மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தலையங்கம் – மக்களைச் சிந்தியுங்கள் மாண்புமிகுகளே!

ஆச்சாரி

Feb 15, 2012

தமிழக முதல்வரும் எதிர்க் கட்சித் தலைவரும், சட்டமன்றத்தில் யார் பெரியவர் என்ற தர்க்கத்தில் ஈடுபட்டு சவால்களை அள்ளிவிட்ட சம்பவம் அரசியலில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. அன்றைய நாளிதழ்களுக்கு ஒரு பெரிய செய்தி கிடைத்து பக்கத்தை நிரப்ப உதவியது. ஆனால் மக்கள் பிரச்சினைகளை விவாதிக்க வேண்டிய இடத்தில் தனிப்பட்ட செல்வாக்கைப் பற்றி இரு தரப்பினரும் மோதிக் கொண்டதை எந்த ஊடகமும் கண்டிக்கவில்லை. காரணம் ஆளுங்கட்சியை பகைத்துக் கொண்டால் விளம்பரங்கள் கிடைக்காது என்ற மரியாதை கலந்த அச்சம்.
சட்டமன்றம்- முழுக்க முழுக்க மக்களுக்காக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மக்கள் பிரச்சினைகளை மக்களின் தேவைகள் பற்றி விவாதிக்க அரசியல் சட்டத்தால் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு. பெரும்பாலான சட்ட மன்றங்களில் மக்களைப் புறந்தள்ளி விட்டு தனிமனித புகழாரங்கள், தாக்குதல்கள், தனிமனித அரசியல் வளர்ச்சி, கட்சிகளின் வளர்ச்சி இவைகளைப் பற்றிப் பேசுவதிலேயே நேரத்தை செலவிடுகிறார்கள். வாக்களிக்க மட்டும் மக்கள் வேண்டும். தேர்தலில் வென்று சட்டமன்றத்துக்கு வந்ததும் தமது தனிப்பட்ட செல்வாக்கால் வந்ததாக எண்ணிக்கொண்டு விடுகிறார்கள்.
தமிழக சட்டமன்றத்தில் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவரும் தங்கள் தங்களின் பலப் பிரயோகத்தைப் பற்றி விவாதித்து அடங்கிய சில நாட்களில், பக்கத்து மாநிலமான கர்நாடக சட்டமன்றத்தில் ஒரு அமைச்சர் உள்ளிட்ட மூன்று சட்ட மன்ற உறுப்பினர்கள் ஆபாசப் படத்தை கைபேசியில் பார்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தக் கூத்துக்களைப் பார்க்கும்போது, மக்களாட்சியில் சில ‘மாண்புமிகுக்களின்’ செயல்கள் நம்மைப் புல்லரிக்க வைக்கிறது. கடந்த காலங்களில் சட்டமன்றம் சண்டை மன்றமாக ஆன சம்பவங்களும் நிறையவே நிகழ்ந்துள்ளன.
ஒவ்வொரு கட்சியும் ஆட்சியைப் பிடிப்பதோ அல்லது சட்டமன்ற எதிர்க் கட்சி என்ற தகுதியைப் பெறுவதோ மக்கள் அளித்த வாக்குகளால்தான் என்பதை ஏனோ இரு தரப்பினரும் மறந்து விட்டு, தனிப்பட்ட செலவாக்கைப் பற்றி தோள் தட்டிக் கொள்வது சரியாகாது. ஓவ்வொரு சட்ட மன்ற உறுப்பினரும் தங்கள் தங்கள் தொகுதி மக்களின் தேவைகளை பிரச்சினைகளைப் பேசாமல் தங்கள் கட்சியின் தலைமையைக் குளிர்விக்க பாராட்டு மழை பொழிவதிலேயே சட்டமன்ற பொன்னான நேரங்களை செலவிடுவது வேதனைக்குரியது. இப்படிப்பட்ட செயல்கள் மக்களாட்சியின் தத்துவத்தையே தகர்த்துவிடும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணரவேண்டும்.

To many danes, humour and irony are https://justbuyessay.com closely linked

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தலையங்கம் – மக்களைச் சிந்தியுங்கள் மாண்புமிகுகளே!”

அதிகம் படித்தது