நான்மறை சொல்லினும் மெய்தனை அறி?
ஆச்சாரிMay 17, 2012
குயவனின் இளமங்கையர் இருவரும் சாகட்டும்
[கட்டுரை ஆசிரியர் பெரியண்ணன் சந்திரசேகரன் சங்கத் தமிழ்மொழி, காப்பிய வடமொழி, வேதவடமொழி ஆகியவற்றில் நேரடி ஆய்வுத்தேர்ச்சி பெற்றவர்; மொழியியல்வழியாக வேதங்களிற் காணும் அயல்மொழிச் சொற்களைக் கொண்டு அதன்வழி வரலாற்றுக்காலத்துக்கு முந்திய தென்னாசியப் பொழிலின் மொழி நிலைமையைக் கண்டறியும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளவர்; அவர் அண்மையில் அது தொடர்பாக Electronic Journal of Vedic Studies என்ற ஆய்வுத் தவணையத்தில் வெளியிட்டுள்ள Pleonastic Compounding : An Ancient Dravidian Word Structure என்ற கட்டுரையைப் பார்க்கவும்]
முன்னுரை:
வேதங்களைப்பற்றிப் பேசும்பொழுது இலக்கியங்களானாலும் சரி இன்றைய சமயக் கட்டுரைகளானாலும் சரி சிலவற்றை மீண்டும் மீண்டும் சொல்வதைக் கேட்கலாம். வேதத்திலே சொல்லாத உண்மைகள் இல்லையென்று கூறுவதும் அதிலே வன்முறை கொண்ட மறமேதும் இல்லை மென்மைகொண்ட அறம்மட்டுமே சொல்லியுள்ளது என்று கூறுவதும் இன்னும் இராமன், சிவன், முருகன் போன்ற எந்தக் கடவுளைப் பாடும்பொழுதும் அந்தக் கடவுள் வேதங்களின் வடிவம் அல்லது தொடக்கம் என்று கூறுவதும் மிகவும் வழக்கமாகக் கேட்கும். இது இறைவழிபாட்டுப் பாடல் இயற்றுவோரிடையே ஒரு வழக்கக்கடன் என்னுமாறு ஆகிவிட்டது.
ஆனால் உண்மை என்னவென்றால், அந்தக் கூற்றுக்கள் பல பொருந்தாதவை; அவை மரபிலே நம்பிக்கையடியாக ஊன்றிப்போய்விட்ட வழக்குகளே.
அதனைக் கண்டுணர நாம் புறநானூற்றுப் பாடல் ஒன்று வேதங்களிலே அறம் மறம் இரண்டும் பற்றிச் சொல்வதையும் வேதத்திலே அதற்கு எதிராகச் சான்றுகள் உள்ளமையும் காண்போம்.
புறநானூற்று 362-ஆம் பாடல் சிறுவெண்தேரையார் என்ற புலவர் போர்முகத்திலே நின்று அந்தணர்களைக் கூவி ஆங்கே நிகழ்கின்ற போரைச் சுட்டிச் சொல்வதாக அமைந்துள்ளது. அந்தப்பாட்டுப் பாடுவது: “கணங்கொள் தானை … தாக்குரல் கேண்மின், அந்தணாளிர்! நான்மறைக் குறித்தன்று, அருள்ஆகாமையின்” (புறநானூறு: 362:8-10); அதன்பொருள்[i], “கூட்டங் கொண்ட தானையிடத்தேயிருந்து … பகைவரைத் தாக்குதற்குச் செய்யும் முழக்கத்தைக் கேட்பீராக, அந்தணர்களே! இஃது அருட்செயலன்மையால் நும் நான்மறைக்கண் குறிக்கப்படுவதன்று” என்பதாகும். அத்தாவது, நான்மறைகளாகிய நால்வேதங்களில் போர்போன்ற அருளற்ற செயல்கள் குறிப்பதில்லை என்று நினைக்கிறது. ஆனால் இந்தப் பாட்டிற் சொல்லியுள்ளது உண்மையா என்று நேரடியே வேதத்தினை ஆராய்ந்து காண்போம்.
நால்வேதங்கள் இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் என்ற வேதங்கள் ஆகும்; அவற்றுள் மிகப் பழையது இருக்குவேதம் (Rig Veda); அதன்பாடல்கள் வெவ்வேறு புலவர்களால் கி.மு. 1500-1200 என்கின்ற காலக்கட்டத்திலே இயற்றினவையாகும்[ii] (விற்றுசல், 1999, பக்கம் 2). மற்ற மூன்று வேதங்கள் கணிசமாக இருக்குவேதத்தையே சார்ந்தவை. அதர்வணவேதம் பேய்பிசாசு விரட்டல், நோய்ப்பிணி தீர்ப்புப் போன்றவற்றைப் புதிதாகச் சேர்த்துள்ளது. இருப்பினும் அவையெல்லாமே கி.மு. 1000-க்கு முந்தியவை. இன்று வழக்கொழிந்த கடவுளர்களைப் பாடிப்பரவி வேள்வி வேட்கும் நெறியில் ஒழுகும் பண்பாட்டு நிலைமையைத் தழுவியவை. இங்கே புழங்கியுள்ள வேதப்பதிப்புக்களுக்குக் கட்டுரையின் இறுதியில் உள்ள வரிசையைக் காணவும். இங்கேயுள்ள மொழிபெயர்ப்புக்கள் நேரே வடமொழியினின்றும் பெயர்த்தவை; ஆயினும் மற்ற அறிஞர்களின் ஆய்வுகளைக் கவனித்துச் செய்தவை.
இப்பொழுது நால்வேதங்களில் மிகப்பழையதான இருக்குவேதத்தினைப் பார்த்தால் அவற்றின் பாடல்களில் காணும் ஒருதவறாத வழக்கம் போர்களாகும். இந்திரன் பொருத போர்களையும் அப்போர்களிலே இந்திரன் எப்படி எதிரிகளைக் கொன்று வென்றான் என்பதையும் மீண்டும் மீண்டும் இருக்குவேதச் செய்யுள்கள் பாடும். சான்றாகச் சம்பரன் என்ற எதிரியை அதிதிக்குவன் என்பவன் பொருட்டாக இந்திரன் கடுமையானவனாய் (உக்கிரனாய்) மலையிலிருந்து கீழே வீசினான் என்பதை இருக்குவேதத்துப் பாடல் “அதிதி2க்வாய சம்ப3ரம் கி3ரேர் உக்3ரோ அவாப4ரத்” (1:130:7) என்ற சொற்களாற் சொல்லும்.
இப்படிப்பட்ட பாடல்கள் ஒருபால் இருக்கவும் மறுபாற் சில பாடல்கள் எதிரியின் குடும்பத்தாரைக்கூட அழிக்குமாறு வேண்டிப் பாடும். குயவன் என்பவன் இருக்குவேதத்திலே வெவ்வேறு இடங்களில் பாடும் மிகவும் நன்குதெரிந்த ஒரு எதிரி. அப்பாடல்களுள் ஒன்று “பாலிலே குளிப்பவர்கள் குயவனின் இளமங்கையர்; அவர்கள் இருவரும் சிப்பா யாற்றின் சரிவிலே சாகட்டும்” என்ற வேண்டுதலையைக் “க்ஷீரேண ஸ்நாத: குயவஸ்ய யோஷே; ஹதே தே ஸ்யாதாம் ப்ரவணே சிபா2யா:” (1.104.3) என்ற சொற்களாற் சொல்லுகின்றது[iii].
அடுத்து வேதங்களிலே நோயோட்டும்பொழுது நோய் தங்களைவிட்டு மற்ற நாட்டாரையும் இனத்தாரையும் சென்றடையுமாறு வேண்டிக்கொள்ளும் மொழிகளையும் காணலாம். முன்பே கூறினதுபோல் அதர்வணவேதம் இதுபோல் நோய்தீர்ப்புப் பேய்பிசாசு விரட்டல் போன்றவற்றில் மிகுந்துள்ளது. அதன் ஒரு படலம் தக்குமம் என்ற நோயை விரட்டும் மொழிகள் கொண்டது; அந்த நோய் காய்ச்சல், இருமல், சிவந்த தோற்கொப்புளங்கள் போன்ற அறிகுறிகள் கொண்டது என்பதனை அதே படலத்தின் சில செய்யுளாலேயே அறிகிறோம் (5:22:3). அதனை விரட்டும் ஒரு செய்யுள் காண்போம்:
“தக்மந் மூஜவதோ கச்ச2, பல்ஹிகாந் வா பரஸ்தராம் |
சூத்3ராம் இச்ச2 ப்ரப2ர்வ்யம், தாம் தக்மந் வீவ தூ4நுஹி ||” (அதர்வண வேதம்: 5: 22:7)
“தக்குமமே! மூசவந்தர்களிடம் செல், அல்லது தொலைவாகப் பல்கிகர்களிடமோ (செல்); காமம்மிஞ்சிய சூத்திரப்பெண்ணைக் குறிக்கொள், அவளைக் கொஞ்சம் அலைக்கழி!” என்று பொருள்படும். இங்கே மூசவந்தர், பல்கிகர் ஆகியோர் வடமேற்கிலே இன்றைய ஆப்புகானித்தான் பக்கம் வாழ்ந்த வெவ்வேறுநாட்டார் ஆவர்; அவர்கள் இடக்குறிப்புக்களைப் பேராசிரியர் விற்றுசலின் வேதக்கால இனக்குடிகள் வரைவிலே காணவும் (http://www.people.fas.harvard.edu/~witzel/Local-map1.jpg). சூத்திரர் வேதக்காலத்திலே ஆரியமக்களுக்கு அடங்கிப்போய்க் கீழ்நிலையில் வைத்திருந்த குடிகள்; கிரேக்க மன்னன் அலெக்குசான்றர் காலத்திலே கூட வடமேற்கு இந்தியாவிலே சூத்திரோய் என்ற இனக்குடி இருந்ததாகக் கிரேக்கர் குறிப்புக்கள் தெரிவிக்கின்றன. (விற்றுசல், 1999, பக்கம் 39). நோய்நொடிகளை விரட்டும்பொழுதுகூட அவற்றை மற்ற மக்கள்மீது ஏவுவதுகண்டபின்னும் அருளாகாமை நான்மறைகளில் குறிப்பதில்லை என்று புறநானூற்றுப் புலவர் பாடமாட்டார்!
வேதம்பற்றிய மரபுநிலைமை இப்படியானதற்குப் பலகாரணங்கள் உண்டு.
முதற்காரணம் இருக்குவேதம் பாடின வடமொழி பேச்சிலே வழக்கொழிந்து போகவும் அதன் பொருள் விளங்காமல் போகிவிட்டது. இருக்குவேதத்து வடமொழி பிற்காலக் காப்பியங்களான வால்மீகி இராமாயணம் மகாபாரதம் போன்றவற்றின் வடமொழியினின்றும் மிகவும் வேறுபட்டது. எனவே அந்தக் காப்பிய வடமொழி தெரிந்தும் வேதம்விளங்காமல் போகிவிடும்.
அடுத்து வேதம்பாடின ஆரியர்களின் வழித்தோன்றல்கள் மதம்மாறி விட்டார்கள்: அத்தாவது, வேதங்களில் பாடியுள்ள கடவுளர்களை விட்டுவிட்டு முற்றிலும் வேறுபட்ட கடவுளர்களைப் பேணத் தொடங்கினார்கள்[iv]. சான்றாகப் பூசன் (Pūṣan), மித்திரன், வருணன் போன்ற தலைசிறந்த வேதக்கடவுளர் மறந்து பின்னர் அவற்றில் சொல்லாத கிருட்டிணன், இராமன், சிவன் போன்றோர் ஆரியரிடையே ஊன்றினர். அதனால் இன்னும் வேதங்களின் பொருள் விளங்காமல் மறைந்தது. ஆயினும் பொருள்தெரியாவிடினும் வேதத்தினைச் செய்வினைகளில் (சடங்குகளில்) ஓதுவதையும் அதன் பெருமதிப்பினையும் கைவிடவில்லை. எனவே வெறுமனே அதனைப் பேணிப்பாராட்டல் என்பதையேகூடப் பெரிதாகக் கருதினர். இந்த மதிப்பால் பின்னால் ஏற்றுக்கொண்ட கடவுளர்களைப் பாராட்டும்பொழுதுகூட அவர்களை வேதத்தோடு இணைத்துப் பாடுவதும் வழக்கமாகிவிட்டது.|
இப்படியேதான் பிற்காலத்திலே அவரவர்கள் தாங்கள் நல்லது என்று நினைப்பதெல்லாம் வேதங்களிலே நவின்றுள்ளதென்றும் உலகவரலாற்றில் வழக்கமான போர்போன்றவைகூட அவற்றிலே சொல்வதில்லை என்றும் ஒரு நம்பிக்கை மரபும் சேர்ந்துகொண்டது.
இங்கே குறிப்பிடவேண்டியது என்னவென்றால், நான்மறைகளிலே மேற்கண்ட செய்திகளைச் சுட்டிக்காட்டுவதால் அவற்றை இகழ்வதாக யாரும் நினைக்கவேண்டியதில்லை. இதன் நோக்கம் மக்கள் தத்தம் காலநிலைகளில் நிலவிய கொள்கைகளை நான்மறைகளின்மேல் ஏற்றிப் பேசியுள்ளனர் என்பதனையும் அந்தப் பிழைகளை இனிமேலாவது தவிர்த்து மெய்யினை அறியவேண்டும் என்பதே. அல்லாவிட்டால் வரலாற்றுக் குழப்பம், சமுதாயக் குழப்பம், மூடநம்பிக்கைகள் பெருகும்; மேலும் இதே பழக்கந்தான் சமயத்தலைவர்களின் சொற்களை ஆராய்வதிலும் தொடரும்; இதனால் சமுதாயத்திலே இறைக்கோட்பாட்டுகள் வழியாக மக்களை ஏமாற்றும் வழக்கமும் பெருகும்; அவை எல்லாவற்றாலும் தனியாளுக்கு இன்னல்களும் மக்களிடையே சண்டைசச்சரவுகள் போன்றவையுந்தாம் பெருகும்.
முடிவுரை:
நான்மறைகள் மிகவும் தொல்பழமையான மொழிக்கருவூலங்கள். அவற்றிலே தென்னாசியப்பொழில்பற்றி மொழியியல், இறையியல், வரலாறு போன்ற பல்வேறு துறைகளின் நோக்கில் அரிய சான்றுகள் பொதிந்துள்ளன. தமிழர்களின், திராவிடர்களின் வரலாறும் அவற்றிலே பல்வேறுமுகமாகப் பொதிந்துள்ளன. எனவே அவற்றை மிகுந்த பண்போடு ஆனால் நடுநிலைமையோடு பேணி உண்மைகளை ஆராய்ந்து நம்மையும் நம் சமுதாயத்தையும் நெறிப்படுத்திக்கொள்வது நம் கடமையாகும்.
வேதப் பதிப்புச் சான்றுகள்
- Griffith: Rig Veda 1.130: http://flaez.ch/cgi-bin/rv.pl?txt=shppgr&trl=iso&buch=1&hymnus=130
Rig Veda: 1.104: http://flaez.ch/cgi-bin/rv.pl?nr=104&txt=shppgr
- Witzel, Goto, Doyoma: 2007: Rig Veda, Das Heilige Wissen, Erster und zweiter Liederkreis, Verlag der Weltreligionen.
- Gelder, K.F.: Der Rig-Veda aus dem Sanskrit ins Deutsche übersetzt, http://www.thombar.de/1_lk.htm
Atharva Veda Samhita, edited by K.L. Joshi, according to the translations of W.D. Whitney and Bhashya of Sayanacharya, Vol. I, Parimal Publications, Delhi, 2000.
[i] புறநானூறு, 201-400, ஔவை சு. துரைசாமிப்பிள்ளை, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 1996.
[ii] விற்றுசல், மைக்கல் . “Early Sources for South Asian Substrate Languages”, 1999: http://www.people.fas.harvard.edu/~witzel/MT-Substrates.pdf .
[iii] கோற்றோவின் மொழிபெயர்ப்பு இது. ஆனால் கிரிப்பித்து (Griffith) யாற்றின் ஆழத்தில் என்றும், கேல்றுனர் (Geldner) யாற்றின் வெள்ளவோட்டத்திலே என்றும் பொருள்கொள்வர்.
[iv] வேதக் கடவுளர்பற்றி அறிய Hillebrandt, Alfred, 1853-1927. : Vedic mythology, translated from the original German by Sreeramula Rajeswara Sarma என்ற நூலை ஓதவும்.
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
வணக்கம்.
இன்னும் 50 ஆண்டுகளீல் தமிழ் மொழி அழியும் என யுனெச்கொ தெரிவித்துள்ளது
நாம் நம் மொழியை காப்பாட்ரி ஆக வேண்டும்.
மிகவும் அருமையான பதிவு, வேதங்கள் மொழிப் பெயர்க்கப்பட்டு அனைவரும் படிக்கும் படி வழி செய்ய வேண்டும், அப்போது தான் அதன் உண்மை மக்களுக்கு உரைக்கும்.
ஒரு சிறிய வேண்டுகோள், பதிவினை எளிய தமிழில் எழுதலாமே. படிக்க சுலபமாக இருக்கும் … நன்றி
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் முதலான அறிஞர்கள் தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும் நான்மறை, வேதம் முதலானவை தமிழுக்கே உரியவை என்றும் பின்னர் வந்த ஆரிய நான்மறை,வேதம் ஆகியன வேறு எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்த கருத்துக்கு உடன்படுகிறேன். நான்மறை வேதங்கள் என்ற கருத்து ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கியது. இதை அண்ணி பெசன்ட் அம்மையார் போன்ற இந்துத்துவவாதிகள் அழுத்தமாக தங்கள் காலத்தில் இந்த கருத்தை மக்களிடம் வளர்த்தனர். அதே போல் வேதங்களை முன்னிநிருத்திய இந்து மதத்தை விவேகானந்தர், அரவிந்தர், அண்ணி பெசன்ட் அம்மையார் சில ஜெர்மன் வரலாற்று ஆசிரியர்கள் கொண்டு வந்ததே.
இந்த நான் மறை வேதங்கள் போன்ற கருத்து புறநானூற்று காலத்தில் ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களை குறித்ததே என்பதற்கான ஆதாரத்தை கட்டுரை ஆசிரியர் தெளிவு படுத்தவேண்டும். இல்லையேல் இந்தக்கட்டுரை மிகப்பெரிய பிழை ஆகிவிடும்.
இலக்குவனார் சொல்லியதாக உள்ள நான மறை தான் என்ன என்று வேறெங்கும் தேடத் தேவையில்லை. திருவாவடுதுறை மடம் இதை மீண்டும் சொல்லியிருக்கிறது. ‘அறம், பொருள், இன்பம் , வீடு ‘ ஆகிய நான்கும் தான் நான மறைகளாம் !! இதைத் தான் சம்பந்தரும், நாவுக்கரசரும், மணிவாசகரும் சொன்னனராம். (ஆழ்வார்கள் என்ன சொன்னனர் என்பதை அவர்கள் கூறவில்லை )
திராவிட இயக்கம் மொத்த தமிழ் உலகத்தின் சிந்தனைத் திறனையே மழுங்கடித்து விட்டது என்பதற்கு இதை விட வேறு உதாரணம் இல்லை. ஒரு துளி ஆதாரம் கூட இல்லாமல் , சங்க நூல்களைத் திரித்து பொருள் கூறுதல் தமிழுக்கும் நம் முன்னோர்க்கும் இழைக்கும் அநீதி. தயவு செய்து இதை நிறுத்தி விடுவோம்.
நான மறை என்பது தமிழ் வேதங்களானால், வள்ளுவர், தொல்காப்பியர் போன்றோ ஏன் சுத்த வேதச் சொற்களைப் பயன் படுத்தினார் ?
கல்லால மரத்தடியின் கீழிருந்து சனகாதியர்க்கு அறம் பொருள் இன்பம் வீடு ஆகிய நான்கனையும், ஈசன் உபதேசித்தான் என்ற கூற்று மணிவாசகர் பாடல்களில் இருந்தால் அதை ஆராய வேண்டாமா ? அதே மணிவாசகர் ” வேதங்கள் அய்யா என ஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே ” என்று தானே ஈசனை விளிக்கிறார் !!! வேத என்பது தமிழ் சொல்லா ?
வேதங்கள் என்பவை இருக்கு முதலானவையே என்பதற்கு பக்தி இலக்கியங்களில் மட்டும் நூற்றுக் கணக்கான ஆதாரங்கள் உள்ளன. சம்பந்தரே இருக்கு வேதப் பிள்ளை தானே ? இதற்கு ஆராய்ச்சிக் கண்ணெல்லாம் வேண்டாம். சாதாரண படிக்கும் ஆசையும், நேர்மையும் இருந்தாலும் போதும்.
கட்டுரை ஆசிரியர் இது குறித்து எழுதுதல் நல்லது. இல்லையெனில் விவாதம் தமிழ் வெறியர்களால் கடத்தப்பட்டு வேறொரு மூடத் தளத்துக்குக் கொண்டு செல்லப் பட்டுவிடும்.
தமிழ் வெறியர்கள் யார் என்று வேதங்கள் எதுவும் அடையாளப்படுத்தி உள்ளதா என்று கல்லால மரத்தடியில் இருந்து அருளினார்களா என்று தெரியவில்லை. அது ஒருபுறம் இருக்க, இருக்கு வேதத்தை திரி கொண்டு திரிக்காமல் அறம், பொருள், இன்பம் + வீடு என்று நூல் கொண்டு திரிக்கவும் தமிழ் தான் தேவைப்படுகிறது. தமிழ் வெறியர்களும் தான் அறம் , பொருள், இன்பத்தை எழுதிய போதும் வீட்டிற்குள் இருந்தே எழுதினார்கள். அது சரி, சங்க இலக்கியம் என்பதே அனாச்சாரமாகத்தான் பதிவாகி உள்ளது. நரவும் தேனும் உண்டு சுவைக்கும் வேளிர்குடி வள்ளல்கள் என்பது வேதத்திற்குப் புறம்பானது இல்லையாயினும் சனாதனத்திற்குப் புறம்பானது. தமிழில் மதம் கொண்டு பரப்புரை செய்தவர்கள் எல்லாம் தமிழ் வெறியர்கள் அல்ல, வாழ்க்கையை இயல்பாக வாழ்ந்த சங்கத்தமிழர் தான் காட்டுமிராண்டிகள்.
தமிழர்கள் வேதம் படைத்தனர் என்பது அடிப்படையில் ஏற்க முடியாததாக உள்ளது. வேதம் என்பதனை புனிதம் புனிதம் என்று திரும்பத் திரும்பச் சொல்லிவருவதனால் அது புனிதமாகவே ஆக்கப்படுகிறது ( சான்று: ஹிட்லர் ஆலோசகர் கோயபல்சு ). இது தவிர்த்து தமிழர்கள் மிகப் பிற் காலத்தில் திருக்குறளை தமிழ் வேதம் ( தமிழ் மறை ) என்றனர். இதுவும் ஒருவகை ” சன்ச்க்ரிடிசடிஒன் ” என்று சொல்லப்படுகிற புனிதப்படுத்தல் அல்லது மேன்மைப்படுத்திக் கொள்ளல் என்பதாகவே ஆகிவிடுகிறது. சங்க இலக்கியம் முதலில் வாழ்வியலை, வாழ்ந்த வாழ்க்கையை பதிவு செய்கிறது. அங்கு பெருங்காப்பியங்கள் கூட உருவாகவில்லை.
வேதத்தை பிராமணர் தவிர வேறு யாரும் தவறுதலாக வேலி ஓரமாக நிற்கும் போது, காதில் வாங்கிவிட்டால், அவர்களுக்கு காதில் ஈயம் காய்ச்சி ஊற்றும் நல்ல காரியங்களை நடத்தித்தான் அந்த புனிதம் கெடாமல் பாது காத்தனர்.
குறிப்பு : சில புள்ளி ராஜாக்கள் சொல்வது போல் வேதம் எல்லோருக்கும் பொது அல்ல.
சில மத தரகர்களுக்கு வேதத்தின் உண்மை சொன்னவுடன் வயிறு எரிகிறது. இப்படி வேதாந்த இந்துத்துவத்தின் அஸ்திவாரத்தை இவர்களை போல் பொய் கூறாமல் வேதத்தின் உண்மையை கொண்டே அசைப்பது மிக அருமை. சிறகு இப்படி பல அஸ்திவாரங்களை உடைக்க வேண்டும். உண்மையை கொண்டே உடைக்க வேண்டும்.
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் முதலான அறிஞர்கள் தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும் நான்மறை, வேதம் முதலானவை தமிழுக்கே உரியவை என்றும் பின்னர் வந்த ஆரிய நான்மறை,வேதம் ஆகியன வேறு எனவும் தெரிவித்துள்ளனர். முதுமுனைவர் இரா.இளங்குமரன் அவர்களிடம் கேட்டாலும் இது குறித்து விளக்குவார். எனவே, பேரன்புசால் பெரியண்ணன் அவர்கள் இக்கண்ணோட்டத்தில் ஆராய்ந்த புதிய கருத்துகளைத் தெரிவிக்க வேண்டுகின்றேன். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /
[...] [...]
ரிக் வேதத்தைத் தற்போது கற்று வருகிறேன். இதுவரை ஒரு முறை அதனைப் பல வேறு உரைகளின் துணையுடன் படித்திருக்கிறேன். இன்னும் பத்து முறையாவது படித்தால் தான் அதனை முழுமையாக உணர முடியும் என்பதை உணர்ந்திருக்கிறேன். இந்நிலையில் நான் சொல்லும் கருத்துகளை பிற்காலத்தில் நான் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும். என்றாலும் தற்போது என் மனதில் பட்டதைக் கூறுகிறேன்.
திரு பெரியண்ணன் கூறுவது சரிதான். வேதத்தில் வன்முறை உள்ளது. எதிரிகளை அழி என்ற சொல்தொடர் ஆயிரக் கணக்கான முறை வருகிறது.
அது மட்டுமல்ல, இன்றைய இந்து சமயத்தில் நிலவும் வழிபாட்டு முறைகளுக்கும் வழிபடு தெய்வங்களுக்கும் அடிப்படையானவை என்ற ஒரு சிறு அம்சத்தையும் அங்கே காண முடிவதில்லை. பிற்காலத்தில் கிளைத்த வேதாந்தங்களின் விதைகள் மிக அரிதாகவே காணக் கிடைக்கின்றன. அப்படி இருக்க வேதம் தான் எல்லாவற்றிற்கும் ஆதாரமானது என்ற கருத்தை ஏற்க முடிவதில்லை.
மறு தரப்பையும் பார்க்கிறேன். ஒரு சமயம் சம்பந்தமே இல்லாத ஒரு நூலை தனது அடிப்படை என்று சொல்லிக் கொள்ளும் பொய்யைக் காலம் காலமாகக் காப்பாற்றி வந்திருக்க முடியுமா? நமக்கு முன்னே வாழ்ந்தவர்கள் அத்தனை பேரும் மூடர்கள் அல்லர். அவர்களிலே ஒரு சிலராவது இந்தப் பொய்யைப் புரிந்து கொண்டிருப்பார்கள். அவர்களது வாதங்கள் ஒரு சிலரிடமாவது பரவியிருக்கும் . அவை நூல்களாக வெளிப்பட்டிருக்கும்.
வேதத்திற்கு விரோதமான கருத்துகள் திட்டமிட்டு அழிக்கப்பட்டிருக்கலாம் என்ற வாதம் ஏற்பதற்கு உரியது அல்ல. வேத விரோதமான பவுத்தத்தையும் சமணத்தையும் ஏற்ற சமூகம் வேதமே எல்லாவற்றிற்கும் ஆதாரம் என்பது பொய் என்று ஒருவர் சொல்லியிருந்தால் அதையும் ஏற்றிருக்கும். ஒருவரும் அவ்வாறு சொல்லாதது ஆய்வுக்கு உரியது.நான் இந்தக் கோணத்தில் தான் ஆராய்ந்து கொண்டிருக்கிறேன்.
இந்த நிலையில் வேதத்தின் சொற்களை அப்படியே பொருள் கொள்ளாமல் அவற்றைக் குறியீடுகளாகக் கொள்ள வேண்டும் என்ற அரவிந்தரின் வாதம் பரிசீலனைக்கு உரியது ஆகிறது. அரவிந்தர் இந்த முறையைத் துவக்கி வைத்தாரே ஒழிய அவற்றை முழுமையாக ஆய்வு செய்யவில்லை. அக்கினி என்பது மனத்துணிவைக் குறிக்கிறது என்று அரவிந்தரும் அவர் வழி நின்று பாரதியும் கூறுவது எல்லா இடங்களிலும் பொருந்தவில்லை. நான் பார்த்த வரை அக்கினி என்பது மனத்துணிவு, அறிவு, உயிர், இனப் பெருக்க வேட்கை, சூரியன், பசி, காட்டுத் தீ, வீட்டுத் தீ, மின்னல் என்று பல இடங்களில் பல வகையாகப் பொருள் கொள்ள இடம் தருகிறது. அது போலப் பல இடங்களில் இந்திரன் என்பது மனம் என்று கொள்ள இடம் இருக்கிறது. ஆனால் இது எல்லா இடங்களுக்கும பொருந்தவில்லை.
ஒட்டுமொத்தமாக்ப் பார்க்கும்போது தற்போது எனக்குத் தோன்றுவது இது தான். வேதப்பாடல்கள் பல வேறு காலங்களில் இயற்றப்ப்ட்டன. இது ஒரு நீண்டகாலமாக இருக்கக் கூடும். துவக்க காலத்தில் இருந்த மக்கள் நம்பிக்கைகளும் பழக்க வழக்கங்களும் காலப்போக்கில் மாறி வந்துள்ளதை வேதப் பாடல்கள் காட்டுகின்றன. வேள்வி போன்ற பழைய பழக்கங்களுக்குப் புதிய பொருள் உரைக்கும் முயற்சியில் சில வேதரிஷிகள் ஈடுபட்டிருப்பதை அறிய முடிகிறது. காலத்தால் பிற்பட்ட வேதப் பகுதிகள் இந்தப் புதிய முயற்சியை எதிர்த்து வேள்வியைச் சடங்காகச் செய்யும் முறைக்கு அதிக முக்கியத்துவம் தருவதை அறிய முடிகிறது.
பொய் நிலைத்து நிற்காது. வேதத்தினுள்ளே இருக்கும் உண்மையான கருத்து ஒன்று தான் அதை வாழ்வித்துக் கொண்டிருக்கிறது அது என்ன என்று ஆராயும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன். ஒத்த ஆர்வமுடைய நண்பர்கள் கிடைத்தால் இந்த ஆராய்ச்சியை மேலும் செம்மையாகச் செய்ய முடியும்.
Of course, your research is towards the truth. Many of the interpretation was miss leading and hailing the Vedic scripts blindly.Prof.Naa. Vaanamaamalai and Chidhambaranaar are few peoples keeping them in the middle/ neutral on this issue. By your presentation, it shows you have a free and ideal thoughts which will result in fruitful conclusions. Thank you.
திரு பெரியண்ணன் சந்திரசேகர்
தங்கள் பதிவிற்கு எனது பாராட்டுக்கள்.
இன்னும் தாங்கள் அரவிந்தர் மற்றும் தயானந்தர் வழிமுறை உரைகளையும் மேற்கோள் காட்டியிருக்கலாம். கிரிபித், ஜோன்ஸ், மாக்ஸ் முல்லர் உரைகள் சாயணர் உரையைத் தழுவியவை. விட்சல் ஒரு பச்சோந்தி உரையாசிரியர். இரவல் பாண்டித்தியத்தில், எங்கு வேண்டுமானாலும் கடன் வாங்கி குழப்ப உரை எழுதி இன்று எல்லோராலும் ஒதுக்கப்பட்டு விட்டார்.
தயானந்தர் மட்டுமே வேத அங்கங்களில் ஒன்றான நிருக்தத்தின் வாயிலாக வேதத்தை அறியும் முயற்சியில் முதலாக அறியப் படுபவர். யாஸ்கரும் அவரது பாணியில் பலரும் இதில் உரை செய்தும், சாயனர் உரை மட்டுமே முதல் நிற்பது, இன்றைய சங்கர மற்றும் வைதீக மடங்களின் ஆதரவால் மட்டுமே. சாயணரின் மீமான்ச உரை ஒரு கோணம் மட்டுமே. பக்தி வாதிகள் கூட தங்கள் தெய்வங்கள் வேதத்தில் குறிப்பிடப் படுவதாக எண்ணிக் கொள்கின்றனர்.
பத்தாம் நூற்றாண்டில் மத்துவரும் , அவரைப் பின்பற்றி ராகவேந்திர சுவாமிகளும், நிருக்த பாணியில் வேதத்தை அத்யாத்ம (esoteric ) நோக்கில் ஆராய்ந்து உரை எழுத ஆரம்பித்தனர். பக்தி வழிப் பெரியவர்களான இவர்கள் இந்த உரை பெரும் ஆச்சரியமே. ஆயினும், மீமான்ச நோக்கே வென்றது. சாயணர் மதிக்கப் பட்டார்.
இன்றைய நிலையில், வேதம் என்ற தலைப்பு பாமரர் முதல் பண்டிதர் வரை முக முதல், ஜெமோ வரை விவாதிக்கப் படுகிறது. முன் தகுதி தேவையில்லை என்ற ஒரே விஷயம் இதுவாக ஆகி விட்டது. எங்கோ ஒரு இடத்தில் ஆரம்பிக்க வேண்டும். அது ஆங்கிலேயரில் பத்தொன்பதாம் நூற்றாண்டு உரைகள் அல்ல. தயானந்தரின் மிகக் குறுகலான உரையும் அல்ல. மாறாக அரவிந்தர் மற்றும் அவரது சீடர்களின் விளக்கங்கள் சிறப்பாகவே படுகின்றன. இந்த வழியில் செயல்படும் பெங்களூரு சாக்ஷி என்ற நிறுவனம் வெளியிடும் உரைகளையும் நீங்கள் மேற்கோள் காட்டினால் சிறப்பாக இருக்கும். உதாரணம் சிபா என்பது ஒரு ஆறு என்று சாயனரும், அது கிளைகளைக் கீழ் நோக்கி விடும் மரம் என்று கஷ்யப் (சாக்ஷி ) அவர்களும் கூறுகின்றனர். சாக்ஷி உரை வாசிக்கும் பொழுதே , ஒவ்வொரு வேத வரியும் உட்பொதிவு (coded) கொண்டவை என்று விளங்கி விடும். அவைகளுக்கு இது காரும் அளிக்கப் பட்ட மரியாதையும் நியாயம் என்று தோன்றி விடும்.
சாயண , உரைகள் மீமாம்ச அடிப்படை கொண்டவை. ஆங்கிலேய , ஜெர்மானிய உரைகள் ஒரு அடிப்படையாக எதுவும் கொள்ளவில்லை. மேலும், வேத வரிகளுக்கு , பிற்காலத்திய சம்ஸ்கிருத சொற்களைக் கூட உபயோகிக்கத் தயங்கவில்லை. ஆனாலும் அவை மேம்போக்காக நோக்கும் பொழுது மட்டுமே சாயணரின் சாயல் கொண்டவை. ஆயினும் இன்றைய நோக்கில் அவை “mundane’ என்ற பிரிவில் மட்டுமே அடங்கும். சாயனருக்காவது மீமாம்ச வேர் இருந்தது . இவைகளுக்கு அதுவும் இல்லை. ஆகவே இந்த உரைகளை ஆதாரமாகக் கொண்டு துவக்கும் சிந்தனைகளும், விவாதங்களும், எங்கும் கொண்டு சேர்த்து விடாது. உங்களது கட்டுரையிலும், இதை மேற்கோள் காட்டி ஜெயமோகன் எழுதியதிலும் உள்ள முக்கிய குறை இது தான்.
வேதத்தை வெறும் கவிதை என்று படித்தால் கூட அது ஐரோப்பிய உரைகளின் படி வறண்டே காணப்படும். பிப்ரம், சுஷ்ணும், குயவம் என்ற பெயர்ச் சொற்களுக்கு ( ரிக் 104 -1 )தயானந்தரும் , கஷ்யப்பும் எப்படி பொருள் தருகின்றனர் என்று நீங்கள் படிக்க வேண்டுகின்றேன்.
வேங்கடசுப்ரமணியன்
திரு.வேங்கடசுப்பிரமணியன் அவர்களே
1. முதலில் நான் பிறர்மொழிபெயர்ப்புகளை நம்பி இந்தக் கட்டுரையை உரைக்கவில்லை; எனக்கு வடமொழியில் காப்பிய மொழியும் (Epic Sanskrit) வேதமொழியும் (Vedic Sanskrit) நன்கு பழக்கமுண்டு. மேலும் அறிவியல் ஆய்வுநெறியிலும் பயிற்சியுண்டு. நான் ஏற்கெனெவே வேதத்து அயல்மொழிச்சொற்களை ஆய்ந்து கட்டுரை வெளியிட்டுள்ளேன். http://www.laurasianacademy.com/pleonastic.pdf எனவே நான் மற்றவர்கள் உரையை நம்பிமட்டும் இங்கே சொல்லவில்லை.
வேதச் செய்யுள்களின் பொருளை நேரடியே ஒவ்வொரு சொல்லின் இலக்கணத்தை முழுதும் அறிந்து உரைகளோடு ஒப்பிட்டே இங்கே சொல்லியுள்ளேன். அதுமட்டுமன்றித் துல்லியமாக மூலச்செய்யுளின் எந்த இலக்கண அமைப்பினை எங்கே பின்பற்றி உரைசொல்லியுள்ளார்கள் என்றும் அறியமுடியும்.
எனவே விற்றுசலின் தகுதியை எனக்கு நேரடியாகத் தெரியும்.
என் மொழிபெயர்ப்பு நேரடியாக வடமொழியினின்று தமிழுக்கு. மற்றவர்களுக்கும் சான்றுகள் தெரியவேண்டுமென்பதால் பலரின் உரையையும் சான்று காட்டுவது ஆய்வுநெறியின் கடமை. உலகத்தார் உண்மையைச் சீர்தூக்க உதவும். மறைக்க ஏதுமில்லை. புதிருமில்லை
2. பேராசிரியர் விற்றுசல் அவர்களைத் தாங்கள் அப்படி இழிவாகப் பழிப்பது தவறானது என்று சுட்ட விரும்புகிறேன். பேராசிரியர் விற்றுசலின் வடமொழி அறிவு கடவுட்டன்மை வாய்ந்தது; அஃகி அகன்ற அறிவு.
அவர் தகுதிகள்: http://www.people.fas.harvard.edu/~witzel/mwpage.htm
மேலும் நீங்கள் சொல்வதுபோலெல்லாம் யாரும் அவரை ஒதுக்கவில்லை! அவரைக் கல்வியுலகம் கொண்டாடிக்கொண்டிருக்கிறது!
ஆர்வார்துப் பல்கலை அவருக்கு Wales Professor of Sanskrit என்ற தகுதியை அளித்துப் பேணுகின்றதே!
அவருடைய உரைக்கு மிக அழகாக அச்சடிக்க அறக்கட்டளைகள் நிதியுதவியுள்ளனவே!
அவர் இரவல் வாங்குமளவு அறிவிலே குறைபட்டவரோ பச்சோந்தி என்று சொல்லுமளவு பண்பற்றவரோ நடுநிலையற்றவரோ அல்லர்; மேலும் அப்படிக் குறைபட்டவர்களைத் தலைசிறந்த “வேல்சு வடமொழிப் பேராசிரியர் இருக்கை”யில் இருத்துமளவு ஆர்வார்துப் பலகலை இழிவானதும் அன்று. உலகின் தலைசிறந்த சில பல்கலைகளுள் ஒன்று தலைசிறந்த வடமொழிப் பேராசிரியர் என்று கருதும் ஒருவர் இவ்வளவு தகுதி குறைபடுமாறு உலகத்தின் அறிவுநிலை அப்படிப் பாழாகிவிடவில்லை.
ஏனெனில் அவர் அமெரிக்கக் கலை மற்றும் அறிவியல் அறிஞர் கழகத்தில்(http://www.amacad.org/members.aspx) உறுப்பினர்; அங்கே உறுப்பினர்களின் பொதுத்தகுதி தெரிய: “Among its Fellows are more than 200 Nobel Prize laureates and 100 Pulitzer Prize winners.”
“Nomination to the Academy is a privilege restricted to the Fellowship.”
அப்படியென்றால் அவரைத் தலைசிறந்த சிறப்புப் பேராசியராக அமர்த்தும் ஆர்வார்துக்கும் அறிவில்லை; அவரை அந்தக் கழகத்திற்கு முன்மொழிந்த அறிஞர்களுக்கும் அறிவில்லை; அவரைக் கழகத்திலே ஏற்கறுக்கொண்ட நோபல் பரிசு பெற்ற நூற்றுக்கணக்காருக்கும் அறிவில்லை?
எனவே நீங்களே சொல்வதைத் திருப்பிச் சொல்லவேன்டியுள்ளதே? “இன்றைய நிலையில், வேதம் என்ற தலைப்பு பாமரர் முதல் பண்டிதர் வரை முக முதல், ஜெமோ வரை விவாதிக்கப் படுகிறது. முன் தகுதி தேவையில்லை என்ற ஒரே விஷயம் இதுவாக ஆகி விட்டது”
ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூச் சர்க்கரை என்று கிடைத்த பேதைகளையெல்லாம் வடமொழிப் பேராசிரியராக ஆர்வார்துப் பல்கலை அமர்த்துமளவுக்கு வடமொழியும் அப்படி அழிந்துபோகவில்லை; அதன் அறிவு இன்னும் செழித்திருப்பதால்தான் அந்த மொழித்தெளிவுக்கு மதிப்பிருக்கிறது.
அல்லது அதற்குக் கேடு நெருங்கி விட்டதால்தான் பாமரர்களுக்கு அவரின் மதிப்புத் தெரியவில்லையா? பேராசிரியர் விற்றுசலைப் பழிக்கும் நிலவரம் வடமொழிக்குக் கடைசியில் கேடுதான் விளைவிக்கும்.
ஏனெனில் தங்களுக்குப் பிடித்ததுபோல் வேதம்பற்றிப்பேசும் பேதைகளை வளர்த்துவிட்டு உண்மையைப் பேசும் உலகப்பேரறிஞரை நையாண்டி செய்வது வடமொழித்துறையில் அறிவுத் தரத்தின் தேவையைக் குறைத்துப் போலிகளைப் பெருக்கி வடமொழியை இறுதியில் ஒட்ட அழித்துவிடும் என்பதை அஞ்சி மக்கள் பேசவேண்டும்.
இந்த எண்ணம் திருந்தினால் வடமொழி செழிக்கும்.
அங்ஙனமே நிகழட்டும்!
பெரியண்ணன் சந்திரசேகரன்
திரு பெரியண்ணன் சந்திரசேகர் அவர்களே
தங்கள் பதிலுக்கு நன்றி. என்னுடைய அழுத்தம் முழுவதுமாக வேதம் மற்றும் அவற்றின் உரை ஆழம் பற்றி இருக்க, தாங்கள் விட்ஸல் அவர்களின் தகுதியில் ஆழம் தந்தே எழுதியுள்ளீர்கள். விட்ஸல் அவர்களின் மொழித் தகுதி பற்றி முனைவர் கசனாஸ் அவர்களும், திரு கொஎன்ராடு எல்ஸ்ட் அவர்களும் விரிவாக எழுதியுள்ளதை இன்று நினைவு கூர்கிறேன். நான ஆராய்ச்சி மாணவன் அல்ல எனினும் அவர் நடத்தி வரும் யாஹூ குழுமத்தில் ஒரு ஓரத்தில் இருந்து அவரையும் அவருடைய சக நடத்துனர்களும் எழுதிய ஆணவம் மட்டுமே தொனிக்கும் பதில்களையும், அவற்றில் கருத்து ஆழம் சற்றும் இல்லாததையும், வெறும் விதண்டாவாதத்தையும் கவனித்தே இருக்கிறேன்.
பல கோணங்களில் இருந்தும் அவரது கட்டுரைகளை ஆய்ந்ததில், அவர் ஒரு முடிவைத் தீர்மானித்த பிறகே ஆய்வில் இறங்குகிறார் என்று தெள்ளத் தெளிவாக தெரிந்து கொண்டேன். இதற்கு மேலோட்டமாக அவரது எழுத்துகளைப் படித்தாலே போதும். நான சேமித்து வைத்த ஒரு இணைப்பு இதோ .
ஒரு முறையாவது அவர் முல்லர் மற்றும் அவரது காலத்தவர் எழுதிய முடிவுகளுக்கு மாறுபட்டவராகக் காண்பித்துக் கொண்டதில்லை. இன்று மரபணு ஆய்வின் முடிவு, , கடல் ஆழத்தின் ஆராய்ச்சி, தொலாவீரா நமக்கு சொல்லும் செய்தி போன்றவை வந்த பின்னரும், விட்ஸல் பதினேழாம் நூற்றாண்டிலேயே இன்னும் தேங்கி நிற்கும் ஒரு நபர். ஆகவே தான் இன்று ஒரு பெரும் கூட்டம் அவரை அசட்டை செய்கிறது.
நான கீதை படிக்க ஆரம்பித்த பிறகே பாரம்பரிய நூல்களை வாசிக்க ஆரம்பித்தேன். கீதையில் கூறிய ஒரு விஷயத்தின் மூலமாகவே நான வேதம் படிக்க ஆரம்பித்தேன். அந்த வாசகம் இதோ ” திரவிய யக்ஞம், தவ யக்ஞம், யோக யக்ஞம், ச்வாத்தியாயம்,, ஞான யக்ஞம் போன்ற பலவித யக்ஞங்கள் வேதத்தில் கூறப் பட்டிருக்கின்றன “.
இந்த விஷயங்களைத் தேடிப் போகையில் தான் நான ஐரோப்பியர்களின் உரையை சிறிது படித்ததுமே நிராகரிக்க நேர்ந்தது. விட்சல் எனக்கு அதிர்ச்சியே அளித்தார். அத்தியாத்தும விஷயங்களைத் தேடுகையில், இவரது எழுத்துக்கள் பிச்சைக்காரன் வாந்தி போல இங்கொன்றும் அங்கொன்றுமாகக் கடன் வாங்கி எழுதியதை பார்த்து வெறுப்புத் தான் அடைந்தேன். பிறகே என் நண்பர்கள் விட்சல் உள் நோக்கம் கொண்ட மனிதர் என்றும், ஆராய்ச்சி என்ற புனிதமான தளத்தில் இருந்து அவர் வெகு கால முன்பே விலகி விட்ட மனிதர் என்றும், அவரது எழுத்துக்களை சட்டை செய்ய வேண்டாம் என்றும் ஆலோசனை கூறினார். இதனாலேயே நான அவரை ஒதுக்கப்பட்ட ஆராய்ச்சியாளர் என்று தீர்மானமாகக் கூறுகிறேன்.
முதல் முதல் நான வேதத்தின் எசொடெரிச் பார்வையைக் கவனிக்க நேர்ந்தது அரவிந்தரின் எழுத்துக்களில் தான். அதற்கு முன்பே சில சூக்தங்கள் நானே அர்த்தம் செய்து வியந்திருக்கிறேன். உதாரணம் நாராயண சூக்தம் . இதில் அத்தியாத்தும ஆழம் உள்ளது. மேதா சூக்தம், புருஷ சூக்தம், மந்திர புஷ்பம் போன்றவற்றின் சங்கேதம் எனக்குப் பிடித்திருந்தது. ஸ்ரீ ருத்திரம் எனக்குப் பிடித்த மற்றொரு பகுதி. அனால் இந்த ஆழங்களை எல்லாம் விட்டு விட்டு வேதத்தில் கழுதை உள்ளதா, குரங்கு உள்ளதா என்று செய்யும் ஆராய்ச்சி எந்த வகையில் இந்துக்களுக்கு பிரயோசனம் ?
எனக்குத் தெரிந்து தயானந்தர் வேதப் படிப்பில் விளக்க முடியாதவர். எந்த நவீன வேத ஆராய்ச்சியாளரும் அவரைப் புறக்கணிக்கவே முடியாது. அவரது உரை சிரமமானது மற்றும் குறுகலானது எனினும், அவர் முன் வைத்த வாதங்கள் இன்று வரை நிராகரிக்கப் படவில்லை. ஆனால் இன்றைய விட்ஸல் தலைமையிலான அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தயானந்தரை வெகு சாமர்த்தியமாக தவிர்க்கின்றனர். ஏனென்றால் தயானந்தர் சாமான்ய, அத்தியாத்தும, பார்வைகளுக்கு அப்பால், வேதத்தில் இன்றைய நவீன விஜ்ஞானத்தின் கேளிவிகளுக்கும் விடை இருப்பதாகக் கூறி ஒரு சில கருத்துகளை முன் வைத்தார். மேலும் தான் கூறியது ஒரு ஆரம்பமே என்றும் , இதன் தீவிர ஆராய்ச்சி மேலும் பல உண்மைகளை வெளிக் கொண்டு வரலாம் எனவும் தெரிவித்தார். இதைப் பற்றி ஏன் விட்ஸல் மற்றும் அவரது கூட்டம் கவலைப் படுவதில்லை ? குதிரை முகம், தங்கம் வேதத்தில் உள்ளதா என்னும் வாதங்கள் மட்டுமே அவர் எழுதும் கட்டுரைகளில் காணக் கிடைக்கிறது.
கடபயாதி சன்க்யையில் எழுதப் பட்ட ஒரு ஸ்லோகம் மேம்போக்காக கிருஷ்ணனைப் பற்றி இருப்பினும், உள்ளர்த்தம் ப்ய் என்னும் மாறாத ஜியோமிதி எண்ணைக குறித்தது. பிற்காலத்திய ஸ்லோகங்களில் மட்டுமே இவ்வளவு இருப்பின், பதினான்கு வருடம் ஒரு பிராம்மணன் அன்று கற்ற வேதம் விட்சல் கூறியது போல வெற்றுச் செய்யுளா ? இவைகளுக்கு விடை தேடுவது தான் என்னுடைய வேதப் பயணம். இதில் பாரம்பரிய வேர் மற்றும், அறிவு கொண்ட அறிஞர் களுக்குத் தான் முதலிடம் கொடுப்பேன்.
சாக்ஷி நிறுவனத்தின் தலைவர் திரு கஷ்யப் நெருப்பு மூட்டி வைக்கும் யக்ஞம் பற்றி வேதங்களில் (சம்ஹிதைகளில்) குறிப்பே இல்லை என்கிறார். இது குறித்து விட்ஸல் அவர்களின் கூற்று உங்களுக்கு தெரியும். சலிப்பே ஏற்படும் அளவுக்கு இனவாதம் வேறு பேசுகிறார்.அவரது இணைய குழுமம் அரசியல் மேடையோ என்ற சந்தேகமே வந்து விடுகிறது.
உங்களது மின் நூலை இப்போது தான் இறக்கியிருக்கிறேன். மேலோட்டமாகப் பார்க்கையில் இதிலும் நான தேடும் விஷயம் இல்லை. நான கடலில் இறங்க விரும்புவது முத்து எடுக்க. அவ்வளவே. சகதியைக் கிளப்பி பிறரையும் குழப்ப அல்ல.
அன்பின் சந்திரா,
அருமையான கட்டுரையுடன் நேர்த்தியான பதிலையும் அளித்துள்ளீர்கள். பாராட்டுகள்! தொடர்ந்து வேதங்கள் குறித்து எழுதவும். வேதங்களை அறியாதவர்களுக்கு வேதங்களைப் புரிந்து கொள்ள உதவும். பேராசிரியர் மைக்கல் விட்சல் அவர்களை எனக்கு 2005-லிருந்து நன்கு தெரியும். வேத விற்பன்னர் அவர். உலகில் வாழும் வடமொழிப் பேராசிரியர்களும் சிறந்தவர். கலிபோர்னியாப் பாடதிட்டத்தில் புளுகும் புரட்டும் புகாமல் பாதுகாத்தவர். உண்மை விரும்புவோர் பாராட்டும் உத்தமர் அவர். அவருடன் பாடபுத்தகப் போராட்டத்தில் கலந்துகொண்டவன் என்பதில் எனக்கு மிகப் பெரிய பெருமையுண்டு.
வாழி உங்கள் தமிழ்த் தொண்டு!
அன்புடன்
க.தில்லைக்குமரன்
சான் ஓசே, கலிபோர்னியா
பேராசிரியர் விட்சல் அவர்க்ளின் வடமொழிப் பற்று இந்த கட்டுரையில் பார்க்கலாம். இதைவிட ஒருவரும் வடமொழிக்கு ஆதரவாக எழுத முடியாது
http://www.outlookindia.com/article.aspx?212581
- தில்லை
விஷயம் வடமொழி நல்லதா, இல்லையா , ஏற்றுக் கொள்ளத் தக்கதா என்பதெல்லாம் அல்ல. வேதம் என்ன சொல்கிறது என்பது தான். வேத மொழி தனி மொழி . அதன் நீட்சியாக வந்ததே வடமொழி எனப்படும் சமஸ்கிருதம். விட்சல் சமஸ்கிருதம் நல்லது . ஆனால் வேதம் மட்டும் தான் குயவன், விருத்திரன் போன்றவர்களின் வரலாற்றையெல்லாம் குறிக்கிறது என்று சொன்னால், என்ன அர்த்தம் ? வேதத்தில் அக்காலத்திய வாழ்க்கை முறை மட்டும் தான் இருக்கிறது என்பது மட்டும் தானே அர்த்தம் ? விட்சல்லின் முழு உரை என்னிடம் இல்லை. பார்க்காமலே சொல்லுகிறேன். அவரால் வேதத்தின் ரகசிய சங்கேதங்கள் எனப்படும் விஷயங்களைத் தொடக்கூட முடியாது. அவரிடம் அதற்கான பயிற்சியும் இல்லை. அவருக்கு அதில் விருப்பமும் இருக்காது.
வெறும் மூவாயிரத்து ஐநூறு வருடங்களுக்கு முன் விருத்திரனை இந்திரன் கொன்றழித்தானாம். எங்கோ மத்திய ரஷிய பகுதியில் இருந்து வந்த மேய்ப்பர்கள் தலைவனாம் அவன். இது இன்று வரை விட்சல் பாடும் பாடல். மரபணு சோதனைகள் இந்தியக் கண்டம் முழுதும் ஒரே இனக்குழு தான் என்று தெரிவித்த பின்னும் அந்த மாக்ஸ் முல்லர் காலத்திய செல்லரித்த புழுகையே மீண்டும் அழுத்திச் சொல்லுகிறார்.
அவர் வேதத்தை அணுகுவது வேத ஆராய்ச்சியாளராக அல்ல. ஒரு வரலாற்றாசிரியராக. இதில் தான் பிரச்சினையே. நான வேதத்தை அறிந்து கொள்ள வந்தவன். அதன் ஆழங்கள் என்ன என்று பார்க்க வந்தவன். விட்சல் வேதம் உதித்த காலம், அதன் வரலாறு பற்றி மட்டும் தான் மிக அதிகமாக பேசுகிறார். அவை எனக்குத் தேவையில்லை. சமஸ்கிருதம் சிறந்ததா என்று அவரும் எனக்கும் , இந்தியர்களுக்கு பாடம் சொல்லவும் வேண்டியதில்லை.
இத்துடன் நான விட்சல் அவர்களைப் பற்றி பேசுவதை நிறுத்திக் கொள்கிறேன். வேதம் பற்றி மட்டும் இனி பேசுவோம்.
நோய்களெல்லாம்,” காமம் மிகுந்த சூத்திரப் பெண்ணை அடையட்டும் ” என்ற வக்கரிப்பு, ஒரு மதத்தின் வேத நூல் என்றால் ? ஒரு நோய் நீங்க வேண்டும், விரும்பும் மிக அடிப்படையான மனித இயல்பு, ஏன் சூத்திரப்பெண்ணை மையம் கொண்டு ஏவப் படுகிறது ??
காமம் என்பது சூத்திரப்பெண்ணுக்குத்தான் மிகுதி என்றால், இன்று பீடாதிபதிகள் தண்டத்தை தூக்கி எறிந்து விட்டு தறி கெட்டு ஓடிப் போவதை (ஓடிப் போனவர்கள் எல்லாம் காமாந்தகர்கள் அல்ல, ஆனால் தண்டத்தை எறிந்த தெண்டங்கள் எதற்காக அலைகின்றன ?? ) எந்த வேதம் பதிவு செய்கிறது ??
வேத நாயகர்கள் கூலிப்படை வைத்து கொலை செய்தாலும் வேதத்தின் பின் வந்த மணு தர்மம், தூக்குக் கயிறை அறுத்து தனிப் பாதுகாப்பு அளிப்பது ஸ்மிருதிகளின் ஓர வஞ்சனைதானே..???
குயவனின் இள மங்கையரை போகித்து, பின் நதியில் தள்ளி விடுவது :- பீடாதிபதிகளின் கொப்பளிக்கும் காமத்தை குளிர்வித்த பாவத்திற்கா..??
முட்டாள் ஓஷோ, இருக்கு வேதம் 90 ஆயிரம் ஆண்டு பழமையானது என்று ஆருடம் சொல்லி சனாதனச் சரடு விடுகிறான், இவன் போன்ற அறிவு ஜீவிகள் தான் இன்றைய நவ இந்திய தூன்கள்.
திரு. பெரியண்ணன் சந்திர சேகரன் அவர்களின் வேத விளக்கம் தொடரட்டும், வேதப் புரட்டு ஒழியட்டும். சிறகு இதழுக்கு நன்றி.
[...] நான்மறை சொல்லினும் மெய்தனை அறி? என்ற தலைப்பில் சிறகு இதழில் பெரியண்ணன் சந்திரசேகரன் எழுதிய கட்டுரையை வாசித்தேன். வேதங்களைப்பற்றிய ஒரு கறாரான கட்டுரை. [...]
சில பல கறார் பேர்வழிகள், வேதம் ஒதுக்கி வைத்த நீச்ச பாஷை அல்லது சூத்திர பாஷையில் கருத்துப்பதிவு செய்வது நல்ல மன மாற்றம் மட்டுமல்ல, பிழைப்பும் கூட. வாழ்த்துக்கள்.
நடு நிலையுடன் எழுதும் பெரியண்ணன் சந்திரசேகர் வேதத்தை அதன் மொழியில் நேரிடையாக கற்றவர். அவர் அதில் கறார் என்ற நிலையில் என்னத்தை சொல்லிவிட்டார் என்று தெரியவில்லை. ஆனாலும் பேராசிரியர் நா. வானமாமலை அவர்களை மேற்கத்திய சிந்தனையாளர் என்று இருட்டடிப்பு செய்து விட்டு, இன்று பெரியண்ணன் சந்திரசேகர் போன்ற சிந்தனையாளர்களின் வரவை சீரணிக்க முடியாமல் வயிற்று வலியால் ( வயிற்றெரிச்சல் தான் ) துடிக்கும் எடுப்புக் கூலி அறிவு ஜீவிகள் பலருக்கு காஞ்சியில் சில பல சோமாறிகள் சுக்கு கஷாயம் தருவார்கள், இருக்கு வேதம் ஓதாமல் ஒரு மடக்கு குடித்தால் பித்தம் தெளியும்.., இல்லை.. இல்லை..வயிற்றெரிச்சல் குறையும்.