மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தேர்தலுக்காக காத்திருக்கும் கூடங்குளம் அணு உலை?

ஆச்சாரி

Feb 15, 2014

தமிழ்நாட்டின் அன்றாட நிகழ்வுகளில் போராட்டங்களும் ஒரு தவிர்க்க முடியாத பகுதியாகிவிட்டன. பெரும்பாலான போராட்டங்கள்  சிறு எண்ணிக்கையில் கூடும் சமூக ஆர்வலர்களால் எளிய முறையில் துண்டறிக்கை விநியோகத்துடன் மட்டும் நடத்தபடுகின்றன. அரசியல் கட்சிகள் மற்றும் பெரும் அமைப்புகள் நடத்தும் போராட்டங்கள் காவல்துறை அனுமதி பெற்று, பந்தலின் அடியில் பதாகைகள் கட்டி, தலைவர்கள் ஒலி பெருக்கியில் மணிகணக்கில் பேசும் போராட்டங்களாக பெரிய அளவில் நடத்தப்படுகின்றன. இன்று நடக்கும் போராட்டங்கள் யாவும் தங்களது கோரிக்கைகளை தெரிவிக்கும் அடையாள போராட்டங்களே. இவற்றில் பெரும்பாலான கோரிக்கைகள் தெளிவான இலக்குகள் ஏதும் கொண்டிருப்பதுமில்லை. அலுவலக வேலையைப் போன்று காலையில் தொடங்கி மாலையும் முடியும் போராட்டங்களின் அடிப்படையில் எந்த கோரிக்கைகளும் நிறைவேற்றப்படுவதுமில்லை. இதை போராட்டம் நடத்துபவர்களும், அரசும், பொது மக்களும் நன்றாகவே அறிந்து இருப்பதால் போராட்டங்கள் யாவும் சுவாரசியமற்ற சடங்குகளாகிவிட்டன. பெரும் தலைவர்கள் கலந்து கொள்ளும் போராட்டங்களை தவிர மற்றவற்றை எந்த ஊடகங்களும் கண்டுகொள்வதுமில்லை. பரபரப்பு ஊடக செய்திகளுக்காவே அரசியல்வாதிகளும் சில நேரம் கைதாகி விடுதலை அடைவதாக நடித்துக்காட்டுகிறார்கள்.

இந்த போராட்டங்களுக்கு அணைத்திலும் முற்றிலுமாக மாறுபட்டு போராட்டம் என்ற வார்த்தையின் உண்மையான பொருளை உணர்த்தும் வகையில் இடிந்தகரை மக்கள் போராடி வருகின்றனர். அவர்களின் கோரிக்கையை குழந்தைக்கும் புரியும் வகையில் மிகத் தெளிவாக கூடங்குளம் அணு உலை மூடவேண்டும் என்ற சில வார்த்தைகளுக்குள் அடக்கி இருக்கின்றனர். காலையில் தொடங்கி மதியம் முடிந்துவிடும் போராட்டங்களுக்கு நடுவில் இவர்கள் 900 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராடிவருகின்றனர். இந்த நீண்ட போராட்டத்தில் தலைமை மாற்றமோ, கோரிக்கைகளில் குழப்பமோ இல்லாதிருப்பதே அவர்களின் தெளிவான மனநிலையைக் காட்டுகின்றது. பல முறை காவல்துறை அடக்குமுறைக்கு ஆளானாலும் பொறுமை இழந்து வன்முறையில் ஈடுபடாமல் போராடுவதற்கு பக்குவப்பட்டிருக்கின்றனர்.

இவ்வளவு நேர்த்தியாய் போராடினாலும் இடிந்தகரை மக்களுக்கு இன்னும் வெற்றி கிடைத்துவிடவில்லை. கூடங்குளம் அணு உலை மின் தயாரிப்பில் நடக்கும் தாமதங்களுக்கு இம்மக்களின் சட்டப் போராட்டம் தொடக்கத்தில் ஒரு காரணம் என்றாலும் அடிக்கடி பழுதாகும் உபகரணங்களே தற்போதைய காரணம். ஏனிந்த போராட்டம் இன்னும் வெற்றியை தொட முடியவில்லை என்ற கேள்வியை தவிர்க்க முடியவில்லை.

இன்றைய காலகட்டத்திற்கு இது போன்ற மிதமான (அகிம்சா முறையிலான) போராட்டங்கள் பொருத்தமற்றவைகளாகி விட்டனவோ? 1845 ஆம் ஆண்டு ஹென்றி டேவிட் தொரோ (Henry David Thoreau) என்ற அமெரிக்கர் மக்களின் நலன்களுக்கு பாடுபடாத அரசிற்கு எதற்கு வரிகொடுக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பவே சிறையிலடைக்கப்பட்டார். பின்னர் தொடர்ந்து எவ்வாறு அரசிற்கு ஒத்துழைக்காமல் போராடலாம் என்று மேடைகளில் பேசியும் கட்டுரைகளை எழுதியும் வந்தார். இந்தியாவில் காந்தி மிதமான (அஹிம்சா முறையிலான) போராட்டத்தை முன்னெடுத்து உலகையே திரும்பி பார்க்கவைத்து பெரும் வெற்றியை கண்டார். இதே நூறாண்டு பழைய மிதமான போராட்ட கொள்கையைப் பின்பற்றி இன்று இடிந்தகரை மக்கள் உண்ணாவிரதம், பேரணி, வாக்காளர் அட்டையை திரும்ப அரசிடம் ஒப்படைப்பது என்று பல முறைகளில் போராடியும் அரசு கண்டுகொள்வதாய் இல்லை.

போராட்டத்தின் ஒரு முக்கிய கூறு எதிர்க்கப்படுவர்களுக்கு சிரமம் கொடுப்பது. அரசை எதிர்க்கும் போராட்டங்களில் அரசிற்கு எந்த சிரமமும் கொடுக்கவில்லை என்றால் எந்த அரசும் போராட்டத்தின் மீது சிரத்தைக் கொள்ளாது என்பது இயற்கையே. உதாரணத்திற்கு சமீப காலத்தில் உலக அளவில் பேசப்பட்ட இரு பெரும் போராட்டங்களைப் பாருங்கள்.

அமெரிக்கா ஈராக் மீது போர் தொடுத்ததை எதிர்த்து உலகெங்கும் பல கோடி மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். அந்த ஆண்டு (2003) பிப்ரவரி 15 ஆம் தேதியில் நடந்த போராட்டத்தில் மட்டும் உலகெங்கும் 600க்கும் மேற்பட்ட நகரங்களில் மூன்று கோடி மக்கள் கலந்துகொண்டிருக்கின்றனர். அன்று ரோம் நகரில் நடந்த போராட்டத்தில் முப்பது இலட்சம் மக்களுக்கும் மேல் பங்கேற்றது கின்னஸ் உலக சாதனையாக பதியப்பட்டிருக்கின்றது. இருப்பினும் இந்த போராட்டங்களால் அமெரிக்க அரசிற்கு எந்த ஒரு நெருக்கடியும் ஏற்படவில்லை. அமெரிக்கா தனது இச்சைப்படி ஈராக் மீது போர் தொடுக்கத்தான் செய்தது.

அதே போன்று சமீபத்தில் அமெரிக்காவில் தொடங்கிய வால் தெரு ஆக்கிரமிப்பு (Occupy Wall Street) போராட்டத்திலும் பல்லாயிரம் மக்கள் கலந்து கொண்டனர். ஈராக் போர் எதிர்ப்பு போராட்டத்தைப் போன்று இப்போராட்டமும் அனைத்து ஊடகங்களாலும் பரபரப்பாக பரப்பப்பட்டது. ஆனால் உண்மையில் இப்போராட்டத்தால் வால் தெருவில் இருக்கும் தனியார் பங்கு சந்தை நிறுவனங்களுக்கு கூட எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அவர்கள் எவ்வாறு மது அருந்திக்கொண்டே போராட்டத்தை வேடிக்கை பார்கின்றார்கள் என்று இந்த ஒருநிமிட காணொளியில் பாருங்கள்.

http://www.youtube.com/watch?v=2PiXDTK_CBY&feature=related

பின்னர் எப்படி இந்த போராட்டம் வெற்றியடைய முடியும்?

நம் நாட்டில் அண்ணா ஹசாரே நடத்திய மிதமான உண்ணாவிரத போராட்டங்களும், அனைத்து தேசிய ஊடங்ககளால் அதிகம் காட்சிபடுத்தபட்ட பொழுதும் வெற்றி பெறவில்லை. அவர்கள் எதிர்பார்த்த லோக்பால் மசோதா இன்றளவும் கனவாகத் தான் இருக்கின்றது.

கூடங்குள அணுஉலைக்கு எதிரான போராட்டமும் அணுஉலை நிர்வாகத்திற்கோ அரசிற்கோ எந்த சிரமமும் கொடுக்காமல் இடிந்தகரை கிராமத்தில் அமைதியாக நடந்துவருகின்றது. இதே முறையில் இம்மக்கள் இன்னும் ஆயிரம் நாட்கள் போராடினாலும் அரசு கண்டுகொள்ளப்போவதில்லை.

கூடங்குள அணுஉலை வாசலில் அமர்ந்தோ, அணு உலையை செயல்பட விடாமலோ தடுக்கும் முயற்சியில் இறங்கினால், மாநில அரசும், மத்திய அரசும் ஈவு இரக்கமின்றி கண்மூடித் தனமான தாக்குதலில் இறங்கும் என்பது அசிங்கமான உண்மை. இந்நிலையில் அரசிற்கு நெருக்கடி கொடுப்பதற்கு இருக்கும் எஞ்சி இருக்கும் ஒரே வழி தேர்தல் அரசியல் மட்டுமே.
கூடங்குள அணு உலைக்கு எதிராக செயல்பட தமிழகத்தில் எந்த பெரிய கட்சிக்கும் ஆர்வமில்லை. அரசாங்கம் ஒரு நிழல்குடை கட்டினால் கூட ஒப்பந்தகாரர்களிடம் இருந்து இலஞ்சம் பெரும் அரசியல்வாதிகள், அணு உலை கட்டடமைப்பு மற்றும் விரிவாக்கத்தில் எவ்வளவு இலஞ்சம் பெற்றிருப்பார்கள்? பின்னர் ஏன் பெரிய கட்சியின் அரசியல்வாதிகள் அணு உலையை எதிர்க்கப் போகிறார்கள்?
ஒன்றிரண்டு சிறு கட்சிகள் அணு உலைக்கு எதிர்ப்பு போராட்டத்திற்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருகின்றன. இருப்பினும் அவர்களுடைய ஆதரவு வெறும் அடையாள ஆதரவு நிலையில் தான் இருந்து வந்திருக்கின்றது. தலைவர்கள் மட்டும் இடிந்தகரைக்கு வந்து புகைப்படம் எடுத்து கொள்கிறார்களே ஒழிய தங்கள் கட்சியின் தொண்டர்களை வைத்து அரசிற்கு நெருக்கடி கொடுக்ககூடிய வகையில் போராட்டங்கள் நடத்துவதற்கு விருப்பமில்லாமல் இருக்கின்றனர். தானம் கொடுத்த மாட்டை பல்லை பிடித்து பதம் பார்க்க கூடாது என்ற முறையில் இடிந்தகரை மக்களும் அக்கட்சிகளின் ஆதரவிற்கு நாகரிகமாக நன்றி தெரிவித்து கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் தேர்தலின் மூலம் நெருக்கடி கொடுக்க இடிந்தகரை மக்களுக்கு நேரடியாக அரசியலுக்கு வருவதைத் தவிர வேறு  வழியில்லை. போராட்ட பாதையைவிட அரசியல் பாதை இன்னும் கடினமானது. அணு உலை எதிர்ப்பாளர்கள் தங்களது பலத்தையும்  பலவீனத்தையும் நன்குணர்ந்து கவனமாக  செயல்பட வேண்டிய களம் அரசியல். திரு.உதயகுமார் உட்பட போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் இடிந்தகரை கிராமத்தை விட்டு கூட வெளிவர முடியாத திறந்த வெளி சிறைக்கூடத்தில் வாழ்ந்து வரும் நிலையில் அரசியல் பாதை எளிதாக அமையாது. தற்போது ஆதரவு தரும் ஒன்றிரண்டு சிறு கட்சிகளும் நாளை எதிர்த்து கூட்டங்கள் நடத்தும். நட்பு இயக்கங்கள் பலவும் இல்லாத காரணங்களை கண்டரிந்து பகைமை பாராட்டும். இருப்பினும் பழையன கழிந்தால் புதியன புகும் என்ற நம்பிக்கையில் அணு உலை எதிர்ப்பாளர்கள் அரசியல் களம் காணுவது அவசியம்.

இடிந்தகரையை சுற்றி உள்ள ஒன்றிரண்டு இலட்ச மக்களின் வாக்குகளுடன் சட்ட மன்றத்திலோ, நாடாழுமன்றத்திலோ எந்த தாக்கத்தையும் உண்டு பண்ண  இயலாது. தங்களது ஆதரவு வட்டத்தை அணு உலை எதிர்ப்பாளர்கள் பெருக்கி கொள்ள வேண்டும். கூடங்குள அணு உலையால் மட்டுமல்ல, மீத்தேன் திட்டத்தாலும், நியூட்ரினோ திட்டத்தாலும், எரிவாயு குழாய் திட்டத்தாலும் மக்கள் பாதிக்கப்பட்டு தான் இருக்கின்றனர். நேர்மையான காவல் துறை அதிகாரியை கூட கண்டறிந்து விடலாம், ஆனால் அரசின் தவறான திட்டங்களால் பாதிக்கப்படாத ஊர் மக்களை கண்டறிய முடியாது. அந்நிலையில் நம் நாட்டின் ஒவ்வொரு மூலையில் இருக்கும் மக்களும் அரசியல் வாதிகளின் சுயநல திட்டங்களால் பாதிக்கப்பட்டு கொண்டு தான் இருக்கின்றனர். அணு உலை எதிர்ப்பாளர்கள் ஒவ்வொரு ஊரில் இருக்கும் மக்களை ஒருங்கிணைத்து அந்தந்த ஊரின் பிரச்சினைகளுக்கு போராட துவங்க வேண்டும். பிரிட்டிஷ் இந்தியாவில் காந்தி ஒவ்வொரு ஊராக சென்று அவர்களின் பிரச்சினைக்கு போராடி தான் மக்களின் ஆதரவை திரட்டினார்.

மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் போராடும் பொது இயக்கம் ஒன்றை உருவாக்க வேண்டும். மக்களின் நலனை மட்டும் முன்னிறுத்தும் வெளிப்படையான கொள்கைகளை அறிவித்து கூட்டு தலைமை முறையில் இயக்கத்தை நிறுவி பெருந்திரளான மக்களின் ஆதரவை திரட்ட வேண்டும். சமூக ஆர்வமுள்ள பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், மாணவர்கள், ஊழலுக்கு எதிராக போராடுபவர்கள் அனைவரையும் இப்பொது இயக்கத்தின் நிர்வாகத்தில் ஒருங்கிணைக்க வேண்டும். இவற்றை செய்து முடிக்க பல ஆண்டுகள் ஆகலாம். அதுவரை காத்திராமல் எதிர் வரும் ஒவ்வொரு தேர்தலிலும் நேர்மையானவர்களை, எளியவர்களை, மாணவர்களை வேட்பாளர்களாக நிறுத்தி வெற்றிக்கு பாடுபடவேண்டும். வரும் நாடாழு மன்ற தேர்தலில் தென் மாவட்டங்களில் சில தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்துவது காலத்தின் கட்டாயம்.

பல ஆண்டுகளாக அணு உலையை மூடும்படி அதிகார பலமற்ற வெற்று அதிகாரிகளை வேண்டி வந்தீர்கள், தற்காலிக அதிகாரம் கொண்ட அரசியல்வாதிகளை வேண்டி வந்தீர்கள். இனி நீங்கள் வேண்டி நிற்க வேண்டியது அனைத்து அதிகாரத்தையும் தன் விரல் நுனியில் வைத்திருக்கும் பொது மக்களிடம் மட்டும் தான்.

It is important to make sure the tracking topspyingapps.com app you choose is adequate and meets the individual needs of your family

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தேர்தலுக்காக காத்திருக்கும் கூடங்குளம் அணு உலை?”

அதிகம் படித்தது