மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தேவை தற்சார்புள்ள பன்னாட்டு புலனாய்வு

ஆச்சாரி

Jan 25, 2014


இலங்கையில் போர்முடிந்து 5 ஆண்டுகள் முடிவடையவுள்ளது. தமிழர் சிக்கலுக்கு புலிகள்தான் காரணம், அவர்கள் அழிந்தால் தமிழினச் சிக்கல் தீர்ந்துவிடும் என்று பொய்யுரைத்து தமிழினத்தையும் அழித்தது இலங்கை அரசு. அக்கொடூர அரசிற்கு வக்காலத்து வாங்கியது காந்தியும், புத்தனும், வள்ளலாரும் பிறந்த நாடு. இந்த சகிக்காத இசைக்கு ஒத்தூதின உலகநாடுகளும் ஐநா அவையும். போர் முடிந்து சுமார் 150,000 தமிழர்கள் அழிக்கப்பட்டபின் தாம் தமிழர்களைக் காக்கத் தவறிவிட்டோம் என்றும் ஐநா அவையே ஒத்துக்கொண்டது. ஆனால் அழிக்கப்பட்ட அந்த 150,000 அப்பாவித் தமிழர்கள் மீண்டும் வருவார்களா? தான் செய்த பாவத்தைக் கழுவ மேலை நாடுகள் இன்று மனிதகுலத்திற்கு எதிராகச் செயல்பட்டுவரும் இராசபக்சேவை புரிந்துக் கொண்டு ஏதாவது ஒரு தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்று முயன்று வருகின்றன. இங்கிலாந்து தலைமையமைச்சர் திரு. டேவிட் கேமரூன் அவர்களின் யாழ்ப்பாணப் பயணம், ஐநா மனித உரிமை ஆணையர் திருமதி நவநீதப்பிள்ளை அவர்களின் ஈழப் பயணம் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது. தமிழக அரசின் நிலையும் அனைத்து தமிழக தலைவர்களின் குரலும் இதற்கு வலு சேர்த்துள்ளது.

இந்நிலையில் அண்மையில் அமெரிக்காவின் அனைத்துலக போர்க்குற்ற அலுவலகத்தின் மூத்த அலுவலர் திரு சுடீவன் ராப் அவர்களின் ஈழப் பயணம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அமெரிக்கா,  ஈழத்தில் நடந்த தமிழின படுகொலையை ஆராய ஒரு தற்சார்புள்ள பன்னாட்டு புலனாய்வின் தேவையை மார்ச்சு மாத கூட்டத்தொடரில் முன்மொழியவுள்ளதாக தெரிகிறது. இதற்கு இங்கிலாந்து, கனடா மற்றும் பல மேற்குலக நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளது உலகத் தமிழர்களுக்கு புதுத் தெம்பை அளித்துள்ளது.  திரு ராப் அவர்கள் திருமதி அனந்தி சசிதரன் (விடுதலை புலிகளின் முன்னால் கிழக்கு அரசியல் தலைவர் திரு. எழிலன் அவர்களின் துணைவியார்) அவர்களையும் மேலும் பல தமிழ்த் தலைவர்களையும் சந்தித்திருப்பது இதை உறுதிப்படுத்துகிறது.

நவம்பர் 2013-ம் ஆண்டு நியூசெர்சியில் இலங்கைத் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டுவிழாவான தமிழர் சங்கமத்தில் ஈழத்திலிருந்து பல தலைவர்கள் வந்து சிறப்புறையாற்றினர். அதில் திருமதி அனந்தி சசிதரன் அவர்களும் கலந்து கொண்டு போரின் முடிவில் அரங்கேறிய தமிழின அழிப்பையும், அதைத் தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகளாக நடந்தேறிவரும் திட்டமிடப்பட்ட தமிழின அழிப்பையும், மக்களின் துயர வாழ்வினையும் விரிவாக எடுத்துக்கூறி அனைவரின் நெஞ்சத்தை உலுக்கினார். அவரது கள்ளம் கபடமற்ற உண்மைப் பேச்சு அனைவரையும் கவர்ந்தது. அக்கூட்டத்திற்கு பின் திருமதி சசிதரன் அவர்கள் வாசிங்டன் டி.சி. சென்று பல அமெரிக்க அதிகாரிகளை சந்தித்தார். அதன் தொடர்ச்சியாக திரு. ராப் அவர்கள் திருமதி சசிதரனை சந்தித்திருக்கலாம் என்று நம்பத்தோன்றுகிறது. இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் திரு. ராப் அவர்களும் அமெரிக்காவின் இலங்கைத் தூதர் திருமதி மிசல் சிசன் அவர்களும் போரினால் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று பார்வையிட்ட நிழற்படங்களை வெளியிட்டிருந்ததை கவனிக்கையில் அமெரிக்காவின் அடுத்தக்கட்ட நடவடிக்கை ஓரளவிற்கு தெளிவாகிறது.

உலகத்தமிழர்களின்எதிர்பார்ப்பு

இந்நிலையில் புலம்பெயர்ந்த தமிழர்கள் தமிழகத்திடமிருந்து என்ன எதிர்ப்பார்க்கிறார்கள்? கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் தமிழகம் கொந்தளிக்க வேண்டும் என்று உலகத் தமிழர்கள் எதிர்பார்க்கிறார்கள்.  2012, 2013-ம் ஆண்டு மனித உரிமை அவையில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை நீர்க்கச் செய்தது இந்தியா என்பதை நாம் நன்கறிவோம். இந்தியாவின் இந்த தமிழர்க்கு எதிரான செயலை மேலை நாடுகள் எதிர்ப்பார்க்கவில்லை, இருந்தாலும், இந்தியாவின் ஆதரவு வெகுமுக்கியம் என்பதால் பொறுத்துக்கொண்டு உதவாத தீர்மானத்தை முன்வைத்தது. அத்தீர்மானங்களினால் தமிழர்க்கு எவ்வித பயனுமில்லை. அதன் ஒரே பலன், இலங்கையை குற்றவாளிக்கூண்டில் தொடர்ந்து நிற்க வைத்ததுதான்.

கடந்த ஆண்டு தீர்மானத்தினால்தான் இந்த ஆண்டும் இலங்கை ஐநா அவையில் கூனிக்குறுகி நிற்கிறது. அத்தீர்மானத்தினால்தான் திருமதி நவநீதப்பிள்ளை அவர்கள் ஈழத்திற்கு பயணம் செய்ய முடிந்தது. அன்னாரின் அறிக்கை இந்த மார்ச்சு மாதக் கூட்டத்தில் அவைமுன் வைக்கப்படும். அறிக்கையின் மீது விவாதம் நடைபெறும், ஈழத்தில் நடந்த மனிதகுலத்திற்கு எதிரான அவலத்தை மீண்டும் ஒருமுறை அந்த அவையினர் முன் காட்சிக்காக வைக்கப்படும்.

இம்முறை அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானம் தமிழர்க்கு சற்றே சாதகமாக இருக்க வாய்ப்புள்ளதாக செய்திகள் பரவலாக வருகின்றன. இத்தீர்மானம் மேலும் பலமானதாகவும், இலங்கை அரசிற்கு எதிராகவும் இருக்க தமிழகத்தின் உதவி பெருமளவில் தேவைப்படுகிறது. கடந்த ஆண்டைப்போலவே அனைத்து கட்சிகளும், சமூக அமைப்புகளும், மாணவர் அமைப்புகளும் ஒத்த குரலில் ஒலிக்க வேண்டும். அது முள்ளிவாய்க்காலில் நடந்த மனித அவலத்தை ஆராய ஒரு ‘தற்சார்புள்ள  பன்னாட்டு புலனாய்வு’ (Indepedent International Investigation) செய்ய ஒரு குழு (Commission of Inquiry) ஐநா அவை அமைக்க வேண்டும் என்பதுதான். இதை இந்தியா ஒருமனதாக ஆதரிக்கவைக்க வேண்டியது நம் எல்லோருடைய கடைமையும் கூட.

அமெரிக்கதமிழ்அமைப்புகளின்முயற்சி

அமெரிக்காவில் தீவிரமாக செயல்பட்டுவரும் அமைப்புகளில் முதன்மையான அமைப்புகள் சில தமிழகத் தலைவர்களுக்கும் மற்ற அமைப்பினருக்கும் வேண்டுகோள் கடிதம் எழுதியுள்ளன. அமெரிக்க வெளியுறவுத் துறையுடன் தொடர்பிலிருக்கும் அமெரிக்க தமிழர் அரசியலவை (United States Tamil Political Action Council), உலகத் தமிழ் அமைப்பு, இலங்கைத் தமிழ்ச் சங்கம், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை போன்ற அமைப்புகளின் வேண்டுகோளாக இக்கடிதங்கள் அனைவருக்கும் செல்லத் துவங்கியுள்ளன.

இக்கடிதத்தின் முக்கியக் கோரிக்கைகள்:

  • முள்ளிவாய்க்காலில் நடந்த இனவழிப்பை ஆராய ஒரு பன்னாட்டு புலனாய்வு அமைக்க இந்தியாவை நிர்பந்திக்க வேண்டும். இத்தீர்மானத்தை வெளிப்படையாக இந்தியா ஆதரிக்க வேண்டும்.
  • இலங்கை அரசின் மீதிருக்கும் போர்க்குற்றத்தை ஆராய ஐநா அவை குழுவொன்று அமைக்க வேண்டும், இத்தீர்மானத்தை முந்தைய ஆண்டு போல நீர்க்கவைக்க முயலாமல் இந்தியா ஆதரிக்க வேண்டும்.
  • தமிழக நலனைக் கருத்தில் கொண்டு அதையே இந்திய நலனாகக் கருதி இலங்கையை பாதுகாக்கும் எண்ணத்தை கைவிட்டு அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும்

2014 மார்ச்சு மாதத்தில் நடபெறவிருக்கும் ஐநா மனித உரிமை அவைக் கூட்டம் நமக்கு மிகமுக்கிய நிகழ்வு. அமெரிக்கா தொடர்ந்து தீர்மானத்தைக் கொண்டுவரும் என்று நம்ப முடியாது. எனவே இக்கூட்டத்தில் இலங்கை அரசிற்கு எதிரானதொரு தீர்மானத்தை அமெரிக்கா கொண்டுவரவைப்பது தமிழத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள், அனைத்து தமிழ் அமைப்புகள் முக்கியமாக தமிழக மாணவர்களின் அடுத்தக் கட்ட செயலில்தான் உள்ளது.

கடந்த ஆண்டை போலவே மாணவர் போராட்டம் வெடிக்கட்டும், தமிழக கட்சிகளும் தமிழக சமூக அமைப்புகளும் இதற்கு ஆதரவான போராட்டத்தை உடனடியாகத் துவக்க வேண்டும். கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் தமிழக சட்டமன்றத்தில் இலங்கைக்கு எதிராகவும், இந்தியா அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரிக்கவும் தமிழக அரசு வேண்டுகோள் விடுப்பது மட்டுமல்லாமல் நெருக்கடிகள் பல கொடுக்க வேண்டும். நாடாளுமன்றத் தேர்தல் வரும் வேளையில் கட்சிகள் தமிழர் நலனிற்கு எதிராகச் செயல்படுவதில் தயக்கம் காட்டும், அதை நாம் நன்கு பயன்படுத்தி, இலங்கைக்கு எதிராகவும், தமிழர் நலன் காக்கும் செயல்திட்டத்தை தீட்டி அதில் வெற்றி காணவேண்டும். தேர்தல் அகில இந்தியக் கட்சிகளும் தமிழர்க்கு ஆதரவாக செயல்பட வைக்க வாய்ப்புள்ளது. நாம் இதை பயன்படுத்திக்கொண்டு ஈழத்தமிழர்க்கு நல்லதொரு அரசியல் தீர்வை வாங்கிக் கொடுப்பது நம் வரலாற்றுக் கடமை. 2009 முள்ளிவாய்க்காலில் நடந்த மனித அவலத்தைக் கண்டு நம்மால் ஒன்றும் செய்ய இயலவில்லையே என்று அழுது அரற்றிகொண்டிருந்தோம். இன்று அதற்கு பரிகாரம் தேட நல்ல வாய்ப்பு, செய்வோமா?

By taking a few minutes to review this app, you will be better informed and www.cellspyapps.org understand the risk when it comes to whisper before a child encounters a problem

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தேவை தற்சார்புள்ள பன்னாட்டு புலனாய்வு”

அதிகம் படித்தது