மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தொதுவர் (தோடா) இன மக்கள்

ஆச்சாரி

Jan 1, 2013

படுகாஸ், குருமாஸ் , தோடாஸ், கோத்தாஸ் எனும் பழங்குடி இனங்களுள் தொதுவர் என அழைக்கப்பட்டு இன்று  தோடா மக்கள் நீலகிரி மலைத் தொடரை பூர்வீகமாகக்  கொண்டு வாழும் மலை வாழ் மக்கள். தங்களுக்கென தோடா என்ற மொழியைக்  கொண்டு பேசி வருகின்றனர் உச்சரிப்பில் சற்று வேறுபட்டே விளங்கும் இம்மொழிக்கென்று ஒலிவடிவம் மட்டுமே, எழுத்து வடிவம் ஏதும் கிடையாது.

பெரும்பாலும் தேன் எடுத்தல், எருமை வளர்ப்பு ஆகியவையே தமது பிரதான  தொழிலாகக்  கொண்டவர்கள். அதன் வழி கிடைக்கும் பால், வெண்ணை, தயிர், தேன், திணை ஆகியவை உணவாகக் கொண்டு பாரம்பரிய முறையில் வாழ்ந்து வருபவர்கள் தான் தோடா இனத்தினர். இவர்கள் சோறு வடித்து நன்கு கெட்டியான எருமைத் தயிரில் மிளகாய் எல்லாம் போட்டுத்  தாளித்துக்  கொடுக்கும் தயிர் சோற்றையே பாரம்பரிய உணவாக கொண்டுள்ளனர்.

இவர்கள் உடை முறைகளைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும் உள்ளன் (woolen) போன்ற தற்போது 1 மீட்டர்  800 ருபாய் மதிப்புள்ள ஒரு வகை துணியைப்  பெற்று அதில் இவர்களே  கைவேலைப்பாடு (emboroidry) நெய்து  போர்வை போன்று செய்து அதனையே விழாக்  காலங்களில் உடுத்திக்கொள்கின்றனர். தற்போது அதையே விற்கவும் தொடங்கியுள்ளனர்.

இவர்கள் பர்ஸ்வாஸ்- சில் இயற்கையையே வணங்குகின்றனர். தோடா மொழியில் “பர்ஸ்வாஸ்” என்றால் கோவிலாகும். ஒளியையே கடவுளாய்  வழிபடுகின்றனர். இவர்கள் சூரியன், சந்திரன், வில், அம்பு, எருமை ஆகியவற்றையே மதிக்கின்றனர். மேலும் இவர்கள் வழிபாடும் கோவிலின் அமைப்பு கூட  இவ்வாறு இயற்கை சார்ந்தே உள்ளது. கோவில் திருவிழா பூஜையின் போது மட்டுமே திறக்கப்படும் இக்கோவிலில் ஒளி, மண் பானை, மத்து போன்றவற்றையே வைத்து வணங்குகின்றனர். மேலும் பூஜையின் போது பூசாரி கோவணம் கட்டி, கருப்புத்  துணியுடன் கோவிலுக்குள் சென்றால் பூஜை முடியும் வரை வெளியே வரமாட்டார், பூஜை 48 நாட்கள் வரைகூட நீளும். அவருக்குத்   தேவையான சோறு, பால், தயிர் ஆகியவை வெளியிலிருந்து வழங்கப்படும்.

இவர்கள் கல்யாண முறையில் பாரம்பரிய உடைகளை அணிந்து “பேர்ஸ்தோ” என்னும் இலையைக் கொண்டு செய்யப்பட்ட வில் ஒன்றை மணமகன், மணமகள் ஆகிய இருவரும் பரிமாறிக் கொள்வர். நம் ஊரில் தாலிக் கட்டுவது போன்று இதுவே இவர்களின் கல்யாண முறையாக உள்ளது. இவர்களின் கல்யாண விழா வெகு விமர்சியாக  பாரம்பரிய முறையில் ஆட்டம், பாட்டம் எனக் கொண்டாடப்படும். இவர்களுக்கென்று வாத்தியம் ஏதும் அல்லாது வாயால் எழுப்பப்படும் ஒலியையே இசையாகக் கொண்டு ஆடி மகிழ்கின்றனர்.

இவர்கள் பெயர்முறைகள் மிக வித்தியாசமானது , தோடா இன மக்கள் வாழும் பகுதிகளை “மந்து” என்பர். மந்து என்றால் கிராமம் என்று அர்த்தம், எடுத்துக்காட்டாக முத்துநாட மந்து, முள்ளி மந்து எனக் கிராமங்களை அழைப்பர்.

இவர்களின் இன்றைய தலைமுறைப் பெயர்கள் தியாகு, சத்யா போன்றே உள்ளது. ஆனால் முந்தைய தலைமுறைகளில் சூடாமல்லி, எர்சிக்பூச்கிப், லில்லிச் என்று  பெண்டிர் பெயர்களும், நேராடுகுட்டன், முத்துனார்ஸ், கர்னர்ஸ் என்று ஆண்கள் பெயர்களும் வழக்கிலுள்ளது..

ஆனால் தற்போது தமிழ் மொழியைக் கற்று, இயல்பு வாழ்கையை வாழ்ந்து வரும் தோடா இன மக்கள், படிப்பறிவு பெற்று வண்டி ஓட்டுனர், கடை வியாபாரம், போன்ற வேலைகளைச் செய்கின்றனர். நாகரீக வளர்ச்சியால் நம்மைப் போன்று சாதாரணமான  உடையைத் தற்போது  உடுக்கின்றனர். எருமை வளர்ப்பை குறைத்து தேயிலைத் தோட்டம், காய்கறி, கிழங்கு என விவசாயம் செய்கின்றனர். ஆனால் என்னதான் நாகரீகம் வளரப்பெற்றாலும், தொழில்,உணவு, உடை முறைகளில் மாற்றம் கண்டாலும் தமது வாழ்விடமான மருத நிலத்தை விட்டுக் கொடுக்காமல் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் மலைவாழ் இடங்களில் வாழ்ந்தாலும் பொய், பித்தலாட்டம், சூது, வஞ்சகம் இல்லாமல், பிறருடைய உழைப்பில் வாழாது தன் உடல் உழைப்பை மட்டுமே நம்பி வாழும் இவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள நமக்கு நிறையவே இருக்கின்றது.

The www.essayclick.net focus is primarily but not exclusively on teaching at undergraduate level

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

முதற் கருத்து பதிவாகியுள்ளது- “தொதுவர் (தோடா) இன மக்கள்”
  1. Deepan says:

    அருமை

அதிகம் படித்தது