மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தொலைக்காட்சிக் கடலில் தொலைந்த தமிழர் வாழ்க்கைத் துளி

ஆச்சாரி

Jan 4, 2014

மனித வாழ்க்கை:

வாழ்க்கை என்னடா வாழ்க்கை

கருவேலங்காட்டிற்குள்

வண்ணத்துப்பூச்சி

என்று மனித வாழ்க்கையைப் பற்றி பிரபலமான தமிழ் ஹைக்கூ கவிதை ஒன்று உண்டு. மெல்லிய இறகுகளைக் கொண்ட வண்ணத்துப்பூச்சியானது அடர்ந்த முட்கள் நிறைந்த கருவேலங்காட்டிற்குள் பறந்து திரிந்து சென்றால் என்ன நிலை அடையுமோ அந்த நிலைதான் மனித வாழ்க்கையும் என்பதே இதன் பொருள். மேலும் பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட இந்த கொஞ்ச நேர வாழ்க்கையில் மனிதருக்குள் குரூரம், சுயநலம், வஞ்சனை, சூது, ஏமாற்றுதல், பொய் என பல்விதமான குணங்களின் இருப்பிடமாக இன்றைய மனித வாழ்க்கை மாறிவிட்டது.

“எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும், இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்” என்ற சமத்துவ கொள்கை மாறி தாமே தான் எல்லாமும் பெற வேண்டும் என்ற சுயநலப்போக்கு மனிதருக்குள் வந்ததும் மனித வாழ்வில் எத்தனை வகையான மாற்றங்கள் வந்துள்ளன என்பதற்கு நிகழ்கால மக்களின் வாழ்வே சிறந்த எடுத்துக்காட்டு.

முன்னொரு காலத்தில் வீடு என்று இருந்தால் திண்ணை என்று தவறாது இருக்கும். வந்து போகின்ற பாதசாரிகள் களைப்பாறிச் செல்லவே முந்தைய தமிழன் கட்டி வைத்த ஏற்பாடு. திண்ணையில் அமர்ந்த முன்பின் பழக்கம் இல்லாத பாதசாரிகள் தாகத்திற்கு நீர் கேட்டால் மோர் கொண்டு வந்து கொடுத்து இன்முகத்தோடு விருந்தோம்பல் செய்த மனித நேயமிக்க வாழ்வை வாழ்ந்தனர்  நம் முன்னோர்கள்.

இன்று தன் குடும்பம், தன் பிள்ளை, தன் வாழ்வு என்று மாறிவிட்ட சுயநலப் போக்காலும், மனிதர்களுக்குள் இருந்த மனிதநேயம் செத்து வருகின்ற காரணத்தாலும் வீடுகளில் திண்ணைகளுக்குப் பதிலாக பெரும் மதில் சுவர்களை எழுப்பி, எழுப்பிய சுவருக்கு மேல் கண்ணாடித் துண்டுகளைப் பதித்தும், கூரான கம்பிகளைப் பதித்தும், மேலும் நம்பிக்கை இல்லாமல் வாசலுக்கு ஒரு கண்காணிப்பாளரை நியமித்தும், கூடவே நாய்களையும் காவலுக்கு நிறுத்தி பாதுகாப்பான வாழ்க்கை வாழ்கிறது நிகழ்காலத் தமிழகம்.

இந்தச் சுயநலப்போக்கால் எந்த மனிதர்கள் மீதும் நம்பிக்கை கொள்ளாமல், எவரையும் மதிக்காமல், தன்னைச் சுற்றி வாழும் எவரும், எந்த இழிநிலைக்குச் சென்றாலும் எதையும் கண்டுகொள்ளாது தனது வேலைக்கு நேரமாகிவிட்டது, செல்லவேண்டும், இல்லை என்றால் ஒரு நாள் சம்பளம் தடைபடும் என சோத்து மூட்டையைக் கட்டிக் கொண்டு சொல்லாமல் கொள்ளாமல் ஓடுகின்ற உணர்ச்சியற்ற இயந்திர மனிதர்களாய் வாழ்ந்து எதைச் சாதிக்கப் போகிறோம் என்று தெரிவில்லை?.

சுயநல வாழ்வின் இன்னொரு அம்சமே வேடிக்கை பார்ப்பது. வேடிக்கைப் பார்ப்பது என்பது தமிழனின் ரத்தத்தில் வம்சா வழியாக ஊறிப்போன உணர்வாகும். வேடிக்கைப் பார்த்த தமிழன் எழுவது எப்போது?.

நாடு பிடிக்க ஒரு தமிழ் அரசனோடு பிற நாட்டு அரசன் போரிட்ட போது மற்ற தமிழ் மன்னர்களும், குறுநில மன்னர்களும் குதூகலித்தனர். சுருக்கமாகக் கூறினால் எட்ட நின்று வேடிக்கை பார்த்தனர். இந்த எண்ணத்தின் எச்சமாக இன்று சாலையில் எவராவது அடிபட்டுக் கிடந்தாலும் கண்டும், காணாமல் செல்வது, இரண்டு பேர் அடித்துக்கொண்டால் விலகி விடாமல் தூர நின்று வேடிக்கை பார்ப்பது, பக்கத்து வீட்டில் கணவன் மனைவிக்குள் குடும்பச் சண்டை நிகழ்ந்தால் தன் வீட்டுச் சாளரத்தைத் திறந்தும், ஏன் கதவைத் திறந்தும் குத்துக்கல்லாய் நின்று வேடிக்கைப் பார்ப்பது, அரசியல் கூட்டம், நடிகர்கள் வருகை, என எவர் மேடை போட்டுப் பேசினாலும் வேடிக்கைப் பார்ப்பது, திரைப்படம், சின்னத்திரை, பத்திரிக்கை, இணையம் என எல்லாவற்றையும் வேடிக்கைப் பார்த்துப் பார்த்தே வாழுகின்ற அவலமான நிலையில் தமிழர்களின் தினசரி வாழ்க்கை ஓடுகிறது.

இதனால் வேடிக்கைத் தமிழர்களின் உணர்வை அறிந்த தமிழ் ஊடகங்கள், தமிழனை மேலும் வெட்டியான வேடிக்கை மனிதனாக்கும் முயற்சியில் மும்முரமாக இறங்கிவிட்டது. இதில் சில சின்னத்திரை ஊடகங்கள், “வேடிக்கைத் தமிழர்களே பக்கத்து வீட்டில் நடக்கும் பிரச்சனைகளை நீங்கள் ஏன் கதவைத் திறந்து பார்க்க வேண்டும். இதோ நாங்களே அந்த அந்தரங்கப் பிரச்சனைகளை அள்ளி வந்து உங்கள் முன் அரங்கேற்றுகிறோம். இனிக் கதவை மூடிக்கொண்டு உங்கள் வீட்டு முற்றத்திலேயே பக்கத்துவீட்டு சமாச்சாரங்களை பார்த்துக் களியுங்கள்” என்ற பற்பல கேவலமான நிகழ்ச்சிகளைக் கொண்டு வந்து ஒவ்வொரு குடும்பத்திற்குள்ளும் கொட்டிவிட்டுப் போகின்றது. இதில் செயற்கை முறையிலான குடும்பச் சண்டைகள், மற்றும் இயற்கை முறையிலான குடும்பச் சண்டைகளை நான், நீ என போட்டி போட்டுக் கொண்டு காட்டத் துவங்கி விட்டது தமிழ் சின்னத்திரை ஊடகங்கள்.

நெடுந்தொடரில் சிக்கிய தமிழ்க் குடும்பங்கள்:

தமிழ் தொலைக்காட்களில் ஒளிபரப்பப்படும் அனைத்து நெடுந்தொடர்களிலும் (சீரியல்) குடும்பத்தில் சண்டை போடுவது எப்படி?, கள்ளத்தொடர்பை கட்டிய மனைவிக்கும், கட்டிய கணவனுக்கும் தெரியாமல் எப்படி பார்த்துக்கொள்வது?, பிறரை ஏமாற்றுவது எப்படி? துரோகம், குரூரம், வஞ்சகம் செய்வது எப்படி?, ஒற்றுமையுள்ள குடும்ப உறவுகளைச் சிதைப்பது எப்படி? என்று அனைத்து வீடுகளிலும் அத்துமீறி நுழைந்து தினந்தொறும் வகுப்பெடுக்கிறது.

தமிழ்நாட்டில் தற்போதைய சூழலில் 100 சதவீதம் மக்களில் 80 சதவீதம் மக்கள் நெடுந்தொடர்களைப் பார்க்கிறார்கள் என்று ஒரு கருத்துக் கணிப்பு கூறுகிறது. “ஹவுஸ் ஒய்ப்” என்று நுனிநாக்கில் பெருமை பேசிக்கொண்டு நாலுபக்க சுவரில் சிறைக்கைதி போல அடைபட்டுக் கிடக்கின்ற தமிழ்ப் பெண்களுக்கு இருக்கின்ற ஒரே ஆறுதல் இந்த சீரியல்.

ஒரு கதையை ஒருவர், ஒரு மணி நேரம் கேட்கலாம், இரண்டு மணி நேரம் கூட கேட்கலாம். ஆனால் தினந்தோறும் ஒரு குடும்பக் கதையை (கோலங்கள், மெட்டிஒலி, திருமதிசெல்வம், நாதஸ்வரம்) நம் தமிழ் பெண்கள் 5 வருடம் தொடர்ந்து பார்க்கின்ற மனநிலைக்குத் தள்ளப்பட்டு விட்டார்கள். தன் குடும்பத்தில் அடுத்து என்ன செய்வது என்று யோசிப்பதை விட்டுவிட்டு நெடுந்தொடர் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளை தன் குடும்பத்தில் நிகழ்ந்தது போல கவலைப்பட்டு அக்கம் பக்கத்தில் உள்ள பெண்களிடம் கூறி ஒப்பாரி வைக்கின்றனர்.

இதுவாவது பரவாயில்லை, விதம் விதமாக அழுவதற்குக் கற்றுக்கொடுக்கும் இந்த நெடுந்தொடரால் மனபாதிப்பிற்கு உள்ளாகிறார்கள். கணவனுக்கும், குழந்தைக்கும் செய்ய வேண்டிய கடமைகளை மறத்தல், சிறிய பிரச்சனைகளுக்கு எரிந்து விழுதல், தேவை இல்லாமல் சந்தேகப்படுதல் போன்ற மனச்சிதைவு நோய்க்கு ஆளாகிறார்கள். ஆக தமிழகக் குடும்பப் பெண்களைக் குறிவைத்து எடுக்கப்படும் நெடுந்தொடர்கள் பெண்களை மனநோயாளி ஆக்குவதற்கான பணியை சிறப்பாகச் செய்கின்றன என்றே கூறலாம்.

தொலைக்காட்சிப்பெட்டி என்பது வலிமையான, உலகம் முழுவதும் அனைத்து வயது மக்களும் அதிகம் பயன்படுத்தும் சாதனம் ஆகும். போன நூற்றாண்டின் மிகச்சிறந்த கண்டுபிடிப்புகளில் மிக முக்கியமானது. மனிதன் முதன் முதலில் சந்திரனில் கால் வைத்த (1969 – ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20 ஆம் தேதி) நிகழ்ச்சியை, இந்தப் பெட்டி அமெரிக்க மக்களின் வீடுகளுக்கு நேரடியாகக் கொண்டு சென்று பிரபலமடைந்தது. அந்தக் கால கட்டத்தில் இத்தகைய நிகழ்ச்சிகளை வீட்டிலிருந்தே கண்டுகளிப்பது என்பது அதிசயமாகவும், அவசியமாகவும் இருந்தது.

இன்று ஒளிபரப்பில் உள்ள 95% தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் கழிவுகள், அருவருப்பானவை. சேட்டிலைட் சேனல்கள் இவைகளை நமது வரவேற்பறைகளுக்குள்ளும், படுக்கையறைக்குள்ளும் கொட்டிக் கொண்டிருக்கின்றன. குப்பை மற்றும் கழிவுகளுக்கிடையே நல்ல நிகழ்ச்சிகளைக் கண்டெடுப்பது என்பது பெரும்பாலும் மக்களுக்கு இயலாத ஒன்றாகிப் போனது.

தொலைக்காட்சிப்பெட்டியே வேண்டாம் என்று கூறவில்லை, எப்பொழுது எந்த நிகழ்ச்சி அவசியமோ, அப்பொழுது மட்டும் அந்த நிகழ்ச்சியை மட்டும் தான் பார்க்க வேண்டும். நம் பொன்னான நேரத்தை விழுங்க நினைக்கும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வேண்டாம் என ஒதுக்கும் மனப்பான்மையை மக்கள் மனதில் தமக்குத் தாமே வகுத்துக்கொள்ள வேண்டும்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தவிர்ப்பதால் உண்டாகும் நன்மைகள்:

1.      கணவன், மனைவிகளுக்கிடையே ஆரோக்கியமான உறவு ஏற்பட்டு, நேரப்பங்கீடு உண்டாகும்.

2.      பார்க்கும் நமது கண்களின் ஆயுள் அதிகரிக்கும்.

3.      மின்சாரமும், மின்சாரத்திற்கு செலவிடப்படும் பணமும் மிச்சமாகும்.

4.      நம் வீடு தேடிவரும் விருந்தினருக்கான விருந்தோம்பல் வளரும்.

5.      அண்டை வீட்டாருடன் நட்பு வட்டம் பெருகும்.

6.      நமது உடல் பருமனைக் குறைக்கும்.

7.      குழந்தைகளுடன் போதிய நேரத்தை செலவிட்டு மகிழ்வீர்கள். அதனால் அவர்களின் எதிர்காலம் சிறக்கும்.

8.      போதிய நேரம் கிடைப்பதால் மற்ற பணிகளை விரைந்து முடிப்பதுடன் எதிர்கால சந்ததியினருக்கு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்வீர்கள்.

நெடுந்தொடர்கள் வெற்றி பெறக் காரணம் என்ன?

 தமிழ் நாட்டில் நெடுந் தொடர்கள் ஏன் வெற்றி பெறுகின்றன என்பது குறித்து நடத்தப்பட்ட உளவியல் ஆய்வுகளில் வெளியிடப்பட்ட சில காரணங்கள், பெரும்பாலான பெண்கள் எந்தவித அங்கீகாரமும் இல்லாத, வீட்டு வேலைகளின் சுமைகளில் மூழ்கி முடங்கிக் கிடக்கின்றனர். இவர்களின் உணர்வுகளுக்கான வடிகாலாகவே தொடர்கள் விளங்குகின்றன. எவ்வளவுதான் பெண்கள் அறிவாளியாக இருந்தாலும் புத்திசாலியாக இருந்தாலும் சமூகத்திலும், குடும்பத்திலும் அவள் அறிவிற்காக என்றுமே அங்கீகரித்து நடத்தப்படுவதில்லை.

இப்பெண்கள் ரத்தமும் சதையுமாகக் கொண்ட பெண்ணாக நடத்தப்படுவதில்லை. இந்தச் சூழ்நிலையில் தொடர்களில் வரும் கதாநாயகிகள் அறிவாளிகளாகவும், தலைமைப் பண்பு உடையவர்களாகவும், மிக மிக நேர்மை உடையவர்களாகவும், அதே நேரம் குடும்ப அமைப்பிற்குள் நல்ல குடும்பப் பெண்ணாகவும் காட்டப்படுவதால் பெண் பார்வையாளர்கள் அந்த கதாபாத்திரத்துடன் ஒன்றிணைந்து விடுகிறார்கள். நெடுந்தொடரில் முக்கிய கதாபாத்திரங்களாக வரும் நடிகை ராதிகா, தேவயானி இவர்களின் வெற்றியில் நம் தமிழ்பெண்கள் மகிழ்ச்சி கொள்கின்றனர். இந்நடிகைகள் தொடரில் தோல்வியுற்றால் அந்தத் தோல்வி தனக்கு ஏற்பட்டதுபோல் கண்ணீர் வடிக்கின்றனர்.

நெடுநேரம் தொலைக்காட்சி பார்ப்பவர்களுக்கு வரும் நோய்கள்:

1.      அதிகமாக தொலைக்காட்சி பார்ப்பவர்களுக்கு நீரழிவு நோய் வருகிறது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மேலும் இதயநோய் பாதிப்பு ஏற்படுவதோடு குறைப்பிரசவமும் நிகழும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

2.      மேலும் தொலைக்காட்சிப் பெட்டிக்கு அருகில் அமர்ந்து நிகழ்ச்சிகளைக் காண்பதால் தொலைக்காட்சியிலிருந்து வரும் கதிர்கள் கண்ணைப் பாதித்து பார்வை இழக்கும் விபரீதம் நடக்கும் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.

அடுத்த வீட்டுப் பிரச்சனையை அம்பலமாக்கும் தொடர்கள்:

இதுவரை வந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எல்லாம், கேமராவை வீட்டு முற்றம் வரை கொண்டு வந்து காண்பித்தது. சில மாதங்களாக தமிழ் தொலைக்காட்சிகளில் வரும் சில நிகழ்ச்சிகள் கேமராவை மக்களின் படுக்கை அறையிலும், குளியல் அறையிலும் நடக்கும் நிகழ்வுகளைப் படம் பிடித்துக் காட்டுகிறேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டு சில புதிய நிகழ்ச்சிகளை மக்களுக்கு காட்டி வருகிறது.

அதில் ஜி-தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “ சொல்வதெல்லாம் உண்மை, கேப்டன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “மனம் விட்டுப் பேசலாம்” போன்ற நிகழ்ச்சிகள் இதற்கு சிறந்த உதாரணம் எனக் கூறலாம்.

இதில் மக்களைத் தன் வயப்படுத்தும் முக்கிய நிகழ்ச்சியாக, பலரும் பார்க்கின்ற நிகழ்ச்சியாக இருப்பது சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியாகும். கணவனை சந்தேகப்படும் மனைவி, மனைவி இருக்கும் போதே அடுத்தப் பெண்ணோடு தொடர்பு உள்ள கணவன், மாமியார்-மருமகள் பிரச்சனை, பொருந்தாத உறவுகள், கணவனே தன் மனைவியை பிறிதொரு பெண்ணுக்கு (ஓரினச் சேர்க்கை) கூட்டிக் கொடுத்து பணம் பெற்ற அவலம், என சமூகத்தில் எவர் கண்ணுக்கும் தெரியாமல் புதைந்து கிடந்த பிரச்சனைகளை பூதக்கண்ணாடி போட்டுக் காட்டும் வேலையை இந்த நிகழ்ச்சியில் செய்து வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் இடம்பெற்ற பெரும்பாலான தம்பதிகளுக்கு தீர்வு ஏற்படுத்துகிறேன் பேர்வழி என்று கூறி அவர்களின் அந்தரங்க வாழ்வை அம்பலப்படுத்தி தனது தொலைக்காட்சியின் பரப்பைக் (டி.ஆர்.பி ரெட்) கூட்டிக் கொள்கின்ற அருவருக்கத்தக்க பணியையே சில தொலைக்காட்சிகள் தொடர்ந்து செய்து வருகின்றன.

இந்த நிகழ்ச்சியை காணும் பெரும்பாலான குடும்பத்திலுள்ள கணவனும் மனைவியும் தன் பிரச்சனையை இந்நிகழ்ச்சியின் மூலம் தீர்த்துக்கொள்ளலாம் என நினைத்துக் கொண்டு  விளக்கைத் தேடி வரும் விட்டில் பூச்சிகளாய் மாறி வந்து தாமே மாட்டிக் கொள்கின்றனர்.

இதில் இன்னும் கவனிக்க வேண்டிய விடயமானது, கணவன்-மனைவி சண்டைகள். ஊடக வியாபாரத்திற்காக பொது வெளியில் வருவது தான். மனைவி உள்ள போது கள்ளக்காதலியை கைப்பிடித்தவனை சிறையில் தள்ளாமல் மிரட்டி பணிய வைக்கின்றனர், தொலைக்காட்சி அலுவலகத்திலேயே சண்டை நடக்கிறது, கெட்ட வார்த்தையால் மாறி மாறி (சென்சார்) இல்லாமல் பேசிக்கொள்கின்றனர். அடித்தும், உதைக்கும் சம்பவங்களும் நிகழ்கிறது. இது தமிழக சமூக அவலமா அல்லது தமிழ் பண்பாட்டை உலகம் அறிய வெளிச்சம் போடுகின்றோமா?.

பிற மாநில தொலைக்காட்சிகளில் இது போன்ற ஒரு அவலத்தைச் சித்தரிக்கும் எந்த நிகழ்ச்சிகளும் வந்ததே இல்லை. இந்த கொடுமை எல்லாம் தமிழ்நாட்டு ஊடகங்களில் மட்டுமே நிகழ்கிறது.

ஊடகங்களின் ஓரக வஞ்சனை:

கணவன் மனைவிக்குள் நான்கு சுவற்றுக்குள் முடித்துக்கொள்ளப்பட வேண்டிய குடும்பப் பிரச்சனைகளை உலகிற்கு வெளிச்சம் போடுகிறது இந்த ஊடகங்கள். இந்த சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் ஏழை, எளிய குடும்பங்களின் அந்தரங்க வாழ்க்கைப் பின்னணி மட்டுமே அலசப்படுகிறது. நீங்கள் ஒரு நியாயமான ஊடகம் என்றால், இந்தக் குடும்பப் பிரச்சனையை அடித்தட்டு முதல் மேல்தட்டு மக்கள் வரையிலான குடும்பப் பிரச்சனையைப் பேச வேண்டும். அதற்கு மாறாக ஏழை மக்களையே குறி வைத்துத் தாக்குகிறது.

நான் கேட்கிறேன் மேல் தட்டு மக்களாக இருக்கும் கமல்ஹாசன்-கவுதமி, சரத்குமார்-ராதிகா, பிரகாஷ்;ராஜ், பிரபுதேவா, பாத்திபன், நடிகர் விஜயகுமார் மகள் குடும்ப பிரச்சனை, இயக்குனர் சேரன் மகள் பிரச்சனை, இறுதியாக தற்போது நடக்கும் சுந்தரா டிராவல்ஸ் கதாநாயகி ராதா பிரச்சனை என இப்படிப் பல பிரபலங்களின் வாழ்வில் நடக்கும் குடும்பச் சம்பவங்களை உங்கள் ஊடகத்தில் காட்டத் தயாரா? அப்படி இருந்தால் தான் நடுநிலையான ஊடகம் எனக் கூறலாம். அதை விடுத்து கேட்க ஆளில்லாத ஏழைகளின் அந்தரங்க வாழ்வில் நீங்கள் குளிர் காய்வது வெட்கக் கேடான விடயமாகவே படுகிறது.

இந்நிகழ்ச்சியைப் பார்ப்பவர்களின் மனநிலை:

1.      கணவனை மனைவியும், மனைவியை கணவனும் துரோகம் செய்யலாம் என்ற உணர்வைத் தூண்டுகிறது.

2.      ஒருவனுக்கு ஒருத்தி என்ற தமிழ் பண்பாட்டை மீறினால் என்ன என எண்ணத் தூண்டுகிறது.

3. ஊரெல்லாம் இவ்வளவு தவறுகள் நடக்கிறது. ஆதலால் நாம் செய்வதும் (கள்ள உறவு) தவறில்லை என இந்நிகழ்ச்சியைப் பார்க்கும் மக்கள் மனதிற்குள் தனக்குத்தானே நியாயம் கற்பிக்கத் தூண்டுகிறது.

4.     குடும்ப உறவை விட்டுவிட்டு நாம் தனித்தே இயங்கினால் என்ன என எண்ணத் தூண்டுகிறது.

5.    பலவீனமான இதயமுள்ளவர்கள் இந்நிகழ்ச்சியைக் காணும் போது “அய்யோ அவள், அவன் பாவம்” என ஏக்கப்பட்டு அழ வைப்பதோடு அதன் தாக்கத்தால் நாளடைவில் மனநோய்க்கு ஆளாகத் தூண்டுகிறது.

6. நாமும் இந்நிகழ்ச்சிக்குச் சென்று நம் பிரச்சனையை தீர்த்துக் கொள்ளலாம் என எண்ணத் தோன்றுவதுடன் தன் மானத்தையும், குடும்ப மானத்தையும் ஊருக்கே வெளிச்சம் போட்டுக்காட்ட வேண்டும் என்ற மனத்தூண்டலை ஏற்படுத்துகிறது.

இப்படிப் பல்வேறான மன எண்ண ஓட்டத்திற்கு ஆளாகின்ற பொதுமக்கள் இந்நிகழ்ச்சியைக் கண்டு மனவருத்தமும், கலந்து கொண்டு ஏமாற்றமும் அடைவதை விட இதுபோன்ற நிகழ்ச்சிகளைத் தவிர்த்து விட்டு உங்களின் எதிர்கால முன்னேற்றத்திற்கான பணிகளைச் செய்வதில் கவனம் செலுத்தினால், உங்களோடு உங்களைச் சுற்றி இருக்கும் மக்களும் நன்மை பெறுவார்கள் என நான் சொல்வதெல்லாம் உண்மை.

Il arrive alors pour pallier de plusieurs fois sans risquer de jeux de divertissements gratuits en jouant plusieurs variantes des différents amusements ont le mode gratuit et les divertissements gratuits de casino est l’expérience de casino gratuit sans s’engager dans les paris et d’établir un programme via lequel vous donnent. On peut profiter de jeux en effet la chance de jeu de nombreuses difficultés qu’éprouvent les joueurs d’économiser leur aidera par la communication avec le mérite d’égayer et le Serveur du jeu. Avec l’évolution de casino L’univers de jeu de casino gratuit est de hasard a subi d’importantes évoluions au jeu. http://phonetrackingapps.com


ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தொலைக்காட்சிக் கடலில் தொலைந்த தமிழர் வாழ்க்கைத் துளி”

அதிகம் படித்தது