மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

திசை காட்டும் கருவி

ஆச்சாரி

Aug 2, 2011

முன்பு எல்லாம் ஒரு ஊருக்கு போவது என்றால் வரைபடங்கள் வைத்துக் கொண்டு அந்த ஊருக்கு போகும் பாதையைப் பற்றி வெகு காலத்திற்கு முன்பே திட்டமிட வேண்டும். காரில் போகும் போது சாலையில் இருக்கும் அடையாளங்களையும் , வரைபடங்களையும்  சரி பார்த்து அதுவும் போதாமல் வழியில் யாரிடமாவது வழி கேட்டுக் கொண்டு செல்ல வேண்டும். ஆனால் இன்று உலக நிலையறியும்  அமைப்பு ( Global Positioning System – GPS – ஜி.பி.எஸ் ) துணையோடு இயங்கும் திசையறியும் கருவிகள் இது எதுவுமே தேவை இல்லை என்ற ஒரு நிலையை உருவாக்கி விட்டிருக்கின்றன.

நீங்கள ஊர்தியில் ஏறி எங்கே செல்ல வேண்டும் என இதற்கு சொன்னால் போதும். இந்தத் திசையறியும் கருவிகள் திரையில் நீங்கள் செல்லும் பாதையை காட்டுகின்றன. மேலும் தற்போது வந்துள்ள கருவிகள் பாதையை முப்பரிமாணத்தில் காட்டுகின்றன. இது எப்படி சாத்தியமாயிற்று?. இதற்கு அடிப்படையாக இருப்பது உலக நிலையறியும் அமைப்பு என்னும் தொழில் நுட்பம். உலக நிலையறியும்  அமைப்பு என்பது என்ன?. உலக நிலையறியும்  அமைப்பு என்பது பூமியில் ஒரு இடத்தின் அட்சரேகை, தீர்க்கரேகை , உயரம் முதலான விவரங்களை , பூமியைச் சுற்றும் இருபத்தி நான்கு செயற்கைக்கோள்களின் உதவியோடு அறியும் ஒரு முறை.

1940 களில் உருவாக்கப்பட்ட நிலத்தில் இருந்து இயக்கப்பட்ட , மின்காந்த அலைகளில் அடிப்படையிலான திசை கட்டும் கருவிகளே  இதற்கு அடிப்படை.

பின்பு 1960 இல் முதன் முதலில் அமெரிக்க கப்பல் படையில் பயன்பாட்டிற்காக முதன் முதலில் செயற்கை கோள்களில் அடிப்படையிலான முதல் நிலையறியும் அமைப்புக்கள்  உருவாக்கப்பட்டன. 1960  களிலும் 1970 களிலும் இத் தொழில்நுட்பம் நன்கு வளர்ச்சி அடைந்தது. பல்வேறு நிலையறியும் அமைப்புக்கள் உருவாக்கப்பட்டன. 1973 இல் பல்வேறு அமைப்புக்களில் இருந்த குறை நிறைகளை ஆராய்ந்து நாவ்ஸ்டார் ( navsTar  ) என்னும் அமைப்பு உருவாக்கப்பட்டது. இது பின்னர் நாவ்ஸ்டார் ஜி.பி.எஸ் ( Navstar Gps ) என அழைக்கப்பட்டு பின்பு ஜி.பி.எஸ் ( G .P .S  ) என அழைக்கப்படுகிறது.

இது முதலில் அமெரிக்க ராணுவத்தின் பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டது. இந்தத் திட்டத்திற்கான செலவு ஏவுகணைகளை துல்லியமாக ஏவுவதற்காக அமெரிக்க காங்கிரசால்  ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போதே 1983 இல் அமெரிக்க அதிபராக இருந்த ரீகன் இதை மக்களின் பயன்பாட்டிற்காக பயன்படுத்தலாம் என உத்தரவிட்டார்.

இந்தத் திட்டத்திற்கான முதல் செயற்கைக்கோள் 1989 இல் ஏவப்பட்டது. 24 வது செயற்கைக் கோள் 1994 இல் ஏவப்பட்டது. முதலில் செயற்கைக்கோள் அனுப்பிய மக்கள் பயன்பாட்டிற்கான அலைகள் சக்தி குறைத்து அனுப்பப்பட்டன. 2000 ஆண்டில் கிளிண்டன் அமெரிக்க அதிபராக இருக்கும் போது அவர் மக்களின் பயன்பாட்டிற்கு அனுப்பும் அலைகளை சக்தி குறைத்து அனுப்புவதை நிறுத்த உத்தரவிட்டார். இதனால்  பொது பயன்பாட்டிற்கான நிலையறியும் கருவிகளின் துல்லியம் 100 அடியில் இருந்து 20 அடியாக குறைந்தது. அதே நேரத்தில் அமெரிக்க ராணுவம் பிரதேச அடிப்படையில் இந்த அலைகளை நிறுத்துவதற்கான தொழில் நுட்பத்தை வைத்து உருவாக்கி இருக்கிறது. இதன் மூலம் அவர்கள் நினைக்கும் நேரத்தில் நினைக்கும் இடத்தில் இந்த நிலையறியும் அலைகளை நிறுத்த முடியும்.

இந்த நிலையறியும் அமைப்பு டாப்ளர் தத்துவ அடிப்படியில் இயங்குகிறது. டாப்ளர் தத்துவம் என்பது இது தான். மின்காந்த அலைகளை உருவாகும் இடத்தில இருந்து அதை பெறுபவர் நெருங்கி வந்தால் அலைகளின் நெருக்கம் அதிகரிக்கும். அதே நேரம் மின்காந்த அலைகள் உருவாகும் இடத்தில் இருந்து அதை பெறுபவர் விலகி சென்றால் அலைகளின் நெருக்கம் குறையும்.

இது எப்படி பூமியில் நிலையறிய பயன்படுகிறது?. இந்த அமைப்பிற்காக பூமியைச் சுற்றும் 24 செயற்கைக் கோள்களில் மிக துல்லியமான அணுக்கடிகாரங்கள் இருக்கின்றன. இவை பூமியை நோக்கி மின்காந்த அலைகளை அனுப்பிக் கொண்டு இருக்கின்றன. இந்த அலைகளில் துல்லியமான நேரம், செயற்கைக் கோள்களின் நிலை போன்ற விபரங்கள் இருக்கின்றன. இந்த அலைகளை பெறும் திசையறியும் கருவி செயற்கைக் கோளின் நிலை, இந்த அலை வந்து சேர எடுத்துக் கொண்ட நேரம் முதலியவற்றை கணக்கிட்டு பூமியில் தன்னுடைய இருப்பிடத்தை அறிகிறது. பூமியில் நிலை மற்றும் உயரம் இவற்றை அறிய மூன்று செயற்கைக் கோள்களில் இருந்து அலைகளை பெறுவது அவசியம். ஆனால் துல்லியமாக தெரிய வேண்டுமென்றால் கண்டிப்பாக குறைந்தது நான்கு செயற்கைக் கோள்களில் இருந்து தகவல்களை  பெறுவது அவசியம்.

இன்று திசையறியும் கருவிகள் வெகுவாக முன்னேறி விட்டன. அதே சமயம் இவற்றின் பயன்பாடும் அதிகரித்து விட்டது. திசையறியும் கருவிகள் இன்று அலைபேசிகளில் கூட செயல்படுகின்றன. மென்பொருளின் வளர்ச்சி நிலையறியும் கருவிகளில் இருந்து பெறப்படும் தகவல்களை, மற்ற தகவல்களோடு தொகுத்து, நிலையறியும் கருவிகளை கிட்டத்தட்ட ஒரு தகவல் களஞ்சியமாக மாற்றி இருக்கிறது. நீங்கள் இதன் மூலம் சாலைகளின் வாகன போக்குவரத்து நெரிசல் பற்றி அறியலாம். நீங்கள் செல்லும் சாலையில் அடுத்த பெட்ரோல் நிலையம் எங்கே இருக்கிறது என பல்வேறு தகவல்களை அறியலாம்.

அறிவியல் மனிதனின் வாழ்க்கையை எப்படி இலகு ஆக்குகிறது என்பதற்கு இந்த திசை காட்டும் கருவிகள் நல்ல உதாரணம்.

The effects of repeated readings and attentional cues on reading fluency and comprehension http://eduessayhelper.org

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

முதற் கருத்து பதிவாகியுள்ளது- “திசை காட்டும் கருவி”
  1. sarnaya says:

    எனக்கு கல்வி எனது பெரபு உருமை அந்த

அதிகம் படித்தது