மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தொகுப்பு கவிதை (மௌனம், பயணம்)

மீனாட்சி சுந்தரமூர்த்தி

Jul 21, 2018

மௌனம்

siragu mounam1

 

அலங்கார மேடை

வண்ண

விளக்குகள்,

 

திடல் நிறைந்திருந்தது.

உள்ளூர்

வெளியூர் வாசிகளோடு.

 

சப்பானிலிருந்து

சாது

வருகிறார்.

 

இவர் உலகம்

முழுதும்

போனவராம்,

உயர்ந்த புகழ்

சேர்த்தவராம்.

 

ஒட்டு மொத்தப்

பிரச்சினைக்கும்

சொல்வாராம் தீர்வு.

 

பந்தலில் மக்களின்

பேச்சு இது.

சீடர் தொடர

வந்தார் சாது.

 

விழாத் தலைவரின்

உபசாரம்,

வரவேற்பு முடிந்தது.

 

சீடர்கள் வீசிடச்

சாமரம்,சாது

மலர்ந்தார் திருவாய்.

 

மொழி பெயர்த்தார்

ஒருவர்

நம் தமிழில்.

 

பேசாதிருப்பதே,

மௌனமே

மாமருந்தாம்.

மோனம் கைகூட

ஏது சர்ச்சை?

இன்பம் இன்பமே!

 

கூட்டத்தில் எங்கும்

சலசலப்பு

பண்டம் விற்போர்.

 

பேசிய தொகை

கிடைக்குமா

சிந்தனையில் சிலர்.

 

கிள்ளும் பசியில்

பிரியாணி

தேடும் விழிகள்.

 

மூன்று மணிநேரம்

போனதே

தெரியவில்லை,

 

கரவொலி பிளந்தது

விண்ணை,

மௌனித்துப் போனது

மௌனம்மட்டுமே!

 

                        பயணம்

siragu mounam2

 

வழியனுப்ப வந்தவர்

ஏராளம்.

அவனது பயணம்

திடீரென

முடிவானதுதான்.

 

திட்டமிட்டு ஏதும்

செய்ய

முடியவில்லை.

 

ஏதும் சொல்லாததால்

வருத்தம்

பிள்ளைகளுக்கு.

 

மனைவிக்கு தானும்

போகாதது

பெரிய கவலை

 

உறவுகளின்

முணுமுணுப்பு

கஞ்சப் பயல்.

 

நண்பர்கள் சிந்தனை

ஏற்பாடு

பயணத்திற்கு

 

கூட்டத்தில் ஓர் குரல்

சீக்கிரம்

போடப்பா மாலையை.

 

அவன்

விடைபெற்றான்,

தூக்கினார்கள்

பல்லக்கை.

 


மீனாட்சி சுந்தரமூர்த்தி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தொகுப்பு கவிதை (மௌனம், பயணம்)”

அதிகம் படித்தது