மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

நவீனக் காதல் கவிதைகளின் புதிய போக்குகள் (பாகம்-2) (கட்டுரை)

ஆச்சாரி

Apr 1, 2013

                  14 வயதில் பாலியல் விழைவுக்குத் தயாராகும் ஆண் உடலைக் குறைந்தது பத்து அல்லது பதினைந்து ஆண்டுகள் காக்கவைப்பது வாடி உலர்ந்த தக்கையாகிவிடும் சூழலின் வெக்கை அளவற்றது. இன்னொரு புறம் காமம் என்பது சிற்றின்பம், எனவே புலன்களை அடக்கியொடுக்குதல் சிறந்தது என்று மதம் ஏற்படுத்தியிருக்கும் போதனை கொடுமையானது. உடலில் இயல்பாகத் தோன்றும் விழைவின் காரணமாக நவீன இளைஞர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளும் ஏராளம்.

 

      பெரியோர் ஏற்பாடு செய்யும்வரை உடலை அடக்கியொடுக்கி வாழ்ந்திட நிர்பந்திக்கப்படும் இளம் உடல்கள், திருமணம் முடிந்தவுடன் முன்பின் அறிமுகமில்லாதவருடன் உடலைப் பகிர்ந்து கொள்வது சாதாரண விசயம் அல்ல. சாதி, சமயம், பொருளியல் ஏற்றத்தாழ்வு எனப் பல நிலைகளில் அடக்கியொடுக்கப்பட்ட மனங்கள் நாளடைவில் கொண்டாட்டங்களை இழந்துவிடும். அப்புறம் எங்கே காதல்? லட்சுமி மணிவண்ணனின் ‘மறைந்து கொள்கின்ற எனக்கான பெண்’ கவிதை வரிகள் காதல் பற்றிய புதிய திறப்புகளை உருவாக்குகின்றன.                   .

எனது பெண்ணைக்
கண்டுபிடிக்க முடிவதில்லை
அவள் எல்லா பேருந்து நிலையங்களிலும்
என் கண்களில் படாமல் ஒளிந்து கொள்கிறாள்
அவளைத் தேடிச் சலித்த கண்களில்
முலைகளும், பிருஷ்டங்களுமே
படுகின்றன.

 

     கனவுலகவாசியின் குறிப்பென விரியும் கவிதையில் தூய ஆன்மாவினை உடைய பெண்ணைத் தேடும் கவிஞரின் வேட்கை வெளிப்பட்டுள்ளது. அவருக்குள் பொங்கும் காதல் கபடமற்றது; பளிங்கு போன்றது. பேரண்டத்தின் அழகு சொட்டும் ஆன்மாவாக மிளிரும் காதல் பெண் குறித்த விருப்பம் அளவற்று விரிகின்றது. பெண் என்றால் முலை, யோனி, பிருஷ்டம் என்ற பால் அடிப்படையிலான பார்வைக்கு அப்பால், மணிவண்ணன் கண்டறிய முயலுவது காதலின் வழியாக வேறு ஒன்று.

 

       ஆதித்தாய், மோகினி,  நீலி,  சூலி எனப் பெண்ணைத் தேடுகிறாரோ என்னவோ? தன் உடலில் தோன்றும் காமத்தை அறிதல் என்பது பேறுதான். காமம் என்பது மாயப்புனைவு போல் கற்பிதம் செய்யும் சமூகச் சூழலில், காதல் மூலம் காமத்தைக் கண்டறியலாம். உடலின் வேட்கையைப் பதிவாக்கியுள்ள மனுஷ்ய புத்திரனின் ‘இணக்கம்’ கவிதை வாசிப்பில் தரும் அனுபவம் நெருக்கமானது.                                .

இன்று நான்
முழுக்க முழுக்க
காமத்தால் நிரம்பியிருக்கிறேன்
அவ்வளவு
இணக்கமாக இருக்கிறேன்
இந்த உலகத்தோடு

 

   ‘தன்னை அறிந்தாலே இறைவனின் தாளினை அறிய முடியும்’ என்ற மதக் கொள்கையைத் தன் காமம் அறிதல் என மாற்றிக் கொள்ளலாம். மனித இருப்பு, காமம் சார்ந்தது என்பதைத் தன்னுடல் வழியே கண்டறிய முயலும் கவிதை வரிகள் அற்புதமான பதிவுகள். காதல் ஏற்படுத்தும் அலைக்கழிப்பு, வேதனை, ஏக்கம் போன்றவைகளுக்கு அப்பால் சங்கர் ராமசுப்ரமணியன் அமைதியான வழியில் காதலைக் கடக்க முயலுகிறார்.                     .

நீ பிராயத்தைக் கரையவிட்ட
அதே நதியின் கரையில்தான்
உன் மகளும் அமர்ந்திருக்கிறாள்

அமைதியாக

 

    ஆற்று வெள்ளம் அழிந்தோடுவது போல, மனம் வழியே கடந்து போகும் காதலைச் சொல்லியுள்ள கவிஞருக்குக் காதல் குறித்து எவ்விதமான பிராதும் இல்லை. ஏகாந்த நிலையில் காதல் பற்றிய பதிவுகள் வரிகளில் மௌனமாக உறைந்துள்ளன. ‘காதல் என்பது ஒருமுறை, ஒருவரிடம் மட்டும் ஏற்படும் புனிதமான உறவு’ என்ற புனைவை வீணாகச் சுமந்து திரியும் தமிழர் வாழ்க்கையில் செல்மா பிரியதர்சனின் வரிகள் அதிர்வை ஏற்படுத்துகின்றன. வழமையான ராதா-கண்ணன் என்ற பிம்பங்களின் மூலம் ‘காதல் ரசம்’ சொட்டக் கவிதை எழுதியுள்ள செல்மாவின் வரிகளில் புனைவு ததும்புகிறது.

 

கண்ணன் தன் தோழர்களுக்குச் சொல்கிறான்
ராதா இப்பொழுது வந்து விடுவாள்
கண்ணன் ஒன்றும் அவ்வளவு சுயநலக்காரனல்ல
தனது தோழர்களில் சிலரும்
ராதாவுக்காகக் காத்திருக்கிறார்கள் என்பதை
அறியாதவனும் அல்ல
வீட்டு முற்றங்களில் சாலையோரங்களில் தியேட்டர் இருளில்,
போக்குவரத்து சிக்னல் விளக்குகளின் கீழ்
இன்னும் பலரும் ஆங்காங்கே பதுங்கியிருக்கிறார்கள்.

ஒரே நேரத்தில் உங்களுக்காகவும் எல்லோருக்காகவும்
தனித்தனியே தோன்றி
காதலை வழங்குபவள்தான் ராதா
பார்வையாளராகிய நீங்களும் அறிந்தேயிருக்கிறீர்கள்.

 

      ஒவ்வொரு ஆணும் கண்ணன் ஆகவும், ஒவ்வொரு பெண்ணும் ராதா ஆகவும் உருமாறும் வேளையில் காதல் வெளியெங்கும் பரவுகிறது. ராதாவின் மீது கண்ணனுக்கு ஏற்படும் காதல்தான் முதன்மையானது. நவீன உலகில் கண்ணன்கள் எண்ணிக்கை பெருகும் வேளையில், ராதாவினால் என்ன செய்யவியலும்? புராண ராதா போல கண்ணனை மட்டும் நினைத்து உருகுவது நவீன ராதாவுக்குச் சாத்தியமில்லை. ராதா என்ற பிம்பத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து அக்கறை கொள்ளும் கவிஞர் செல்மா உருவாக்கிடும் காதல் பற்றிய புனைவு சுவாரசியமானது.

 

         இன்றைய உலகில் கண்ணனுக்கும் பிரச்சினை இல்லை, ராதாவுக்கும் பிரச்சினை இல்லை. ஆனால் காதல் மட்டும் கோப்பையிலிருந்து நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது. கண்ணனுக்கு ஒரு ராதை மட்டும் போதாது போல, ராதாவுக்கும் ஒரு கண்ணன் போதாது என்ற உண்மையைச் சொல்லும் கவிதை வரிகள் மரபு வழிப்பட்ட மனங்களுக்கு வருத்தத்தைத் தரலாம். ஆனால் வேறு வழி? நவீனக் காதல் கவிதையில் அப்பாஸ் முக்கியமான திருப்புமுனை. மரபு வழிப்பட்ட ‘காதல்’ என்ற சொல்லாடல் அர்த்தமிழந்து கொண்டிருக்கும் நவீன வாழ்க்கை முரணை அப்பாஸ் நுணுக்கமாகப் பதிவாக்கியுள்ளார்.

 

    அடிக்கடி நாம் கூறிக்கொள்கிறோம் அவசரப்பட்டு விட்டோம் இன்னும் யோசித்து இருக்கலாம். கொண்டாட்டத்தின் மறுபக்கம் காதல். ஒவ்வொரு நொடியிலும் கொப்பளிக்கும் குதூகல உணர்வுகளும் உடல்களின் பரஸ்பர விழைவுகளும் என மிளிரும் காதல், சலிப்பை ஏற்படுத்தினால் என்ன ஆவது? துடிக்கும் மனத்துடன் பேராசையுடன் ஒருவரையொருவர் காதலித்த இருவரும் நாளடைவில் ‘அவசரப்பட்டு விட்டோம்’ என யோசிப்பது கவிதையை வேறு தளத்திற்கு மாற்றுகின்றது.

      சாகச மனநிலையுடையவர்களுக்குக் காதல் என்பது, ஒருநிலையில் பொட்டலத்தை அவிழ்த்தது போல் ஆகிவிடும். காதலுக்காகக் காலந்தோறும் ஏங்கியலைந்தது போக, நெருக்கமான பின்னர் அவசரப்பட்டு விட்டோமா என மறுபரிசீலனை செய்வதும் விநோதமானதுதான். நவீனக் காதலின் சூட்சுமத்தைக் கண்டறிந்த அப்பாஸின் காதல் கவிதைகள் புதிய போக்கினை முன்னிறுத்துகின்றன. மகாதேவனின் காதல் கவிதைகள்,இரண்டாயிரமாண்டுத் தமிழ்க் கவிதைப் பாரம்பரியத்தில் அழுத்தமான முறையில் கேள்விகளை எழுப்புகின்றன.

 

தலைவாரி பூச்சூடி மையிட்டு
நீ
காத்திருப்பது உன்

கணவனுக்குத்தான் என்றாலும்
மெல்ல மெல்லப் படியேறி வரும்
என்னைக் கண்டும் சிலிர்க்கிறாய்.

 

  ‘மலரினும் மெல்லிது காதல்’ என்ற வரிகளுக்கு எடுத்துக்காட்டாக இக்கவிதைவரிகள் மனித மனத்தின் இடுக்குகளில் பயணிக்கின்றன. காதல் பற்றிய அதிகார மையப் புனைவுகளுக்கு மாற்றாக ஒவ்வொரு உயிரும் தனித்துவமான நிலையில் கொள்ளும் காதல் அபூர்வமானது. இக்கவிதை பொறுக்கித்தனமானது அடல்ட்ரி என யாராவது கொந்தளித்தெழுந்தால், ஒரு வாரத்துத் தினத்தந்தி செய்திகளை வாசித்தால் நவீனத் தமிழர் காதல் லீலைகள் பற்றி அறிய முடியும். ஒரு களத்தில் பரஸ்பரம் வெளிப்படும் காதலின் மேன்மை, நவீனக் காதல்தான்.                       .

உள்ளாடைக்குள் பணத்தை வைத்துக்கொண்டு
மேலாடையைச் சரி செய்தபடி
கதவு திறந்து புறப்பட்ட நீ
திரும்பி வந்து தந்த முத்தத்தை
நான் மறக்க மாட்டேன்.

 

    காசுக்காகத் தனது உடலைப் பகிர்ந்துகொள்ளும் பெண்ணுக்குத் தோன்றும் காதல் பற்றிய மகாதேவனின் கவிதை செவ்வியலானது. மரபு வழிப்பட்ட காதல் பற்றிய புனைவுக்கு மாற்றாக விலைமகளிர் தந்த முத்தத்தின் வழியே கசிந்திடும் உறவு, காதலின் உன்னதத்தைச் சொல்கின்றது. எந்தவொரு நிபந்தனையும் அற்று ஆண், பெண் உறவில் எந்தக் கணத்திலும் எப்படியோ வெளிப்படும் காதல் பற்றிய மகாதேவனின் வரிகள் முக்கியமானவை. சர்ரியலிச பாணியில் காதலைச் சித்தரிக்கும் ஸ்ரீபதி பத்மநாபாவின் கவிதை விநோதமாக வெளிப்பட்டுள்ளது.                        .

எறும்புத்திண்ணிகள் மிகவும் சாதுவானவை ரொம்ப நல்லவை
எனக்கு உங்களைப் பிடித்திருக்கிறது என்றவளே!
என்னைப் போலவே ஒரு எறும்புத்திண்ணியைப்
பரிசாகத் தருகிறேன் படுக்கைக்கருகில் வைத்துக்கொள்.

 

   இருப்பிலிருந்து அந்நியப்பட்ட மனநிலை கொண்ட இளைஞனுக்குக் காதல் அபத்தமாகத் தெரிவதில் வியப்பில்லை. படுக்கையில் தனக்குப் பதிலாக எறும்புத் திண்ணியைப் பரிசாகத் தருகிறேன் என்ற பேச்சு, புதிய காதலை முன்னிறுத்துகின்றது.  காதல் என்ற உணர்வு இயற்கையின் ஆகப்பெரிய தந்திரம். எல்லாவிதமான உபாயங்களையும் கபடங்களையும் செய்து இயற்கையானது,

 

     ஆணையும் பெண்ணையும் புணர வைப்பதற்காக முன் வைப்பதுதான், ‘காதல்.’ மறு உற்பத்தி மூலம் மனித குலம் தொடர்ந்து தழைப்பதற்குப் பாலியல் ஈடுபாடு அவசியம் என்ற நிலையில்,விரும்பியும் விரும்பாமலோ காதல் என்ற பெயரில் ஆணும் பெண்ணும் எதிர்கொள்ளும் துக்கங்களும் கஷ்டங்களும் ஏராளம். அதையொட்டி உடல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் ஏற்படும் வன்முறைகள் கொடூரமானவை. ஒரு பெண்ணுடன் சேர்ந்து வாழ வேண்டிய நிலை குறித்து அச்சமடையும் யவனிகா ஸ்ரீராமின் கவிதை வரிகளும் ஒரு நிலையில் காதலின் மறுபக்கம்தான்.                   .

ஒரு பெண்ணைச் சேர்த்துக்கொண்டு
திரிகிற துக்கம் தாளவில்லை எனக்கு
என் விதைப்பையைச் சிதைப்பதற்கு
அல்லது உறங்கும்போது தலையில்
கல்லை வீசிவிட்டுப் போக
அவளுக்கு முகாந்திரங்களுண்டு

 

ஆணின் மொழியில் அமைந்த இக்கவிதை வரிகள், பதற்றத்துடன் வெளிப்பட்டுள்ளன. காதல் என்ற புனைவினைக் கேள்விக்குள்ளாக்கும் யவனிகாவின் கவிதை,  தமிழ்க் காதல் மரபில் புதிய தடம் வகுத்துள்ளது.
காதல் என்றாலே கிளுகிளுப்பு,  மகிழ்ச்சி என்று சராசரி இளைஞனும் இளைஞியும் நினைக்கும் வேளையில் தொண்ணூறுகளுக்குப் பிந்திய தமிழ்க் கவிஞர்களின் நவீனக் காதல் கவிதைகள் வேறுபட்டனவாக உள்ளன.

 

    மாறிவரும் ஆண், பெண் உறவின் புதிய போக்குகளையும், காதலின் பன்முகத்தன்மைகளையும் எவ்விதமான மனத்தடைகளற்று விவரிக்கும் காதல் கவிதைகள், இளைய தலைமுறையினரின் மனப்பதிவுகளையும் விளக்குகின்றன. அவை காதல் பற்றிய மரபு வழிப்பட்ட பார்வையைச் சிதைத்துப் புதிய போக்குகளை முன்னிறுத்துகின்றன.

 

Theses, dissertations and/or projects are all thereafter referred to as thesis http://www.writemypaper4me.org/ or theses

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “நவீனக் காதல் கவிதைகளின் புதிய போக்குகள் (பாகம்-2) (கட்டுரை)”

அதிகம் படித்தது