மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தென்னாட்டுப் போர்க்களங்கள் 10

ஆச்சாரி

Jun 30, 2012

செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னிக்கும் முதற் கரிகாலனுக்கும் உள்ள தொடர்பு மற்றொரு செய்தியாலும் வலியுறுத்தப்படுகிறது. முந்தியவன் காலத்தில் சோழர் படைத் தலைவனாயிருந்தவன் அழுந்தூர் வேள் திதியனே.இதே அழுந்தூர் வேள் திதியன் என்ற பெயரே முதற் கரிகாலன் காலப் படைத் தலைவனாகவும் இருந்ததாகக் காணப்படுகிறது. புகழ்பெற்ற இரண்டாம் கரிகாலன் தாய் அழுந்தூர் வேள் மகள் காண, அழுந்தூர் வேளுக்கும் சோழருக்கும் உள்ள மரபுத் தொடர்பு தெளிவாகும்.

இத் திதியன் படையில் பல கோசர்கள் வீரராயிருந்தனர். அவர்களில் சிலர் அன்னி மிஞிலி நங்கையின் தந்தை கண்ணைக் கெடுத்துவிட்டனர். திதியன் அழுந்தூர் மன்றத்தில் முறை செய்து அவ்வீரரைக் கொலைத் தண்டனைக்கு ஆளாக்கினான். இச் செய்தியையும் பரணராலேயே (அகம் 196-ல்) குறிக்கப்பட்டுள்ளது.

வெண்ணிப் போர் 11 அல்லது வெண்ணிப் பறந்தலைப் போர்

வெண்ணியில் நடைபெற்ற இரண்டாவது போரும் முதற் கரிகாலன் ஆற்றிய போரேயாகும். இப் போர் ஒரு வகையில் முன்னைய போரைத் தொடர்ந்து வந்த தமிழக முதன்மைப் பேரரசு நிலைக்கான போட்டிப் போராகவே தோற்றுகிறது. ஏனெனில் இதில் புகழ்மிக்க சேரனான பெருஞ்சேரலாதனே கரிகாலன் எதிரியாகப் போரிட்டான். இந்தப் பெருஞ் சேரலாதனை சிலர் இமயவரம்பன் நெடுஞ் சேரலாதன் மருமகன் எனவும் சில மரபுகள் குறிக்கின்றன. ஆதலால் கரிகாலன் நெடுஞ் சேரலாதன் ஆகிய இரு பெயர்களிலும் உள்ள குழப்பம் இச் செய்திகளிடையே தெளிவு தரத் தக்கதாய் இல்லை. தலை தடுமாற வைப்பதாகவே உள்ளது.ஏனெனில் பெருஞ் சேரலாதனும் நெடுஞ் சேரலாதனும் வேறாயிருத்தல் வேண்டும். நெடுஞ் சேரலாதன் தொடர்புடைய கரிகாலனும் முதற் கரிகாலனின் வேறாகல் வேண்டும்.

வெண்ணிப் பெருவெளியில் நடந்த இப் போர் மிகவும் கோரமான போராய் இருந்திருக்க வேண்டும். ஏனெனில் இப் போரின் பயனாக சேரநாடே ஒளி இழந்ததென்று புறநானூற்றுப் பாடல் ஒன்று குறிக்கிறது. சேர மன்னன் பெருஞ் சேரலாதன் கரிகாலனுடன் நேருக்கு நேர் நின்று இறுதிவரை போரிட்டான். அவன் மார்பில் பாய்ந்த வேல் முதுகு வரையில் துளைத்ததால் மார்பில் மட்டுமின்றி முதுகிலும் புண்பட்டு விட்டது. ‘முதுகிற் புண்’ என்பது பொதுவாக கோழையின் சின்னம். இங்கே சேரன் புண் இத்தகையது அல்லவாயினும் அவன் இச் சொல்லுக்கு இடமேற்பட்டது கண்டு, போரை நிறுத்தி வடக்கிருந்து மானத்துடன் உயிர் விடத் துணிந்தான்.

இச் செய்திகளை கழாத்தலையார் என்ற புலவர் உருக்கமாகப் பாடுகிறார். சேர நாட்டு நிலையம் மன்னன் விழுமிய நிலையம் நம் மனக் கண்முன்னே புலவரால் கொண்டு வந்து நிறுத்தப்படுகிறது.

“மண்முழா மறப்ப, பண்யாழ் மறப்ப,

இருங்கட் குழிசி அவிழ்ந்து இழுது மறப்ப,

சுரும்பார் தேறல் சுற்றம் மறப்ப,

புறப்புண் நாணி, மறத்தகை மன்னன்

வாள் வடக்கிருந்தனன்…..” (புறம்- 65)

“முரசு முழங்கவில்லை. யாழ் இசையை மறந்தது. அகன்ற பால் வட்டில்கள் பாலின்றி வறண்டு கிடக்கின்றன. சுறுசுறுப்பான தேனீக்கள் திரட்டிய தேனை இப்போது தீண்டுவாரில்லை. உழவர் கழனிகளில் உழுதலைத் தவிர்த்தனர். ஊர்ப் புற வெளிகள் விழாவயரும் கூட்டங்கள் இன்றி வெறிச்சோடி கிடக்கின்றன” என்று அவர் சேரநாட்டு நிலையைச் சித்திரிக்கிறார். “ஞாயிறும் திங்களும் எதிரெதிர் நின்று போரிட்டுத் திங்கள் சாய்வது போல் சாய்ந்தான் சேரன்” என்று அம்மன்னர் மாண்பையும் புலவர் பெருமித இரக்கத்துடன் குறிக்கிறார்.

களத்தில் வெற்றியடைந்த கரிகாலனைப் பாடிய புலவர் ஒரு பெண் பாவலர். வெண்ணிக் களத்துக்குரிய வெண்ணி ஊரிலேயே பிறந்தவர். குயவர் தொழில் மரபினர். அவர் வெற்றி வீர அரசனைப் பாடினாலும், அப்பாட்டில் கூடச் சேரன் பெருமித முடிபே முனைப்பாக, ஆனால் கரிகாலனின் பெருமை தோன்றப் பாடப்பட்டுள்ளது.

கடற் போர் பல செய்த சோழ மரபில் வந்தவனே என்று அப் பெண்பாற் புலவர் அரசனை விளித்துப் பாடுகிறார்.

“நளி இரு முந்நீர் நாவாய் ஓட்டி

வளி தொழில் ஆண்ட உரவோன் மருக!

களி இயல் யானைக் கரிகால் வளவ!

சென்று அமர்க் கடந்த நின் ஆற்றல் தோன்ற

வென்றோய்! நின்னினும் நல்லன் அன்றே,

கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை

மிகப் புகழ் உலக மெய்திப்

புறப் புண் நாணி வடக்கு இருந்தோனே” (புறம்-66)

கரிகாலன் வெற்றியால் புகழ் பெற்றானாம்! சேரலாதன் வடக்கிருந்து புகழ் பெற்றானாம். ‘ஒருவனது வீரத்தின் புகழ் அடுத்தவனது, வீரத்தின் மானத்தின் புகழ்! எது நல்லது, பின்னது அல்லவா?’ என்று கேட்கும் புலவரின் கேள்வி நயம் வெண்ணிப் போரின் வீரர் வீர நயங்களைவிடச் சிறந்ததாகவே காணப்படுகிறது.

சேரன் வீரம், மானம் நாடி மாளத் துணிந்த பெருமித நிலை ஆகிய செய்திகள் ஒரு கணத்தில் தமிழகமெங்கும் பரவின. அப்பெருஞ் சேரனைக் காணும் ஆர்வம் தமிழகம் எங்கும் எழுந்தது. சான்றோர்கள் பலர் தீர்த்த யாத்திரைக்குப் புறப்படும் இக்காலப் பக்தர்களைப் போலப் போர்க் களத்துக்கு விரைந்தனர். மன்னனுடன் வடக்கிருந்து மாளும் மாள்வே புகழ் மாள்வு என்று அவர்கள் துணிந்தனர்.

“கரிகால் வளவ னொடு வெண்ணிப் பரந்தலைப்

பொருது புண் நாணிய சேரலாதன்

அழிகள மருங்கின் வாள் வடக்கிருந்தென

இன்னா இன்னுரை கேட்ட சான்றோர்

அரும் பெறலுலகத் தவனோடு செலீஇயர்

பெரும் பிறிதாகி யாங்கு” (அகம்-55)

என்று இப்புகழார்வத்தை மாமூலனார் தீட்டிக் காட்டியுள்ளார்.

வாகைப் பெருந்தலை

முதலாவது கரிகாலன் ஆற்றிய மற்றொரு பெரும் போர் வாகைப் பரந்தலைப் போராகும்.

விரிஉளைப்பொலிந்த பரியுடை நன்மான்

வெருவரு தானையொடு வேண்டுபுலத் திறுத்த

பெருவளக் கரிகால் முன்னிலைச் செல்லார்

சூடாவாகைப் பறந்தலை ஆடுபெற

ஒன்பது குடையும் நண்பக லொழித்(திப்)

பீடில் மன்னர் போல

ஓடுவை மன்னால்!     (அகம்-125)

என்ற பாடலில் பரணர் இப்போரை விரித்துரைத்துள்ளார். ‘வாகை’ ஒரு இடத்தின் பெயர் என்பதைக் கவிஞர் தமிழ்ப் புலவர் மரபுப் படியே ‘சூடாவாகை’ என்று அடைகொடுத்து தெரிவிக்கின்றார். கவிஞர் அப்படிக் கூறவில்லையானால் வாகை ஒரு போர்க்களம் என்பதை உணராமல் ‘வெற்றிக்குரிய பூ’வாகக் கொண்டு நாம் மயங்க இடமேற்பட்டிருக்கும்.

கரிகாலன் அப்போரில் ஒன்பது மன்னர்களை எதிர்த்துச் சமரிட்டான். அவர்கள் கரி, பரி, தேர், காலாட்படைகளை மிகுதியாகவே உடையவராய் இருந்தனர். ஆனால் அவர்களால் கரிகாலன் முன் நிற்க முடியவில்லை. கரிகாலன் அரும்பெரும் வெற்றி பெற்றான். ஒன்பது மன்னரும் தம் கொற்றக் குடைகளையும் புகழக் கொடிகளையும் களத்திலே எறிந்துவிட்டு ஓடினர்.

இப்போரைச் சில வரலாற்றாசிரியர்கள் இரண்டாம் கரிகாலனின் வடதிசைப் படையெடுப்பின் ஒரு பகுதியாகவும் அவன் திரும்பும் சமயம் நடைபெற்றதாகவும் குறிக்கின்றனர். ஆனால் முதற் கரிகாலனின் போர்களைப் பாடிய பரணரும் மாமூலனாரும் மிக முற்பட்ட காலத்தவர்கள். ஆகவே இது இரண்டாம் கரிகாலனாக இருக்க முடியாது. ஆயினும் தமிழகத்தில் வேளிரன்றி ஒன்பது மன்னர்கள் அந்நாளில் இருந்தனர் என்று கூற முடியாது. தமிழகத்துக்கு வடக்கே கன்னட தெலுங்கு நாடாகிய வடுக எல்லையில் கூட இப்பழங்காலத்தில் ஒன்பது மன்னர் அந்நாளில் இருந்திருக்கக் கூடுமா என்று ஐயுற இடமுண்டு. ஆந்திரர், கலிங்கர், சூடுநாகர் அல்லது சூடுபல்லவர், கடம்பர் ஆகிய பேரரச மரபினரே அக்காலத்தில் நிலவியிருக்கக் கூடும். எனவே முதற் கரிகாலன் வாகைப் பறந்தலை வெற்றி தொலைத் தென்னாடு அல்லது வட நாட்டு வெற்றியாகவே இருத்தல் வேண்டும்.

“பீடில் மன்னர்” ஓடுவை என்ற புலவர் சொற்கள் அவர் அயலின அரசரே குறித்தார் என்ற தொனியை உடையன. தவிர பரணர் சங்க காலப் புலவர்களிலே மிக முற்பட்டவர். நீண்ட நாள் வாழ்ந்தவர். அவர் முதுமைக் காலத்தில் கபிலர் இளைஞாராய் இருந்தார். மாமூலனாரோ பரணரிலும் பழமை வாய்ந்தவர். அவர் மோரியருக்கு முற்பட்ட கி.மு. மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தவர். இவற்றை நோக்க மாமூலனாராலும், பரணராலும் பாடப்பட்ட வெண்ணி முதற் போர், வாகைப் பறந்தலுக்குரிய கரிகாலன் முதற் கரிகாலன் என்று முனைவர் இராசமாணிக்கனார் குறித்த அரசனுக்கும் முற்பட்ட ஒரு மூல முதல் கரிகாலனாக இருந்திருக்கக்கூடும் எனலாம். இது மேலும் ஆராய்வதற்குரியது.

மேருவைச் செண்டாலடித்தல், காவிரிக்குக் கரை கட்டல் முதலிய சிலப்பதிகார, பிற்கால மரபுக்குரிய செயல்களில் சிலவேனும் இம்மூல முதல் கரிகாலனுக்குரியன ஆகலாம். ‘பெரும்பெயர்க்கரிகால்’ என்ற சங்க ஏடுகளின் கூற்றுகள் மூல முதல் கரிகாலன் மரபும் பெயரும் உடைய கரிகாலன் என்ற பொருள் கொண்டனவாகவும் இருந்திருக்கக்கூடும்.

(முதல் பகுதி நிறைவுற்றது)

Observation must be with prior consent of http://writemyessay4me.org/ the student and the committee


ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தென்னாட்டுப் போர்க்களங்கள் 10”

அதிகம் படித்தது