மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

நிச்சயம் நீதி தேவதை கண் திறப்பாள்

ஆச்சாரி

Feb 22, 2014
ஒரு மாபெரும் சுமை தமிழ் சமூகத்தின் தலையில் இருந்து இறங்கியுள்ளது. அது மூன்று மனிதர்களின் உயிர் சுமை அல்ல அது நீதியின் சுமை. 23 வருடங்கள் நீதிக்காக போரடிகொண்டிருக்கும் ஒரு தாயின் நிகரில்லாத அன்பின் சுமை. உச்சநீதிமன்றம் தூக்கைக் குறைத்து ஆயுளாக்கி  நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதை முழுமையாகக் கொண்டாடி முடிக்கும் முன்பே நம் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை விடுதலையும் செய்வதாக அறிவித்தது இரட்டிப்பு மகிழ்ச்சி. இந்த 23 ஆண்டுகளாக நடக்கும் அந்தத் தாயின் போராட்டத்தில் அவரின் குரலை ஈழப்போரில் உயிர் இழந்த ஒன்றரை லட்சம் உயிர்களின் மூலம் தான் கேட்டோம் என்பதை நினைவில் வைக்கவேண்டும்.
இது இமாலய வெற்றி!
அப்படி என்ன இருக்கிறது இந்த வெற்றியில் என்று கேட்பவர்களுக்கு?
ஒரு நாட்டின் அரசியல் அமைப்பு (Constitution) என்பது மக்களின் எண்ணங்கள் விருப்பங்களைத் தாண்டி செயல்படுவது (Constitution is above all that includes citizens interest and wish). இது உலகில் உள்ள எல்லா நாடுகளுக்கும் பொருந்தும் என்றாலும் குடிமக்களின் விருப்பம் என்பது நீதிமன்றத்தில் ஒலிப்பது என்பதும் அந்த அரசியல் அமைப்பிலே இருக்க வேண்டும் (Until it is implicitly defined in the constitution). அதன் அடிப்படையில் இந்திய குற்றவியல் சட்டம் ஒரு குற்றத்திற்கான வழக்கை எக்காரணம் கொண்டும் ஒரு முறை மட்டுமே விசாரித்து தீர்ப்பளிக்க முடியும். ஒரு முறை தீர்ப்பளிக்கப்பட்ட ஒரு வழக்கை மீண்டும் ஒரு முறை எந்த ஒரு நீதி மன்றமும் விசாரணை செய்யமுடியாது. அந்த வழியில் இந்த வழக்கு வைகோ மற்றும் ராம் ஜெத்மலானி சென்னை உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு ஏற்கப்பட்டதே ஒரு மிகப்பெரிய வெற்றி. இன்று அந்த தடைக்கல்லையும் தாண்டி ஒரு நாட்டின் உயர்ந்த நீதி மன்றம் கொடுத்த தீர்ப்பை திரும்பப் பெறுவது என்பது நமக்கு கிடைத்த இமாலய வெற்றி என்றால் மிகை ஆகாது. அதுவும் இந்தியா  போன்று மிகப்பெரிய நாட்டில் பல்வேறு மொழி இன மக்கள் வாழும் நாட்டில், அரசியல் அமைப்பை திருப்பிப் போட்ட பெருமை தமிழர்களையே சாரும். இந்த வழக்கு மீண்டும் மறு விசாரணை செய்யமுடியாமல் இருக்கலாம் ஆனால் கொடுத்த தண்டனை குறைக்கப்பட்டது பெரிய வெற்றி. அதிலும் “3 பேர் விடுதலை குறித்து மத்திய மற்றும் மாநில அரசுகள் முடிவு செய்யலாம்” என்ற தீர்ப்பு நீதி என்பதை தாண்டி நீதிமன்றமும் இந்த அரசியல் அமைப்பும் இந்த நாட்டின் குடிமகன்களுக்கும்  குடியரசுக்கும் கொடுக்கும் ஈடு இணையற்ற மரியாதை. அந்த வழியில் இது இந்திய அரசியல் சட்டத்தின் வழித்தடங்களையே இனி மாற்றி அமைக்கும்.

தமிழர்களுக்கு கிடைத்த படிப்பினை 
ஒரு சமூக நோக்கத்தை வெற்றி அடைய செய்ய உணர்வுப்பூர்வமான சமூக போராட்டங்கள் மட்டும் போதாது. அதை அறிவுபூர்வமாக, சட்டரீதியாக, அரசியல் ரீதியாக, சமூக ரீதியாக என பலவழியில் எடுத்து செல்லும் போராட்டமே வெல்லும் என்பதற்கு இந்த வெற்றி தமிழர்க்கு ஒரு படிப்பினை.
நன்றியும் வாழ்த்துக்களும்
இந்த வெற்றிக்கு பலவழிகளில் போராடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நமது நன்றியை தெரிவிப்போம். நம்மை தாண்டி இந்த வழக்கு வெற்றி அடைவதற்கு உறுதுணையாக இருந்த அதற்கு சாதகமான கருத்துகளை கூறிய அரசு அதிகாரிகளான  நீதிபதி தாமஸ் – “ஒரு தருமசங்கடமான சூழலில் இந்த தீர்ப்பை வழங்கி விட்டேன்”, முன்னாள் போலீஸ் அதிகாரி தியாகராஜன் – “பேரறிவாளனின் வாக்குமூலத்தை சரியாகப் பதியாமல் விட்டேன்”, முன்னால் சிபிஐ அதிகாரி டி ஆர் கார்த்திகேயன் “ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு  விதிக்கப்பட்டுள்ள தூக்கு தண்டனையை ரத்து செய்யப்பட்டால் மகிழ்ச்சி அடைவேன்” ஆகியோருக்கு நன்றி கூறுவோம். அவர்கள் இந்த வழக்கை விசாரணை செய்த காலத்துக்கும் இன்றைய காலத்துக்கும் உள்ள இடைவெளியில் மனித உயிரின் மதிப்பும் தூக்கு தண்டனையை ஒழிக்க வேண்டிய எண்ணமும் மேலோங்கியுள்ளது என்பதையே காட்டுகிறது.
இந்த வெற்றி வெறும் தமிழருக்கான வெற்றி அல்ல மனிதகுலத்துக்கு நீதிக்கும் கிடைத்த வெற்றி. இத்தோடு நம் பணிமுடிவடையவில்லை. இந்தியாவை தூக்கு தண்டனையே இல்லாத நாடாக மாற்றவேண்டும்.  

இன்று இந்த தீர்ப்புக்கு எதிராக செயல்படும் சக்திகள் ஒரு தாழ்ந்த எண்ணங்களுடன் இவர்களின் விடுதலையை தடுக்க முயல்கின்றனர். நினைவில்கொள்ளுங்கள். இது வெறும் எழுவற்கான விடுதலை அல்ல. இது தமிழ் சமூகத்தின் விடுதலை. ஒட்டுமொத்த இந்தியாவிலும் ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கான விடுதலை. தடைகளைத் தாண்டி பெறுவோம் விடுதலை.

 நிச்சயம் நீதி தேவதை கண் திறப்பாள்.

Consider starting with 15 minutes official comment of monitoring a day for younger children or more vulnerable teens

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “நிச்சயம் நீதி தேவதை கண் திறப்பாள்”

அதிகம் படித்தது