மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தென்னாட்டுப் போர்க்களங்கள் – பகுதி 9

ஆச்சாரி

Jun 15, 2012

தமிழரிடையே வரலாற்றுணர்வும், நில இயல், அறிவியல் உணர்வுகளும், பண்படாப் பிற இனத் தலையீடுகளாலும் ஆதிக்கங்களாலுமே படிப்படியாக நலிந்து வந்தன என்னல் வேண்டும். ஏனெனில் சோழப்பேரரசர் காலங் கடந்து கூட இவை புராண மரபுகளின் குளறுபடிகளுடன் கலவாது இயங்குவது காணலாம். எடுத்துக்காட்டாக, சங்க காலத்துக்கும் வேள்விக் குடிச் செப்பெடுகளின் காலத்துக்கும் இடையே ஐநூறு ஆண்டு ஏற்பட்டிருந்தன. ஆயினும் சங்க காலத்திலேயே முற்பட்டவனான பல்சாலை முதுகுடுமிப் பாண்டியன் அளித்த நன்கொடையை அரசியல் மரபும், அரசியல் அரங்க மரபும் அறிந்து பிற்பட்ட பாண்டியன் உறுதி செய்ய முடிந்தது. இதுபோலவே தேவார காலத்துக்கும், பெரிய புராண காலத்துக்கும் ஐந்நூறு ஆண்டு இடையூடும் பெருத்த அரசியல் மாறுபாடுகளை இடையே இருந்தன. ஆயினும் பெரிய புராணம் பாடிய புலவர் சேக்கிழாரால், முற்பட்ட கால அரசியல் பின்னணி  நிலைகள் சரிவர உணர்ந்து தீட்டப்பட்டன. அதே காலத்திலிருந்த சயங்கொண்டாரும் ஒட்டக்கூத்தரும் பெருஞ்சோழருக்கு ஆயிரமாண்டு முற்பட்ட சோழர்கள் வரலாற்றை அவர்களைப் பற்றிய சின்னஞ் சிறு செய்திகளையும் வரலாற்று மரபு வழியே அறிந்து உரைத்துள்ளனர்.

தமிழர் வரலாற்று உணர்வுக்குப் பிற்காலப் பாண்டியர் கல்வெட்டொன்று வியக்கத்தக்க நற்சான்று அளிக்கிறது. 12 –ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆண்ட அப் பாண்டியன் சோழர் அரண்மனையையும் தலைநகர் முழுவதையும் அழித்துவிட்டான். ஆனால் பட்டினப்பாலை ஆசிரியர் கடியனூர் உருத்திரங் கண்ணனார் கரிகாலன் முன் அந்நூலை அரங்கேற்றுவதற்காகக் கட்டப்பட்ட பதினாறு கால் மண்டபத்தை மட்டும் அழியாது காத்தானாம். இதில் வரலாறும் மரபின் ஆற்றலையும் காண்கிறோம். தமிழர் கலையார்வத்தின் அருமையையும், ஆட்சி எல்லை கடந்த தேசீய ஆர்வத்தின் பெருமையையும் காண்கிறோம். ஏனெனில் கரிகாலனும் சோழன்தான். சோழன் மீதுள்ள கோபம் அவன் மீது பாயவில்லை. ஏனெனில் பாடல் கொண்ட சோழன், தமிழகத்துக்குத் தேசீயப் பழம் புகழளித்த சோழன். கலையார்வம், தேசீய ஆர்வம், வரலாற்று மரபு ஆகிய மூன்றும் இங்கே பன்னிரண்டு நூற்றாண்டுகள் தாண்டிச் செயலாற்றுவது காண்கிறோம்.

சங்க இலக்கியத்தின் உதவி கொண்டு நாம் இன்று தமிழர் வாழக்கை பற்றியும், அறிவு நிலை பற்றியும், அரசியல் சமுதாயப் பழக்க வழக்கங்கள் பற்றியும் அறியும் செய்திகள் பல. அவற்றால் நாம் அறியவரும் போர்களின் தொகையும் நூற்றுக்கணக்கானது. வரலாற்று மரபு இழந்த நம் நாட்களில் அவற்றுள் பலவற்றின் முன்பின் வரிசை முறை, கால இடச் சூழல்கள் ஆகியவற்றை முற்றிலும் விளக்கமாக அறிய முடியவில்லை. வருங்கால ஆராய்ச்சிகளே அவற்றுக்கு மேலும் விளக்கம் அளிக்க வேண்டும். ஆயினும் தேசீய வாழ்வின் பொதுப் போக்கை உணர்த்தும் பெரும் போர்கள் சிலவற்றை நாம் உருவகப்படுத்திக் காண முடியும்.

கரிகாலன் புகழ் வளர்ச்சி: மலைப்பளிக்கும் பெரும் புதிர்

தமிழிலக்கியத்தில் மட்டுமின்றி, தமிழகம் சூழ்ந்த பல நாடுகளிலுள்ள பல மொழிகளின் இலக்கியத்திலும், அதுபோலவே பல நாடுகளின் கல்வெட்டுக்களிலும், பல நட்டு மக்கள் உள்ளங்களிலும் புகழ் பரப்பிய தமிழ்ப் பேரரசன் கரிகாலன் ஆவான். அவன் புகழ் அவன் காலத்தில் மட்டுமின்றி அது கடந்தும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்வது கண்டு தமிழார்வலர்கூட வியப்பும் மலைப்பும் எய்துகின்றனர். வரலாற்று ஆராய்ச்சியாளர்களோ, இவ்வகையில் திகைப்பும் குழப்பமும் அடைகின்றனர். இலக்கியத்திலும் சரி, கல்வெட்டுகளிலும் சரி காலமும் தேசமும் மொழியும் தொலைவாகும் தோறும் புகழ் வளர்வது கண்டு, அவர்கள் பழங்கால இலக்கியச் சான்றுகளை மட்டுமே வரலாறு மெய்ம்மை எனக் கொள்கின்றனர். பிற்கால கல்வெட்டுச் சான்றுரைகள் அத்தனையையும் படிப்படியாக வளர்ந்த கற்பனை எனக் கருதுகின்றனர்.

ஆனால் மொழி எல்லை, தேச எல்லை கடந்து பலவிடத்தும் பல காலத்தும், பலராலும், கரிகாலன் பெயர் போற்றப்படுவதை வரலாற்று ஆசிரியர் முடிவு விளக்கவில்லை. தவிர கரிகாலன் பற்றிய பழந்தமிழ் இலக்கிய உரைகளே ஒன்றுக்கொன்று முற்றிலும் பொருந்தவில்லை.

முனைவர் இராசமாணிக்கனார் சங்க காலத்திலேயே கி.மு. இரண்டாம் நூற்றாண்டின் முடிவில் ஒரு கரிகாலனும், அதே நூற்றாண்டின் பிற்பகுதியில் ஒரு கரிகாலனும் இருந்ததாகக் கொள்கிறார். இரு கரிகாலர்களையும் பற்றிய சங்க இலக்கியச் சான்றுகளையும் பிரித்துக் காட்டுவதுடன், ‘வெண்ணி’ அல்லது வெண்ணில் என்ற இடத்தில் நிகழ்ந்த போர் பற்றிய குறிப்புகளையும் இருவேறு கரிகாலர்களால் ஆற்றப்பட்ட மூவேறு போர்கள் என்றும் விளக்கியுள்ளார்.

இவ்விளக்கத்தின் பின்னும் சங்க இலக்கியக் குறிப்புகள்தான் தெளிவடைகின்றன. சங்க காலத்திலேயே இயற்றப்பட சிலப்பதிகாரம் தரும் வடநாட்டுப் படையெடுப்பும், கலிங்கத்துப்பரணி, மூவருலாக்கள் குறிப்பிடும் இமயம் அல்லது மேருவைச் செண்டாலடித்துப் புலி பொறித்தல், காவிரிக்குக் கரை கட்டல் ஆகியவையும் இரண்டாம் கரிகாலனுக்குரியன என்று கொள்ளக் கூடுமானாலும், சங்க இலக்கியம் அதுபற்றிக் கூறாதது வியப்பைத் தராமலில்லை. வரலாற்றாசிரியர் பலர் இது காரணமாக இவற்றைப் பிற்காலப் போலிப் புனைந்துரை என முடிவு செய்ய எண்ணுகின்றனர். ஆனால் இவை சங்க கால இறுதியிலோ அல்லது புராண வரலாற்று மரபுகளின் வான விளிம்பிலோ உள்ள மற்றொரு கரிகாலன் செயலாகவும் இருத்தல் கூடும். ஏனெனில் பிற்காலச் சோழரின் அன்பில் பட்டயங்கள், திருவாலங்காட்டுப் பட்டயங்கள், லெய்டன் பட்டயங்கள் ஆகியன பெருநற்கிள்ளி என்ற சோழனுக்கும், கோச்செங்கணான் என்ற சோழனுக்கும் இடைப்பட்டவனாக ஒரு கரிகாலனைக் குறிக்கின்றன.

வடதிசைப் படையெடுப்பு முதலிய செய்திகள் முற்றிலும் புனைந்துரை என்று கூறத்தக்கதன்று என்பதை எட்டாம் நூற்றாண்டுக்குரிய மாலேபாட்டுப் பட்டயங்கள் முதற்கொண்ட தெலுங்கு ஆதாரங்களும், சிங்கள வரலாற்று ஏடான மகாவம்சோவும் காட்டுகின்றன. ஆந்திர நாட்டிலும், மைசூர் நாட்டிலும் ஆண்ட சோழ மரபினர் தம்மைக் கரிகாலன் மரபினர் என்று பெருமையுடன் கூறிக் கொள்வதை நோக்க. கரிகாலன் அப்பகுதியை வென்று ஆண்ட காலத்தில் அவன் ஆட்சியாளராக அமர்த்திய சோழர் குடி இளவல்களாகவே அவர்கள் இருத்தல் கூடும் என்று கருத வேண்டியிருக்கிறது. மிகப் பிற்பட்ட காலங்கள் வரையுள்ள பல மரபினர்- ஐதராபாத்தில் உள்ள வாரங்கல் ஆண்ட காகதீய மரபினர், விஜய நகர ஆட்சிக் காலத்தில் கார்வெட் நகர் ஆண்ட சாளுவ மரபினர், ஒரிசா அல்லது கலிங்கம் ஆண்ட சங்க சோடர் ஆகியவர்களது பெரும் பரப்பு கரிகாலனின் பரந்த வெற்றிகளுக்கு சான்று தருவனவாகும்.

தெலுங்குக் கல்வெட்டுக்கள் பலவற்றில் ஒரு சமசுகிருதப் பாட்டின் அடிகள் ஓயாது பள்ளவியாகக் காதில் மணியோசை போல ஒலிக்கின்றன. மூன்று கண்ணுடைய ஏதோ ஒரு அரசன் கரிகாலனுக்குப் பணியாதிருந்ததையும், கரிகாலன் அவன் மூன்றாம் கண்ணைக் குடைந்து எடுத்துவிட்டதையும் காவிரிக்குக் கரை கட்டிய செய்தியையும் அது புனைந்து புகழ்கிறது. அப்பாடல்-

சரண சரோருஹ

விஹத விலோசன

த்ரிலோசன

ப்ரமுகாகில

ப்ருதி வீசுவர

காரில காவேரி தீர கரிகாலகுல-

என்பது. இதையே குலோத்துங்கள் பிள்ளைத் தமிழும்

முகுல நதிக்கரசன்

முடிகொடு வகுத்தகரை

முகில் தொட அமைத்தது அறிவோம்!

இருபுறமும் ஒக்க நினது

ஒருபுலி பொறிக்க வட

இம கிரி திரித்தது அறிவோம்.

இகல் முகரி முக்கணிலும்

ஒருகண் கிழியக் கிழியில்

எழுது கண் அழித்தது அறிவோம்

என்று இன்னும் சமத்காரம் படப் புனைந்துரைக்கின்றது.

தமிழில் பெரிய புராணம் (12 ஆம் நூற்றாண்டு), சோழ வம்ச சரித்திரம் என்ற பிருகதீஸ்வரர் மகாத்மீயம் (16 ஆம் நூற்றாண்டு) சோழ மண்டல சதகம், செவ்வந்திப் புராணம் (17 ஆம் நூற்றாண்டு), ஆகியவையும், தெலுங்கில் பண்டிதாராத்ய சரிதம் (13 ஆம் நூற்றாண்டு), கன்னடத்தில் நவசோள சரித்திரம் (14 ஆம் நூற்றாண்டு) ஆகியவையும் யாவும் தத்தம் கால்களுக்கேர்பக் கரிகாலனைப் பற்றிய பல மாறுபட்ட கதைப் பதிப்புகள் தருகின்றன.

வெண்ணில் போர் 1 அல்லது வெண்ணி வாயிற் போர்

வெண்ணி அல்லது வெண்ணில் என்பது தஞ்சாவூரை அடுத்த ஓர் ஊர். இது தேவாரப்பதிகம் பெற்ற காலத்தில் நாயன்மாரால் பாடப்பட்டுள்ளது. இப்போது அது கோயிலுண்ணி ( கோயில் வெண்ணி) என்ற பெயருடன் நிலவுகிறது.

முதல் வெண்ணிப் போரில் முதற் கரிகாலன் பதினோரு வேளிர்கள் அல்லது சிற்றரசர்களையும் சில அரசர்களையும் ஒருங்கே முறியடித்தான் என்று அறிகிறோம். அரசர்கள் யார் யார் என்பது கூறப்படவில்லை ஆனாலும், பன்மையிலேயே குறிக்கப்படுவதால் சேர பாண்டியர் இருவருமே கரிகாலனை எதிர்த்தனர் என்று கூறலாம். முதற் கரிகாலன் பேரரசன் இல்லாவிட்டாலும் அந்நிலைக்கு உயர்ந்து வருவதையே இது குறிக்கிறது. ஏனெனில் இப்பெருங் கூட்டு வலு இப்போரில் முற்றிலும் முறிந்துவிட்டதென்று அறிகிறோம். அரசரும் சிற்றரசரும் ஓடிய ஓட்டத்தில் அவர்கள் தத்தம் போர் முரசங்களை உடன் கொண்டு செல்லக்கூட நேரமில்லாது போயிற்று. அவற்றைக் களத்திலேயே கைவிட்டு ஓடினர்.

இப் போர் பற்றிச் சங்க காலப் பழம்பெரும் புலவர் பரணர் ஒரு கவிதை ஓவியம் தீட்டியுள்ளார்.

காய்சின மொய்ம்பின் பெரும் பெயர்க்கரிகால்

ஆர்கலி நறவின் வெண்ணி வாயில்

சீர்கெழு மன்னர் மறலிய ஞாட்பின்

இமிழ் இசை முரசம் பொருகளத்து ஒழியப்

பதினொருவேளிரொடு வேந்தர் சாய

மொய்வலி அறுத்த ஞான்றைத்

தொய்யா அழுந்தூர் ஆர்ப்பினும் பெரிதே! (அகம் 246)

பாட்டின் இறுதியில் போர் வெற்றியின் பயனாக அழுந்தூரில் உண்டான ஆர்ப்பரிப்பு ஆரவாரம் பெரிதென்ற குறிப்பு தரப்பட்டுள்ளது. இது வெற்றி ஆரவாரம் என்பதிலும் அழுந்தூர் போர்க் களத்திற்கு அருகிலுள்ள நகரமோ அல்லது தலைநகரமோ ஆகவேண்டும் என்பதிலும் ஐயமில்லை. அழுந்தூரே தலைநகரென்றும் முதற் கரிகாலன் இச் சமயம் அழுந்தூர் வேள் அல்லது சிற்றரசன் நிலையில் இருந்தே வலிமை பெற்று வளரத் தொடங்கினான் என்றும் கருதப்படுகிறது. ஆனால் பிற அகப் பாடல்களில் அழுந்தூருடன், இடையாறு, சுழார் ஆகிய ஊர்களும் அவனுடன் நெருங்கிய தொடர்பு உடையனவாக குறிக்கப்படுகிறது. எனவே செருப்பாழி வென்ற நெடுஞ் சேட் சென்னிக்குப் பின் நேராக பழையபடி சரியாய்த் தொடகிற்று என்றும் அதைத் தடுக்கும் முயற்சியிலேயே கரிகாலன் அழுந்தூரிலும், பிற வேளிர் தலையூர்களிலும் ஆதரவு பெற்றுப் போராடினான் என்று கொள்ள வேண்டும்.

-தொடரும் ….


ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தென்னாட்டுப் போர்க்களங்கள் – பகுதி 9”

அதிகம் படித்தது