மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

நானாகிய நான் (கவிதை)

முனைவர் ஆ.சந்திரன்

Dec 8, 2018

siragu mounam2

 

கடந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்கும்

இடையில் கழியும் நிகழ்காலத்தில் நான்!

எனக்கு இன்னமும் எதுவும் அகப்படவில்லை.

மறையாத முகமொன்றின் காட்சிகள்

என் விழித்திரையில் நிலைகொள்ள

சலனமற்று கண்மூடி நடக்கிறேன்.

இனி எவ்வளவு காலம்தான்  தொடரும்

என் பயணம் என்ற விடைதெரியா வினா

என்னில் நீளத்தான் செய்கிறது

என்ன செய்ய ?

வினாவை அழிக்கும் அழிப்பானைக்

கடையில் வாங்கிவிடவேண்டியதுதான்!

 

நான் x  நான்

பிழிவின் கடைசி தருணங்களில்

நான் நானாக இருக்க ஒளிர்கிறேன்.

யார்? யாராகவோ நானற்ற நான்!

வண்ணங்களாய் உருமாறித் திரிகையில்

எனக்கான வடிமிழக்கிறேன் அவ்வப்போது.

கனத்த ஒலிகளுக்கிடையில்  என்குரல்

கேட்காதோ என்னவோ தெரியாது? ஆனால்,

மௌனத்தை நேசித்தே  திருப்தி கொள்கிறது அவ்வேளைகளில்.

உறைபனியின் நடுக்கத்தை எவ்வளவு நேரம்தான்

மார்பு கூட்டால் அடைகாக்க முடியும்?

கால்களைக் கிழித்துக்கொண்டு பிரவாகிப்பதைச்

சிலவேளை என்னாலும் அணைபோட்டுத் தடுக்க முடிவதில்லை.

அவ்வாறான நேரங்களில் மட்டும் நான் நானவே தெரிகிறேன்.

அதுவும் சிலவேளைகளில் மட்டுமே!

என்னே அதிசயம்!

அவ்வாறான வேளைகளில் மட்டும்

மெல்லிய என்னுடைய குரல்

கனத்து ஒலிப்பது

என்னுடைய செவிகளிலும் விழுகின்றதே!

 

என் பயணம்

நாளொன்றின் நிழல் பின்தொடர

கிளைபரப்பி எழுந்த ஒளிபரப்பில்

தொடர்கிறது பயணம்

வான்வெளியில் நிரம்பி வழியும்

மஞ்சள் ரேகையின்  விளிம்பில்

மினுமினுப்பின் பிம்பங்கள்

திரும்பத் திரும்ப காற்றில்

கரையும் சலசலப்பின் நிழலாய்

ஏதுமற்ற செவியில்

எட்டிப் பார்த்து நிற்காமல்

நீள்கிறது பயணம்…

…. எனக்கான என் பயணம்!

 

சென்ற திசையில்

ஏனோ மீண்டும் பயணிக்கிறேன்

விடைபகரா வினாக்குறி

என்முதுகில் அழுத்துகிறது.

முன்பு போல் இல்லைதான் நான்

இப்போது

ஆனால் நடக்கத்துடிக்கின்றன

கால்கள்

என்னைத்தூக்கிகொண்டு

மறக்கமுயல்கையில்

நீள்கிறது நினைவுக்குவியல்

மறப்பதற்கு இடம்இருந்தால் தானே

மறக்கமுடியும்?

இருக்கும் கொஞ்ச இடத்திலும்

பெயர்ச்சொல்லின் இகரம்

ஏனோ எனக்கு

ஓங்காரமாகவே ஒலிக்கிறது

இதை வெறும் ஒலிப்பிழை என்று

எப்படி நான் புறந்தள்ள?

 


முனைவர் ஆ.சந்திரன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “நானாகிய நான் (கவிதை)”

அதிகம் படித்தது