மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தென்னாட்டுப் போர்க்களங்கள் 8

ஆச்சாரி

Jun 1, 2012

வட இமயத்தில் தமிழ்த்தடம் பொறித்த தமிழ் மூவேந்தருள் முதல்வன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனே என்று கூறலாம். ஏனெனில் சேரருள்ளேயே செங்குட்டுவன் இமயம்வரை வென்றாலும், பிற தமிழ் வேந்தரும் இமயத்தில் தடம் பொறித்தாலும் அவனே ‘இமயவரம்பன்’ என்ற சிறப்புப் பெயருக்குப் போட்டியில்லாத உரிமை உடையவனாக இருக்கிறான். அவனை பத்துப் பாட்டில் பாடிய குமட்டூர்க் கண்ணனார்,
‘ஏ மாகிய சீர்கெழுவிழவின்
நெடியோன் அன்ன நல்லிசை

ஓடியா மைந்த

என்று நெடியோன் புகழை நினைவூட்டி, அதற்கு அவன் உரியவனாகட்டும் என்று வாழ்த்துகிறார். நெடியோன் இமயம் வரை வென்ற பழம் புகழுடன், இமயத்தில் விற்பொறித்த நெடுஞ்சேரலாதனின் புதுப் புகழை இது ஒப்பிடுவதாக காண்கிறது. இது நெடுஞ்சேரலாதன் செயலன்று. அவன் முன்னோர்களின் புகழே என்று சிலர் கருத்துக் கொள்கின்றனர். ஆனால் முன்னர் செயல் பின்னோருக்குக் கூறப்படுவது மரபானாலும், நெடுஞ்சேரலாதனே முன்னோனாக எங்கும் சிறப்பிக்கப்படுகிறான். அவனும் இமயம் முதல் குமரி வரை ஆண்டதாகப் பத்துப் பாட்டுக் கூறுகிறது.
‘ஆரியர் துவன்றிய பேரிசை இமயம்
தென்னங் குமரியோடாயிடை

மன்மிக் கூறுநர் மறம்பதக் கடந்தே

இது நேரடி ஆட்சியாகவோ, எல்லா அரசராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட மேலுரிமையாகவோ அல்லது மாநிலமெங்கும் ஆற்றிய வெற்றி உலாவாகவோ நிகழ்ந்திருக்கலாம். ஆனால் நெடுஞ்சேரலாதன் காலத்தை வரையறுக்கும் வரையிலும் இதைப் பற்றி மேலும் சான்றுகள் அறியப்படும் வரையிலும் இதைத் திட்டப்படுத்திக் கூற முடியாது. இச் செயல் சோழரும், பாண்டியரும் புலி, கயல் பொறிப்பதற்கு முற்பட்டது என்பதில் மட்டும் ஐயமில்லை.

சொழருள் இமயத்தில் தமிழ்ச் சின்னம் பொறித்தவன் கரிகாலனே என்றும், பாண்டியருள் மீன் கொடி பொறித்தவன் ஆரியப் படைகடந்த நெடுஞ்செழியனே என்றும் கருத இடமுண்டு.

முதல் வல்லத்துப் போர்

சோழருள் ஓரரசன் ஆரியரைத் தஞ்சை அடுத்த வல்லம் என்ற இடத்தில் நிகழ்ந்த போரில் முறையடித்ததாகப் பாவைக் கொட்டிலார் என்னும் புலவர் தெரிவிக்கிறார்.

‘மாரியம் பின் மழைத்தோல் சோழர் வென்வேல்

வில்ஈண்டு குறும்பின் வல்லத்துப் புறமிளை

ஆரியர் படையின் உடைக என்

நேரிறை முன்கை வீங்கிய வளையே’ (அகம்- 336)

காதலி காதலனிடம் உள்ள கோபத்தைக் கழலும் வளையல் மீது செலுத்தி, வல்லத்துப் போரில் உடைந்த ஆரியர் படைபோல் என் வளை உடையட்டும் என்கிறாள்.

தமிழக வரலாற்றில் வல்லத்தில் நடைபெற்ற போர்கள் பல. அவற்றுள் முதல் போர் ஆரியர் படை உடையத் தமிழர் ஆற்றிய இப் போரேயாகும். இப்போரில் ஈடுபட்ட சோழ மன்னன் யார், அது செருப்பாழி போரையொட்டி நிகழ்ந்ததா, பின் நிகழ்ந்ததா என்பது தெரியவில்லை.

கரிகாலன், நெடுஞ்செழியன் இமயப் படையெடுப்பு

வட திசையில் படையெடுத்த சோழன் கரிகாலன் இரண்டாம் கரிகாலனே. இவன் காலம் கி.மு. முதல் நூற்றாண்டு என்று கருதப்படுகிறது. வட திசை வென்ற பாண்டியன் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியனைப் பற்றி நாம் மிகுதி அறிவதற்கில்லை.

‘வட ஆரியர் படை கடந்து

தென் தமிழ்நாடு ஒருங்கு காணப்

புரைதீர் கற்பின் தேவி தன்னுடன்

அரைசு கட்டிலில் துஞ்சிய பாண்டியன்

நெடுஞ்செழியன் (சிலப்பதிகாரம் மதுரைக் காண்டம் இறுதிக் கட்டுரை)

என்ற இளங்கோவின் முத்தமிழ்க் காப்பியக் கூற்றிலும் விளக்கமான சான்று நமக்குக் கிட்டவில்லை.

சங்கப் பாடல்களில் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியனைப் பற்றிய பாட்டுக்கள் எதுவும் நமக்கு வந்து எட்டவில்லை. ஆனால் அவன் பெருவீரன் மட்டுமல்ல, சிறந்த சிந்தையும் செழுங்கலைத் திறமும் படைத்தவன் என்பதை அவனே பாடிய பாடல் ஒன்று காட்டுகிறது. அதுவே

‘உற்றுழி உதவியும், உறுபொருள் கொடுத்தும்

பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே….

…ஒரு குடிப்பிறந்த பல்லோ ருள்ளும்

மூத்தோன்வருக என்னாது, அவருள்

அறிவுடையோனாறு அரசுஞ் செல்லும்…” (புறம் 183)

எனக் கல்வி பற்றிப்பாடிய இக் காவலன் உயர் நலங் காட்டுவது ஆகும்.

மூவேந்தர் வடநாட்டுப் படையெடுப்புடன் நாம் புராண மரபின் வான விளிம்பையும் இலக்கியங் குறித்த மரபுகளின் வான விளிம்பையும் கடந்து சங்க கால வரலாற்று ஒளிக்குள் வருகிறோம்.

சங்ககாலப் போர்கள் 1

தமிழர் தமக்கென வரலாறு வகுத்துக் கொள்ளவில்லை என்று குறைப்பட்டுக் கொள்கின்றனர் சசிலர். தமிழருக்கு வரலாற்று உணர்வே கிடையாது என்று முடிவு செய்து விடுபவருமுண்டு. இந்த இரண்டும் இருவேறு வைகையில் பிழைபட்ட கருத்துகளாகும். ஏனெனில் அறிவியல்போல வரலாறும் எல்லா நாடுகளிலும் புதுப்படைப்பே. உலகெங்கும் வரலாற்றுக்கான ஆதாரங்கள் தேடி ஆராயப்பெற்று, நாட்டு வரலாறு தொகுக்கப்பட்டு வருவது சென்ற இரண்டு மூன்று நூற்றாண்டுகளிலேயே எனலாம்.

வரலாற்று ஆதாரங்களைப் பேணுவதிலும் தேடுவதிலும் நாடுகளைத் தூண்டியது தேசீய உணர்வே. தமிழகமும் சீனமும் நீங்கலான உலக நாடுகளில் இத் தேசீய உணர்வு காரணமாக நாட்டு எல்லை வகுகக்கப்பட்டதும், தேசீய அரசியல்கள் அமைந்ததும் அண்மைக் காலத்தில்தான். இத்தேசிய உணர்வுடன், பண்டை நாகரிகங்களின் தூண்டுதலால் ஏற்பட்ட கலை மறுமலர்ச்சியும், வரலாற்றை உருவாக்கும் முயற்சிக்கு எங்கும் மிகுந்த ஆக்கம் அளித்துள்ளது. தமிழகத்திலோ தேசீய உணர்வும், தேசீய நாட்டு எல்லையும், தேசீய அரசியலும் இரண்டாயிரம் மூவாயிரம் ஆண்டுகட்கு முன்பே ஏற்பட்டுவிட்டன. கலை மலர்ச்சியிலோ, உலகுக்குத் தூண்டுதல் தந்த பண்டை நாகரிகங்களுக்கு முற்பட்டே அதற்கு நீடித்த வளர்ச்சி ஏற்பட்டிருந்தது வரலாற்று உணர்வும் வரலாற்று ஒளியும் அதன் இலக்கிய வாழ்வு முழுதும் உள்ளூர நின்று ஒளி வீசுகிறது.

ஆனால் துரதிருஷ்டவசமாக, மற்றெல்லா நாடுகளிலும் புதிய தேசீயத்தால் வரலாறு காணப்பட்ட நாளிலேயே, தமிழகம் தன் தேசீய எல்லை, தேசீய அரசியல், தேசிய உரிமை வாழ்வு, தேசிய உணர்வு ஆகியவற்றை இழந்துள்ளது. எனவே, தமிழகம் தனக்கென வரலாறு வகுத்துக் கொள்ளவில்லை என்பதைவிட, அத்தகைய வரலாறு வகுப்பதற்குரிய சூழ்நிலையை இழந்து அது தடுமாறுகிறது என்பதே உண்மையாகும். தமிழினம் வரலாற்று உணர்வு அற்றது என்பதைவிட, அவ்வரலாற்று உணர்வு அயலின, அயல் மொழி ஆதிக்கங்களால் அடக்கி ஒடுக்கி அழிக்கப்பட்டு வருகிறது என்று கூறுவதே பொருத்தமானது.

பிரிட்டிஷ் ஆட்சி பொதுவாக தமிழகம் நீங்கிய கீழ்த் திசைக்கு முற்றிலும் அயலாட்சியாய் நிலவிற்று என்று கூற முடியாது. உண்மையில் சிந்து கங்கை வெளி போன்ற மாநிலங்களுக்கு வரலாற்று வெளிச்சம் அளித்தது அவ் வாட்சியே. அவ்வாட்சியிலேயே அம்மாநிலம் புத்தரையும், அசோகனையும் கணிஷ்கனையும் கண்டது. அதற்கு முன் அது வரலாறு என்ற பெயரால் அறிந்ததெல்லாம் பஞ்சதந்திரக் கதைகளும் விக்கிரமாதித்தன் வேதாள பதுமைக் கதைகளும், புராண பஞ்சாங்கங்களுமே, அத்துடன் அயலாட்சி என்று கூறப்படும் அவ்வாட்சியிலேயே மாநிலத்தின் பழம் பெருமைக்குரிய சிந்துவெளி, நாலந்தா, பாடலிபுர நகரம், கபிலவாஸ்து, வடமதுரை ஆகிய இடங்கள் பழமை ஆராய்ச்சி ஒளி கண்டன. தவிர, அம்மரபுக்குரிய சமசுகிருத மொழி, இலக்கியம் ஆகியவை சார்ந்த ஆராய்ச்சிகளிலும் வெள்ளையர் தத்தம் தாய் மொழிகளில் காட்டிய ஆர்வத்திலும் மேம்பட்ட ஆர்வம் காட்டி அவற்றைப் பேணி வளர்த்தனர்.

இவற்றுக்கு நேர்மாறாக, அதே ஆட்சியாளரும், அவர்களுக்குப் பின்வந்த மாநில ஆட்சியினரும்கூடத் தமிழ், தமிழகம், தமிழின மொழிகள் ஆகியவற்றின் வரலாற்றிலும், ஆராய்ச்சியிலும், பாராமுகம் உடையவர்களாகவே இருந்து வந்துள்ளனர். தமிழகத்தில் பண்டைப் பெருமைக்குரிய கொற்கை, பழமதுரை, வஞ்சிமூதூர், மண் மூடிய உறந்தை, கடலால் ஓரளவு அழிவுற்ற புகார், பழையாறை, கங்கைகொண்ட சோழபுரம், புதுவை, மல்லை, காஞ்சி ஆகிய இடங்களின் அகழ்வாராய்ச்சி தமிழக வரலாற்றுக்கும், மாநில வரலாற்றுக்கும் கூட பெரும் பயன் அளித்திருக்கும். ஆனால் அறிஞர் துப்ரேய்ல் போன்ற தனி வெள்ளையர் ஒருவர் இருவர் முயற்சியின்றி, ஆராய்ச்சித் துறையோ, ஆட்சியாளரோ அவற்றைக் கருத்தால் கூடத் தீண்டவில்லை.

தமிழகம் மாநிலத்தின் ஒரு நேரிய உறுப்பாகக் கூட கருதப்படவில்லை. மாநிலத்தின் ஒருபுற உறுப்பாக அதன் பண்பாட்டுக்கு ஊறு செய்யும் ஒரு நோயுறுப்பாகவே அது ஓரக் கண்ணால் பார்வையிடப்படுகிறது. இந்நிலையில் அதன் வரலாறு வகுக்கப்படாதிருப்பது மட்டுமல்ல குறை, வகுக்கப்படுவதற்குத் தடங்கலான பண்புகளே வளர்க்கப்படுகின்றன. கிட்டத்தட்ட ஆங்கில ஆட்சித் தொடக்கம் வரை இருந்ததாகத் தெரியவரும் தமிழிலக்கியக் கடலின் பெரும்பகுதி, அயல் பண்பாட்சியினரின் ஆதிக்கத்தால் அணிமைக் காலத்திலேயே அழிந்துள்ளதாக, இன்னும் அழிந்து வருவதாக அறிகிறோம்.

தமிழர் வரலாற்று உணர்வு

தமிழினத்தார் உண்மையில் வேறெந்த இனத்துக்கும் அணிமை வரை ஏற்படாத வரலாற்று உணர்வு மட்டுமின்றி, நில இயலுணர்வும், அறிவியலுணர்வும் உடையவராயிருந்தனர். இதனைத் திரட்டுருவிலும், துண்டுத் துணுக்கு வடிவிலும் நமக்கு இன்று கிடைத்துள்ள இலக்கியமும் கல்வெட்டுக்களுமே காட்டப் போதியன. உண்மையில் கல்வெட்டுக்கள் ஏராளமாயுள்ள பிற்காலத்தின் வகையில் நமக்குக் கிடைக்கும் வரலாற்று ஒளியை விட, சங்க காலத்துக்கு அதன் துண்டுத் துணுக்கு இலக்கியத்தால் கிடைத்துள்ள ஒளியே பெரிது. ஏனெனில் கல்வெட்டுகள் தற்செயலாகவே நமக்கு வரலாற்றுக்கு உதவுகின்றன. அவை கிட்டத்தட்ட அத்தனையும் கோயில்களுக்கும், கோயில் குருக்கல்மாருக்கும் மன்னர் கொடுத்த மானியங்கள் பற்றியவைகளே. ஆனால் சங்க இலக்கியம் மன்னர்கள், ஆட்சிமுறை, போர்கள், மக்கள் கருத்துகள், வாழ்க்கைச் சூழல் ஆகிய எல்லாத் துறைகளிலுமே பரவியுள்ளன. அதுபோன்ற வாழ்க்கை இலக்கியத்தை, வரலாற்று நோக்குடைய, அறிவியல் நோக்கு வாய்ந்த இலக்கியத்தை நாம் உலகில் வேறு எங்கணுமே காண முடியாது.

சங்க இலக்கியத்தில் அந்நாளைய பாண்டியரைப் பாடும் புலவர்கள், அவர்கள் தொலை முன்னோனாகிய நெடியோன் புகழைச் சுட்டிக் காட்டியுள்ளனர். சேரநாட்டில் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனை இவை வெள்ளையர் வரும் வரை எவரும் அறியாத செய்திகள் என்பது குறிப்பிடத்தக்கது.ப் பாடும் புலவர் ஒருவர் அவன் முன்னோரை மட்டுமின்றி மூவேந்தருக்குமே சிறப்புத் தரும் புகழ் வாய்ந்த நெடியோனையும் சுட்டி அவன்போல வாழ்வாயாக என்று வாழ்த்துகிறார். மாமூலனார், பரணர் போன்ற பழம் புலவர்கள் தம் காலத் தமிழக வரலாற்றுச் செய்திகளை மட்டுமின்றி தொலையிலுள்ள கங்கை நாட்டுச் செய்திகளையும் நமக்குப் பதிவு செய்து சென்றுள்ளனர்.


ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தென்னாட்டுப் போர்க்களங்கள் 8”

அதிகம் படித்தது