மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

துரித உணவு போலும் துரித வாழ்வு

ஆச்சாரி

Apr 26, 2014

“வாழ்க்கை என்னடா வாழ்க்கை

கருவேலங்காட்டிற்குள்

வண்ணத்துப்பூச்சி”

என்று தற்போதைய வாழ்க்கை முறையில் கைக்கூ கவிதை ஒன்று தற்கால தமிழ் இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளது. அடர்ந்த முட்கள் நிறைந்த கருவேலங்காட்டிற்குள் மெல்லிய சிறகு கொண்ட வண்ணத்துப்பூச்சி சுற்றி வந்தால் முள்ளில் கிழிபட்டு எத்தகைய பரிதாப நிலையை அடையுமோ அத்தகைய பரிதாப நிலையில் தான் இன்றைய வாழ்க்கை முறை உள்ளது என எடுத்தியம்புகிறது இந்த நவீன கவிதை. வாழ்க்கை பற்றி மற்றொரு கவிஞன் கூறுகிறான் “பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட அந்த சொற்ப காலமே வாழ்க்கை” என்று. இன்றும் சிலர் இது “இயந்திர வாழ்க்கை, அவசர உலகம்” என்றும் கூறி அங்கலாய்த்துக் கொள்கின்றனர்.

மேற்கூறியவாறு உண்மையில் இந்த வாழ்க்கை மிக மிக அவசர வாழ்க்கை என்று அனைவருக்கும் தெரிந்ததே. ஏன், எதற்கு இந்த அவசரம்? இந்த வாழ்வை இப்படித்தான் கழிக்க வேண்டுமா?. ஒரு உடையை, ஒரு உணவை, ஒரு வேலையை ரசித்து, அனுபவித்துச் செய்ய முடியாதா? எதற்காக இந்த அவசரம்? எனக் கேட்டுக்கொண்ட கேள்விக்கு பதில் ஆபத்து, அழிவு என்றே உணரலாம்.

பெண்கள் நிலை:

முந்தைய காலத்தில் ரசாயன உரமில்லாமல் இயற்கையான உரத்தில் விளைந்த உணவுகளை உட்கொண்ட பெண்கள், தாங்களின் பூப்பெய்தும் காலமானது 18 வயது முதல் 20 வயதிற்குள் இருந்தது. ஆதலால் சரியான வயதில் திருமணம் நடைபெற்று ஆரோக்கியமான வாழ்க்கையைப் பெற்றனர். மேலும் அம்மி அரைத்தல், கிணற்றில் நீர் இறைத்தல், வீடு-வாசல் பெருக்குதல், கோலம் போடுதல், ஆற்றில் துணி துவைத்தல், தண்ணீர் குடம் சுமத்தல் எனச் செய்யும் ஒவ்வொரு வேலையிலும் கடினமான உடல் உழைப்பு இருந்தது. அதனால் அவர்களின் பிரசவம் கூட சுகப்பிரசவமாக இருந்தது. இந்த இயந்திர உலகில் துணி துவைக்கும் இயந்திரம், அரவை இயந்திரம், மாவாட்டும் இயந்திரம், கேன்களில் குடிநீர் என தான் செய்யும் வேலைகளில் முக்கால்வாசியை இயந்திரங்கள் பார்த்துக்கொண்டதால் இன்றைய காலப்பெண்களின் உடல் பெருத்து இதயநோய், மனநோய், ரத்தஅழுத்தம், சர்க்கரை நோய், மூட்டுவலி, மூச்சிரைப்பு என பல்வேறு நோய்களின் இருப்பிடமாகத் திகழ்கின்றனர் நம் தமிழ்நாட்டுத் தாய்குலங்கள்.

ஆரோக்கியமற்ற, கலப்பட உணவுகளை உண்டு பள்ளி செல்கின்ற நமது வளர் இளம் பெண்கள் 6 முதல் 8ஆம் வகுப்பை முடிப்பதற்குள் பூப்பெய்தி விடுகின்றனர். இது அவசர உலகினால் வந்த அபரிமிதமான இழப்பாகும். இதில் அலுவலகங்களுக்குச் சென்று வரும் பெண்களின் நிலை இன்னும் கொடுமையானது. இந்தக் குறிப்பிட்ட நேரத்திற்குள் இந்தப் பணியை முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படும் உயர் அதிகாரிகளின் கூக்குரலால் நம் இனப் பெண்கள் வீட்டிற்குத் தூரமான மாதவிடாய்க் காலத்திலும் சிரமத்தைப் பொறுத்துக்கொண்டு குறிப்பிட்ட வேலையைச் செய்து முடிக்க துணிகின்றனர். அந்த அவசர யுகத்தில் மாதவிடாய்க்கென்று எந்த அலுவலகத்திலும் 3 நாட்கள் விருப்ப ஓய்வு எவரும் கொடுப்பதில்லை. இதைப் புரிந்துகொண்ட நம் நாட்டுப் பெண்களும் ஓய்வு எடுப்பதில்லை. இவைகள் எல்லாம் இந்த அவசர வாழ்வில் ஆரோக்கியத்தை கெடுக்கும் செயல்பாடுகளாகும்.

ஆண்களின் நிலை:

சங்ககால இலக்கியங்களின் தலைவன் பொருள் தேட தலைவியை விட்டுப் பிரிந்து கடல் கடந்து செல்வான் என்று குறிப்பு உள்ளது. பொருள் தேடச் செல்வதால் இதற்கு “பொருட்வயிற் பிரிவு” என்று தனிப்பகுதியே தமிழ் இலக்கியத்தில் உள்ளது. தற்காலச் சூழலில் இந்நிலை மாறி “உத்தியோகம் புருச லட்சணம்” எனக் கூறுகின்றனர். அதாவது திருமணமான ஒருவன் பணி செய்து பொருள் ஈட்டுவதே அவனுக்கு முதல் தகுதி எனக் கூறுகின்றனர்.

தற்கால அவசரச் சூழலில் ஒரு ஆண்மகனின் தலையில் எத்தனை பொறுப்புகள், கடமைகள் இருக்கின்றன? ஒரு வீட்டில் ஆண் குழந்தை இருந்தால் கூடப்பிறந்த பெண் குழந்தைகளை கரையேற்றி விட்டுத்தான் தனது வாழ்வைத் துவங்க வேண்டும் என்பது தற்போதைய நிலை. அதுமட்டுமல்லாது தனது பெற்றோர், தன்னை நம்பி வந்த மனைவி, கூட இருக்கும் உற்றார் உறவினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் கடமை என பல படிநிலைகளில் இருக்கும் ஆண்கள் உண்ண, உறங்கக்கூட நேரமின்றி சதாகாலமும் பணி, பதவிஉயர்வு, ஊதிய உயர்வு என எண்ணிக் கொண்டு இயங்கும் இவர்களின் மனநிலையானது சூறாவளிக் காற்றில் சிக்கி பதர்கள் போன்று உள்ளது.

இந்த வாழ்க்கையின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க நமக்கு மிக நெருங்கியவர்களின் உணர்வுகளையோ, மானசீகத் தேவைகளையோ புரிந்து கொள்ளவும் நேரமில்லாமல் போய் விடுகிறது. இதனால் நம்மைச் சுற்றி உள்ள சின்னச் சின்ன அழகுகளையும், நல்ல விடயங்களையும் கூட ரசிக்கத் தவறுகிறோம். நமக்குப் பிடித்த உணவைக் கூட ருசித்து சாப்பிடுவதற்குப் பதிலாக விழுங்கி விரைகிறோம். கடமைக்கு அவசரமாய் குழந்தைகளைப் பெற்று விடுகிறோம். அவர்களின் குறும்புகளையும், மழலை மொழிகளையும் ரசிக்க நேரம் நமக்கு இருப்பதில்லை. வீட்டை அலங்காரப் பொருட்களால் நிரப்பினாலும் அவற்றை நின்று ரசிக்க முடிவதில்லை. இன்று பெரும்பாலான வீடுகளில் ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசுவது என்பது பெரும்பாலும் இல்லை. அப்படியே இருந்தாலும் அலைபேசியில் குறைந்த நேரத்தில் தனது பேச்சை முடித்துக்கொண்டு பணியாற்ற ஆரம்பித்து விடுகின்றனர்.

நமக்கு வீட்டில் ஓய்வெடுக்க சில நிமிடங்கள் கிடைத்தாலும் அதை தொலைக்காட்சியும், அலைபேசியும், இணையமும் திருடி வருகிறது. பொருளையும் பணத்தையும் சேர்க்கும் அவசரத்தில் உன்னதமான உறவுகளையும் ஏன் இந்த வாழ்க்கையையும் கூட கோட்டை விட்டுவிடுகிறோம்.

நம் முன்னோர்களை விட எல்லாவித வசதிகளிலும் முன்னேறி உள்ள நாம், அவர்களை விட சந்தோசமான நிறைவான வாழ்க்கையை வாழ்கிறோமா? என யோசித்தால் இல்லை என்பது தெரியும் இந்த அவசர வாழ்க்கைக்கு நாம் தரும் விலை மிக மிக அதிகம்.

நாம் கிட்டத்தட்ட இயந்திரங்களாகவே மாறி வருகிறோம். ஆனால் அந்த இயந்திரம் கூட தன் சக்திக்கேற்ற வேகத்தில் மட்டுமே இயங்குகிறது. முற்ற இயந்திரங்களை முந்திக் கொள்ளவோ, வெல்லவோ இயங்குவதில்லை. நாம் வெற்றிபெறபாடுபடுவதற்கும், மற்றவர்களை தோற்கடிக்கப் பாடுபடுவதற்கும் இடையே மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறது. இதில் இரண்டாவதில் நம் சக்திகள் அனைத்தும் விரயமாகி மன அமைதியும் கெடுகிறது.

இந்த அவசரம், நம் ரத்தத்தில் ஊறிப்போய் சாதாரண தவிர்க்க முடியாத இடங்களில் கூட நம்மால் அமைதியாக இருக்க முடிவதில்லை. சாலை சமிக்ஞைகளில் ஓரிரு நிமிடங்கள் காக்க வேண்டி இருந்தால் நம்முள் பலரும் தவித்துப் போகிறோம். கோவில்களில் தெய்வ தரிசனமானாலும் சரி, ரயில் நிலையத்தில் முன்பதிவிற்கானாலும் சரி, நியாயவிலைக்கடையில் பொருட்கள் வாங்க நின்றாலும் சரி, எப்போதும் எங்கும் நீண்ட வரிசையில் நாம் நிற்க நேர்ந்தாலும் சரி நமக்கு முன்னால் நிற்பவரை ஒன்று நெஞ்சு,கை கொண்டு தள்ளுவோம் இல்லை எனில் நம் கால்களைப் பலமுறை மிதித்துப் பலரும் முன்னேறத் துடிக்கிறோம். வேலையே இல்லாவிட்டாலும் கூட சிலரால் சும்மா இருக்க முடிவதில்லை. ஒன்று வேலை செய்பவரை தொந்தரவு செய்வது, இல்லை தம் கால்களையாவது ஆட்டிக் கொண்டிருப்பார்கள்.

அதிவேகம் சுறுசுறுப்பல்ல. உண்மையில் அது சக்தி விரயமே. அவசர புத்தி பின் புத்தி. அவசரத்தில் மனிதன் அதிகமாகப் பதட்டமடைகிறான், குழப்படைகிறான். அதனால் தவறுகள் பல செய்து அவற்றை சரிசெய்ய ஒரே வேலையைப் பலமுறை செய்ய நேரிடுகிறது.

எதற்காக இவ்வளவு அவசரம் என்று ஒருபோதும் நம்மைக் கேட்டுக் கொண்டதே இல்லை. அவசரம் ஒரு வைரசு கிருமியை விடவும் மோசமானது. அது உடலுக்குள் புகுந்த மறுநிமிடமே கை, கால்கள் தாமே உதறத்துவங்குகின்றன, முகம் சிவந்துவிடுகிறது, உடல் நடுங்கத் துவங்குகிறது, கோபம் ஆத்திரம், கவலை என்று உணர்ச்சிகளின் தடுமாற்றத்திற்கு மூல காரணமாக இருப்பது அவசரம் தான்.

சாலையோர சுரங்கப்பாதையின் படிக்கட்டில் அமர்ந்து கையேந்தும் பிச்சைக்காரன் கூட இதை விட அமைதியாகவும், அவசரமின்றியும் தன் வாழ் நாட்களைக் கழிக்கிறான். படுக்க இடமில்லாமல் சாலையில் உறங்குபவர்கள் கூட மாலை நேரங்களை வானொலி கேட்டுக்கொண்டும், பிள்ளைகளுடன் விளையாடிக்கொண்டும் யாவரும் ஒன்றாக சேர்ந்து அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டும் இருக்கின்றனர்.

வேலை, பணம், ஆசைகள் என்று மாய மானைத் துரத்தித் திரியும் மத்தியதர வர்க்கம் எதையும் அடைய முடியாமலும் திரிசங்கு சொர்க்கம் போல மிதக்கிறது. அவசரம் அவர்களின் வயதின் மேன்மையை அழித்து விடுகிறது. தோற்றத்தில் மட்டுமின்றி சிந்தனையிலும், செயல்பாட்டிலும் சலிப்பு தொற்றிக் கொண்டுவருகிறது.

இன்று சுகபோக வாழ்க்கை வேண்டி கோடிக்கணக்கான ஆண்களும், பெண்களும் இந்த நெருக்கடிக்கு ஆளாகின்றனர். என்னதான் பணி சார்ந்த அவசரம் என தவிர்க்க முடியாமல் போனாலும் எல்லா நேரங்களிலும் ஏன் இப்படி படபடப்பாகவும், நிம்மதியின்றியும், யோசித்து யோசித்து முடிகொட்டிப்போயும் இருக்க வேண்டும்? என்று தெரியவில்லை.

இயற்கையின் படைப்பான அழகிய வண்ணத்துப்பூச்சி ஒரு பூவிலிருந்து தேன் எடுப்பதற்காக எங்கெங்கோ சுற்றி அலைகிறது. ஆனால் தேன் உள்ள பூவைக் கண்டு விட்டாலோ அதைச்சுற்றி வந்து தனது உணர்கொம்புகளால் தேனை உறிஞ்சி அப்படியே ருசித்து, லயித்து, கிறங்கிக் கிடக்கிறது. ஒரு துளி தேன் என்றாலும், அதன் சுவையை ருசிக்கும் வண்ணத்துப் பூச்சியின் லயிப்பு நமக்கு ஏன் வருவதில்லை?

பொறுமை கடலிலும் பெரிது, அவசரத்தில் எடுக்கும் முடிவு ஆபத்தை விளைவிக்கும், பதறிய காரியம் சிதறிப்போகும், பொறுத்தார் பூமியாழ்வார், ஓடுமீன் ஓட உறுமீன் வரமளவும் வாடி இருக்குமாம் கொக்கு என நம் முன்னோர்கள் நமக்குக் கூறிவிட்டுச் சென்ற பழமொழிகளை மறந்த தலைமுறையினரின் வாழ்க்கை முறை இன்னும் அதள பாதாளத்தில் சென்றாலும் ஆச்சரியப்படுவதில்லை.

Details all courses are taught and examined in english. writemypaper4me.org/

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “துரித உணவு போலும் துரித வாழ்வு”

அதிகம் படித்தது