மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தும்பை விட்டு வாலைப் பிடிப்போம் – தமிழக மின்சார உற்பத்தி – ஓர் அலசல் – மீள் பதிவு

ஆச்சாரி

Sep 27, 2014

கடந்த 2012-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சுமார் ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு மின்கட்டணத்தை உயர்த்திய தமிழக அரசு, தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் 2014-15 நிதி ஆண்டிற்கான மின் கட்டண உயர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் ரூ.6,805 கோடி ரூபாய் அளவுக்கு மின் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறகில் 2012 நவம்பர் மாதம் மின் வெட்டு குறித்து வெளியிடப்பட்ட கட்டுரை இங்கு மீள்பதிவு செய்யப்படுகிறது.

“ராப்பூரா எளவு தூங்கவே முடிலங்க, இந்த போரிங் குழாய்ல தண்ணி விட்டு விட்டு வருமே, அந்த மாதிரி கரண்ட்ட விடுறாங்க. ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை ஆப் பண்றாங்க. ராத்தூக்கம் போய், குழந்தைங்க பள்ளிக்கூடத்துல பகல்லயே  தூங்கராங்களாம். எங்க நெசவு தொழிலு சீரழிஞ்சு ஆறு மாசத்துக்கு மேல ஆவுது. எப்பத்தான் விடிவு வருமோ இந்த கரண்ட்டு பிரச்சினைக்கு? நெசமா என்னதாங்க நடக்குது?” சலிப்போடு என்னிடம் கேட்டார் ஈரோட்டைச் சேர்ந்த ஒரு பெண்மணி. எனக்கு பதில் சொல்லத் தெரியவில்லை.

ஆமாம், உண்மையில்  என்னதான் நடக்கிறது?

தமிழ் நாட்டின்  மொத்த மின் உற்பத்தி சுமார் 7500 மெகாவாட். நாள் ஒன்றுக்கு தேவையோ 11500 மெகாவாட். ஆக, மின்  உற்பத்திக்கும் பயன்பாட்டிற்கும் உள்ள வித்தியாசம் சுமார் 4000 மெகாவாட். இந்த மிகப்பெரிய இடைவெளி திடீரென்று ஒரே நாளில் ஏற்பட்டு விடவில்லை. புதிய தொழிற்சாலைகளின் பெருக்கம்,  நகரமயமாதல், பெருகும் வணிக வளாகங்கள், மொத்த உள்நாட்ட  உற்பத்தி அதிகரிப்பு, அடுக்குமாடி கட்டிடங்கள் மற்றும் புதிய வீட்டு மின் இணைப்புக்கள்  என பல்வேறு  காரணிகள் உள்ளன. இவற்றை ஆராய்ந்து எதிர்காலத் தேவை எவ்வளவாக இருக்கும் என்பதைக் கணக்கிட்டு, அதற்கேற்ப நீண்ட காலத் திட்டங்களை தீட்டி செயல்படுத்தாததன் விளைவை, இப்போது நாம் ஒட்டு மொத்தமாக அனுபவிக்கிறோம்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் என்ற ஒரு அமைப்பு தமிழ் நாட்டில் இயங்குவது(???) அனைவருக்கும் தெரிந்ததே. இதன் கீழ், மாநில மின்சுமை பகுப்பு மையம் (State Load Despatch Centre – SLDC), மாநில மின்தொடர்ப் பணி நிறுவனம் (State Transmission Utility என்ற இரு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இவை இரண்டும் மாநில மின்திறன் அமைப்பின் இயக்கத்தை கண்காணித்து, உறுதிப்படுத்தும் உயர்மட்ட நிறுவனங்கள். இதில் முதலாம் அமைப்பின் முக்கியமான பணிகள், மாநிலத்தின் மொத்த மின்சாரத்தை, உற்பத்தி நிலையில் இருந்து, மாநிலம் முழுவதும் திட்டமிட்டு பகிர்ந்தளித்தல், மின்கட்டமைப்பு மற்றும் அதன் இயக்கங்களை கண்காணித்தல், வெளி மாநிலங்களுக்கிடையேயான மின்மேலாண்மை மற்றும் கட்டுப்பாட்டைச் செயல்படுத்துதல் என்று தமிழ்நாடு மின்சாரச் சட்டம் 2003 சொல்கிறது.

இரண்டாவது நிறுவனமான, மாநில மின்தொடர்ப் பணி நிறுவனத்தின் முக்கிய வேலை, மத்திய மின்சார அதிகார அமைப்பு (Central Electricity Authority) வெளியிடும் வழிகாட்டுதலின்படியும், தேசிய மின்திறன் திட்டங்களின் படியும், தமிழ்நாடு மின்சார வாரியத்தை திட்டமிட வைத்து, அத்திட்டங்களை ஒருங்கிணைத்து, மின்சார மெகாவாட்களை அதிகரிக்கச்  செய்வது. மின் உற்பத்தி நிலையங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் கொண்டு செல்லப்படும் மின்சாரத்தொடர்களை சிக்கனமாக ஒருங்கிணைத்து, மின் இழப்பை குறைப்பது.

இந்த இரண்டு நிறுவனங்களைத் தவிர, முக்கியமான குழு ஒன்று உள்ளது. ஒவ்வொரு ஆண்டும், மார்ச் 31ம்தேதியில் முடியும் நிதியாண்டை அடிப்படையாகக் கொண்டு, அடுத்த ஐந்தாண்டுக்கான மின் தேவையை மொத்தமாக கணக்கிட்டு, நெடுங்கால மின் திட்டங்களுக்கான  முன்கணிப்பை (Foresee Measurement) உருவாக்குவது. இந்த மூன்று அமைப்புக்களும் மிகச் சிறந்த நிர்வாக திறமையைக்கொண்டு, கடந்த ஐந்தாண்டுகளாய் உழைத்திருந்தால், ஒரு பேச்சுக்குத்தான் சொல்கிறேன், கடுமையாய் உழைத்திருந்தால், நாம் மின்மிகைமாநிலமாக குஜராத்தை போல் சுக வாழ்க்கை வாழ்ந்திருக்கலாம்.

ஏறக்குறைய 55000 கோடி ரூபாய் கடனில் சிக்கித்  தத்தளிக்கும் தமிழ்நாடு மின்சார வாரியம், கடந்த 2008ம் ஆண்டுக்கு பிறகு, புதிய அனல், புனல் என எந்த மின்திட்டங்களையும் தொடங்கவில்லை. ஒவ்வொரு ஆண்டும் 1000 மெகாவாட் உற்பத்திக்கான புதிய மின்திட்டங்கள் துவக்கப்பட்டால் ஒழிய, மின்வெட்டை தவிர்க்கமுடியாது. ஒரு அனல்  துவக்கப்பட்டால், அது உற்பத்தியை துவக்க குறைந்தது 4 ஆண்டுகள் ஆகும். கடந்த 5 வருடங்களாக இந்த மூன்று அமைப்புகளும் என்னதான் செய்துகொண்டு இருந்தன என்று தெரியவில்லை. இந்த மூன்று அமைப்புக்களை முடுக்கி, வேலை வாங்கவேண்டிய, இரு திராவிடக் கட்சிகளின் மின்சாரத் துறை அமைச்சர்கள் என்ன செய்துகொண்டிருந்தனர் என்றும் தெரியவில்லை.

2013ம் ஆண்டு இறுதியில் வல்லூர் (500MW), மேட்டூர் (500MW), தூத்துக்குடி (1000MW) மற்றும் எர்ணாவூரில் (600MW) அமைக்கப்பட்டுள்ள மின் நிலையங்களின் மூலமாக 2600 மெகாவாட் மின்சாரம் மட்டுமே கிடைக்கும். அதுவும், போர்க்கால அடிப்படையில், அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றினால். மீதி 1600 மெகாவாட்டுக்கு எங்கே போவது? அதற்குள் தேவை மேலும் அதிகரிக்கும். கூடங்குளம் போராட்டக்களமாகவே இருக்கப்போகிறது. காற்றில் இருந்து பெறலாம் என்றால் காற்றாலைமின்சாரம் என்பது, எல்லாக் காலங்களிலும் கிடைக்காது.

இன்னும் 4 ஆண்டுகளில் குஜராத்தில் அதானி (Adani), எஸ்ஸார் (Essar) போன்ற தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசுத் துறை மூலமாக மொத்தம் 27 மின்திட்டங்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளன. இதன் மின்சாரஉற்பத்தி எவ்வளவு தெரியுமா 24,516 மெகாவாட்கள்.  ஆனால், இன்னும் 8 ஆண்டுகளில், தமிழ்நாட்டில் தனியார் மற்றும் மின்சார வாரியத்தால் முடிவுற இருக்கும் 26 திட்டங்களின் மூலமாக, மொத்த மின்சாரஉற்பத்தி 17,675 மெகாவாட்கள் தான். அவர்கள் 4 ஆண்டுகளில் அடைவதை நம்மால் 8 ஆண்டுகளில்கூட எட்டமுடியவில்லை. கடந்த ஏப்ரலில், குஜராத் அரசு, சூரிய ஒளியில் 600 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க 3000 ஏக்கர் பரப்பளவில் சூரியஒளி மின்சாரப் பூங்கா (Solar Power Park) அமைத்து நாட்டுக்கு அர்ப்பணம் செய்தது. ஆசியாவிலேயே மிகப்பெரியப் பூங்காவான இது, நமது நாட்டின் மொத்த சூரிய ஒளி மின்சார உற்பத்தியில் (900MW) இரண்டு பங்கை தயாரிக்கிறது. குஜராத்தில் அடிக்கும் வெயில் தான் தமிழ் நாட்டிலும் அடிக்கிறது. காலம் தாழ்த்தி சூரிய ஒளி மின்சார உற்பத்தியை கையில் எடுத்துள்ளது. எனினும், இது வரவேற்கப்பட வேண்டியது. நம் மாநிலத்தை விட பரப்பளவிலும், மக்கள் தொகையிலும் சிறியதான குஜராத்தின் தொலைநோக்குப் பார்வைநமக்கு ஏன் இல்லை? இதற்கு வழி தான் என்ன?

நமது நாட்டின்  மின்சார சிக்கலில் ஒரு பெரிய, அவிழ்க்க இயலாத முடிச்சாக திகழ்வது, மின் கடத்தும் போது ஏற்படும் மின் இழப்பு தான்.  மேலை நாடுகளில் இந்த இழப்பு சுமார் 7 சதவீதம் என்றால், நமது மின் இழப்பு 35 முதல் 40 சதவீதம் வரை. மேலை நாடுகளில், நவீன தொழிற்நுட்பத்துடன் மின்கம்பி வடங்கள் நிலத்தின் அடியில் அமைக்கப்படுகின்றன. நாமோ, தலைக்கு மேல் கத்தியாக, கம்பங்களில் தொங்கவிட்டு கொண்டு இருக்கிறோம். அறுந்து விழாமல் இருப்பதற்காக கடினமான உலோகத்தை பயன்படுத்துவதால், இந்த அளவு மின் இழப்பு ஏற்படுகிறது. இந்த மின் இழப்புகளை குறைத்தாலே ஓரளவு நிலைமையை சீர் செய்ய முடியும். கூடங்குளம் அணு உலையின் கழிவுகளை பராமரிக்க மத்திய அரசு ஒதுக்கிய தொகை 1000 கோடி. இந்த தொகையில் தமிழ் நாட்டின் 25 சதவீதபகுதியில் மண்ணுக்கடியில் மின்தடங்கள் அமைத்துவிடலாம்.

நிலக்கரி வளம் மிகுந்த  நமக்கு உலகளவில் மூன்றாம் இடம். ஏறக்குறைய 65000 மில்லியன் டன் நிலக்கரி வளம் நம்மிடம் உள்ளது. அதில் நாம் 2 சதவீதம் தான் உற்பத்தி செய்துள்ளோம். நாம் தொடர்ந்து நிலக்கரியை உற்பத்தி செய்து கொண்டே இருந்தால் கூட, இன்னும் இரண்டு நூற்றாண்டுகளுக்கு தீராது. எனினும் நிலக்கரி பயன்பாட்டால், காற்றுமாசுபடுவதை தவிர்க்க முடியாது. தற்போது மேலை நாடுகளில் மேற்கொள்ளப்படும் “தூய கரி”( Clean Coal)  பரிசோதனையை நாமும் பயன்படுத்தினால், நிலக்கரி உற்பத்தியின் போது உருவாகும் நச்சு வாயுக்களும், கரித்துகள்களும் கட்டுப்படுத்தப்பட்டுவிடும். ஆகவே, முடிந்த அளவு துரிதமாக  மின் நிலையத் திட்டங்கள் துவக்கப்பட வேண்டும். அடர்ந்த காடுகளை விடுத்து, மற்ற இடங்களில் கிடைக்கும் நிலக்கரியை பயன்படுத்தி, மின்சாரம் தயாரிக்க வழிவகை செய்யப்பட வேண்டும். நம்மிடமே  நிலக்கரி வளம் குவிந்துகிடக்கும்போது, நாம் இந்தோனேசியா போன்ற அயல் நாடுகளில், தரம்குறைந்த நிலக்கரியை  இறக்குமதி செய்கிறோம். இதனால் அரசியல்வாதிகளுக்கு கொழுத்த லாபம். ஆனால், மின்சார உற்பத்தியில் தரம் குறைந்து பெருத்த நட்டம்.

சரி, அணு உலையையாவது எடுத்துக் கொள்ளலாம் என்றால், ஊழலின் ஊற்றுக்கண்ணே அது தான். அணு உலை அமைப்பது நாட்டின் ராணுவ ரகசியங்களோடு பின்னிப்பிணைந்தது என்பதால் அதில் முழு உண்மையும் வெளிவர வாய்ப்பில்லை. அதில் நடக்கும் ஊழல் ரகசியமாகவே இருக்கும் என்பது அரசியல்வாதிகளின் நம்பிக்கை. அதனால் தான், அணு உலை அமைப்பதில் அவர்களுக்கு அவ்வளவு ஆர்வம். இந்தியாவை பொறுத்தவரை, எந்த அணு உலையும், தனது முழுத் திறனுடன் மின்சாரம் உற்பத்தி செய்ததே இல்லை. 500 மெகாவாட் என்பார்கள். எப்போதும் இருநூறைக்கூட தாண்டாது. கேட்டால், யூரேனியப் பற்றாக்குறை என்பார்கள்.

இந்தப்  பிரச்சினையில  மத்திய அரசின் பங்கும் அதிகம். வடமாநிலங்களில் இருந்து மின்சாரத்தை கொண்டுவரும் மின்தொடர் பாதை (Transmission Corridor) போதுமானதாக இல்லை. தென்மாநிலங்கள்  அனைத்தும் இப்பாதையை பயன்படுத்துவதால், மிகக் குறைந்த அளவு மின்சாரத்தையே வட மாநிலங்களிடமிருந்து நம்மால் பெற முடிகிறது. குஜராத் அரசிடம் இருந்து 500 மெகாவாட் பெற ஒப்பந்தம் செய்திருந்தும், நாம் பெற முடிந்தது 235 மெகாவாட் மின்சாரம் தான். இந்த வகையான மின்தொடர் பாதைகளின் நிர்மாணத்தை போதுமான அளவில் செய்து, இந்தியா முழுவதையும் அவற்றோடு இணைக்க, மத்தியஅரசு உடனடி நடவடிக்கைகளை துவக்க வேண்டும். நுகர்வோரான நமக்கும் கூட மின்சாரச் சேமிப்பு பற்றிய விழிப்புணர்வு தேவை. வீட்டில், அலுவலகத்தில்அவசியம் இல்லாமல் மின்சாதனங்கள் இயங்காமல் பார்த்துகொள்வது, வெறும் ஆடம்பரத்திற்காக செலவிடப்படும் மின்சாரத்தை சேமிப்பது போன்ற முயற்சிகள் மேற்கொண்டால், 10 சதவீதம் வரை மின்சாரத்தை சேமிக்க முடியும். பெரிய வர்த்தக நிறுவனங்கள் முதற்கொண்டு சிறு கடைகள் வரை மின்சாரத்தை பெருத்த அளவில் செலவு செய்கின்றன, நிறுவனங்கள் மின்சார சிக்கனத்தை மேற்கொள்ளவேண்டும், விழாக்கள், மாநாடுகள் , கூட்டங்கள் போன்ற நிகழ்வுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரத்தை சம்பந்தப்பட்ட நபர்கள் தாமாகவே முன்வந்து குறைத்துக் கொள்ள வேண்டும். சென்னையில் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரமே வெட்டு, ஆனால் பிற மாவட்டங்களில் எட்டில் இருந்து பதினான்கு மணி நேர வெட்டு அமலில் உள்ளது, இதனால் மாணவர்களின் கல்வி, மருத்துவம், விவசாயம், சிறு தொழில் என்று சகலமும் பாதிப்பு அடைகின்றது. ஆகவே நாகரிகம் அடைந்த பொறுப்புள்ள குடிமக்கள் என்று நம்மை நாம் கருதிக் கொண்டால் மின்சார சிக்கனத்தை சிரமேற்கொண்டு கடைப்பிடிக்க வேண்டும்.

சேமிக்கப்படும் மின்சாரமும்  உற்பத்திக்கு சமம் தான்.


ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

4 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “தும்பை விட்டு வாலைப் பிடிப்போம் – தமிழக மின்சார உற்பத்தி – ஓர் அலசல் – மீள் பதிவு”
  1. sankarganesh says:

    nalla soonaga supar

  2. kondraivendhan says:

    கட்டுரையில் தமிழகத்தின் மின் தேவை குறித்தும் அதன் அளவு பெரிதாகி இருப்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ஒரு நிலக் கரிச் சுரங்கத்தை கனிம வளமாகக் கொண்டுள்ள ஒரு மாநிலம், அண்டை மாநிலங்களில் கையேந்தவும் உரிமையற்ற நிலைக்கு வந்துள்ள, உரிமை பறி போனதைக்குறித்தோ, அல்லது ஒருங்கிணைந்த இந்தியாவில் கருனாடகம், கேரளம் போன்ற மாநிலங்களில் எப்படி இந்தியாவில் இருந்துகொண்டே மின் வெட்டும் இல்லாமல், மின் தட்டுப்பாடும் இல்லாமல் இருக்கின்றன( இந்த அதிசயத்தை) என்பதை கட்டுரையில் எந்த தகவலும் இல்லாதது வருத்தம்.

  3. Anand says:

    நல்ல கட்டுரை.

  4. Narayanan says:

    ஏன் பெட்ரோல் மூலம் மின்சாரம், தேவைக்கேற்ப உற்பத்தி செய்யக்கூடாது – சிறிய அளவில்? பெட்ரோல் விலை அதிகம் தான். ஆனால் மின்சாரம் இழப்பு பல மடங்கு விலை அதிகமாயிற்றே. மேலும், பெட்ரோல் மூலம் மின்சாரத்திற்காக அதிக விலை/ சர்சார்ஜ் போடலாமே?

அதிகம் படித்தது