மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

நம் பண்பாட்டை அறிவோம்! – கேள்வி பதில் பகுதி – 3

ஆச்சாரி

Apr 1, 2012

கேள்வி:தமிழனை அடையாளப்படுத்த சாதி தவிர்க்கமுடியாமல் அவசிய மாகிறது. ஆனால் பண்டைய குடிகளுக்கும் இன்றைய சாதிகளுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா? சாதிகளைத் தவிர்த்து தமிழர்களை அடையாளப்படுத்த முடியும்£? மேலும் ‘யாதவர்கோன் யாதொன்றும் இல்லை என்றான்’ என்று அவ்வையார் பாடுகிறார். அப்படியென்றால் யாதவர் என்ற சொல் பண்டைய தமிழா?  செ.ராஜ்குமார் சென்னை
பதில்:
இந்த இரு கேள்விகளுக்குமான விடைகள் முன்பே நான் அளித்த விடைகளில் இருக்கவே செய்கின்றன. இருந்தாலும் மீண்டும் சொல்வதில் தவறில்லை. ஒன்று, தமிழனை அடையாளப்படுத்த சாதி தவிர்க்கமுடியாமல் அவசியமாகிறது என்கிறீர்கள். ஏன் அப்படி? உலகில் இந்தியாவைத் தவிர பிற நாடுகள் எதிலாவது, அந்தந்த மொழிக்காரனை சாதியை வைத்தா அடையாளப்படுத்துகிறார்கள்? தமிழனுக்குத் தமிழ்தான் அடையாளம். சாதி எப்படி அடையாளமாகும்? உங்கள் கேள்வி வேறு ஏதோ பிரச்சினைகளை உள்ளடக்கியிருப்பதுபோலத் தோன்றுகிறது. அதைத் தெளிவுபடுத்தினால் அதற்கான விடையை அளிக்கமுடியும்.

எந்த சாதியாக இருந்தாலும் சரி, தமிழ் பேசுபவர்களுக்குத் தமிழ்தான் அடையாளம். வேறெதுவும் இல்லை.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழந்தமிழகத்திலும் சாதிகள் இருந்தன என்பதைப் புறநானூறு காட்டுகிறது. ஆனால் அப்போது சாதிகள் இறுக்கமாக இல்லை. தொழில்ரீதியாக இருந்தன. உதாரணமாக, அக்காலத்தில் பாடுபவர்கள் யாவரும் பாணர் எனப்பட்டனர். காப்பிய காலத்தில் பாணர் என்பது குறிப்பிட்ட சாதியாயிற்று. பக்திக்காலத்தில், திருஞானசம்பந்தர் திருநீலகண்ட யாழ்ப் பாணர் என்பவரை மோசமாகவே நடத்தியிருக்கிறார் என்று தெரிகிறது. அக் காலத்தில் அந்தச் சாதி கீழ்ச்சாதியாக மாறிவிட்டது. இருந்தாலும் ஞானசம்பந்தர் என்ற பார்ப்பனரோடு செல்லும் அளவுக்கேனும் உரிமை இருந்திருக்கிறது.  இன்னும் காலம் போகப்போக அது தீண்டப்படாத, ஒடுக்கப்பட்ட சாதியாக மாறி விட்டதைப் பார்க்கிறோம்.

ஒளவையார் என்று ஒருவர் அல்ல, பலர் இருந்தனர். சங்க காலத்தில் அதியமானோடு நட்புக் கொண்டிருந்த ஒளவையார் ஒருவர். இடைக்காலத்தில் தனிப் பாடல்கள் பாடிய ஒளவையார் இன்னொருவர். நல்வழி போன்ற அறநூல்களைப் பாடிய ஒளவையார் இன்னொருவர். கம்பர் காலத்தில் வாழ்ந்த ஒளவையார் மற்றொருவர். இப்படி குறைந்தது ஐந்து ஒளவை யார்களேனும் தமிழகத்தில் வாழ்ந்திருக்கவேண்டுமென்று தெரிகிறது. இக் காலத்தில் எல்லோரும் காமாட்சி, மீனாட்சி, அர்ச்சனா, கீர்த்தனா என்று பெயர் வைத்துக் கொள்வதைப்போலப் பழங்காலத்தில் ஒளவை என்பது யாவரும் வைத்துக் கொள்ளக் கூடிய பெயராக இருந்தது. நீங்கள் மேற்கோள் காட்டுவது தனிப் பாடல்கள் பாடிய ஒளவையாரை. அவர் அநேகமாக கி.பி. பதினைந்தாம் பதினாறாம் நூற்றாண்டு அளவில் வாழ்ந்திருக்கலாம். அந்தக் காலத்தில் தமிழகத்தில் யாதவர் சாதி மட்டுமல்ல, பிற எத்தனையோ சாதிகளும் இருந்தன, இறுகிப்போயே இருந்தன.

கேள்வி: சமசுகிருதத்திற்கும் தமிழுக்கும் நிறையத் தொடர்பு உள்ளது போல் தோன்றுகிறதே? தமிழகத்திற்கு சமசுகிருதம் எப்போது வந்தது? சரவணன், மேட்டூர்

பதில்: தமிழ் திராவிட மொழிகள் குடும்பத்தைச் சேர்ந்தது. தனிவிதமானது. சமசுகிருதக் கலப்பு இல்லாமலே இன்றும் இயங்கக்கூடிய ஒரே இந்திய மொழி இதுதான்.

சமசுகிருதம் இந்தோ-ஆரிய அல்லது இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. அதற்குத் தொடர்புகள் கிரேக்கம், சாக்சனிய ஜெர்மானிய மொழி ஆகியவற்றுடன் உள்ளன. தங்களுக்கும் தங்கள் இனத்திற்கும் மட்டும் உயர்வு கற்பிக்கும் விதத்தில் சமசுகிருத மனப்பான்மைக்கு ஜெர்மானிய மனப்பான்மை முற்றிலும் ஒத்துப் போனதால்தான் ஹிட்லர் ஜெர்மானியர்கள் எல்லோரும் ஆரியர்கள். இந்த ஒற்றுமை இருந்ததால்தான் மாக்ஸ்முல்லர் போன்ற ஜெர்மானிய ஆசிரியர்கள் வேதங்கள், உபநிடதங்களை எல்லாம் ஜெர்மன் மொழியில் எளிதாக மொழிபெயர்த்தது மட்டுமன்றி அவற்றை உயர்த்திப் பிடித்தார்கள்.

சங்க இலக்கியம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் இயற்றப்பட்ட இலக் கியம். அதற்குப் பிறகுதான் தொல்காப்பியம், திருக்குறள் எல்லாம் தோன்றின என்கிறார்கள். இருந்தாலும் தொல்காப்பியம் சங்க இலக்கியத்துக்கு முன்னா பின்னா என்று இன்னமும் சந்தேகம் இருந்துதான் வருகிறது.

சங்க இலக்கியத்தில் எட்டுத்தொகையில் பரிபாடலிலும், பத்துப்பாட்டில் திருமுருகாற்றுப் படையிலும் சமசுகிருதத் தொடர்பும் கருத்துகளும் சொற் கலப்பும் மிகுதியாகக் காணப்படுகின்றன. மலைபடுகடாத்தில் மிகக்குறை வாகவே உள்ளன.

வடக்கில் சிந்து சமவெளியில் கி.மு.1500 வாக்கில் நுழைந்த ஆரியர்கள் கொஞ்சம் கொஞ்சமாக இந்தியா முழுவதும் பரவினார்கள். கிழக்குக் கோடியில் அசாம், அருணாசலப் பிரதேசம் வரை செல்ல அவர்களுக்கு மிகுந்த காலமாயிற்று. அதேபோலத் தெற்கில் தமிழகத்துக்கு வரவும் மிகுந்த காலமாயிற்று. அதனால்தான் இந்தியாவின் கிழக்குக் கோடியிலும் தெற்கிலும் வடக்கின் செல்வாக்கு மிகக்குறைவு.

இந்த இடப்பெயர்ச்சிக்கு ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுக்காலம் ஆகியிருக்கலாம். ஆக கி.மு. 500க்குப் பின் தமிழகத்திற்கு ஆரியர் வந்திருக்கலாம்.

இந்த ஆயிரம் ஆண்டுகளில் அவர்கள் தங்களுக்கேற்ற வாழ்க்கை முறை, சடங்குகள், சமயம், மந்திர அமைப்புகள், வேதங்கள், புராணங்கள், தங்களை மட்டும் உயர்த்திக் கொள்வதற்கான வழிமுறைகள் ஆகியவற்றை ஏற்படுத்திக் கொண்டார்கள். தமிழகத்திற்கு அவர்களோடு அவைகளும் வந்தன. அவற்றின் மிகக்குறைந்தபட்சத் தாக்கத்தைத்தான் நாம் சங்க இலக்கியத்தில் பார்க் கிறோம்.

சமசுகிருதவாதிகளுடைய, இந்துத்துவவாதிகளுடைய மிக மோசமான பண்பாக நாம் கருதுவது, இந்தியாவில் எந்த இடத்தில் எந்த நல்லது இருந்தாலும் எல்லாம் தங்களிடமிருந்து பெற்றவை என்று ஒரே சமயத்தில் கத்தி நிலைநாட்டிவிடுவார்கள். அதாவது தங்களிடமிருந்துதான் மற்றவர்கள் எல்லாம் பெற்றார்கள், மற்றவர்களிடமிருந்து தாங்கள் பெற்றது எதுவுமே இல்லை என்பது அவர்கள் மனப்பான்மை. இது நடைமுறைக்கும் புறம்பானது, அறிவியல் சிந்தனைக்கும் ஒவ்வாதது.

உதாரணமாக, கன்யாகுமரியின் பிராமணர் காஷ்மீர பிராமணரைப் பார்த்த வுடனே சமசுகிருதத்தில் பேசி, காயத்ரி மந்திரத்தைச் சொல்லி, பூநூலைக் காட்டி, தான் ஒரே இனம் என்று காட்டிக் கொள்வார்கள்.. ஆனால் இங்கிருக்கும் சைவப் பிள்ளை, தமிழ்ச் சைவப்பிள்ளைதான். குஜராத்தின் பட்வாரி அதற்குச் சமமான ஜாதி என்றாலும் அவன் குஜராத்தியில்தான் பேசமுடியும். இவர்களுக்குள் தொடர்பு ஏற்பட முடியாது. மற்றவர்களைப் பிரித்துவிட்டுத் தாங்கள் மட்டும் ஒன்றாகி ஆளுகின்ற இந்தச் சூழ்ச்சியைத்தான் வெள்ளைக்காரர்களும் பின்னாட்களில் கையாண்டனர். அதனால் வெள்ளைக்காரரோடு பார்ப்பனர்களும் உடனே போய் ஒட்டிக்கொண் டார்கள்.

கேள்வி: சமசுகிருதத்திலிருந்து தமிழ் எடுத்துக்கொண்டது என்ன? அதேபோல் தமிழிலிருந்து சமசுகிருதம் எடுத்துக் கொண்டது என்ன? கிருஷ்ணன், சென்னை

பதில்: மிகப் பெரிய கேள்வி இது. இதற்கு தெ.பொ.மீனாட்சிசுந்தரன் போன்ற பெரிய அறிஞர்கள் நூல்களாகவே விடை எழுதியிருக்கிறார்கள். ஆகவே விரிவான பதிலுக்குத் தெ.பொ.மீனாட்சிசுந்தரனாரின் நூலைப் (இந்தியப் பண்பாட்டிற்குத் தமிழரின் பங்களிப்பு என்று நினைக்கிறேன். அல்லது இதுபோலத் தலைப்புள்ள ஒன்று) படிப்பது நல்லது. இம்மாதிரி அக்கால அறிஞர்கள் பலரும் எழுதியிருக்கிறார்கள். என் பார்வையில் சில கருத்துகளை மட்டும் சொல்கிறேன்.

1. தத்துவத்துறை, ஆன்மிகத் துறை, சமயத்துறை ஆகிய மூன்றிலுமே தமிழரின் நாகரிகமே இன்று இந்திய நாகரிகமாக ஆகியிருக்கிறது. பௌத்த மதத்தின் முக்கியத் தத்து வஞானிகளான நாகார்ஜுனர், போதிதர்மர் போன்றவர்கள் தமிழர்களே. பிரம்ம சூத்திரத்திற்கு உரையெழுதி இரண்டுவிதமான தத்துவங்களை உருவாக்கிய ஆதிசங்கராச்சாரியார், இராமாநுஜர் ஆகியோர் தமிழர்களே. (சங்கராச்சாரியர் பிறந்த கி.பி. எட்டாம் நூற்றாண்டில் மலை யாளம் தோன்றவில்லை. அது சேரநாடாக இருந்தது.)

2. சமசுகிருதத்தின் எழுத்துமுறை உட்பட திராவிட மொழிகளிலிருந்து உருவானது தான். சமசுகிருதம் இந்தோ ஐரோப்பிய மொழி என்கிறார்கள். அப்படியானால் பிற இந்தோ ஐரோப்பிய மொழிகளைப் போல (அக்கால கிரேக்கம் முதல் இக்கால ஆங்கிலம் வரை) ஆல்ஃபா, பீட்டா, காமா, டெல்டா என்பதுபோல அல்லது ஏ, பி, சி, டி (அ, ப. ச. ட) என்ற வரிசையில் அல்லவா அதன் எழுத்துமுறை அமைந்திருக்க வேண்டும்? மாறாக, அ, ஆ, இ, ஈ என உயிர் எழுத்தும், க ங ச ஞ ட ண (வல்லெழுத்துகளுக்கு நான்கு நான்கு வரிசைகள் இருந்தாலும்) என்ற வரிசையில் மெய்யெழுத்தும் அமைந் திருப்பதே திராவிட முறையை ஒட்டியதுதான். சமசுகிருதம் தவிர வடநாட்டு மொழிகள் அனைத்தின் வாக்கிய அமைப்பும் திராவிட அமைப்பு என்பதை ஆராய்ச்சியாளர்கள் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.

3. பக்தி இயக்கம் தமிழகத்தில் கி.பி. ஆறாம் நூற்றாண்டில் உருவாகித்தான் வடநாட்டுக்குச் சென்றது.

4.சமசுகிருதத்திலுள்ள முக்கிய அறிவுநூல்கள் அனைத்தையும் எழுதியவர்கள் தமிழர்களே. தமிழில் எழுதுவதைவிட சமசுகிருதம் என்ற ‘தேவபாஷை’யில் எழுதுவது சிறப்பு என்று கருதியும், அதில் எழுதினால் தான் வடநாட்ட வர்களும் படிப்பார்கள் என்று கருதியும் காஞ்சிபுரம், கும்பகோணம் என்ற இடங்களிலிருந்த பார்ப்பனர்கள் அனைத்து நூல்களையும் சமசுகிருதத்தில் எழுதினார்கள்.

5.சாணக்கியர், பரதமுனிவர் போன்றவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களே. சாணக்கியர்தான் முதல்முதலில் பொருள்நூல் எழுதியவர். பரதமுனிவர் பரதசாத்திரம் என்ற இலக்கிய, நாட்டிய அலங்கார நூலை எழுதியவர். இன்றைக்கும் வடமொழியிலுள்ள இலக்கியக் கொள்கைகள் அனைத்துக்கும் மூலம் பரதர் எழுதிய பரதசாத்திரம்தான்.

6. தமிழகத்துப் பார்ப்பனர்களோ, வடநாட்டுப் பார்ப்பனர்களோ தமிழிலுள்ள நூல்களை சமசுகிருதத்தில் தரும்போது பெயரை மாற்றி அது ஏதோ சமசுகிரு தத்திலேயே அசலாக எழுதப்பட்டது போன்ற பாவனையை ஏற்படுத்தி விடுவார்கள். உதாரணமாக திருக்குறளை சமசுகிருதத்தில் திருக்குறள் என்ற பெயரில் மொழிபெயர்க்காமல் சுநீதி குஸும மாலா என்று மொழி பெயர்த் திருக்கிறார்கள். அதைப்பார்க்கும் பலரும், இதுதான் அசல் நூல், இதைப்பார்த்துத்தான் தமிழில் திருவள்ளுவர் எழுதினார் என்று சொல்லிவிடுவார்கள். இப்படித்தான் காலம் காலமாக நடந்து கொண்டிருக் கிறது. இன்னொரு உதாரணம், திருவிளையாடற் புராணத்தை (தமிழ் நாட்டு மதுரையில் சிவபெருமான் நடத்திய திருவிளையாடல்கள் பற்றிய புராணம்) சமசுகிருதத்தில் ஹாலாஸ்ய மகாத்மியம் என்ற பெயரில் மொழிபெயர்த்தார்கள். இப்போது அதிலிருந்துதான் தமிழ் திருவிளையாடற் புராணம் எழுதப்பட்டது என்று சொல்கிறார்கள்.

7. இந்திய இசைக்கே (இந்துஸ்தானி இசை உட்பட) ஆதாரம் தமிழ்இசை என்பதை ஆபிரகாம் பண்டிதர் கருணாமிர்த சாகரம் என்ற நூலில் நிரூபித்திருக்கிறார். அதை பம்பாயில் நடந்த கருத்தரங்கில் வாசித்தும் இருக்கிறார்.

இப்படி இன்னும் பலப்பல……

தமிழ் சமசுகிருதத்திலிருந்து பெற்றதெல்லாம் சமயக் குப்பைகள்தான். இப்படிச் சொன்னால் பலபேர் (ஆத்திகர்கள்) மனத்தைப் புண்படுத்தும் என் றாலும் உண்மை இதுதான். புராணங்கள், தலபுராணங்கள், சிற்றிலக் கியங்கள்,  இராமாயணம், மகாபாரதம்-இவற்றைத் தவிர சமசுகிருதம் தமிழுக்கு என்ன வழங்கியிருக்கிறது? (இந்த இரண்டு இதிகாசங்களில் சிறந்த நூலாகிய மகாபாரதத்தை எழுதிய வியாசர் தென்னாட்டவர் என்ற கருத்து உண்டு.) இராமாயணம், மகாபாரதம் ஆகிய இரண்டு இதிகாசங்களுக்கும் இன்றைய வடிவத்தை வழங்கிய பிரதிகள் தென்னாட்டிலிருந்து பெறப்பட்டவைதான். (இதுபற்றிய ஆதாரங்கள் புனாவில் பண்டார்க்கர் ஆய்வு நிறுவனத்தில் உள்ளன.)

அறிவார்த்த முறையில் சமசுகிருதம் தமிழுக்கு வழங்கியது ஒன்றுமில்லை. அறிவு நூல்களாக எவையும் இல்லை. இங்கிருந்து சித்தர்களின் வைத்திய முறையை எடுத்துக் கொண்டு ஆயுர் வேதம் என்று பெயர் வைத்துக் கொண்டார்கள். நமக்கு அவர்கள் என்ன கொடுத்தார்கள்? நமது இசையை எடுத்துக்கொண்டு கர்நாடக இசை என்று பெயர் வைத்துக்கொண்டார்கள். நமக்கு என்ன வந்தது? நமது பரதக்கலையை பரதமுனிவரின் சாத்திரத்தின் வாயிலாகக் கற்றுக்கொண்டதாக எழுதி வைத்தார்கள். நமக்கு அவர்கள் அளித்தது என்ன? சங்க காலத்திலிருந்த அறிவார்த்த மனநிலை (rational attitude) போய், புராணங்களை ஜோசியத்தை நம்புகின்ற மூட மனப்பான்மையைத்தான் வடநாட்டுப் பார்ப்பனர்கள் உருவாக்கினார்கள். கோயில்களில் தமிழ்ப் பாட்டுகளை விட்டு சமசுகிருத மந்திரங்களை ஓதலானார்கள். திருமணத்திற்கு சாவுச் சடங்கிற்கு என்று எல்லாவற்றிற்கும் தாங்கள் மந்திரம் சொல்லி நடத்துவதாக ஏற்படுத்திக்கொண்டார்கள். எல்லாவற்றிலும் அவக்கேடானது  ஜாதி முறையைப் புகுத்தி நமது தமிழ்ப்பண்பாட்டையே கெடுத்தார்கள். கேட்டால், இந்தியா முழுவதுமே ஒரே கலாச்சாரம்-அது எங்கள் இந்துக் கலாச்சாரம்தான் என்று சொல்லி விடுவார்கள்.

கேள்வி: இன்று யாரும் வெண்பாவில் பாட்டமைப்பது இல்லையே? அது கடினம் என்றால், வரும் காலங்களில் எதிர்காலத்தில் வெண்பாவில் பாட்டமைக்கும் சாத்தியக் கூறுகள் என்ன? செந்தில் குமார், மதுரை

பதில்:தமிழில் வெண்பாவில் என்றைக்குமே அதிகமாகப் பாட்டுகள் இயற்றப்பட்ட தில்லை. இன்று கிடைக்கும் முத்தொள்ளாயிரம், நளவெண்பா போன்ற நு£ல்கள் எல்லாம் விதிவிலக்குகள்தான் என்று சொல்லவேண்டும். முற்காலத்தில் ஆசிரியப் பாவும், பிற்காலத்தில் கலித்துறை, கலிவிருத்தம் போன்ற யாப்புகளும்தான் அதிகமாகக் கையாளப்பட்டுள்ளன.

இதற்குக் காரணம், வெண்பா ஏதேனும் ஒரு கருத்தைக் கூறி நறுக்கென்று முடிக்கும் தன்மை உடையது. அதன் வடிவமே “ஒரு குறட்பா-தனிச்சொல்-இன்னொரு குறட்பா” என்ற மாதிரி அமைந்திருக்கிறது (நேரிசை வெண்பா). ஆகவே அறம் கூறும் நூல்களுக்கு இது மிகவும் உதவியாக இருந்தது. நாலடியார் போன்றவை அதனால்தான் வெண்பாவில் எழுதப்பட்டன.

வெண்பா எழுதுவது கடினம் என்று யார் சொன்னது? பிற யாப்புகளைப் போலவே அதுவும் எளியதுதான். ஆனால் தளை (வெண்டளை) தட்டக்கூடாது என்ற விதி உண்டு. அதற்கு எளிய வழி உண்டு. மூவசைக் காய்ச்சீர் முன்னால் நேரசை வர வேண்டும். ஈரசைச்சீர் என்றால் மாமுன் நிரையும், விளமுன் நேரும் வரவேண்டும். இதற்கு இலக்கணம் படித்து எழுதுவது சுத்தப்படாது. பின்வரும் எளிய வழிகளைக் கையாளுங்கள்.

தானான/ தானான/ தானான/ தானான/

தானான/ தானான/ தானான/ – /தானான/

தானான/ தானான/ தானான/ தானான/

தானான/ தானான/ தான்.

என்று சந்தம் வைத்து எழுதுங்கள். இலக்கண சுத்தமாக வெண்பா எப்படி பாய்ந்து வருகிறது பாருங்கள்! (தானான என்பதற்கு பதிலாக தந்தான என்றும் பயன்படுத் தலாம்).

அல்லது,

தானன / தானன / தானன/ தானன /

தானன / தானன / தானன / – / தானன /

தானன / தானன / தானன / தானன /

தானன / தானன / தான்.

தானன என்பதற்கு பதிலாக தந்தன என்றும் பயன்படுத்தலாம். அல்லது,

தனதம் / தனதம் / தனதம் / தனதம் /

தனதம் / தனதம் / தனதம் / – / தனதம் /

தனதம் / தனதம் / தனதம் / தனதம் /

தனதம் / தனதம் / தனம்.

இவையெல்லாம் வெண்பா எழுதுவதற்குச் சிறந்த எளிய வழிகள். இன்னும் இதுபோல ஃபார்முலாக்கள் உண்டு. இவற்றையெல்லாம் தெரியாததால்தான் இன்று பாவம் பலர் புதுக்கவிதை எழுதுகிறேன் என்று சிரமப்படுகிறார்கள்.

கேள்வி: சித்த மருத்துவமும் ஆயுர்வேதமும் ஒரே போன்ற மருத்துவ முறைகள் கொண்டிருந்தாலும், சித்தமருத்துவம் தமிழிலும், ஆயுர்வேதம் சமசுகிருதத்திலும் உள்ளதே? இப்படிப் பல விஷயங்கள் தமிழுக்கும் சமஸ்கிருதத்திற்கும் பொதுவாக உள்ளதே? குமார், கலிபோர்னியா

பதில்: முதலில் ஓரிரண்டு விஷயங்களை மனத்தில் கொள்வோம்.

1. ஆரியர்கள் கி.மு. 1500 வாக்கில் இந்தியாவிற்குள் வந்தார்கள்.

2. அப்படியானால், அதற்கு முன் இந்தியாவில் மக்களே இல்லையா? எல்லாப் பகுதிகளிலும் பழங்குடி மக்கள், திராவிட இனத்தவர் என்று பலவித மக்கள் இருந்தார்கள்.

3. அவர்களிடம் பழைய மருத்துவ முறைகள் நிறைய இருந்தன. குறிப்பாகக் காட்டில், மலைகளில் வசிப்பவர்களுக்குத்தான் பலவித மூலிகைகளும் இயற்கைப் பொருள்களும் தெரியும்.

4. அவற்றை திராவிட இனத்தவரும், பிறகு வந்த ஆரிய இனத்தவரும் கற்றுக் கொண்டார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். திராவிட இனத்தவர் சித்தர் களிடமிருந்து கற்றதால் சித்தமருத்துவம் என்றார்கள். ஆரியர்கள் ஆயுள் வேதம் என்றார்கள்.

5. பழங்குடி இனத்தவர்களிடமிருந்து மருத்துவ யோக முறைகளைப் பெற்றுப் பரப்பியவர்கள் சித்தர்கள். சித்தர்களே பழங்குடி மரபைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் இருக்கலாம்.

வடநாட்டில்-பீகாரில் கூட கோரக்கர் என்ற ஒரு சித்தர் பெயரால் கோரக்பூர் என்ற ஊரும் அங்கே கோரக்நாத் கோயிலும் உண்டு. இது சித்தர் பரம்பரை இந்தியா முழுவதும் இருந்தது என்பதைக் காட்டுகிறது.

பல கருத்துகள்  தமிழுக்கும் சமசுகிருதத்திற்கும் பொதுவாக இருப்பதற்குக் காரணம், அவை இந்தியாவின் பழங்குடி மக்களிடமிருந்து (ஒருவேளை அவர்கள் திராவிட இனம் இல்லை என்றாலும்கூட) இருவேறு நாகரிகத் தினரும் கற்றுக் கொண் டவை என்பதுதான். ஒருவேளை பழங்குடி மக்கள் திராவிடர்கள் இல்லை என்றாலும் என்று கூறுவதற்குக் காரணம், திராவிட இனத்தவரும் ஆரியர்கள் வருவதற்குச் சில ஆயிரம் ஆண்டுகள் முன்பு அயலகங்களிலிருந்து வந்தவர்கள் என்று இப்போது ஒரு கொள்கை இருக்கிறது.

You can get logs sent how to spy on someones phone in cellspyapps.org to your through the email

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

5 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “நம் பண்பாட்டை அறிவோம்! – கேள்வி பதில் பகுதி – 3”
  1. sethuraman says:

    திரு,விருமன்டி 70000ஆனடுகலுக்குமுர் பட்டவர்.மரபனு. த்மி ழ் பழ்மை வாய் ந்த் தது

  2. Balasubramanian says:

    பூர்ண சந்திரன் அவர்கட்கு,
    ஆரியர்கள் வெளி நாட்டிலிருந்து வந்தவர்கள் என்ற கருத்து இன்று இல்லை. ஓருகாலத்தில் இந்தியா முழுவதும் திராவிடர்களே இருந்தனர் என்றும் ஒரு சிறு குழுவினர் (சிந்து சமவெளியில் வாழ்ந்தவர்கள்) திராவிடர்களை வென்று அவர்களை தெற்குப்பகுதிக்கு விரட்டினர் என்று தான் இப்பொதைய கருத்து.Subash Kak, David Frawly, Klostermyer wrote several articles on this. There is no such theory as Aryan Invasion from outside India anymore. I request you to read more from The Return of Aryans By Bagwan Gidwani.

    • kondraivendhan says:

      புரையோடிய சீழ் தான் ஆரிய நச்சு. அது மண்ணின் மைந்தர்களை தெற்குப் பகுதிக்கு விரட்ட வில்லை. அங்கும் நம் இனம் ஒடுக்கப்பட்ட இனமாக அடிமைப்பட்டு உள்ளது. 1947 க்குப் பின் பல ” தியரிகள்” உருவகி வருகின்றன. இவையெல்லாம் நரகாசுரன் கதை தான். வாய்க்கு வந்ததை ( மலக்குழியில் வரவேண்டியது எல்லாம் ) வகையில்லாமல் கட்டுவித்து கட்டுடைக்கும் வக்கிரம்.

  3. rajkumar says:

    மிக்க நன்றி அய்யா. அருமையான பதிலை கொடுத்துள்ளீர்கள். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். இது பிரச்னையை உள்ளடக்கிய கேள்வி அல்ல. சமீபத்தில் தமிழ்நாட்டில் நடந்து வரும் விவாதத்தால் ஏற்ப்பட்ட பாதிப்பால் எழுந்த கேள்வி தான். மேலும் வடநாட்டில் வழக்கத்தில் இருக்கும் “யாதவர்” என்ற சொல் தமிழா? என்பது தெரியவில்லை. மீண்டும் நன்றி.

  4. கிராமத்தான் says:

    மிகவும் அற்புதமான பதில்கள் – விளக்கங்கள். திரு. பூரணச்சந்திரன் அவர்களுக்கு மிகவும் நன்றி!கிரகாம் குக் அவர்களின் பூம்புகார், குசராத்தின் காம்போ குறித்த ஆராய்ச்சி காணொலியில், இவைகள் 9000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று ஆதாரங்களுடன் நிருபித்து உள்ளார். எனவே இனிமேல் நாம் 2000 ஆண்டுகள் என்று பேசுவதை விடுத்து, எமது இனம், மொழி 9000 ஆண்டுகள் தொன்மை வாய்ந்தது என்று பேச வேண்டுமென்று பவிதரா தர்மலிங்கம் மற்றும் ஆனந்த பாஸ்கரன் தமது கட்டுரையில் ஆதங்கப்பட்டுள்ளதை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
    அன்புடன்
    மனோகரன் கந்தசாமி

அதிகம் படித்தது