மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழ் ஆண்டு (திருவள்ளுவராண்டு)

ஆச்சாரி

Jan 1, 2012

காலத்தின் அருமை

நம் வாழ்வில் திரும்பப் பெற முடியாதவை மூன்று. ஒன்று காலம், மற்றவை மானம், உயிர்.

’நாளென ஒன்று போல் காட்டி உயிரீரும்

வாளது உணர்வார்ப் பெறின்’

என்கிற குறள் மூலமும், காலம் அறிதல் என்கிற அதிகாரத்தின் வழியும் காலத்தின் அருமையை வள்ளுவம் உணர்த்துகிறது.

நம் முன்னோர்கள் காலத்தை நொடி, நாழிகை, நாள், கிழமை, திங்கள், ஆண்டு, ஊழி என்று வானியல் முறைப்படி வரையறை செய்துள்ளனர்.

60 நாழிகையை ஒரு நாளாகவும் ஒரு நாளை வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம் என்று 6 சிறு பொழுதுகளாகவும் ஓர் ஆண்டை இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி, பின்பனி என்று 6 பெரும் பொழுதுகளாகவும் பிரித்துள்ளனர். காலத்தைக் கணக்கிடுவதில் இத்துணைக் கவனம் செலுத்திய தமிழர்கள் வாழ்க்கை, வரலாற்று நிகழ்ச்சிகளைப் பொதுவான ஆண்டுக்கணக்கால் குறிப்பிடும் வழக்கத்தைப் பின்பற்றவில்லை என்பது வியப்பாக இருக்கிறது, வருத்தம் தருகிறது.

இன்றைய நிலை

இன்னாளில் வழக்கில் உள்ள ‘பிரபவ முதல் அட்சய’ வரை உள்ள 60 ஆண்டுகளில் ஒன்று கூட தமிழ் இல்லை. அவை பற்சக்கர முறையில் இருப்பதால் 60 ஆண்டுகளுக்கு மேல் உள்ள காலத்தைக் கணக்கிடுவதற்கு உதவியாக இல்லை.  அதற்கு வழங்கும் கதை அறிவு, அறிவியல், தமிழ் மரபு, மாண்பு, பண்பு ஆகியவற்றுக்குப் பொருத்தமாகவும் இல்லை, பல்லாயிரமாண்டுகளாக வாழ்ந்து வரும் தமிழினத்தின் காலத்தை வரையறுக்கவும் முடியவில்லை.

இந்த இழிநிலையைப் போக்கத் தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள், புலவர்கள் 1921ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில்  தமிழ்க்கடல் மறைமலை அடிகள் தலைமையில் கூடிப் பேராசிரியர் கா. நமச்சிவாயம் முன்னிலையில் ஆராய்ந்தார்கள். இக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு முடிவெடுத்தவர்களில் முக்கியமானவர்கள் தமிழ்த் தென்றல் திரு. வி. கல்யாணசுந்தரனார், தமிழ்க்காவலர் கா. சுப்பிரமணியப் பிள்ளை, சைவப்பெரியார் சச்சிதானந்தம் பிள்ளை, நாவலர் ந.மு. வெங்கடசாமி நாட்டார், நாவலர் சோமசுந்தர பாரதியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் ஆகியோர் ஆவார்கள்.

அவர்கள் எடுத்த முடிவுகள்

திருவள்ளுவர் பெயரில் தொடராண்டு பின்பற்றுவது; அதையே தமிழ் ஆண்டு எனக்கொள்வது; திருவள்ளுவர் ஆண்டின் முதல் திங்கள் தை; இறுதித் திங்கள் மார்கழி; புத்தாண்டுத் துவக்கம் தை முதல் நாள். திருவள்ளுவர் காலம் கி.மு.31. ஆங்கில ஆண்டுடன் 31-ஐக் கூட்டினால் தமிழாண்டு வரும் (2011 + 31 = 2042)  என்று அந்நாளில் முடிவு செய்தனர். கிழமைகளில் புதன், சனி தவிர மற்றவை தமிழ்; புதன் = அறிவன்; சனி = காரி.

தமிழ் நாட்டரசு 1971 முதல் திருவள்ளுவராண்டு முறையை ஏற்று தமிழ் நாட்டரசு நாட்குறிப்பிலும், 1972 முதல் தமிழ் நாட்டு அரசிதழிலும், 1981 முதல் அரசின் அனைத்து அலுவல்களிலும்  நடைமுறைப்படுத்தி வருகிறது.

மேற்கண்ட விவரங்கள் மறைமலை நகரில் வாழ்ந்து வரும் திரு வ. வேம்பையன் அவர்களின் கட்டுரையிலிருந்து எடுத்தது. கடந்த 30 ஆண்டுகளாக இவர் திருவள்ளுவராண்டைத் தமிழகத்தில் நடைமுறைப்படுத்த கடும் முயற்சி எடுத்துவருகிறார். 1967 இல் ஆட்சிக்கு வந்தபோதோ அல்லது 1971 இல் பெரும் வெற்றி பெற்றபோதோ முழு வீச்சில் அரசு சட்டத்துடன் நடைமுறைப்படுத்தி இருந்தால் கடந்த 40 ஆண்டுகளில் நாம் வெற்றி பெற்றிருப்போம். ஒன்று தமிழாண்டு திருவள்ளுவராண்டு யாராலும் மாற்ற முடியாத படி (எப்படி இன்று ‘தமிழ்நாடு’ என்ற பெயரை யார் ஆட்சிக்கு வந்தாலும் மாற்ற முடியாதோ) வழக்கத்தில் வந்து நிலைத்து இருக்கும்.

என் கருத்து

அறிஞர்களும் சான்றோர்களும் தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்திருந்தாலும் ஒரு சாரார் இதை மறுத்து வழக்கமான சித்திரை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாகப் பாவித்து வருகிறார்கள். இவர்கள் தமிழ் ஆண்டுகள் என்கிற பெயரில் வழங்கி வரும் வடமொழிப் பெயர்களையும் ஏற்றுக் கொண்டு வருவது வருத்தத்தைத் தருகிறது. தமிழருக்கென ஒரு தொடராண்டு கொண்டுவருவதில் ஒருவருக்கும் மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால் தமிழ் முதல்  திங்கள் ’தை’யா அல்லது ’சித்திரை’யா என்பதுதான் குழப்பம். தமிழ்ப் பேசும் அனைத்து தரப்பினருக்கும் வடமொழிப் பெயரை மாற்றுவதிலும் மாற்றுக் கருத்தேதுமிருக்க வாய்ப்பில்லை.

திருவள்ளுவரின் காலத்தை கி.மு.31 என்று கணித்ததில்தான் குழப்பம் வருகிறது. திருவள்ளுவர் காலம் கி.பி. 4ஆம் நூற்றாண்டிற்கு முன்பு இருந்ததற்கு வாய்ப்பில்லை என்று மேலை நாட்டுத் தமிழறிஞர்கள் நிலை நாட்டுகிறார்கள். அதில் முக்கியமானவர் செக்கோசுலேவியாவில் பிறந்த பெரும் தமிழறிஞர் பேராசிரியர் கமில் சுவலபில் அவர்களாவார். இவர் மொழியின் அடிப்படையில் தமிழ் நூல்களின் காலத்தை ஆய்ந்து திருக்குறள் கி.பி. 4ஆம் நூற்றாண்டிற்குப் பின்புதான் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று ‘The Smile of Murugan on Tamil Literature of South India’ என்கிற நூலில் நிறுவியுள்ளார். அவர் ஏன் அப்படி கூறுகிறார் என்பதை விரிவாகப் பார்ப்போம்.

திருக்குறளின் காலம்

தமிழர்களின் புனித நூலான திருக்குறளின் காலத்தைக் கணிப்பது மிகக்கடினமானதும், சர்ச்சைக்குரியதுமாகும். குறள் சங்கக் காலத்தைச் சேர்ந்தது இல்லை என்பது தமிழாய்ந்த அறிஞர்கள் முடிபு. குறளின் மொழி, முந்தைய நூல்களின் மேற்கோள் காட்டல், வட மொழிச் சொற்களின் பயன்பாடு, சமண மதத்தின் தாக்கம் ஆகியவைகளை வைத்துப் பார்க்கையில் திருக்குறள் சங்கக்காலத்திற்குப் பின்புதான் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று உணரலாம். திருக்குறளின் மொழியையும் இலக்கணத்தையும் பார்க்கையில் அந்நாளில் மொழி வளர்ந்த நிலையை அடைந்திருக்கும் நிலையை அறியலாம். அதனால் அந்நூல் கி.பி.400-கி.பி.500 ஆண்டுகளுக்கிடையில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று தெளியலாம். குறள், திரு. சோமசுந்தர பாரதியார் (திருவள்ளுவர்), திரு இராசமாணிக்கனார் (தமிழ் மொழி வரலாறு) போன்றோர் கூறுவது போல் திருக்குறள் காலம் கி.மு.30-ம் அல்ல. திரு. வையாபுரிப் பிள்ளை (இலக்கிய மணி மாலை) கூறுவது போல் கி.பி.6-ஆம் நூற்றாண்டிற்குப் பிந்தியதும் அல்ல.

சங்க இலக்கியங்களில் இல்லாத புதிய இலக்கண முறைகளை முதன் முதலாகத் திருக்குறளில் காண்கிறோம். பன்மையை இறுதியில் குறிக்கும் ‘கள்’, உயர்திணையையும், அஃறிணையையும் குறிக்கும் பெயர்ச்சொற்கலில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது (263-மற்றையவர்கள், 919-பூரியர்கள்), நிபந்தனை விகுதியான (Conditional Suffix) ‘ஏல்’ (368-உண்டேல், 655-செய்வானேல், 556-இன்றேல்), எதிர்மறை (Negative) உருபு (101,103-செய்யாமல், 1024-சூழாமல்). இது போன்ற புதிய சொற்களின் பயன்பாட்டால் திருக்குறளைச் சங்க இலக்கியங்களுள் ஒன்றாகக் கருத முடியாது.

மேலும் திருக்குறளில் சங்க இலக்கியங்களைக் காட்டிலும் அதிகமான வடமொழிச் சொற்களை காணலாம். சுவலபில் அவர்கள் திருக்குறளில்

102 சொற்கள் வட மொழியிலிருந்து கடன் வாங்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார். அமரர் (121), அமிழ்தம் (11), ஆகுலம் (34), ஆசாரம் (1075), ஆதி (1), ஏமம் (306), கனம் (29), காமன் (1197), சிவிகை (37), தேவர் (1073) போன்ற பல வட மொழிச் சொற்கள் திருக்குறளிலுள்ளன. சுவலபில் எழுதிய ‘The Smile of Murugan on Tamil Literature of South India’ என்கிற புத்தகத்தின் 170,171-ஆம் பக்கங்களில் குறளில் பயன்படுத்தப்பட்டுள்ள அனைத்து வட மொழிச் சொற்களையும் பார்க்கலாம். ’பிறவிப் பெருங்கடல்’ எனும் சொல்லாட்சி வட மொழி நூலான ‘சம்சாரசாகரா’ எனும் நூலிலிருந்து எடுத்தது போலுள்ளது. சில குறள்கள் வடமொழி நூலான  ‘மானவதர்மச்சாத்திரம்’ நூலிலிருந்து முழுமையாக எடுத்துக் கையாண்டது போலுள்ளன. எடுத்துக்காட்டாக,  குறள் 43 — மானவ.III.72, குறள் 54 – மானவ.IX.12, குறள் 58 – மானவ. V.155 (Smile of Murugan, page 171). பெரு அளவிலான வட மொழிச் சொற்களை திருவள்ளுவர் பயன்படுத்தி இருப்பதால் அவர், சங்கக் காலத்திற்குப்பின்புதான் வாழ்ந்திருக்கக்கூடும். எனவே திருக்குறளின் காலம் கி.பி. 400-450 என்று கணிக்கலாம்.

வள்ளுவர் வட மொழிச் சொற்கள் அதிகம் பயன்படுத்தியிருந்தாலும் வட மொழி நூல்களின் சில கருத்துக்களை கையாண்டிருப்பதாலும், அவர் வட மொழி நன்கறிந்தவர் என்பது தெளிவு. சில வட மொழிச் சொல்லாக்கங்களை அவர் பயன்படுத்தியிருந்தாலும் பெரும்பாலான சொற்கள் தூய தமிழ்ச் சொற்களே. அவரது படைப்பில் பெரும்பாலானவை வடமொழி-வடவர் பண்பாட்டிற்கும் முந்திய சங்கத் தமிழரின் பண்பாட்டையேக் காட்டுகின்றன. இன்பம் (அகம்) என்பது தமிழருக்கே உரிய ஒரு இலக்கிய நடை. இதற்கு ’இன்பத்துப் பால்’ என்கிற ஒரு பெரும் பகுதியையே அவர் எழுதியதிலிருந்து அவர் வடவர் பண்பாடும், தமிழர் பண்பாடும் அறிந்த மூதறிஞர் எனலாம்.

மீண்டும் திருவள்ளுவராண்டு விவாதத்திற்கு வருவோம். திருவள்ளுவர் காலத்தைத் தவிர 1921-ல் பச்சையப்பன் கல்லூரியில் மறைமலையடிகள் தலைமையில் தமிழ்ச் சான்றோர்கள் எடுத்த முடிவில் எனக்கு உடன்பாடே. தமிழுக்கென ஒரு தொடராண்டு வேண்டும் என்கிற அப்பெரியோர்கள் கருத்தில் நான் உடன்படுகிறேன். வட மொழிக்கிணையான தமிழுக்குத் தமிழில் பெயரில்லாமல் வட மொழியில் பெயரிட்டு அதுவும் 60 ஆண்டு சுழற்சி முறையில் வழங்கி வருவது தமிழுக்கும் தமிழருக்கும் இழிவு. இதைப் போக்கத் தை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடுவது சிறப்பானதே. திருவள்ளுவரின் காலத்தில் நமக்கு மாற்றுக் கருத்து இருந்தாலும் திருக்குறளுக்கு மதிப்பளித்து திருவள்ளுவர் பெயரில் ஆண்டை நடை முறைப்படுத்துவதும் ஏற்கத்தக்கதே. அப்படி இதில் உடன்பாடு இல்லாவிட்டால் தமிழாண்டு என்று குறிப்பிட்டுத் தொடராண்டை வழங்கலாம்.

தையே முதற்றிங்கள்; தைம் முதலே ஆண்டு முதல்

பத்தன்று; நூறன்று; பன்னூ றன்று;

பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்

புத்தாண்டு, தைம் முதல்நாள், பொங்கல் நன்னாள்

-பாவேந்தர் பாரதிதாசன்.

Instead of researching technology, we study how people use technology in order to develop ideas http://www.justdomyhomework.com for innovation!

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

15 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “தமிழ் ஆண்டு (திருவள்ளுவராண்டு)”
 1. rajkumar says:

  செக்கோசுலேவியாவில் பிறந்த பெரும் தமிழறிஞர் பேராசிரியர் கமில் சுவலபில் சொன்னால் ஒத்துகொள்வார்கள். மறைமலை அடிகள் சொன்னால் ஒத்துகொள்ள மாட்டார்களாம். என்ன கொடுமைடா சாமி. பேராசிரியர் கமில் சுவலபில் “மணிமேகலை”யை படிக்கவில்லையோ.?

 2. rajkumar says:

  செக்கோசுலேவியாவில் பிறந்த பெரும் தமிழறிஞர் பேராசிரியர் கமில் சுவலபில் சொன்னால் ஒத்துகொள்வார்கள். மறைமலை அடிகள் சொன்னால் ஒத்துகொள்ள மாட்டார்களாம். என்ன கொடுமைடா சாமி. பேராசிரியர் கமில்சுவலபில் “மணிமேகலை”யை படிக்கவில்லையோ.?

 3. kondrai vendhan says:

  இராமனுக்கு பிறப்புச் சான்றிதழ் வைத்துக்கொண்டுதான் கர சேவை செய்தோமா ? அவருக்கு பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தால் தான் சேதுக்கால்வாய் திட்டத்தை கை கழுவினோமா ??
  இராமனுக்கு பிறப்புச்சான்றிதழ் தேவையில்லை என்றால் பின் எதற்கு வள்ளுவப் பெருந்தகைக்கு ? இவ்வளவு ஏன் ? இவர்கள் ஏசு நாதருக்கும் பிறப்புச் சான்றிதழ் கேட்டுத்தான் ஆங்கில தொடராண்டினை, தங்களின் பிறப்புச் சான்றிதழில் பதிவு செய்கின்றனரா ? இந்த மேதாவிகள்.

 4. Blogger says:

  http://www.badriseshadri.in/2012/01/blog-post_17.html

  Tuesday, January 17, 2012
  திருவள்ளுவர் எப்போது பிறந்தார்?
  இன்று திருவள்ளுவர் தினம் என்று தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது.

  திருவள்ளுவர் கிமு 31-ம் ஆண்டில் பிறந்ததாகவும் (கிறிஸ்துவுக்கு 31 ஆண்டுகளுக்கு முன்), 60 ஆண்டு சுழற்சி முறையிலான ஆண்டு முறை தமிழருக்கு ஏற்புடையதன்று என்பதால் தொடர்ச்சியான ஓர் ஆண்டு முறை வேண்டும் என்றும் பல தமிழ் அறிஞர்கள் ஒன்றுகூடி முடிவெடுத்ததாகவும் நீங்கள் கேட்டிருப்பீர்கள்.

  தில்லைக்குமரன் எழுதியுள்ள இந்தக் கட்டுரை இதன் பின்னணியை விவரிக்கும்.

 5. எ.அண்ணாமலைpangsaar says:

  தமிழாண்டு விபரத்தில் தமிழ் படித்தறிந்த பலரும் திருவள்ளுவர் ஆண்டு பிறப்பை ஒருமனதாக ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது. ஊர் மெச்சிக்க வாழ ஆசைப்படுகின்ற பேச்சாளர்களும்,எழுத்தாளர்களும் சித்திரைதான் தமிழ் பிறப்பு என்கிறார்கள். காரணம் அவர்களுக்கு தமிழன் என்று சொல்வதைக் காட்டிலும், இந்தியன் என்று சொல்வதில் பெருமை கொள்கிறான். பெரும்பாலும் பிற்படுத்த பட்டவர்கள் தங்களை மற்றவர்கள் பெருமையாக பேச வேண்டும்,பார்க்க வேண்டும் என்று ஆசைபடுவதாலே தங்களை மேல் சாதிகாரர்களைப்போல் எழுதவும் பேசவும் செய்கிறார்கள். தமிழ் ஆண்டு பிறப்பு தை முதல் நாள் என்று ஏற்க மறுப்பவர்கள் தமிழ் மொழியைத் தவிர பிறமொழி படிப்பறிவில்லாதவர்கள். வேற்று மொழி அறிவுள்ள பலரும் தமிழாண்டு சர்சைக்கு வருவதில்லை. தமிழாண்டு சித்திரை என்று சொல்லும் பலருக்கு தமிழறிவு இல்லை. மற்றொன்று வியபாரத்திற்காக் ஊடகத்தினர் தமிழர்மீது வெறுப்பு கொண்டு தமிழனின் தன்மானத்தை அழிக்கவே பக்தி பகல் வேசம் போட்டுக்கொண்டு எழுதிக்கொண்டு வருகிறார்கள்.
  தில்லைக்குமார் எழுதியக் கட்டுரையை தயவு செய்து ஊடகங்களில் வேலை செய்யும் தமிழர்கள் படிக்க வேண்டும். படித்த பின் அதன்படி உண்மையை ஊனப்படுத்தாமல் இன்றைய இளைஞர்களிடதில் தன்மானத் ஊட்ட வேண்டும்.
  இந்தத் தமிழாண்டு விவாதத்தில் மலேசியர்கள் கொஞ்சம் தெளிவாக சிந்தித்து தை முதல் நாளே தமிழாண்டு பிறப்பு என்ற முடிவோடு இருக்கிறார்கள். எங்களை சில வேளைகளில் தமிழக தொலைக்காட்சி ஊடகமே எங்களை முட்டாளாக்க முயல்கிறது.

 6. எ.அண்ணாமலை says:

  தமிழாண்டு விபரத்தில் தமிழ் படித்தறிந்த பலரும் திருவள்ளுவர் ஆண்டு பிறப்பை ஒருமனதாக ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது. ஊர் மெச்சிக்க வாழ ஆசைப்படுகின்ற பேச்சாளர்களும்,எழுத்தாளர்களும் சித்திரைதான் தமிழ் பிறப்பு என்கிறார்கள். காரணம் அவர்களுக்கு தமிழன் என்று சொல்வதைக் காட்டிலும், இந்தியன் என்று சொல்வதில் பெருமை கொள்கிறான். பெரும்பாலும் பிற்படுத்த பட்டவர்கள் தங்களை மற்றவர்கள் பெருமையாக பேச வேண்டும்,பார்க்க வேண்டும் என்று ஆசைபடுவதாலே தங்களை மேல் சாதிகாரர்களைப்போல் எழுதவும் பேசவும் செய்கிறார்கள். தமிழ் ஆண்டு பிறப்பு தை முதல் நாள் என்று ஏற்க மறுப்பவர்கள் தமிழ் மொழியைத் தவிர பிறமொழி படிப்பறிவில்லாதவர்கள். வேற்று மொழி அறிவுள்ள பலரும் தமிழாண்டு சர்சைக்கு வருவதில்லை. தமிழாண்டு சித்திரை என்று சொல்லும் பலருக்கு தமிழறிவு இல்லை. மற்றொன்று வியபாரத்திற்கா ஊடகத்தினர் தமிழர்மீது வெறுப்பு கொண்டு தமிழனின் தன்மானத்தை அழிக்கவே பக்தி பகல் வேசம் போட்டுக்கொண்டு எழுதிக்கொண்டு வருகிறார்கள்.
  தில்லைக்குமார் எழுதியக் கட்டுரையை தயவு செய்து ஊடகங்களில் வேலை செய்யும் தமிழர்கள் படிக்க வேண்டும். படித்த பின் அதன்படி உண்மையை ஊனப்படுத்தாமல் இன்றைய இளைஞர்களிடதில் தன்மானத்தி ஊட்ட வேண்டும்.
  இந்தத் தமிழாண்டு விவாதத்தில் மலேசியர்கள் கொஞ்சம் தெளிவாக சிந்தித்து தை முதல் நாளே தமிழாண்டு பிறப்பு என்ற முடிவோடு இருக்கிறார்கள். எங்களை சில வேளைகளில் தமிழக தொலைக்காட்சி ஊடகமே எங்களை முட்டாளாக்க முயல்கிறது.

 7. முத்துக்குமார் says:

  புத்தாண்டு என்பது என்ன? ஒரு ஆண்டின் முதல் நாள். தமிழ் மாதங்களில் முதல் மாதம் எது? சித்திரைதானே? அப்படியானால் சித்திரை முதல் நாள்தானே புத்தாண்டு? எதற்குமே சேராமல் ஆண்டின் நடுவில் வரும் தை எப்படி புத்தாண்டில் வரும்? தை முதல் நாள் திருவள்ளுவர் பிறந்த நாள் என்பதற்காக (அதுவும் நிரூபிக்கப்பட்டதல்ல) அதை புத்தாண்டாக கொண்டாட முடியுமா? நல்ல வேளை, அவரின் பிறந்த நாள் தை 19ல் வரவில்லை. இல்லாவிட்டால் தை 19ஐ புத்தாண்டு என்று ஆரம்பித்திருப்பார்கள்.

  சித்திரை மாதம் ஏப்ரலில் வருகிறது. ஏப்ரல் முதல் மார்ச் வரை பைனான்சியல் வருடக் கணக்கு வருகிறது. ஆக ஏப்ரல்-மார்ச் தான் சிறந்த வருடக்கணக்கு என்பதை ஆங்கிலேயர்களே மறைமுகமாக ஒத்துக்கொண்டிருக்கிறார்கள். மேலும் சித்திரை 1ம் தேதியை தமிழ் மக்கள் பல வருடங்களாக கொண்டாடி வருகிறார்கள், அவர்களிடம் முறையான புரிதலையும் தை முதல் நாளை புத்தாண்டாக மாற்றுவதன் பயனையும் எடுத்துச் சொல்லாமல் இன்னும் 100 வருடங்கள் ஆனாலும் எதையும் மாற்ற முடியாது.

 8. THENNAI GANESAN says:

  2011+31=2042 திருத்தம் தேவை.

  • admin says:

   திருத்தப்பட்டுவிட்டது.
   தங்களின் உதவிக்கு மிக்க நன்றி.

 9. rajkumar says:

  திருக்குறளில் வடசொற்கள் இடைசெறுகளே…

 10. .கவி. says:

  நல்ல கட்டுரைதில்லை.

  திருவள்ளுவர் ஆண்டை ஏற்றுக் கொள்வதில் தமிழர்களுக்கு தயக்கம் இருக்கலாகாது.

 11. sundar says:

  தொடராண்டை உபயோகத்திற்கு கொண்டுவர தமிழக அரசு முயற்சி எடுக்க வேண்டும்.

 12. Nakkeeran says:

  திருக்குறள் கிபி 4 அல்லது 5 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதை ஒத்துக் கொண்டால் சங்கம் மருவிய காலத்தில் எழுதப்பட்ட மணிமேகலை திருக்குறளுக்குப் பின்னர் எழுதப்பட்ட காப்பியமாகக் கொள்ள வேண்டும். ஆனால் மணிமேகலையில் சாத்தனார் திருக்குறளை அப்படியே கையாண்டிருக்கிறார். தெய்வந் தொழாள் கொழுநன் தொழுதெழுவாள்
  பெய்யெனப் பெய்யும் பெருமழை என்றவப்
  பொய்யில் புலவன் பொருளுரை தேறாய்

  (சிறைசெய் காதை: 59௬1)

  என்னும் மணிமேகலை அடிகள் திருவள்ளுவரையும் அவர் பாடிய குறள் ஒன்றையும் குறிக்கின்றன.

 13. க. தில்லைக்குமரன் says:

  இன்றும் தொடராண்டு ஒன்று தெந்தமிழகத்தினராலும், கேரளத்தினராலும் கையாளப் பட்டு வருகிறது. கொல்லம் என்கிற பெயரில் இது வழக்கத்திலிலுள்ளது. இது மலபார் காலம் என்றும் வழங்குகிறது. கி.பி 824-லிருந்து இது தொடங்குவதாக பின்வரும் புத்தகம் கூறுகிறது. http://www.dli.gov.in/rawdataupload/upload/insa/INSA_1/20005b5f_93.pdf. மேலும் பின்வரும் வலைத்தளத்தில் பார்க்கவும். http://books.google.com/books?id=XYrG07qQDxkC&pg=PA190&lpg=PA190&dq=kollam+era&source=bl&ots=niWJo1Seud&sig=PNZVFegzOnIeqH5d7S_gv-w1iQA&hl=en&sa=X&ei=vfP0TrGdDqmLsQL4mKXHAQ&ved=0CGgQ6AEwCA#v=onepage&q=kollam%20era&f=false
  தென் தமிழர்களும் மலையாளிகளும் தொடராண்டு ஒன்றை இன்றும் வழக்கத்தில் கொண்டுள்ளனர். தமிழர்களுக்கொரு தொடராண்டு வேண்டும் என்பதை இக்குறிப்புகள் தெளிவாக உணர்த்துகிறது.

 14. kasi visvanathan says:

  தமிழ் ஆண்டு குறித்த முழுமையான விவாதம் தொடங்கி விட்டது. மிகத்தெளிவாக இது குறித்த வரலாற்றுக்குறிப்புகள், அறிஞர்களின் கருத்துகள், அவர்களின் கருத்திற்கான தரவுகள், மறுப்புக்கட்டுரைகள் குறித்த தகவல்கள், அனைத்தும் முன் வைக்கப்பட்டு அடுத்து நாம் செய்ய வேண்டிய கடமையயையும் சுட்டிக்காட்டியுள்ள அழகிய கட்டுரை. ஆசிரியருக்கு நன்றி.
  இந்த விவாதம் தொடரட்டும், தமிழ் சான்றோர்களும் பொது மக்களும் முனைந்து முடிவெடுக்கும் காலம் கனிகிறது.

அதிகம் படித்தது