மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

திராவிடம் – தமிழ் தேசியம்: தமிழருக்குள் உட்பகை வேண்டாம்!

ஆச்சாரி

May 17, 2012

’யாயும் ஞாயும் யாரா கியரோ

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்

யானும் நீயும் எவ்வழி அறிதும்

செம்புலப் பெயல்நீர் போல

அன்புடை நெஞ்சம் தாம்கலந்தனவே’

குறுந்தொகை – 40

’நம் அன்பு நெஞ்சங்கள் முன்பின் உறவு இல்லாமலேயே கலந்தன’ என்று  ஈராயிரமாண்டுகளுக்கு முன்பிருந்த தமிழர் வாழ்வைப் படம் பிடித்துக் காட்டுகிறது இந்த குறுந்தொகைப் பாடல். ’எவ்வித குடும்ப உறவுமில்லாத நாம் செம்மண் நிலத்தில் மழை நீர் இரண்டறக் கலந்ததது போல்’ வாழ்ந்த தமிழர் இன்று சமயத்தாலும், சாதியாலும், அரசியலாலும், கொள்கை முரண்பாட்டாலும் பிரிந்து தோல்விகள் பல கண்டு விழி பிதுங்கி ஆதரவற்றாராக நிற்கிறோம்.

தமிழினம் இழக்கக் கூடாததையெல்லாம் இழந்து இன்று இழிநிலையிலுள்ளது எதனால்? குழந்தையைக் கேட்டாலும் காரணம் கூறும். ஒற்றுமைக்கு உரை எழுதிய இனம் இன்று ஒற்றுமையென்றால் என்ன விலை என கேட்கும் அவல நிலையில் உள்ளோம்.  இன்று ’ஈழம் பெற்றுத் தருவதே என் குறிக்கோள்’ என்று ஓலமிடும் பெருந்தலைகள் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தமிழனுக்கொரு நாடிருந்ததை வசதியாக மறந்துவிடுகின்றனர். இருந்த நாட்டைப் பேணிக்காக்காமல் கண்ணெதிரிரே அழியவிட்டு இன்று ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கிறோம். இவர்களின் ஒற்றுமையின்மையினாலும், கள்ள நாடகங்களினாலும் தமிழினம் இழந்தது எழுதி மாளாது.

என்ன செய்வது என்று செய்வதறியாமல் திகைத்த தமிழர் ஒன்று கூடினர். உலகின் உண்மை நிலை தெளிந்த அறிவார்ந்த உறவுகள் இந்த இழிநிலை ஏன் நேர்ந்தது என்று ஆய்ந்த வேளையில் இனி என்ன செய்வது என்றும் சிந்திக்கத் துவங்கினர். தீயினால் காடு சுடுபட்டு மயான அமைதிக்குப்பின் சிறு செடிகள் துளிர்விடுவது போல் முள்ளிவாய்க்கால் அழிவின் பின் உலகில் தமிழர் வாழும் பகுதிகளில் அங்குமிங்குமாக சில நம்பிக்கைத் துளிகள் தோன்றத் துவங்கின. தமிழரில்லா நாடில்லை, அந்நாடுகளில் மனிதம் கொஞ்சம் மீதம் இருப்பது அறிந்தனர் தமிழர். ஆனால் தாம் ஒன்றுபட்டாலொழிய மேலைநாடுகளின் மனிதநேயம் தமிழர்பால் திரும்ப வாய்ப்பில்லை என்பதை அறிந்த அவர்கள், துவக்கினர் அறிவார்ந்த நடவடிக்கைகளை. பிறந்தது நாடு கடந்த தமிழீழ அரசு, உலகத் தமிழர் பேரவை, சேவ் தமிழ் அமைப்பு, அவலத்தின் உச்சக்கட்ட நாளான மே 17-ன் பெயரில் ஒருங்கிணைந்தனர் இளம்போராளிகள். தமிழர்கள் இணைந்தால் என்ன நிகழும் என்பதை உலகிற்கு உணர்த்த துவங்கியுள்ளனர் இந்த இளம்புலிகள். ’முந்நீர் நாப்பண் திமில்சுடர் போல’ வெற்றி சிறிது, சிறிதாக முகம் காட்டத் தொடங்கியுள்ளது. அஞ்சியது பகைவர் படை. மேலும் மனிதநேய அமைப்புகள், பன்னாட்டு ஊடகங்கள், தமிழ்ப் போராளிகள் போன்றோரின் கடும் முயற்சியினால் உலக அரசுகள் போரின் கோரத்தை உணர்ந்து திடுக்கிட்டு விழித்துள்ளன, கொடுங்கோலனுக்கெதிராகவும் எழுந்துள்ளனர். முடிவு, முதன் முறையாக உலகத்தின் பார்வை தமிழர் மேல் விழுந்ததுள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அவையில் இலங்கையில் நடந்த இனப்படுகொலையைக் குறித்த விவாதமும் அதைத் தொடர்ந்த அறிக்கையும் ஒரு நல்ல துவக்கமே, செல்ல வேண்டிய பாதையோ வெகுதொலைவு. இச்சிறு வெற்றி தமிழர் அமைப்புகள் பலவின் உழைப்பினால்தான் என்பதில் கடுகளவும் ஐயமில்லை. ஒற்றுமையாகவும், தீவிரமாகவும் பகைவர்களை எதிர்க்க வேண்டிய இவ்வேளையில் தமிழர்களிடம் பிளவு ஏற்படுத்தக் கருங்காலிகள் முயல்வது இயற்கையே. ஆனால் அதில் வீழாமல் ‘கருமமே கண்ணாக’ இருப்பது நம் கடமை. ஆனால் அண்மையில் தமிழகத்தில் தமிழுணர்வாளர்களுக்கிடையில் ஏற்பட்டிருக்கும் பிளவு வேதனையைத் தருவதோடு, மனத்தளர்ச்சியையும், நம்பிக்கையை இழக்கவும் வைக்கிறது. நம் பகைவர்கள் கண்முன்னே நமக்கு தீங்கிழைத்துவரும் வேளையில் சகோதரர்கள் ஒருவரை ஒருவர் தாக்கியழித்துக்கொள்வது தகுமோ? நமது பார்வையை வீணான செயல்களிலும், வாதங்களிலும் தொலைப்பதுதான் வள்ளுவம் நமக்கு கற்றுக் கொடுத்த நெறியா?

’திராவிடமா? தமிழா?’ இந்த தேவையற்ற விவாதம் தமிழினத்தின் இன்றையத் தேவையா? தெளிந்த தோழர்களே, சிந்தியுங்கள். தமிழர் அறிவுடையோரே, ஆற்றலுமுடையோரே. தொல் தமிழரிடையில் சாதிப்பிரிவையோ, சமயப் பிரிவினையோ இருந்ததில்லை. பல பிரிவினர் தமிழுக்காகத் தம் வாழ்வை அர்ப்பணித்துள்ளனர். பெரும்பாலான தமிழர்கள் கல்வியறிவுடையவர்களாக இருந்துள்ளனர். தமிழ்ப் புலவர்களின் வரலாறு கண்டால், குயவனும், வேடனும், மன்னனும், பெண்களும், வேளாளனும், பறையனும், பாணனும் பாவடித்துள்ளது தெரியும். [தொல் தமிழகத்தின் சாதியற்ற வாழ்வைப் புரிந்து கொள்ள அமெரிக்காவில் வாழும் இந்தியவியல் அறிஞர் முனைவர் சு. பழனியப்பன் (www.sarii.org) அவர்களின் ‘On the Unintended Influence of Jainism on the Development of Caste in Post-Classical Tamil Society’ (http://www.soas.ac.uk/research/publications/journals/ijjs/file46109.pdf) என்கிற கட்டுரையைப்  படிக்கவும்.]

பழந்தமிழகத்தில் வளத்துடன் வாழ்ந்த தமிழர்கள் கடந்த 700 ஆண்டுகளுக்கும் மேலாக அடிமையாகவே வாழ வேண்டியச் சூழ்நிலை தம்முள் சண்டையிட்டுக்கொண்டதால்தான் என்பது வரலாறு. இன்றும் அதே அடிமை நிலைதான். அயலார் நம்மை ஆண்ட காலத்தில் தமிழ் வீழத்துவங்கியது, தமிழரும் வீழ்ந்தனர். ஆனைக்கும் அடி சருக்கும்தானே? வர்ணாசிரமம் நம்மை ஆண்டது. கல்வி தமிழனிடமிருந்து பிடுங்கப்பட்டது. இறைவனும் தமிழனிடமிருந்து தள்ளிவைக்கப்பட்டான். தமிழ் மண்ணை தமிழன் ஆண்டால்தானே இதை எதிர்த்துக் கேட்க முடியும்? இந்த இழிநிலையைக் கண்டு பலர் வெகுண்டெழுந்தனர். ஆனால் அதிகாரத்தின் உதவியால் அவர்கள் அடக்கப் பட்டனர்.

செங்கதிரின் ஒளிக்காக ஏங்கிக் கிடக்கும் இருளைப் போல் தமிழர்கள் தலைமைக்கு ஏங்கிக் கிடந்தனர். நம்பிக்கை வீண்போகவில்லை. கதிரவன் மீண்டும் ஈரோட்டில் உதித்தான். ஆம் ஈ.வே.ரா. பெரியார் எனும் பெருந்தகை வடிவாக. அடிமைச் சங்கிலியினால் சிறைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த தமிழனை தமது உன்னதமான, எதற்கும் அஞ்சாத தன்னலமற்ற உழைப்பினால் மீட்டு, உறங்கிக் கொண்டிருந்த தமிழனை தட்டி எழுப்பினார் அந்த அறிவாசான். தமிழ்த்தாய் நிம்மதிப் பெருமூச்சுவிட்டாள். தமிழும் முன்னேறியது, தமிழனும் முன்னேறத்துவங்கினான். அதுவரை மேட்டுக்குடியினரிடம் மட்டுமிருந்த தமிழ், அரசியல் மேடைகளிலும், திருமண மண்டபங்களிலும், ஏன் அனைத்து வீதியிலும் வந்ததற்கு காரணம் திராவிட இயக்கம்தான். திராவிட இயக்கம் தமிழுக்கும், தமிழருக்கும், தமிழ் மண்ணிற்கு ஆற்றியப் பணிகளை எடுத்துக்காட்டுவது இக்கட்டுரையின் நோக்கமல்ல. ஆனால் இன்று தமிழினம் ஓரளவு மேம்பட்டிருப்பதற்கு முதன்மைக் காரணம் பெரியார் துவங்கிய திராவிட இயக்கம்தான்.

ஆனால் பெரியாருக்குப் பின் வந்த அனைத்து தலைவர்களும் தமிழனின் தமிழ்ப்பற்றையும், அனைத்தையும் நம்பும் வெகுளித்தனத்தையும் பயன்படுத்திக்கொண்டு தம்மையும், தம் சுற்றத்தையும் வளர்த்துக் கொண்டனர். தமிழையும், தமிழினத்தையும் நடுதெருவில் ஆதரவின்றி விட்டனர். பேரறிஞர் அண்ணா இதில் ஒரு விதிவிலக்கு. தமிழனின் கெட்டநேரம் அண்ணா பதவியேற்ற ஈராண்டுகளில் நம்மை விட்டுப்பிரிந்தார். இந்த கேடுகெட்ட திராவிட அரசியல்வாதிகள் ஊழலையும், ஒழுக்கமிண்மையையும் தமிழரிடத்தில் விதைத்து தமிழனை மீண்டும் உறக்கத்தில் ஆழ்த்தினர். தமிழ்ப்பண்பாடு அழிக்கப்பட்டது. ’ஒருவனுக்கு ஒருத்தி’ என்று காலம் காலமான தமிழர் வழக்கத்தை அழித்தது இத் திராவிட அரசியல் தலைவர்கள்தான். மதத்தினாலும், சாதிப்பிரிவினையாலும், திரைப்படங்களினாலும், தரங்கெட்டத் தொலைக்காட்சிகளினாலும் தமிழர் தம் தனித்தன்மையை இழக்கத் தொடங்கினர். பெரும்பாலான தமிழர், தம்மொழியின் சிறப்பையும், ஒழுக்கத்தை முன்னிருத்திய நம் பண்பாட்டை இழந்தனர். ஆங்கில மோகத்தினால் தமிழும் பின்தங்கியது. தமிழ் படித்தால் பயனில்லை என்கிற மாயை ஆங்கில ஊடகங்களினால் பரப்பப்பட்டு, இன்று தமிழ்வழிப்படிப்பவர் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. காளான்கள் போல் ஆங்கிலவழிப்பள்ளிகள் தோன்றி கொஞ்சம் நஞ்சமிருந்த தமிழும் காணாமல் போகத் தொடங்கியுள்ளது. நம் பழம் சொத்தான இசையும், நடனமும் நம்மிடமிருந்து பறிக்கப்பட்டன. இதற்கு முதன்மைக் காரணம் திராவிட அரசுகள்தான். இதனால் தமிழுணர்வாளர்கள் மத்தியில் திராவிடத்தின் மீது வெறுப்பு ஏற்பட்டிருப்பது புரிந்துக் கொள்ளக்கூடியதுதான். திராவிட அரசியல்வாதிகளின் அயோக்கியத்தனத்தினால் திராவிட இயக்கத்தையே பழிக்கும் நிலை ஏற்பட்டதுதான் ஒரு பெரிய வேதனை. திராவிட இயக்கங்களினால் பயனென்ன என்கிற கேள்விகள் எழுவது வரலாறு அறிந்தோரை அவமதிப்பது போலுள்ளது. சிலர் இதை மேலும் வலுப்படுத்தி தமிழ் இளைஞர்களை இன்னும் குழப்பத்திற்கு தள்ளி வருகின்றனர். இது உடனடியாக நிறுத்தப்படவேண்டும். இந்த இழிநிலைக்கு திராவிடம் காரணமில்லை என்பது உண்மை வரலாறு அறிந்தோர் அறிவர்.  பெரிய பாதிப்பு ஏற்படுமுன்னே இதை நாம் தமிழரிடத்தே எடுத்துச்செல்ல வேண்டும்

திராவிடத்தால் வீழ்ந்தோம் என்பதெல்லாம் தேவையில்லா வீண் வாதம். திராவிடத்தால் நாம் வளர்ந்தோம் என்பதுதான் உண்மை. அதேவேளையில் தமிழ்த் தேசியவாதிகளின் கோபமும் புரிந்துகொள்ளக் கூடியதுதான். தமிழையும், தமிழினத்தையும் முன்னிறுத்தி அரசியல்தளத்தை அமைப்பதும் காலத்தின் கட்டாயம்தான். ஆனால் ’திராவிடத்தால் வீழ்ந்தோம்’ போன்ற பிரிவினை முழக்கங்களினால் தமிழர் பிளவுப்படதான் வாய்ப்புள்ளது என்று தெரிந்தும் பேசுவது நன்மைக்கல்ல என்பதை தோழர்கள் உணர வேண்டும். திராவிடத் தேசியம் என்றுமே இருந்ததில்லை. தமிழ்த்தேசியம்தான்  திராவிட இயக்கத்தின் ஒரு முதன்மையானக் கொள்கை என்பதை தோழர்கள் உணரவேண்டும். திராவிடம் எனும் சொல்லே தமிழ் எனும் சொல்லிலிருந்து பிறந்தது (தமிழ் –> த்ரமிழ –> த்ரமிட –> த்ரவிட –> திராவிட) என்பது தமிழாய்ந்த அறிஞர்கள் கூற்று. தமிழர்களை வட நாட்டார் (ஆரியர்) இப்படி அழைத்துள்ளது வடநூல்களிலிருந்து அறிய முடியும்.

முள்ளிவாய்க்கால் அவலத்திற்குபின் இளம்போராளிகள் இந்த கேடுகெட்ட அரசியல்வாதிகளை இனியும் நம்பப்போவதில்லை என்கிற நல்லதொரு முடிவை எடுத்து சிறுசிறு அமைப்புகளைத் தொடங்கிப் போராடிவருவதால் இன்று தமிழ் மக்களிடையே ஓரளவிற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது. இந்த விழிப்புணர்விற்கு காரணம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், நாம் தமிழர் கட்சி, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி, மற்றும் பல தமிழ்த் தேசிய அமைப்புகள் செய்த பரப்புரைதான். இது தொடரவேண்டும், இவர்கள் ஓரணியில் திரள வேண்டும். சாதி, சமயம், கட்சி, கொள்கை முரண்பாடுகள், தெய்வ நம்பிக்கை/நம்பிக்கையின்மை போன்றவைகளை சற்றே தள்ளிவைத்து தமிழுக்காகவும், தமிழினத்திற்காவும், தமிழ் மண்ணின் முன்னேற்றத்திற்காகவும் ஒன்றுபட வேண்டிய அவசியக் காலக்கட்டத்தில் நாம் உள்ளோம்.

’பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்

பொருத்தலும் வல்ல தமைச்சு’

இது வள்ளுவ நெறி. துரோகிகளை அறிந்து அவர்களை விலக்கியும், துணையாகவுள்ளவரை பேணிக்காத்தலும், முரண்பாட்டால் பிரிந்துச் சென்றோரை அரவணைத்து மீண்டும் இணைத்துக்கொள்வதுதான் நல்ல தலைவனுக்கு அழகு. துரோகிகளையும் எதிரிகளையும் நாம் இனம் கண்டுக்கொண்டுவிட்டோம். அனால் உணர்வாளர்களை அரவணைக்க மறந்துவிட்டோம். சகோதரர்களிடையே இந்த பிரிவினையினால் தமிழர் இழந்தது போதும், ஒன்றுபட வேண்டியது நம் கடமை. முள்ளிவாய்க்காலில் அழிந்த அப்பாவித் தமிழருக்காவது நாம் இணைய வேண்டும்.

‘ஒண்றாமை ஒண்றியார் கட்படின், எஞ்ஞான்றும்

பொன்றாமை ஒண்றல் அரிது’

உணர்விலும், கொள்கையிலும் நெருங்கியவர்களிடம் உட்பகை ஏற்பட்டால் நமக்குதான் அழிவு. துரோகிகளையும், எதிரிகளையும் இனங்கண்ட நமக்கு செயலுக்கு துணை நிற்கும் நண்பர்களை இணைக்கும் பலமில்லையா? நிச்சயம் உண்டு. ஈராயிரமாண்டுகளுக்கும் மேலாக ஒற்றுமைக்கு உரை எழுதிக்கொண்டுள்ள தமிழர் ஒரே அணியில் திரள முடியும். தமிழுக்காக, தமிழினத்திற்காக இணைய முடியும். பல அமைப்புகள் இருப்பதில் தவறில்லை, ஆனால் தமிழினப் பிரச்சினைகளைக் களைய ஒரே அணியில் இணைவது இக்காலத்தின் கட்டாயம். இதற்காக உலகில் வாழும் அனைத்து தமிழ் நல்லுங்களும் முயல வேண்டும். முதலில் ஒருவரை ஒருவர் தனிப்பட்ட முறையில் தாக்கிக் கொள்வதை நிறுத்த வேண்டும். கட்டுரைகள் எழுதுகிறேன் என்று தமிழினத்திற்குள் உட்பகை ஏற்படுத்துவதை உடனே நிறுத்த வேண்டும்.

தமிழருக்கு ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கிறது. ஆனால் அதை அடைவது நம் செயலில்தான் உள்ளது. இந்த ஒளிமயமான வாழ்வை அடைய ஒத்தக் கருத்துடைய தமிழ்த் தேசியவாதிகள் மற்றும் திராவிட இயக்கத்தினரும் ஒன்றிணைய வேண்டியது மிக அவசியம். முதலில் அந்தந்த அமைப்புகளின் தலைவர்கள் ஒத்தக் கருத்துடன் ஒருங்கிணைய வேண்டும். அதற்கு தமிழகத்தில் அரசியல் சார்பற்ற பெரியோர்களும், தமிழுணவார்களும், சமூகப் போராளிகளும் முயற்சிக்க வேண்டும். இது உலகத் தமிழரின் அன்பு வேண்டுகோள்.

’பிரிந்தார்ப் பொருத்தலும் வல்ல தமைச்சு’ என்கிற வள்ளுவநெறியை போற்றுவதாக நமது வருங்கால செயல்கள் இருக்க வேண்டும்.

Installing smart cell phone monitoring software and walking away will not work, and neither will spy phone app poking your head in sporadically

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

13 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “திராவிடம் – தமிழ் தேசியம்: தமிழருக்குள் உட்பகை வேண்டாம்!”
  1. கோ.கலை வாணன்,மதுரை says:

    தமிழே தூய்மையான தென்மொழி என்றும், ஆரியங்கலந்த கொடுந்தமிழே திராவிட மொழிகளாய் (தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு) திரிந்ததென்று அறியவும். வடமொழிக் கலந்து ஆரிய மயமாகிப் போன திராவிடம் மீண்டும் தமிழாகாது. திராவிடரும் மீண்டும் தமிழராக மாட்டார். அரை ஆரியமும், முக்காப் ஆரியமுமான திராவிடத்தோடு தமிழை இணைத்தால், அழுகளோடு சேர்ந்த நற்கனியும் கெடுவதுபோல் தமிழும் கெடும். தமிழனும் கெடுவான்.

    தமிழ் வேறு திராவிடம் வேறு என்பதுடன் ஆரியமும் திராவிடமும் ஒன்றேயென அறிக.

  2. கோ.கலை வாணன்,மதுரை says:

    தீது தீது திராவிடம் என்பதே தீது –

    அன்பார்ந்த தமிழர்களே,

    தமிழ்தாயின் தலைமகனும், தமிழர்களின் தத்துவார்த்த தலைவனும், தமிழர்களின் ஒரேதந்தையுமான, திராவிடைருள் கிழித்த செந்தமிழ்ப் பரிதி, மொழி ஞாயிறு, ஐயா தேவநேயப் பாவாணர் அவர்களின் கருத்துக்களே இங்குத் தரப்பட்டுள்ளது.

    கால்டுவெல் கண்காணியார் முதன்முதலாக திராவிடமொழிகளை ஆய்ந்ததினாலும். அக்காலத்தில் தமிழ்த் தூய்மையுணர்ச்சியின்மையாலும் தமிழை திராவிடத்தினின்று வேறுபடுத்திக் காட்டத் தேவையில்லாதிருந்தது. இக்காலத்திலோ ஆராய்ச்சி மிகுந்து விட்டதனாலும், வட மொழியும் இந்தியும் பற்றிய கொள்கையில் தமிழர்க்கும் பிற இனமொழியாளர்க்கும் வேறுபாடு இருப்பதனாலும், தமிழென்றும் பிற இன மொழிகளையே (தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு போன்றவற்றையே) திராவிடம் என்றும் வேறுபடுத்திக் காட்டுதல் இன்றியமையாதது.

    தமிழ்த் தூய்மையான தென்மொழி என்றும், திராவிடம் என்பது ஆரியம் கலந்த தென்மொழிகள் என்றும் வேறுபாடறிதல் வேண்டும். பால் தயிராய்த் திரிந்த பின் மீண்டும் பாலாகாதது போல் வட மொழி கலந்து ஆரிய மயமாகிப் போன திராவிட்ம் மீண்டும் தமிழாகாது. வட மொழிக் கலப்பால் திராவிடம் உயரும், தமிழ் தாழும். ஆதலால், வடசொல் சேரச்சேரத் திராவிடத்திற்க்கு உயர்வு. அது தீரத் தீர தமிழிற்கு உயர்வு. திராவிடம் என்ற மொழிநிலையே வடமொழிக் கலப்பால்தான் நேர்ந்தது. அல்லாக்கால் அது கொடுந்தமிழ் என்றே பண்டுபோற் கூறப்படும். தமிழ் தனித்தியங்கும். திராவிடம் வடமொழித் துணையின்றி தனித்தியங்காது.

    இங்ங்னம் வடமொழியை நட்பாகக்கொள்ளும் திராவிடத்திற்கும், பகையாகக்கொள்ளும் தமிழிற்கும் ஒருசிறிதும் நேர்த்தம் இருக்கமுடியாது. ஆதலால், தமிழ், தமிழன், தமிழ்நாடு என்ற சொற்களன்றி, திராவிடம், திராவிடன், திராவிடநாடு என்றசொற்கள் ஒலித்தல்கூடாது. திராவிடம் அரையாரியமும், முக்காலாரியமுமாதலால் அதனோடு தமிழை இணைப்பின், அழுகளோடு சேர்ந்த நற்கனியும் கெடுவதுபோல், தமிழும்கெடும். தமிழனும் ​கெடுவான். பின்பு தமிழுமிராது, தமிழனுமிரான். இந்தியா முழுவதும் ஆரியமயமாகி விடும்.

    திராவிட முன்னேற்றக் கழகம், தமிழ்நாடு என்னும் கொள்கையை விட்டுவிட்டுத் திராவிட நாடு என்னும் பொருத்தமற்றக் கொள்கையை கடைபிடித்து தமககுத்தாமேயும் முட்டுக்கட்டை இட்டுக் கொண்டது. இது நீங்கினாலொழிய முன்னேற்றமும், வெற்றியுமில்லை. தமிழ் என்னும் சொல்லிலுள்ள உணர்ச்சியும், ஆற்றலும் திராவிடம் என்னும் சொல்லில் இல்லை.

    தமிழ் சென்னையைத் தலைநகராகக் கொண்ட தென்னாட்டில் மட்டுமுள்ளது. தமிழ் வேறு திராவிடம் வேறு, தமிழையும் திராவிடத்தையும் இணைப்பது பாலையும் தயிரையும் கலப்பது போன்றது.

    மேற்சொன்ன கருத்துகளின் மொழியியல் ஆதாரங்களே பின்வருவது.

    கால்டுவெல் கண்காணியார் குமரிநாட்டு சரித்திரத்தையும், தொல்காப்பியத்தையும், மேற்கணக்கு நூல்களையும் அறியாதவராதலாதலின் தமிழரை வடக்கிருந்து வந்தவராகவும், ஆரியரால் நாகரிகமடைந்தவராகவும் கொண்டு த்ரமிளம் எனும் வடசொல்லினின்று தமிழ் எனும் சொல் பிறந்ததென்று கூறினார். ஆனால், பண்டிதர் கிரையர்சன் இதை மறுத்துத் தமிழம் என்பதே த்ரவிடம் என்பதன் மூலம் என தமது இந்திய மொழியாராய்ச்சி எனும் நூலில் நிலைநாட்டியுள்ளார்.

    தமிழுக்கு திராவிடம் எனும் பெயர் தமிழ்நாட்டில் வழங்காமையானும் தமிழ் என்னும் வடிவத்தையொட்டிய பெயர்களே மேனாட்டிலும், வட நாட்டிலும் பழங்காலத்தில் வழங்கி வந்தமையானும், திராவிட மொழிகளெல்லாம் ஒரு காலத்தில் தமிழாகவேயிருந்தமையானும், தமிழம் என்னும் பெயரே திராவிடம் எனத் திரிந்தது என்று தெளியப்படும்.

    தமிழ் என்னும் பெயர் எங்கனம் திராவிடம் எனத் திரிந்ததோ அங்கனமே தமிழாகிய மொழியும் பிற திராவிட மொழிகளாய் திரிந்தது என்க.

    16ம் நூற்றாண்டு வரை மலையாள நாட்டுமொழி கொடுந்தமிழாய் இருந்ததென்றும் அதன் பின்னரே வடமொழி கலப்பால் மலையாளமாகத் திரியத் தொடங்கிற்று என்றும் அறியலாம்.

    1860ம் ஆம் ஆண்டில்தான் முதல் மலையாள இலக்கணமும் எழுந்தது. 19ம் நூற்றாண்டு வரை மலையாளியர் தமிழையும் கற்று வந்தனர்.

    தொல்காப்பியர் காலத்தில் கன்னடம் தோன்றவில்லை என்பதும், தெலுங்கு கொடுந்தமிழ் நிலையில் நின்றது என்பதும் வேங்கடவெல்லைக்கு தெற்கில் உள்ள நிலப்பகுதி முழுவதும் செந்தமிழே வழங்கின என்பதும் அறியப்படும். தெலுங்கு பிரிந்தது சுமார் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என்றும், கன்னடம் பிரிந்தது சுமார் கி.பி. ஆறாம் நூற்றாண்டு என்றும் கூறலாம்.

    மலையாளத்திற்கு அடுத்துத் தமிழோடு தொடரபுள்ளது கன்னடம். கன்னடம் என்பது கருநடம் என்னும் தமிழ் சொல்லின் திரிபு. இது முதலாவது கன்னட நாட்டை குறித்து பின்பு அங்கு வழங்கும் மொழியைக் குறித்தது. இதன் பழைய வடிவங்கள், கருநாடு, கருநாடகம் என்பன, கன்னட நாட்டார், கருநாடார் என்றும் கருநடர் என்றும் அழைக்கப்பட்டனர். கருநடம் அல்லது கருநாடகம் என்னும் சொல்லுக்கு இரு பொருள்கள் கூறப்படுகின்றன. அவை 1. கரியநாடு, 2. கருங்கூத்து என்பன.

    கன்னட நாட்டின் பெரும்பகுதி கரிசல் நிலமாய் இருப்பதால் கரிய நாடு என்று பொருள் கொண்டனர் குண்டெட் பண்டிதரும், கால்டுவெல் கண்கானியாரும்.

    மிகப்பழமையான அநாகரிக அல்லது கண்மூடிப்பழக்கத்தை பழைய கர்நாடகம் என்பர். இங்கு கர்நாடகம் எனபது பழமையான அநாகரிகத்தைக் குறிக்கலாம். ஆகவே, கருநடம் அல்லது கருநாடகம் என்னும் பெயர் கருங்கூத்து நிகழும் நாடு என்னும் பொருள் கொண்டதாய் இருக்கலாம். ஆயினும் கருநடரை கருநாடர் என்னும் வழக்கும் உண்மையானும் கூத்தாகிய காரணத்தினும் நிலவகையாகிய காரணம் பெயர் பேற்றிற்குச் சிறந்தலானும், கரிசற்பாங்கான நாடு என்று பொருள் கொள்வதே பொருத்தமாம்.

    சேர நாடு கடைக்கழகக் காலத்திலேயே குடமலைக்கு (மேற்குத் தொடர்ச்சி மலை) மேற்பால் வேறும், கீழ்பால் வேறுமாக பிரிந்து போயிற்று. கீழ்பால் நாடு, மீண்டும் தெற்கில் கொங்கு நாடும் வடக்கில் கங்க நாடும் இடையில் அதிகை நாடு, துவரை நாடு, முதலியனவுமாக பிரிந்துவிட்டது. அதிகை நாடு தகடூரை (இன்றைய தர்மபுரியை) தலைநகராகக் கொண்டு அதிகமான் மரபினர் ஆண்டுவந்தது கங்க நாடு. அதன் வடக்கில் கங்க மரபினர் குவலாலபுரத்தை (கோலார்) தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தனர். இது கங்கபாடி என்று கல்வெட்டுகளில் கூறப்படும். இக்கங்க மரபைச் சேர்ந்தவனே பன்னிரெண்டாம் நூற்றாண்டில் மூன்றாம் குலோத்துங்கச் சோழன் காலத்தவனும், அமராபரணன் ஸ்ரீமத் குவலாலபுர பரமேசுவரன் கங்கருலோர்பவன் என்று தன் மெய்கீர்த்திகளில் பாராட்டப்பெறுபவனும் பவணந்தி முனிவரைக் கொண்டு நன்னூலை ஆக்குவித்தவனுமாகிய சீயகங்கன் என்பவன். இவன் ஒரு தமிழ் இலக்கணத்தை இயற்றுவித்ததினாலும் நன்னூற் சிறப்புப்பாயிரம்

    ” குணகடல் குமரி குடகம் வேங்கடம்
    எனுநான் கெல்லையின் இருந்தமிழ்க் கடலுள் ”
    என்று கூறுவதாலும் மைசூர்நாட்டின் வேங்கட நேர் எல்லை வரை பன்னிரெண்டாம் நூற்றாண்டு வரையுமாவது தமிழ் தவிர வேறு ஒரு மொழியும் வழங்கவில்லை என்பது இதனால் அறியப்படும்.

    தெலுங்கிற்கு வடுகு, ஆந்திரம் என்னும் பெயர்கள் உண்டு. தெலுங்கு என்பது தெலுங்கராலேயே இடப்பட்டது. வடுகு என்பது தமிழராலும் ஆந்திரம் என்பது ஆரியராலும் இடப்பட்டன. தெலுங்கு தமிழ்நாட்டிற்கு வடக்கே வழங்குவதால் வடுகு எனப்பட்டது.

    தொல்காப்பியர் காலத்தில் வேங்கடத்திற்கு வடக்கே கொடுந்தமிழ் வழங்கிற்று என்றும் , அது பின்பு திரிந்து வடுகு எனும் கிளைமொழியாயிற்று என்றும் அறியலாம்.

    கலிங்கத்திற்கு வடக்கில் ஆந்திரம் என ஒரு தெலுங்கு நாடு இருந்ததென்றும் ஓர் ஆந்திர அரச மரபினர் வட இந்தியாவையும் ஆண்டு வந்தனரென்றும் வட மொழி இருக்குவேத ஐந்திரேய பிரமாணத்தாலும் இதிகாசப் புராணங்களாலும் அறிய வருகிறது. சேரன் செங்கூட்டுவனுக்கு வடநாட்டுச் செலவில் துணைவரான நூற்றுவர் கன்ணர் ஆந்திர மன்னராயிருக்கலாம்.

    கலிங்கம் (ஒரிசா மாகாணமும், கஞ்சங் கோட்டகமும்) என ஒரு தெலுங்குநாடிருந்ததாலும், பண்டை தெலுங்கு நாட்டின் ஒரு பாகம் கலிங்கம் என்னும் பொதுப் பெயர் கொண்ட முப்பகுதியாக இருந்ததென்றும், அதனால் அது திரிகலிங்கம் எனப்பட்டது என்றும் அறியலாம். திரிகலிங்கம் என்பது முறையே திரிலிங்கம் – தெலுங்கம் – தெலுங்கு என மருவிற்று. ஆந்திரர் நெடுங்காலமாக ஒரு தனி மண்பதையராக இருந்து வந்திருக்கின்றனர், எனினும் அவரது மொழி கடைக்கழகக்காலம் வரையில் கொடுந்தமிழாகவும் கிளைமொழியாகவுமிருந்து அதன்பின்னரே வடமொழிகலப்பால் இனமொழியாகப் பிரிந்துவிட்டது. கடைக்கழகக் காலத்தில் வேங்கட எல்லையில் தெலுங்கு இருந்ததில்லை. அன்று வேங்கட மலை புல்லி என்னும் தமிழ் வள்ளளுக்குரியதாய் இருந்தது.

    வேங்கட மலை தொண்டை நாட்டின் பெரும்பிரிவாகிய 24 கோட்டங்களில் ஒன்றாக இருந்தது.

    நம்பியாரூராரிடம் (சுந்தர மூர்த்தி அடிகளிடம்) சில வடுகர்கள் (அல்லது வடுகு வடிவில் வந்த சிவ பூதங்கள்) வழிப்பறித்ததால், ஒன்பதாம் நூற்றாண்டிலேயே வடுகர் கொங்கு நாட்டில் குடியேறி விட்டனர் எனலாம். யாழ்பாண அகராதியில் வடுகன் எனும் பெயருக்கு மூடன் என்றும் பொருள் கூறியிருப்பதாலும் முதன்முதலாகத் தமிழ்நாட்டிற்கு வந்த வடுகர் (கம்பளத்தார்) முரடனாய் இருந்தனரென்றும் தமிழர் அவரோடு உறவாடவில்லை என்றும் அறிகிறோம்.

    15 ஆம் நூற்றாண்டில் வீரசேகர பாண்டியனுக்கும், சந்திரசேகர சோழனுக்கும் பகைமை நேர்ந்த போது, முந்தியவன் வேண்டுகோட்கிணங்கி விசய நகர அரசனாகிய கிருட்டிண தேவராயர் தம் படைத் தலைவனாகிய நாகமநாயக்கரை அனுப்பி சோழனை வென்றார், அதிலிருந்து சோழ, பாண்டி நாடுகள் நாயக்கமன்னர் கைப்பட்டது. தெலுங்கர் பலர் தமிழ்நாட்டில் குடியேறினர். அவருள் நாயக்கர் (நாயுடு), இரெட்டியார் என்பவர் தலைமையானவர் கம்பளத்தாரும் சக்கிலியருமாகிய தெலுங்கர் ஒன்பதாம் நூற்றாண்டிற்கு முன்பே தமிழ்நாட்டில் குடியேறி விட்டனர். அவரே முதன்முதல் வடுகர் எனப்பட்டனர்.

    15 ஆம் நூற்றாண்டிற்கு பின் பாண்டியர் வலிமை குன்றியதாலும், தெலுங்கர் பலர் தமிழ்நாட்டில் குடியேறி விட்டதாலும், பாண்டி நாட்டில் பல தெலுங்கு வேளிரும், குறுநில மன்னரும் தோன்றினர். அவற்றில் எட்டயாபுரமும்,பாஞ்சாலங்குறிச்சியும் தலைமையானவை.

    தெலுங்கர் தமிழ்நாட்டில் குடியேறவே, தனித் தமிழ் நிலையங்களாயிருந்த திருவேங்கடம், திருக்காளத்தி, திருத்தணிகை முதலிய வடபாற் சிவநகரங்கள் இருமொழி நிலையங்களாக மாறிவிட்டன. தெலுங்கு நாட்டையடுத்த தமிழரும் தெலுங்கை கற்று தெலுங்கராகவே மாறி வருகின்றனர்.

    குடகுக்கு மிகநெருங்கி, கன்னடத்தினின்று சிறிதும், மலையாளத்தினின்று பெரிதும் வேறுபட்டுத் திருந்திய திராவிட மொழிகளுள் ஒன்றாய் தெலுங்கு, கன்னடம், மலையாளம் இவற்றிற்கு அடுத்தாற் போல் சொல்லத்தக்கது துளு மொழியாகும்.

    துளுவிற்குத் தனியெழுத்தும், தனி அல்லது பழைய இலக்கியமும் இல்லை. மங்களூர் பேசெல் விடைத்தொண்டரால் கன்னடவெழுத்திலும், துளுவப் பார்ப்பனரால் மலையாளவெழுத்திலும் துளு எழுதப்பட்டு வருகின்றது.

    மேல்கரைநாட்டில் கன்னடத்திற்கு தெற்கில், சந்திரகிரி, கல்யாணபுரி ஆறுகட்கிடையில் பெரும்பாலும் தாய் மொழியாக பேசப்படுவது துளு ஆகும். துளுவ நாட்டு கொடுந்தமிழ் கிளைமொழியாய் பிரிந்தது 16 ஆம் நூற்றாண்டிற்கு பின்னரே என்பதை அறியவும்.

    துளுவ நாட்டிலிருந்த பல நூற்றாண்டிற்கு முன்னரே வேளாளர் பலர் தொண்டை மண்டலத்திற்கு குடிவந்தனர். அவரே தொண்டை மண்டல துளுவ வேளாளராவார், அவர்தம் மொழி தொன்று தொட்டுத் தமிழே ஆகும்.

    தமிழே தூய்மையான தென்மொழி என்றும், ஆரியங்கலந்த கொடுந்தமிழே திராவிட மொழிகளாய் (தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு) திரிந்ததென்று அறியவும். வடமொழிக் கலந்து ஆரிய மயமாகிப் போன திராவிடம் மீண்டும் தமிழாகாது. திராவிடரும் மீண்டும் தமிழராக மாட்டார். அரை ஆரியமும், முக்காப் ஆரியமுமான திராவிடத்தோடு தமிழை இணைத்தால், அழுகளோடு சேர்ந்த நற்கனியும் கெடுவதுபோல் தமிழும் கெடும். தமிழனும் கெடுவான்.

    தமிழ் வேறு திராவிடம் வேறு என்பதுடன் ஆரியமும் திராவிடமும் ஒன்றேயென அறிக.

    இதுகாறும் கூறியவற்றால் உண்மைநிலையை உள்ளவாறு உணர்ந்து நடைமுறைக்கொவ்வாத வீண்கொள்கைகளையும், வீரப்புகளையும் (திராவிடத்தையும்) விட்டு விட்டு எடுத்த முயற்சி இடையூறின்றி வெற்றி பெறும் பொருட்டு தமிழ் – தமிழர் – தமிழ்நாட்டை முன்வைத்து தமிழர்கள் – ஒற்றுமையாகப் போராடி முன்னேற்றப் பாதையில் முனைந்து செல்க.

    தமிழ், தமிழர், தமிழ்நாடு ​வெல்க!

    . - தமிழர் தந்​​தை தேவநேயப் பாவாணர்

  3. கொ.வை.அரங்கநாதன் says:

    இறை நம்பிக்கை கொண்டு இறைவனோடு தேவாரம், திருவாசகம்,திவ்ய பிரபந்தம் போன்ற தமிழையும் பூஜித்து வரும் 90 சதவீத ஆன்மிகத் தமிழர்களை, இவர்கள் எல்லாம் தமிழினத்திற்கு எதிரானவர்கள் என்பது போன்றத் தோற்றத்தை திராவிட இயக்கங்கள் கடந்த 50 ஆண்டுகளாய் செய்து வருகின்றன. நீங்கள் கூட உங்கள் கட்டுரையில் இதைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. இறைவழிபாட்டில் இருப்பதனாலேயே இவர்கள் எல்லாம் தமிழ் உணர்வு இல்லதவர்கள் என்ற குற்றம் சாட்டிகொண்டே ஒற்றுமையைப் பற்றி பேசுவது அர்த்தமில்லாதது.

    • kondraivendhan says:

      இறை உணர்வு இருப்பதனால், தமிழை பூசனை செய்வதனால் யாரும் தமிழனுக்கு எதிரியாகவும் முடியாது, தமிழனாகவும் முடியாது. மேற்படி பூசனையும் இறை நம்பிக்கையுமே ஒரு வகையில் நம்மைத் தமிழர்களாக, நமது பொறுப்பு என்ன என்பதனை உணர இயலாதவர்களாக இருக்கச் செய்துவிட்டது.
      மொழி என்றுமே இனம் சார்ந்தது. இறைவன் சார்ந்தது அல்ல. நாம் என்னதான், நம் தாய் மொழியை பூசனை செய்து வந்தாலும் அதன் நீச்சத் தன்மை நீங்கி விடாது. இறை நிலை என்ற கோணத்தில் இல்லாமல் நமது அடையாளம், நமது உணர்வு என்ற நிலையில் இருந்திருந்தால், நாம் நம் தொப்புள் கொடி உறவுகளை கண் எதிரே கருகிச் சாக விட்டிருக்க மாட்டோம். உணர்ச்சி இன்றியமையாதது, உணர்ச்சி இருப்பதனால் தான் நாம் மனிதர்கள். நம் உணர்வுகள் மழுங்கினால், நாளை நம் இருத்தலுக்கும் ஈரெட்டு நிலையாகிவிடும்.
      இதனால் இறை நம்பிக்கையை குறை சொல்லவில்லை. முத்தமிழால் வைத்தாலும் வாழ வைக்கும் முருக இன்று தன் இனம் சாகப் பார்த்திருந்த வரலாற்றை உருவாக்க வேண்டாம். மொழிக்கும் மதத்திற்கும் மற்றும் இறை நம்பிக்கைக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. நன்றி.

  4. வ. வேம்பையன் says:

    ஆக்கம் தரும் அருமையான கருத்துகள்.

  5. வ. வேம்பையன் says:

    ஆக்கம் தரும் அருமையான கருத்து.

  6. rajkumar says:

    தமிழர் தலைவர்களை சிறிய படமாக போடுவது திராவிட தெலுங்கு தலைவர்களை பெரிதாக போட்டு முக்கியதுவம் கொடுப்பது… இந்த நிலை என்று மாறும்.

  7. வே.தொல்காப்பியன் says:

    தில்லையின் குரல் இன்றைய நிலையில் அவசியமான விழிப்புக் குரல். ஒற்றுமைக்காகக் குரல் கொடுப்பதுடன் ஒரு செயல் திட்டத்தை நாம் முன் வைக்க வேண்டும்.

    இன்று பல இயக்கங்களாகப் பிரிந்துள்ள தமிழ் மொழி, இன, நாட்டு நல நோக்கமுள்ள கட்சிகள், இயக்கங்கள் சேர்ந்து ஒரு பொது வேலைத் திட்டத்தை (அதில் காவிரி, பெரியாறு, இராமேசுவரம் மீனவர் அவலம், ஐந்தாவது வரை அனைத்துப் பள்ளிகளிமும் கட்டாய‌தமிழ் மொழிக் கல்வி…) வகுத்துக் கொண்டு அதற்கான ஒரு வேலைக் குழுவை அமைத்துக் கொண்டு செயல் பட வேண்டும் என்று நம்மைப் போன்றோர் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

    நம் ஆதரவு அவர்களின் வெற்று மேடைப் பேச்சு, முழக்கத்தால் அவர்களுக்குக் கிடைத்து விட அனுமதிக்கக் கூடாது. பேச்சு, நடத்தப்பட‌க் கூடிய உடனடிச் செயலாக ஆவதைப் பொறுத்தே ஆதரவு வழங்க வேண்டும்.

    அவர்கள் தேர்தல் அரசியலை விட வேண்டும் என்று நாம் நடக்க முடியாத எதிர்பார்ப்பைக் கொண்டிருக்கக் கூடாது. எடுத்துக்காட்டாக, வைகோ மதிமுக வை அமைத்த போது அது தேர்தல் அரசியலில் ஈடுபடாமல் (அவருக்கே அந்தத் தெளிவு இருக்கிறதா என்பது கேள்விக் குறி) சமூகச் சீர்திருத்தத்திற்கு உழைக்கும் என்று அறிவித்து இருந்தால் பலர் திமுக விலிருந்து வெளி வந்து சேர்ந்திருக்க மாட்டார்கள்.

    நாம் செய்யும் நடைமுறை சாத்தியமான சமரசப் போக்கு வழுக்கலாக ஆகி விடக் கூடாது. கடந்த காலத்தில் அப்படியான விழிப்புணர்வு இல்லாததால் நாம் வழுக்குவதைக் கூட மறுத்துக் கொண்டு மயக்கத்தில் இருந்தோம். அதற்கு நமக்கு இலக்கைப் பற்றிய தெளிவும் உறுதியும் தேவை.

    அடுத்தப் பொதுத் தேர்தலில் நாம் (பல சிறு சிறு இயக்கங்கள் தமிழ்நாட்டிற்குளிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் இப்படித் தீர்மானம் இயற்றி அனுப்பலாம்) இதை நடைமுறைப் படுத்த இப்போதே கூடிக் க்லந்து சிந்திக்க வேண்டும்; மற்ற சிறு சிறு இயக்கங்கள், குழுக்களையும் வேண்டி ஆதரவு திரட்ட வேண்$டும்.

    நெருக்கடிதான் மனிதனை (அரசியல்வாதிகள் உள்பட) மாற்றும். அதை உறுதியாகப் பக்குவமாகச் செய்ய வேண்டியது நம் மக்களாட்சிப் பொறுப்பு. அதில் நாம் தவறு செய்து கற்றுக் கொள்ள வேண்டியிருக்கும்.

    • kondrai vendhan says:

      தோழர் தொல்காப்பியன் அவர்கள், தேர்தல் அரசியலை கைவிட வேண்டும் என்று அவர்களுக்கு இயலாத ஒன்றை நெருக்கடியாக கொடுக்கக் கூடாது என்று சொல்வது அவரது முழுமையான கருத்துரையின் சாரத்தில்லிருந்து மாறுபடுவது போல உணர்கிறேன். இருப்பினும் அய்யா வைகோ அவர்கள் கூட கால நெருக்கடியால் தேர்தலை புறக்கணிக்கும் நிலைக்குட்பட்டார் என்பது வரலாற்றில் பதிவாகிவிட்டது. தற்போது ஓட்டு அரசியல் தான் நம்மை கூர் மழுங்கடிக்கச் செய்கிறது என்றால் மிகையல்ல. சீமான் போன்றவர்களும் ஓட்டு அரசியல் முகவர்கள் ஆனால் பின் நாம் ஓட்டு அரசியல் என்ற வட்டத்தில் இருந்து வெளிவர முடியாது. அது தான் நம் இனத்திற்கு ஒட்டுமொத்த சவப் பெட்டி. இப்போது வெளியில் இருக்கும் உணர்வாளர்களின் கடமை, தமிழர்கள் எதிர்கொண்டிருக்கும் நெருக்கடிக்கு ஓட்டு அரசியல் தீர்வல்ல, கூடங்குளத்தில் வாக்காளர் அட்டையை தூக்கி எறிந்தது போல் எட்டு கோடி தமிழர்களும் தூக்கி எறியத்தான் வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும். இதனை தொல்காப்பியன் போன்ற சிந்தனையாளர்களும் உணர வேண்டும் நன்றி.

      • வே.தொல்காப்பியன் says:

        தோழர் கொன்றை வேந்தன் கருத்து சரியே. அதே சமயம் மூன்றாவது அணி தானாக உருவாகி விடாது. அதை உருவாக்குவதில் நம் பங்கை ஆற்ற வேண்டும். தேர்தல் அரசியல் மீது நமக்கு வெறுப்பு தேவையில்லை. அதை விடச் செம்மையான முறையை யாரும் முன்வைத்ததாகத் தெரியவில்லை. அது வரை இம்முறையில் உள்ள குறைகளைக் களைந்து செல்லத்தானே வேண்டும்?

        தோழர் இக்கீழ்க்கண்ட வலைப் பதிவைப் படித்துக் (அப்பதிவின் கீழ்) கருத்து தெரிவிக்கலாம்.

        வாழும் இயக்கம் வழுக்கா இயக்கம்
        http://tholthamiz.blogspot.co.uk/2011/03/blog-post_24.html

  8. விவேக் says:

    மிக அருமை. தமிழ் உணர்வாளர்கள் படித்து உணர வேண்டிய பதிவு.

  9. arun says:

    அருமை.

  10. tamil says:

    அருமை.அற்புதம்.

அதிகம் படித்தது