மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழ் மண் பதிப்பக நிறுவனர் திரு.கோ. இளவழகன் அவர்களின் நேர்காணல்

ஆச்சாரி

Jun 15, 2013

தமிழிலக்கிய நூல்களை வெளியிட்டு வரும் தமிழ்மண் பதிப்பகத்தார்க்கும், இதை நிறுவி சிறப்பாகச் செயல்பட்டு வரும் மதிப்பிற்குரிய அய்யா திரு.கோ.இளவழகனார் அவர்களுக்கு உலகத்தமிழர் சார்பாகவும், சிறகு இணைய இதழ் சார்பாகவும் வாழ்த்துக்களும், நன்றிகளும்.

கேள்வி: உங்கள் பிறப்பு, குடும்பம் பற்றிக் கூறுங்கள்?

கோ.இளவழகன்: எனது பெற்றோர்கள் அ.கோவிந்தசாமி, அமிர்தம். பிறந்தது 03.07.1948, கல்லூரி புதுமுகப்படிப்பு வரை படித்துள்ளேன். சொந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள உரத்தநாடு. பெற்றோர் எனக்கு இட்ட பெயர் அப்பாவு.

கேள்வி: இளவழகன் எனப் பெயர் மாற்றியது எப்போது?

கோ.இளவழகன்: 1960 ல் எங்கள் ஊரில் உள்ள இரண்டு புகழ்பெற்ற அண்ணன் தம்பிகள் இருந்தனர். அவர்கள் இருவரும் தமிழ்ப்புலவர்கள். புலவர் நக்கீரன், புலவர் சித்திரவேலன் என்ற இருவரும் எங்கள் ஊரில் “ஊர் நலன் வளர்ச்சிக் கழகம்” என்ற ஒரு இளைஞர் அமைப்பை ஏற்படுத்தி, இப்பகுதியில் கல்வி அறிவு குறைவாக உள்ளவர்களுக்கு இரவுப்பள்ளி நடத்தினர்.

“ ஊர் நலக்கழக உறுப்பினராகி

பாரோர் போற்றப் பணிபுரிவார்

நாட்டு நலனில் நாட்டம் கொண்டீர்

வீட்டுக்கொருவர் விரைந்து வாரீர்”

-    எனக் கூவி இவ்விரு புலவர்களும் அழைக்க நானும் படிக்கச் சென்றேன். அப்போது நான் 5 வது படித்துக்கொண்டிருந்தேன். இவ்விருவரும் பொங்கல் அன்று திருக்குறள் போட்டி நடத்துவார்கள், பல தமிழ் சார்ந்த போட்டிகளும் நடத்துவார்கள். நான் அதில் ஆர்வத்துடன் கலந்து கொள்வேன். இவ்வாறு அவ்விருவர் ஊட்டிய தமிழ் உணர்வில் அப்பாவு என்ற பெயரை மாற்றி இளவழகன் என்று வைத்துக் கொண்டேன்.

கேள்வி:  உங்களின் பள்ளிப்பருவம் பற்றிக் கூறுங்கள்?

கோ.இளவழகன்: நான் நான்காம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே தமிழ் மீது மிகுந்த பற்றுக் கொண்டவனாகவும், பொதுத் தொண்டு புரிபவனாகவும் திகழ்ந்தேன். தமிழ்த்தொண்டு செய்ய ஆர்வம் ஊட்டியவர், இதில் எனக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தவர் புலவர் நக்கீரன் அவர்கள்.

இவர்கள் மூலமாக எனக்குத் தமிழ்நாட்டு அளவில் பல தமிழ்ச்  சான்றோர்கள் தொடர்பு கிடைத்தது. இதில் எனக்குக் கிடைத்த முக்கியமான தமிழறிஞர்கள் பாவாணர் அவர்களும், பெருஞ்சித்திரனார் அவர்களும்.

கேள்வி: உங்களின் இளமைக்காலத்தில் தாங்கள் ஆற்றிய தமிழ்த்தொண்டு, பொதுத்தொண்டு என்ன?

கோ.இளவழகன்: பள்ளிப்பருவத்தில் ஏற்பட்ட தமிழ்மொழி உணர்வால் நான் இளமைப் பருவத்தில் எனது ஊரான உரத்த நாட்டில் “தமிழர் உரிமைக் கழகம்” என்னும் அமைப்பை நிறுவித் தமிழ்மொழிக்கும் தமிழின மேம்பாட்டிற்கும் உழைத்தேன். மேலும் “பாவாணர் படிப்பகம்” என்ற ஒரு படிப்பகத்தை நிறுவி இளம்தலைமுறைக்குத் தமிழ்த் தொண்டாற்றினேன்.

1965- ல் மத்திய அரசு இந்தியை கட்டாயப் பாடமாகப் புகுத்தியது. இதனை எதித்து தமிழகம் தழுவிய அளவில் மாணவர் போராட்டம் நடந்த போது, உரத்த நாட்டுப் பகுதியில் நான் தலைமை ஏற்று இந்தியை எதிர்த்துப் போராட்டம் நடத்தினேன். அப்போது நான் 10 வது படித்துக் கொண்டிருந்தேன். இப்போராட்டத்தில் என்னைக் கைது செய்து 48 நாள் சிறை வைத்தனர். இதற்காக தமிழ்நாடு அரசு “ தமிழ்மொழிக் காவலர்” என்ற விருது வழங்கி கௌரவித்தது.

பின், மின்வாரியத்தில் அரசுப் பணி புரிந்தேன். இளமையில் தந்தை பெரியார் கொள்கையில் ஈர்க்கப்பட்டு, இந்தக் கொள்கை வழியே இன்று வரை வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இதன் பிறகு பல இலக்கியத் தொடர்பு ஏற்பட்டதால், தமிழகம் தழுவிய அளவிலும், பிற மேலை நாடுகளில் உள்ள தமிழ் உணர்வாளர்களின் தொடர்பும் கிடைத்தது. இதற்கு அடித்தளமாக இருந்தது பாவாணர் அவர்கள் நிறுவிய இயக்கமான உலகத்தமிழ்க் கழகமே. இந்த இயக்கத்தில் நான் இணைந்து மாவட்டப் பொருளாளராக பொறுப்பேற்றிருந்தேன். உலகத் தமிழர்களின் தொடர்பு எனக்கு கிடைப்பதற்கு இந்த இயக்கமே அடித்தளமாக அமைந்தது.

1982-களில் தமிழீழ விடுதலைப் போராட்டக் களத்தில் நின்ற போராளிகளின் தொடர்பு ஏற்பட்டது. தமிழீழ விடுதலைக்கு அந்தக்கால கட்டத்தில் தன்னலம் கருதாது எந்த உள்நோக்கமும் இன்றி தமிழீழ விடுதலை ஒன்றே தீர்வு என்ற முடிவில் ஈழப்போராளிகளுக்கென நான் அப்போது பெரும்பொழுதைச் செலவிட்டேன்.

தமிழீழ விடுதலையின் உறுதிப்பாட்டை ஐ.நா.மன்றத்தின் கதவுகளை தட்டுகின்ற அளவிற்கு போராட்டத்தை ஏற்படுத்திய தமிழீழ தேசியத் தலைவர் திரு.பிரபாகரனின் தலைமையை முழுமையாக ஏற்று, திரு.பழ நெடுமாறன் அவர்களின் வழிகாட்டுதலில் உலகத்தமிழ் பேரமைப்பின் பொதுச் செயலாளராக இருந்து கொண்டு இன்றுவரை என் முழுப்பொழுதையும் செலவிட்டு வருகிறேன். 

கேள்வி: நூல் பதிப்பில் தாங்கள் கவனம் செலுத்தி வருவதின் நோக்கம் என்ன?

கோ.இளவழகன்: தனி நிலையில் தமிழ் நூல் பதிப்பில் கவனம் செலுத்தி வருவதின் நோக்கம் யாதெனின் இதுவரை மொழி, இனம் சார்ந்த நூல்களை வெளியிட்டு வந்த பதிப்பகங்களில் குறிப்பாக சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம், மாணிக்கவாசகர் பதிப்பகம், பூம்புகார் பதிப்பகம், பாரி நிலையம் பதிப்பகம் என இருந்த முற்போக்குப் பதிப்பகங்கள் தமிழ் வளர்ச்சிக்கு அடித்தளமான நூல்களை பதிப்பித்தலிலும் ஆர்வம் கொண்டது. 19ம் நூற்றாண்டின் இறுதியிலும், 20ம் நூற்றாண்டின் தொடக்கமும், தமிழ், தமிழர் வரலாற்றின் மறுமலர்ச்சிக் காலமாகும்.

இந்த மறுமலர்ச்சிக் காலத்தில் மொழிக்காகவும், இனத்திற்காகவும் பெரும் பங்காற்றிய அறிஞர்கள் நூல்கள் அனைத்தையும் ஒருசேரத் தொகுத்து காலவரிசையில் பொருள் வழி பிரித்து ஒரே வீச்சில் வெளியிட வேண்டும் என நினைத்தே தமிழ்மண் என்ற பதிப்பகத்தை நிறுவினேன். இதுபோலவே பல தமிழ் இலக்கிய, இலக்கண நூல்கள் முழுவதையும் ஒரே வீச்சில் வெளியிட்டு வருகிறேன். தமிழ் நூல் பதிப்பு வரலாற்றில் இந்தப் பணியை முழுமையாக எவரும் இதுவரை செய்யவில்லை என்பதை உறுதிபடக் கூறுகிறேன்.

பாவாணர் நூற்றாண்டு விழாவில் மொழி நூல் கதிரவன், தேவநேயப் பாவாணர் அவர்கள் எழுதிய 53 நூல்களையும் ஒரே நேரத்தில் வெளியிட்டேன். இதற்கு தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருந்தது.

கேள்வி: எப்படிப்பட்ட நூல்களை இதுவரை வெளியிட்டுள்ளீர்கள்?

கோ.இளவழகன்: வணிக நோக்கத்திற்காக நூல்களை வெளியிடக்கூடாது. தமிழ் இலக்கிய, இலக்கண நூல்களை மட்டுமே வெளியிட வேண்டும் என நான் பதிப்பகம் ஆரம்பித்தபோதே முடிவெடுத்தேன். தொல்காப்பியம் முழுபாகத்தையும், சங்க இலக்கியம் முழுவதையும் நான் வெளியிட்டேன்.

ஈழத்தில் பிறந்து, தமிழ் நாட்டில் வளர்ந்த ந.சி.கந்தையா அவர்கள் எழுதிய 66 நூல்களை வெளியிட்டுள்ளேன்.

1955 –ல் திரு.சாமிநாத சர்மா, என்ற வரலாற்று அறிஞர் எழுதிய சீன வரலாறு, ரஷ்ய வரலாறு, துருக்கி வரலாறு, இத்தாலிய வரலாறு போன்ற அரிய நூல்களை வெளியிட்டுளேன். இதில் ஒரு சிறப்பு என்னவென்றால் 1955-ல் பொது வாழ்வில் ஈடுபட்ட பெரியோர்கள் அனைவரும் இவர் எழுதிய நூல்களைப் படித்தும், மேடையில் இக்கருத்துகளை பேசியும் வந்தார்கள். இவ்வாறு வரலாற்றிஞர் வெ.சாமிநாத சர்மா அவர்கள் எழுதிய 78 நூல்களையும் 31 தொகுதிகளாக வெளியிட்டது எனது மாபெரும் பணியாகும்.

அறிவுச்சுரங்கமாக தமிழ் உலகில் வாழ்ந்து மறைந்த பன்மொழிப்புலவர் கா.அப்பாத்துரையாரின் 40-க்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டேன்.

1965 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த யாழ்ப்பாண அகராதி என்னும் “மானிப்பாய் அகராதி” (இரண்டு தொகுதிகள்) மற்றும் 70 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த வெள்ளி விழாத் தமிழ் பேரகராதி (மூன்று தொகுதிகள்) ஆகிய அகராதிகளை ஒருசேர வெளியிட்டது பெருமைக்குரியதாகும்.

மறைந்த தமிழ் நூற்கடல், மாந்த கணினி, தொல்காப்பியத்தைக் கரைத்துக் குடித்தவரான பண்டித வித்வான் தி.வே.கோபாலையர் அவர்களிடம் தொல்காப்பியப் புத்தகத்தை வெளியிட எண்ணி திருத்தக் கொடுத்தேன். இவர் திருத்திய அந்த தொல்காப்பிய முழு பாகத்தை வெளியிட்டதோடு 25 ஆண்டு இவர் பேருழைப்பால் எழுதிய தமிழ் இலக்கணப் பேரகராதியை 17 தொகுதிகளாக வெளியிட்டேன்.

தமிழ்த் தென்றல் திரு.வி.கலியாண சுந்தரனார் எழுதிய அனைத்து (54) நூல்களையும் ஒரே நேரத்தில் 24 தொகுதிகளாக வெளியிட்டேன்.

தவிர இராவண காவியம் எழுதிய புலவர் குழந்தையின் அனைத்தும் படைப்புகளும், கவிஞர் முடியரசனின் அனைத்துப் படைப்புகளும், இலக்கியச் செம்மல் இரா.இளங்குமரனார் அவர்கள் எழுதிய 75 நூல்களும் வெளியிட்டுள்ளேன். இவ்வாறு மயிலை சீனி வேங்கடசாமி, சாமி சிதம்பரனார், வெள்ளை வரனனார், மா.ராஜமாணிக்கனார், அப்பாத்துரையார் சர்மா, பண்டாரத்தவர், சாத்தான்குளம் ராகவர், ஔவை துரைசாமி பிள்ளை, பாவேந்தர் பாரதிதாசன், ந.மு. சோம சுந்தர பாதிரியார், எனப் பல இலக்கிய சிற்பிகளின் நூல்கள் வெளியிட்டுள்ளேன்.

 கேள்வி: தமிழ் மொழியின் வளர்ச்சி என்பது நடப்புச் சூழலில் எந்நிலையில் இருப்பதாக நீங்கள் உணர்கிறீர்கள்?

கோ.இளவழகன்: அரசியலாளர்கள் அனைவரும் தங்கள்  வாக்கு வங்கியைப் பெருக்கிக் கொள்வதற்காக தமிழ் வளர்ச்சியைச் சொல் அளவில் பேசி வருகின்றனரே தவிர, செயல் அளவில் இல்லை. தவிர இப்போது உள்ள தொலைக்காட்சிகளில் வரும் தமிழானது, மொழிக்குக் கேடாகவும், பண்பாட்டுச் சீரழிவிற்கும் வழிவகுத்துள்ளது. இளந்தலைமுறையை மேலைநாட்டு இளைஞர்களோடு போட்டிபோடுகின்ற அளவிற்கும் தன்னை உருவாக்கிக் கொள்ளாத அளவிற்கு இன உணர்வும், பண்பாட்டிற்கும் இவை தடையாக உள்ளது என்பதே உண்மை.

 

கேள்வி: ஈழத்தில் நடந்த போர் பற்றியும், தமிழகத்தில் நடந்த ஈழத்திற்கு ஆதரவான போராட்டம் பற்றியும் தாங்கள் கூற விருபுவது என்ன?

கோ.இளவழகன்: வல்லாதிக்க நாடுகளின் துணையோடு இலங்கை அரசு ஈழ நாட்டைச் சிதைத்தது. ஆனால் இந்த நாடுகள் தலையிடாமல் இருந்திருந்தால் உலக நாடுகளின் அவையில் தமிழ் ஈழத்திற்கென்று ஒரு இடம் ஒதுக்கப்பட்டு கொடி பறந்திருக்கும்.

இந்தப் போராட்டம் மற்ற நாடுகளில் நடைபெற்ற விடுதலைப் போராட்டத்தைப் போன்று அல்லாது மாறுபட்ட நிலைகளாக தமிழீழ போராளிகளுக்கு அமைந்தது. மற்ற நாடுகளில் நடந்த விடுதலைப் போராட்டங்கள் அந்தந்த நாடுகளின் விடுதலையை முன்னெடுத்த தலைவர்கள், அண்டைய நாடுகளின் துணையோடு போராட்டத்தில் வெற்றி கண்டனர் என்பது இதுவரை நடந்த வரலாறு.

ஆனால் ஈழப்போராட்டம் முற்றிலும் கடல் சூழ்ந்த நிலையில் இருந்ததால் போராளித்தலைவர்கள் வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. ஈழப் போரில் நமது பின்னடைவுக்கு இதுவும் ஒரு காரணம். மேலும் ஈழப்போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது நம் தாய் தமிழகத்தைச் சேர்ந்த உணர்வு மிக்க தலைவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் தம் அரசியல் லாபத்திற்காக வடவரோடு இணங்கியும், பதுங்கியும், தன்னல உணர்வு மேலோங்கி இருந்ததும் ஒரு காரணம் ஆகும்.

கேள்வி: பல பதிப்பகங்கள் செய்யும் தமிழிலக்கிய நூல்களை நீங்கள் மீள்பதிப்பதின் காரணம் என்ன?

கோ.இளவழகன்: புழக்கத்தில் இல்லாத பல நூல்களை நான் தேடிப்பிடித்துப் பதிப்பிக்கிறேன். தவிர சங்க இலக்கிய நூல்களில் ஒவ்வொரு பதிப்பகத்தாரும் ஒரு குறிப்பிட்ட நூல்களை மட்டுமே வெளியிட்டுள்ளனர். ஆனால் நான் அனைத்து சங்க இலக்கியம், இலக்கணம் சார்ந்த அனைத்து நூல்களையும் ஒரு சேரத் தொகுத்து ஒரே வீச்சில் வெளியிடுகிறேன். காரணம் வாங்குபவருக்கு வசதியாக இருக்க வேண்டும் என்பதற்காகவே மீள்பதிப்பு செய்கிறேன்.

கேள்வி: தமிழிலக்கிய வரிசையில் பக்தி இலக்கியம் ஆற்றிய தமிழ்ப்பணி அளப்பரியது. அப்படி இருக்கும் நிலையில் ஏன் உங்கள் பதிப்பகம் பக்தி இலக்கியங்களை வெளியிடுவதில்லை?

கோ.இளவழகன்: நான் இளமையிலேயே தந்தை பெரியாரின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு வளர்ந்தேன், இதுவரை வாழ்ந்து வருபவன், அந்த வகையில் மொழி, இனம், நாடு, பண்பாடு, நாகரீகம், கலை மற்றும் பிற தமிழர் தொடர்பான தொன்மங்களை வெளியிடுவதற்குப் பலர் முன்வராத நிலையில் இதனை வெளியிட முன்வந்தேன். ஆனால் பக்தி இலக்கியத்தை வெளியிடக்கூடாது என்ற மன உணர்வு எனக்கு இல்லை. அந்தப் பணியைச் செய்வதற்கு இறை நம்பிக்கை உள்ள பல பதிப்பகங்கள் பல நூல்களை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன. அதனால் அதில் நான் கவனம் செலுத்தவில்லையே ஒழிய என் உணர்வுகள் இதற்கு எதிரானவை அல்ல. 

கேள்வி: செக்கொசுலேவியாவின் தமிழ் அறிஞர் பேராசிரியர் கமில் சுவலபில் அவர்களின் “ The Smile Of Murugan; On Tamil Literature Of South India”  என்கிற நூலைப் பதிப்பித்தால் தமிழ் ஆர்வலர்களுக்குப் பயனாக இருக்கும். முயலுவீர்களா?

கோ.இளவழகன்: மிக விரைவிலேயே தமிழுக்குத் தொண்டு செய்த மேலை நாட்டு அறிஞர்களின் எழுத்தாக்கங்களை வெளியிடும் முயற்சியில் உள்ளேன். சான்றாக பி.ராமநாதன் அவர்கள் மொழிபெயர்த்துள்ள “உலக அறிஞர்கள் பார்வையில் தமிழ்” என்ற நூலை வெளியிட்டுள்ளேன். நீங்கள் குறிப்பிட்ட கமில் சுவலபில் அறிஞரைப் பற்றி அதில்  பதிவு செய்துள்ளேன். இனி வெளியிடுவேன்.

கமில் சுவலபில் என்பவர்  என்னோடு கடிதத் தொடர்பில் உள்ளார். “தமிழுக்குத் தொண்டு செய்த மேலை நாட்டு அறிஞர்கள்” என்ற தலைப்பில் புத்தகத்தை விரைவில் வெளியிட இருக்கிறேன். தாங்கள் எதிர்பார்த்த அறிஞரின் படைப்புகளையும்  விரைவில் வெளியிடுவேன்.

கேள்வி: தமிழிசை நூலான “கருணாமிர்த சாகரத் திரட்டு” என்ற நூலைப் பதிப்பிற்கும் முயற்சியில் உள்ளதாக அறிந்தோம் பாராட்டுக்கள். எப்போது இந்நூலை வெளியிடுகிறீர்கள்?

கோ.இளவழகன்: 1907- ல் வெளிவந்த தமிழிசை நூலான கருணாமிர்த சாகரத்திரட்டும், 1917ல் வெளியான கருணாமிர்த சாகரத்திரட்டு முதல் புத்தகமும், 1946-ல் வெளியான கருணாமிர்த சாகரத்திரட்டு இரண்டாம் புத்தகம் உட்பட மூன்று புத்தகங்கள் மிக விரைவில் வெளியிடுவதற்கான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. 

கேள்வி: ஆப்ரகாம் பண்டிதர் எழுதிய ஆதி இசை வகைகள் 12000,  பணிகள் 103 வகை, இசைக்குறிப்பெயர்கள் என்கின்ற கட்டுரைகள் உங்களிடம் உள்ளதா?

கோ.இளவழகன்: மிக விரைவில் வெளியிட இருக்கின்ற இந்த இசைத் தொகுப்பில் “ஆதி இசை வகை 12000” என்ற நீங்கள் எதிபார்த்த நூல் வெளியிடவிருக்கிறேன்.

கேள்வி: அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழிசைக் கல்லூரி 1989 -ம் ஆண்டு வெளியிட்ட “தமிழிசைப் பாடல்கள் இரு தொகுதிகள்”, தமிழ் கீத வர்ணங்கள் என்ற நூல்களை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலிருந்து உரிமை பெற்று வெளியிட முடியுமா?

கோ.இளவழகன்: 50ஆண்டுகளுக்கு முன்னால் தமிழிசைக்கு அருந்தொண்டு ஆற்றிய அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இருந்து அனைத்து நூல்களையும் அவர்களின் இசைவு கிடைத்தவுடன் வெளியிடுவேன். அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். 

கேள்வி: மிக விரைவில் உங்கள் பதிப்பகத்திலிருந்து வெளிவர இருக்கும் நூல் தொகுதிகள் என்ன?

கோ.இளவழகன்: பல தமிழ்ச் சான்றோர்களின் நூல் தொகுதிகளை வெளியிடுவதற்கான முனைப்பில் செயல்பட்டு வருகிறேன். அதில் பாவேந்தர் பாரதிதாசன் -25 தொகுதிகள், உரைவேந்தர் ஔவை துரைசாமிப் பிள்ளை -28 தொகுதிகள், நாவலர் சோமசுந்தர பாரதியார் -5 தொகுதிகள், சங்கத்தமிழ்ச் செல்வங்களாகவுள்ள பதினேண்கீழ்கணக்கு நூல்களையும், ஐம்பெரும்காப்பியங்களையும் ஒரே வீச்சில் வெளியிடும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தஞ்சை தமிழிசை – முதல் புத்தகம் (1917), கருணாமிருத சாகரம் இரண்டாம் புத்தகம்  (1934) , கருணாமிருத சாகரத் திரட்டையும்(1907)  சேர்த்து ஏழு தொகுதிகளாக, மு.ஆபிரகாம் பண்டிதர் தமிழிசைக் களஞ்சியம் விரைவில் வெளிவரவுள்ளது.

செந்தமிழ் அந்தணர் இரா.இளங்குமரனார் தொகுத்து அளிக்க இருக்கும் இளங்குமரனார் தமிழ்வளம் எனும் தலைப்பில் முதல் கட்டப்பணியாக  40 தொகுதிகள் மிக விரைவில் வெளிவர உள்ளது. மற்றும் அவருடைய அனைத்துப் படைப்புகளையும் வெளியிடும் பணியும் நடைபெற்று வருகிறது.

கேள்வி: தமிழ் நூல் பதிப்பில் உங்களின் எதிர்காலப் பணிகள் என்ன?

கோ.இளவழகன்: சங்கத்தமிழ்ச் செல்வங்களாம் சிறுகாப்பியங்கள், சிற்றிலக்கியங்கள் வெளியிடுகின்றேன். தனித்தமிழ் இயக்கத்தந்தை மறைமலையடிகள், சாமி சிதம்பரனார், ஆராய்ச்சி அறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி, க.வெள்ளைவாரணார், மா.இராச மாணிக்கனார் ஆகியோர் தமிழ் உலகுக்கு விட்டுச் சென்ற தமிழ் அறிவுச் செல்வங்கள் அனைத்தையும் வெளியிடும் பணியில் ஈடுபட்டுள்ளேன்.

தமிழர் தம் மரபுச் செல்வமாம் சித்த மருத்துவத்தின் உன்னத நிலையை உலகுக்குக் காட்ட தமிழர் மருத்துவக் களஞ்சியம் வெளியிடல்! தமிழ்க் குழந்தைகளின் அறிவை வளர்த்தெடுக்கப் பன்முகச் செய்திகளை உள்ளடக்கிய குழந்தைகள் கலைக்களஞ்சியம். தமிழ்மண் பதிவாகவும், சுவடாகவும் தமிழ் – தமிழ் அகராதி, ஆங்கிலம் – தமிழ் அகராதி பிறமொழிச் சொல் கலவாத தனித்தமிழ் நடையில் உருவாக்கும் திட்டத்திலும் உள்ளேன்.

தமிழுக்குப் பெருமை சேர்த்து வரும் தமிழண்ணல் கோ.இளவழகனாரைப் பற்றி பிற கவிஞர்கள் எழுதிய வாழ்த்துப்பாக்களில் சில….

பதிப்பரசர் எங்கள் படை!

சீர்சால் தமிழ்நூல்கள் செல்லரித்தல் கண்டோடி

ஓர் தமிழர் நூல்கள் உயிர்ப்பித்தார்!

ஆருயிராய்

வந்தார்… தமிழ் தழைக்க வாழ்ந்தார்! இளவழகன்

தந்தார் இனிய தமிழ்!

என்னே இளவழகன் சீர்த்தி! எமை நிமிர்த்தும்

பன்னூறு நூல்கள் இவர் பதித்தார்!

பின்னால்

வருந்தமிழர் வாழ்வு கருதி இவர் வாழ்ந்தார்!

அருந்தமிழர் காவல் அரண்!

ஊரோடிச் சேர்த்த தமிழை உணவாக்கித்

தீராத் தமிழர் பசி தீர்த்தார்!

பேராற்றல்

கொண்டார் இளவழகன்! கோலத் தமிழ்வாழக்

கண்டார் பதிப்புக் கலை!

தன்னுயிர் வாட்டி எழிலார் தமிழ்த் தாயின்

இன்னுயிர்  மீட்டார் இளவழகன்!

மன்னிய தன்

நோய் கருதார்! மேனி நொடிதல் இவர் கருதார்!

தாய் கருதிச் செய்தார் தவம்!

நின்றார் தழலாய்! இளவழகன் நீறுபகை

என்றார் தமிழின் பகை எரித்தார்!

வென்றார்!

மதிப்பின் தமிழ்காத்தார்! மானமே காத்தார்!

பதிப்பரசர் எங்கள் படை!

                           -காசி ஆனந்தன்

                     (ஈழத்து உணர்ச்சிக் கவிஞர்)

பெருமைக்குப் பெருமை சேர்ப்போம்!

கோஇள வழகா உன்னைக்

குன்றின்மேல் வைத்துப் பார்ப்போம்

வாஇள வழகா இந்த

வையத்தைத் தமிழ்மண் ணாக்கித்

தாஇள வழகா இன்னும்

தாய்நூல்கள் யாவும் நெய்து

பாஇள வழகர் கூடிப்

பாராட்டி வாழ்த்து கின்றோம்!

கலப்பிலாத் தமிழைக் கண்டால்

களிப்பிலே மூழ்கிப் போவாய்

உழைப்பில்லார்க் கென்றும் இங்கே

ஊதியம் இல்லை யென்று

மொழிப்புலம் யாவும் கண்ட

முதல்வராம் பாவாணர் நூல்

மலைப்புறப் பதிவு செய்தாய்

மனம் ஏந்தி வரவேற் கின்றோம்!

உயிர்த்தமிழ் உலகை ஆள

உயர்வோடு தமிழர் வாழ

பயிர்மூடும் களைகள் வீழ

பாரெலாம் நம்மைச் சூழ

அயர்வின்றி உழைத்த மேலோன்

அறிஞர்க்கே அறிஞர் என்றும்

பெயல்நிகர் பாவாணர்தம்

பெருமைக்குப் பெருமை சேர்ப்போம்!

-    ‘பா’ ஆக்கம் – மலேசியப் பாவரசு ஐ.உலகநாதன்

                     (உலகத் தமிழர் கழகம்- பெங்களூர்)

What http://college-essay-help.org is the main idea in the second paragraph

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

முதற் கருத்து பதிவாகியுள்ளது- “தமிழ் மண் பதிப்பக நிறுவனர் திரு.கோ. இளவழகன் அவர்களின் நேர்காணல்”
  1. kasi visvanathan says:

    தமிழ் மொழியின் உயர் நூல்கள் பல அரசுடமை ஆக்கப்பட்டவுடன் தேடுவாரின்றிப் போன பல அறிஞர்களின் அறிவுச் செல்வங்களை மறக்காது,வருங்காலத்திற்கு மறைக்காது மீள் பதிப்பு செய்த்திடும் ஐயா கோ.இளவழகனார் அவர்கள் பனி தொடர நாமும் துனை நிற்க வேண்டும்.
    தமிழ் மண் பதிப்பகம் என்பது ஒரு அரசு, ஒரு பலகலைக் கழகம் முன் நின்று செய்ய வேண்டிய அரும் பெரும் பணிகளை தனியொருவராய் செய்யும் பாங்கு, தமிழ்ச் சமூகம் முழுமையும் நன்றிக்கடன் செய்ய வேண்டும்.

அதிகம் படித்தது