மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

நூலகம் உங்கள் கையில்

ஆச்சாரி

Jun 4, 2011

இன்று வெகுவேகமாக பிரபலமாகிவரும் சாதனங்களில் ஒன்று, மின்னணு புத்தகம் (ebook). மின்னணு புத்தகம் என்பது புத்தகங்களை மின்னணு முறையில் சேமித்து வைப்பதாகும். அச்சிட்ட புத்தகங்களை புராதன பழக்கமாக்கும் விதமாக, இந்த மின்னணு புத்தகங்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
மின்னணு புத்தகங்கள் கணினி பயன்பாடு வந்தகாலத்தில் இருந்தே எதாவது ஒரு வடிவத்தில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.  1970களில் அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்ட குடென்பெர்க் வேலைத்திட்டம் (project)  இன்று கிட்டத்தட்ட முப்பதாயிரம் புத்தகங்களை மின்னணு முறையில் சேமித்து வைத்து உள்ளது (http://www.gutenberg.org/wiki/Main_Page). தமிழில் ஆரம்பிக்கப்பட்ட மதுரை வேலைத்திட்டம் இது போன்று தமிழில் மின்னணு புத்தகங்களை சேமித்து வைத்து இருக்கிறது (http://www.projectmadurai.org).

 

ஆனால் இது போன்ற மின்னணு புத்தகங்களில் நிறைய வசதிகள் இருந்தாலும் ஒரு சில முக்கியமான குறைபாடுகள் இருந்தன. அதில் முக்கியமானவை, மின்னணு புத்தகங்களை கணினியில் வாசிக்கும் அனுபவம் உண்மையான பேப்பர்  புத்தகத்தை வாசிப்பது போல இல்லை. கணினியில் புத்தகம் படிப்பது கண்களுக்கு நல்லது அல்ல.

 

கடந்த சில வருடங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட மின்னணுமை (e-ink) என்ற தொழில்நுட்பம் இந்தக் குறைபாடுகளை களைந்து  மின்னணு புத்தகங்களை வாசிப்பதை கிட்டத்தட்ட உண்மையான புத்தகம் வாசிப்பது போன்ற அனுபவத்திற்கு இட்டுச் சென்றது. தற்போதைய கணிப்பொறி திரைகளை விட இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்படும் திரைகள் கண்களை உறுத்தாமல் இருக்கும்    தன்மை படைத்தவை.

 

இந்த மின்னணுமை தொழில் நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட மின்னணு வாசிப்பு சாதனங்கள் கிட்டத்தட்ட புத்தகம் போலவே இருக்கும். மிகக்குறைவான மின்சாரத்தை பயன்படுத்தும். இவற்றில் சேமிக்கப்பட்ட மின்சக்தி (Battery Power) மூலம் சில வாரங்களுக்கு நீங்கள் இதனை பயன்படுத்தி நீங்கள் புத்தகம் படிக்கலாம். மேலும் நீங்கள் இதில் ஆயிரக்கணக்கான புத்தகங்களை சேமித்து வைத்து கொள்ளலாம்.

 

இந்த மின்னணுமை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இன்று பலநிறுவனங்கள் மின்னணு புத்தகவாசிப்பு சாதனங்களை (e -book reader )அறிமுகப்படுத்தி உள்ளன. இதில் பிரபலமாவை அமெரிக்காவில் அமேசான் நிறுவனம் அறிமுகப்படுத்திய கிண்டில்( kindle ) மற்றும் சோனி புத்தக வாசிப்பு சாதனம் போன்றவை ஆகும். இதைத் தவிர ஆப்பிள் ஐபாட் போன்ற சாதனங்கள் மின்னணு புத்தகத்தை படிப்பதற்கு மிக வசதியான மென்பொருளை கொண்டு இருக்கின்றன.

 

நீங்கள் மின்னணு வாசிப்பு கருவி வாங்க விரும்பினால் கீழ்க்கண்ட காரணிகளை   ஆய்வு செய்து வாங்குங்கள்.
1. விலை
2. இந்த வாசிப்புக்கருவி எல்லா மின்னணு வடிவங்களையும் வாசிக்குமா?
3. திரை அளவு
4. புத்தகங்கள் உங்களுக்கு எங்கு இருந்து கிடைக்கும்?
5. எவ்வளவு நேரம் சேமிப்பு மின்சாரத்தில் இயங்கும்?
6. கம்பியில்லா தொடர்பு( Wi -Fi ) வசதி இருக்கிறதா?

 

அமேசான் சென்ற ஆண்டு முதல் முறையாக பேப்பர் புத்தகங்களை விட மின்னணு புத்தகங்களை அதிகமாக விற்றது. இது மின்னணு புத்தகங்கள் பிரபலமடைந்து வருவதை காட்டுகிறது. தற்போது புத்தகங்கள் மட்டும் தான் விற்கப்பட்டாலும் கூட எதிர்காலத்தில் பத்திரிக்கைகள், சஞ்சிகைகள் (அப்படீனா..) கூட மின்னணு வாசிப்பு கருவிகள் மூலம் விநியோகிக்கப்படும். இன்று உலகின் முன்னணி பத்திரிகை நிறுவனங்களும், பதிப்பகங்களும் தங்களது வியாபாரத்தை மின்னணு வடிவத்திற்கு மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு கொண்டு இருக்கிறார்கள்.

 

இந்த மின்னணு புத்தகங்கள் எதிர்காலத்தில் பேப்பர் புத்தகங்களை தேவை இல்லாமல் ஆக்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பேப்பர் காடுகள் அழிவதற்கு முக்கிய காரணம் என்பதால் மின்னணு புத்தகங்கள் பிரபலமாவது சுற்றுச் சூழல் பாதுகாப்பில் பெரியபங்கு வகிக்கும். நாம் அனைவரும் மின்னணு புத்தகங்களை பயன்படுத்தி பலன் பெறுவோம்.


ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

2 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “நூலகம் உங்கள் கையில்”
  1. siraguteam says:

    நீங்கள் பல இடங்களில் வாங்கலாம். எனக்குத் தெரிந்த ஒரு நல்ல இடம் http://mybebook.com/

  2. thambi says:

    எங்க வாங்கலாமுன்னு சொன்னீங்கன (online url) வசதியா இருக்கும்.

அதிகம் படித்தது