மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

திரு. சுப.உதயகுமார் நேர்காணல்

ஆச்சாரி

Aug 1, 2012

நேர்காணல் சந்திப்பு – திரு.தில்லைக்குமரன்
நேர்காணல் பதிவு செய்தவர்  – திரு.அறிவன்

சிறகு: பத்திரிகைகளில் கூடங்குளம் போராட்டம் முடிந்து விட்டது என்று செய்தி வெளியிடுகிறார்கள். இங்கு வந்து பார்த்தால் போராட்டம் தொடர்கிறது. இப்போது இந்தப் போராட்டத்தில் உள்ள நிலை என்ன?

திரு.உதயகுமார்: இன்று (23.7.2012) 343 -வது நாளாக போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்போது உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. காலை பத்து மணிக்கு இங்கிருக்கும் ஆண்கள் பெண்கள் எல்லாம் வருவார்கள். நான்கு மணிக்கு முடிப்போம். இது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்று ஒரு பகுதி மக்கள் நாளை இன்னொரு பகுதி மக்கள் வருவார்கள். மார்ச் மாதம் 19 ஆம் தேதி தமிழக அரசு தன்னுடைய நிலையை மாற்றிய பிறகு நாங்கள் தெருவில் இறங்கி போராட்டம் நடத்தவில்லை. 144 தடை உத்தரவு இருக்கிறது. காவல்துறை அனுமதி கிடைப்பது மிகவும் கடினம். பல்லாயிரக்கணக்கான இந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்கிறார்கள். அடுத்து ஜூலை மாதம் ஒன்றாம் தேதி தமிழக சில கட்சிகள், தமிழ் இயக்கங்கள் வந்து இங்கு ஒரு மாநாடு நடத்தினோம். இப்போது எங்கள் கவனம் முழுதும் அறிவுத் தளத்தில்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. சென்னை உயர்நீதி மன்றத்தில் பல வழக்குகள் நடைபெற்று வருகிறது. அதற்கான தகவல்களைத் திரட்டுவது, கொடுப்பது இந்தப் பணிகளை செய்து கொண்டிருக்கிறோம். மத்திய தகவல் ஆணையத்திடம் முறையிட்டு இந்தக் கூடங்குளம் அணுமின் நிலையத்தைப் பற்றிய அடிப்படை தகவல்களை தர வேண்டும் என்று ஒரு ஆணை நாங்கள் வாங்கியிருக்கிறோம். அந்த ஆணையை அணுசக்தித் துறை மதிக்கவில்லை. அந்தத் தகவல்களைப் பெறுவதற்காக டெல்லி உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறோம். இப்படி நீதிமன்றம் வழியாக பல வழக்குகள் மூலம் பெறுவதற்கு முயற்சி செய்துகொண்டிருக்கிறோம்.

அதைப்போல தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்ற ஆயுதத்தைக் கையிலெடுத்து பலவிதமான தகவல்கள் எங்கள் உரிமைகளை நிலைநாட்டுவதற்கும், இங்கு நடக்கும் கபட நாடகங்களை அம்பலப்படுத்தும் விதமாகவும் பல தகவல்களை நாங்கள் வாங்கியிருக்கிறோம். உதாரணமாக தேசிய பேரிடர் மேலாண்மையிடம், ஒரு அணுமின் நிலையத்தை தொடங்குவதற்கு முன் அந்தப் பகுதி மக்களை தயார்படுத்துவதற்கு என்னவிதமான நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள் என்று கேட்டோம். அப்படி ஒரு கொள்கையே கிடையாது என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பதில் அளித்திருக்கிறார்கள். கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 92 குழந்தைகளைக் காவு கொடுத்த பிறகுதான் எல்லா பள்ளிகளிலும் தீ அணைப்பு பயிற்சி கொடுக்க வேண்டும் என்று சொன்ன நாடு நம் நாடு. தத்தநேரி என்ற கிராமத்தில் ஒரு நாடகம் நடத்தினார்கள். அதில் மாவட்ட ஆட்சியர் மற்றும் சிலர் போய், நாங்கள் பேரிடர் பயிற்சி நடத்தி விட்டோம், அந்த மக்களை நாங்கள் தயார்படுத்தி விட்டோம், அடுத்த நாடகம் 2014 ஆண்டு நடக்கும் என்று கூறியிருக்கிறார்கள். இது போல நடத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது. போபாலில் எல்லா மக்களுக்கும் ஒரு விபத்து நடந்தால் ஈரத் துணியால் மூக்கையும் வாயையும் மூடிக் கொண்டால் நச்சு வாயு பாதிக்காது என்று சொல்லி கொடுத்திருந்தால் நிறைய பேரை காப்பாற்றி இருக்க முடியும். அதனால் இந்தப் பகுதி மக்களை அதைப் போல தயார் படுத்த வேண்டும், அதற்கான தகவல் சமந்தமான பணிகள் இப்போது நடைபெறுகிறது.

சிறகு: பல்லாயிரக் கோடிக்கணக்கில் ஒரு அணுமின் நிலையத்தைக் கட்டுமானம் செய்து விட்டு அங்கு வாழும் மக்களுக்கு தற்பாதுகாப்பு, விபத்து ஏற்பட்டால் எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பதைக் கூட சொல்லித் தரமாட்டோம் என்பது வெட்கமானது, வேதனையானது. அந்தப் பயிற்சியை சொல்லிக் கொடுப்பதில் அவர்களுக்கு என்ன தயக்கம்?

திரு.உதயகுமார்: இப்போதுள்ள மத்திய அரசும், மாநில அரசும், இந்தியாவில் இயங்கும் பல அரசியல் கட்சிகளும் சரி மக்களுக்காக நடத்தப்படவில்லை. ஒரு கொள்ளைக் கூட்டமாக அந்தந்த இயக்கங்களுக்காக இயக்கத் தலைவர்களுக்காக வேலை செய்கிறார்கள், அதற்காக சிந்திக்கிறார்கள். உண்மையிலேயே மக்களுக்க்க வேலை செய்யக்கூடிய தலைவராகவோ இயக்கமாகவோ இருந்தால் மக்கள் நலனை முன்னிலைப்படுத்தக் கூடிய இயக்கமாக இருந்தால் நிச்சயமாக மக்களுக்கு உதவி செய்வார்கள். இந்தியாவில் யாரும் அப்படிக் கிடையாது. இவர்களுக்கு வேண்டியது கமிஷன். 14,000 கோடிதிட்டம் என்றால் அதில் யில் சதவிகிதம் என்றால் எவ்வளவு வருகிறது, அதை எப்படி எடுப்பது, தலைமைக்கு எப்படி கப்பம் கட்டுவது கட்டுவது இது போன்ற ஒரு அமைப்புதான் இந்தியாவில் இருப்பதால் எந்தத் தலைவரும் எந்த இயக்கமும் மக்கள் நலனை முன்னிலைப்படுத்தி ஆட்சி நடத்துவதாக நான் நினைக்கவில்லை. சில தலைவர்கள் இருக்கிறார்கள், இயக்கங்கள் இருக்கின்றன. ஆனால் அவர்கள் பதவிக்கு வராதவர்கள். ஒருவேளை பதவிக்கு வந்தால் அவர்களும் அப்படி மாறிவிடுவார்களோ என்னவோ.

சிறகு:  நான் நண்பர்களிடம் கூடங்குளம் அணு உலைக்கு எதிராக பேசும்போது வெறும் இந்து, தினமலர் போன்ற பத்திரிகைள் மட்டும் படிக்கும் சில நண்பர்கள், மின்சாரம் தமிழ்நாட்டில் இல்லை, உனக்குத் தெரியாது நீ வெளிநாட்டில் இருக்கிறாய். இங்கு துன்பப்படுவது நாங்கள்தான். மூன்று, நான்கு மணி நேரம் மின்சாரத் தடை ஏற்படுகிறது. கூடங்குளம் அணுமின் நிலையம் வந்தால் அந்த மின்சாரத் தடை நீங்கிவிடுமே என்று சொல்கிறார்கள். அவர்களுக்கு உங்கள் பதில் என்ன?

திரு.உதயகுமார்: இந்த நிலைப்பாடுகளுக்குப் பின்னால் ஒரு சாதிய, இன வெறி இருப்பதாக நான் நினைக்கிறேன். பொருளாதாரக் கட்டமைப்பு அப்படி இருக்கிறது. மின்சாரத்தை இடிந்தகரை மக்களுக்கு கொடுக்கவோ, கூடங்குளம் மக்களுக்குக் கொடுக்கவோ இல்லை. இந்த மின்சாரம் விமான நிலையங்களுக்கு எப்போதும் மின்சாரம் வேண்டும், பெரிய பெரிய விளம்பரப் பலகைகளுக்கு மின்சாரம் வேண்டும். ஏழை, சாதாரண, பாமர மக்களை துன்பப்படுத்தியாவது மேட்டுக்குடியினரின் வாழ்க்கை முறையை தூக்கிப் பிடிப்பதுதான் இங்குள்ள பொருளாதார சிந்தாதந்தம். இதுவரை மேட்டுக் குடியினரான பணக்காரர்கள், மற்ற சிலர் இவர்கள் எடுக்கும் முடிவுகளை மற்றவர்கள் கேட்டு, கை கட்டி வாய் பொத்தி அவர்கள் பின்னால் போய்க் கொண்டிருந்தோம். இப்போது திடீரென்று மீன் பிடிப்பவர்கள், நாடார்கள், முஸ்லிம்கள், தலித் மக்கள் எல்லாம் இவர்களாகவே சிந்தித்து ஒரு நிலைப்பாடு எடுத்து இந்தத் திட்டத்தை நிறுத்துகிறார்கள் என்றால் அதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும், எப்படி அனுமதிக்க முடியும், இதை விட்டால் பேராபத்து ஆகிவிடுமே- எங்கள் கட்டுக்குள்தான் நீங்கள் இருக்க வேண்டும், நாங்கள் சொல்வதை நீங்கள் கேளுங்கள், நீங்கள் சொல்வதை நாங்கள் கேட்க மாட்டோம் என்ற இது போன்ற சிந்தனைதான் காரணம்.

சிறகு: கிராம மக்களை சிந்திக்காமல் நகரத்தில் இருப்போர் குளிர்சாதன வசதி உள்ள அறையில் இருக்க வேண்டும் என்றுதான் இடிந்தகரை, கூடங்குளம் மற்றும் சுற்றியுள்ள மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கிறார்கள்.

திரு.உதயகுமார்: இதுதான் இந்தியா முழுதும் சோக்கால் வளர்ச்சித் திட்டங்களில் ஆதிவாசி மக்களும் விவசாயிகளும் தலித் மக்களும் ஒரு நிலைப்பாடு எடுத்தால், உங்களுக்காக நீங்கள் போராடக் கூடாது, எங்கள் மேட்டுக் குடியினருக்குத் தெரியும் நாட்டுக்கு எது நல்லது எது கேட்டது என்று. நாங்கள் சொல்கிறபடி கேட்டுக் கொண்டு எங்கள் பின்னால் வாருங்கள் என்பார்கள். இப்போது மக்கள் நாங்கள் வரமுடியாது என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.

சிறகு: இந்தப் போராட்டத்தில் எத்தனை கிராமத்தில் இருந்து எவ்வளவு மக்கள் கலந்து கொள்கிறார்கள்?

திரு.உதயகுமார்: நாங்கள் பெரிய கூட்டம் நடத்துவதில்லை. ஜூலை ஒன்றாம் தேதி மாநாடு நடத்தினோம். ஏறத்தாழ பத்தாயிரம் மக்கள் வந்தார்கள். கடலோர மக்கள் வருகிறார்கள். கூத்தங்குடி, பெருமணல், மணப்பாடு, இடிந்தகரை, பெரியதாழை கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்ட கடலோர மக்கள் வருகிறார்கள். உள்பகுதியில் உள்ள மக்கள் அதிகம் வருகிறார்கள். நாடார், தலித், முஸ்லிம் மக்கள் அதிகம் பேர் வருகிறார்கள். இத்தனை கிராமங்கள் என்று குறிப்பிட்டு சொல்ல முடியாது. எல்லா கிராமங்களில் இருந்தும் மக்கள் வருகிறார்கள். தமிழகம் முழுக்கவும், மற்ற மாநிலத்தில் இருந்தும் வருகிறார்கள். அதி தீவிரமாக கலந்து கொள்ளும் மக்கள் கடலோர மக்களும் உட்பகுதி மக்களும்தான்.

சிறகு: ஊடகங்கள் மக்களுக்கு, சினிமா, மதம், இப்போது ஐ.பி.எல். போன்ற போதைகளை ஊட்டி அதற்குள்ளேயே வைத்திருக்க வேண்டும், சிந்திக்கக் கூடாது என்பதால் இந்தப் போராட்டம் பற்றி எதுவும் வெளியிடுவதில்லை. ஆனால் எதிரான செய்திகள் வந்துகொண்டுதான் இருக்கிறது. சில அபாண்டமான குற்றச்சாட்டுகளைக் கூறுகிறார்கள். அதைப்பற்றி?

திரு.உதயகுமார்: சில ஊடகங்கள் நமக்கு ஆதரவாக இருக்கிறார்கள். நம் செய்திகளை வெளியிடுகிறார்கள். முழுக்கு எல்லோரையும் குற்றம் சொல்ல முடியாது. ஆனால் சில ஊடகங்கள் எந்தவிதமான தனித்தன்மையும்  இல்லாமல் காசுக்காக மட்டுமே நடத்தக்கூடிய ஊடகங்கள் நிறைய உள்ளன. பன்னாட்டு நிறுவன பணத்துக்காக இந்திய அரசு தரும் விளம்பரத்துக்காக உரிமையாளரின் நலனை பாதுகாக்க மட்டுமே நடத்தக்கூடிய பத்திரிகைகள். தினமலர் ஒரு பத்திரிகையே அல்ல. அது ஒரு மஞ்சள் பத்திரிகை. அவர்களின் குற்றச்சாட்டுகளை யாரும் பெரியதாக எடுத்துக் கொள்வதில்லை. அதனால் அதுபோன்ற ஊடகங்கள் பற்றி நாங்கள் கவலைப்படுவதில்லை. ஊடகங்கள் இன்னும் கொஞ்சம் ஆதரவு கொடுக்கலாம். ஆனால் அவர்களுக்கு அரசாங்கம் பெரிய நெருக்கடிகளைக் கொடுத்துப் பணியவைக்கிறார்கள். அதனால் அவர்களும் கொஞ்சம் பயப்பட வேண்டியிருக்கிறது. விளம்பரம் கொடுக்கவில்லை என்றால் வருமானத்தை இழக்க வேண்டிய நிலை வரும். வருமான வரி அதிகாரிகள் மூலம் தொந்தரவு கொடுப்பார்கள். எனவே அவர்கள் நிறைய விஷயங்களை பார்க்க வேண்டியுள்ளது.

சிறகு:  இந்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் அணு சக்தி கழகத்துக்கும் நீங்கள் வைக்கும் கோரிக்கைகள் என்ன?

திரு.உதயகுமார்: கூடங்குளம் அணுமின் நிலையத்தை நிரந்தரமாக முற்றிலுமாக மூட வேண்டும், கல்பாக்கம் அணுமின் நிலைய விரிவாக்கப் பணிகளை உடனே நிறுத்த வேண்டும், கல்பாக்கத்தையும் படிப்படியாக மூட வேண்டும். தமிழ் மண்ணில் அணுமின் நிலையங்களோ அணு ஆயுதத் தளங்களோ வேறு அணுசக்தி சமந்தப்பட்ட திட்டங்களோ இருக்கக் கூடாது என்பது எங்களின் ஆணித் தரமான கோரிக்கை. இதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் மார்ச் மாதம் தமிழக அரசு தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிய பிறகு, நாங்கள் வேண்டாம் என்று சொல்லாமல்- அவர்கள் வழியாகவே போய் –எங்களுக்கு அடிப்படைத் தகவல்களை கொடுங்கள், மக்கள் கருத்துகளைக் கேளுங்கள் –இந்தத் திட்டத்தால் பாதிக்கப்படும் மக்களின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். இதைத்தான் நாங்கள் கேட்கிறோம். அந்த நிலை வரும்போது தானாகவே இது இல்லாமல் போய்விடும். ஏனென்றால் மக்கள் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள். உண்மையான கருத்துக் கணிப்பு நடத்தினால்- கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை மக்களின்  கருத்துக்களைக் கேட்டால், அவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து திட்டம் தொடங்கப்படும் என்றால் நூறு சதவிகிதம் இந்தத் திட்டம் மூடப்படும். எங்களுக்குத் தெரியும். இது சட்டபூர்வ வழி. நாங்கள் எங்களுக்குப் பிடிக்கவில்லை, அதனால் திறக்காதே என்று சொல்லவில்லை. பாதிக்கப்படும் மக்களுக்கு என்ன பதில். பாம்பேயில் இருப்பவரும் பாண்டிச்சேரி நாராயணசாமியும் பாதுகாப்பாக உள்ளது என்று கூறுகிறார்கள். நீங்கள் வந்து இங்கு உட்காருங்கள். நாடாளுமன்றத்தை, செயலகத்தை இங்கு மாற்றுங்கள், மன்மோகன் சிங் இங்கு வந்து உட்காரட்டும். அடிப்படை தகவல்களை தரவில்லை. மத்திய தகவல் ஆணையம் சொல்கிறது, பாதுகாப்பு ஆய்வறிக்கை, சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை, தள ஆய்வறிக்கை போன்றவற்றை கனடா, பெர்லின், அமெரிக்கா போன்ற நாடுகள் இந்த அறிக்கைகளை இணையதளத்தில் வெளியிடுகிறார்கள், மக்கள் பார்க்க முடியும், இங்கும் அதைப்போல் செய்யுங்கள். உங்களுக்கு ரஷ்ய கம்பெனியின் முதலாளித்துவ தகவல்கள் இருந்தால் அந்தப் பக்கத்தை மட்டும் எடுத்துவிட்டு –ஏன் எடுத்தோம் என்று குறிப்பிட்டு இணைய தளத்தில் வெளியிடச் சொல்லி சைலேஷ் காந்தி அருமையான தீர்ப்பைக் கொடுத்திருக்கிறார். அதற்குப் பிறகும் இவர்கள் தர மறுக்கிறார்கள். இதை நீதிமன்ற அவமதிப்பாக டெல்லி உயர் நீதி மன்றத்தில் நாங்கள் வழக்கு தொடுத்திருக்கிறோம்.

சிறகு: சில ஊடகங்கள் மறைத்தாலும் உலகத் தமிழர்கள் இடிந்தகரையை கவனித்துக் கொண்டு வருகிறார்கள். போராட்டம் எல்லோருக்கும் தெரிகிறது. பல பெரிய பத்திரிகைகள் நிச்சயம் எழுதுவார்கள் என்று நம்பிக்கை இருக்கிறது. தமிழகம் உள்ளிட்ட உலக மக்கள் அனைவரும் மே பதினேழுக்குப் பிறகு ஒரு கொந்தளிப்பாக இருக்கிறார்கள். கண் முன்னால் நடந்தும் நம்மால் எதுவும் செய்ய முடியவில்லையே என்ற குற்ற உணர்ச்சியால் எழுந்து இருக்கிறார்கள். அந்த வரிசையில் ஒன்றுதான் சிறகு. இதுபோன்ற இளைஞர்களுக்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

திரு.உதயகுமார்: அதைப்போல் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்தபோது எதுவும் செய்ய முடியாத ஒரு அரசு தமிழகத்தில் நடந்து கொண்டிருந்தது. குளச்சலில் இருந்து நாகர்கோவிலுக்கு பாத யாத்திரை செல்ல காவல் துறையில் அனுமதி வாங்க மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது. கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பன்னிரண்டு நாட்கள் உண்ணாவிரதம் இருந்தோம். இப்படி எங்களால் முடிந்ததை செய்தாலும் எங்களுக்கு அதில் திருப்தி இல்லை. எதுவுமே செய்ய முடியாத கையறு நிலை தாங்க முடியாத அளவுக்கு இருந்தது. நம்மைக் கட்டிக் காக்க வேண்டிய டெல்லி அரசும் சென்னை அரசும் ராஜபக்சேவுக்கு உதவி செய்த கொடுமையை நினைக்கும்போது கோபமும் அதிகமான வருத்தமும் வெறுப்பும் மனதில் வந்தது. இதே உணர்வு தமிழர்கள் அனைவருக்கும் இருப்பது தெரிகிறது.

If you do this already, how could you improve on your practice https://justbuyessay.com

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

4 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “திரு. சுப.உதயகுமார் நேர்காணல்”
  1. சொக்கலிங்கம் says:

    நல்லதொரு பதிவு. வெளியிட்ட சிறகுக்கும், நேர்காணல் கண்ட திரு. தில்லைக்கும் மற்றும் பதிவு செய்த திரு. அறிவனுக்கும் நன்றி.

    திரு குனா,
    கூடங்குளம் நிலையம் திட்டமிட்ட பொழுதே பள்ளி மாணவர்கள் நாங்கள் சேர்ந்து இத்திட்டத்தை நிறுத்தக் கோரி பல்லாயிரக் கணக்கான மாணவர்கள் கையெழுத்திட்டு விண்ணப்பம் அனுப்பி வைத்தோம். அப்பொழுது திரு. உதயகுமார் போன்ற உன்னத தலைவர் இருந்திருந்தால் இந்த நிலைக்கு வந்திருக்காது.

  2. Guna says:

    கல்பக்கம் அனு மின் நிலயம் தொடங்கி பல வருடங்கள் அகிவிட்டது. அது போல் குடங்குளம் தொடங்கி பல வருடம் கழித்து ஏன் இப்பொழுது எல்லொரும் குறை சொல்கிறார்கள். ஏன்?

  3. தியாகு says:

    மிக அருமையான பதிவு. பேட்டி கண்ட திரு.தில்லை மற்றும் அறிவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

அதிகம் படித்தது