெரியாரியம் என்று சொல்லப்படும் ஈ.வெ.ரா.வின் சிந்தனைத்தொகுப்பினை மறுசிந்தனை செய்வதற்கு முதலாவதாக அவரது அடிப்படைச் சிந்தனைகளான கடவுள் மறுப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, சாதி ஒழிப்பு, இடவொதுக்கீடு, மாநிலங்களுக்கு அதிக அதிகாரம், முதுகுளத்தூர் – கீழ்வெண்மனி நிகழ்வுகளின் போது அவரது நிலைப்பாடு, பெண்விடுதலைச் சிந்தனை, ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற முழக்கம் முதலியவை மட்டும் இங்கு மாதிரியாக எடுத்து கட்டுடைக்கப்படுகிறது.

கடவுள் மறுப்பு – பெரியாரியமும், மூடநம்பிக்கைகளின் வளர்ச்சியும்

தொல்பழங்காலத்தில் மனிதன் கட்டமைத்துக்கொண்ட கடவுள் எனும் கருத்துருதான் மனிதப் பகுத்தறிவின் சிறந்த உருவாக்கம் என்பது பலரின் கருத்து. காரணம், மனிதனை நெறிப்படுத்துவதில், இயற்கைச் சீற்றங்களால் ஏற்பட்ட இழப்புகளிலிருந்தும் காரணம் கண்டுபிடிக்க முடியாத ஆபத்துகளால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்தும் அவனுக்கு அது ஆறுதலளித்தது. பிறகு வந்த மதம், சுரண்டல்களுக்கு நியாயம் கற்பித்ததைப் பலரும் கூறியுள்ளனர். மதத்தின் கேட்டை எடுத்துக் கூறிய பலரும் பொறுப்புணர்வுடன் அதைச் செய்தனர். உதாரணமாக, காரல் மார்க்ஸ், இதயமற்ற உலகின் இதயமாக மதம் இருக்கிறது என்று அதன் ஆக்கபூர்வ அம்சத்தைக் அங்கீகரித்து, பிறகு போதை தரும் அபின் என்றார். இதயமற்ற உலகை, இதயமுள்ளதாக, மனிதாபிமானம் கொண்டதாக மாற்ற வேண்டும் என்றார்; மாற்றச் செயல்முறையைச் சுட்டிக் காட்டினார்; மாற்றுவதற்குப் போராடினார்.

மனிதர்களின் அடிப்படையான நம்பிக்கையை மறுப்பதில் பொறுப்புணர்வுடன் செயல்பட்ட மற்றொரு சிறந்த எடுத்துக்காட்டு பகத்சிங். தான் கடவுளை மறுக்கும்போது, சமூகம் தன்னை ஒரு ஆணவக்காரனாக நினைத்து தனது கருத்துகளை நிராகரித்துவிடுவது தனது கொள்கை மக்களிடம் பரவுவதற்கு ஒரு தடையாகிவிடும் என்று நினைத்துதான், கடவுள் இல்லை என்று கூறுவதால்தான் ஒரு ஆணவக்காரன் இல்லை என்பதை விளக்கி, “நான் ஏன் நாத்திகன் ஆனேன்” என்ற நூலை எழுதினார். பொறுப்புணர்வுடன் கடவுள் மறுப்பைப் போதித்த 20 வயது பகத்சிங் எங்கே, ‘நான் சொல்லிவிட்டேன் கடவுள் இல்லை’ என்ற 80 வயது ஈ.வெ.ரா எங்கே?

ஈ.வெ.ரா.-வின் சீடராக தன்னைக் கூறிக்கொண்ட அண்ணாதுரை, “பிள்ளையாரையும் உடைக்கப் போவதில்லை, பிள்ளையாருக்குத் தேங்காயும் உடைக்கப்போவதில்லை” என்றார். இதன் பொருள், பிள்ளையாருக்குத் தேங்காய் உடைப்பவர்களின் மனவுணர்வுகளைப் புண்படுத்தப்போவதில்லை என்பதுதான். இதுதான் அண்ணாவின் வெற்றிக்குக் காரணம். ஆனால் ஈ.வெ.ரா.வோ கடவுளைக் கண்டுபிடித்தவன் காட்டுமிராண்டி, பரப்புகிறவன் அயோக்கியன், வணங்குகிறவன் முட்டாள் என்றார். உலக மக்கள் தொகையில் ஆகப் பெரும்பான்மை சதவீதத்தினர் கொண்டுள்ள நம்பிக்கையைத் தனது சொற் கோடரி தகர்த்துவிடும் என நினைத்தது ஈ.வெ.ரா.வின் பகுத்தறிவு.

மூட நம்பிக்கைகளுக்கெல்லாம் காரணம் கடவுளும் பார்ப்பானும்தான் என்பது ஈ.வெ.ரா.வின் கருத்து. அவருக்குப் பின் மூட நம்பிக்கைகள் மேலும் அதிகரித்துள்ளன என்பதுதான் வரலாறு. கடந்த 50 – 60 ஆண்டுகளுக்கு முன்னர் சிறிய வட்டாரத்தில் மட்டுமே இருந்த வாஸ்து சாஸ்திரம் இன்றைக்குப் பெரிய மரமாக வளர்ந்து நிற்கிறது. அடுத்து, அட்சய திருதியை அன்று தங்கம் வாங்குவதற்குப் போட்டிபோட்டு நகைக் கடைகளில் வரிசை கட்டுகிறார்கள். பல கிராமங்களிலும் முனைந்து நின்று கோயில் கட்டுவிக்கிறார்கள். இதில் முன்னணியில் இருப்பது திராவிடக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள்தான்.  பிள்ளையார் சிலையை உடைத்தார் ஈ.வெ.ரா. ஆனால் இன்றைய நிலை என்ன, மூலை முக்குகளெல்லாம் பிள்ளையார் வானுயர வளர்ந்து நிற்கிறார்.

சாதி ஒழிப்பு – கலப்பு மணம்

‘பெரியார் பிறந்த மண்; திராவிட இயக்கம் வேரூன்றிய மண்’ என்றெல்லாம் ஈ.வெ.ரா.வின் துதிபாடிகள் தம்பட்டம் அடிக்கிற தமிழ் நாடு, இந்திய அளவில் சாதிக் கலப்பு மணங்கள் மிகக் குறைவாக நிகழ்ந்த மூன்று மாநிலங்களுள் ஒன்று என்கிறது புள்ளிவிவரம். பிற மாநிலங்களில் இயல்பாக நிகழ்ந்த அளவில் கூட தமிழகத்தில் நடக்கவில்லை. ஈ.வெ.ரா.வின் பெயரால் ஆட்சி நடத்தியவர்கள் கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் கூட இதுதான் நிலைமை. சாதி ஒழிப்புக்குக் கலப்புமணம்தான் வழி என்று சொல்லிக்கொண்டே பிற்பட்ட வகுப்பாரின் சாதி ஆதிக்கத்தை வளர்த்தன திராவிடக் கட்சிகள். இதற்கு வழிகாட்டி ஈ.வெ.ரா.  மாறாக 1948 வரையிலும் தன்னை ராமசாமி நாயக்கர் என்று சொல்வதிலும், எழுதுவதிலும் பெருமை கொண்டிருந்தார். தமிழனை ‘தமிழன்’ என்ற உணர்வு அற்று சிந்திக்க வைத்ததற்கு அவரும், அவர் கண்ட திராவிட இயக்கமுமே பொறுப்பு. கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக ‘தமிழன்’, ‘தமிழச்சி’ என்று சிந்திக்கவொட்டாமல், தமிழை அவமதித்து, நல்ல தமிழ்ச்சொல்லான ‘பார்ப்பான்’ என்ற சொல்லை அவமதித்து, பழம்பெரும் தமிழிலக்கியங்களை முட்டாள்தனமாக அவமதித்து, காலையில் ‘தமிழர் கழகம்’ என்று பெயர் வைத்து, மாலையில் ‘திராவிடர் கழகம்’ என்று பெயரை மாற்றி தமிழர்க்கு வஞ்சகம் செய்தார்.

அவர் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி தமிழர் என்ற உணர்வை வளர்த்திருந்தாரானால் இன்று பேயாட்டம் போடும் சாதிகள் தலை கவிழ்ந்தே கிடந்திருக்கும். ஆனால் ஈ.வெ.ரா. சாதிகளை ஒழித்தார்ஞ்ஞ்.! ஆம்..எங்கே, எப்படியென்றால் அரசியல்வாதிகள் தம்பெயரோடு சாதிகளின் பெயரையும் சேர்த்துப் போடுவதை ஒழித்தார். அதனால் வேற்றினத்தார் அன்று முதல் தமிழக அரசியலில் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்தவர்கள் இன்று வரை தம்மை தமிழர் போலவே பாவித்துக்கொண்டு தமிழரினம் துன்பச்சூழலில் சிக்கி முள்ளிவாய்க்காலில் தவித்தபோது முதுகில் குத்தினார்கள். இதுதான் சாதி ஒழிப்பு புரட்சியாளர் ஈ.வெ.ரா. தமிழர்களைக் கொண்டு வந்து நிறுத்திய இடம்.

பிராமணர்களோடு சமரசம், இட ஒதுக்கீடு, மாநிலங்களுக்கு அதிக அதிகாரம்

ஈ.வெ.ரா.வை அவரது சமகால பிராமணர்களில் சிலர் எதிரியாகக் கருதியது உண்மை. பிறகு நிலைமை வேறாகிவிட்டது. ஈ.வெ.ரா.வையும் அவரது இயக்கத்தினரின் செயல்களையும் பிராமணர்கள் ஒரு nuisance ஆகக் கருதினரேயன்றி எதிர்ப்பாக அல்ல. அதை ஒரு பொருட்டாகக் கருதாது, தங்களின் வாய்ப்புகளை தேடிக்கொள்வதை நோக்கி முன்னேறினரேயன்றி ஈ.வெ.ரா.வையோ அவரது இயக்கத்தையோ தங்களின் முன்னேற்றத்திற்கான ஒரு தடையாக நினைக்கவேயில்லை. ஏனெனில் பிராமணர்களுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது – ஈ.வெ.ரா. பிராமணர் என்ற சொல்லைக் கூட எதிர்க்க வில்லை. பார்ப்பனர் என்ற தமிழ்ச்சொல்லையே அசிங்கப்படுத்தினார் என்று. பின் ஏன் அவர்களுக்கு கவலை?.

அதே வேளையில் இங்கு மற்றொன்றை குறிப்பிட்டுச் சொல்லியாக வேண்டும். ஈ.வெ.ரா. ஒருபுறம் வேற்றினத்தார் அரசியல் இங்கு வளரக் காரணமாயிருக்க, பிராமணர்களோ தங்கள் மத, சமுதாய, அரசு ரீதியான ஆதிக்கத்தைத் தக்கவைத்துக்கொள்ள தடையேதுமின்றி தமிழரினம் இருமுனைத் தாக்குதலுக்காளானது. இடஒதுக்கீடு என்றவொன்றை அம்பேத்கர் வடக்கில் கையிலெடுத்தபடியால் இங்கு அதனை ஈ.வெ.ரா. கையிலெடுத்து சாதி ரீதியான இடவொதுக்கீட்டை புகுத்தியதானது பிற்காலத்தில் மனுவிய சாதிகள் தங்களை இடவொதுக்கீட்டின் அடிப்படையில் நிலைநிறுத்தி, போராடி வளரப் பெரிதும் உதவிகரமாக இருந்தது. இங்கு திராவிடமும், ஆரியமும் தம் இருமுனைத் தாக்குதலை இன்று வரை தமிழரினம் மீது தொடுக்கக் காரணமாயிருக்கிறது. அண்ணா முதல்வரானபோது திராவிட – பிராமண சமரச சகாப்தம் நடப்பில் தொடங்கி வைக்கப்பட்டது.

இட ஒதுக்கீடு (அரசியலிலிருந்து) பார்ப்பானை ஒழித்துத் திராவிட இயக்கம், அதாவது சூழ்ச்சி செய்யத் தெரியாத, நல்லெண்ணம் கொண்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பினர். 1967-ல் ஆட்சிக்கு வந்தனர். இவர்கள் ஆட்சிக்கு வந்து 20 ஆண்டுகள் கழித்துத் தமிழக மக்கள் தொகையில் முதன்மையான பங்கு உள்ள சமூகம் தங்களுக்கு உரிய பங்கு வேண்டும் என்று கோரி போராட்டத்தில் இறங்கியது. பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் பிரதிநிதியாக, ஈ.வெ.ரா.வைத் தலைவராகச் சொல்லிக்கொண்டக் கட்சி ஓரளவேனும் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை நிறைவேற்றி இருந்தால் இந்தப் போராட்டம் வெடித்திருக்குமா?

மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் என்பதை ஈ.வெ.ரா. கிண்டல் செய்தார். நாடு, மாநிலங்கள், அதிகாரம், அதிகாரப் பகிர்வு என்பதெல்லாம் ஈ.வெ.ரா.வின் அறிவின் வரம்புக்கு அப்பாற்பட்டது. இதனால்தான் அவரும் அவரது ஆதரவாளர்களும் அடிக்கடியும் ‘சூழ்ச்சிக்’ கோட்பாட்டைக் கையில் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. வரலாற்றையே சூழ்ச்சியாகப் பார்ப்பதுதான் ஈ.வெ.ரா. தன் சீடர்களுக்குக் கற்றுத்தந்தது.

முதுகுளத்தூர் மற்றும் கீழ்வெண்மணி

முதுகுளத்தூர் கலவரத்தை எவரும் மறந்திருக்கவியலாது. நம் கண் முன்னே ஒருவன் இன்னொருவனைத் தாக்கும்போது, அதைத் தடுத்து நியாயமுள்ளவன் தரப்பில் நின்று அநியாயத்தைக் கண்டிப்பதுதான் மனிதாபிமானம். முதுகொளத்தூர் சாதி ஆதிக்கத் தாக்குதலின் போது முத்துராமலிங்கத் தேவரை எதிர்த்துப் பாதிக்கப்பட்ட தேவேந்திரர் சமூகத்திற்கு ஆதரவாகப் பேசியிருந்தால் அது நியாயம், சாதி ஆதிக்க எதிர்ப்பு. ஆனால் ஈ.வெ.ரா.வோ, இரண்டு சமூகங்களுக்கிடையில் நடக்கிற சாதிச் சண்டையில் எங்கள் இயக்கத் தோழர்களின் மண்டை உடைபடுவதை விரும்பவில்லை என்ற பொருளில் அறிக்கை விடுத்து விலகி நின்று வேடிக்கைப் பார்த்தார். இதுதான் ஈ.வே.ரா.வின் பொறுப்புணர்வு, பகுத்தறிவு! பின்னர் கலவரத்தை அடக்க அவர் முத்துராமலிங்கத்தை கைது செய்ய வேண்டுமென்று சொன்னாரேயன்றி இம்மானுவேல் சேரனின் கொலையில் எவ்வித நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை.

கீழ்வெண்மணியில் 1968ஆம் ஆண்டு, 42தலித் மக்கள் உயிரோடு கொளுத்தப்பட்ட சம்பவத்தில் பெரியார் எதிர்வினை எதுவும் ஆற்றாது கள்ள மவுனம் சாதித்தார். தலித் கூலி விவசாயிகள் 44 பேர் குடிசையோடு கொளுத்தப்பட்டபோது, கோபாலகிருஷ்ண நாயுடுவின் கொடுஞ்செயலை, சாதி ஆதிக்கத்தைக் கண்டிக்கவில்லை; கூலி உயர்வு கேட்டதைக் கண்டித்தார். இதற்கு ஈ.வே.ரா. கூறிய ‘நியாயம்’ கூலியை உயர்த்திவிட்டுப் பொருள்களின் விலையை உயர்த்தி இரு மடங்கு இலாபம் சம்பாதித்துவிடுவார்கள் என்றார். நியாயம் போலத் தெரிகிற இவ்விஷயத்தில் உண்மை என்ன? ‘வறுமையின் மெய்யறிவு’ என்ற நூலில் ஜோசஃப் புருதோன் வைத்த வாதம்தான் இது. இதை மறுத்துதான் ‘மெய்யறிவின் வறுமை’ என்ற நூலை எழுதினார் மார்க்ஸ். பகுத்தறிவு உள்ளவர்கள் மார்க்ஸ் கூறியதை உணர்ந்து கொள்ள முடியும்.

பெரியாரின் இந்த அறிக்கையிலுள்ள பிரச்சினைகளை இரு சிக்கல்கள் வழியாகப் புரிந்து கொள்ளக் கூடலாம். முதலாவதாக வெண்மணிச் சம்பவம் அண்ணாதுரை முதல்வராயிருந்த போது நடைபெற்றது. முதன் முதலாக ஒரு பார்ப்பனரல்லாதார் ஆட்சிக்கு இந்த சம்பவம் பெருந்தீங்காய் அமைந்துவிடக்கூடுமென்ற சங்கடம் பெரியாருக்கு இருந்திருக்கலாம். வெண்மணி அறிக்கையின் இன்னொரு பிரச்சினைக்குரிய அடிப்படை அம்சம் வன்முறை, சட்டம் ஒழுங்கு, அதை மீறல் குறித்த பெரியாரின் வழமையான புரிதல்கள். ஆனால், எப்போதும் வன்முறையை நிராகரிப்பது சாத்தியமா, கிளர்ச்சிகளின்போது தன்னெழுச்சியாய் வெளிப்படும் குறைந்தபட்ச வன்முறை, அரச பயங்கரவாதத்திற்கு எதிரான எதிர் வன்முறைச் செயல்பாடுகள் ஆகியவற்றை எப்படி புரிந்துகொள்வது என்கிற கேள்விகள் மிகவும் முக்கியமானவை.

கீழ்வெண்மனி போன்ற நிகழ்வுகளுக்குத்  தீர்வு

கீழ்வெண்மனி போன்ற நிகழ்வுகளுக்குத் தீர்வாக அவர் முன்வைக்கும் கருத்து என்ன? 28.12.1968 அன்று ‘விடுதலை’யில் எழுதுகிறார்:

“காந்தியார் பார்ப்பனர்களுக்கு நல்ல பிள்ளையாகி, தான் ஒரு மகானாக ஆவதற்கு எண்ணி என்றையதினம் மக்களை சட்டம் மீறும்படி(அயோக்கியர்களாகும்படி) தூண்டி விட்டாரோ, அன்றுமுதல் மனித சமுதாயம் ஒழுக்கத்தில் கீழ்நிலைக்குப் போய்விட்டது. சட்டம் மீறுதல் மூலம் சத்தியாக்கிரகம் என்னும் சண்டித்தனம் செய்தல் மூலம் காரியத்தைச் சாதித்துக் கொள்ள மக்களுக்கு காந்தி என்று வழிகாட்டினாரோ, அன்று முதலே மக்கள் அயோக்கியாகளாகவும், காலிகளாகவும் மாறிவிட்டார்கள்”.

(விடுதலை-28.12.1968)

மேலும், “……நாட்டுக்குச் ‘சுதந்திரம்’ கிடைத்து இருபது ஆண்டுகளில் நாட்டில் செல்வாக்கு பெறாத அயோக்கியத்தனம், அக்கிரமம், கொள்ளை, கொலைகாரத்தனம், நாசவேலைகள் என்பவைகளில் ஒன்றுகூட பாக்கியில்லாமல் செல்வாக்கு பெற்று, தினசரியில் நடைபெற்று வருகின்றன. அவை எந்த அளவுக்கு வளாந்தன என்றால் 1.காந்தியார் கொல்லப்பட்டார். 2.தலைவர் காமராஜரைக் கொல்ல முயற்சிகள் செய்யப்பட்டன. 3.போலிஸ்அதிகாரிகள் கட்டிப்போட்டு நெருப்பு வைத்துக்கொளுத்தப்பட்டனர். 4.நீதிஸ்தலங்கள், ரயில் நிலையங்கள் கொளுத்தப்பட்டன. ஜெயில் கதவு உடைக்கப்பட்டது. பலவாகனங்கள்(பஸ்கள்) கொளுத்தப்பட்டன. வழிப்பறிகள் நடந்தன. மற்றும் நிலங்களில் துர் ஆக்கிரகமாகப் பயிர்கள் அறுவடை செய்து கொண்டு போகப்பட்டன. விவசாயிகளின் வீடுகள் கொளுத்தப்பட்டன. 5. கடைசி நடவடிக்கையாக நேற்று முன்தினம் தற்காப்புக்கு ஆக ஓடி ஒரு வீட்டிற்குள் ஒளிந்துகொண்ட வீட்டைப் பூட்டிவிட்டுக் கொளுத்தி, 42 பேரும் கருகிச் சாம்பலாக்கப்பட்டிருக்கிறார்கள்.”

பெரியார் மேறகண்ட சமபவங்களை அடுக்குவதன் மூலம், வெண்மணிச் சம்பவத்தைப் ‘பல பிரச்சினைகளில் ஒன்றாகப்’ பார்ப்பதையும் அதற்கான அடிப்படை ஒழுக்கமும் நீதியும் தவறிய காலித்தனம் என்றே அவர் கருதுவதையும் உணரமுடியும். ‘எழுச்சி தலித்முரசு’ மாதஇதழ் (மார்ச் 2006) வெண்மணிச் சம்பவத்தையட்டி பெரியார் விடுத்த அறிக்கையை வெளியிட்டது. வெண்மணிச் சம்பவம் தி.மு.க ஆட்சியின்போது நடந்தது என்பதையும் கம்யூனிஸ்ட் கட்சி கட்டிய விவசாயிகள் சங்கத்திற்கு எதிராக கோபாலகிருஷ்ண நாயுடு என்னும் நிலப்பிரபுவால் நிகழ்த்தப்பட்டதே அக்கொடூரம் என்பதையும் கோபாலகிருஷ்ண நாயுடு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டபோது அவரை வரவேற்றவர் அன்றையக் காங்கிரஸ் கட்சிப் பிரமுகரும் இன்னொரு நிலப்பிரபுவுமான கருப்பையா மூப்பனார் என்பதையும் கோபாலகிருஷ்ண நாயுடுவை ‘அழித்தொழிப்பு’ மூலம் பழிதீர்த்தவர்கள் நக்சல்பாரிப் புரட்சியாளர்கள் என்பதையும் அறிந்தவர்களுக்கு பெரியாரின் மேற்கண்ட ‘ஆலோசனைகள்’ எவ்வளவு அபத்தமானவை மற்றும் ஆபத்தானவை என்பதை விளங்கிக் கொள்ள இயலும். அதுவோர் ஜாதிய முரண் மற்றும் நிலவுடைமை மோதல் என்ற உணர்வோ, அறிவோ அவரிடம் கிஞ்சிற்றும் இல்லை. காலித்தனம், காவாலித்தனம் என்று அதிகப்பிரசங்கம் மட்டுமே செய்கிறார்.

மேலும் இத்தகைய பிரச்சினைகளுக்கான தீர்வுகளாக அவர் முன் வைப்பது நம்மை இன்னும் திகைப்பிலாழத்தும். “இவற்றிற்கு ஒரு பரிகாரம் வேண்டுமானால், ‘ஜனநாயகம்’ ஒழிக்கப்பட்டு ‘அரசநாயகம்’ ஏற்படவேண்டும்” என்பதோடு மட்டும் நிற்கவில்லை. அவர் மேலும் எழுதுகிறார் தன் அறிக்கையில்:

“…எனவே இன்றைய இந்த நிலை மாறவேண்டுமானால் முதலாவது குறைந்தது:

1.காங்கிரஸ் திராவிட முன்னேற்றக்கழகம் என்கின்ற இரண்டு கட்சிகளைத் தவிர, அரசியல் சம்பந்தமான எல்லா கட்சிகளையும் இல்லாமல் ஆக்கிவிட வேண்டும்.

2.சமுதாயக் கட்சிகள் இருக்கவேண்டுமானால் அவைகளின் கொள்கைகளில், நடப்புகளில் சட்டம் மீறுதல், பலாத்காரம் ஏற்படுதல், ஏற்படும்படியான நிலைமை உண்டாக்குதல் ஆகிய தன்மைகள் இல்லையென்று உறுதிமொழி பெற்றபிறகே அவைகள் அனுமதிக்கப்பட வேண்டும்.

3.எந்தக் கட்சி, ஸ்தாபனம் ஏற்படுத்துவதானாலும் அரசாங்க அனுமதி பெற்றுத் தொடங்க வேண்டும். அந்த அனுமதியும் முதலில் ஒரு ஆண்டுக்கு, பிறகு இரண்டாண்டுகளுக்கு, பிறகு மூன்றாண்டுக்கு என்று அனுமதி கொடுத்து இந்த ஆறாண்டுகாலத்தில் ஒரு தவறு, எச்சரிக்கை பெறுதல் இல்லையானால் தான் காலவரையின்றி அனுமதி கொடுக்க வேண்டும்.

4. கம்யூனிஸ்டுகள் என்கின்ற பெயரால் எந்தக் கட்சிக்கும் அனுமதி அளிக்கக் கூடாது., இப்போது இருப்பவைகளைத் தடுத்துவிட வேணடும்”.

பற்றியெரிந்த ஒரு முக்கியமான பிரச்சினையில் இதுபோன்ற மொண்ணை சிந்தனையே ஈ.வெ.ரா.வின் சிந்தனையாக இருந்தது.

பெண் விடுதலை

பெண் விடுதலைக் கருத்தைப் பொறுத்தவரை அவருக்கு முன்பே பாரதியார் எத்தனையோ முறை பெண்களின் ஆணுக்கு நிகர் சமத்துவத்தை தனது கவிதைகளிலும், கட்டுரையிலும் சொல்லிவிட்டார்.  ஆனால் பெண்விடுதலையைப் பெரிதும் பேசிய ஈ.வெ.ரா. எந்த அடிப்படைகளுமின்றி தனது தள்ளாத வயதில் 26 வயதுப் பெண்ணை திருமணம் செய்துகொள்ள முடிவெடுக்கிறார். இதுகுறித்து எந்த பெரியாரியவாதியிடமும் ஒரு நேர்மையான விடை கிடைக்காது. வயதான காலத்தில் துணை தேவையெனில் தாதி நியமிக்க அவருக்கு குறையேதும் கிடையாது. மணியம்மையே தாதியாகத்தான் இருந்தார். தன் சொத்துக்களுக்கு வாரிசு வேண்டுமெனில், மணியம்மையை வாரிசு என்று அறிவிக்க எந்தத் தடையுமில்லை. இவற்றை மீறி திருமணம் என்ற தொடர்பை ஏற்படுத்தினால் அவர் அதுவரைப் பேசி வந்த சிறுவயது திருமண எதிர்ப்பு என்னவாயிற்று எவரொருவரும் கேள்வி கேட்கக் கூடாது. அதுவே பெரியார் பக்தி!

அரசியல் சிந்திக்கும் பல நல்ல உள்ளங்களிடம் எப்படியோ ஈ.வெ.ரா. புனிதப்படுத்தப்பட்டு இடம்பிடிக்கச் செய்யப்பட்டிருக்கிறார். அவரது மத எதிர்ப்பு, பெண் விடுதலைக் கருத்துக்கள்தான் அந்த நல்ல உள்ளங்களை கவர்ந்ததென்று சொன்னால் அது மிகையன்று. ஆனால் ஈ.வெ.ரா. இந்த சமூகத்தில் – தமிழ்ச் சமூகத்தில் ஏற்படுத்திய அரசியல் பிற்போக்குத்தாக்கத்தை யாரும் எண்ணிப்பார்ப்பதில்லை. சரியாகச் சொன்னால் கடந்த நூறு ஆண்டுகாலமாக தமிழர் தன்மதிப்பை திருடியவர் ஈ.வெ.ரா. ஆவார். ‘தன் மதிப்பு’ என்ற தமிழ்ச் சொல்லைக் கூட பயன்படுத்தாமல் ‘சுயமரியாதை’ என்ற சமசுகிருதச் சொல்லையே பயன்படுத்தியவர். ஏன்? தன்மதிப்பு என்ற சொல் தமிழில் மட்டுமே உண்டு. திராவிட மொழிகளில் கிடையாதே! திராவிட மொழிகளில் சமசுகிருதச் சொல்தானே உண்டு! ஈ.வெ.ரா.வின் மத – கடவுள் எதிர்ப்பு முட்டாள்தனமானது என்பதை வரலாற்றறிவுள்ளவர்கள் புரிந்து கொள்வார்கள். அவரது பிள்ளையார் சிலை உடைப்போ நல்ல நகைச்சுவை! இந்த முட்டாள் தனத்தையே பகுத்தறிவு என்று பரப்பி தன் வாழ்நாள் முழுவதும் அரசியல் செய்ததை ஒரு முட்டாள் கூட்டம் நம்பி தங்களை ‘பகுத்தறிவாளர்கள்’ என்று அழைத்துக் கொள்வது வேடிக்கையிலும் வேடிக்கை.  ஆனால் அவரின் இத்தகைய முட்டாள்தனதையே மூலதனமாகக் கொண்டு அரசியல் நடத்தியவர்கள் இன்று வரை தமிழரினத்தை தலைநிமிரவிடாமல் அழுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற ஏமாற்றுவித்தை!

12.10.1937 – ல் திருநெல்வேலி தமிழ்ப் பாதுகாப்புச் சங்கத்தின் சார்பில் தமிழறிஞர் எம்.எஸ்.பூர்ணலிங்கம் பிள்ளை தலைமையில் சோம சுந்தர பாரதியாரும் சி.என். அண்ணா துரையும் சொற்பொழி வாற்றிய இந்தி எதிர்ப்புப் பொதுக் கூட்டத்திலும் தமிழ் மாநிலம் அமைக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது (தினமணி 18.10.1937, 17.10.1996). 12.11.37 இல் திருவையாறு செந்தமிழ்க் கல்லூரி சார்பில் உமாமகேசுவரன் பிள்ளை தலைமையில் நடந்த இந்தி எதிர்ப்புக் கூட்டத்தில் பேசிய சோமசுந்தர பாரதியார் ஆந்திர மாகாணத்தைக் காங்கிரசார் பிரித்து விடத் தீர்மானித்தது போல் தமிழ் மாகாணத்தையும் பிரித்துவிட ஒரு தீர்மா னத்தைக் கொண்டு வருவது அவசியமென்றும் வற்புறுத்தினார். (குடிஅரசு 21.11.37). திருச்சியில் 1937 டிசம்பர் 26 இல் நடைபெற்ற மூன்றாவது சென்னை மாகாணத் தமிழ் நாட்டில் தமிழ் மாகாணம் ஒன்று தனியாகப் பிரிக்க வேண்டும் என அது சம்பந்தமான அதிகாரிகளை இம் மகாநாடு கேட்டுக் கொள்கிறது என்ற தீர்மானம் சி.டி.நாயகத்தால் கொண்டுவரப்பட்டு வழக்கறிஞர் சூர்யமூர்த்தி, கே.வி.அழகர்சாமி ஆகியோரால் ஆதரிக்கப்பட்டு நிறை வேற்றப்பட்டது (குடிஅரசு 2.1.38)’.

11.9.38 அன்று மாலை 5.30 முதல் நள்ளிரவு வரை மெரீனாவில் நடந்த மாபெரும் பொதுக் கூட்டத்தில்தான் (ஒன்றரை இலட்சம் பேர் கலந்து கொண்டதாக குடிஅரசு கூறியது) ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற புகழ்மிக்க அரசியல் முழக்கம் முதன் முதலாக எழுப்பப் பட்டது. ஆனால் அது குறித்து ‘விடுதலை’யில் எழுதப்பட்ட தலையங்கம் (குடிஅரசு 25.9.38 இல் மறுபிரசுரம் செய்யப்பட்டது). அம் முழக்கம் இந்தியாவிலிருந்து பிரிந்த தனித் தமிழ்நாட்டையல்ல. மாறாக அன்றை சென்னை மாநிலத்திலிருந்து தமிழ் மாநிலம் தனியாகப் பிரிக்கப்பட்டு இந்தியக் கூட்டாட்சியில் இயங்க வேண்டும் என்பதைதான் குறித்தது.’ இந்த மொண்ணை முழக்கத்தைதான் பெரியார் பக்தர்கள் சிலர் ஈ.வெ.ரா.வே தனித் தமிழ்நாட்டு முழக்கத்தை முதலில் எழுப்பியதாகக் கூறுகிறார்கள். மொட்டைதாத்தன் குட்டையில் போய் விழுந்தகதை! இந்தத் தகவல்கள், புள்ளி விவரங்கள் எஸ்.வி.ராஜதுரை, வ.கீதா எழுதியுள்ள  ‘பெரியார் சுயமரியாதை சமதர்மம்’ என்னும் நூலில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. 12.10.1937  -ல் சோமசுந்தரபாரதியால் தொடங்கப்பட்ட தனி தமிழ்மாகாணக் கோரிக்கையே 11.9.38 – ல் ஈ.வெ.ரா.வால் தமிழ்நாடு தமிழருக்கே என்ற முழக்கமாக வைக்கப்பட்டது. அதுவும் ஒரு மாநிலத்தை உருவாக்க வேண்டுமென்ற கோரிக்கையே. வேறெதுவுமில்லை. அதன்பின் என்னவாயிற்று. ஒன்றுமே ஆகவில்லை. ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற குறைப்பேறு குழந்தையை குப்பைத்தொட்டியில் வீசியெறிந்து விட்டு, திராவிட அரசியலைத் தொடர்ந்தார் ஈ.வெ.ரா.

ஆக ஈ.வெ.ரா. புரட்சிகரமாக தமிழர்களுக்குத் தந்தது எதுவுமில்லை என்பது மேற்கண்ட விவரங்களிலிருந்து தெளிவாகும். ஆனால் அன்றுமுதலே தமிழர் சமுதாயத்தின் மீது அதிகாரம் செலுத்தி வந்த வேற்றினத்தார் தம் அதிகாரத்தை நாயக்கர் கால அரசுகளின் நீட்சியாக அமைத்துக்கொள்ள உதவியது. இப்போது நாம் வந்து நிற்கும் நிலையில் தமிழ்தேசிய இனவிடுதலையை மார்க்சிய – உலகக் கண்ணோட்டத்தில் வென்றெடுக்கவேண்டிய சூழலில் உள்ளோம். இந்தச் சூழலுக்கு ஈ.வெ.ரா. சிந்தனைகள் துளியும் உதவக்கூடியவை அல்ல. அவரைத் தூக்கிப்பிடிப்பதோ, அவரது கருத்துக்களை முன்வைப்பதோ திராவிட பேராதிக்கத்திலிருந்து – அதனோடு சமரசம் கண்டுள்ள ஆரியத்திடமிருந்து நம்மை நாம் இன்னமும் விடுபடச் செய்யத் துணியவில்லை என்பதையே காட்டும்.

(பகுதி 2-ல் தமிழ்தேசிய விடுதலையின் செயல்பாடுகள்).

One of the main http://college-homework-help.org/ problems with classes that involve writing at the university of pittsburgh are the essay tests, particularly tests that are given in class

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

2 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “தமிழ்தேசிய விடுதலையில் எடுத்துக்கொள்ளப் படவேண்டியவையும் எறியப்பட வேண்டியவையும்”
  1. tamilnesan says:

    I really regret to say that do not write these type ridiculous articles. It has no meaning, order and a motive. It is so absurd.

  2. tamilnesan says:

    தயவு செய்து பகுதி 2 எழுத வேன்டாம் நன்பரே.
    இதுவே நீங்கல் தமிழுக்கு செய்யும் தொன்டு.

அதிகம் படித்தது