மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

திரை விமர்சனம் – நீதானே என் பொன் வசந்தம்

ஆச்சாரி

Jan 1, 2013

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனின் படைப்பில் வெளிவந்துள்ள மற்றுமொரு காதல் காவியப்படமே, தற்போது வெளிவந்துள்ள   “நீதானே என் பொன் வசந்தம்” .

இதில் அறியா வயதில், வருண்(ஜீவா), நித்யா(சமந்தா) நண்பர்களாயிருந்து சண்டைபோட்டுப்  பிரிகின்றனர். பின்பு பத்தாம் வகுப்பு படிக்கும் போது ,இவர்கள் பழைய பகையை மறந்து மீண்டும் நட்பாகின்றனர். மறுபடியும்  பதினொன்றாம் வகுப்பின் போது சண்டைபோட்டுப்  பிரிகின்றனர். இரு ஆண்டுகள் கழித்து, பல கல்லூரிகள் கலந்து கொள்ளும் கலை விழாவில் மீண்டும் சந்தித்து, ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு காதலர்களாகின்றனர். கல்லூரி முடிந்தும் தொடர்கிறது இவர்களின்  நெருக்கமான காதல். மீண்டும் ஒரு சண்டையால் பிரிகிறார்கள். பல வருடங்கள் கழித்து ஜீவா, நித்யாவைத்தேடி மணப்பாடுக்குச்  செல்கிறார்(இம்முறை அமெரிக்காவோ, கேரளாவோ இல்லை, தமிழ்நாட்டிலுள்ள ஒரு கடலோர சுனாமி கிராமத்திற்கு).பத்து நாள் வரை நித்யா பேசுவார் என அங்கேயே காத்திருந்து ஏமாற்றத்தில் திரும்புகிறார்  வருண்.பிறகு வீட்டில் பார்க்கும் பெண்ணையே மணக்கச்  சம்மதிக்கிறார். கடைசியில் யாருடன் கல்யாணம் நடக்கிறது என்பதே மீதிக்கதை..(இந்த இயக்குனரின் முந்தைய படங்களைப்  பார்த்திருந்தால், நாம் இப்படத்தின் உட்சக்காட்சியை எளிதில்  யூகிக்கமுடியும் )

படத்தைத்  தூக்கி நிறுத்துவது – சமந்தா(நித்யா.)  பத்தாவது படிக்கும் பெண்ணாய்,அழகின் மொத்த உருவமாய்  அவர் வரும் காட்சிகளில் அப்படியே உருவத்தில்  மட்டுமல்லாது, உணர்விலும் காட்டி இருக்கிறார்.  ஆயிரம் உணர்வுகளை நொடிக்கு நொடி மாறும் முகபாவங்களில், கண்ணசைவில், குரல் கெஞ்சலில், கொஞ்சலில், துறுதுறுவென அலைபாயும் கண்களில்,  குதுகலாமான சந்தோசச் சிரிப்பில் என  அந்த வயதில் உள்ள பெண்ணுக்கான அத்தனை உணர்வுகளையும் சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார். தனக்குப்  பிடித்தவன் ஒரு வார்த்தை பேசிவிட்டாலே வரும் எல்லையற்ற சந்தோசத்தை அவர் வெளிப்படுத்தியிருக்கும் அழகு என, சமந்தா நடிப்பில் முன்னணி நடிகைகளுக்குச்  சவால் விடுகிறார்.மொத்தத்தில் சமந்தா வழியே ஒரு புதுக்கவிதையே வடித்திருக்கிறார் இயக்குனர்.
பெரும்பாலான காதலர்களுக்கிடையே வரும் சின்னச்சின்ன சண்டைகளை கூட ,நுணுக்கமாக அப்படியே கண்முன் நிறுத்துவது போல, பல இடங்களில் அட! ! நம் காதலில் கூட இதெல்லாம் நடந்திருக்கிறதே , என்ற உணர்வை தூண்டச்செய்கிறார் இயக்குனர்.

உதாரணமாக: இவனே தன் உலகமெனச் சுற்றி வரும் சமந்தா, ஜீவா தன்னை ஒதுக்குகிறான் என உணரும் போது வெளிப்படும் வசனங்கள் “நானும் நம்பர் ஒண்ணாத்தான் இருந்தேன் உன்னைப் பார்க்கிற வரை, படிப்பு, ஸ்போர்ட்ஸ்ல,  காம்படீஷன்ல என எல்லாத்துலயும். இப்பல்லாம் எனக்கு நண்பர்கள் கூட யாரும் இல்லை. யாரும் என்னைக் கூப்பிடடுறது கூட இல்லை. ஏன்னா  நான் உன்னைத் தேர்ந்தெடுத்தேன்.  நீதான் முக்கியம்னு நெனச்சேன்” என அவர் கோபத்தில் வெடிப்பது நுணுக்கமாகக்  கவனிக்கதக்கது.

-மேலும் படத்திற்கு மிகப் பெரிய பலமாக விளங்குவது இளையராஜா வின் பின்னணி இசை.  வெகு நாட்கள் கழித்து தனது ரசிகர்களுக்கு  இசையை விருந்து கொடுத்திருக்கிறார் இசைஞானி.  நா.முத்துக்குமாரின் பாடல் வரிகளில் அமைந்துள்ள பாடல்கள் எதையும் கதையை விட்டு பிரித்துப் பார்க்க முடியாதது போல் கதையுடன் பின்னிப்பிணைந்தே வந்துள்ளது.குறிப்பாக தந்தையின் இசையில் மகன்-யுவன் பாடிய “சாய்ந்து சாய்ந்து…” பாடலும், கார்த்திக் பாடியுள்ள “என்னோடு வா வா..” என்னும் பாடலும் இதயத்தை வருடும் ரகம். நிராவ் ஷாவின் வண்ணமயமான ஒளிப்பதிவு-குறையாத அழகு மற்றும் நளினி ஸ்ரீராமின் உடை அலங்காரங்கள் என அனைவரும் அவரவர் பங்கை  சிறப்பாகச் செய்துள்ளனர்.

-முதல் பாடலிலேயே சந்தானத்தைக்  கதாநாயகன் போல சித்தரித்துள்ளார்  இயக்குனர். முதலாம்  பாதியில் பல இடங்களில் சிரிக்க (ரசிக்க) வைக்கும் சந்தானம் இரண்டாம் பாதியில் ஏமாற்றுகிறார். ஆனால் அவர் விண்ணைத்தாண்டி வருவாயா பட காதல் காட்சிகளைப் போல்  செய்திருக்க தேவை இல்லை. சந்தானத்தின் ஜோடியாக வரும் ஜென்னி கதாபத்திரம் அருமை.
-அதே போல் கிராமத்தில் தன்னைத்  தேடி வந்த ஜீவாவிடம் சமந்தா பேசும் வசனங்கள் கூர்மை. ஆனால் இது மட்டுமே படத்தில் இருப்பதுதான் பலவீனம். இந்த கூர்மையான வசனங்களுக்கேற்ற ஆழமான காட்சிகள் இல்லை. மாறாய் எல்லாவற்றையுமே வசனங்களிலேயே வழவழ. .  கொழகொழ . .  என, முன்பும் பின்பும், பக்கம் பக்கமாய்ப் பேசுகிறார்கள்.
காட்சிகள் மிகவும் செயற்கையாய், நாடகத்தனமாய் இருக்கின்றன.கதையில் வரும் ஒவ்வொரு காட்சியின் முடிவிலும் வரும் இருவருக்குமான சண்டைகள் மிகச் சாதாரண,சலிப்பூட்டும்  காட்சிகளாய் இருக்கின்றன.

-ஜீவா படம் முழுவதும் 14வயதிலிருந்து 26 வயது வரை பார்க்க ஒரே மாதிரயாக  இருக்கிறார். ஆனால் ஒவ்வொரு வயதிற்கும், சமந்தா காட்டிய உடல்மொழி வேறுபாடுகளில் ஒரு பத்து சதவீசம் கூட இவர் காட்டவில்லை என்பது தான்  வருத்தம். ஜீவாவின் குடும்பத்து உறுப்பினர்கள் அனைவருமே ஒரு செயற்கைத்தனமான நடிப்பு, வசனம், பாவனைகளையே வெளிப்படுத்துகின்றனர்.

எப்ப கெளதம்? இந்தப் பாணியை விட்டு படம் பண்ண போறீங்க?? என்றே கேட்கத் தோன்றுகிறது. ஆங்கிலத்தின் தாக்கம் அதிகமாகவே உள்ளது தமிழ் படம் தானே எடுக்கிறீங்க கெளதம்?! நீதானே என் பொன்வசந்தம் படத்தில் பொன்வசந்தமாய் நம் மனதில் நிற்பது இளையராஜாவின் இசையும், கதைக்கு ஏற்றது போல் வரும் நா.முத்துகுமாரின் பாடல் வரிகளும்  மட்டுமே.

மொத்தத்தில் நீதானே என் பொன்  “வசந்தம்” , பெயரில் மட்டுமே , படத்தில் இல்லை.


ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “திரை விமர்சனம் – நீதானே என் பொன் வசந்தம்”

அதிகம் படித்தது