மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமீழீழமக்களின் மீது தொடர்ந்து நடக்கும் இன அழிப்புப்போருக்கான ஆதாரங்கள்.

ஆச்சாரி

Nov 15, 2013

2009 மே மாதம் சர்வதேசத்தின் குறிப்பாக இந்தியா அமெரிக்கா மற்றும் மேற்கு உலகின் துணையோடு ஈழத்தில் தன் சொந்த மக்களாகிய  தமிழர்களின் மீது உலகம் தடை செய்த இரசாயன குண்டுகளை போட்டு ஒரு இன அழிப்பு போரை தொடுத்து 1,46,679 பேரை சிங்கள இனவெறி அரசு இனப்படுகொலையை செய்து முடித்தது. இந்த போர் என்பது சாட்சிகள் இல்லாத போரென்றாலும் சான்றுகள் இல்லாத போரில்லை.

அதில் குறிப்பாக போர் நடந்த காலகட்டத்திலேயே கொல்வின் அம்மையார் பல சான்றுகளை இந்த சர்வதேசத்தின் முன் வைத்தார். அதன் பிறகு இலண்டனை சேர்ந்த சேனல் 4 தொலைகாட்சி பல அதிர்ச்சியூட்டும் சான்றுகளை தந்தது. அதன் பின் ஐ.நாவின் அதிகாரியான சார்லஸ் பெட்ரி தனது உள்ளக ஆய்வறிக்கைகளில் பல சான்றுகளையும் அதில் ஐ.நா அதிகாரிகளின் பங்குகளையும் வெளிக்கொணர்ந்தார். அதை எப்படியாவது தடுத்துவிட வேண்டும் என்று ஐ.நாவின் தலைவர் பான்-கீ-மூன் மற்றும் இந்தியாவை சேர்ந்த விஜய் நம்பியார் உள்ளிட்ட ஐ.நாவின் உயராதிகாரிகள் முயன்ற போது அதை இந்த சர்வதேசத்திற்க்கு மே 17 இயக்கம் முதன்முதலில் வெளிக் கொண்டுவந்தது.

இந்த சமயத்தில் தான் கடந்த 2013 மார்ச் 22ஆம் தேதி அமெரிக்காவால் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானம். இதில் பாதிக்கப்பட்ட தமிழர்களின் தீர்வுக்கு பதிலாக இலங்கை அரசால் முன்மொழியப்பட்ட இனப்படுகொலை செய்த இலங்கையே தன்னை தானே விசாரித்துக்கொள்ளும் எல்.எல்.ஆர்.சி எனப்படும் ஒரு விசித்திரமான அயோக்கிய தீர்மானமானது இந்தியாவின் துணையோடு நிறைவேற்றப்பட்டது.

அதில் இரண்டு அம்சங்கள் முக்கியமானவை.ஒன்று வடக்கு-கிழக்கில் உள்ள இராணுவத்தை திரும்பப் பெற வேண்டும். மற்றொன்று தமிழர்களின் பூர்வீக நிலங்களை அபகரிக்கும் குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஒரு கமிசனை உருவாக்கியது என்ற இந்த இரண்டுக்கும் ஐ.நாவும், இந்தியா ஆதரித்து அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் இலங்கைக்கு பாராட்டு தெரிவித்தது.

இந்த அயோக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஐந்து மாதங்கள் ஆகிறது. ஆனால் இலங்கையில் தமிழர்களின் இன்றைய நிலை என்ன?

கடந்த ஜூலை 18ஆம் தேதி,மன்னார் மாவட்ட அரசு ஏஜெண்டு அல்லது மாவட்டச் செயலாளர் (GOVERNMENT AGENT / DIST.SECRETARY) M.Y.S.தேஷப்பிரியா முசாலை பகுதி செயலாளருக்கு அனுப்பிய ஒரு சுற்றறிக்கை தற்போது வெளியாகியுள்ளது

அந்தச் சுற்றறிக்கையில் உள்ள முக்கிய அம்சமான:

1.மன்னார் மாவட்டத்தின் முசாலைப்பகுதிக்கு இடம்பெயரத் தயாராக உள்ள 500 சிங்களக் குடும்பங்களை அடையாளம் காண வேண்டும்.//IDENTIFY SUITABLE LAND TO RELOCATE 500 FAMILIES//.

2.இடம்பெயரத் தயாராக உள்ள சிங்களக் குடும்பங்களின் பட்டியல் ஒரு வாரத்திற்குள் தயாரிக்க வேண்டும்.//REGISTRATION OF DISPLACEMENT PERSONS TO BE COMPLETED WITHIN ONE WEEK TIME.//

3.மேற்படி இந்த குடியேற்ற நடவடிக்கையை சிவில் அதிகாரியான MASP குணசேனாவும்,சிங்கள 542 படை பிரிவின் பிரிகேடியர் மெர்வின் பேரேராவுடன் இணைந்து செய்யவும்.//MAKE MASP GUNASENA WORKING AS CIVIL AFFICER AT 542 BRIDATE WILL BE CORDINATAING THE ACTIVITIES WITH YOU AND YOU CAN MAKE FREQUENT COMMUNICATION WITH HIM TO COMPLETE THE TASK//

மேற்படியான இந்த சுற்றறிக்கையானது சிங்கள ஜனாதிபதியின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் குழுவான PRESIDENTIAL TASK FORCE இன் செயலாளருக்கும், 542ஆம் இராணுவ தலைமைக்கும் மற்றும் அதே இராணுவ பிரிவைச் சேர்ந்த சிவில் அதிகாரியான குணசேனாவுக்கும் இதன் நகல்கள் அனுப்பட்டிருக்கிறது. இதன்மூலம் இந்த சிங்களமயமாக்கும் நடவடிக்கைக்கு அதிபர் மாளிகையும்,இராணுவமும் சேர்ந்து இந்த நடவடிக்கைகளை மேற்கொள்கிறது என்பது இதன் மூலம் ஆதாரபூர்வமாக தெரிகிறது.

அதாவது ஐ.நா சபையும், இந்தியாவின் துணையோடு அமெரிக்காவும் ”தமிழர்களின் நிலங்கள் அபகரிக்கபடுவது தீர்க்க வேண்டும்”என்ற இலங்கை அரசின் பரிந்துரையான LLRCயை ஐ.நா அவையில் பாராட்டி முடித்த சில மாதங்களுக்குள்ளாக அதைச் சிறுதும் மதிக்காமல் நடக்கும் இலங்கையை என்ன செய்யப் போகிறது இந்தச் சர்வதேசம்?.

இந்தச் சிங்களக் குடியேற்றம் ஏதோ இன்று மன்னார் மாவட்டத்தில் மட்டும் நடக்கவில்லை. இந்த நடவடிக்கை ஏற்கனவே வவுனியா மற்றும் முல்லைத்தீவில் போர் முடிந்த சில மாதங்களிலேயே சிங்கள அரசால் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் வவுனியாவிற்க்கு இடம்பெயர்ந்த சிங்களக் குடும்பங்களுக்கு 6 லட்சம் பணமும், நிலங்களும் வழங்கப்படுகின்றன. இப்பொழுது இந்த நடைமுறையானது மன்னாரில் நடைபெற்றுக்கொண்டுள்ளது.

ஏற்கனவே மன்னார் மாவட்டம் மிகப்பெரிய இனப்படுகொலை நடந்த மாவட்டம். உதாரணமாகப் போர் ஆரம்பிக்கும் முன் 2008 ல் TRO என்ற தமிழர் மாறுவாழ்வு மையத்தின் கணக்குப்படி மன்னார் மாவட்டத்தில் 7650 குடும்பங்கள் சுமாராக 32000 பேர் வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால் போர் முடிவடைந்த பொழுது வெறும் 471பேர் தான் முள்வேலி முகாம்க்குள் இருக்கிறார்கள் என்று ஜூலையில் அரசு தெரிவிக்கிறது. அப்படியானால் மீதமிருக்கிற அந்த 31500 பேர் என்ன ஆனார்கள்?  என்பதை இன்றுவரை சர்வதேசச் சமூகம் அறிய முயலவில்லை. இத்தகைய படுகொலைகள் நிகழ்ந்த மன்னாரில் தான் இன்று தமிழர்களின் நிலங்கள் பறிக்கப்பட்டு சிங்களக் குடியேற்றங்கள் விரைவாக வடக்கு மாகாணத்தேர்தலை முன்னிட்டு நடத்தப்படுகிறது.

இறுதியாக இப்பொழுது வெளியான இந்த ஆவணத்தின் அடிப்படையில் இலங்கை அரசின் மீது ஒரு சர்வதேச சுதந்திர விசாரணையை கொண்டு வர சர்வதேச சமூகம் முயலவேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட தமீழீழ தமிழர்களிடத்தில் பொதுவாக்கெடுப்பு ஒன்றை நடத்தப்பட வேண்டும். இந்தக் கோரிக்கையே நமது தொன்மை போராட்டமாக இருக்க வேண்டும்.

If you do trust your teen, it’s http://spyappsinsider.com easy to maintain that trust

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமீழீழமக்களின் மீது தொடர்ந்து நடக்கும் இன அழிப்புப்போருக்கான ஆதாரங்கள்.”

அதிகம் படித்தது