மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சிறகு விரிப்போம் டிசம்பர் 2011

சிறகு ஆசிரியர்

Dec 1, 2011

தமிழகத்தின் அதிகரிக்கும் மக்கள் தொகை பல்வேறு சவால்களை நம் முன் நிறுத்துகிறது. இதனை இரண்டு விதமாக நாம் நோக்கவேண்டி உள்ளது, தற்போது உள்ள அனைவர்க்கும் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவது, எதிர்காலத்தில் அதிகரிக்கப்போகும் மக்களின் தேவைகளுக்கு உறுதி செய்வது. எதிர்காலத்துக்கும் நாம் திட்டமிட வேண்டுமா என்றால் ஆம் கண்டிப்பாக செய்தாக வேண்டும், ஏனென்றால் ஆயுள் காலம் அதிகரித்த இன்றைய நாளில் அடுத்து  பிறக்கப் போகும் பல தலைமுறைகளோடு நாம் வாழ்ந்து கொண்டு இருப்போம். அனைவர்க்குமான குறைந்த பட்ச தேவைகள் நிறைவேறாவிட்டால் யார் வாழ்விலும் நிம்மதி இருக்காது.

தண்ணீர், உணவு, உடை, உறைவிடம், போக்குவரத்து, மின்சாரம், எரிபொருள் என்று அத்தியாவசிய தேவைகளே இன்று அதிகரித்து விட்டன, இந்த பட்டியலில் உடையைத் தவிர ஏனைய அனைத்துக்கும் இப்போதே பற்றாக்குறை நிலவுகிறது. கல்வி, ஆரோக்கியம் போன்ற தேவைகளைப் பற்றி கூறத் தேவையில்லை, அவற்றிலும் தன்னிறைவு ஏற்படவில்லை. வேலைவாய்ப்பு என்று பார்த்தால் பெருமளவு வெளிநாடுகளை நம்பி இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். மேலும் காவல்துறை, நீதித்துறை மற்றும் பிற அவசியமான துறைகளிலும் நாம் நிறைவைப் பெறவில்லை, கொண்டுள்ள மிக குறைந்த வசதிகளை கொண்டு சமாளித்துக் கொண்டிருக்கிறோம்.

இவற்றையெல்லாம் தவிர பெரிய பூதாகாரமான சிக்கல் ஒன்று உள்ளது, அது ஒவ்வொரு மனிதனும் வெளியேற்றும் கழிவு, பல்கிப் பெருகி போன மக்கள் தொகையால் இன்று குப்பைகளும், கழிவுகளும் பெரு மலைகள் போல குவிந்து கிடக்கின்றன, அவற்றை அகற்றி கொட்டும் பகுதியெல்லாம் இன்று பாழ்பட்டு, நாற்றமெடுத்து மக்கள் வாழத் தகுதியற்ற பகுதிகளாக மாறிக் கொண்டு இருக்கின்றன. தமிழகத்தின் அனைத்து ஆறுகளிலும் இன்று கழிவு நீர் பெருகி ஓடுகிறது.பெரு நகரங்களின் தெருக்கள் யாவும் குப்பை சேர்ந்து காட்சியளிக்கிறது. பல நீர் நிலைகள் கழிவு கொட்டும் குழிகளாக மாறிவிட்டன. இன்றைய நிலையே இதுவென்றால் எதிர்காலத்தின் நிலையை எண்ணிப் பாருங்கள்.

ஆக இந்த சிக்கல்களுக்கும், தேவைகளுக்கும் தீர்வுகள் காண வேண்டியது நமது கடமையாகிறது. நமக்காக பிறர் சிந்திக்க போவது இல்லை, நாம் தான் சிந்தித்து, செயலாற்றி நம்மையும், இனி பிறக்க போகும் நமது தலைமுறைகளையும் காத்துக் கொள்ள வேண்டும். தேவைகளை தீர்த்துக்கொள்ள வேண்டும்.


சிறகு ஆசிரியர்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சிறகு விரிப்போம் டிசம்பர் 2011”

அதிகம் படித்தது