மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

துரித உணவுகளும் தொலைந்த தமிழர் ஆரோக்கியமும்

ஆச்சாரி

Jan 18, 2014

சிறகு இணைய இதழ் வாசகர்களை நான் மறுபடியும் இப்படைப்பின் மூலம் சந்திப்பதில் மகிழ்கிறேன். இன்று தமிழர்கள் பயன்படுத்தக்கூடிய உணவில் எத்தகைய உணவுகள் நம் உடலை உரமாக்கின, பண்படுத்தின, பலப்படுத்தின போன்ற விபரங்களை நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். முன்பு சிறப்பாக இருந்த தமிழ்ச் சமூகம் நல்ல உணவுகளை எடுத்து, அந்த உணவுகளின் மூலம் நல்ல உணர்வுகளைப் பெற்று, உணர்வை சிந்தனையாக மாற்றி, அந்தச் சிந்தனையை செயலாக மாற்றி அற்புதமான செயல்பாட்டுடன் விளங்கிய தமிழ்ச் சமூகம் இன்று காலத்தின் கட்டாயத்தில் சில உணவு முறை மாற்றத்தால் உடல் பலம் இழந்து, வலுவிழந்து நிற்கக்கூடிய நிலையினை நாம் பார்க்கிறோம்.

இதற்கான காரணங்கள் என்னவென்று ஆராயும் பொழுது, சமீபகாலமாக நம்மீது திணிக்கப்படுகின்ற ஒரு முறையற்ற, தவறான உணவுக் கலாச்சாரம் தென்படுகிறது. இந்தப் புதுவகை உணவுக் கலாச்சாரத்தில் துரித உணவுக் கலாச்சாரம் என்பது நம் வாழ்க்கை லட்சியங்களைத் தொலைக்கக்கூடிய அளவிற்கு, நம் கனவுகளை நோக்கிப் போகமுடியாத அளவிற்கு, நம் கைகளையும், கால்களையும் கட்டிப் போடக்கூடிய அளவிற்கு மேலை நாடுகளாலும், வளர்ந்த நாடுகளாலும் நம்மீது தொடர்ந்து திணிக்கப்படுகிறது.

அதனால் வலுவிழந்த ஒரு தமிழ்ச் சமூகத்தை உருவாக்கக்கூடிய அளவிற்கு பிற நாடுகளில் இருக்கக்கூடிய நிறுவனங்களும், ஆளும் வர்க்கத்தினரும் நம்மீது திணித்து வரும் சூழல் நிலவுகிறது. ஆனால் நாம் நம் விவசாயத்தை மறந்துவிட்டு, விவசாய உற்பத்தியை மறந்துவிட்டு, விவசாய உற்பத்திப் பொருட்கள் மூலம் கிடைக்கக்கூடிய உணவுப் பொருட்களின் தராதரத்தை மறந்துவிட்டு, இன்று நமக்கு மிக எளிமையாகக் கிடைக்கக்கூடிய உணவுகளை உண்டு வரும் ஒரு சோம்பல் நிலைக்கு தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

இதிலிருந்து நாம் மீளவேண்டும் என்பதற்காகத்தான் இந்த தலைப்பை நான் எடுத்திருக்கிறேன்.

சமீபத்தில் நம்மிடையே வாழ்ந்து மறைந்த நம்மாழ்வார் அவர்கள் இயற்கை விவசாயத்திற்காக நம்மிடையே எவ்வளவோ பாடுபட்டு சிறந்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மறைந்த நம்மாழ்வார் அவர்கள் செய்த களப்பணி மூலம் விவசாயத்தில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தார் என்றே கூற வேண்டும்.

திருப்பூர், ஈரோடு, கோயமுத்தூர், கரூர், தஞ்சை என்று தமிழ்நாட்டில் விவசாயம் சார்ந்த இடங்களில் எல்லாம் இயற்கை உரத்தைப் பயன்படுத்தி இயற்கை விவசாயத்தை சிறந்த முறையில் ஊக்குவித்தப் பெருமை அவரையே சாரும். இன்னும் நம்மோடு அவர் இருந்திருந்தால் விவசாயத்தில் வியக்கத்தக்க பல மாற்றங்களை உருவாக்கி இருப்பார். இவர் முக்கியமாக, தான் இறந்த பிறகு “ஊரைக்கெடுத்தவன் இங்கே உறங்குகிறான்” என்று தனது கல்லறையில் எழுதிவைக்கச் சொல்லி இருக்கிறார்.

சமுதாயத்திற்காகவும், இயற்கை மறுமலர்ச்சிக்காகவும் பாடுபட்டு இவரே, “ஊரைக்கெடுத்தவன் இங்கே உறங்குகிறான்” என்று எழுதி வைக்கச் சொன்னால், பல விசயங்களை சமுதாயத்தில் பாழ்படுத்திக் கொண்டிருக்கும் நமது இறப்பிற்குப் பின் என்ன எழுதுவது என்று சற்றே சிந்தியுங்கள். எதற்காக இதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன் என்றால் முழுக்க முழுக்க நம்மாழ்வார் அவர்கள் நம் மண்ணில் விளைந்த உணவுப் பொருட்களையே உண்டு வாழ்ந்தது போல் நாமும் அந்நிய நாட்டு நச்சு போன்ற ஆரோக்கியம் குறைந்த உணவுகளை உண்பதை விடுத்து, நம் தேகத்திற்கு நல்ல சத்தைத் தரக்கூடிய நம் நாட்டு உணவுப் பொருட்களை உண்டு வாழ்வதே சாலச் சிறந்ததாகும். இதனால் தமிழக விவசாயிகள் வளமும் பெறுவார்கள்.

தமிழனைத் தேடி பல அயல் நாட்டு உணவுப் பொருட்கள் வந்த வண்ணம் இருக்கிறது. இதில் உடல் நலத்திற்குப் பெரும் கேடு விளைவிக்கக் கூடியதே துரித உணவாகும். இதுமட்டுமல்லாது பீட்சா, பர்க்கர் என்று குளிர் நாட்டுக்காரன் உண்ண வேண்டிய ஆரோக்கியமற்ற உணவை இன்று வெப்ப நாட்டுக்காரர்களாகிய நாம் விரும்பி உண்டு வருவது நம் ஆயுளைக் குறைக்க அந்நியர் எடுத்த முயற்சி என்றே தெரிகிறது.

இந்த உடனடி உணவுகளைப் பற்றி 1937-லேயே ஜார்ஜ் ஆர்வல் என்ற நாவலாசிரியர் என்ன கூறுகிறார் என்றால், நீண்டகால நோக்கில் இதைப் பயன்படுத்தும் போது ”எந்திரத் துப்பாக்கிகளைவிட கொடிய ஆயுதங்களாக, பதனப்படுத்தப்பட்டு, டப்பாக்களில் அடைத்து விற்கப்படும் உணவுகளாக இது விளங்கும்“ என்று எச்சரிக்கிறார். இது முழுக்க முழுக்க ஒரு உண்மையான கூற்று என்றுதான் கூறவேண்டும்.

எந்திரத் துப்பாக்கியால் சுட்டால் கூட ஒரே முறையில் நம் உயிர் போய்விடும். ஆனால் தினசரி நம் உடலைக் கெடுக்கக்கூடிய உணர்வுகளைக் கெடுக்கக் கூடிய, இந்த துரித உணவுகளை உண்டு உண்டு தினசரி சாகக்கூடிய நிலையில் நாம் இருக்கிறோம். இந்த உணவை உண்டதும் நம் பசி அடங்கி விட்டதென்று நாம் நினைக்கலாம் இது உண்மைதான். இந்த உணவுகள் எல்லாமே நம் பசியை அடக்கக்கூடிய உணவுகளாக இருக்கிறதே ஒழிய, ருசியைத் தந்து பசியை அடக்கக்கூடிய உணவாகவும் இருக்கிறதே ஒழிய, நம் உடலுக்குத் தேவையான சத்துக்களை, ஊட்டத்தினை முழுமையாகக் கொடுக்கிறதா? என்றால் கண்டிப்பாக இல்லை என்றுதான் கூற வேண்டும்.

அன்றைய காலத்தில் தமிழருடைய உணவு, சிறந்த ஒரு உணவாக இருந்தது. காலையில் பார்த்தோமானால் நீர் ஆகாரம் குடிப்பார்கள். இந்த நீர் ஆகாரம் என்பது இரவு உண்டு மீந்த உணவில் நீரையும், கொஞ்சம் உப்பையும் போட்டு வைத்து காலையில் இந்நீரை அருந்துவதே இந்த நீராகாரம் ஆகும். இதை கிராமத்தில் “நீச்சுத் தண்ணி, கஞ்சித் தண்ணி, புளிச்ச தண்ணி” என்று அழைப்பர்.

இது உடலுக்கு ஆரோக்கியம் தரும் அமிர்தம் போன்ற நீராகும். இதை நம் முன்னோர்கள் அமிர்தம் என்றே அழைப்பார்கள். மதுரை வீரன் என்ற பழைய படத்தில் கலைவாணர் என்.எஸ். கிருட்டிணன் அவர்கள் பழைய சோற்றைச் சாப்பிட்டு விட்டு இறுதியில் இந்தக் கஞ்சித் தண்ணீரை எடுத்து அருந்திவிட்டு அருகில் அமர்ந்திருக்கும் தன் மனைவியிடம் கூறுவார் “ஏ…புள்ள இந்தத் தேனாமிர்தம் தேனாமிர்தம்னு சொல்றாங்களே, ஒருவேள இந்தத் தண்ணியத்தான் சொல்லிருப்பாங்களோ” என்பார் வேடிக்கையாக.

கிராமத்தில் உள்ளவர்கள் சின்ன வெங்காயத்தையும், இந்தக் கஞ்சித் தண்ணீரையும் உண்டு வருவதால் பல்வேறு நோய்கள் தீர்ந்து வருவதாக இன்றைய விஞ்ஞானம் கூடச் சொல்கிறது. சமீபத்தில் கூட அமெரிக்காவில் நடந்த ஒரு ஆய்வில் அவர்கள் கூறியதாவது “இந்தியர்களிடையே காலம்காலமாக பழக்கப்படுத்திவரும் நீர் ஆகாரத்தில் பல்வேறு சத்துக்கள் இருப்பதாக ஆராய்ந்து கூறினர்.

அதனால் அதிகாலையில் நீர் ஆகாரம் குடிக்கக்கூடிய மக்களுக்கு ரத்த அழுத்தம் வெகுவாகக் குறைவதாக அவர்கள் ஆய்வில் கூறியுள்ளனர். அதுபோல் மன அழத்தம், மனம் சார்ந்த பிரச்சனைகள் மட்டுமின்றி சிலருக்கு சக்கரை நோய் கூட இந்த நீர் ஆகாரத்தினால் கட்டுக்குள் வருவதாகவும், இதயநோய்கள் முழுமையாகத் தீர்வதாகவும் கூறியுள்ளனர்.

ஆறுமாத காலம் தொடர்ந்து இந்த நீர் ஆகாரத்தினை பருகி வருபவர்களுக்கு புற்றுநோய் போன்ற நோய்கள் சரியாகி விடுவதாகவும், இந்த அமெரிக்க ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. இது கூறியதற்குப் பிறகு நம் மக்களிடையே இந்த நீர் ஆகாரம் சார்ந்த விழிப்புணர்வு பெருகி உள்ளது என்றுதான் கூற வேண்டும்.

அன்று விவசாயம் செய்யக்கூடிய மக்கள்கூட்டம் நிறைய இருந்தது. இவர்கள் எல்லாருமே சின்ன வெங்காயம், நீர் ஆகாரத்தை உண்டு வளர்ந்தனர். மேலும் இவர்களின் மதிய உணவில் கேப்பைக்களி, புளிச்சக்கீரைகள் வெகுவாக இடம்பெற்றிருந்தது. கேப்பைக்களி(கேழ்வரகுக்களி) என்பது மிகத் திடமான ஒரு உணவாகும். இந்தத் திடமான உணவை உண்டு விவசாய வேலைகளைச் செய்யும் போது சோர்வு இல்லாமல் முழுமையான பணியாற்ற முடிந்தது.

அதுபோல் வேலையின் அடிப்படையில் நல்ல ஒரு உடல் திறத்தையும், இதுவே உடற்பயிற்சியாக மாறக்கூடிய நிலையில் அன்றைய விவசாயிகள் வாழ்வு இருந்தது. இதில் கேப்பைக் களியோடு, புளிச்சக்கீரையை சேர்த்து உண்டு வேலைசெய்யும் பொழுது, இவர்களுக்கு நரம்பு சம்பந்தமான நோய்கள் அகன்று மேலும் திறம்பட உழைக்கக் கூடிய சக்தியை இந்த உணவுகள் அளித்தன.

இவர்கள் இரவுநேர உணவை ஆறு மணிக்கே அருந்தி விடுவர். இரவு உணவாக சுடுசோற்றைச் சாப்பிடுவர். இப்படி ஒரு வாழ்க்கை முறை அன்று அவர்களிடம் இருந்தது. அதுமட்டுமல்லாமல் தனது உடல்நிலையை சீர்படுத்தக்கூடிய சிறுதானிய உணவுகளான வரகு, சாமை, திணை, கம்பு, சோளம் போன்ற உணவுகளையும் நிறைய உண்டு வந்தனர். இப்படிப்பட்ட உணவுகளை இவர்கள் அன்றாட வாழ்வில் எடுத்துக்கொண்டு வந்ததால் இவர்கள் நீரிழிவுநோய் அறியாது வாழ்ந்தனர். கொழுப்பு சார்ந்த நோய்கள் எதுவும் வராமல் இருந்தது.

ஆனால் இன்று பார்த்தோமானால் உணவின் அடிப்படையிலேயே பலநோய்களை நாம் பெறக்கூடிய நிலையிலே நாம் இருந்து கொண்டிக்கிறோம். நகர்ப்புற வாழ்வில் நாம் இன்று சாதாரணமாக உண்ணக்கூடிய பர்கர், பீட்சா போன்ற உணவுகள் வெறும் ருசியாக மட்டுமே இருக்கிறதே தவிர, இதில் ரசாயனக் கலவைகள் பல இருப்பதனால் குடல் சார்ந்த நோய்கள் பல நமக்கு வரக்கூடிய வாய்ப்பு அதிகம் இருக்கிறது.

அதுபோல் தமிழனுடைய உணவுக் கலாச்சாரத்தில் அன்று உணவுப் பொருட்களை அவித்துச் சாப்பிடுதல், சுட்டுச் சாப்பிடுதல் போன்றே இருந்தது. பல்வேறு மண், மரத்திற்குச் சொந்தமான பூமியைக் கொண்டவன் தமிழன். தமிழ்நாட்டின் தெற்குப்பகுதியை எடுத்துக்கொண்டோம் என்றால் கரிசல் நிலங்கள், வண்டல் நிலங்கள் என வளமையான இடங்கள் உண்டு. இவ்வாறு பல்வேறு மண் வளத்திற்குச் சொந்தக்காரனான தமிழன் அந்தந்தப் பிரதேசங்களில் விளையக்கூடிய காய்கறிகளை அவித்துச் சாப்பிடக்கூடிய சூழல் இருந்தது.

அவ்வாறு பார்க்கும் பொழுது கரிசல் நில பூமியில் வாழக்கூடியவர்கள் பச்சைப் பயிர்கள், காராமணி, கொண்டைக்கடலை, மொச்சைக் கொட்டை இதுபோன்ற பயிர்களை காலப்பயிர்களாக பயிரிடக்கூடிய சூழல் இருந்தது. இதை இவர்கள் என்ன செய்தார்கள் என்றால் இந்தப் பயிர்களோடு, வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு சேர்த்து இதையே நன்கு அவித்துச் சாப்பிடக்கூடிய சூழல் இருந்தது. ஒரு 15 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்தோம் என்றால் நம் உணவுப் பழக்கமே இதுபோல் தான் இருந்தது.

தமிழ்நாட்டின் தென்னகத்துப் பகுதிகளைப் பார்த்தோம் என்றால் சிந்தாமணி என்ற உணவுவகை உணவகங்களில் கூட கொடுக்கப்படுவது உண்டு. சிந்தாமணி இன்று சென்னையில் இருக்குமா? என்றால் கண்டிப்பாகக் கிடையாது. இன்றைக்கு விவசாயத்தையே நம்பி வாழ்ந்துகொண்டிருக்கக்கூடிய சில தமிழர் கூட்டம் காலை உணவாக இன்றும் இந்தச் சிந்தாமணியை உண்டுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சிந்தாமணி என்றால் வேறொன்றுமில்லை மொச்சைக்கொட்டைதான்.

இந்த மொச்சைக்கொட்டையை வெங்காயம், தக்காளி சேர்த்து கடுகு தாளித்து வேகவைத்து இன்று உணவகங்களில் கூட விற்கப்படுகிறது. இதை உண்டுவிட்டு வேலைக்குச் செல்கின்ற பொழுது நல்ல ஊட்டமான நிலை பெறுவதுண்டு. அதே போல் பருப்புகளை அவித்துச் சாப்பிடக்கூடிய ஒரு சூழல் தமிழரிடையே இருந்தது. அன்று இருந்த இந்தப் பழக்கங்கள் இன்று இல்லை என்றுதான் கூறவேண்டும்.

அதுபோல் எண்ணெய் என்பது நமது உணவாக, நமக்கு ஏற்புடைய உணவாக இல்லை என்றுதான் கூறவேண்டும். மேலை நாடுகளிலிருந்துதான் எண்ணெய் போன்ற உணவுப்பொருட்கள் நம்மீது திணிக்கப்பட்டது. எண்ணெயில் வறுத்துச் சாப்பிடுதல், பொறித்துச் சாப்பிடுதல் போன்றவை நம் ஊர் உணவுக்கலாச்சாரத்தில் இல்லை. அப்படியே இருந்தாலும் அது செக்கில் ஆட்டப்பட்ட, தூய்மையான, கலப்படமில்லாத நல்லெண்ணெயாக இருந்தது. மற்ற எண்ணெய்கள் என்பது மற்றவர்களால் நம்மீது திணிக்கப்பட்டன என்றே கருத வேண்டும்.

இன்று தமிழனுடைய அவித்துச் சாப்பிடும் பழக்கத்தை அமெரிக்கர்கள் பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஐரோப்பியர்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய எண்ணெய் சேர்க்கும் கலாச்சாரத்தை நாம் இன்று பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறோம்.

இதுபோல் பயன்படுத்த ஆரம்பித்தப் பிறகுதான் நமக்கு பல்வேறு நோய்கள் வரத்தொடங்கிவிட்டன. அதே போல் Euro Monitor Investigation சந்தை ஆய்வு நிறுவனம் நம்முடைய இந்தியாவில் உணவகங்களில் நாம் உண்பதற்காகப் பயன்படுத்தக்கூடிய தொகையானது 22,500 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதனால் நல்ல உணவுகளை வீட்டிலேயே தயார் செய்து சாப்பிடும் அந்தக் காலகட்டத்தைத் தவிர்த்து, வெளியில் சாப்பிடக்கூடிய காலத்தை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம்.

அதுமட்டுமல்லாது இன்று (Baking Food) உறையூட்டிய உணவுகள் எல்லாமுமே வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகளில் திணிக்கக்கூடிய காலகட்டமாகும். இந்த உறையூட்டப்பட்ட உணவுகளில் நன்கு ருசியைக் கொடுத்து அந்தச் சுவையின் அடிப்படையில் ஒவ்வொரு மக்களையும் தனிப்பட்ட முறையில் உணவு அடிமைகளாக மாற்றக்கூடிய ஒரு கலாச்சாரத்தை, வளர்ந்த நாடுகள் தொடர்ந்து செய்துகொண்டே இருக்கிறது.

இதன் அடிப்படையில் இன்று பார்த்தோமானால் ஆசிய நாடுகளில் உணவு அடிப்படையில் அமெரிக்க முதலீடானது 1988-லிருந்து 1997-க்குள் 743 மில்லியன் முதலீடு செய்து 1997-க்குள்ளேயே 2.3பில்லியன் டாலர்களை உணவு உற்பத்திக்கு மூலதனம் செய்துள்ளது. இதன் அடிப்படையில் பார்க்கும் பொழுது அமெரிக்க நிறுவனங்கள் 222 மில்லியன் டாலரில் இருந்து 3.3 மில்லியன் டாலர் வரைக்கும் டின்பேக்கிங், புட் பேக்கிங் உணவுகளை இந்தியாவில் முதலீடு செய்ய இப்பெரும் தொகையைப் பயன்படுத்தி உள்ளனர்.

அமெரிக்கா முதலீடு செய்துள்ள இந்த 3.3 பில்லியன் டாலர் என்பது அந்த நாட்டு விவசாயத்திற்கு முதலீடு செய்யக்கூடிய தொகையை விட அதிகமான தொகையாகும். அதனால் இன்று நம்மிடையே விவசாயம் செய்யக்கூடிய தன்மையைக் கெடுத்து நம்மை உணவு அடிமைகளாக மாற்றக்கூடிய தன்மையை மேலை நாடுகள் தங்களின் உணவுகளின் மூலம் கொடுத்தும், நம் விவசாய உற்பத்தியைக் கெடுத்தும் வருகிறது.

அதனால் நாம் விழிப்புணர்வுடன் நமது பொருட்களை நாமே பயன்படுத்தக்கூடிய சூழலுக்கு நாம் வரவேண்டும். மேலும் நம் ஊரிலுள்ள சித்த மருத்துவ முறையானது நம் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான சிறந்த சிகிச்சை முறையாகும். இதை நாம் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்.

இன்று நமக்கு சாதாரணமான சளி,இருமல்,காய்ச்சல்,தும்மல் என்றால் கூட உடனே (அலோபதி) ஆங்கில மருத்துவர்களை நாடக்கூடிய தன்மையை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். அடிக்கடி வரும் நோய்களுக்கெல்லாம் போய் இவர்களையே நாம் சந்திப்பது என்னவாகும் என்றால், இம் மருத்துவர்கள் அவர்களின் துறை சார்ந்த அறிவைத்தான் நமக்குள் புகுத்தக்கூடிய சூழல் உண்டாகும். அதனால் வயிற்றுவலி என்றால் கூட உடனே ஸ்கேன் எடுத்துப் பார்க்கக்கூடிய சூழல்தான் அங்கு இருக்கும். இதற்கு சித்த மருத்துவத்தில், நம் வீட்டில் இருக்கும் வெந்தயததை நீரில் ஊறவைத்துக் குடித்தால் கூட சரியாகும்.

நமக்கு வருகின்ற சளி, இருமலுக்கு ஆங்கில மருந்தை எடுப்பதை விட, நம் ஊர் இயற்கைத் தாவரமான தூதுவளையை கசாயம் வைத்துச் சாப்பிட்டால் கூட தூதுவளைப் பொடியை கசாயம் வைத்துச் சாப்பிட்டாலும் கூட, இந்நோய்கள் குணமாகிவிடும்.

சிலருக்கு காது வலியினால் ஆங்கில மருத்துவமான இ.என்.டி-க்கு செல்வர். இங்கே செல்வதை விட தற்காலிகமாக தடுப்புமுறையாக கற்பூரவல்லி சாறு எடுத்து தேனில் கலந்து சாப்பிடலாம். அப்படியும் முடியாத பட்சத்தில் விஞ்ஞான மருத்துவத்தை நாடலாமே ஒழிய முடிந்த அளவிற்கு நம்மிடையே இருக்கக்கூடிய கை மருத்துவமுறை. நாட்டு மருத்துவமுறைகளை மேற்கொண்டு இதன் அடிப்படையில் குணமாவதற்கான வழிமுறைகளை நாம் தேடவேண்டும்.

அதனால் தற்போது உணவுக்கலாச்சாரம் என்ற போர்வையில் நம்மை உணவு அடிமைகளாக மாற்றி வந்துகொண்டிருக்கிறார்கள். இதற்கு அடிப்படைக் காரணமே உலகமயமாக்கல் முறையில் நம்மை அடிமைகளாக சித்தரிக்கப்பட்டும் சிதைக்கப்பட்டும் வருகிறது. அதனால் தனிமனித விழிப்புணர்வு எல்லோருக்கும் வரவேண்டும். நாம் தமிழன் என நிரூபிக்க ஆதாரமான நம் பாரம்பரிய உணவு முறைகளைப் பின்பற்ற வேண்டும். இந்த உணவின் மூலம் நமக்குக் கிடைக்கக் கூடிய சிறந்த உணர்வும், இந்த உணர்வின் மூலம் நாம் பெறக்கூடிய சிந்தனை, இந்த சிந்தனை அடிப்படையில் நாம் செயலாற்றக்கூடிய தன்மை எல்லாவற்றையும் வளர்த்து, இந்த துரித உணவுக் கலாச்சாரத்தை எல்லாவற்றையும் மறுத்து, நம் உணவுகள், மூலிகைகள், மருத்துவமுறைகள், நமது பண்டை பழக்கவழக்கங்கள் ஆகிய அடிப்படையில் இன்றைய விஞ்ஞான உலகத்தில் நல்ல ஒரு வாழ்க்கை வாழலாம்.

மேலும் நம் பாரம்பரிய உணவுமுறைகளுக்கு தனித்தன்மை இருந்த காலம் நிச்சயம் உண்டு. அதாவது திருநெல்வேலியிலே அல்வா என்ற உணவு சிறப்பான இடத்தைப் பெற்றிருந்தது. அதுபோல் திருவில்லிபுத்தூர் பால்கோவா என்றால் இதற்கென்று தனி ருசி உண்டு. மணப்பாறை முறுக்கு, கல்லிடைக்குறிச்சி அப்பளம், பழனி பஞ்சாமிர்தம், கோவில்பட்டி கடலைமிட்டாய், ஊத்துக்குளி வெண்ணெய், மதுரை ஜிகர்தண்டா, தூத்துக்குடி திருச்செந்தூர்- கருப்பட்டி என்று தமிழ் நாட்டிலுள்ள பல ஊர்களில் உள்ள தனித்துவ சுவைமிக்கதாக இந்த உணவுகளுக்கு என்றுமே உண்டு.

இப்படிப்பட்ட தனித்துவமிக்க உணவுக் கலாச்சாரத்தைப் பெற்று இருந்த நாம் உலகமயமாக்கலுக்குப் பிறகு நிறைய பாக்கெட்டுகளில் அடைத்து வைக்கக்கூடிய லெய்ஸ்(Lays), குர்குரே போன்ற உணவுகளையும் உண்ணத்துவங்கிவிட்டோம். இன்று தமிழ்நாட்டில் பார்த்தோம் என்றால் பல கடைகளில் இந்த மாதிரி உணவுகள் தான் சரம்சரமாய் நிறைய காற்று அடைக்கப்பட்டு பலூன் போல பாக்கெட்டுகளாய் தொங்குகிறது.

இந்த நிலை மாற வேண்டும். இதனால் நமக்கு உண்டாகக்கூடிய உடல் நலக்கேடுகளை உணரவேண்டும். அதுபோல் விதவிதமான சாக்லேட்டுகள் இன்று சந்தைக்கு வந்து நமது பாரம்பரிய சத்துமிக்க உணவுகளை பின்னுக்குத் தள்ளக்கூடிய ஒரு சூழல் இங்கு நிலவி வருகிறது. இவைகளை உண்பதால் பல்வேறு நோய்கள் வருகின்றன. அதாவது Non Communicable diseases எனப்படுகிற தொற்று அல்லாத நோய்களான நீரிழிவு, ரத்தஅழுத்தம், குடற்புண், புற்றுநோய் இதுபேன்ற நோய்களை அந்நிய உணவுகளால் இங்கே விதைக்கப்பட்டு வருகிறது.

பெரும் நோய்கள் வராத அற்புதமான ஒரு சமூகத்தைப் படைக்க வேண்டும் என்று கூறினால் இந்தத் துரித உணவுகளை முழுமையாக விட்டொழித்து, இந்தத் துரித உணவுகளால் உடையக் கூடிய கனவுகளை மறுபடியும் மீட்டெடுப்பதற்கு நாம் பாரம்பரிய பண்டைய உணவுகளையே பின்பற்ற வேண்டும் ஒவ்வொரு தமிழனும் இதில் உறுதியாக இருந்தால் ஆரோக்கியமான தமிழ்ச் சமூகத்தை நாம் படைக்கலாம் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

Sometimes, the authors actually did collaborate on writing and firstessaywritinghelp.com editing the published article

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “துரித உணவுகளும் தொலைந்த தமிழர் ஆரோக்கியமும்”

அதிகம் படித்தது