மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

நுகர்வோர் குறைகளுக்குத் தீர்வு பெறுவது எப்படி?

ஆச்சாரி

Jun 30, 2012

மக்கள் தாங்கள் வாங்கும் பொருட்களில் ஏதேனும் குறைபாடு இருந்தால் அந்தக் குறைபாட்டை சலிப்புடன் சகித்துக் கொண்டே அப்பொருளைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். மக்களின் இந்த சகிப்புத் தன்மையை சாதகமாகப் பயன்படுத்தி பெரும்பாலான வணிகப் பொருள்- உணவுப் பொருள்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், தாங்கள் தயாரிக்கும் பொருட்களில் கலப்படங்கள் கலந்து தயாரித்து விற்பனை செய்து கொள்ளை லாபம் பார்க்கிறார்கள். இவை தெரிந்தும் நம் அன்றாட வாழ்வில் எத்தனையோ கலப்படப் பொருள்களைப் பயன்படுத்துகிறோம்.

பொருளில் குறை இருப்பது தெரிந்தாலும் விற்பனை செய்பவரிடம் போய் குறையை சுட்டிக் காட்டுவதில்லை. ஒரு மளிகைக் கடையில் சலவை சோப்பு வாங்கி அதில் குறை இருந்தால் விற்றவரிடம் கேட்போம். அவர் மொத்த விற்பனையாளரைக் கை காட்டுவார். மொத்த விற்பனையாளர் தயாரிப்பு நிறுவனத்தைக் கை காட்டுவார். இந்த அடுத்தவரை கை காட்டும் அவலத்தால், பெரும்பாலான மக்கள் குறைகள் உள்ள பொருட்களை பயன்படுத்தியே பழகிவிட்டார்கள்.

நுகர்வோர் குறைகள் தீர்க்க பல அரசு அமைப்புகள், தனியார் தொண்டு நிறுவனங்கள் உள்ளன. ஆனாலும் மக்கள் அவைகளை நாடுவதில்லை. காரணம் நேரம் காலம் வீணாகும் என்ற சோம்பல் கலந்த நினைப்பு. ஆனால் பணம் செலுத்தி பொருள் வாங்குபவர் தெரிவிக்கும் எல்லா குறைகளுக்கும் இழப்பீடு தரவேண்டியது விற்பவர்களின் கடமை என்பதை மறந்து நாம் அமைதியாக இருந்து விடுகிறோம்.  அதனால் மக்கள் தங்கள் உரிமைகளை விட்டுக் கொடுக்காமல் நுகர்வோருக்கான உரிய அமைப்புகளை அணுகி தங்கள் குறைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம். நம் ‘சிறகு’ வாசகர் களுக்காக வழக்கறிஞர்கள் தந்த- நுகர்வோர்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க வேண்டிய வழிமுறைகளைக் கொடுத்துள்ளோம்.

பொதுமக்கள், தாங்கள் வாங்கும் பொருட்களில், தரம் மற்றும் சேவை குறைபாடு இருந்தால்,  நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986- ன்படி, நுகர்வோர் குறைதீர் மன்றங்களில் புகார் செய்து, நிவாரணம் பெறலாம். புகார் மனுவில், புகார்தாரரின் பெயர், முழு முகவரி, எதிர் மனுதாரரின் பெயர் மற்றும் முகவரி, பொருள் அல்லது சேவையை பயன்படுத்திய விவரங்கள், புகாரின் தன்மை, ரசீதின் நகல் மற்றும் விவரம், இழப்பீட்டின் விவரம் ஆகியவை தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும்.

உதாரணமாக ஒரு தனி நபர் நீங்கள் ஒரு தொலைக்காட்சிப் பெட்டி வாங்குகிறீர்கள். உத்திரவாத காலத்திற்குள் தொலைக்காட்சிப் பெட்டி பழுதடைந்து விடுகிறது. நீங்கள் உடனே விரைவுப் பதிவு அஞ்சல் மூலம் பழுது குறித்து தெரிவித்து நீங்கள் பொருள் வாங்கிய கடைக்கோ நிறுவனத்துக்கோ அனுப்புங்கள். இரண்டுவாரம் வரை சரியான பதில் கிடைக்கவில்லை என்றால் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்துக்குச் சென்று நீங்கள் அனுப்பிய எழுத்துபூர்வ கடித நகலையும் பதிவு அஞ்சல் நகலையும் இணைத்து எழுத்துபூர்வமாக புகார் கொடுக்கலாம். குறைதீர் மன்றம் உங்கள் புகார் ஏற்கக் கூடியதுதானா என ஆராய்ந்து ஏற்கக் கூடியதாய் இருந்தால் ஏற்றுக் கொண்டு உங்களை அழைப்பார்கள்.

பாதிக்கப்பட்டவர் வழக்கறிஞர் மூலமும் கொடுகை அறிவிப்பு (claim notice) அனுப்பலாம். இதற்கு சரியான பதில் கிடைக்கவில்லை என்றால் நுகர்வோர் நீதி மன்றத்தையும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் தொண்டு நிறுவனங்களையும் அணுகலாம்.  புகார் பதிவிற்கான கட்டணத்தை வங்கி விரைவுக் காசோலையாகவோ  அல்லது தபால் அலுவலகம் மூலம் பணம் செலுத்த வேண்டும். பொருட்களை விற்பனை செய்பவர்கள் அனைவரும் வழக்குக்கு உட்பட்டவரே. இதில் தனியார், அரசு நிறுவனம் என்ற பாகுபாடு கிடையாது.

உதாரணம்: மளிகைக் கடை, பல்பொருள் அங்காடி, உணவுப் பொருள் தயாரித்து விற்பனை செய்யும் கடைகள், (உதாரணம்: பேக்கரி, இன்னபிற) மிதிவண்டி, – மோட்டார் சைக்கிள் – கார் – லாரி விற்பனையார், மருந்துக் கடைகள் , நியாயவிலைக் கடை போன்றவை.

பணம் வாங்கிக்கொண்டு வழங்கப்படும் சேவைகள், தனியார் மற்றும் அரசு துறை நிறுவனங்கள் அனைத்துமே இதில் அடங்கும்.

உதாரணம் : மின்சார வாரியம், குடிதண்ணீர் விநியோகம், ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் , வங்கிகள், மருத்துவமனைகள், எரிபொருள் நிறுவனங்கள் , துணைப் பதிவாளர் அலுவலகம் போன்றவைகள்.

விலை சம்பந்தப்பட்ட பிரச்சனை என்றால், விலை அச்சடிக்கப்பட்ட மேல் உறையை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். தரம் சம்பந்தப்பட்ட பிரச்சனை என்றால், அதே மேல் உறையுடன் பொருளை உறையில் இட்டு வைத்திருக்க வேண்டும். எடை சம்பந்தப்பட்ட பிரச்சனை என்றால், நீங்கள் உறையைப் பிரிப்பதற்கு முன்பே எடை குறைவு என்பதை உறுதிப் படுத்திக் கொண்டு  உறையைப் பிரிக்காமல் வைத்திருக்க வேண்டும். ஒருவேளை பிரித்துவிட்ட பின்பு தான் எடை குறைவை கண்டுபிடித்தீர்கள் என்றால், பிரிக்கப்பட்ட உறையை ஆதாரமாக வைத்து வழக்கு தொடர முடியாது. எனவே மறுபடியும் அதே கடைக்கு போய், அதே பொருளை, ரசீது போட்டு வாங்கிக்கொள்ளுங்கள். சேவை சம்பந்தப்பட்ட பிரச்சனை என்றால், சேவைக்கான ரசீது இருக்கவேண்டும்.

புகார் செய்வதற்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது, ஒரு லட்ச ரூபாய் வரை, புகார் கட்டணம் செலுத்தத் தேவை இல்லை. ஏனைய புகார்தாரர்கள், தாங்கள் வாங்கிய பொருட்கள் மற்றும் சேவை மதிப்பின் அடிப்படையில், புகார் பதிவு கட்டணம் செலுத்த வேண்டும். 20 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு கோரும் வழக்குகளை, மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில்தான் பதிவு செய்ய வேண்டும். நீதிமன்றக் கட்டணம் எதுவும் செலுத்தவேண்டியது கிடையாது. இதனால் வழக்கு தொடருவதற்கு தகுதியே இல்லாத பிரச்சனைக்கெல்லாம் வழக்கு தொடர ஆரம்பித்தனர். இதில் எதிர் தரப்பினரை  மிரட்டுபவர்களும் அடங்கும். இதனால் வழக்கு தள்ளுபடியாகும் நிலை ஏற்பட்டது. இதனால் தவறே செய்யாத எதிர் தரப்பினர்களுக்கு கால விரயம் மற்றும் செலவு ஏற்படுவதையும், நீதிமன்றத்தின் நேரம் வீணாவதையும் கருத்தில் கொண்டு 2006 ஆம் ஆண்டில் கீழ்க்கண்டவாறு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
1லட்சத்திற்கு மேல் 5 லட்சம் வரை = 200 /-
5 லட்சத்திற்கு மேல் 10 லட்சம் வரை = 400 /-
10 லட்சத்திற்கு மேல் 20 லட்சம் வரை = 500 /- போன்ற கட்டண வரையறை செய்யப்பட்டது.

வழக்கு தொடருபவர்  நுகர்வோராக இருக்கவேண்டும். வழக்கு அவர் சம்பந்தப் பட்டதாக இருக்கவேண்டும். நுகர்வோர், எந்த நுகர்வோர் குறைதீர் மன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட எல்லைக்குள் ( Jurisdiction) இருக்கிறாரோ அதில் தான் வழக்கு தொடரவேண்டும்.  ஒவ்வொரு மாவட்டத்திலும் நுகர்வோர் குறைதீர் மன்றங்கள் உள்ளன. சென்னையில் மயிலாப்பூரில் மாநில நுகர்வோர் நீதி மன்றம் உள்ளது. மாவட்ட நுகர்வோர் மன்றத்தில் தீர்வு கிடைக்காவிட்டால் மாநில அளவிலான நீதி மன்றத்தையும் அங்கும் தீர்வு கிட்டாவிட்டால் சென்னை உயர்நீதி மன்றத்தையும் அல்லது உச்ச நீதிமன்றத்தை நுகர்வோர்கள் அணுகி நிவாரணம் பெறலாம். மக்கள் இந்த வழிமுறைகளைப் பின்பற்றி தரமற்ற பொருள்களையும், அக்கறையற்ற சேவைகளையும் நுகோர்வோர்க்கு அளிப்போரை சட்டப்படி அணுகி நம் குறைகளுக்குத் தீர்வு காண்போம். ஒவ்வொரு மாவட்டத்திலும் நுகர்வோர் குறைதீர்வு மன்றங்கள் உள்ளன. அவற்றை மக்கள் அணுகலாம்.

சென்னைப் பெருநகர மக்கள் அணுக வேண்டிய நுகர்வோர் குறைதீர் மன்றங்களின் முகவரி:

தலைவர்,
மாநில நுகர்வோர் குறைதீர்
ஆணையம், எண். 212,
இராமகிருஷ்ண மடம் சாலை,
மைலாப்பூர், சென்னை – 600 004

044-24940687, 044- 24618900

தலைவர்,
மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம்
சென்னை (தெற்கு) ,
212, இராமகிருஷ்ண மடம் சாலை,
மைலாப்பூர், சென்னை – 044 – 24938697

தலைவர்,
மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம்
சென்னை (வடக்கு),
212, இராமகிருஷ்ண மடம் சாலை,
மைலாப்பூர், சென்னை – 044 – 24952458

In short, teens make better choices when they know parents are supervising snap here for information

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “நுகர்வோர் குறைகளுக்குத் தீர்வு பெறுவது எப்படி?”

அதிகம் படித்தது