மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

நாட்டார் வழிபாடும் பம்பைக் கைச்சிலம்பமும்

ஆச்சாரி

Jan 15, 2013

நாட்டார் (folk) என்பதற்கு தங்களுக்கெனத் தனித்துவமான அடையாளங்களையும் பொதுப்பண்புகளையும் கொண்டிருக்கும் குழு. இக்குழு குறைந்த பட்சம் இருவரையாவது கொண்டிருக்க வேண்டும் என்கிறார் ஆலன்டண்டிஸ். நாட்டார் வழக்காறு என்பது பொதுமக்களிடையே வழங்கும் வழக்காறுகளாகும். இந்த சுருக்கமான புரிதலோடு பின் வரும் பகுதியை விளங்கிக் கொள்ளலாம். மனிதன் தொடக்கத்தில் இயற்கை உணவுகளையும், விலங்குகளை வேட்டையாடி வாழ்ந்தாலும் இயற்கை சீற்றங்களுக்கு அஞ்சி, சில நம்பிக்கைகளையும், சடங்குகளையும் செய்தான். அடுத்தகட்ட வளர்ச்சியாக ஆற்றங்கரை ஓரங்களில் நிலையான குடியிருப்பை அமைத்து பயிர் செய்யும், உபரிகளைக் கொண்டு செழிப்பைப்  போற்றும் விதமாக ஆடல், பாடல், சடங்குகளை நிகழ்த்தினான்.

இனக்குழு சமுதாயத்தில் தன்னுடைய சந்ததிகள் பெறுவதற்கு, பெண்ணிடம் மிகை சக்தி இருப்பதை உணர்ந்து வழிபடத் தொடங்கினான். இதனுடைய எச்சமே இன்றைய அம்மன் வழிபாடாகவும் கொள்ளலாம். தொழில் சார்ந்து உருவான சாதியப் பிரிவினைகள் மேல் தட்டு, அடித்தட்டு என வலுப்பெற்று மேல் தட்டு மக்கள் அடித்தட்டு மக்களையும் சிதைவு செய்யத் தொடங்கினர். உதாரணமாக நாட்டார் சாமிகளான சிவன், திருமால் அவதாரமாக மாற்றுதலும் நாட்டார் சாமிகளுக்கே உரித்தான உயிர்பலியை தடுக்கும் பொருட்டு ஆகம விதிகளுக்கு உட்படாத நாட்டார் தெய்வ கோவில்களில் திருமால் போன்ற சிலைகளை நிறுவி உயிர் பலியைத் தடுத்தல் என்பது மறைமுகமாக நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.

வட தமிழகத்தில் குறிப்பாக காஞ்சிபுரம்,செய்யாறு, செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் குலதெய்வம், காவல் தெய்வம் என ஏராளமான அம்மன் வழிபாடு காணமுடிகிறது. இப்பகுதிகளில் “ரேணுகா சம்ஹார கூத்து” “ரேணுகாம்பாள் கதைப் பாடல்”  போன்றவற்றை நிகழ்த்துகின்றனர். இப்பகுதிகளில் பாம்பைக் கைச்சிலம்பம் என்ற நிகழ்வு முக்கிய இடத்தை இந்த அம்மன் சடங்குகளில் இடம் பெறுகின்றன. பாடகர்கள், பம்பை வாசிக்கும் கலைஞர்கள், கைச்சிலம்புடன் ஆடுவோர் எனக் குறைந்தது ஐந்து பேர் நிகழ்த்துகின்றனர். அம்மன் திருவிழாக்கள், பூவாடை வர்ணிப்பு, குலதெய்வ பொங்கலிடல், காதுகுத்தல் போன்ற நிகழ்வுகளை நிகழ்த்துகின்றனர். இவர்கள் கதையாக நிகழ்த்துவதில்லை. புராணச் செய்திகள் உள்ளடக்கிய அம்மன் பாடல்களைப்  பாடி அடவுபோட்டு, திருவிழாக்காலங்களில் வீதி வீதியாக நிகழ்த்துவர்.

பாம்பைக் கைச் சிலம்பம் குழுவினர் இதைத் தொழிலாகவே செய்கின்றனர். இக்கலையை தலித்துக்கள், வண்ணார், வன்னியர், பண்டாரம் போன்ற சமூகத்தினர் நிகழ்த்துகின்றனர். இப்பகுத்தி மக்கள் சுப நிகழ்வுகள் நிகழ்த்துவதற்கு முன்னர் தன முன்னோர்களை வரவழைத்து குறைகளை கேட்டல் என்னும் “பூவாடை வர்ணிப்பு” நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்நிகழ்வின் தொடக்கத்தில் வரும் பாடல்

இல்லத்து பூவாடையே

இருக்கின்ற குப்பம்மா தேவதையே

மலையிலுள்ள குப்பம்மா தேவதையே

மாதாவே குப்பம்மா வாரும்மா

……

பத்து மாதம் முந்நூறு நாள்

சுமந்து பெத்த பிள்ளைகளும்

பாலாலே பாத்தி கட்டி குப்பம்மா

பாங்குடனே பிள்ளை வளர்த்தாயம்மா

……

நீ பெற்றெடுத்த பிள்ளையெல்லாம்

உனை பிரியமுடன் அழைக்கிறாங்க..

( பாடியவர் : ராதா கிருஷ்ணன். வயது 45, ஆதி திராவிடர் )

என்று அந்த வீட்டு முன்னோர் பெண் யாரோ? அந்த பெயரை வைத்து உருக்கமாகப் பாடியவுடன் இன்னொருவர் மீது சாமி வந்திறங்கி குறைகளைக் கேட்ட பிறகே தங்களுக்கு நல்லது நடைபெறும் என நம்புகின்றனர். அம்மன் வர்ணிப்பு, ஏழுகண்ணி வர்ணிப்பு, மாரியம்மன் ஜாத்திரை போன்ற நிகழ்வுகளை ஆடி மாதங்களில் நிகழ்த்துகின்றனர். தொண்டை மண்டல பகுதிகளில் அம்மனின் தலையை மட்டும் வணங்கும் வழக்கமும். ஒரே அம்மன் ரேணுகாம்பாள், மாரியம்மன், நாகாத்தம்மன் என வெவ்வேறு பெயர்களில் குலதெய்வமாகவும், காவல் தெய்வமாகவும் வணங்குகின்றனர். அம்மனை வர்ணிக்கும் பாடலொன்றில்,

பாப்பாரப் பெண்ணுமானாய்

பார்போற்றும் சாமியானாய்

…….

வண்ணாரப் பெண்ணுமானாய்

வையகத்தில் தெய்வமானாய்

……..

ஜமதக்கினி சாபத்தாலே அவ

மாரியென்று பேர்படைத்தாள்

என ரேணுகா சம்ஹார புராணக் கதையை வைத்து பாடப் படுகிறது. இந்த வரிகள் பாப்பாரப் பெண்ணான ரேணுகாவின் தலையும், வண்ணாரப் பெண்ணின் உடம்பையும் ஒட்டவைத்தது பரசுராமன். இந்தக் காரணத்தை வைத்தே எல்லாரும் தலையை மட்டும் வணங்குகின்றனர். இதிலும் ஒரு மறைமுக அரசியல் இருக்கிறது. வண்ணார் சமூகத்தினர் தாய் வீடாகக் கொண்டு எல்லா சடங்குகளையும் செய்கின்றனர். ஆனால் அந்த உடம்பு பகுதி புதைக்கப்பட்டுள்ளது. மாரியம்மன் திருவிழா ‘காப்புக்கட்டுதல்’ தொடங்கி ‘மாரியம்மன் ஏசல்’ என மூன்றுநாட்கள் நடைபெறும். அந்த மூன்று நாட்களிலும் பாம்பைக் கைச்சிலம்பம் குழுவினரின் பங்களிப்பு முக்கியமாகிறது. கடைசி நாள் காலையில் ஏசல் நிகழ்வு ஊருக்கு எல்லையில் ‘உடைக் களைப்பு’ என்பதற்கு முன்னர் ஊர்ப்பெரிய மனிதர்கள், நாட்டார், தலைவர் பொதுமக்கள் எனக்கூடி, மாரியம்மனை மனிதர்களோடு உடலுறவு கொள்வதைப் போன்று கதை நிகழ்த்தப்படும். இதற்கு காரணமாக அம்மன் ஊருக்குள் இனி  இருக்கக்கூடாது ஏனெனில் நோய்நொடிகள் வந்து ஆடு மாடுகள், மனிதர்களையும்  வாரிக் கொண்டு போய்விடுவாள் என்பதற்காக செய்கின்றனர். மாரியம்மனை ஏசுபவர்கள் கூத்துக் கலைஞர்கள் அல்லது சிலம்பைக்  கலைஞர்கள் நிகழ்த்துகின்றனர். இந்நிகழ்வின் பாடல்

கத்திரிக்கா காம்பரிசி

ஆக்கசொன்னா மாரியாத்தா

கதவு பின்னால பாய போட்டு

படுக்கச் சொன்னா மாரியாத்தா

வெள்ளரிக்கா காம்பரிசி

ஆக்கசொன்னா மாரியாத்தா

வேலி கீழப் பாயப்போட்டு

படுக்கச் சொன்னா மாரியாத்தா

இந்நிகழ்வு செய்யாறு பகுதி சித்தூரில் சேகரித்தவை. இவை பகுதிக்கு பகுதி வேறுபடலாம். நாட்டார் சாமிகளுக்கே உரிய உயிர்பலி, இன்னொருவர் மீது சாமி இறக்குதல், அருள் கேட்டல், முன்னோர்களை அழைத்தல் என எல்லாவற்றிலும் பம்பைக்கும், பாம்பைக் கலைஞர்களுக்கும் முக்கியமான இடத்தினை இப்பகுதி மக்கள் அளிக்கின்றனர். இந்த வடிவம் கோயில் சார்ந்தும், மனித நம்பிக்கைகள் சார்ந்து இருப்பதால் இவற்றின் நெகிழ்வு தன்மையை பற்றி யோசிப்பது கடினம் தான்.

A successful response need not comment on all or any one of the points listed below and may well discuss other reasons or examples writemypaper4me.org/ not mentioned here in support of the position taken

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “நாட்டார் வழிபாடும் பம்பைக் கைச்சிலம்பமும்”

அதிகம் படித்தது