மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழ்நாட்டின் முன்னாள் திட்டக்குழுத் துணைத்தலைவர் நாகநாதன் அவர்களின் நேர்காணல்

ஆச்சாரி

Jan 25, 2014

குறிப்பு: சென்னை பல்கலைக்கழக பொருளியல் துறையில் 1971ம் ஆண்டு ஆய்வாளராக சேர்ந்து 35 ஆண்டுகள் பணியாற்றி, அந்தத் துறையின் தலைவராக 2006 ல் விருப்ப ஓய்வு பெற்றார். மாநில திட்டக்குழுவின் துணைத் தலைவராக 2006 லிருந்து 2011வரை பணியாற்றினார். கடந்த 2006ல் நடந்த தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையினைத் தயாரிக்க உதவி செய்தவர். அந்த அறிக்கையில், தமிழகத்திற்கு நியாயவிலைக்கடையில் ஒரு ரூபாய் அரிசி மற்றும் இலவச தொலைக்காட்சி பெட்டி வழங்கும் திட்டத்தைத் தயார்செய்த பேராசிரியர் மூ.நாகநாதன் அவர்களின் நேர்காணலைக் காண்போம்.

கேள்வி: தமிழகத்தில் பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகமாக இருக்கிறது எனவே அனைத்துமக்களும் உணவு,உடை,உறைவிடம்,குடிநீர் போன்ற அடிப்படைத் தேவைகளை பூர்த்திசெய்துகொள்வது எப்படி?

பதில்: ஏற்றத்தாழ்வு என்ற ஒரு அடிப்படையை வைத்துப் பார்த்தால் உலகத்தில் எந்த நாட்டிலும் ஏற்றத்தாழ்வு இல்லை என்பதே கிடையாது கணக்கில் எடுத்துக்கொண்டால். இப்போது அமெரிக்காவினுடைய நோபல் பரிசைப் பெற்ற ஸ்டிக்லிஸ் அவர்கள் அண்மையில் 2012ல் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார்கள். அதனுடைய தலைப்பே ஏற்றத்தாழ்வின் விலை. அவருடைய கருத்துப்படி அமெரிக்காவில் ஒரு விழுக்காடு மக்கள்தான் பெரிய செல்வந்தர்களாக செல்வத்தை வைத்திருக்கிறார்கள் இன்னும் சொல்லப்போனால் 10 விழுக்காடு மக்கள்தான் வசதியாக வாழ்கிறார்கள் 90 விழுக்காடு மக்கள் போராடிதான் வாழவேண்டிய நிலை இருக்கிறது என்று அந்தப் புத்தகத்திலே சொல்லியிருக்கிறார். அப்போது அவர் சொல்கிறார் அமெரிக்காவிலே ஆபிரகாம் லிங்கன் for the democracy என்றால் for the people, by the people, to the people என்பது மாதிரி for the percent, by the percent, to the percent என்றுதான் அமெரிக்காவினுடைய பொருளாதாரம் இயங்கியிருக்கிறது என்று சொல்கிறார்கள் அது வளர்ந்த நாடு. தமிழ்நாட்டில் ஏற்றத்தாழ்வு இருக்கிறது. ஆனால் வறுமையை ஒழிப்பதில் இந்தியாவில் தமிழகம் ஒரு பெரிய அளவிற்கு வெற்றி பெற்றிருக்கிறது. ஏனென்றால் 42 விழுக்காடு வறுமை என்ற நிலையிலிருந்து மாறி இப்பொழுது 18 விழுக்காட்டிற்கும் குறைவாகவே இருப்பதாக புள்ளி விபரம் கூறுகிறது.

என்னைப் பொறுத்தவரையில் நான் குறிப்பிடுகிறேன் தமிழ்நாட்டில் வறுமையில் இருப்பவர்கள் யாருமே இல்லை ஏனென்றால் தமிழ்நாட்டில்தான் அனைத்துக் குடும்பங்களுக்கும் ஏழை,பணக்காரன்,மத்தியதரவர்க்கம் என்ற அடிப்படைக்கு அப்பால் எல்லோருக்கும் உணவு வழங்கல் அட்டை (Ration Card) இருக்கிறது, ஏழைகளுக்கு இலவசமாகவே அரிசி கொடுக்கப்படுகிறது. அப்பொழுது அடிப்படையான வறுமை இல்லை என்றே உறுதியாகக் கூறமுடியும். ஒரு ரூபாய்க்கு ஒரு தேனீர் கூட கிடையாது ஆனால் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி கிடைக்கிறது என்று இருந்தது, இப்பொழுது அதுவும் கூட இலவசமாக ஆகிவிட்டது ஆகவே தமிழ்நாட்டில் வறுமை இல்லை என்பது ஏற்றத்தாழ்வினுடைய ஒருமுகம். ஏற்றத்தாழ்விற்கு பலமுகங்கள் இருக்கின்றன ஒரு முகம் வறுமையை ஒழிப்பதாகும் அதனால்தான் பொருளாதார வளர்ச்சியை எப்படி கணக்கிடுவது என்பதைப் பற்றி அமர்த்தியா சென் போன்ற பொருளாதார அறிஞர்கள் மற்றும் பல வெளிநாட்டு அறிஞர்கள் சேர்ந்து 1991ல் Human Development Index என்று சொன்னார்கள், ஒரு நாட்டினுடைய வளர்ச்சி மானுட மேம்பாட்டில்தான் முடியவேண்டும், மானுட மேம்பாட்டில் முடியாத வளர்ச்சி வளர்ச்சியே இல்லை என்று 1991ம் ஆண்டு ஐக்கிய நாடு மன்றத்தினால் வெளியிடப்பட்ட முதல் மானுட மேம்பாட்டு வளர்ச்சி அறிக்கையில் இருக்கிறது Human Development Index. அப்படிப் பார்த்தால் தமிழகம் மானுட மேம்பாட்டு அறிக்கையில் முதல் மூன்று இடத்தில் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் நரேந்திரமோடி தன் குஜராத் வளர்ந்திருக்கிறது, வளர்ந்திருக்கறது என்று சொல்லிக்கொண்டிருக்கிறார் ஆனால் மானுட மேம்பாட்டுக் குறியீட்டில் எட்டாவது இடத்தில் இருக்கிறது குஜராத்.

கல்வி,குடிநீர் வழங்குவதில், வாழ்நாள் நீடிப்பில், குழந்தைப் பிறப்பில், இறப்பு சதவிகிதத்தைக் குறைப்பதில், கருவுற்ற தாய்மார்கள் இறப்பு சதவிகிதத்தைக் குறைப்பதில் தமிழ்நாடு முதல் நிலைக்கே வந்துவிட்டது. அதை மறைப்பதற்காகவே மத்திய அரசு பல வேலைகளை செய்கிறது. அரியானா மாநிலத்தை தமிழ்நாட்டுடன் சேர்ப்பது என்றால் அதில் தவறில்லை. பதினான்கு பெரியமாநிலங்கள் என்று சொல்கிறது Fourteen major states ஆனால் வறுமையைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது அரியானாவை சேர்க்கிறது. மானுட மேம்பாட்டு அறிக்கையை சேர்க்கிறது. 14 வளர்ந்த பெருமாநிலங்கள் இந்தியாவில் இருக்கின்றன Major States என்று பெயர் அதில் தமிழ்நாடு இப்பொழுது ஒன்றாவது இடத்தில் சொல்லக்கூடிய நிலையிலும், மானுட மேம்பாட்டுக் குறியீடுகளில் இரண்டாவது இடத்தில் செல்லக்கூடிய நிலையிலும் ஒட்டுமொத்தத்தில் பார்த்தால் முதல் மூன்று குறியீடுகளில் இருக்கிறது. பஞ்சாப், தமிழ்நாடு, கேரளா போன்ற மூன்று மாநிலங்கள் தான் மானுட மேம்பாட்டில் அதிக வளர்ச்சியைப் பெற்றிருக்கிற மாநிலங்கள். ஆகவே வளர்ச்சி என்பதை கணக்கிடும் பொழுது வெறும் நிதி சார்ந்த வளர்ச்சியை குறிப்பிடமுடியாது. வரி வருமானம், வரிவருமானத்தால் ஏற்படுகிற வரிஏய்ப்பைக் கூட நாம் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை அதையெல்லாம் சேர்த்தால் பொருளாதார வளர்ச்சி இன்னும் மேம்படும், நிதிவளர்ச்சி அதிகமாக இருக்கும். தேசிய வருமானம் பாதி கறுப்பு பணத்தில் இருப்பதாக குறிப்பிடுகிறார்கள் பாதிப்பணம் கறுப்புப் பணம். கிட்டத்தட்ட பல லட்சம் கோடி இப்பொழுது 2011ல் ஒரு புள்ளி விபரம் பன்னாட்டு நிதியம் International monitory fund வெளியிட்டிருக்கிறது. அதில் 360 பில்லியன் டாலர்கள் அளவிற்கு பில்லியன் டாலர்கள் என்றால் பல லட்சம் லட்சம் கோடி இந்தியாவினுடைய பணம் வெளியில் இருக்கிறது.

ஆக இந்தியா செல்வம் மிக்க நாடு, ஆனால் செல்வம் மிக்க நாட்டில் ஏழைகள் அதிகமாக வாழ்கிறார்கள் ஆனால் அதில் தமிழ்நாடு விதிவிலக்காக இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டுகிறேன். இன்னுமொன்று சொல்கிறேன் இன்றைக்கு சென்னையில் மட்டும் கிட்டத்தட்ட 5 லட்சம் பீகார், ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த கூலியாட்கள் இருக்கிறார்கள். கட்டிடம் கட்டும் தொழிலில் ஈடுபடுபவர்கள் அனைவரும் பீகார் மற்றும் ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இன்றைக்கு பெரும் உணவு விடுதிகளில் வேலை செய்பவர்கள் வடகிழக்கு மாநிலங்களில் இருந்தவர்கள். ஆகவே தமிழ்நாடு மற்ற மாநில ஏழைகளுக்கும் வாழ்வளிக்கிறது இதுதான் உண்மை இதைத் தெரியாமல் ஏற்றத்தாழ்வு இருக்கிறது ஏற்றத்தாழ்வு அமெரிக்காவிலே இருக்கிறபொழுது, மோசமான ஏற்றத்தாழ்வு இருப்பதாக ஸ்டிக்லிஷ் குறிப்பிடும்பொழுது, தமிழ்நாட்டில் உணவின்றி தமிழர்கள் பிச்சையெடுப்பதே இல்லை. நீங்கள் ஒரு இருபது ஆண்டுகளுக்கு முன்பு வந்தால் பிச்சையெடுப்பதை நீங்கள் பார்க்கலாம், இன்றைக்கு பிச்சையெடுப்பவர்கள் யாரென்றால் பிற மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள்தான் சாலைகளிலே பிச்சையெடுக்கிறார்கள். ஆகவே இப்படித்தான் நீங்கள் அணுகுமுறையை செய்யவேண்டும்.

கேள்வி: மற்ற மாநிலங்கள் இல்லாத அளவிற்கு அதிக அளவில் இலவசங்களும், மானியங்களும் தமிழகத்தில் தரப்படுகிறது இது தமிழகத்தின் முன்னேற்றத்தை அழிக்காதா?

பதில்: அழிக்காது ஒரு மனிதன் வலிமையாக இருந்தால்தான் அவன் உற்பத்தியில் ஈடுபடமுடியும். சாப்பிடாமல் எப்படி அவன் உற்பத்தியில் ஈடுபடமுடியும். வறுமையில் வாடிக்கொண்டு எப்படி உற்பத்தித் திறனை வளர்க்க முடியும். உற்பத்தித் திறன் என்பதை Productivity என்று ஆங்கிலத்தில் சொல்கிறார்கள். அந்த  Productivity யை தமிழகம் வழங்கியிருக்கிறது அதனால்தான் தமிழ்நாடு வளர்ந்த மாநிலமாக இருக்கிறது. ஆகவே அந்த குற்றச்சாட்டு சரியானதல்ல. இலவசம் என்று அதைக் குறிப்பிட முடியாது.

தமிழகத்தில் 2006ல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஏழைக்குடும்பங்களுக்கும் இலவச தொலைக்காட்சி வழங்கப்படும் என்று சொல்லப்பட்டது அதுபோன்று எல்லோருக்கும் இலவச தொலைக்காட்சி வழங்கப்பட்டது. அதாவது மாளிகையில் இருப்போர்தான் தொலைக்காட்சி பார்க்கவேண்டுமா? தொலைக்காட்சி என்பது வெறும் சினிமா மட்டுமல்ல, இன்றைக்கு தொலைக்காட்சி முன்னால் உட்கார்ந்த ஒரு ஏழை மாணவர் தன்னுடைய கல்வியைப் பயில்கிறார். பல தொலைக்காட்சிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிக்கப்படுகிறது கணக்கு, இயற்பியல் பாடங்கள் கற்பிக்கப்படுகிறது, ஆகவே உலகத்திலேயே ஆசிய நாடுகளிலேயே அதிகமான தொலைக்காட்சி சீனாவில்தான் இருக்கிறது. ஒரு புள்ளி விபரப்படி சீனாவிற்கு அடுத்தப்படி ஏழை, பணக்காரன், மத்தியதர வர்க்கம் என்ற வேறுபாடுகள் களைந்து ஒவ்வொரு வீட்டிலும் தொலைக்காட்சி இருப்பது தமிழ்நாட்டில்தான். அதை எப்படி இலவசம் என்று குறிப்பிடமுடியும். இன்றைக்கு தகவல் பரிமாற்ற உலகம் என்று சொல்லுகிறார்கள். அந்த Information Revolution ஐ தமிழ்நாட்டில்தான் எல்லோரும் பார்க்கிறார்கள். அதற்கு ஒரு உதாரணம் சொல்லமுடியும் ஆரம்பப் பள்ளிகளில் கல்வியில் சேருவதில் தலித் இன மக்களும் பின் தங்கிய மக்களும், முன் தங்கிய வகுப்பினரும் ஒரே அளவிற்குத்தான் இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது பதிவேட்டில். 97 சதவீத ஏழை தாழ்த்தப்பட்ட மக்கள் ஆரம்ப கல்வி பயில்கிறார்கள் எந்த மாநிலத்திலும் இது கிடையாது. அதற்குக் காரணம் இந்த மாதிரியான தொலைத்தொடர்பு கருவிகள், பல அறிவியல் செய்திகளை பல புதிய புதிய தகவல்களை தொலைக்காட்சி வழியாக வழங்கப்படுகிறது. ஆகவே ஏழைகள் கூட தமது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பவேண்டும் என்ற ஒரு உந்துதல் கொண்டுள்ளனர். உதாரணமாக மதிய உணவுத் திட்டம் என்பது பெருந்தலைவர் காமராஜரால் 1954ல் முதன்முதலில் போடப்பட்டது அப்போது எல்லோரும் சொன்னார்கள் இது ஒரு இலவசந்தானே என்று 1957ல் அரசு திட்டமாக காமராஜர் இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்தை அறிவித்தார். அப்படி அறிவித்ததால்தான் தமிழகத்தில் கல்விப்புரட்சி நடந்தது என்று பல வல்லுனர்கள் சொல்லுகிறார்கள்.

காமராஜர் 1957ல் இந்தத் திட்டத்தை எடுத்துக்கொண்டு திட்டக்குழுவிற்குச் சென்றபொழுது மத்திய திட்டக்குழு தலைவராக இருந்த நேரு இந்தத் திட்டத்தைப் பற்றி விசாரித்தார். ஆனால் அதிகாரிகள் எல்லாரும் இதை அனுமதிக்கமுடியாது என்று சொன்னபொழுது நேரு சொன்னார் காமராஜர் மக்களுடைய உணர்வை உணர்ந்தவர், மக்களுக்காக பாடுபடுகிற ஒரு தலைவர் ஆகவே நீங்கள் இந்தத் திட்டத்திற்காக தமிழ்நாட்டிற்கு மட்டும் நிதி ஒழுக்கீடு செய்யுங்கள் என்று சொன்னார். 1957ல் மதியஉணவுத் திட்டம் தமிழ்நாட்டில் நடைமுறைக்கு வந்து வெற்றியடைந்து  அது சத்துணவுத் திட்டமாக, முட்டை போடுகிற திட்டமாக மாறி சத்துணவுத் திட்டமாக மாறிவிட்டது. இந்தத் திட்டத்தை 2005ல் தான் மத்தியத் திட்டக்குழு மற்ற மாநிலங்களுக்கும் விரிவாணை செய்தது. ஆகவே இது இலவசம் என்றால் மத்திய அரசு ஏன் அந்தத் உணவுத் திட்டத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். 1957ல் எந்தத் திட்டத்தை எதிர்த்தார்களோ, 2005ல் இந்திய மாநிலங்களுக்கு பூராவும் அந்தத் திட்டத்தை கொண்டுவருவதற்கு முயற்சி செய்தார்கள். உத்திர பிரதேசம், மத்திய பிரதேசம், பீகார், ஒரிசா, ராஜஸ்தான் போன்ற பல மாநிலங்கள் இன்னும் கல்வியில் 19ம் நூற்றாண்டிலேயே இருக்கின்றது. நாம் 21ம் நூற்றாண்டுக்கே வந்துவிட்டோம் இதுதான் உண்மை.

கேள்வி: பொருளாதார நிபுனரான நீங்கள் எந்த அடிப்படையில் இலவச திட்டங்களை பரிந்துரை செய்தீர்கள்?

பதில்: இலவசம் என்பது தொழில் துறையினர் டாட்டா பிர்லா, அம்பானி போன்றவர்கள் வரி சலுகைகளைப் பெறுகிறார்கள். வரி என்றால் என்ன? மக்கள் கொடுக்கின்ற வரியை அவர்களுக்கு சலுகைகளாக அளிக்கின்றார்கள். கடந்த பத்தாண்டுகளில் 150 லட்சம் கோடி வரி சலுகைகளைப் பெற்றிருக்கிறார்கள் என்று புள்ளி விபரம் இருக்கின்றது. பணக்காரருக்குக் கொடுத்தால் வரிச்சலுகை, ஏழைக்குக் வயிறார உணவு, அடிப்படைத் தேவையான தொழில் நுட்பங்களைக் கொடுத்தால் ஒரு கணிணியைக் கொடுத்தால் அது இலவசம் என்று சொல்வது எப்படி? இது சரியான வாதமல்ல. இது முதலாளித்துவத்தினுடைய முதலாளிகள் சார்பாக சொல்லப்படுகிற மிகப் பிற்போக்குத்தனமான ஒரு வாதமாக நான் கருதுகிறேன்.

மனித மேம்பாட்டுக் குறியீட்டில் தமிழகம் முன்னேறியிருக்கிறது என்றால் இன்றைக்கு கணிணி பார்க்காத ஏழை மாணவர்களே கிடையாது, தொலைக்காட்சி பார்க்காத ஏழை மாணவர்களே கிடையாது. இது ஒரு சமூக பொருளாதார புரட்சியின் அடையாளமாக எடுத்துக்கொள்ளவேண்டுமே ஒழிய ரஷ்யாவில் கூட 1917ல் இருந்து 1990 வரை ரொட்டியினுடைய விலையை ஒரே நிலையில் வைத்திருந்தார்கள் இன்று ரஷ்யாவைப் பாருங்கள் அது மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. ஆகவே இலவசம் என்பது வேறு, தனிமனித உணவில்லாத இருக்கிறபொழுது அவனுக்கு உணவு வழங்குவது மனிதாபிமானம் அதுதான் உண்மையான வளர்ச்சி என்று ஐ.நா மன்றமே சொல்லுகிறது. ஆகவே மானுட மேம்பாட்டுக்கு எந்தத் திட்டங்களை நாம் அறிவிக்கிறோமோ அந்தத் திட்டங்கள் எல்லாம் இலவச திட்டங்கள் என்று அறிவிப்பது ஒரு சார்பான பணக்காரர்களுக்காக வாதிடுகிறோம் என்று சொல்லுகிற ஒரு அற்பத்தனமான ஒரு கருத்து என்று நான் கூற விரும்புகிறேன்.

கேள்வி: தமிழகத்தில் பெரும்பாலான வருமானம் அரசு ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம், பிற சலுகைகள் என்று மக்களின் வரிப்பணம் செலவாகி அழிவது உண்மையா? உண்மையெனில் இதைத் தடுப்பது எப்படி?

பதில்: இல்லை உதாரணத்திற்கு சொல்லுகிறேன் ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் அரசு ஒரு பகுதியை எடுக்கப்போகிறது. இந்தியாவில் இப்படி சொல்லுகிறீர்கள் அமெரிக்கா முதலாளித்துவ நாடு அதில் மத்திய, மாநில, உள்ளாட்சி அமைப்புகள் 50000 இருக்கின்றன. அந்த 50000 இல் வேலைசெய்கிற தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள் அமெரிக்காவில் இருக்கின்றார்கள். அதுமாதிரி அரசு ஊழியர்கள் இல்லாமல் இந்த நலவாழ்வுத் திட்டங்களை நிறைவேற்றவே முடியாது. இன்னும் குறிப்பிடவேண்டும் என்றால் நமது சிக்கன நடவடிக்கையால் ஒரு காலத்தில் ஒரு துறையில் 10 நபர்கள் வேலைசெய்த துறையில் இன்றைக்கு 5பேர்தான் இருக்கின்றார்கள். சிக்கன நடவடிக்கையினால் 10 பேர் செய்த வேலையை 5பேருக்குக் குறைத்திருக்கிறார்கள். ஆகவே இது ஒரு சிக்கன நடவடிக்கை. 2003க்குப்பிறகு வேலைசெய்தவர்களுக்கு ஓய்வூதியம் இல்லை என்று அறிவித்துவிட்டார்கள் மத்தியிலும் சரி, மாநிலத்திலும் சரி. ஆகவே இப்பொழுது 2003க்கு முன்பு இருந்தவர்கள்தான் அந்த ஓய்வூதியம் திட்டத்தில் வருகிறார்கள். ஆகவே இதை ஒரு சரியான வாதமாகக் கருதமுடியாது.

தமிழகத்தில் பல நலத்திட்டங்களுக்கு செலவுசெய்கிறார்கள். கிட்டத்தட்ட 12வது ஐந்தாண்டுத் திட்டத்தில் இப்பொழுது நடைபெறுகிறது. 11வது ஐந்தாண்டுத் திட்டத்தில் 90000 கோடியை மக்கள் நலத்திட்டங்களுக்காக செலவு செய்யப்பட்டது. ஆண்டுக்கு 16000 கோடி செலவுசெய்யப்பட்டது 90000 கோடி ஐந்தாண்டுகளில், இப்போது அது கிட்டத்தட்ட இரண்டு லட்சமாக 12வது ஐந்தாண்டுத்திட்டத்தில் உருவாக்கியிருக்கிறார்கள். ஆனால் நாம் மத்திய அரசிடமிருந்து பெறுகிற நிதி 10 விழுக்காடுதான் 90 விழுக்காட்டின் நிதியை தமிழகமே பெற்று தமிழகத்திட்டங்களை நிறைவேற்றி வருகிறது என்பது புள்ளி விபரங்கள் பறைசாற்றுகின்றன. அரசு ஊழியர்கள் ஏறக்குறைய 1 கோடி கூட இருக்க மாட்டார்கள் அரசு மத்திய, மாநில எல்லாம் சேர்த்தாலும் 1கோடி கூட தமிழ்நாட்டில் இருக்கமாட்டார்கள். மாநில அளவில் கிட்டத்தட்ட 30 லட்சம் கூட இருக்கமாட்டார்கள். மாநில அரசு ஊழியர்கள், உள்ளாட்சி அதற்குப் பிறகு மற்றஅரசு, மாநில அரசு நிறுவனங்கள்  சேர்த்தாலும் ஒரு 70 லட்சம் இருப்பார்கள். இப்பொழுது புதிதாக சேர்ந்தவர்களுக்கு ஓய்வூதியம் கிடையாது.

இப்பொழுது 60 வயதைக் கடந்தவர்கள்தான் ஓய்வூதியத்தைப் பெறுகிறார்கள்.நமது நாட்டில் ஓய்வூதியம் பெறுகிற வயதானவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட வயதானவர்களுக்காகவாவது இந்த வாழ்வு உறுதி security இருக்கிறது என்று மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும். ஏனென்றால் அந்த ஓய்வூதியக்காரர்கள் அதை சேமிக்கமாட்டார்கள், செலவுசெய்துவிடுவார்கள். நாட்டில் செலவுசெய்தால்தான் வரவேற்க முடியும். அமெரிக்காவினுடைய முதலாளித்துவ அறிஞர் பால்சா மெல்சன் சொன்னார் Government is a major purchaser என்று சொன்னார் அரசாங்கம் தான் அதிகமாக சந்தையில் போய் பொருளை வாங்குகிறது எப்படி? அரசு ஊழியர்கள் மூலம். அவர்கள் சம்பளத்தை எடுத்துக்கொண்டு நூற்றுக்கு நூறு சேமிக்க முடியாது. 40 விழுக்காடு அவர்கள் உணவு, உடை, வீட்டு வாடகை எல்லாம் மீண்டும் பொருளாதாரத்தில். கண்ணதாசன் சொன்னார் “சேர்த்த பணம் செலவு செய்தால்தான் பொருளாதாரம் வளரும்”. ஊதியம் மற்றும் ஓய்வூதியம் என்பது சேமித்து வைப்பதற்காகவே கொடுக்கிற பணமல்ல, உதாரணமாக எனக்கு 40000 ரூபாய் ஓய்வூதியம் தருகிறார்கள் அந்த 40000 ரூபாயை பயனுள்ள வகையில் செலவுசெய்வேன், ஒரு சிகரெட்டையோ அல்லது மது பொட்டியையோ தொடுபவனல்ல நான் புத்தகம் வாங்குவேன், நாட்டிற்கு பயன்படுகிற காரியத்திற்காக என்னுடைய பணம் செலவிடப்படுகிறது. அப்படித்தான் அரசு ஊழியர்களுடைய பணம் அவர்களுடைய ஓய்வூதிய காலத்தில் மருத்துவ நலனுக்காக, இங்கே மருத்துவ காப்பீட்டுத் திட்டம் ஓய்வூதியக்காரர்களுக்குக் கிடையாது ஆகவே ஓய்வூதியம் எல்லோருக்கும் கொடுக்கவேண்டும் என்பதுதான் என்னுடைய கோரிக்கை ஏனென்றால் லட்சக்கணக்கான கோடிகளை அந்நிய வங்கியில் பதுக்கி வைத்துக்கொண்டு வராக்கடன்களை தேசிய வங்கிகளில் வராகடன் 5லட்சம் கோடி என்று சொல்லுகிறார்கள் இப்படி பணத்தை பதுக்கி வைத்திருக்கிற பணக்காரர்களுக்கு சலுகைகள் அளித்துவிட்டு, தேவையானவர்களுக்கு அடிப்படைக் கடமைகளை செய்வதற்கு மனிதர்கள் அவதியுறும்பொழுது அவர்களுக்கு இலவசம் என்றும், அவர்களால்தான் பணம் செலவழிகிறது என்றும் குறிப்பிடுவது பொருத்தமான வாதமாக அமையாது என்று கூறிக்கொள்கிறேன்.

கேள்வி: தொழில், கல்வி,விவசாயம் போன்ற கடன்களை வழங்குவதற்கு வங்கிகள் பெரிதும் தயங்குவது ஏன்?

பதில்: அப்படி சொல்லமுடியாது தனியார்துறை நிறைய கடன்களை வாங்கிக்கொண்டு, இன்றைக்கு அண்மையிலே மத்திய அரசு, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் மட்டும் 1,40,000 கோடி வராத கடன் என்று அறிவித்திருக்கிறார்கள். அதில் யார் இருக்கிறார்கள் என்றால் விஜயமல்லையா அவர் இருக்கிறார் அதுபோன்ற பெரும் பணக்காரர்கள்தான் இருக்கிறார்கள். என்ன சொல்கிறார்கள் என்றால் கணக்குமுறையை Accounting methods மாற்றி 4,00,000 கோடி வராத கடன் இருக்கிறது என்று வராது என்று இருக்கிற கணக்கைதான் நாங்கள் கூறுகிறோம் என்று அதற்கு ஒரு கணக்கு சொல்லுகிறார்கள். ஆகவே தொழில் துறையில் கடன் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு சரியானதல்ல. ஏழை மாணவர்களுக்கு கடன் கொடுப்பதில்தான் சிக்கலே இருக்கிறது. சிதம்பரம் இல்லை இல்லை என்கிறார் ஆனால் இருக்கிறது. ஏழை மாணவர்களிடம் security கேட்டால் எப்படி கொடுப்பார்கள். security என்றால் பிணை அந்த பிணை என்றால் என்ன? அந்த பிணைக்கு அவர்கள் சொத்து வைத்திருக்க வேண்டும். சொத்துவைத்திருந்தால் அவன் ஏன் கடன் வாங்குகிறான். இதையெல்லாம் ஒரே அளவுகோலில்தான் பார்க்கிறார்கள். வேளாண் துறைக்கு கடன் நிறைய கொடுக்கிறது வங்கிகள், ஊரக வங்கிகள்,கூட்டுறவு வங்கிகள் கொடுக்கிறது. தமிழ்நாட்டில் 2006ல் நான் அந்த தேர்தல் அறிக்கையை எழுதும் பொழுது வேளாண் கணக்கிலே கடனை அடியோடு ரத்து செய்யவேண்டும் என்று கேட்டேன் அப்போது பலர் எதிர்த்தார்கள்.

இப்போது எல்லா மாநில தேர்தல் அறிக்கையிலும் வேளாண் கணக்கு ரத்து. ஏனென்றால் வேளாண் உற்பத்தியில் பெரியஅளவிற்கு எந்தவித லாபமும் கிடையாது. ஒரு காலத்தில் சிறு விவசாயிகள் தான் வேதனை அடைந்தார்கள், இன்றைக்கு நடுத்தர விவசாயிகள், பெருவிவசாயிகள் உட்பட வேதனை அடைகிறார்கள். காரணம் ஒரு காலத்தில் வெள்ளம் வருகிறது, இன்னொரு காலத்தில் கடுமையான வறட்சி வருகிறது. வறட்சி வந்தாலும் போதிய அளவிற்கு இந்தியா முழுமைக்கும் அவர்களுக்கு பயிர் பாதுகாப்பு Insurance இல்லை. தமிழ்நாட்டில் இருக்கிறது. ஒரு சுதந்திர இந்தியாவிலே வல்லுனர் குழுவை மத்தியஅரசு நியமித்தது 1950ல். அப்போது சொன்னார்கள் விவசாயிகளின் நிலைமை என்னவென்றால் பிறக்கும்போதே கடனில் பிறக்கிறான், கடனிலே வாழ்கிறான், கடனிலே இறக்கிறான், கடனை அடுத்த தலைமுறைக்கு வைக்கிறான் என்று சொன்னார்கள் அது இன்றைக்கும் அப்படித்தான் இருக்கிறது. ஆகவே விவசாயத்திற்கு அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகள் கொடுக்கிற சலுகைகள், உதவித்தொகைகளை இந்தியா கொடுக்கவில்லை. அதிகமான விளைச்சல் நிலங்கள் இருக்கிற பகுதி இந்தியாதான் குறிப்பாக பல மாநிலங்களில் அதிக விளைச்சல் நிலங்கள் இருக்கின்றன. அந்த விளைச்சல் நிலங்களுக்கு முன்னுரிமை அளித்து, நீர்பாசன வசதி அளித்து, விவசாயிகளுக்கு போதிய அளவிற்கு கடனைக் கொடுத்து வந்தால் பொருளாதார வளர்ச்சி ஏற்படும். ஆகவே விவசாயிகளுக்கு, தொழில்துறைக்கு, மாணவர்களுக்கென்று ஒரே அளவுகோலை பின்பற்றமுடியாது ஏனென்றால் வெவ்வேறு நிலையில் இருக்கிறார்கள்.

தொழிலதிபர்கள் பல தொழில்களை நடத்திக்கொண்டு ஒரு தொழிலில் கடன் வாங்கி அதை ஏமாற்றுகிறார்கள். இன்றைக்கு விஜயமல்லையா நடுத்தெருவில் பிச்சையா எடுத்துக்கொண்டிருக்கிறார் இல்லையே அவருடைய விமானக் கம்பெனியை மூடிவிட்டார் அவ்வளவுதான் கடனே இல்லை. அதுபோன்ற பெரிய பெரிய நிறுவனங்கள் ஒன்று வரியை ஏமாற்றுகின்றனர் அல்லது ஏற்றுமதி பண்ணுகிற பொழுது ஏற்றுமதியை குறைத்து மதிப்பிட்டு அந்த மதிப்பீட்டினுடைய உண்மையான மதிப்பை அங்கே வெளிநாட்டு வங்கிகளில் சேகரித்து வைத்துக்கொள்கிறார்கள். இறக்குமதி பண்ணுகிற பொழுது பயன்படுத்தப்பட்ட கருவியை பயன்படுத்தி புதிதாக விலைக்கு வாங்கியதாக தவறான கணக்கு காட்டுகிறார்கள் இவர்கள் தான் இந்த ஏற்றுமதி, இறக்குமதி கொள்கையை வீணடித்துவிட்டார்கள்.

ஒரு காலத்தில் ஒரு கட்டுப்பாடு இருந்தது. கட்டுப்பாடு இருந்தபொழுது ஊழல் இருந்தது. இப்போது இருக்கிற ஊழல் எப்பொழுதுமே இல்லை. கட்டுப்பாடு தளர்த்தினால் ஊழல் ஒழிந்துவிடும் என்று சொல்லியவர்கள் ஒரு பதிலை சொல்லியாகவேண்டும். நிலக்கரியில் 4,00,000 லட்சம் கோடி, அலைக்கற்றையில் 1,50,000 லட்சம் கோடி என்று கோடி கோடியாக ஊழல் நடந்தது. கட்டுப்பாடற்ற ஒரு சமுதாயம் வாழமுடியாது. கட்டுப்பாடு நிச்சயம் தேவை. சாலையிலே சில கட்டுப்பாடு விதிகள் இருக்கின்றன அங்கே சாலையில் எனக்கு சுதந்திரம் வேண்டும் என்று சொல்லி நாங்களே பார்த்துக்கொள்கிறோம் என்றால் இன்றைக்கு இவ்வளவு கட்டுப்பாட்டிற்குப் பிறகும் தமிழ்நாட்டிலே ஆண்டுக்கு 14,000 பேர் இறக்கிறார்கள். இந்தியாவில் 1,00,000 நபர்கள் இறக்கிறார்கள் சாலையிலே. நான் சொல்லுவேன் சாலையிலே ஒரு போர் நடந்துகொண்டே இருக்கிறது. காருக்கும், மனிதனுக்கும். மனிதன் சாகடிக்கப்படுகிறான் இதுதான் வளர்ச்சியா? யோசித்துப்பாருங்கள். ஆகவே கட்டுப்பாடு என்பது தேவையான ஒன்று கடுமையான கட்டுப்பாடு தேவை, கடுமையான சட்டங்கள் தேவை. சந்தைப் பொருளாதாரம், சாதாரண மக்களை சந்தியில் நிறுத்திவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். ஸ்டிக்லிஸ் சொல்கிறார் சந்தைப் பொருளாதாரத்தினுடைய அடிப்படைகளையெல்லாம் தகர்ந்துவிட்டன என்று, அமெரிக்க பொருளாதார அறிஞர் ஒரு காலத்தில் உலக வங்கியினுடைய தலைமைப் பொருளாதார அறிஞராக இருந்தவர். அவர் இப்பொழுது பல துறைகளில் வெற்றிபெற்றதற்குக் காரணம் அரசாங்கக் கட்டுப்பாடு என்று சொல்லுகிறார். அவர் இன்னுமொரு கருத்தையும் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிப்படையாக சொன்னார் அலைக்கற்றையை தனியாருக்குக் கொடுத்திருக்கக் கூடாது அரசாங்கமே வைத்திருந்தால் அந்த லாபத்தை பயன்படுத்தி மக்கள் நலத்திட்டங்களுக்கு பயன்படுத்திருக்கலாம் என்றார். நான் சொன்ன மக்கள் நலத்திட்டங்களைத்தான் நீங்கள் இலவசம் என்கிறீர்கள் அதுதான் வேறுபாடு.

கேள்வி: பொருளாதார பேராசிரியராகவும், திட்டக்குழு தலைவராகவும் தாங்கள் பதவிவகித்த அனுபவத்தைக் கொண்டு கூறுங்கள், தமிழகத்தை பொருளாதாரத்தில் முன்னேற்றுவதற்கு உங்கள் பரிந்துரைகள் என்ன?

பதில்: என்னைப் பொறுத்தவரையில் ஒரு நீண்டகால நோக்கில் பல திட்டங்களை உருவாக்க வேண்டும். மாநில அரசு, மத்திய அரசு இருக்கிற நிதி அடிப்படைகளை மாற்றியமைக்க வேண்டும். இன்றைக்கு இந்தியாவிலே தொழில்,வேளாண்மை, பணித்துறை (service centre) இந்த வளர்ந்த துறைகள்தான் அதிக வரி வருவாயை மத்திய அரசிற்கு அளிக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாகிற பொழுது குறைந்த வருவாயைத் தருகிற வரி ஆதாரங்கள் மாநில அரசிற்கு கொடுக்கப்பட்டுள்ளது. பெருகிக் கொண்டிருக்கும் வருவாயைத் தரக்கூடிய வரிகளை எல்லாம் மத்திய அரசு எடுத்துக்கொண்டது, உதாரணமாக எடுத்துக்கொண்டால் வருமானவரி. கம்பெனிகள் மீது, குழுமங்கள் மீது விதிக்கப்படுகின்ற குழுமவரி கார்ப்பரேசன் Income tax  ஆனால் அவர்கள் மாநிலங்களுக்கு பிரித்துக்கொடுக்கிற பொழுது ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஒரு நிதிக்குழுவின் பரிந்துரையின் பேரில் கொடுக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் 20 ஆண்டுகளுக்கு முன்பு மொத்த நிதிக்குழுவிற்கு கட்டுப்பட்டு ஒதுக்கப்படுகிற நிதியில் 7 விழுக்காடு கொடுத்தார்கள். இப்பொழுது 5 விழுக்காடாக குறைத்துவிட்டார்கள் மக்கள் தொகை என்ன குறைந்துவிட்டதா 20 ஆண்டில்? 7 கோடி மக்கள் தொகையை ஈட்டியிருக்கிறோம். 7 கோடி என்றால் 7 கோடி வாயும் வயிறும் இருக்கிறது. 7 கோடி மக்களுக்கும் மருத்துவ வசதி கிடைக்கவேண்டும், அப்படியென்றால் அதிக வருவாயை வைத்துக்கொண்டு நீங்கள் இருக்கிறீர்கள் ஆகவே சுயாட்சியைக் கடந்து தன்னாட்சி இருந்தால்தான் இந்தியா எதிர்காலத்தில் ஒரு வலிமையான நாடாக இருக்கும். இல்லையென்றால் பல பிரச்சனைகள் பொருளாதார,சமூக ஏற்றத்தாழ்வுகள் தொடங்கி ஒரு கலவரத்தில் முடியும். தமிழகத்தில் வேளாண் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மேலும் தகுதிவாய்ந்த பயிரிடுகிற விவசாய நிலங்களை விற்பதற்கு தடை விதிக்க வேண்டும்.

நீர் ஆதாரங்களை பெருக்க வேண்டும் ஏனென்றால் தமிழகத்தில் பெய்கின்ற மழை அளவே தமிழகத்திற்கு போதுமானது என்பது நான் திட்டக்குழுவில் இருந்தபொழுது அறிந்துகொண்டேன். தமிழ்நாட்டில் கிணறுகள், ஏரிகள் நிறைய இருக்கின்றன. அந்த ஏரிகளையும் கிணறுகளையும்  நாம் மூடிவிட்டோம் ஏரிகளை ஆக்கிரமிப்பு செய்து அங்கே வீடுகட்டிக்கொண்டிருக்கின்றோம். மழை வந்தால் ஏரிகளில் தண்ணீர் வருகிறது வீட்டிற்குள் தண்ணீர் புகுந்துவிட்டது என்று மாற்றி சொல்லுகிறார்கள். இந்த நிலைமை மாற வேண்டும் அதாவது தமிழ்நாடு நல்ல வளர்ந்த நிலையில் இருக்கிறது. ஒரு நகர்புறமான மாநிலங்களில் தமிழ்நாடு மூன்றில் ஒன்றாவது மாநிலமாக இருக்கிறது. தமிழ்நாட்டில்தான் வேளாண்மையும்,தொழிலும்,பணியும்(Manufacturing service and Agriculture) இருக்கின்றது. இன்றைக்கு கம்ப்யூட்டர் சாஃப்ட்வேரில் தமிழ்நாடு இருக்கிறது. தொழில் துறையில் பல தொழிற்சாலைகள் தனியார் தொழிற்சாலைகள், பொதுத்துறை நிறுவனங்கள், விவசாயம் இருக்கின்றன.  இம்மூன்றும் வலிமைபெற்ற வளம்மிக்க தமிழ்நாட்டில் சரியான, குறுக்கீடு இல்லாத, நீண்டகால பொருளாதார வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றுவதில் அதிகாரம் இல்லாத நிலையில் இருக்கிறது அதை மாற்ற வேண்டும். தமிழகத்தில் முக்கியமான ஒரு பிரச்சனை என்றால் இன்று சுற்றுச்சூழல் உலகளவிற்கு பாதிக்கிறது. நாம் மாசுகேட்டினை உருவாக்கி வருகிறோம். மாசுக்கேடு என்பது காற்று மாசு, நீர் மாசு, நில மாசு என்று எல்லா விதத்திலும் வளர்ச்சி என்கிற பெயரால் ஒரு வளர்ச்சி மாயை உருவாக்கி வருகிறோம். வளர்ச்சி முக்கியமா? முன்னேற்றம் முக்கியமா? முன்னேற்றத்தின் அடிப்படையில் அமைந்த வளர்ச்சிதான் இருக்கவேண்டும் வளர்ச்சிக்காக முன்னேற்றத்தை சிதைக்கக் கூடாது. இன்றைக்கு வளர்ச்சிக்காக பல முன்னேற்றங்களை தடுத்துக்கொண்டிருக்கிறோம். அதில் ஒரு கூறுதான் ஏற்றத்தாழ்வு, அதில் ஒரு கூறுதான் வேலைவாய்ப்பு இல்லாமல் போகிற சூழ்நிலை. இவை இன்றைக்கு ஒட்டுமொத்தமாக சுற்றுச்சூழலை பாதுகாக்கிற வேளாண்மை, தொழில்நுட்பங்கள், தொழிற்கூடங்கள், போக்குவரத்துத் திட்டங்கள் இவைகளையெல்லாம் உருவாக்க வேண்டும்.

தொழில்நுட்பத்தை வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் பயன்படுத்த வேண்டும். தனியார் ஆதிக்க சக்தியின் கையில் தொழில்நுட்பமும் வளர்ச்சியும் போய்விடக்கூடாது. இதை சமத்துவம் என்று சொல்லுவதா அல்லது சோசலிசம் என்று சொல்வதா என்று பல பொருளாதார அறிஞர்கள் தடுமாறிக்கொண்டிருக்கிறார்கள். நான் வெளிப்படையாகச் சொல்கிறேன் சமத்துவம் இல்லாத ஒரு சமுதாயம் வெறும் ஏற்றத்தாழ்வுகளை சந்தித்து அழிந்துவிடும் என்பதுதான் ஆகவே பொருளாதாரத்தை வளர்த்தெடுப்பதற்கு ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு தனியான அதிகாரகூட்ட அமைப்பாக இருக்கவேண்டும். சிலபேர் சொல்லுகிறார்கள் காஷ்மீரில் சொத்து வாங்கக்கூடாது.

தமிழ்நாட்டில் மற்ற மாநிலத்தவர்கள் சொத்து வாங்கிதான் இன்றைக்கு நிலத்தின் விலையை ஏற்றியிருக்கிறார்கள் ஆகவே ஜி70 என்ற அந்த அரசியலமைப்புச்சட்டவிதிகளில் சொல்லப்படுகிற மற்ற மாநிலத்தவர்கள் சொத்து வாங்கக்கூடாது என்ற ஒரு கூற்று சரியாக இருப்பதாக தெரிகிறது ஏனென்றால் அதை தவறாக பயன்படுத்திவிட்டார்கள். தேவைக்காக நிலம் வாங்குவதை விட ஊகத்திற்காக நிலத்தை வாங்குவது வாழ்கின்ற இந்தியாவிற்கு செய்கின்ற துரோகம், தமிழக மக்களுக்கு செய்கிற துரோகமாக நான் பார்க்கிறேன். இன்றைக்குத் தேவையாக இருப்பது நேர்மையான அரசியல், நேர்மையான அரசியல் தலைமையில் இருந்துவிட்டால் நேர்மையான நிர்வாகம் தன்னாலே வந்துவிடும்.

கேள்வி: ஒவ்வொரு தமிழருக்கும் பொருளாதாரம் பற்றிய விழிப்புணர்வு எந்த அளவிற்கு அவசியமானது? அத்தகைய பொருளாதார அறிவை, விழிப்புணர்வை எந்த வகையில் ஏற்படுத்தலாம்?

பதில்: இந்தக் கேள்வி தமிழருக்கு மட்டுமல்ல உலகளவிற்கே பொருந்தும் ஏனென்றால் வளர்ந்த நாடுகளே பொருளாதாரத்தில் சரிவு ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. அமெரிக்காவினுடைய பொருளாதாரவளர்ச்சி ஒரு விழுக்காடு கூட அல்ல. கடந்த பத்தாண்டுகளாக ஐரோப்பிய  நாடுகளின் பொருளாதாரவளர்ச்சி ஒரு விழுக்காடுதான் அங்குதான் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் இருக்கிறது. பெரிய பொருளாதார விற்பன்னர்கள் இருக்கிறார்கள், நோபல் பரிசெல்லாம் அறிவிக்கப்படுகிறது அங்கு இந்த பொருளாதாரத்தை எல்லோரும் புரிந்துகொள்ளுகிற அளவிற்கு, பொருளாதாரத்தின் அடிப்படையாவது தெரிந்துகொள்ளுகிற ஒரு நிலை ஏற்பட்டால்தான் அதை எந்த அளவில் செலவு செய்யவேண்டும் தனி மனிதர்கள், எந்த வகையில் செலவு செய்யவேண்டும், எதற்காக செலவு செய்யவேண்டும், சிக்கனம் என்பது என்ன, சேமிப்பு என்பது என்ன? என்பதை ஒவ்வொரு மனிதனும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பது அவசியமாகும்.

பொருளாதாரத்தில் ஒரு கூற்று உண்டு Economy is not less spending but wise spending என்று. குறைந்து செலவிடுவது என்பது பொருளாதாரம் சிக்கனமல்ல, புத்திசாலித்தனமாக செலவிடுவதுதான் சிக்கனம். ஆகவே தனிமனிதர்களுக்கு இதை போதிப்பது பொருளாதாரத்தை பள்ளிக் கல்வியில் சேர்க்கவேண்டும் என்று முயன்று கடந்த ஆட்சியின்போது அந்தப் பள்ளிக் கல்வியிலே பொருளாதாரத்திட்டத்தை ஐந்தாம் வகுப்பிலே சேர்த்திருக்கிறோம். அதை எழுதுவதற்குக்கூட அந்தப் பாடத்தை இப்படித்தான் இருக்கவேண்டுமென்று நானே எழுதிக்கொடுத்தேன் இப்பொழுது பாடத்திட்டத்தில் இருக்கிறது. பொருளாதாரம் என்றால் என்ன?,சேமிப்பு என்றால் என்ன?, கடன் என்றால் என்ன?, யாருக்காக கடன் அரசு வாங்குகிறது?, வங்கியின் பணி என்ன?, வங்கியில் யாருக்கு கடன் கொடுக்கிறார்கள்? என்பது அடிப்படையானது. ஒவ்வொரு மனிதனும் எதிர்பார்ப்புகள் அனைத்தும் நல்லது நடக்கவேண்டும் என்பதுதான் இது நடக்காதென்றால் அது எதிர்மறையான ஒரு அணுகுமுறையாக நான் கருதுகிறேன்.

அண்மை காலங்களில் தமிழ் ஊடகங்களில் செய்தி ஊடகங்களிலும் சரி, ஒழி ஊடகங்களிலும் சரி பொருளாதாரத்தைப் பற்றிய கருத்துப் பரிமாற்றங்கள் அதிகமாக நடைபெறுகின்றன. ஆனால் அந்தக் கருத்துப் பரிமாற்றங்கள் செய்பவர்கள் வல்லுனர்களை அழைத்து செய்வதில்லை நான் அவர்களை குறைசொல்லவில்லை வருகிறவர்கள் முழுமையாக பொருளாதாரத்தினுடைய தாக்கத்தை, புள்ளிவிவரங்களைப் பார்க்காமலே வந்து மேலோட்டமாக கருத்து தெரிவிக்கிறார்கள் அந்த நிலை மாறவேண்டும் மாறிக்கொண்டே இருக்கிறது. இன்றைக்கு பத்தாண்டுக்கு முன்பு இருந்த நிலை மாறி இணையங்கள் வழியாக முகப்புத்தகத்தின் வழியாக கருத்துப் பரிமாற்றம் சமுதாயத்தில் நடைபெறுகிறது இல்லை என்று சொல்லமுடியாது. அந்த கருத்துப் பரிமாற்றம் மேலும் நல்லநிலைக்கு, ஆக்கப்பூர்வமான நிலைக்கு பொருளாதாரத்தைப் பற்றிய ஒரு புதுமையான சிந்தனைக்கு எல்லோரும் வாழவேண்டும் ஒரு சமூக நிலைக்கு அது உயர்த்தப்படவேண்டும் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள்.

சிறகிற்கு நேரம் ஒதுக்கி மிகமிக சிறப்பான நேர்காணல் தந்தமைக்கு வாசகர்கள் சார்பாக நன்றிகள்.

See also teaching active approaches, national academy of http://buyessayonline.ninja sciences

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழ்நாட்டின் முன்னாள் திட்டக்குழுத் துணைத்தலைவர் நாகநாதன் அவர்களின் நேர்காணல்”

அதிகம் படித்தது