மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

நவீனக் காதல் கவிதைகளின் புதியப் போக்குகள்

ஆச்சாரி

Mar 15, 2013

            மனிதன் சக மனிதனை நேசிக்கிற, சக மனிதன் துன்பம் போக்கி வாழ்கின்ற மனிதநேயத்துக்கும் அப்பால், உலகத்தில் உள்ள எல்லா உயிர்களிடமும் அன்புகாட்டுகின்ற, எல்லா உயிர்களின் துன்பம் போக்குகின்ற, உன்னதமான வாழ்க்கை நெறியைச் சங்ககாலம் காட்டுகிறது. காதல் விநோதமானது; கவர்ச்சியானது. மாயமான முறையில் மனித குலத்தின் மீது நிழலாகப் பற்றிப் படர்ந்திருக்கிறது. பதற்றம், ஏக்கம், விழைவு,தவிப்பு, காத்திருப்பு, சீற்றம், கொந்தளிப்பு, கோபம், பயம், மயக்கம் எனப் பல்வேறு உணர்வு நிலைகளில் காதல் ஏற்படுத்தும் அனுபவங்கள் நுணுக்கமானவை.

     வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்திலிருந்தே காதல் என்னும் மர்ம ஆறு சுழித்-தோடிக் கொண்டிருக்கிறது. காதல் என்ற சொல்லுக்குள் புதைந்திருக்கும் பிரமாண்டமான ஆற்றல், சமூகத்தை உயிர்ப்புடன் இயங்கச் செய்கிறது. ராதன மனிதனின் மூளையை இயக்கிய காதல் ஒருவகையில் சித்தப்பிரேமைதான்.

     சமூக வரலாற்றினைப் புரட்டிப் போடவும், வன்முறையாளரை அமைதிப்படுத்தவும், எளிய மனங்களை மனப் பிறழ்விற்குள்ளாக்கவும், பேரரசையை வீழ்த்திடவும், மென்மையானவர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கவும், ஆற்றல் மிக்க காதல் ஜீவ ஆறு போல எல்லா தேசங்களிலும் பொங்கியோடிக் கொண்டிருக்கிறது.

   வாழ்க்கை என்னும் இயந்திரத்தின் செயல்-பாட்டினைத் துரிதப்படுத்தும் காதல்பற்றிய புரிதல், தமிழர்களைப் பொறுத்தவரையில் சங்க காலத்திலே தொடங்கிவிட்டது சமூக இருப்பினைத் திணைசார் வாழ்க்கையாக அவதானித்த நிலையில்,  அகத்திணைக் காதலை முழுக்க மையமிட்டு விரிந்துள்ளது. பிரிவு-காத்திருத்தல் என்ற இரு வேறு ஆதார உணர்ச்சிகளின் வழியாகப் புனையப்படும் ஆண், பெண் உறவின் அடிப்படையாகக் காதல் உள்ளது. காதலைப் பற்றி உணர்ச்சிவயப்படும் கவிஞர்கள் நிரம்பிய தமிழ் மரபு இன்றும் தொடர்கின்றது.அதேவேளை, புற வாழ்க்கையில் உடல், பால், சாதி, சமயம் போன்ற வேறுபாடுகளினால் காதல் தொடர்ந்து கண்காணிப்பிற்கு  உள்ளாகியுள்ளது. வைதிக சமயம் ஏற்படுத்திய அதிகாரத்தினால் காதலுக்கு ஏற்படுத்தியுள்ள சேதங்கள் அளவற்றவை. எனினும்

காதல் காதல் காதல்
காதல் போயின்
சாதல் சாதல் சாதல்”

என முழங்கிய பாரதியாரின் புனைவு மனம் கொண்டாட்டமானது. பால் ஈர்ப்பின் காரணமாக ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் உடல், மன ரீதியில் தோன்றும் விழைவினைக் காதல் எனப் பொதுவாக வரையறுப்பது இன்று மறுபரிசீலனைக்குள்ளாகியுள்ளது.

       1990களுக்குப் பின்னர் உலகமயமாக்கல் ஏற்படுத்தியுள்ள பண்பாட்டு நெருக்கடிகளில் காதலும் சிக்கியுள்ளது. வரலாற்றுப் பழமையும் புராதனப் பெருமையும் மிக்க தமிழர் வாழ்க்கை இன்று ஒற்றைப் போக்கினால் தகவமைக்கப்பட்டுள்ளது. உயரமான உருவம், சிவந்த மேனி, பளபளக்கும் தோல் எனப் புனையப்படும் பெண் பற்றிய அழகு, வணிகக் கம்பெனிகளின் நலன் சார்ந்தது.

     பெண்ணுடல் என்ற நிலையில் அதைப் புறக்கணித்த பண்டைத் தமிழர் மனப்பான்மையில் இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது பெண்ணுடல் முழுக்க நுகர்வுப் பொருளாக உருமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. வண்ணமும் மினுமினுப்பும் கலந்த நிலையில் கவர்ச்சியான, பெண் உடல்களை உருவாக்கிடும் சூழலில், காதல் பற்றிய கருத்துகளில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

       இளம்பெண்ணைப் பார்த்தவுடன் இளைஞன் ஒருவனின் மனதில் தோன்றும் ஏக்கமும், அதுபோல அப்பெண்ணின் மனதில் தோன்றும் விருப்பமும் காதல் எனப்படுகிறது. ஆணோ பெண்ணோ, ஒருவர் மனதில் மட்டும் காதல் அரும்பினால் அது ஒருதலைக்காதல் எனப்படும். வன்முறையால் பெண்ணைக் கவர்ந்து சென்று அவளிடம் காதல் விருப்பத்தைத் தெரிவிப்பதைக் காதல் என்று சொல்ல வாய்ப்புண்டா? தெரியவில்லை.

        காதல் வயப்பட்ட இளைஞனும், இளம் பெண்ணும் திருமணத்திற்கு முன்னர் உடலுறவு கொண்டால், ‘அப்படியா?’ என்று கேட்கக் கூட சங்க காலத்தில் யாருமில்லை. ஒத்த மனமுடைய ஆணும் பெண்ணும் துய்க்கும் பாலியல் இன்பத்திற்குப் பண்டைக்காலத்தில் சமூகத் தடை எதுவுமில்லை. இந்நிலையில் காதலுக்கும் உடலுறவுக்குமான தொடர்பினை ஆராய வேண்டியதில்லை. திருமணம் முடியும் வரை எவ்விதமான தொடுதல் அல்லது பாலியல் உறவு இல்லாமல் புனித உடல்களைக் கட்டமைப்பது எந்தக் காலகட்டத்தில் வலியுறுத்தப்பட்டது என்பது புலப்படவில்லை.

       காதல் என்ற ஒற்றைச் சொல்லின் அர்த்தம் விரிந்து கொண்டிருக்கும் இயல்புடையது. காதலுக்கு வயது பொருட்டல்ல;  திருமணம், இலக்கு அல்ல. எல்லா கால கட்டங்களிலும் காதல் வயப்பட்ட மனநிலை வாய்ப்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் சாத்தியமே. இன்று மூன்றாம் பாலினரின் குரல் ஓங்கி ஒலிக்கும் நிலையில் ஓரினக் காதல், அரவாணிக் காதல் முன்னிலைப்படுத்தப்படுகின்றன. உடலினால் ஆணாகவும், மனதினால் பெண்ணாகவும் வாழும் உயிருக்குச் சக ஆண் மீது ஏற்படும் காதல் உக்கிரமானது.

        பெண்ணுக்கும் பெண்ணுக்குமிடையில் தோன்றும்  காதலும் வலுவானது. ஓர் இளம்பெண் ஒரே நேரத்தில் இரு இளைஞர்கள் மீது காதல் கொள்ளுதல், ஒரு இளைஞன் ஒரே நேரத்தில் இரு இளம்பெண்களைக் காதலிப்பது என நவீன வாழ்க்கையில் காதலின் முகங்கள் மாறிக் கொண்டிருக்கின்றன. காதல் வயப்பட்ட நிலையில் ஆணுக்கும் பெண்ணுக்குமிடையில், காமமும் காதலும் ஒருங்கிணைகின்றன. காமம் அற்ற காதல் மொன்னைத்தனமானது. காதல் அற்ற காமம் வறட்டுத்தனமானது.

       மனித மனத்திற்கு மிகவும் நெருக்கமான காதல், காலந்தோறும் கவிஞர்களின் மனதில் சலனங்களை ஏற்படுத்திக் கொண்டேயிருக்கிறது. இதனால்தான் காதலிக்க முனையும் காதலர் நாளடைவில் கவிஞராக மாறுகின்றனர். நவீனத் தமிழ்க் கவிதையானது சி.மணி, எஸ். வைத்தீஸ்வரன் எனத் தொடங்கிக் கலாப்ரியாவில் புதிய பரிமாணம் பெற்றது. கலீல் ஜிப்ரான். உமர் கய்யாம், தாகூர் போன்ற கவிஞர்களின் காதல் கவிதைகளின் தாக்கம் எழுபதுகளில் கூடத் தமிழில் இருந்தது.

       1982-இல் ‘மழை வரும் வரை’ என்ற அழகிய தொகுப்பின் மூலம் அறிமுகமான கௌரி ஷங்கர், காதலின் புனைவுகளை உருக்கமான மொழியில் பதிவாக்கியிருந்தார். தாகம் நெஞ்சைப் பிளக்கும்போதும், மழை வரும்வரை காத்திருக்கும் சாதக பட்சி பற்றிஅறிவாயா நீ என்ற ஷங்கரின் வசனக் கவிதையில் மனம், அறுபட்ட பல்லி வாலெனத் துடித்தது. இன்று ‘காதல்’ என்ற சொல் குறிப்பாக மாறிவிட்டது. சில வேளைகளில் அது காதலையும் குறிக்கின்றது.

      ஆண், பெண் பற்றிய சமூக மதிப்பீடுகளின் மாற்றம், ஊடகங்களின் பெருக்கத்தினால் வாடி வதங்கித் தட்டையாகிவிடும் உடல்கள், குடும்பத்திலிருந்து மனரீதியில் வெளியேறிக் கொண்டிருக்கும் இளைய தலைமுறை… எனச் சூழலில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் காதல் பற்றிய கனவுகளைச் சிதைத்துக் கொண்டிருக்கின்றன. நுகர்ப்பொருள் பண்பாட்டிற்குப் பழக்கப்பட்டுவிட்ட நிலையில், காதலுக்காக வீட்டை விட்டு வெளியேறிப் பொருளாதார நிலையில் சிரமப்பட்டு வாழ்வது, காதலுக்காக உயிரைத் துறப்பது, காதலுக்காக கை நரம்பினை அறுத்துக் கொள்வது… ஒரு நிலையில் மடத்தனமாகிவிட்டது. காதலித்த பெண்ணைக் கைவிட்டுச் செல்லும் இளைஞன், தான் விரும்பிய பையனை அடைவதற்காகப் பொய்யாகப் புகார் சொல்லும் இளைஞி எனக் காவல் நிலைய வாயிலில் ‘காதல்’ தவித்துக் கொண்டிருக்கிறது.

     சரி, போகட்டும். நவீனத் தமிழ்ப் பெண் கவிஞர்கள் காதலைப் பற்றி நுட்பமாகச் சித்தரித்துள்ள வரிகள், புதிய உலகினை அறிமுகப்படுத்துகின்றன. லீனா மணிமேகலையின்  ‘தீர்ந்து போயிருந்தது காதல்’, பெண் மனதின் விகாசத்தை நுட்பமாகப்  பதிவாக்கியுள்ளது.

திடீரென்று உன் நினைப்பு
பற்றிக் கொண்ட நெருப்பாய்
ஈரமாய்
உலர்வாய்
இன்னும்
என்னென்னவெல்லாமோ

இறுதியில் வந்தாய்
நீ அணைத்துக் கொண்டது
கசகசப்பாய் இருந்தது
தீர்ந்து போயிருந்தது காதல்

அன்றாட நடப்பு வாழ்க்கையானது அலுவலகம் , டிராஃபிக்,  வீடு,  சமையல், காத்திருத்தல் என விரியும் நிலையில், காதல் என்பது சமையல் கியாஸ் போலத் தீர்ந்து போகும் சாத்தியப்பாட்டினை எளிய வரிகள் பதிவாக்கியுள்ளன. சங்க காலம் தொடங்கி, வீட்டில்  ‘காத்திருத்தல்’  பெண்ணின் இயல்பு என்ற கற்பிதத்தை சிதைக்கின்ற இக் கவிதை, வாசிப்பில் கிளர்த்தும் கேள்விகள் ஆழமானவை. மரபு வழிப்பட்ட வாழ்க்கை சிதிலமாகிக் கொண்டிருக்கும் சூழலில், கவிஞர் ரத்திகாவின் கவிதை, காதலனை அகதியாக்கிவிட்டது.

  ‘இதெல்லாம் சகஜம்’        - என்ற நிலையில் விரியும் வரிகளில்

 

வேதனை எதுவுமில்லை.

உன்னை எந்த அறைக்குள்

பூட்டுவதெனத் தெரியாமல்
ஒவ்வொரு அறையாய்
மாற்றிக் கொண்டே
இறுதியில்

ஒரு அகதியைப் போல்

வெளியேற்றுகிறேன்.

     சொந்த மண்ணில் இப்போதெல்லாம் நிகழ்வது இதுதான். எந்தவொரு பிரச்சினையும் இல்லை. சொந்த மண்ணில் இதுதான் நிகழும் என்ற புரிதலோடு காதல் வயப்பட்டவள், அவனை அகதியைப் போல வெளியேற்றுகிறாள். காதலின் இன்னொரு பக்கம் நவீனக் கதையாகி உள்ளது. மைதிலியின் போய் வருக’ கவிதை வரிகள் நுணுக்கமாகக் காதல் விழைவைச் சித்தரித்துள்ளன. முன்னொரு காலத்தில் சேர்ந்திருந்தோம் என்ற நினைவின் தடத்தில், பிரிவின் வலிவைச் செறிப்பது நவீனப் பெண்ணுக்குச் சாத்தியமாகியுள்ளது. மற்றபடி புலம்பல், ஏக்கம், தவிப்பு, அழுகை போன்றவை அர்த்தமிழந்த சொற்களாக மாறி விட்டன.

 ஒரு குறைமாதச் சிசுவின்

அசைவென அவன் நினைவு

அன்பே
நாம் இணைதல் அசாத்தியம்
மணலில் பதிந்த சுவடுகளனைத்தையும்
காற்று கௌவித் தின்னட்டும்
எஞ்சியவை-
ஒரு சொல்
ஒரு முத்தம்

      மலரினும் மெல்லிது எனப் புனையப்படும் காதலின் விளைவான துணையுடனான பிரிவினைக் காற்று போல எளியமுறையில் எதிர்கொள்ளும் மனம், இன்றைய உலகின் புதிய வெளிப்பாடு. காலந்தோறும் காதலின் காரணமாகப் பிரிவின் வலியை முன்னிறுத்தி இலக்கியப் படைப்புகள் அரற்றிய பெருங்குரலை, நவீன மனம் புறக்கணிப்பது ‘போய் வருக’ என்ற தலைப்பின் மூலம் பதிவாகியுள்ளது. இரவில் சலனமற்றுக் கரையும் காதல் பற்றிய மைதிலியின் வரிகள் நுட்பமானவை. காதல் என்பது விழிகளின் வழியே ஊடாடி, வெளியில் விரிந்த என்ற புனைவு தரும் சுகத்தில் மயங்கும் வேளையில்,

விஷப் பாம்பொன்று
என் மீதேறி
நிதானமாக
கடந்து போகிறது
புரிதலற்ற – உன்
பார்வைகளைச்
சந்திக்கும் பொழுதெல்லாம்

என்ற அ.வெண்ணிலாவின் கவிதை வரிகளை எப்படி அர்த்தப்படுத்துவது என்ற கேள்வி தோன்றுகிறது. புரிதல் என்று ஒற்றைச் சொல்லின் வழியாகப் பார்வை, எதிராளியிடம் உருவாக்க விரும்புவது வேறு ஒன்று. புரிதலற்ற நிலையில் எதிர்பாலினர் குறித்து ஏன் ஈடுபாடு கொள்ள வேண்டும்? ‘அவன் பார்வையே மோசம்’ என்ற ஆய்வினூடாகவே அவளுக்குள் எதிர்நிலையில் கிளர்ந்திடும் அனுபவங்களும் காதலின் இன்னொரு பக்கம்தான்.

        வெறுப்பின் மூலம் நெருங்கிச் செல்வது என்பது உளவியல் ரீதியில் ஆராயப்பட வேண்டியது. வாழ்க்கைப் பரபரப்பில் ஒவ்வொருவரின் நெருங்கிய நண்பர்களும் காதலர்களும் காணாமல் போய்க் கொண்டிருக்கின்றனர். பதின்பருவத்தில் மனதுக்குள் அடக்கி வைத்த காதல் உணர்வுகளுடன் கடந்துபோன பட்டாம்பூச்சிகளின் எண்ணிக்கைக்குக் கணக்கேது? ‘தொடுவானம்’ போல தெரியும் கானல் வெளியில் நினைவின் வழியே பறக்கும் காதலுக்கு வயது, மரியாதை, பணம் என எதுவும் தேவையில்லை.

வேதனையுடன் மறைந்து சென்றும்
பார்த்துவிட்டாய் நீ!
யாரோ போல் முகம் திருப்பியபோது
ஞாபகம் வந்தது . . .
உன்னோடு மணிக்கணக்கில்
பேசிய நாட்களும்
வெயில்படாமல் நீ என்னை
மறைத்து நின்றதுவும்

எளிய வரிகளில் மு.சத்யா விவரிக்கும் உணர்வு, எந்த நிலையிலும் காதல் உணர்வு மனதில் கொப்பளிக்கும் என்பதை வலியுறுத்துகிறது. யோசித்துப் பார்க்கையில் இன்று வாழ்ந்திடும் வாழ்க்கை யாருக்குச் சம்மதம் என்ற கேள்வி தோன்றுகிறது. இக்கவிதையில் வெளிப்படும் பெண் திறமையான நிர்வாகியாகவும்,அற்புதமான குடும்பத் தலைவியாகவும் இருக்க வாய்ப்புண்டு.

எனினும் இன்றைய கணத்தில், அவள் கடந்து வந்த வாழ்க்கைத் தடம் ஏற்படுத்தும் பாதிப்பு முக்கியமானது. ஒரு புள்ளியில் மொட்டென அரும்பிய காதல், இறுதிவரை மனதின் பக்கங்களில் சிறகடிக்கும் என்ற மு.சத்யாவின் கவிதை, பிரிவினை மீறி மனித இயல்பினைச் சித்தரித்துள்ளது. காதல் என்ற சொல்லின் எதிரிணையாகக் ‘கள்ளக்-காதல்’ என்ற சொல்லைப் பிரயோகிப்பது வழக்கினில் உள்ளது.

      அன்பு வயப்பட்ட இரு உள்ளங்களுக்கிடையில் தோன்றும் பாலியல் சார்ந்த விழைவு என்பது காதல்தான். எனினும் குடும்பத்திற்கு வெளியே எதிர்பாலினரிடம் தோன்றும் விருப்பம் ‘கள்ளக்காதல்’ எனக் கேவலமாகப் பேசப்படுகிறது. எல்லாவிதமான சமூகத் தடைகளையும் மீறி ஒத்த கருத்தும் அன்பும் மிக்க ஆணும் பெண்ணும் கொள்ளும் காதல் பற்றிய மாலதியின் கவிதை, தமிழ்ப் பண்பாட்டில் முக்கியமானது.

சோரம் மிகப் புனிதமானது

ஏனெனில் பணம் பத்திரங்கள் துச்சம் அதில்

பிறிதும் கண்மூடிக் காதல்
அதில்தான்
திறந்த முழு சரணடைவு
அதில்தான்,
அன்புடை நீ! மாசுபடுத்தாதே இதை.
இன்னொரு திருமணமாக்கி இதையும்.

      சோரம் என்ற தலைப்பிலான இக்கவிதையின் மூலம் மாலதி உணர்த்த விரும்பும் காதல் பற்றிய மதிப்பீடுகள் விவாதத்திற்குரியன. திருமணம் என்ற உறவு, சோரம் என்ற செயல் என்ற இருவேறு நிலைகளின் ஊடே, காதல் என்ற அளவுகோலில் சோரம் அல்லது கள்ளக்காதல் புனிதமான நிலையை அடைவது தற்செயலானது அல்ல. அதிகார மையமாகிப்போன நிறுவனத்தின் ஆதிக்கத்தினுக்கு மாற்றாக இரு அன்புடை நெஞ்சங்களை மட்டும் முன்னிறுத்தும் கண்மூடிக் காதல் ஒருவகையில் கொண்டாட்டம்தான்.

பெண் கவிஞர்களின் பிரச்சினைகளை ஒப்பிடும்போது, ஆண் கவிஞர்களின் பாடு திண்டாட்டம்தான். எல்லாவிதமான நம்பிக்கைகளும் அடையாளங்களும் சிதைவடையும் சூழலில், ஊடகங்கள் தகவமைக்கும் மனவெளி மனிதர்களாக உருமாறும் ஆண், தறிகெட்டு அலைய நேரிடுகிறது.

If one or both pages http://essayprofs.com is included, double spacing is used

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “நவீனக் காதல் கவிதைகளின் புதியப் போக்குகள்”

அதிகம் படித்தது