மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

நன்மங்கலம் வனமும், வனத்தை சீரழிக்கும் மனங்களும் (கட்டுரை)

ஆச்சாரி

Jul 15, 2013

இன்று உலக வெப்பமயமாதல், காய்கறி விலை உயர்வு, மழையின்மை, நிலத்தடி நீர் வற்றுதல், பெரு வெள்ளம், உணவுப் பற்றாக்குறை, வேலை வாய்ப்பின்மை போன்ற பல பிரச்சனைகள் இயற்கையையும், வனப்பகுதிகளையும் முற்றிலும் அழிப்பதன் காரணமாகவே விளைகிறது என்பது மறக்க முடியாத உண்மை. இயற்கையை அழித்து விட்டு மண்ணில் சுகமான வாழ்வை எந்த இனமும் வாழ முடியாது.

தமிழகத்தில் இயற்கை சார்ந்த வனப்பகுதிகள் பல இருக்கின்றன என்றாலும் தற்போது நாம் காணவிருப்பது சென்னையில் வேளச்சேரி-தாம்பரம் கிழக்கு சாலையின் வலப்புறத்தில் அமைந்திருக்கும் நன்மங்கலம் வனப்பகுதியை பற்றியே.

ஒரு ஹெக்டேர் – 2.5 ஏக்கர் என்ற விகிதத்தில் இவ்வனப்பகுதியில் மொத்தம் 275 ஹெக்டேர் பரப்பளவு கொண்டு படர்ந்து உள்ளது நன்மங்கலம் வனப்பகுதி. தமிழகத்தில் மக்கள் தொகைப் பெருக்கத்தாலும், மழையின்மையாலும், குறுக்கு வழியில் சம்பாதிக்க வேண்டும் என்ற குறுகிய மனப்பான்மை கொண்டு வாழும் மக்களாலும் 33 சதவீதமாக இருக்க வேண்டிய வனப்பகுதியானது குறைந்து தற்போது 17 சதவீதமாக உள்ளது. தமிழ்நாட்டிலுள்ள எந்த வனப்பகுதியும் நன்மங்கலத்திலுள்ள வனத்தைப் போல சூழல் கொண்டதில்லை. காரணம் நன்மங்கலம் வனத்தைச் சுற்றி ஜெயந்திர நகர், செம்பாக்கம், காமராச புரம், சாம்ராஜ் நகர், மேடவாக்கம், நன்மங்கலம் போன்ற பல கிராமங்கள் சூழ்ந்த பகுதியாக இவ்வனப்பகுதி விளங்குகிறது.காட்டின்  உள்ளே சென்றால் புதர்களும், சரளைக்கல் சூழ்ந்த வெளிகளும், உயர்ந்த மரங்களும் காணப்படுகின்றன. நகரின் ஓசைகளில் இருந்து விடுபட்டு, பறவைகளின் இனிமையான ஓசையுடன்  இந்த இடமே ரம்மியமாக உள்ளது.

வனச்சீரழிவு:

வனத்திற்குள் சென்று இவ்வனத்தில் பணியாற்றும் வன அலுவலர் ஒருவரைச் சந்தித்து விபரம் கேட்டோம். அவர் கூறியதாவது இவ்வனத்தைச் சுற்றி உள்ள இக்கிராமப் பகுதியின் தெருக்கள் அனைத்தும் நன்மங்கலம் வனப்பகுதியை வந்தடைவதால் வீட்டுக்கழிவுகளைக் கொண்டு வந்து இவ்வனத்தில் கொட்டிச் செல்கின்றனர். அவ்வளவு ஏன் இக்கிராமத் தெருக்களில் குப்பைகளைக் கொட்டினாலும் அக்குப்பைகள் காற்றில் பறந்து வந்து நன்மங்கல வனத்தைச் சுற்றியே வந்து விழுகிறது. இவ்வனத்தைச் சுற்றியுள்ள கிராம மக்களுக்கும்,  பஞ்சாயத்தார்களுக்கும் இங்கே குப்பை கொட்டாதீர்கள், மீறி கொட்டினாலும் பஞ்சாயத்து சார்பாக வந்து அள்ளி விடுங்கள் என அறிவுறுத்தியும் கூட மக்கள் தொடர்ந்து குப்பை கொட்டும் செயலை செய்து வருகின்றனர். பஞ்சாயத்தார் குப்பைகளை அள்ளுவதில்லை. ஆங்காங்கே வனப்பகுதியின் எல்லையில் விழிப்புணர்வு பதாகைகள் வைத்தாலும் கூட மக்கள் அதை மதிக்காமல் குப்பை கொட்டிச் செல்கின்றனர்.

மேடவாக்கம் கூட்டுச் சாலை முதல் மடிப்பாக்கம் செல்லும் பிரதான சாலையின் இடப்புறத்தில் உள்ள வன எல்லையில் பழைய துணிகள், டயர்கள், உடைந்த கண்ணாடிக் குவளைகள், கெட்டுப்போன உணவுப் பொட்டலக் கழிவுகள், கோழி இறைச்சிக் கழிவுகள், அட்டைப் பெட்டிகள், பிளாஸ்டிக் பைகள்  எனப் பலவாறான குப்பைகளின் கூடாரமாக இந்த வனப்பகுதியை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இங்கே குப்பைக் கொட்டுவதில் ஒரு பகுதி கிராமங்கள் என்றால் மறுபகுதியானது இச்சாலையில் இருசக்கர, நான்கு சக்கர வாகனத்தில் வரும் படித்தவர்களே அதிக குப்பைகள் போட்டுவிட்டுச் செல்கின்றனர். தமிழகத்தில் படித்தவர்களுக்கு ஏனோ அடிப்படை அறிவு இருப்பதில்லை.

 எங்களுக்கு விடுமுறை என்பதே இல்லை. இரவு பகலாக இந்த வனத்தைப் பாதுகாப்பதே எங்களின் பணியாகும். இந்த வனத்தைச் சுற்றி வாழும் மக்களில் பலர் அத்துமீறி இவ்வனத்திற்குள் நுழைந்து மண்வளத்தைக் கெடுக்கின்ற வகையில் தகாத செயல்களில் ஈடுபடுகின்றனர். அப்படித்தான் ஒரு முறை நான் வனத்திற்குள் சுற்றி வரும் பொழுது ஒரு கும்பல் அமர்ந்து மதுஅருந்திக் கொண்டிருந்தனர். அதில் தலைமையானவரைக் கைது செய்ய அழைத்துச் சென்றேன். அவர் கெஞ்சினார் “சார் நான் இந்தப் பகுதி Sub Collector  என்னை விட்ருங்க சார்,  இனிமே உள்ள வரமாட்டேன்” என்றார். இதே போல் மற்றொருநாள் ஒருவரை பிடித்தேன் அவர் இப்பகுதி வட்டாட்சியர் அலுவலர் என்னை மன்னித்து, விட்டு விடுங்கள் என்று கெஞ்சினார். ஒரு முறை இதை எல்லாம் மீறி ஒரு பணக்காரப் புள்ளியைக் கையும் களவுமாகப் பிடித்துக் கொண்டு காவல் நிலையம் சென்றேன். உடனே நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருக்கும் ஒருவர் காவல் நிலையத்திற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு ‘அவரை விட்டுவிடுங்கள் அவர் நம்மாளு ’ என்கிறார்.

இவ்வாறு எங்கள் கடமை பாதிக்கின்ற வகையில் பல இடர்பாடுகள் உள்ளது. இருந்தாலும் எங்கள் கடமையைத் தடுக்கும் வகையில் நடைபெறும் இச்செயல்கள் எனக்கு மிகுந்த மனவருத்தத்தை அளித்தது. இயற்கையைப் பாதுகாக்க வேண்டி இப்பகுதி மக்களுக்கு துண்டறிக்கை பல விநியோகித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தியும் எந்தப் பலனும் இல்லை.

இந்த வனப்பகுதியில் 1950ம் ஆண்டு ஐந்து கல்குவாரிகளை அரசு தனியாருக்கு டெண்டர் விட்டது. இந்தத் தனியார் நிறுவனங்கள் தங்களால் முடிந்த அளவு இந்த மலைப்பகுதியைக் குடைந்து விட்டன. இதனால் ஏற்பட்ட பெரும் பள்ளத்தில் மழை நீர் எரி போல் நிரம்பி நிற்கின்றன. இதில் படகு விடலாம் என வனத்துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

இந்த எரி போன்ற நீர் நிலையில் நன்மங்கலம் பஞ்சாயத்தைச் சேர்ந்த பல இளைஞர்கள் அத்து மீறி இந்தப் பகுதிக்குள் நுழைந்து மது அருந்துகின்றனர். இந்தப் குடுவைகளை இந்த ஏரிக்கரையோரம் உடைத்து விட்டு, பாலித்தீன் பைகளை வீசிச் செல்கின்றனர். மேலும் குளத்தில் கண்டபடி குளித்தும், தெர்மாக்கோல் அட்டைகளையும் நீரில் மிதக்கவிட்டும்  நீச்சல் பழகுகின்றனர். பின்பு அதைச் சுக்கு நூறாக உடைத்து இந்த ஏரியில் மிதக்க விட்டுச் செல்கின்றனர்.

இந்த நீரை அருந்தும் பறவைகளும், விலங்குகளும் இறக்கின்றன. இந்நீரில் வாழும் பல்வகை மீன்களும் இறக்கின்றனர். நன்மங்கலம் பஞ்சாயத்தில் இப்போது  பல விழிப்புணர்வை ஏற்படுத்திய பின் 90% குறைகளைக் குறைத்து விட்டோம். தவிர சுற்றுலாத்துறை அமைச்சர் மாறி மாறிப் பணிக்கு வருவதால் வனப்பாதுகாப்பிற்கு எடுக்கும் முயற்சிகள் தடைபடுகின்றன. தற்போது வனத்தைச் சுற்றி வேலி அமைப்பதற்கான திட்டம் நிறைவேறி இருக்கிறது. அதன் பிறகு 100% இவ்வனம் பாதுகாப்பாக இருக்கும் என முழு நம்பிக்கை உள்ளது என்றார்.

இவ்வனத்தில் உள்ள மரவகைகள்:

தைல மரங்கள் (யூக்களிப்டஸ்), நவில், தேக்கு, புங்கன், வேம்பு, சவுக்கு, ஆயா, ஈட்டி, மகிழமரம், தானி, நீர் மருது, அரசமரம், குமிழ், மலைவேம்பு, செம்மரம், சந்தனமரம், இலுப்பை மரம், கொய்யா, பாதாம் மரம், பூவரசு மரம், இவ்வாறு 150 வகையான மரங்கள் இந்த வனத்தில் உள்ளன. இம்மரங்களை வளர்க்க காரணம் எப்போதும் பசுமையாகவும், குளிர்ந்த சுத்தமான காற்றைத் தரக்கூடிய மர வகைகளை மட்டுமே இங்கு வளர்த்து வருவது என்பது தனிச்சிறப்பாகும்.

மருத்துவ மூலிகைத் தோட்டம்:

இந்த மருத்துவ மூலிகைத் தோட்டத்தை நன்மங்கலம் வன விரிவாக்க மையத்தின் சார்பாக வளர்க்கப்படுகின்றன. இங்குள்ள மூலிகைகளாவன…

சிறியா நங்கை – பாம்புக் கடி விசத்தை முறிக்கும்.

கற்பூர வல்லி – தலைவலியைப் போக்கும்

கருந்துளசி – சளி, இருமல் தொல்லைகளைப் போக்கும்

நித்திய கல்யாணி – கை, கால் குடைச்சலைப் போக்கும்

ஆடாதொடை – உடல் வலி தீர்க்கும்.

சோற்றுக் கற்றாழை – மூல நோய் தீர்க்கும், வயிற்று வலிக்கும் நல்லது.

பிரண்டை – உடல் சூடு தனிக்கும், ஊறுகாய் வைத்தும் உண்ணலாம்.

வளர்மட்டை – காது வலிக்கு இந்நீரை காய்ச்சி காதிற்குள் விட காது வலி குணமாகும்.

பேயத்தி – வெட்டுக்காயம், சொறி, சிரங்கு தீர நல்ல மருந்து.

சின்ன மந்தாரை- ஊறுகாய் போட்டு உண்ண உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.

இவை தவிர, பெரியா நங்கை, ஓமவள்ளி, கல்வாழை என பற்பல மூலிகைச் செடிகள் இங்கு உள்ளது. இச்செடிகளை வளர்ப்பதற்காகவே தனி இடம் ஒதுக்கி “மூலிகைப் பண்ணை” என்ற பெயரில் இச்செடிகளை வனத்துறை நன்குவளர்த்து வருகிறது. இதில் உள்ள சிறு குறைபாடு என்னவென்றால் நிலத்த்தில் பாத்திகட்டி வகை வகையாக வளர்ந்த மூலிகைச் செடிகளின் அருகே அம்மூலிகையின் பெயரை எழுதி பதாகை நட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் .காரணம் அந்த வனத்துறை அலுவலர்களிடம் இந்த மூலிகைக்கு என்ன பெயர் என்று கேட்டதும் அவர்களே தெரியாமல் யோசித்துக் கூறும் நிலையைக் கண்டோம்.

இன்ன பிற செடிகளாவன:

காரச்செடி, காட்டு காடிக்காய் செடி, குருவி பழச்செடி, ரெங்கன் செடி, தொரட்டச் செடி, நன்னாரி, வெட்டிவேர், துளசி, கற்றாழை, அவிச்சிச் செடி, ஆவாரஞ் செடி (இது சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த மூலிகைச் செடி) இலந்தைப் பழச்செடி எனப் பலவகையான செடிகளும் ஆங்காங்கே இந்த வனமெல்லாம் வியாபித்து நிற்கின்றன. இதில் எலும்பு ஒட்டிச் செடி என்று ஒரு செடி உள்ளது. இந்தச் செடியானது வெட்டிய உடல் உறுப்புகளை ஒட்டும் தன்மை வாய்ந்தது. இச்செடிகளைப் பயன்படுத்தியே புத்தூரில் கட்டுப் போடுகின்றனர்.

இவ்வனத்தில் உள்ள விலங்குகள்:

நல்ல பாம்பு, நரி, கண்ணாடி விரியன் பாம்பு, கீரி, முயல், காட்டு பூனை, கொம்பு ஆந்தை (இந்த ஆந்தை அழியும் நிலையில் குறைந்து காணப்படுகிறதாம்). சிட்டுக்குருவி, மைனா, கருங்குயில், நாரை உட்பட 83 வகையான பறவைகளும், பல விலங்குகளும் இவ்வனத்தில் ஆங்காங்கே உலா வருகின்றன. ஆனால் இதுவரை இந்த விலங்குகளால் மனிதர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டதில்லை என்கின்றனர் வன அலுவலர்கள்.

வனவியல் விரிவாக்க மையம்:

தமிழக வனத்துறை வனவியல் விரிவாக்க மையம் என்ற பெயரில் உட்பிரிவு ஒன்றை ஏற்படுத்தி காடுகளை அதிகரிக்கும் பணிகளை செய்து வருகிறது. இந்த காட்டில் ஏறத்தாழ நூறு ஏக்கர நிலம் இத்தகைய விரிவாக பணிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.இவர்கள் பல்வேறு மரக்கன்றுகளை உருவாக்கி நட்டு,பராமரித்து காடுகளாக்க பாடுபடுகின்றனர். காட்டின் உள்ளே பல இடங்களில் இவர்கள் உருவாக்கிய மரங்கள் அடர்ந்து இருப்பதை காண முடிகிறது. கீழே விவரித்து உள்ள பல பணிகளை இந்த விரிவாக்க மையம் செயல்படுத்துகிறது.

வனச்சுற்றுலா/பயிற்சி:

தமிழக வன ஆர்வலர்கள் “ஒருங்கிணைந்த சுற்றுலா மையமாக” இந்த நன்மங்கல வனப்பகுதியை மாற்ற வேண்டுமென எதிர்பார்க்கின்றனர். இதனால் வருங்கால சந்ததியினர் இவ்வனத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும். தவிர கல்லூரி மாணவ-மாணவிகளையும், பள்ளி  மாணவ-மாணவிகளையும் “வனச் சுற்றுலா” என்ற பெயரில் இங்கு அழைத்து வந்து சுற்றி காண்பிக்கப்படுகிறது. அதோடு, வருகின்ற இவர்களுக்கு வனப்பாதுகாப்புப் பற்றிய விழிப்புணர்வுப் பயிற்சியும் இங்கு கொடுக்கப்படுகிறது.

இப்பயிற்சி மாணவர்களுக்கு மட்டுமல்லாது இயற்கை ஆர்வலர்களுக்கும், வன அலுவலர்களுக்கும், இவ்வனத்தைச் சுற்றி வாழும் கிராம மக்களுக்கும் சேர்த்துப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சி அளிப்பதற்கென்றே வன விரிவாக்க மையத்தில் தனி வளாக மையம் ஒன்று உள்ளது.

மரக்கன்றுகள் :

இப்பயிற்சி அளிப்பதோடு மட்டுமல்லாது சென்னையை சுற்றி உள்ள பல தனியார் நிறுவனங்களுக்கும், பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும், ஊராட்சி மன்றம் மற்றும் பல பஞ்சாயத்துகளுக்கும் இலவசமாக இங்கிருந்து பல மரக்கன்றுகளையும், மூலிகைச் செடிகளையும் வழங்கி வருகின்றன இந்த வன விரிவாக்க மையம்.

எடுத்துக்காட்டாக எஸ்.ஆர்.எம்.கல்லூரி, சாய்ராம் பொறியியல் கல்லூரி, தாகூர் பொறியியல் கல்லூரி, டி.எம்.ஜி. கல்லூரி, பாலாஜி பாலிடெக்னிக், சதக் பொறியியல் கல்லூரி, கெ.சி.ஜி. கல்லூரி, சித்தாலப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளிகள் என பல இடங்களில் வளரும் மரங்களும், செடிகளும் இந்த வன விரிவாக்க மையத்திலிருந்து இலவசமாகக்  கொடுக்கப்பட்டவையாகும்.

தவிர தனி நபருக்கென்று இங்கு மரம், செடிகள் வழங்கப்படமாட்டாது. நிறுவனமாக இருந்தால் மொத்தமாக வழங்கப்படும் என்பது இவ்வன விரிவாக்க மையத்தின் கொள்கையாகும்.

நிறுவனத்திற்கு மட்டுமல்லாது சொந்தமாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கும் இங்கு பல செடிகள், மரங்கள் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. இவ்விவசாயிகளுக்கு மாதம் ஒரு முறை இங்கு கூட்டம் நடத்தப்பட்டு அவர்கள் வளர்க்கத் தாவரங்கள் வழங்கப்படும். நடுதல் முதல் அறுவடை வரை நாங்கள் பயிற்சிக்கு வரும் விவசாயிகளுக்கு  உதவுகின்றனர்  இவ்வன அலுவலர்கள்.

இவ்வாறு விவசாயிகள் இந்த மரங்களை வளர்ப்பதற்காக, இவர்கள்  வளர்க்கும் ஒவ்வொரு மரத்திற்கு அரசு இலவசப் பணம் வழங்கி விவசாயிகள் மேலும் மரங்கள் வளர்க்க ஊக்குவிக்கிறது. இவ்வாறு பல பகுதிகளுக்கு மரங்கள், செடிகளை “தமிழ்நாடு பல்லுயிர் பெருக்கும் பசுமையாக்கம் திட்டம்” மூலமே இவ்வனத்துறை செயல்படுகிறது.

போட்டிகள்:

மேலும் கல்லூரி, பள்ளி மாணவ –மாணவிகளுக்கென்று இந்த வனத்துறை விரிவாக்க மையத்தில் சில போட்டிகள் நடத்தப்படுகின்றன. இயற்கையைப் பாதுகாக்கும் நோக்கில் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி என பல போட்டிகள் இங்கு நடத்தப்பட்டு சிறந்த மாணவர், சிறந்த விவசாயி என்ற பட்டமும், பரிசும் வழங்கி கௌரவிக்கப்படுகிறது.

இவ்வாறு மாணவர்களுக்கும், விவசாயிகளுக்கும் பயிற்சி அளிக்கக் கூடிய மையங்கள் தமிழ் நாட்டில் 30 மையங்கள் உள்ளதாம். எங்களின் நோக்கமே மரம், செடி, கொடிகளை வளர்த்து இயற்கையை எங்கும் பெருக்க வேண்டும் என்று வனத்துறை அலுவலர் பெருமைப்பட கூறினார். வனத்துறை அலுவலர்கள் கடமை உணர்வுடன் தம் வேலையை செய்கிறார்கள்.அவர்கள் பணி பாராட்டுக்குரியது.

நமக்காக இருக்கும் காட்டை அழிக்காமல், இயற்கை வளத்தைப் பெருக்கும் வகையில் நமது செயல்பாடுகள் இங்கு இருக்குமேயானால் நிகழ்காலத்திலும், எதிர்காலத்திலும், குடிநீர் பற்றாக்குறையையும், சுத்தமான காற்றையும் வருங்கால சந்ததியினருக்கு நாம் வழங்க முடியும்,அதற்கு கடமைப்பட்டவர்களாக நாம் உள்ளோம் என்பதை அனைவரும் நினைவில் கொண்டு செயல்பட வேண்டும்.

Overuse of the passive lards sentences with empty words the writer’s point must be clearly stated by him at the beginning of the paragraph https://essayclick.net/

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

முதற் கருத்து பதிவாகியுள்ளது- “நன்மங்கலம் வனமும், வனத்தை சீரழிக்கும் மனங்களும் (கட்டுரை)”
  1. thangapandian says:

    நல்ல பதிவு. வாழ்த்துகள்

அதிகம் படித்தது