மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தொழில் முனைவோர் ஆக வயது ஒரு தடையில்லை

ஆச்சாரி

Dec 15, 2012

முதிய வயதிலும் ஒருவர் தொழில் முனைவோர் மற்றும் கண்டுபிடிப்பாளர் ஆகலாம் என்று நிருபித்து உள்ளார் அறுபத்து ஆறு வயதில் அனிதா குரூக் (Anita Crook) பாட்டிம்மா.

ஆம் தனது அறுபத்து  ஆறு வயதில் அனிதா குரூக்  ( Anita Crook) பாட்டிம்மா ஒரு மில்லியன் டாலர்  வருமானம் ஈட்டியுள்ளார், சிறு தொழில் செய்து இந்த உயரத்துக்கு வந்துள்ளார்.  அனிதா குரூக். பௌச்சீ (Pouchee®)என்று தனது கண்டுபிடிப்புக்கு பெயர் சூட்டியிள்ளார். பௌச்சீ என்பது ஒருங்கிணைப்பு  பணப்பை ( the purse organizer) . செய்தித்  தாள்களிலும், தொலைக்காட்சி செய்திகளிலும் இவரை பற்றி செய்தி  வந்துள்ளது.  பாக்ஸ் பிசினஸ் செய்திகள் உள்பட பல செய்தி  தொலைகாட்சிகளில் இவரது நேர்காணலும் வந்துள்ளது .

தொழில் முனைவோர் மற்றும் கண்டுபிடிப்பாளர் ஆக வயது ஒரு தடையில்லை என்று நமக்கு காட்டியுள்ளார் அனிதா குரூக்.

தனது ஐம்பத்தெட்டு வயதில் 2004ல் வடிவமைத்த  ஒருங்கிணைப்பு  பணப்பை (Pouchee®, the purse organizer) இன்று 2012ல் தனது அறுபத்து  ஆறு வயதில் இவரது புகழையும், தொழிலையும் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளது.

ஆவணபடுத்துதல் (organize) அல்லது ஒழுங்கமைத்தல் என்பதை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்ட சிறு பை வடிவமைப்பு இவ்வளவு பணத்தை, புகழை ஈட்டி தரும் என்று குரூக் நினைத்துக்கூட பார்க்கவில்லையாம். எல்லாம் கடவுளின் ஆசிர்வாதம் என்கிறார்.

தனது இரு மகன்களுக்கு தாயாக, சுறு சுறுப்பான மனைவியாக, குடும்ப தலைவியாக வளம் வந்த குரூக், 2004 ல்  தன் மகன் பரிசாக கொடுத்த அழகான தோல் பையில் எந்த உள்  அறை வசதியும்  இல்லாததை கண்டு தானாகவே ஒரு சிறு ஒருங்கிணைப்பு பணப்பையை  வடிவமைத்தார். பின் ஒரு நாளில் நோய்வாய்ப்  பட்டிருந்த தோழி ஒருவரை காணச்  சென்ற போது, அத்தோழியின் மகள்  அந்த வடிவமைப்பின் படி  பணப்பையைத்  தைத்துத்  கொடுத்துள்ளார்.

அவரே தனக்கு தெரிந்த சீன நாட்டு பை உற்பத்தியாளர் ஒருவரிடம் குரூக்கை அறிமுகம் படுத்தினார். முதன் முதலில் இரண்டாயிரம் பைகள் தைத்து வந்தாகிவிட்டது. நம்பிக்கை கலந்த தயக்கத்துடன் வீடு வீடாக ஏறி, கடை கடையாக ஏறி விற்று, நான்கு மாதங்களில் நூறு சதவிகிதம் (100%) வெற்றியும் பெற்றுள்ளார். முதலில் அறுபது  கடைகளில் மற்றுமே விற்க்கப்பட்ட இவரது படைப்புகள் இன்று உலக அளவில் இரண்டாயிரம்  கடைகளில் விற்க்கப்படுகின்றது. தனது கண்டுபிடி- ப்புகளுக்கு ஆறு காப்புரிமை (பேட்டன்ட்) பதிவு செய்துள்ளார் குரூக்.

தோல்விகள் வரும்போதெல்லாம் துவண்டு விடாமல், திட்டமிட்டபடி காய்கள் நகராத போதெல்லாம் தொய்ந்து விடாமல், ஊக்கத்தோடு செயல்பட வேண்டும் என்கிறார். இன்று தொழில் வளர்ந்த பின் எந்த முடிவு எடுக்க வேண்டும் என்றாலும் வாடிக்கையாளர்கள், தனது தொழிலாளிகள் – அவர்களின் குடும்பம், மற்றும் வியாபாரிகளின் நலனை கருத்தில் கொண்டு முடிவு எடுப்பதாக கூறுகிறார்.

வால்மார்ட், டார்கெட் போன்ற கடைகளில் இன்று இவர் வடிவமைத்த பௌச்சீ கிடைக்கிறது. பல வண்ணங்களில், துணி மற்றும் தோல் என இரு ரக பைகள் கிடைகின்றது. தேடும் நேர விரயம், கால தாமதங்களை, ஒழுங்கின்மையை விரும்பாத இன்றைய பெண்கள் உடை நிறத்திற்கேற்ப இந்த படைப்பை கைப்பைக்குள் தன்னுடன் எடுத்து செல்ல விரும்புகின்றனர் என்கிறார் இவர்.

தொழில் வெற்றியின் ரகசியம்:
வாடிக்கையாளர்களின் கருத்துகளின் படி, அவர்களின் விருப்பத்திற்காக வடிவமைப்பில் சில மாற்றங்களை செய்ய தயக்கமோ, தடுமாற்றமோ காண்பிப்பதில்லை இதுவே தொழில் வெற்றியின் ரகசியம், நுணுக்கம் என்கிறார் குரூக்.

இவருடைய தயாரிப்புகளை முதலில் பெரிய பெரிய கடைகளில்  விற்கவில்லை சிறு சிறு பரிசு பொருட்கள் விற்கும் கடைகள், மருத்துவமனைகளில் உள்ள பரிசு அங்காடி,  சிறு சிறு வணிக வளாகம் போன்ற கடைகளில் ஆரம்ப காலங்களில் விற்று உள்ளார். பின், சிறுக சிறுக வியாபாரத்தைப்  பெருக்கி உள்ளார். வலைத்தளம் கூட நவம்பர் 2012ல் தான் தொடங்கியுள்ளார்.

நம் ஊரில் உள்ள கைவினை பொருட்கள் உலக சந்தையை அடைய வேண்டும். கலை ஆர்வம் உள்ள பெண்கள் வெறும் வீட்டளவில் முடங்கி விடாமல் மேலும் வளரவேண்டும். கைவேலைப்பாடு, கைவினை பொருட்கள் தயாரிக்கும்,கலைவேலைப்பாடு தெரிந்த  பெண்மணிகள், கலைஞர்கள் முனைப்புடன் செயல்பட்டு வீட்டையும் நாட்டையும் உயர்த்த வேண்டும். இன்றைய காலகட்டங்களில் உள்ள வசதியை – சுய வேலைப்பாடு மையம், வங்கி நிதி போன்ற உதவிகளை  பெற்று வியாபாரத்தை பெருக்க வேண்டும். இதன் மூலம் குடும்பத்தில் நிதி நிலமையும் உயரும். வெறும் தொலைக்காட்சி நாடகங்களை பார்த்து நேரத்தை வீணடிக்காமல் தனக்குத்  தெரிந்த கைவேலைப்பாடை வைத்தே வளரலாம் பெண்களே.


ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தொழில் முனைவோர் ஆக வயது ஒரு தடையில்லை”

அதிகம் படித்தது