மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

நூலோடும் தறியில் நுட்பம் செய்யும் கைகள்

ஆச்சாரி

Jun 1, 2012

தமிழகத்தில், விவசாயத்துக்கு அடுத்தபடியாக கைத்தறி நெசவுதான் முக்கிய தொழிலாக விளங்குகிறது. ஆனால் இப்போது அந்த முக்கியத் தொழில் மக்கிய தொழிலாகிவிட்டது. தமிழகத்தின் பல மாவட்டங் களில்  கைத்தறி நெசவுத் தொழில்தான் வாழ்வாதாரம். நெசவு நமது தேசியத்தின் உயிர்நாடி.

இதில் காஞ்சிபுரம் நகருக்கு முதன்மை இடம் உண்டு.  ”.சின்னச் சின்ன இழை பின்னி வருகுது… சித்திரைக் கைத்தறி மின்னி வருகுது….. ”. என்று  பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் கைத்தறி பற்றி பாடலே எழுதி உள்ளார்.. காஞ்சிபுரத்தைப் பற்றி ஒரு பழமொழி உண்டு. அதாவது, ‘காஞ்சிபுரம் சென்றால் காலாட்டிக்கொண்டே சாப்பிடலாம்’ என்று. இதன் பொருள்  காஞ்சிபுரம் சென்றால் கைத்தறி நெசவு நெய்து,  சம்பாதித்து சாப்பிடலாம் என்பதாகும்.  இன்னொரு முக்கியப் பொருளும் உண்டு- கைத்தறியில் நெசவு நெய்யும் போது, கையையும் காலையும் பயன்படுத்த வேண்டும். அதாவது கையையும் காலையும் ஆட்டிக்கொண்டேதான் நெசவு செய்ய முடியும் என்பதே அது.

தறி என்பது ஆடை தயாரிக்க பயன்படும் ஓர் ஒருங்கிணைந்த செயல்பாட்டுக் கருவியாகும். ஒரு காலத்தில் தறி ஓடும் ஓசை காஞ்சிபுரம் தெருக்கள் தோறும் கேட்கும். தனித்தனி நூல்களை இறுகப் பிணைத்து அழகிய ஆடையாக்கி விடும் கைத்தறி கலை. கைத்தறியில் கைலி உற்பத்தி செய்ய. தெருவில் பாவு போட வேண்டும். அதை உருளையில் சுற்றி, தறியில் பொருத்தி நெய்ய வேண்டும். அதற்கான ஊடை நூலை டப்பாவில் சுற்ற வேண்டும். சேலையில் வடிவங்கள்  வரும் இடங்களில் வழக்கமான இழைகளுடன் பனை ஓலை இழைகளைப் பயன்படுத்துகிறார்கள். இது சேலைக்குப் புது பொலிவை அளிப்பதாக அமைகிறது.. தற்போது ஒரு சேலையில் பருத்தி இழைகளுடன் சுமார் 40 சதவீத அளவுக்குப் பனை ஓலை இழைகளைப் பயன்படுத்துகிறார்கள்.

பல்வேறு விதமான துணிகளுக்கு பல்வேறு விதமான நூல்கள் தேவை. நீங்கள் கடையில் சென்று போர்வையும், மேலாடையும் வாங்குகிறீர்கள். இரண்டும் ஒரே வகை நூல் இல்லை.  அங்கேதான் இந்த நூலின் எண்ணிக்கை (yarn count) வருகிறது. அந்தந்த நூலின் எடைக்கு (weight) தகுந்தாற்போல் அந்த நூலின் எண்ணிக்கை குறிக்கப்படுகிறது.

தறியில் துணி நெய்யப்படும் முறை வியப்பாக உள்ளது. இந்தக் கலையைப் பற்றி ‘சிறகு’ வாசகர்களுக்காக நேரில் நாம் கண்டதைத் தருகிறோம்-

ஆலை என குறிப்பிடப்படும் பெரிய மூங்கில் பிளவுகளால்  செய்யப்பட்ட உருளையில் நூலைச் சுற்றுகின்றனர். நூல் முப்பது சிறு உருளைகளிலிருந்து பெரிய உருளைக்குச் செல்லும். இவற்றைப் பிரித்தெடுப்பதற்கு ஏதுவாக கடிகாரச் சுற்றில் ஒன்று, எதிர் சுற்றில் ஒன்று என பெரிய உருளை அறுபதாகப் பிரிக்கப்படுகிறது. இப்பணியைப் பெரும்பாலும் பெண்களே செய்கின்றனர். மாற்றி மாற்றி சுற்ற வேண்டும் என்பதால் எந்த இடத்தில் மாற்ற வேண்டும் என்பதற்கு அடையாளமாக ஒரு ஆரக்காலில் சிவப்பு வண்ணத் துணியைச் சுற்றிவைத்துள்ளனர்.

இவ்வாறு சுற்றப்பட்ட நூல் துவைச்சுப் பட்டறைக்குச் (வண்ணக் கஞ்சி இருக்கும் தொட்டி)  செல்கிறது அங்கு கஞ்சி ஏற்றி நூலை விறைப்பாக்குகின்றனர். பச்சரிசி மாவைக் காய்ச்சி கஞ்சியாக்கி  நீளமாக மாட்டப்பட்டிருக்கும் நூலில் தூரிகையால் கஞ்சியைத் தூவுகின்றனர். தூவப்பட்ட கஞ்சி நூலின் மறுபக்கத்தை நனைப்பதற்காக பில்லேறு எனப்படும் விழலின் வேரால் செய்யப்பட்ட பெரிய தூரிகையை நூலின் மீது அழுத்தியபடி இருவர் இழுத்துச்செல்கின்றனர் அதன் பிறகு ஊர்தியைச் சுழற்றி அசைத்து கஞ்சிப்பசையை உலர்த்துகின்றனர். இவ்வாறு இரு முறை செய்த பிறகு சிறிது தேங்காய் எண்ணெயைத் தூவி நூலை வழுவழுப்பாக்கி முறுக்கேற்றி தறிக்கு அனுப்புகின்றனர்.

நெய்யப்படவிருக்கும் துணிகளின்  நிறங்களுக்கேற்ற நூல்களை அச்சில் பிணைத்து, அள்ளிப்பிடித்து சிக்கலில்லாமல் தனித்தனி இழையாக நீவி அதன்பிறகு தறியில் பிணைக்கின்றனர். குறுக்கு இழைக்கான நூல்கள் தார் எனப்படும் சிறு உருளையில் சுற்றப்பட்டிருக்கிறது. அதனை மரத்தாலான நாடா எனப்படும் கருவிக்கு உள்ளிருக்கும் பித்தளைப் பட்டைக்குள் பொருத்தி நெய்யத் தொடங்குகின்றனர். பல வண்ண ஆடை என்றால் குறுக்கு இழைகளை அதற்கேற்ப சரியான நேரத்தில் அவ்வப்போது மறவாமல் மாற்றிக்கொண்டிருக்க வேண்டும். இப்பணி பார்ப்பதற்கு எளிதாகத் தோன்றினாலும் நெய்பவரின் நினைவாற்றலுக்கும், கவனம் சிதையாமைக்கும் மிகப்பெரிய சவாலாகும். இப்படி நூலாடும் தறியில் தங்கள் கைத் திறத்தாலும் கடும் உழைப்பாலும் ஓர் ஆடையை உருவாக்கி நாம் உடுத்தத் தருகின்றனர் ஒவ்வொரு நேசவாளரும்.

கைத்தறிகள் நெசவால் தனித்துவமாக   தரைவிரிப்புகள், விரிப்புகள் முதலான அலங்காரத் துணிகள் போன்ற சிறு அளவிலான துணிகளைத் தனிப்பயனாக்கவும் மற்றும் மேம்படுத்தவும் அதேநேரத்தில் முற்றிலும் லேசான எடை கொண்ட துணிகளை  செய்யவும் முடிகிறது.

கற்றாழை, சணல், வாழை, மூங்கில், பைனாப்பிள் உள்ளிட்ட பல வகையான இயற்கை நார்களைக் கொண்டு நெசவு  செய்கின்றனர். புடவை, சட்டை, சுடிதார் வகைகள், திரைச் சீலைகள் என பல வகை துணிகளை நெசவு செய்கின்றனர். இதில் கற்றாழையை பயன்படுத்தி தயாரிக்கப்படும் புடவைகள் மருத்துவ குணம் கொண்டதாக உள்ளது.

இத்தகைய துணி வகைகளுக்கு பொதுமக்களிடையே அமோக வரவேற்பு உள்ளது. வெளிநாடுகள், பிரபலமான ஜவுளி நிறுவனங்களில் இருந்தும் கேட்கின்றனர். இருப்பினும், போதிய இடவசதி, புதிய உபகரணங்கள் வாங்க வசதியின்மை காரணமாக குறிப்பிட்ட அளவுக்குமேல் இவர்களால் உற்பத்தி செய்ய முடியாமல் உள்ளனர். நெசவுத் தொழில் நலிவடைந்து வருவதால், மாதம் 6,000 ரூபாய் சம்பாதிப்பதே பெரிதாக உள்ளது. கூட்டுறவு சங்கங்கள் நட்டத்தில் இயங்குவதால், போனஸ் என்பது நெசவாளர்களுக்கு இவர்களுக்கு கனவாகிவிட்டது. கூட்டுறவு சங்கங்களில் இவர்கள் வாங்கிய  வீட்டிற்கான தவணைத் தொகையை செலுத்த முடியவில்லை. அத்துடன் வீட்டையும் புதுப்பிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். சொற்பமாய் ஓடிக் கொண்டிருக்கும் தறிகள் கூட அரசாங்கத்தின் இலவச வேட்டி சேலை சீருடைத் திட்டத்தை நம்பியே சோகமாய் சத்தமிடுகின்றன. இவர்களின் முனகல் சப்தமாகவே தறி ஓடும் ஓசையாக நமக்குக் கேட்கிறது.

இவ்வளவு சிறப்பும் பழமையும் கொண்ட கைத்தறி தொழில் நசிந்து – நெசவுத் தொழிலாளிகள் நாலாபுறமும் வேறு தொழில்களில் சிதறிக் கிடக்கின்றனர் என்பதை எண்ணும்போது மனம் கனக்கிறது.

Deutsch sense making and write my essay to http://essaydragon.com/ the solution of division problems involving remainders an examination of middle school students solution processes and their interpretations of solutions

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “நூலோடும் தறியில் நுட்பம் செய்யும் கைகள்”

அதிகம் படித்தது