மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தழைக்கச் செய்வோம் – தமிழர்தம் மருத்துவத்தை!

ஆச்சாரி

Mar 1, 2012

மருந்தது ஒன்று வேண்டா யாக்கைக்கு

அற்றது போற்றி உணின்

இந்தக் குறளை வள்ளுவர் சொன்னது வயிறுக்கு. உண்டது செரித்த பிறகு உண்டால் உடம்புக்கு மருந்தே தேவைப்படாது என்று கூறுகிறார். பெரும்பாலும் பல நோய்களுக்கு வயிறே காரணமாய் இருக்கிறது. மருந்துக் கடைகளில் இருக்கும் மருந்து வகைகளைப் பார்க்கும் போதெல்லாம் ‘இத்தனை மருந்துகளா’ என்ற நினைப்பை விட, ‘மனிதர்களுக்கு இத்தனை நோய்களா’ என்றே எண்ணம் தோன்றுகிறது. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற முதுமொழியும் நினைவில் வருகிறது.

உலக அளவில் இப்போது பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் என்று புதுப் புது நோய்களும் வந்துகொண்டிருக்கிறது. அதற்கு மருந்துகளும் கண்டுபிடித்து விடுகிறார்கள். ஆங்கில மருத்துவ முறையில் பெரும்பாலும் நோய் முற்றிலும் குணமாவதில்லை. சித்த மருத்துவம் மிகத்தொன்மையான மருத்துவம். சித்தர்களின் நீண்ட நெடிய  ஆராய்ச்சியின் பயனாக நமக்குக் கிடைத்த அரிய வகை மருத்துவம். சித்த மருத்துவம் காலத்தின் மாறுபாட்டாலும் அந்நிய மருத்துவ முறையின் ஊடுருவலாலும் ஒரு சில இடங்களில் மட்டுமே நிலைத்து நிற்கிறது.

சித்த மருத்துவம் தமிழ்நாட்டில் தோன்றி மலேசியா, சிங்கப்பூர், சீனா, இங்கிலாந்து, அமெரிக்கா என்று பல நாடுகளுக்கு விரவியிருக்கிறது. இன்று சீனாவில் பெரும்பாலும் சித்த மருத்துவத்துக்குத்தான் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஆனால் நம்மில் பலருக்கு சித்த மருத்துவம் பற்றிய விழிப்புணர்வு இல்லை. சித்த மருத்துவம் தமிழ் மருத்துவம் என்பதற்கு சில அடிப்படை ஒற்றுமைகள் சொல்லப்படுகின்றன. தமிழ் நிலத்துக்குரிய காடுகள், மலைகள், நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் காணப்படும் செடிகள், கொடிகள், மரங்களில் இருந்து சித்த மருத்துவத்துக்கு மருந்து தயாரிக்கப்படுகிறது. .

சித்த மருத்துவத்தின் மூலச் சுவடிகள் அனைத்தும் தமிழில் அமைந்திருப்பதுடன் அவை தமிழகத்திலேயே வழங்கப்பட்டு வருகின்றன. சித்த மருத்துவம் நோயை முற்றிலும் நீக்கி அந்த நோய் மீண்டும் வராமல் தடுக்கும் சக்தி கொண்டது. ‘சுக்குக்கு மீறிய மருந்தில்லை’ என்பன போன்ற பழமொழிகள் சித்த மருத்துவத்தை அதன் பயனை நமக்கு நினைவுறுத்துகிறது. தோல் நோய்கள், வாத நோய் இப்படி பல துன்புறுத்தும் நோய்களுக்கு சித்த மருத்துவத்தால் தீர்வு கிடைக்கிறது.

மத்திய அரசு நிறுவனமான தாம்பரம் தேசிய சித்த ஆராய்ச்சி மற்றும்  மருத்துவமனைக்குச் சென்றோம். உள்ளே சென்றவுடன் அங்கு அமைக்கப்பட்டிருந்த பெரிய தோட்டத்தில் பல வகை மூலிகைச் செடிகளின் பெயர்களோடு அவற்றின் மருத்துவ குணம் என்ன என்பதையும் குறிப்பிட்டு  ஒவ்வொரு மூலிகைச் செடியிலும் எழுதி ஒட்டப்பட்டிருந்தது.  அந்த வளாகத்தின் உள்ளே அயோத்தி தாச பண்டிதர் பெயரில் மருத்துவமனைக் கட்டிடம் உள்ளது. இந்த மருத்துவமனைக்கு தினமும் வெளிப்புற நோயாளிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து சிகிச்சைப் பெற்றுச் செல்கின்றனர்.

தோல் நோயாளிகளுக்கு ஒரு வகை மூலிகை எண்ணையை உடம்பில் தடவி வர நோய் போய்விடுகிறது. ஆடுதொடா இலை என்ற மருத்துவ குணம் கொண்ட தழையை நன்றாகப் பிழிந்து அதன் சாறைக் குடித்தால் சளி, ஈளை, மூச்சிரைப்பு போன்றவை நீங்கி விடுகின்றன என்று சிகிச்சைப் பெறவந்த ஒருவர்  கூறினார். முதியவர்களுக்கு ஏற்படும் மூட்டு வலிகள், சித்த மருத்துவத்தால் நீங்குகின்றன. சுப்பையா என்ற நோயாளிக்கு உடல் முழுவதும் தோலில் கரும் புள்ளிகள் இருந்தன. இந்த மருத்துவமனையில் தரும் சித்த மருத்துவத்தில் தயாரிக்கப்பட்ட எண்ணெய்யைத் தடவி வந்தேன். இப்போது அந்தக் கரும் புள்ளிகள் மறைந்து விட்டன என்றார் சுப்பையா.

பச்சிலை
சம்பை சரக்குகள்
உப்பு சரக்குகள்
உபரச சரக்குகள்
நவ லோகங்கள்
64 பாசானங்கள்

இப்படி இன்னும் பல மருந்துகள் இங்கு தயாரிக்கப்படுகிறது சில நேரங்களில் மருந்து இருப்பு இல்லாததால் நோயாளிகளுக்கு மருந்து கொடுப்பதில் தாமதம் ஏற்படுகிறது என்ற குறைபாடு உள்ளதாகவும் சித்த மருத்துவமனைக்கு வந்தவர்கள் குறை கூறினார்கள். மத்திய அரசு நடத்தும் இந்த மருத்துவமனையிலேயே இப்படிக் குறைபாடுகள் இருக்கலாமா என்பது நோயாளிகளின் கேள்வி. (இந்த மருத்துவமனையின் சிறப்புகள், நன்மைகள் பற்றி அறிவதற்தகாக மருத்துவமனை அதிகாரிகளைத் தொடர்புகொள்ள முயன்றோம். ஒவ்வொருவரும் அவரைப் பார் இவரைப் பார் என்று கை நீட்டினார்களே தவிர தகவல்கள் தர யாரும் முன்வரவில்லை.)

சென்னை அண்ணா நகரில் உள்ள சித்த மருத்துவமனைக்கு பக்க வாத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பெருமளவில் வந்து சிகிச்சைப் பெற்று பயன்பெறுகின்றனர். ஆஸ்துமா நோயாளிகளுக்குக் கொடுக்க பஸ்பம், சூரணம், கசாயம், மாத்திரை, உடலில் பூசிக்கொள்ள எண்ணெய், உள்ளுக்குக் குடிக்க சொட்டு மருந்து இவற்றை வெளிப்புற நோயாளிகளுக்குத்  தருவதற்காகவே சிறப்புப் பிரிவு அண்ணாநகர் சித்த மருத்துவமனையில் இருக்கிறது.(அறிஞர் அண்ணா அரசு சித்த மருத்துவ வளாகம், அரும்பாக்கம், சென்னை தமிழ்நாடு  – 600106. தொலைபேசி எண் +91 44 26281563, +91 44 26214844)

வாத நோய், பித்த நோய். சிலேத்தும் நோய் , தனூர் வாயு, கண்நோய், காச நோய், பெரு வயிறு, சிலந்தி நோய், சந்தி நோய் , எழுவை (கழலை) நோய், சுர நோய், மகோதரம் நோய் , தலையில் வீக்கம், உடம்பு வீக்கம், பிளவை நோய், படுவன் நோய், தொப்புள் நோய், பீலி நோய், உறுவசியம், கரப்பான் நோய், கெண்டை நோய், குட்ட நோய், பல்-ஈறு நோய் ,சோகை, இசிவு, மூர்ச்சை, சூலை நோய், மூலம், அழல் நோய், பீனிசம், நஞ்சுக் கடி , நாக்கு-பல் நோய் இத்தனை வகை நோய்களுக்கு இங்கு மருந்து தரப்படுகிறது என்று மருந்து கொடுக்கும் ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.

பெருமளவில் முடக்கு வாத நோயாளிகள் வந்து சிகிச்சைப் பெற்றுச் செல்கின்றர். மூச்சுக் கோளாறு நோயாளிகளும் அதிகமாக வந்து சிகிச்சைப் பெறுகின்றனர். ஆனாலும் அரசு, சித்த மருத்துவத்தை இன்னும் மேம்படுத்தினால் அதிகமான மக்கள் பயன் பெறுவார்கள் என்று இந்த மருத்துவமனைக்கு வரும் மக்களைப் பார்த்தால் தோன்றுகிறது. தலை முடி சம்பந்தமான நோய்களுக்கு இங்கு வந்து பலபேர் தீர்வு பெற்றுள்ளனர் என்று நாம் அறிந்தோம்.

பெண்களுக்கு முடி உதிர்வதைத் தடுக்க இந்த மருத்துவமனையில் தயாரிக்கப்படும் டாம்ப்கால் என்ற பெயர்கொண்ட கூந்தல் மூலிகைத் தைலம் அதிக அளவில் விற்பனை ஆவதாக விற்பனைப் பிரிவு அதிகாரி தெரிவித்தார். ஆனாலும் இந்த சித்த மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கவில்லை. காரணம் சித்த மருத்துவ முறையில் – நோய் குணமாக நாளாகிறது என்பதால் அதைக் கடைப்பிடப்பதில்லை என்றும் நோய் அறவே நீங்கிவிடுவதை அவர்கள் உணர்வதில்லை என்றும் அவர் கூறினார்.

நாம் சித்த மருத்துவத்தை ஊக்குவிக்காமல் ஆங்கில மருந்து முறைகளுக்குச் சென்றுவிட்டதால், தமிழக கிராமப் புறங்களில் எத்தனையோ சித்த மருத்துவர்கள் வருமானம் இன்றி முடங்கிக் கிடக்கின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறுக்குப் பக்கத்தில் ராந்தல் என்ற கிராமத்தில் பல சித்த வைத்தியர்கள் உள்ளனர். ஆனால் சித்த வைத்தியத்தை ஒரு சிலரே நாடுவதால் அவர்கள் சித்த வைத்தியம் செய்வதை விட்டு விட்டு வேறு தொழில்களில் ஈடுபடுகின்றனர். நம் தமிழ் வழி மருத்துவமான சித்த மருத்துவத்தை தமிழர்கள் நாமே வளர்த்தெடுக்க வேண்டியது முக்கியம் என்பதை நாம் மறந்து விட்டோம்.

கோவை மாவட்டம் மருதமலையில் இன்னும் யாருமே பயன்படுத்தாத அரிய வகை மூலிகைச் செடிகள் இருப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். அந்த மூலிகைகளை அரசோ மற்ற சமூகத் தொண்டு நிறுவனங்களோ எடுத்துக் கையாண்டு மருந்துகள் தயாரித்தால் சித்த மருத்துவம் இன்னும் மேம்படும் என்பது நமது கருத்து. அந்த மலைப் பகுதியில் இன்னும் சித்தர்கள் வாழ்வதாகவும் அப்பகுதி மக்கள் நம்புகின்றனர். இதைப் போலவே நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையிலும் அரிய வகை மூலிகைகள் இருக்கின்றன. முடியாட்சிகள் நடந்தபோது சித்த மருத்துவம் சிறந்து விளங்கியதாக வரலாறுகள் நமக்குக் காட்டுகின்றன.

பல்லவர் காலம் தொடங்கி விசயநகர மன்னர் காலம்வரை அன்று நிலைத்திருந்த அரசுகள் சித்த மருத்துவத்தை ஊக்குவித்துப் பராமரித்து வந்ததைக் கல்வெட்டு சான்றுகள் கூறுகின்றன. இரும்புச்சுவை கொண்ட விழுப்புண் பெற்ற வடுவாழ் மார்பில் நெட்டை என்னும் நெடுவெள் ஊசியால் தைத்து சிகிச்சை  செய்யும் மருத்துவமுறைப் பற்றிப் பரணரின் பதிற்றுப்பத்து (42)- பாடல் குறிப்பிடுகிறது.  இம்மரபில் அகத்தியர் சத்திராயுத விதி என்ற சித்தர் நூல் உள்ளது.  குலசேகராழ்வார் வாளால் அறுத்துச் சுடும் (திப்பிய பிரபந்தம் -691) மருத்துவ முறை பற்றி பேசியுள்ளார்.

தமிழகத்தில் பல இடங்களில் சித்த மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கினால் சித்த மருத்துவத்தின் வளர்ச்சி நன்றாக இருக்கும். ஆனால் இங்குள்ள நிலைமையோ வேறு. இருக்கின்ற சித்த மருத்துவக் கல்லூரிகளே சரியாக இயங்கவில்லை. பாளையங்கோட்டை அரசு சித்தா கல்லூரி மிகவும் பழமையானது. , அது சரியான முறையில் இயக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. சமீபத்தில் சித்த மருத்துவப் படிப்புக்கு இந்த ஆண்டுக்கான சேர்க்கை முடிந்த பிறகும் வகுப்புகள் தொடங்கப்படவில்லை என்று இளநிலை மற்றும் முதுநிலை  மாணவர்கள் இக்கல்லூரி வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறையோ, கன்னியாகுமரி மாவட்டத்தில் சித்த மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் கூறிவிட்டது. (மத்திய அரசுக்கு அணு உலைகள்தான் இப்போது அவசியம் போலும்) அதுபோல காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு சித்த மருத்துவக் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியும் சரிவர இயங்கவில்லை என்று கூறுகிறார்கள்.

மிக மிகப் பழமையான தமிழ் முறை மருத்துவமான சித்த மருத்துவம் பற்றிய விழிப்புணர்வு நம்மிடம் இல்லாததால் அந்த மருத்துவம் பெரும்பாலான மக்களை சென்று சேரவில்லை. அந்த அளவுக்கு ஆங்கில மருத்துவங்கள் நம்மை ஆட்டிவைக்கிறது. நம் முன்னோர்கள் எல்லாம் நூறு வயதை நெருங்கி வாழ்ந்துள்ளனர். காரணம் அவர்களின் உணவு முறையும்  நோய் வந்தால் சித்த வைத்திய முறை மருந்துகளை அவர்கள் பயன்படுத்தியதும்தான். ஆங்காங்கே பல சித்த மருத்துவர்கள் இருந்தாலும் அவர்களை நாடிச் செல்லும் நோயாளிகளோ குறைவுதான்.

சென்னை சாபர்கான் பேட்டையில் சிறிய சித்த மருத்துவமனை நடத்தி வரும் பாட்சா அவர்கள், “சித்த மருத்துவத்தை நாடி வருவோரின் எண்ணிக்கை குறைவுதான். எனது அப்பா, தாத்தா எல்லோருமே எங்கள் சொந்த ஊரான சிதம்பரத்தில் சித்த வைத்தியம் பார்த்து வந்தார்கள். அப்போது நிறைய பேர் வருவார்கள். எங்கள் வீடே மருத்துவமனைபோல் இருக்கும். வயிறு சம்பத்தப்பட்ட பல நோய்களுக்கு எனது அப்பா சித்த மருந்துகளைக் கொடுப்பார். மருந்தை சாப்பிட்டவர்களுக்கு அந்த நோய் போய்விடும். நோய் போனால் மீண்டும் வராது. ஆனால் இப்போது யாரும் அங்கு வருவதில்லை. நான் மட்டும் பரம்பரைத் தொழிலை விட்டுவிடக் கூடாது என்பதற்காக சென்னைக்கு வந்து தொழிலை நடத்தி வருகிறேன்” என்று கூறினார்.

கிராமங்களில் இருபது இருபைத்தந்து ஆண்டுகளுக்கு முன்னால் தேள் கடிக்கு  பொடி செய்யப்பட்ட ஒரு மருந்தைக் கொடுப்பார்கள். மிகவும் கசப்பாக இருக்கும். அதை உட்கொண்டவுடன் தேள் கொட்டிய வலி பறந்துவிடும். இப்போதோ அந்த சித்த மருத்துவ முறையில் தயாரிக்கப்பட்ட மருந்துகள் மறைந்து ஆங்கில மருத்துவ வழியில் ஊசி போட்டுக் கொள்கிறார்கள். சித்தர்கள் கண்டறிந்த நமது பாரம்பரிய சித்த மருத்துவத்தை வளர்த்தால் தொடர்ந்து அந்த மருத்துவத்தை நாம் கடைப்பிடித்தால் நம் வருங்கால சந்ததிக்கும் அது நல்ல ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்கும்.

The researchers were interested in changes in students conceptual knowledge about aquatic ecosystems and in students uses writemyessay4me.org/ of hypotheses, experiments, and explanations to organize their reasoning for a complete discussion, see rosebery et al

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

முதற் கருத்து பதிவாகியுள்ளது- “தழைக்கச் செய்வோம் – தமிழர்தம் மருத்துவத்தை!”
  1. பிரியா says:

    சித்த மருத்துவம் தழைத்தோங்க இன்னும் பல முயற்சிகளை நாம் எடுக்க வேண்டும் சித்த மருத்துவத்தின் சிறப்பு பற்றி அறிய இக்கட்டுரை ஏதுவாக இருக்கும் பதிவுக்கு நன்றிகள்

அதிகம் படித்தது