மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

திராவிட அரசியலின் அடுத்த கட்டமே தமிழ்தேசியம்

ஆச்சாரி

Dec 21, 2013

2009 ஆண்டிற்கு பின் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கும் புதிய அரசியல் மாற்றங்கள் அதில் இன்று மலர்ந்திருக்கும் தமிழ்தேசிய கொள்கைகளும் அதில் உள்ள சில கொள்கை ரீதியான குழப்பங்களை இன்று ஆராயும் தருணத்தில் உள்ளோம். உலகில் எந்த ஒரு போராட்டங்களும் அதை நடத்திய இயக்கங்களும் தேவையை சார்ந்தே  மலர்ந்துள்ளன. இதில் அவர்கள் போராட்டத்தின் முறை என்பதை போராட்டத்தின் காலமும், சூழ்நிலைகளே தீர்மானித்துள்ளன.அப்படியான சூழ்நிலைகளால் வடிவமைக்க பட்ட ஒரு அரசியல் சமூக இயக்கம் தான் திராவிட அரசியல்.

திராவிட அரசியலின் தொடக்கம் என்பது அடிமைப்பட்ட இந்தியாவின் காலத்திலே நீதிக்கட்சி என்ற பெயரில்1919இல் தொடங்கப்பட்டது. அன்று மதராசு மாகாணத்தின் அரசு பதவிகளில் இருந்த பிராமணர்கள் தங்களுக்கும் தங்கள் சமூகத்துக்கும் தேவையான வற்றை தாங்கள் ஆங்கிலேயர்களிடம் உள்ள நெருக்கத்தினை பயன்படுத்தி பெற்றுக்கொண்டனர். 3% சதவீதத்துக்கும் கீழான மக்கள் தொகையை கொண்ட பிராமணர்கள் பதவிகளை பெறுவது பிராமணர் அல்லாத பிற்படுத்த மக்களுக்கு பாதிப்பாக கருதப்பட்டதால் பிராமணர் அல்லாதவர்களின் நலம் பெற தொடங்கப்பட்ட இயக்கமே பின்னாளில் பெரியாரின் வரவால் பிராமண எதிர்ப்பு இயக்கமாக திராவிடர் கழகம் என்று 1944 மாற்றப்பட்டது.

பெரியாரின் கொள்கையில் மூன்று முதன்மையான கொள்கைகள் அது

    கடவுள் மறுப்பு

பார்ப்பனர் எதிர்ப்பு

சாதிய ஒழிப்பு.

அவரின் கொள்கைகள் எந்த அளவு மக்களை அடைந்தது ?

கடவுள் மறுப்பு 

பெரியார் பார்ப்பனர்களை எதிர்ப்பதற்காகவே நாத்திகத்தை கடைபிடித்தார். மூடநம்பிக்கைகளை ஒழிப்பதற்கும், சமூக அறிவு, விஞ்ஞான அறிவு, விழிப்புணர்ச்சி வளர்ப்பதர்க்கும் கடவுள் எதிர்ப்பை பயன்படுத்தினார். கல்வி அறிவு குறைவாக  மூடநம்பிக்கைகள் அதிகம் இருந்த காலங்களில் அது மிகப்பெரிய வெற்றி பெற்றது. அது காலத்திற்கு மிகவும் தேவைப் பட்டதாக இருந்தது. இதில் குறிப்பிடத்தக்கது அவர் பார்ப்பனர்களின் இந்து மத வழிபாடுகளையே சாடினார். சாதாரண மக்களின் வழிபாடுகளை அவர் எதிர்த்ததில்லை.

பார்ப்பனர் எதிர்ப்பு

இது தமிழ் சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களை ஒன்றிணைத்து ஒரு வலிமையான போராட்டமாக மாறியது. இதுவே பார்ப்பனர் அல்லாதவர்கள் பிற்காலத்தில் இடஒதுக்கீட்டில் கல்வி, வேலை வாய்ப்பு போன்றவற்றில் முதன்மைபெற உதவியது. நெல்லுக்கு பாய்ந்தது புல்லுக்கும் பாய்ந்தது போல் இதில் தாழ்த்தப்பட்ட மக்களும் பயன்பட்டனர்.

சாதி ஒழிப்பு

கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் பயன்பெற்ற தலித் மக்கள் சமூகரீதியாக சாதிய ஏற்றத் தாழ்வில் இருந்து இன்றும் விடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் பெரியார் தொடங்கிய திராவிட அரசியலின் சாதிய ஒழிப்பு மிகப்பெரிய தோல்வி என்பதை மறுக்கமுடியாது. இதற்கு முதன்மையான காரணம் பின்னால் வந்த சுயநலம் கொண்ட திராவிட அரசியல்வாதிகள் என்றாலும் பெரியாரின் சாதிய ஒழிப்பு சமூகரீதியாக தமிழர்களிடத்தில் எடுபடவில்லை. அதற்கு காரணம் சாதியம் தமிழகத்தில் பண்பாடாகவே மக்களிடத்தில் வளர்ந்திருந்தது.

எதிர்ப்பு, ஒழிப்பு, மறுப்பு இவையே பெரியாரின் அரசியல் வழிமுறை. இதுவே மக்களிடம் அதிகம் கவனத்தை ஈர்த்தது. இவையே பெரியாரின் அரசியல் வெற்றி.

1960 களில் அண்ணாவின் கீழ் திராவிட முன்னேற்ற கழகம் பெரியாரின் கொள்கைக்கு சற்று முரணாக மாறுபட்ட அரசியல் கொள்கைகளை கொண்டுவந்தது. அந்த வகையில் ஒன்றே குலம் ஒருவனே தேவன்  என்ற நாத்திகத்துக்கு மாறான கொள்கைகள், தமிழ் மொழியை முன்னிறுத்தி மொழி உணர்வு மிக்க அரசியல் இயக்கமாக இருந்தது. படிப்படியாக அதுவே இன உணர்வு கொண்ட இன்றைய தமிழ்தேசிய அரசியல் போல்  மலர வேண்டிய சூழலில் பழம் நழுவி சேற்றில் விழுந்தது போல் அது கருணாநிதி கைக்கு சென்று தடம் மாறிப்போனது.

அண்ணாவிற்கு பிறகு திராவிட முன்னேற்ற கழகம் கொள்கை அளவில் அது பெரியாரியத்தை பின்பற்றியதா அண்ணாவை பின்பற்றியதா என்பது கருணாநிதிக்கும் அவரின் அப்பாவி தொண்டர்களுக்குமே வெளிச்சம். கருணாநிதியைப் பொருத்தவரை அவரின் முதல்கொள்கை பதவி. அதனால் அவர் கொள்கைகளுக்கு பெரிய அளவில் அழுத்தம் கொடுத்ததில்லை. தமிழகத்தில் சாதி சங்கமும் சாதியரீதியான அரசியல் வளர்ந்ததுக்கு கருணாநிதி ஒரு காரணம். திராவிட கட்சிகள் 1964 இல் ஆட்சியை பிடிப்பதற்கு பக்க பலமாக இருந்தவர்கள் தமிழகத்தில் இருந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த தொழில் அதிபர்கள் மற்றும் விவசாயிகள். இவர்களின் பலத்தால் ஆட்சியை பிடித்த திமுக பிற்காலத்தில் தங்கள் அரசியலை பிற்படுத்தப்பட்ட மக்களின் தேவையை ஒட்டியே நடத்தியது. அந்த வழியிலே கருணாநிதி பல சாதிச்சங்கத்தை தமிழகத்தில் ஆதரித்தார். சாதிச் சங்கமும் திராவிட அரசியலும் கை கோர்த்து நடை போட்டன.

இப்படி திராவிட அரசியலின் வரலாற்றை புரட்டாமல் இன்று தமிழ் தேசியம் பேசுபவர்கள் பெரியாரை குற்றம் சொல்கின்றனர். பெரியார் தமிழ் இன உணர்வு அரசியலை ஆதரிக்கவில்லை என்று குற்றம் சாட்டுபவர்கள் தெரிந்துகொள்ளவேண்டியது. பெரியாரின் அரசியல் கொள்கையில் நம்பிக்கை முறைகளுக்கு(Believe System) அவர் என்றும் இடம் கொடுத்ததில்லை. ஒரு பக்கம் கடவுள் மறுப்பு மறுபக்கம் நம்பிக்கை முறையை ஒட்டிய தமிழர் பண்பாட்டை ஆதரிப்பது என்பது கொள்கை முரணாகவே இருந்திருக்கும். அது நேர்மையான  நிலைப்பாடாக இருந்திருக்காது.

பார்ப்பனர் எதிர்ப்பு என்பது ஒரு இனவெறி போராட்டம் அல்லது நேர்மையற்ற போராட்டம் என்கிறவர்கள் உலகில் எந்த போராட்டம் மிக நேர்மையாக மிகச்சரியாக (There is no perfect revolution in history) நடந்தது என்று சொல்லட்டும்.நேதாஜி இனவெறி கொண்ட ஹிட்லருடன் சேர்ந்தே  இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்க முற்பட்டார். அந்த போராட்டம் நேர்மையானதா? நேர்மையானவர்கள் நேர்மை இல்லாத போராட்டத்தையும் நேர்மை இல்லாதவர்கள் நேர்மையான போராட்டத்தையும் இந்த உலக வரலாற்றில் நடத்தியுள்ளனர். இவை யாவும் காலத்தின் தேவை சூழல்களே தீர்மானிக்கின்றன.

திராவிட அரசியலின் இன்றைய தேவை என்ன?

திராவிட அரசியலின் தேவை 20 ஆண்டுகளுக்கு முன்பே முடிவடைந்துவிட்டன. இன்று தமிழ் மொழி உணர்வையும் இன உணர்வையும் முன்னிறுத்திய அரசியல் தேவைப்படுகிறது. இந்த அரசியல் திராவிட அரசியல் போட்ட வழித்தடங்களை புறக்கணிக்க வேண்டியதில்லை. மாறாக அந்த தடங்களை மேம்படுத்தி புதிய திசையில் பயணிக்கலாம்.

The advisor offers assistance to the student in http://essayprofs.com/ identifying a research advisor and committee members

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “திராவிட அரசியலின் அடுத்த கட்டமே தமிழ்தேசியம்”

அதிகம் படித்தது