மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழ்நாட்டில் இந்தியநாட்டின் பிரதமர் தேர்தல் 2014

ஆச்சாரி

Mar 29, 2014

1997இல் தமிழ் மாநில காங்கிரஸ் இருந்த பொழுது ஜி. கே. மூப்பனார் பிரதமர் ஆகப் போகிறார் என்று அனைத்து பத்திரிகைகளும் தலைப்புச் செய்தி எழுதின. அன்றைய தினம் ஐக்கிய முன்னணியில் பங்கு வகித்த தெலுங்கு தேசம் சந்திரபாபு நாயுடுவும்,  திமுக  தலைவர் கருணாநிதியும் தீர்மானித்திருந்தால், நெருக்கடி கொடுத்து வேலைகள் செய்திருந்தால் மக்கள் தலைவர் மூப்பனார் தான் பிரதமர் என்று பத்திரிகைகள் எழுதின.

அன்றைய தினம் தமிழ் மாநில காங்கிரஸ் 20,  தெலுங்கு தேசம் 16,  திமுக 17  இடங்களும் என்று மிக வலுவானதொரு நிலையில் ஆதரவுடன் இருந்தது.

தமிழ்நாட்டில் 37 இடங்களையும் இந்தக் கூட்டணி கைப்பற்றி இருந்தது. தலைவர்கள் இவர்கள் இருவரும் சேர்ந்து நெருக்கடி  கொடுத்திருந்திருப்பார்களேயானால் இந்தியாவின் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு தமிழரை பிரதமராக்கி இருக்க முடியும்.

இனி எதிர்காலத்திலும் அப்படியொரு வாய்ப்பு அமையும் என்று தோன்றவில்லை.

ஏன்  இப்படியொரு கருத்தை எழுத நேரிடுகிறது என்றால் தேசியக் கட்சிகளில் அவ்வளவு வலுவாகக் கால்பதித்து அரசியல் செய்து வருபவர்களாக மற்ற எவரையும் நினைவில் கொணர்ந்து ஒப்பீடு செய்யக் கூட இயலவில்லை.

தமிழன் பிரதமாகுவதற்கு உதவ ஆட்கள் இல்லை என்றாலும், தமிழன் பிரதமர் ஆகிவிடக்கூடாது என்று தடுப்பதற்கு ஆயிரம் ஆட்கள் இருக்கின்றனர். அனைத்து மக்களும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த பிரதமர் தேர்வுக்கான முடிவு தெரிவதற்கு முதல்நாள் 1997 ஏப்ரல் 20 இரவு திருமானூர் பகுதியில் நடந்த கூட்டத்தில் சுப்பிரமணியசாமி பேசினார் `மூப்பனாரை பிரதமராக்க விடமாட்டோம் ஐ.கே.குஜ்ரால்தான் பிரதமர்` என்று.  தமிழ்மாநில காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் அமரமூர்த்தி அவர்களால் அடிக்கத் துரத்தப்பட்டு , ஓட ஓட விரட்டப்பட்டு தப்பித்தார் சுப்பிரமணியசாமி ` என்றும்,`எம் எல் ஏ வை காவல்துறை தேடுகின்றது` என்றும் பத்திரிகைகளில் செய்தி வந்தது.

அதே சமயம் பிரதமர் பதவி தொடர்பான ஒரு கேள்விக்கு பதில் சொன்னார் திமுக தலைவர் கருணாநிதி, `என் உயரம் எனக்குத் தெரியும்` என்று.

 அவர் தேசிய அரசியலுக்கு ஆசைப்படுகிறவர் இல்லை என்றும் மாநில அரசியலில் மட்டுமே செயல்படக்க்கூடியவர் என்பதும்தான் இதற்கு அர்த்தம்.

அப்போதே நேரடிதேசிய அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டவர் கருணாநிதி.

ஆனால் இன்று அதிமுக தலைவர் செல்வி ஜெயலலிதாவோ பிரதமர் கனவில் மிதக்கிறார்.

காங்கிரசின் தமிழ்நாட்டுக்கெதிரான துரோகங்கள் பற்றிய செல்வி ஜெயலலிதா அவர்களின் கேள்விகள் நியாயமானவை.நேர்மையானவை.

தமிழருக்காக கேட்க ஒரு ஆள் இருக்கிறார் என்ற உணர்வைத் தருபவை.

அவர் பிரதமரானால் எல்லாக் கேள்விகளிலும் பொதிந்திருக்கும் தமிழ்நாட்டுக்கு ஆதரவான முடிவுகளை எடுத்துச் சாதிப்பார் என்பதில் சந்தேகமில்லை. அதனால் தாரளாமாக பிரதமர் ஆகட்டும். ஆனால் எந்த நாட்டுக்கு என்றுதான் தெரியவில்லை. எந்த நாட்டுக்கு பிரதமராகப் போகிறார்? எப்படி பிரதமராகப் போகிறார்?

இந்தக் கேள்விதான் என்னை உறுத்தியது?எழுதத் தூண்டியது.

இந்த சமயத்திலே மறுபடியும்  1996லே நடந்த 11வது லோக்சபாவுக்கான தேர்தலும் அதனடிப்படையில் இந்திய அரசியலில் நடந்த தொடர் திருப்பங்களும் நினைவின் நிழலாய் மீள்பார்வைக்கு வருகின்றன.

அந்தத் தேர்தலில் பிஜேபி அதிகபட்சமாக 161 தொகுதிகளைக் கைப்பற்றி முன்னணியில் இருந்தது. ஆட்சி அமைக்க அழைக்கப்பட்டது. AB வாஜ்பாய் வந்தார். உதிரி எண்ணிக்கைகளாக 28 பேர் அரியானா விகாஸ் ,சமதா ,சிவ சேனா என்று சில கட்சிகளை வைத்து கணக்குப் பண்ணி `161+28=189தானே வருகிறது..201க்கு இன்னும் 12 இடங்கள் பற்றாக்குறை` என்று குழம்பிப்போனார் வாஜ்பாய்.

`ஒன்று .. இரண்டு..மூன்று` என்று வாஜ்பாய் எண்ணிக்கொண்டே இருந்தார்..

`மூன்று.. இரண்டு..ஒன்று.. `என்று அதேசமயம் பதிமூன்றிலே ஆரம்பித்து முதலில் எண்ணி முடித்தவர் குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் ஷர்மா வாக இருந்தார். பெரும்பான்மை நிரூபிக்க உங்களுக்கு கொடுக்கப்பட்ட கெடு முடிந்துவிட்டது  என்ற போதுதான் இன்னமும் இடங்களை எண்ணிக் கொண்டிருப்பதிலே அர்த்தம் இல்லை என்று உரைக்க ஆரம்பித்தது வாஜ்பாயிக்கு. 161 தொகுதிகளைக் கைப்பற்றிய கட்சிக்கு இந்த நிலை.

545 இடங்கள் கொண்ட லோக்சபாவுக்கு 200க்கு  மேல் இடங்களின் ஆதரவைக் காண்பிக்க வேண்டியது அவசியம். குடியரசுத்தலைவர் அடுத்து அதிக இடங்களை பிடித்த காங்கிரஸ் கட்சியை அழைத்தார்.  நாட்கள் ஆட்சி அமைக்க விரும்பவில்லை, வெளியில் இருந்து மற்றவர்களுக்கு ஆதரவு தருகிறோம் என்று விலகிக்கொண்டது காங்கிரஸ்.

இத்தனைக்கும் அன்று 140 இடங்கள் வைத்திருந்த கட்சி அது.

இடது முன்னணி என்ற கம்யூனிஸ்ட்கள்  அணி(52), தேசிய முன்னணி (79) என்ற தெலுகு தேசம், சமாஜ்வாடி, ஜனதா தள்  கட்சிகள் சேர்ந்த இந்த அணிகளைக் கூட்டிக் கணக்குப் பண்ணினால் 131 இடங்கள் ஆயிற்று. காங்கிரசின் 140 ஐயும் கூட்டினா 271. இத்தோட யார் யாரை லாம் சேர்க்கலாம் என்று பார்த்தால் தமிழ்நாட்டு கட்சிகள் இரண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் (20), தி.மு.க (17) ஒரு 37. இன்னும் மிச்சம் மீதி கட்சி எல்லாம் கூட்டினால் 24 இடங்கள். மொத்தத்தில் 271+37+24=332 இடங்கள்.

இதில் அதிகமாக எந்தக்கட்சிக்கு இடங்கள் இருக்கிறது என்று பார்த்தால் ஜனதா தள், தனிப்பட்ட முறையிலே 46 இடங்கள். யார் பிரதமர் என்று ஒரு முடிவிற்கு வந்து H.D. தேவேகவுடாவைத் தீர்மானிக்கிறார்கள்.

இப்படியாக 11வது லோக்சபாவுக்கான பிரதமர் தேர்வு முடிகிறது.

எண்ணி ஒன்றரை ஆண்டு தான் தாக்குப் பிடித்தது இந்த ஏற்பாடுகள்.

ஆரம்பத்திலேயே வெளியிலிருந்து ஆதரவு தர்றேன்னு என்று சொல்லிக் கூட்டத்தைக் கூட்டிய காங்கிரசுக்கு அனேகமாக சலித்து விட்டது.  1997 ஏப்ரலிலேஆதரவை விலக்கிக் கொண்டு விட்டது. பின்னர் உடனடியாக தேர்தலை சந்திப்பதை தவிர்க்க ஏகப்பட்ட நிபந்தனைகளுடன் ஜனதா தள் IK குஜ்ராலைக் கைநீட்டி ஒரு பஞ்சாயத்துத் தீர்ப்பை வழங்கியது. அன்று தான் மேலே சொல்லி இருந்த தமிழன் பிரதமராகுவதற்கான பொன்னான வாய்ப்பை இழந்த நாள்.

இது வரலாறு.

இந்த வரலாற்றிலிருந்து நாம் கற்றுக் கொண்ட பாடம் என்ன?

1. எந்த கட்சியும் 161 இடங்கள் வைத்திருந்தாலும் அரசு அமைக்க முடியாது. உதிரிகளின் ஆதரவு வேண்டும்.

2.  140 இடங்கள் வைத்திருந்தால் கூட அரசு அமைக்கலாம். வெளியில் இருந்து ஆதரவு தரலாம். எப்போழுது  வேண்டும் என்றாலும் அரசைக் கலைக்கலாம்.

3. 46 இடங்கள் வைத்திருக்கின்ற கட்சியில் இருந்து கூட பிரதமர் ஆகலாம் .

சிலருக்கு பிரதமர் கனவு வந்து வாட்டுகிற காரணம் இந்த மூன்றாவது கருத்தால் தான்.

உண்மையிலேயே அலை ஏதும் அடித்தால் இந்தக் கனவெல்லாம் பலிக்காது. ஆனால் பிஜேபி மோடிக்கு ஆதரவாக அலை எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை என்பது சிறு சிறு கட்சிகளுக்கெல்லாம் ஒரு நப்பாசையை உண்டுபண்ணியிருப்பதென்னவோ உண்மைதான்.

எது நடக்குமோ இன்னும் ஒரு மாதத்தில் தெரிந்துவிடப் போகின்றது.

எப்படி இருந்தாலும் இப்படி உதிரியாக (தேசிய அரசியலிலே 40 எல்லாம் உதிரி தான்) 40 இடங்கள் வைத்துக்கொண்டு பிரதமர் ஆகும் கனவில் இருக்குற ஆட்கள் எல்லாம் நினைத்த படி எல்லாம் செயல்பட முடியாது. ஒருவேளை வெளியில் இருந்து ஆதரவு தரப்போகின்ற(?) நூற்றிற்கும் மேல் இடங்கள் வைத்திருக்கின்ற தேசிய கட்சி சொல்கின்றபடி ஆடவேண்டும்.   `உட்காரு என்றால் உட்கார வேண்டும். நில் என்றால் நிற்க வேண்டும். சலிப்படைந்துவிட்டது,  நீ போதும். நான் வேற ஆளை வைத்து விளையாடிக்கொள்கிறேன் என்றால் மூட்டை கட்டிகொண்டு கிளம்ப வேண்டியதுதான்.

`நாற்பதும் நமதே`என்று தனக்குத் தானே சொல்லிக் கொள்ளலாமே தவிர மக்கள் என்ன முடிவெடுக்கிறார்கள் என்பதில் ஆரம்பித்து ஒரு வேளை அப்படி நாற்பதையுமே கைப்பற்றினாலுமே குதிரை பேர விளையாட்டுக்களைக் கடந்துதான் பிரதமர் நாற்காலியை எட்டமுடியும்.

`வாங்க..வாங்க` என்று யாரும் பொன்னாடை போர்த்தி நேரிடையாக பிரதமர் நாற்காலியில் அமரவைத்து விடமாட்டார்கள். உதாரணம்தான் மேலே குறிப்பிட்டிருந்த வரலாற்று சம்பவங்கள்.

தேசியக் கட்சிகளைப் புறக்கணித்து விட்டு, தேசிய அளவிலே அரசியல் செய்யலாம் என்ற கனவுக்கு இந்திய அரசியல் அமைப்பில் இடமில்லை.

 332 இடங்கள் ஆதரவு காண்பிக்கின்ற அளவிற்கு தேவேகவுடா வருகிறார் என்றால் அங்கே காங்கிரசின் பின் கூடிய அணி இருந்தது.

பெரும்பான்மை இடத்தைக் கைப்பற்றிய கட்சிகள் ஆட்சி அமைக்க முடிவதில்லை. தேர்தலுக்கு முன்னர் வாக்கு கேட்டு மக்களைச் சந்திக்கின்ற போது சேர்கின்ற கூட்டணி என்பது வேறு. தேர்வு முடிவுக்கு பின் ஆட்சி அமைக்க வசதியாகக் கூறும் காரணங்களும் அமைகிற கூட்டணியும் வேறு என்ற நிலைதான் அரசியல் கட்சிகளுக்கான சுதந்திரம் என்றால் மக்கள் ஏமாற்றப்படுகிறார்களா இல்லையா? 

உதாரணத்திற்கு தமிழகத்திலே களம் கண்டிருக்கின்ற கட்சிகளிலே தேசியக் கட்சிகளும் பங்கு பெறுகின்றன. தனித் தனியாகத் தேர்தலைச் சந்திக்கும் கட்சிகளும் இருக்கின்றன. தேர்தல் முடிவுகள் தெரிந்தபின் இவை தேசியக் கட்சிகள் பல மாநிலங்களில் இருந்தும் பெற்றுவரப்போகும் அதிகபட்ச இடங்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஆட்சி அமைக்க அழைக்கப்படும்போது அவற்றில் எதாவது ஒன்றுடன்தான் கூட்டணி வைக்கும். இந்த தேசியக் கட்சிகளை புறந்தள்ளிவிட்டு இங்கே மக்களைச் சந்தித்து வெற்றி பெற்ற இடங்களை இவர்கள் இதே தேசியக் கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க அதரவு தர உபயோகப்படுத்தும் வாய்ப்பு இருக்கிறதா இல்லையா? இது மக்களை ஏமாற்றும் முயற்சி இல்லையா?

இதனைத் தடுக்க வேண்டாமா? தேர்தலுக்கு முன்னால் மக்களைச் சந்திக்கின்ற போது என்ன வாக்குறுதி கொடுக்கப்பட்டு எந்தெந்த அணிகள் கூட்டணியாக நின்றனவோ அவை அப்படியேதான் ஆட்சிஅமைக்கவும் முடியும். கூட்டணியிலே மாற்றம் கூடாது என்ற கட்டமைப்பு விதி நடைமுறையில் சாத்தியமா? யார் செய்வது? இதனைச் செய்யாமல் மக்களுக்கு வாக்குரிமை வழங்கும் போலியான ஜனநாயகம் என்ன தீர்வை ஏற்படுத்திவிட முடியும்? இதுதான் இந்தியா.

The essay writer online from pro-essay-writer.com more versatile your learning repertoire is, the better you will do all round

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழ்நாட்டில் இந்தியநாட்டின் பிரதமர் தேர்தல் 2014”

அதிகம் படித்தது