மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழ்தேசிய விடுதலையில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டியவையும், எறியப்பட வேண்டியவையும்- பகுதி 2

ஆச்சாரி

Dec 28, 2013

எனது இக்கட்டுரையின் முதற்பகுதியில் (http://siragu.com/?p=9459) தற்போதைய புதிய முழுமை வாய்ந்த தமிழ்த்தேசியம் சிறிது சிறிதாக வெளிவரும் நிலையில், இக்காலப்பகுதியானது நமக்கு வரலாற்றின் ஒரு புதிய நுழைவாயிலைத் திறந்து விட்டுள்ளது. இந்த நுழைவாயிலை கடப்பதற்கு முன் நம்மோடு இதுவரை இருந்தவற்றுள் எவ்வெவற்றை விட்டுச்செல்வது, எவ்வெவற்றை எடுத்துச் செல்வது என்பதைச் சரியாகத் தீர்மானிக்கத் தவறினோமெனில் அந்த வரலாற்றுப்பிழை பல தீங்குகளை வரும் எதிர்காலத்தில் ஏற்படுத்திவிடும். எனவே இதுவரை இருந்தவற்றுள் ஆகப்பெரியதான “பெரியாரியம்” என்று வருணிக்கப்படும் ஈ.வெ.ரா. வின் சிந்தனை, செயல்பாடுகளை நாம் சீர்தூக்கிப் பார்க்கவேண்டியுள்ளதை வலியுறுத்தினேன். இரண்டாவது பகுதியில் தமிழ் தேசிய விடுதலையின் குறிக்கோள் தழுவிய செயல்பாடுகளை இங்கே விவரிக்கிறேன்.

இன்று தமிழ்தேசிய விடுதலையின் செயல்பாடுகளைப் பற்றி குறிப்பிடும்போது அதன் சூழ்நிலைகளை முதலில் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. ஒரு புறம் சிங்களப் பேரினவாதத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள போராடும் தமிழீழ தேசிய இனம். மற்றொருபுறம் கற்பனையான இந்திய நுகத்தடியின் கீழ் எழுச்சி பெற்றுக்கொண்டிருக்கும் தமிழகத் தமிழ்தேசிய இனம். இரண்டிற்கும் ஏராளமான தடைகள்.

தமிழீழ தேசிய இனப்போராட்டம் தனது மூன்றாம் படிக்கட்டில் இன்று ஏறி நிற்கிறது என்று சொன்னால் மிகையில்லை. அதன் முதற் கட்டம் வட்டுக்கோட்டை தீர்மானத்துடன் நிறைவு பெற்றது. அந்தத் தீர்மானத்தின் செயல்வடிவம் அமைதி வழியிலான போராட்டத்தின் மூலம் நசுக்கப்படவே, படைவழி போர் முறையின் மூலம் தன்னை தமிழீழ இனம் இரண்டாம் கட்டத்திற்கு நகர்த்தியது. அது உலகச் சூழல்களினாலும், இந்திய வல்லாதிக்க நோக்கங்களாலும் தோல்வியில் முடிந்தாலும் தமிழீழ விடுதலைக்கான பொதுவாக்கெடுப்பு மற்றும் இனவழிப்பு சிங்கள அரசு தண்டிக்கப்படல் போன்ற அரிய கோரிக்கைகள் இன்று உலகளாவிய அளவில் உருவாகி வலுப்பெற்றதற்கு இரண்டாம் கட்ட படைவழி போராட்டத்தின் பரிமாணங்களும், அதனை வழி நடத்திய தலைமையின் தகைசால் தன்மைகளும் காரணமாக அமைந்தன.

அதுபோல் யாதொரு தகைசால் தன்மைகளும் தமிழக தமிழ்தேசிய இனத்திற்கு வாய்க்க வில்லை. வெள்ளை ஆதிக்கம் விட்டுச் சென்ற நிழலில் ஜனநாயகத்தை இங்கு தமதாக்கிக் கொண்ட பிற தேசிய இனச் சமுதாயங்களான தெலுங்கு, பார்ப்பன, பனியா கூட்டு போன்றன தமிழ்தேசிய எழுச்சி ஒன்று ஏற்பட்டுவிடாமல் கவனமாகப் பார்த்துக்கொண்டதில் வெற்றிபெற்றே வந்திருக்கின்றன. பிற தேசிய இனம் மக்களும், முதலாளிகளும் தமிழகத்தில் சிறுபான்மையராக உள்ள போதிலும், தமிழ்தேசியம் என்றாலே அதனை இந்த பிற தேசியத்தலைவர்கள் தமதாக்கிக் கொண்டு, தமிழ்தேசிய இனவிடுதலை என்பது ‘உலகப்பந்தில் தமிழருக்கென்று ஒரு தனிநாடு’ என்ற முழக்க அளவில் சுருக்கி கையாள்கின்றனர். இது அப்பட்டமான முதலாளிய தேசிய இனவாதமாகும். மாறாக தமிழ்மக்களால் தீர்மானிக்கப்படும் முழு உரிமை பெற்ற தேசிய இனமாக தமிழ்தேசியம் இந்தியத் துணைக்கண்டத்தில் மலர்வதே இன்றைய சூழலில் தமிழக தமிழ்தேசிய இனத்திற்கு முதற்கட்ட தமிழ்தேசிய இன விடுதலைப்போராட்டமாக இருக்கும்.

இது முற்றிலும் இந்தியத்தின் பிற தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்களுக்கு அணுக்கமாக செல்லும் வர்க்க ஒற்றுமையுடன் கூடிய தேசிய இனப்பர்வையாகும். மாறாக உலகப்பந்தில் தமிழருக்கென்று ஒரு தனிநாடு என்பது அடையப்பட முடியாததும், தமிழ்தேசிய இனப்போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்யக்கூடியதுமாகும். இந்தக் கோரிக்கை பெரும்பாலும் இந்தியப் பெருமுதலாளிகளை அண்டிப்பிழைக்கும் குட்டி முதலாளிகளால், அதுவும் திராவிடத் தேசியக் குட்டி முதலாளிகளால் வெற்று முழக்கமாகவே வைக்கப்பட்டு செயல்திட்டத்திற்கு உதவாதபடி பார்த்துக்கொள்ளப்படுகிறது. தேசிய இனங்களின் பிரச்சினை என்பது, முதலாளித்துவதேசத்தின் தொடக்கத்திலிருந்து, சோசலிச சமூகத்தைக் கடந்து கம்யூனிச சமூகம் வரை தொடரும். இதனைத் தெளிவாகப் புரிந்து கொள்வதற்குஅரசின் தோற்றம் முதல் அதன் மறைவு வரையான அதாவது அரசு உலர்ந்து உதிரும் நிலைவரையான வரலாற்றியல் பொருள்முதல் பார்வையில் புரிந்திருப்பது அவசியமானதொன்றாகும். எனவே தமிழ் மக்களுக்கான தமிழ்தேசிய இன விடுதலை என்பது, இந்தியத்தின் பிற பகுதிகளின் தேசிய இனப் போராட்டங்களுக்கு ஒத்திசைவானதாக உருவானதும், இந்தியத்தை ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் எழுச்சியால் ஆட்டம்காண வைப்பதுமாகும்.

அத்தகைய தமிழ்தேசிய எழுச்சி தமிழ் மக்களிடையே இல்லாததற்கு இங்கு ஆதிக்கம் தமிழரல்லாத வேற்று இன குட்டிமுதலாளிகள் தமது வணிக நோக்கங்களுக்காக திரித்து, திராவிடம் என்றும், உலகப்பந்தில் தமிழருக்கென்று தனிநாடு என்றும் சீரழித்து வருவது காரணமாகும். மாறாக இந்திய முழுக்கூட்டாட்சியை நோக்கிய முதற்கட்ட நகர்வை எப்போதேனும் இந்தக் குட்டிமுதலாளிகள் தூக்கிப் பிடித்திருந்தாலும், அதனையும் திரித்து முனை மழுங்கடிக்கவே செய்தார்கள்.

இந்தச் சூழலிலேயே கடந்த முப்பதாண்டுகளுக்கு முன் முகிழ்த்த தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் படைவழி பரிணாம வளர்ச்சி தமிழக மக்களுக்கு ஒரு புதிய ஒளியைப் பாய்ச்சியது. அது பாய்ச்சிய ஒளியும், அதனை தொடர்ந்து வந்த கடந்த முப்பதாண்டுகளாய் தமிழக மக்கள் தமது அரசியல் அடிமைச் சூழலில் தத்தளித்து, ஈழ ஆதரவாளர்களைத் தவிர (அவர்கள் ஈழ வணிக அரசியலை இங்கு நடத்தி வருகிறவர்கள்) தமக்கென ஓர் தற்சார்பு தலைமை இல்லாமல் அரசியல் நகர்த்துவதும் 2009 முள்ளிவாய்க்கால் நிகழ்வுடனேயே முடிவுக்கு வந்து மீண்டும் ஒரு புதிய அத்தியாயம் தோன்றியுள்ளது. அதுதான் தமிழ்தேசிய தற்சார்பு தலைமையின் தேவையை பெருவாரியான தமிழ் மக்கள் உணரத் தலைப்பட்டிருப்பது. ஆம். இதுவரை தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த தெலுங்கு குட்டிமுதலாளிய தலைமையே இதுவரையான தேசிய இன எழுச்சியை தோல்வியடையச் செய்து வந்தது அப்பட்டமாக 2009-ல் தெளிவாகியது. ஆகவே தமிழ்தேசிய எழுச்சிக்கு ஒரு தற்சார்பு தலைமையை வென்றெடுக்க வேண்டிய தேவையை இப்போதே தமிழக தேசிய இனம் முழுதாக உணர்ந்துள்ளது.

இத்தகையத் தற்சார்புத் தலைமை என்பது குட்டிமுதலாளித்துவ வகைப்பட்டதாக அல்லாமல், உழைக்கும் பரந்துபட்ட மக்களை ஒருங்கிணைக்கும் சாதியை நிராகரித்து சரிநிகர்த்துவத்தை வலியுறுத்தும் ஓர் தலைமையாக, அதற்குரிய கூறுகளான சாதி ஒழிப்பு, பெண்விடுதலை, மதவாத எதிர்ப்பு ஆகியவற்றுடன் இன்றைய தமிழ்தேசியப் பிரச்சினைகளான அணுவுலைக்கு எதிரான நிலைப்பாடு, முல்லைப் பெரியாரில் தமிழர் ஒற்றுமையை திரட்டல், தாதுமணல் கொள்ளையில் மக்கள் எழுச்சியை உருவாக்குதல், பெருகிவரும் அந்நிய மூலதனத்தால் ஏற்படும் மண்வள, இயற்கை வள, மக்கள் வளக்கொள்ளைக்கு அணைபோடுதல்,

மீனவர்ப் பிரச்சினையைக் கையாள்தல், கட்சத்தீவை திரும்பப்பெறுதல், ராணுவமயத்தை தமிழ்மண்ணில் கட்டுப்படுத்துதல், வேளாண் நிலங்கள் வீட்டுமனைகளாக்கப்படும் அவலத்தைத் தடுத்து நிறுத்துதல், கல்விக் கொள்ளையைத் தடுத்தல், மதுவை ஒழித்தல், தலித் காலனிகளில் மேம்பாடு செய்தல், கிராமங்களில் தலித்துக்கள் தொழில் தொடங்க ஏற்பாடுசெய்தல், இன்னபிற பெருஞ்சமுதாய பிரச்சினைகளையும், தனித்த தமிழியப் பிரச்சினைகளான வழிபாட்டிடங்களில் தமிழ் வழிபாடு, அனைத்து சாதியினரும் அர்ச்சகர்களாகும் உரிமை, தமிழ் வழிக்கல்வி, தமிழ்க் கலாசார மேம்பாடு, தமிழ் மண்ணில் வெற்றினத்தாரின் பெருகிவரும் வணிக நிலையங்களையும், அவர்கள் நிலங்களை கைப்பற்றுவதையும் தடுத்தல் ஆகிய கொள்கைகளோடு, இந்தியக் கூட்டாட்சியை முழுமையாக நடைமுறைப்படுத்துதல் என்பதைத் தனது தலையாய நோக்கமாகக் கொண்டிருத்தல் இன்றியமையாதது.

பிற தேசிய இனங்களுக்கிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவது இந்திய ஆதிக்கத்துக்கெதிரான வழிமுறைகளில் முதன்மையானவற்றுள் ஒன்று. தோழர் தமிழரசன் காலத்தில் ஈழ தேசிய இனத்தின் போராட்டத்துடன் தமிழகத்தில் ஒருங்கிணைப்பு ஏற்படுத்தப்பட்டு, அது திராவிட குட்டிமுதலாளித்துவ ஆற்றல்களால் காயடிக்கப்பட்டுவிட்டது. அதை மீட்டெடுக்க வேண்டிய பெரும்பணியும் இன்றைய தமிழகத் தமிழ் தேசியப் போராளிகளின் முன்னுள்ளது. அதுபோல் திக்கு மாற்றப்பட்ட தமிழர் பண்பாட்டை திராவிடர் கையிலிருந்தும், வடவர் கையிலிருந்தும் திரிபு நீக்கி மீட்டெடுக்கவேண்டுவதும் தலையாய பணியாக உள்ளது.

இந்த வரலாற்று நீரோட்டத்தின் ஊடாகவே – ஈழ தேசிய அரசியலை திராவிடர்களின் கையிலிருந்து மீட்டெடுத்தல், திக்கு மாறிய தமிழர் பண்பாட்டை தமிழர் கையில் ஒப்படைத்தல், உண்மைக் கூட்டாட்சியை நோக்கி தமிழர் அரசியலை நகர்த்துதல் ஆகிய மூன்று வழிமுறைகளினூடே, மேற்ச்சொன்ன போராட்ட நடைமுறைகளை உள்ளடக்கமாகக் கொண்டே தமிழ்தேசிய அரசியலை இங்கு நாம் கட்டியெழுப்ப வேண்டியுள்ளது.

Qualitative research uses natural settings as primary data http://www.buyessayonline.ninja/

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழ்தேசிய விடுதலையில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டியவையும், எறியப்பட வேண்டியவையும்- பகுதி 2”

அதிகம் படித்தது