மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழ் இன உணர்வாளர்களின் நினைவேந்தல் நிகழ்வுகள் (கட்டுரை)

ஆச்சாரி

Jun 1, 2013

மே 17 ஆம் நாளில் முள்ளி வாய்க்காலில் நிகழ்ந்த தமிழ் இன பேரழிவின் நான்காம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு உலகெங்கும் வாழும் தமிழர்கள் மத்தியில், அமைதியான முறையில் நடைபெற்றது. தமிழகத்தில் பல்வேறு இயக்கங்களைச் சார்ந்தவர்களும், அரசியல் கட்சிகளும், தமிழ் இன உணர்வாளர்களும், பொதுமக்களும், மாணவர்கள் குழுவினர் பலரும் கலந்து கொண்டு மௌன அஞ்சலி செலுத்தினர். பல இடங்களில் இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் கூட நடத்த முடியாத அளவிற்குத் தமிழக காவல்துறை கட்டுப்பாடு விதித்தும், தடை செய்தும் வந்தது. இருந்தும் ஆங்காங்கே பல்வேறு குழுக்களாகப் பிரிந்து மக்கள் பல இடங்களில் கண்ணீரோடும்,கனத்த இதயத்தோடும், மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்திய நிகழ்வுகள் பலரை நெகிழ்வுக்குள் ஆழ்த்தியது.

தமிழர் எழுச்சி இயக்கம்:

மே 18 அன்று முள்ளி வாய்க்கால் பேரழிவின் நான்காம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வை சிறப்பாக நடத்த இவ்வியக்கத்தின் நிறுவனர் திரு.வேலுமணி அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். டி.ஆர்.பி.டுல்ஸ் முதல் சோழிங்க நல்லூர் வரை பேரணியாக நடந்தே சென்று பின் சோழிங்க நல்லூரில் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால் காவல் துறை இப்பேரணிக்கு தடை விதித்ததை அடுத்து சோழிங்க நல்லூரில் மாலை 6 மணிக்கு நினைவேந்தல்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தின் சிறப்பு விருந்தினர்கள் பேசியதாவது.

இசைமொழி  (தமிழகப் பெண்கள் செயற்களம் – தலைவி)

இன்று தமிழ்நாட்டில் 10 கோடி தமிழர்கள் இருந்தும், இலங்கையில் நம் தொப்புள்கொடி உறவுகளான ஒன்றரை லட்சம் தமிழர்களைக் காப்பாற்றக்கூட முடியாத இழி நிலைக்கு நாம் ஆளாக்கப்பட்டிருந்தோம். இலங்கையில் 2009-ல் உச்சகட்டப் போர் நடந்த போது, இதைக் கிராம மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என நினைத்து பல கிராமங்களுக்குச் சென்றோம். அங்கு ஈழத்தமிழர்களுக்கு நடக்கின்ற கொடுமைகளைப் பற்றி நான் பேசிய போது பலரும் சொன்னார்கள். இப்படி ஒரு இன அழிப்பு அங்கு நடக்கிறது என்று எங்களுக்கு நீங்கள் சொல்லித்தான் தெரிகிறது” எனக் கூறியது என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

தமிழ் ஊடகங்கள், இம்மக்களை எந்த நிலையில் வைத்துள்ளது என நொந்து கொண்டேன். இதுவரை ஈழத்தமிழர்களுக்காக முத்துக்குமார், செங்கொடி உட்பட 19 பேர் தீக்குளித்து இறந்துள்ளனர். ஆனாலும் இதுவரை ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக எந்த நிலையையும் இந்திய அரசு எடுக்கவில்லை. இதுவரை 600 தமிழக மீனவர்களை சிங்களக் கப்பற்படையினர் சுட்டுக்கொன்றதற்கு இந்திய அரசு ஏனென்று கூட இலங்கையிடம் கேட்கவில்லை. ஆனால் 2 கேரள மீனவர்களை இத்தாலியர் சுட்டுக் கொன்றதற்கு, இத்தாலியக் கடற்படையினரை இந்திய அரசு சிறை பிடித்து வைக்கும் அளவிற்கு இந்திய அரசின் செயல்பாடு இருக்கிறது. இது என்ன ஓரக வஞ்சனை ?

இது மட்டுமல்ல இலங்கையில் இனி நடக்க இருக்கும் காமன் வெல்த் மாநாட்டில் 54 நாடுகள் கலந்துகொள்ள இருக்கின்றன. இந்நிகழ்ச்சிக்கு ரத்தக்கறைக்குச் சொந்தக்காரனான ராஜபக்சே தலைமை ஏற்று நடத்தும் இம்மாநாட்டை நடக்கவிடாமல் தடுக்கும் அளவிற்கு தமிழர்களாகிய நாம் போராடக் கடமைப்பட்டிருக்கிறோம். மேலும் தமிழர்களைக் கொன்று குவிக்கக் காரணமாக இருந்த ஐ.மு. அரசை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வீழ்த்தும் பணியை தமிழர்களாகிய நாம் செயல்படுத்த வேண்டும்.

தமிழ் இனச் சொந்தங்களே! இனி வரும் தலைமுறையினருக்கு நம் எதிரி சிங்களவன் என்றும், எதிரி நாடு இலங்கை மற்றும் இந்தியா என்றும் உங்கள் குழந்தைகளுக்குச் சொல்லிச் சொல்லி வளருங்கள். நாளை நாம் தமிழீழத்தை வென்றெடுப்போம்.

வேலுமணி ( தமிழர் எழுச்சி இயக்கம் – நிறுவனர்)

இது ஏதோ ஒரு சடக்குக்காக நடத்தும் கூட்டம் அல்ல. மாறாக வீழ்ந்த தமிழினம் எழுச்சியுறும் விதத்தில் இக்கூட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். முள்ளிவாய்க்கால் பேரழிவின் போது நாம் இந்திய அரசை நோக்கி “இந்திய அரசே போரை நிறுத்திடு நிறுத்திடு” எனப் போராடினோம். ஆனால் இந்தியாவோ சிங்களவரை நோக்கி “தமிழரை அழித்திடு அழித்திடு எனக் கூறி ஒன்னரை லட்சம் தமிழர்களை அழித்துவிட்டது. இன்னும் இந்திய அரசு, நடந்த பேரழிவுக்குப் பிராய்ச்சித்தம் தேடாமல் இலங்கைக்கு எதிரான பன்னாட்டு விசாரணையைத்  தடுக்கிறது, இங்கு தொடர்ந்து சிங்கள வீரர்களுக்கு ராணுவப் பயிற்சியை அழிக்கிறது, இச்செயலை நாம் வன்மையாக எதிர்க்க வேண்டும்.

நாங்கள் பிற நாட்டு விவகாரங்களில் தலையிட மாட்டோம் எனக் கூறிய இந்திய அரசைக் கேட்கிறேன், பாகிஸ்தானின் உள்நாட்டுப் பிரச்சனையில் தலையிட்டு வங்க தேசத்திற்கு விடுதலை பெற்றுத்தந்த இந்திய அரசு இப்போது இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடமாட்டோம் என்று கூறி அப்பட்டமான வேடம் போட்டு தமிழர்களின் உணர்வுகளை மிதிக்கிறது. இவ்வாறு தொடர்ந்து தமிழர்களை வஞ்சித்து வரும் இக்கட்சியை புறக்கணிக்குமாறு உங்களிடம் வேண்டிக்கொள்கிறேன்.

தா.வெள்ளையன்   (வணிகர் சங்கத் தலைவர்)

இந்த நான்காம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்வது ஒவ்வொரு தமிழனின் கடமை. தமிழ் இனத்திற்கு எதிராக இந்தியா எடுத்துவரும் நிலையை இனியாவது மாற்றிக்கொண்டு, தமிழர்க்கு ஆதரவான நிலையை எடுக்க வேண்டும். இல்லை என்றால் வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழர்கள் உங்களுக்குப் பாடம் புகட்டுவார்கள்.

நடக்க இருக்கின்ற பாராளுமன்றத் தேர்தலில், எந்தக் காட்சி ஈழ விடுதலைக்கு ஆதரவாகச் செயல்படுவேன் என உத்திரவாதம் அழிக்கிறதோ தமிழர்கள் அந்தக் கட்சிக்கே நீங்கள் வாக்களிக்கலாம். தனி ஈழம் அமைவது ஒன்றுதான் ஈழத் தமிழர்களுக்கு நிலையான தீர்வாக இருக்க முடியும். ஏன்! இந்தியாவிற்கும் அதுதான் பாதுகாப்பு, இந்திய ஒருமைப்பாட்டுக்கும் இதுதான் பாதுகாப்பு. ராஜபக்சே தண்டிக்கப்பட வேண்டும் என எந்தக்கட்சி வலியுறுத்துகிறதோ அதற்கே நான் வாக்களிப்பேன்.

ஈழமக்கள் போராட்டம், இன அழிப்பு என்பது இன்னும் 50 ஆண்டுகளுக்கு மறைக்க முடியாத, மறுக்க முடியாத போராட்டம். இதற்கு மத்திய அரசைப் பழிவாங்கியே ஆக வேண்டும். அதற்குள் இந்திய அரசு விழித்துக் கொள்ள வேண்டும் என எச்சரிக்கிறேன்.

புதுக்கோட்டை பாவணன்- (தமிழர் கழகம்தலைவர்)

தமிழ் நமக்கு முகம் என்றால் தமிழினம் நம் முகவரி. தமிழ்நாட்டில் தமிழன் தமிழில் பேசுவதையும், எழுதுவதையும் இழிவாகக் கருதும் இழிநிலைக்கு இன்று தள்ளப்பட்டிருக்கிறான். தமிழில் கூட தனது கையொப்பமிட மறந்தான்.

அயல் நாட்டுக்கு ஒருமுறை கவிஞர் வைரமுத்து சென்றிருக்கும் போது, அந்த நாட்டு விமான நிலையத்தில் இறங்கிய பின் 200 மொழிகளில் பயணிகளை வரவேற்றுக் கூறப்பட்டது. அதில் தமிழில் வரவேற்பு  கூறவில்லை. ஏன் என்று வைரமுத்து அந்த நாட்டு அதிகாரிகளிடம் கேட்டபொழுது அந்த அதிகாரிகள் கூறினார்களாம் “தமிழ் என்பது விடுதலைப் புலி பிரபாகரனின் மக்கள் பேசும் மொழி” என்றார்களாம். அதன் பின் வைரமுத்து பெருமையாகக் கூறினாராம் ” ஒவ்வொரு நாட்டிற்கும் தமிழர்கள் சென்ற பொழுது கூலி கூலி என்றார்கள். இப்போது புலி, புலி என்பது எனக்குப் பெருமையாகத்தான் இருக்கிறது என்றார்.

அறிவியல் மேதை சர்.சி.வி.ராமன் நோபல் பரிசை பல அயல்நாட்டு அறிஞர்களோடு பெற்றுக்கொண்டு, தன் தாய்மொழியான தமிழிலே கையெழுத்திட்டதைக் கண்டு அங்குள்ளவர் ஏன் ஆங்கிலத்தில் கையோப்பமிடாமல் தமிழில் கையோப்பமிடுகிறீர்களே? எனக்கேட்டனர். அதற்கு சர்.சி.வி. ராமன் கூறினார் ஆங்கிலம் என்பது வெறும் மொழியே தவிர அறிவு அல்ல. இங்கு நோபல் பரிசு பெற்ற 100க்கு 80பேருக்கு ஆங்கிலத்தில் ஏ.பி.சி.டி.யே தெரியாது பிறகு ஏன் ஆங்கிலத்தில் கையொப்பமிட வலியுறுத்துகிறீர்கள்? என் தாய்மொழியில் கையோப்பமிடுவதையே நான் பெருமையாகக் கருதுகிறேன் என்றாராம். அவரின்  மனநிலை இன்று எத்தனை தமிழர்களுக்கு இருக்கிறது?

தமிழகத்தில் சில காட்சிகள் தமிழ் என் மூச்சு, பேச்சு எனக் கூறிக் கொண்டு தமிழனை ஏமாற்றுவார்கள், நடிப்பார்கள். இப்படித் தமிழை ஆதரித்துப் பேசியே இறுதியில் தமிழனை அழிப்பார்கள். இதை எல்லாம் தமிழர்களாகிய நாம் அறிந்துகொள்ளாவிடின் நாளை நம்மையும் அவர்கள் அழிக்கத் தயங்கமாட்டார்கள்.

இன்று தமிழ், கோவிலில் இல்லை, கல்வி நிலையத்தில் இல்லை, நீதி மன்றத்தில் இல்லை. இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்று அன்று பலர் புலம்பினார்கள். ஆனால் இன்று வடநாட்டில் இந்தி பேசுபவன் நம் தமிழ்நாட்டிற்கு வந்து ஓட்டலில் தட்டு கழுவுகிறான். அன்று திரு.வி.க விடம் கேட்டனர் ஆங்கிலம் படிப்பது உயர்வுதானே என்று. அதற்கு பதில் கூறினார், ஆங்கிலம் படித்தால் அறிவு குறையும், அடிமைத்தனம் பெருகும், பேடித்தனம் பெருகும் என்றார் இதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஆங்கிலம் கற்றுக்கொண்டால் அமெரிக்காவில் வேலை கிடைக்கும் என்ற மாயையில் இன்றைய இளைய சமுதாயம் பயணித்துக் கொண்டிருக்கிறது. நான் கேட்கிறேன் சீனாவின் அனைத்து தயாரிப்புப் பொருட்களும் அமெரிக்காவில் அதிக விற்பனையாகிறது. அந்தப் பொருட்கள் தமிழ்நாட்டில் அதிகம் விற்பனையாகுமானால் உடனே அனைவரும் சீனமொழி கற்றுக்கொண்டு சீனாவிற்கு வேலைக்குச் செல்வீர்களா ?

எனது இளமைக்காலத்தில், என் சொந்த ஊரான புதுக்கோட்டையில் வசித்த பொழுது விடுதலைப் புலிகள் அன்று என்னைப் பார்க்க வருவார்கள். ஒரு முறை அப்படி வந்தபொழுது அதில் ஒருவர் சட்டை இல்லாமல் வந்தார். நான் சட்டை கொடுத்தேன் அவர் போடவில்லை என்னவென்று பார்த்தால் அந்தப் புலி உடலில் பல துப்பாக்கி குண்டுகள் பாய்த்திருந்தன. அந்த குண்டுகளை நல்ல முறையில் எடுத்துவிட்டு விசாரித்தேன் அவர் பெயர் ஆர்.சி. சீலன் என்றார். இவர் தலைவர் பிரபாகரன் குழுவில் இருந்தவர்.

சிறிது காலத்தில் குணமடைத்து ஈழமண்ணுக்குச் சென்ற இவர், அங்கு நடந்த போர் ஒன்றில் இவர் இறந்து விட்டார் என்ற செய்தி எனக்கு வந்தது அப்போது தான் இவரின் உண்மைப் பெயர் சார்லஸ் ஆண்டனி என்று தெரிந்து கொண்டேன்.

இன்று இளம் பாலகன் பாலச்சந்திரனின் புகைப்படம் உலகத் தமிழர்கள் மத்தியில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிங்களவன் நினைத்தான் பாலகனான பாலச்சந்திரனை உயிருடன் விட்டுவிட்டால், பிற்காலத்தில் இவன் நமக்கேதிரான போராட்டத்தை தந்தை வழியில் தொடங்குவான் என அச்சப்பட்டு கொன்றுவிட்டனர். பாவம் சிங்களவனுக்கு தெரியாது பாலச்சந்திரனின் புகைப்படமே இவ்வளவு பெரிய போராட்டத்தை நடத்துமென்று.

பாலச்சந்திரனின் புகைப்படத்தைக் கண்டு பாவலர் .அறிவுமதி எழுதினார் ஒரு  கவிதை…

விழித்துப் பார்க்கிறது

ஒரு பிள்ளை- அந்த

விழிப்பிலே ஒரு துளி

பயமில்லை

கவிஞர் வாலி, பாலச்சந்திரனைக் கண்டு எழுதிய கவிதை…

வண்டு துளைத்தாலே

தாங்காதே பிஞ்சே – உன்

நெஞ்சில் அஞ்சு குண்டு

கொண்டதென்ன சாவே…

ஸ்ரீ பெரும்புதூரில் பலர் முதுகில் குண்டடிபட்டவர்கள் உண்டு. ஆனால் பாலச்சந்திரன் மார்பில் குண்டு வாங்கினான் வீரத்தமிழன் பெற்ற பிள்ளை. மாணவர்கள் ஈழத்துக்கான போராட்டத்தில் களம் இறங்கிய போது பாவலர் கவிஞர் அறிவுமதி எழுதிய கவிதை

இதுவரை மாணவர்கள்

எழுதா நிறங்கள் – இனிமேல்

இவர்கள்…

பிரபா கரன்கள்..

-போன்ற கவிதைகள் போராட்டக் குணத்தை மேம்படுத்துவதோடு நாளை  தனி ஈழம் மலர, தமிழன் உலகின் தலைநிமிர தொடர்ந்து நாம் போராட வேண்டியது அவசியம்.

மே 17 இயக்கம்:

மே 19-ம் தேதி சென்னை மெரீனா கடற்கரையில் மாலை 6  மணிக்கு தமிழினப் படுகொலைக்கான நினைவேந்தல் நிகழ்வை மே 17  இயக்கத்தினர் நடத்தினர். அன்று ஞாயிற்றுக்கிழமை ஆதலால் பல்வேறு தமிழ் இன உணர்வாளர்களும், பொதுமக்களும், கல்லூரி மாணவ – மாணவிகளும் கலந்து கொண்டு அமைதியான முறையில் மெழுகுவர்த்தியைக் கையில் ஏந்தி அமர்ந்திருந்து அஞ்சலி செலுத்தினர். சர்வதேசமும், இந்தியாவும் செய்த துரோகத்தினை மறவோம், இலங்கையின் இனவெறியை நினைவு படுத்துவோம், ஒழிப்போம் ஒழிப்போம் மத்திய அரசை ஒழிப்போம் போன்ற கோஷங்களை எழுப்பியத்தோடு, இன உணர்வை ஊட்டும் விதத்தில் பறையொலி வாசிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மே 17 இயக்க நிறுவனர் திருமுருகன், உமர், தமிழக வாழ்வுரிமைக் கட்சித்தலைவர் வேல்முருகன், ம.தி.மு.க பொதுச் செயலாளர் வை.கோபால்சாமி, வணிகர் சங்கத் தலைவர் தா.வெள்ளையன் ஆகியோர் கலந்து கொண்டு ஈழம் பற்றிய சிறப்புரையாற்றினார்.

தமிழீழத்திற்கான மாணவர் போராட்டக்குழு:

தமிழீழத்திற்கான மாணவர் போராட்டக்குழு  சார்பாக மே 20 –ம் அன்று நடைபெற இருந்த மாணவர் எழுச்சிப் பேரணிக்கு காவல்துறையில் அனுமதி மறுக்கப்பட்டதால் சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை முன்பு மாணவர்களின் நினைவேந்தல் கூட்டம் அமைதியான முறையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இவ்வியக்கத்தில் ஒருவரான திவ்யா கூறியதாவது…

கொத்துக் குண்டுகள், ரசாயனக் குண்டுகள் போட்டு 1½  லட்சம் மக்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அந்தத் தினத்தை நினைவு கூறும் வகையில் மாணவர்கள் போராட்டம் கடந்த மார்ச் மாதம் வீரியமாக நடந்தது. இந்தத் தினத்தில் உயிரிழந்த அப்பாவி மக்களுக்கும், மாவீரர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தும் வகையில் இங்கு நாங்கள் கூடியுள்ளோம்.

இப்போராட்டம் அடுத்த கல்வியாண்டில் மிகவும் திட்டமிட்ட வகையில் மிக வீரியமாகத் தொடரும். தனித்தமிழீழம் அமையும் வரை எங்களின் போராட்டம் தொடர்ச்சியாக நடக்கும் என்பதை நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம். அமைதியான முறையில் நடைபெற இருந்த எங்கள் பேரணியை தமிழக அரசு தடை செய்திருக்கிறது. வரும் காலத்தில் இந்தப் போக்கை அரசு மாற்றிக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு நாம் தமிழர் கட்சி  கடலூரில் நினைவேந்தல் கூட்டம் நடத்தியது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியானது மே 18- ஐ  சர்வதேச இனப்படுகொலை நாளாக அறிவித்ததோடு, எஞ்சியுள்ள தமிழர்களுக்கு மறுவாழ்வு, இனப்படுகொலைக் குற்றவாளிகளுக்குத் தண்டனை, தமிழீழ விடுதலைக்குப் பொதுவாக்கெடுப்பு என்ற மூன்று கொள்கைகளை வலியுறுத்தி நினைவேந்தல் கூட்டம் நடத்தியது. தமிழ்நாடு மக்கள் கட்சியைச் சேர்ந்த அருண்சோரி, சதீஷ் போன்றோர் பொது இடத்தில் பொதுமக்கள் மத்தியில் நினைவேந்தல் கூட்டம் நடத்தியது, தமிழர் பண்பாட்டு நடுவம் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் மே 18 அன்று மெரினா  கடற்கரையில்  தனித்தமிழீழமே ஈழத்தமிழர்களுக்கு ஒரே தீர்வு என முழக்கமிட்டு, படுகொலை செய்யப்பட்ட ஈழ உறவுகளுக்கு மௌன அஞ்சலியும், வீரவணக்கமும் செலுத்தினர்.

இவ்வாறு மே 17,18,19,20 ஆகிய நாட்களில் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் மத்தியில் இந்த நாள் தமிழ் இன அழிப்பு நாளாக, வீர வணக்க நாளாக, கறுப்பு தினமாகக் கொண்டாடியது, அனைத்து நாட்டு மக்களையும் திரும்பிக் பார்க்க வைத்துள்ளது என்றால் அது மிகையாகாது.

இவ்வாறு தமிழினத்திற்கு ஏற்ப்படும் துயர்களைத் துடைக்கவும், தமிழினத்தின் தன்மானத்தைக் காக்கவும் ஆங்காங்கே தமிழர்கள் பல இயக்கங்களாகப் பிரிந்து, பல இடங்களில் போராடி வருகின்றனர். அனைவரும் ஒரே நோக்கத்திற்காகப் போராடினாலும் ஏன் இவர்களுக்குள் ஒரு ஒற்றுமை இல்லை? என எழும் கேள்வியைத் தவிர்க்க முடியவில்லை. இயக்கத்திற்க்கு ஒரு கொள்கையை வகுத்துக்கொண்டு தனித்து இயங்கி வருவது தமிழர் முன்னேற்றத்திற்கு நலம் பயக்குமா? அனைவரும் ஒரே களத்தில் நின்று போராடினால் தனி ஈழக்கனவு பலிக்கும். இல்லையேல் நாளைய வரலாறு “ஒற்றுமை இல்லாத தமிழர்கள்” என்று நம்மையே பழிக்கும்.

Leonard promoting active learning in large classes using a recommended portal classroom communication system

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழ் இன உணர்வாளர்களின் நினைவேந்தல் நிகழ்வுகள் (கட்டுரை)”

அதிகம் படித்தது