மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

நேர்காணல் திரு.பெரியண்ணன் சந்திரசேகரன்

ஆச்சாரி

Feb 15, 2012

திரு. பெரியண்ணன் சந்திரசேகரன் சார்சியா (Georgia) மாநிலத்தின் அட்லாண்டா நகரில் குடும்பத்துடன் வாழ்ந்து வரும் தமிழறிஞர். இவருக்கு அவ்வை, கொற்றவை என்று இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் தொழில்நுட்பமும்,  மொழிநுட்பமும் ஒருங்கே பெற்றவர். தமிழ் இலக்கியத்தில் ஆழ்ந்த புலமை பெற்றவர். இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (IIT-Delhi) பி.டெக் மற்றும் எம்.டெக் படித்து, பின்பு டெக்சாசு ஏ & எம் (Texas A&M) பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளராகப் பணியாற்றியவர். தற்போது ஊவிலட் பேக்கர்டில் (Hewlett Packard) பணி புரிந்து வருகிறார். வட மொழியை அமெரிக்கப் பல்கலைகழகத்தில் முறையாகப் பயின்றவர். பல ஆண்டுகளுக்கு முன்பு தேவார இசை,  சேசகோபாலனின் கம்பராமாயண இசைப்பு ஆகியவற்றைக் கேட்டும்  வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (www.fetna.org) மாநாட்டுக்கு வந்திருந்த தமிழிசைப் பேரறிஞர் பேராசிரியர் வி.ப.க. சுந்தரம் அவர்களின் நூல்களைப் பயின்றும் தமிழிசையில் பெருத்த அளவில் ஈடுபடத்தொடங்கினார். சந்திரசேகரன் ஆய்வுநெறிப்படித் தமிழ்மொழி, வடமொழி, இலக்கியம், மொழியியல் ஆகியவற்றில் ஈடுபட உந்துதலாகவிருந்தவர் அமெரிக்காவில் வாழும் மற்றுமொரு தலைசிறந்த தமிழறிஞரும் இந்தியவியல் ஆய்வாளருமாகிய முனைவர் சுடலைமுத்துப் பழனியப்பன் அவர்கள்.

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை மாநாட்டில்  தமிழிசை  நிகழ்விற்கும், பல தமிழ்ச் சங்க விழாக்களுக்கும்   நல்ல தமிழிசைப்பாடல்கள் தேர்ந்தெடுப்பதில் சந்திரசேகரன் அவர்களின் உதவி மறக்க முடியாது. சந்திரசேகரன், பழனியப்பன் போன்ற அறிஞர்களின் ஊக்கத்தினால் இன்று பல அமெரிக்கத் தமிழர்கள் தம் குழந்தைகளை இசைப்பள்ளிகளுக்கு அனுப்பி வருகின்றனர். தமிழிசையில் அறிவுள்ள சந்திரசேகரன், பேரவை ஆண்டு மலர் அருவியிலும், தமிழ்ச் சங்க மலர்களிலும் தமிழிசையின் முக்கியத்துவத்தைக் குறித்து தொடர்ந்து கட்டுரைகள் எழுதிவருகிறார்.

அண்மையில் சந்திரசேகரன் அவர்கள் ஆர்வர்டு பல்கலைக்கழகத்தின் வடமொழிப் பேராசிரியரான  மைக்கல் விற்றுசல் (Prof. Michael Witzel – http://en.wikipedia.org/wiki/Michael_Witzel)   அவர்கள் தலைமையிலும் பின்லாந்தின் எல்சிங்கிப் பல்கலைக்கழகத்தின் வடமொழி/இந்தியவியல் பேராசிரியரான  அசுகோ பர்ப்போலா (http://www.helsinki.fi/~aparpola)   அவர்களும் மற்றும் பல வடமொழி அறிஞர்களின் துணையிலும் வெளிவந்து கொண்டிருக்கும் வேதவியற் பன்னாட்டு ஆய்விதழில் (Electronic Journal of Vedic Studies – http://www.ejvs.laurasianacademy.com) “ஒருபொருட் பன்மொழி என்னும் பழந்திராவிடச் சொல்லமைப்பு“(Pleonastic Compounding – An Ancient Dravidian Word Structure) என்கிற தலைப்பில் (http://www.laurasianacademy.com/pleonastic.pdf)   கட்டுரையொன்று வெளியிட்டுள்ளார்.

திராவிட மொழியியலார் இதுவரை திராவிடமொழிகளில் அடையாளம் கண்டிராத ஒருபொருட் பன்மொழி என்னும் சொல்லமைப்பை அறிவித்து மொழியியற்படி நிறுவுவதும், இருக்கு வேதத்தில் (Rig Veda)   வழங்கியுள்ள  பல அயல்மொழிச்சொற்கள் பழந்திராவிடச் சொற்கள் என்று சான்றுகளுடன் நிறுவப் புது மொழியியற் கருவியாக அந்தச் சொல்லமைப்பை அறிவிப்பதும் இக்கட்டுரையின் நோக்கமாகும். இக்கட்டுரையின் வாயிலாக வடமொழிச் சொற்கள் என்று பலரால் கருதினவை பழந்திராவிடச் சொற்கள் என்றும் மேலும் அவற்றைக்கொண்டு சிந்துவெளிநாகரிகத்தினர் திராவிடமொழியினரா என்பதை உணரவும் புதியமொழியியல் நெறி கிட்டியுள்ளது. எடுத்துக்காட்டாக  இக்கட்டுரையில் பகுதி 6.7 பக்கம் 39-ல் “கல்யாணம்/கல்யாணி” என்பது பழந்திராவிடச் சொல்லே என்றும் அதனைக் கல், யாணம் என்று இரண்டுசொற்களாகப் பகுக்கவேண்டும் என்றும் அவையிரண்டுமே செழிப்பு என்று பொருள்படும் திராவிடச்சொற்கள் என்றும் சங்க இலக்கியங்களில் கலி கொள் யாணர் என்ற சொற்றொடரில் அவை புதைந்து வழங்கியுள்ளதையும் சான்றுகளுடன் காட்டியுள்ளார். இவரது இந்த ஆய்வுக்கட்டுரைக்குப் பின் வேதக்காலத்தில் வழங்கிய   பலசொற்கள் பழந்திராவிடச் சொற்களே என்பது அறியப்படுகிறது . மேலும் பல அறிஞர்கள் இம்முறையைப் பின்பற்றி ஆய்வைத் தொடர்வார்கள் என்று நம்புவோம்.

சிறகு இதழுக்காக சந்திரசேகரன் அவர்களை அவரது இல்லத்தில் ஊசுடன் (Houston) நகரில் வாழ்ந்துவரும் கணினித் தொழிலதிபர் திரு. கரு. மலர்ச்செல்வன் அவர்கள் சந்தித்து நேர்காணல் கண்டார். இதை மிகுந்த அக்கறையுடனும், அருமையாகவும் ஒளிப்பதிவு செய்தவர் அட்லாண்டாவில் வாழ்ந்துவரும் நண்பர் திரு. நடராசன் குமரேசன் அவர்கள். இருவருக்கும் சிறகு இதழ் சார்பாக நன்றி கூறுகிறோம்.

எழுத்து வடிவத்தில் வாசிக்க பக்கத்தின் கீழே செல்லுங்கள்.
பகுதி 1


பகுதி 2


பகுதி 3


பகுதி 4


பகுதி 5


பகுதி 6


பகுதி 7

சிறகு- உங்கள் வீட்டில் அழகிய இலக்கியப் பூஞ்சோலை போல பல இலக்கியப் புத்தகங்கள்  இருக்கின்றன. இலக்கியம் படிப்பதற்கு ஆர்வம், பற்றுக்கு காரணம் என்ன?

பெரியண்ணன் சந்திரசேகரன்-  தமிழ் இலக்கிய ஈடுபாட்டிற்கு முதல் காரணம் என் தந்தையார் திரு.பெரியண்ணன் அவர்கள். அவர்தான் என்னுடைய இளம் வயதில் பாரதியார் பாடல்கள் போன்றவற்றை ஓசை நயத்தோடு திருத்தமான முறையில் பாடுவார். திருக்குறளை அன்றாடம் மனப்பாடம் செய்வார். என்னைத் திட்டும்போது கூட திருக்குறளை சொல்லித்தான் திட்டுவார். ஆகவே அவர் முதல் காரணம். பிறகு தொடக்கப் பள்ளியிலும் சரி இடைநிலை உயர்நிலைப் பள்ளியிலும் நல்ல கருத்தான செம்மையான தமிழ் ஆசிரியர்கள் அமைந்தார்கள். உயர்நிலைப் பள்ளியில் மறைந்த  திரு.தில்லைக் கோவிந்தன் அவர்கள் எனக்கு ஆசிரியராக வாய்த்தது பெரும் பேறு. அவர் மிகவும் கருத்தோடும் அக்கறையோடு செய்யுள்களை சொல்வார். பாடத்தில் இல்லாத செய்யுள்களைக் கூட சொல்லுவார். உ.வே.சாமிநாத அய்யர் போன்றவர்கள் தங்கள் நூல்களிலே சொல்லியுள்ள நுணுக்கமான செய்திகளை சொல்லுவார். அந்த சிறிய வயதில் அப்படிப்பட்ட புத்தகங்களைப் பயின்றது போன்ற அறிவை ஊட்டினார்.

சிறகு- தமிழ் இலக்கியத்தை சிறிய வயதில் படிக்க ஆரம்பித்தீர்களா? எப்போது படிக்க ஆரம்பித்தீர்கள்?

பெரியண்ணன் சந்திரசேகரன்- நான் ஒன்பதாவது படிக்கும்போதே தமிழ் இலக்கணத்தில் தொழில் பெயர்களை எப்படிப் படைப்பது அதாவது வினைச் சொற்கள் என்றால் தொழில் பெயர்கள் இருபது முப்பது விகுதிகள் இருக்கும். வருதல் போதல் இப்படி. கட் என்றால் கட்டடம் இப்படியெல்லாம் இருக்கும். அதுவெல்லாம் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. விகுதிகளை சீராகச்  சேர்த்தால் சொற்களை உருவாக்க முடியும் என்பது. அதை என்னால் மறக்கவே முடியாது. அடுத்து யாப்பிலக்கணம் எனக்கு மிகவும் பிடிக்கும். பாடம் பயிற்றுவிக்கும் முன்பே ஆர்வமாக நானே பயின்றுவிட்டேன். பிறகு புறநானூறு போன்றவற்றை நானே பயின்றேன். பள்ளி முடிந்த பிறகும், பொறியியல் படிக்கும்போதும் பணிபுரியும்போதும் இடையில் விட்டுவிட்டேன். 15 ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் தொடங்கினேன். அதற்கு முக்கியமான காரணம் தி.ந. சேசகோபன் கம்ப ராமாயணத்தை தமிழிசையில் பாடியத்தைக் கொடுத்தார். தேவாரமும் திருவாசகமும் கொடுத்தார். அதைக் கேட்டவுடன் கம்பராமாயணம், தேவாரம் போன்றவற்றை படிக்கத் தொடங்கினேன். திருமுருகனாற்றுப்படையை முழுதும் மனப்பாடம் செய்தேன்.புறநானூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை போன்றவற்றை படித்துள்ளேன். சங்க இலக்கியத்தின் சொற்கள் உள்ளத்திற்கு இதம் அளிக்கக் கூடியவை அதன் ஓசை நயம் அப்படியிருக்கும்.

சிறகு- சங்க இலக்கியத்தைத் தவிர நீங்கள் வடமொழியையும் கற்றுள்ளீர்கள் என்று அறிகிறோம். எதற்காக வடமொழி கற்றீர்கள்?

பெரியண்ணன் சந்திரசேகரன்- 1999இல் ஒரு பெரிய ஆராய்ச்சி நூல் வெளிவந்தது. ஆர்வர்டு பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் மைக்கேல் விட்சல் அவர்கள் சமசுகிருதத்தில் வேதியலில் பெரிய நிபுணர். அவர் மூன்று நான்கு கட்டுரை வெளியிட்டிருந்தார். சிந்து சமவெளி நாகரிகங்களின் மொழியை அடையாளம் கண்டுகொள்வது எப்படி என்பது பற்றியவை. அவர், சிந்துசமவெளி நாகரிகத்தின் முத்திரைகளை- இதுவரை எல்லோரும் ஆராய்ந்தும் இறுதியாக பலரும் ஏற்றுக்கொள்ளுமாறு சமசுகிருத பாடல்களில் காணப்படும் சில சொற்கள் – சிந்து சமவெளி நாகரிகம் முடிந்த பொது அந்த மக்கள் வேறு ஒரு மொழியிலிருந்து கடன் வாங்கியிருக்க வேண்டும். ஆகவே அந்த அயற்சொற்கள் எந்த மொழியிலிருந்து வந்தது என்றால் முண்டா மொழி குடும்பத்தின் முந்தைய நிலையாகிய துணை முண்டா என்ற மொழிக் குடும்பமாக இருக்கலாம் என்று உறுதியாகச் சொல்லியிருந்தார். அதுவரை தமிழர்கள் பலரும், ஐராவதம் மகாதேவன், அஸ்கோ பர்போலோ போன்றவர்கள் அறுதியாகச் சொல்லியதுபோல திராவிட மொழியாகத்தான் இருக்கும் என்று நம்பியிருந்தவர்களுக்கு பெரிய திகைப்பாக இருந்தது. முண்டா என்ற சொல் கேள்விப்படாத பெயராக இருக்கிறதே என்று எனக்கும் திகைப்பாக இருந்தது. இணையத்தில் தேடிப்பார்த்து –திராவிட மொழியாக இருக்கலாம் என்று சொல்லி இருப்பவைகளை எல்லாம் திரும்பத் திரும்பப் படித்தேன்.

அந்த சமயத்தில் பேராசிரியர் மைக்கேல் விட்சலின் கட்டுரைகள் வெளிவந்தன. திராவிட மொழியாக இருப்பதற்கு வாய்ப்பில்லை. திராவிடர்கள், சிந்துசமவெளி நாகரிகம் முடிந்த பிறகுதான் திராவிடர்கள் இந்தியத் துணைக் கண்டத்தில் நுழைந்தார்கள் என்று கூறுகிறார். எனக்கு வியப்பாக இருந்தது. ரிக் வேதத்தில் வரும் சொற்களைப் பற்றியெல்லாம் சொல்லி இருந்தார். மொழியியல் தொடர்பான கருத்துகள், ஆய்வு நெறிகள் போன்றவைகள் அதில் இருந்தன. ஆகவே சமசுகிருதத்தைப் பயில வேண்டும். ஆராய்ச்சிக்கு உகந்த தேர்ச்சியோடு பயிலவேண்டும் என்று முடிவு செய்தேன். அப்படித்தான் சமசுகிருதம் பயின்றேன்.

சிறகு – யாரிடம், எந்த ஆண்டிலிருந்து வடமொழியைக் கற்றீர்கள்?

பெரியண்ணன் சந்திரசேகரன்-  2001 ஆம் ஆண்டு தொடங்கினேன். அட்லாண்டாவில் எமரி பல்கலைக் கழகத்தில் ஜெர்மானிய வடமொழி விரிவுரையாளரிடம் கற்றுக் கொண்டேன். அவரிடம் பயிலும்போது ஒரு சுவையான சம்பவம் நடந்தது, அவர் சொன்னார், தமிழ் மொழியைப் பற்றிக் கேள்விப்பட்டேன். வியப்பாக இருந்தது. நீங்களெல்லாம் பள்ளிக்கூடத்தில் படிக்கும்போதே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட செவ்விலக்கியங்கள் எல்லாம் உங்களுக்கு படமாக வைக்கப்பட்டது என்று. அவ்வளவு பெரிய இலக்கியங்களை எல்லாம் நீங்கள் நேரிடையாக பயில முடிகிறது என்று சொன்னார். செர்மன் மொழியை ஒப்பிட்டு நானூறு ஐநூறு வருடங்களுக்கு முன்பு செர்மன் மொழி ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வது போல கிடையாது. மார்டின் லூதர் கிங் விவிலியத்தை மொழிபெயர்த்த பிறகுதான் குறிப்பிட்ட கிளை மொழி அமைந்தது. ஆனால் நீங்கள் இரண்டாயிரம் ஆண்டு இலக்கியங்களை பள்ளிக்கூடத்திலேயே பயிலுகிறீர்கள் என்றார். அதைக் கேட்கும்போது எனக்குப் பெருமையாக இருந்தது. பயமாகவும் இருந்தது.

சிறகு- வடமொழியை ஆரம்ப நிலையில் கற்றீர்களா? ஆழமாகக் கற்றீர்களா?

பெரியண்ணன் சந்திரசேகரன்- வடமொழியில் இரண்டு கட்டங்கள் உண்டு. செவ்விய வடமொழி, காவிய வடமொழி என்று. ராமாயணம், மகாபாரதம் மொழிகளுக்கு முற்பட்டது ரிக் வேத மொழி. அதைப் படிப்பது மிகவும் கடினம். அதைப் படித்தேன். ( ரிக் வேதம் நூலை எடுத்து ஒரு பக்கத்தைப் படித்துக் காண்பிக்கிறார்.)

சிறகு- வடமொழி பயின்ற பின், தமிழ் மொழியின் மீதான பார்வை மாறியிருக்கிறதா?

பெரியண்ணன் சந்திரசேகரன்-  தமிழ் மொழியின் மேல் இன்னும் மதிப்பு கூடியிருக்கிறது. உதாரணத்திற்கு ‘செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்’ அவ்வையார் பாடல்கள் போன்ற இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதை இன்றைக்கும் பள்ளிக்கூட மாணவர்கள் சரளமாகப் பயிலும் அளவிற்கு இருப்பது வியப்புக்குரியது. பலபேர் சொல்லலாம் – சங்க இலக்கியம் புரியவில்லை என்று. சங்கப் பாடல்களில் பெயர்ச் சொற்கள், வினைச் சொற்கள் மாறியிருக்குமே தவிர மற்றவை அப்படியே இருக்கும். திருக்குறள் ஏறக்குறைய இராமாயணம் காலத்திற்கு ஈடானது. அந்தத் திருக்குறளில் சிலவற்றைத்தான் புரியவில்லை என்று சொல்லலாம். ஆனால் இந்தி மக்களிடம் பகவத் கீதையைக் காட்டி ஏதாவது ஒரு தொடராவது புரிகிறதா என்று கேளுங்கள். எதுவும் புரியவில்லை என்று சொல்வார்கள். மலைபடுகடாம் என்பது பத்துப் பாட்டு வரிசையில் வருவது. அதில் ஒரு தொடர் வருகிறது- ‘சொல்லிக் காட்டி சோர்வின்றி விளக்கி’ என்பதுதான் அது. இது எல்லோருக்கும் புரியும். இதைப்போல பகவத் கீதையில் நீங்கள் பார்க்க முடியாது.

சிறகு- நீங்கள் ஆராய்ச்சிக் கட்டுரை எழுதியிருப்பதாக அறிந்தோம். அது என்ன ஆராய்ச்சிக் கட்டுரை என்பதைப் பற்றி?

பெரியண்ணன் சந்திரசேகரன்- ‘ஒருபொருள் பன்மொழி என்கின்ற பண்டைத்  திராவிடச் சொல் அமைப்பு’ என்ற தலைப்புள்ள கட்டுரை அது. ஆர்வர்டு பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் மைக்கேல் விட்சல் அவர்கள் நடத்துகின்ற ஆய்வுப் பணுவல். இதில் வேதம் தொடர்பான ஆராய்ச்சிகளை வைத்துக்கொண்டு இந்தியத் துணைக் கண்டத்தில் பண்டைய நாகரிக மக்கள் அவர்களின் மொழிகள் ஆகியவைப் பற்றி ஆராய்ந்துள்ளோம். தொன்றுதொட்டு வழங்கியிருக்கின்ற திராவிட சொல் அமைப்பை, மொழியியல் ஆய்வாளர்கள் இதுவரைக் கண்டிராத அமைப்பை இந்தக் கட்டுரையில் சொல்லியிருக்கிறோம். ஒருபொருள் பன்மொழி என்ற கூட்டுத் தொடர். அதாவது ஒரே பொருளில் பல சொற்கள், உதாரணமாக- வழித்தடம் என்ற சொல். தடம் என்றாலே வழிதான். ஆனால் வழி, தடம் இரண்டையும் சேர்த்து வழித்தடம் என்று சொல்கிறோம். இது தமிழர்கள் மட்டுமே உருவாக்கிய அமைப்பு கிடையாது, 20,23 தொல் திராவிட மொழிகள் பேசப்பட்டன. அவையெல்லாம் ஒரே மொழியாக வழங்கிய தொல் திராவிடம் என்ற மொழி ஏறக்குறைய ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய ஒற்றை மொழி. சங்க இலக்கியத்தில் இன நிறை என்ற சொல் அடிக்கடி வரும். நிறை என்றால் கூட்டம். இனம் என்றாலும் கூட்டம்தான். அதையெல்லாம் இக்கட்டுரை சொல்கிறது. இந்த ஆராய்ச்சிக் கட்டுரையால் இரண்டு பயன்கள். ஒன்று- தமிழ் மொழியிலேயே பல சொற்கள் புதிரான அமைப்பு உடையவை. அவற்றை எல்லாம் இதை வைத்துக்கொண்டு விளக்க முடியும். இன்னொன்று சிந்து சமவெளி மொழி திராவிட மொழியாக இருந்தது என்பதை நிறுவுவதற்கு இது துணைக் கருவியாக இருக்கும்.

தமிழ் மொழில் தகப்பன் என்ற சொல் உண்டு. தகப்பன் என்றால் தந்தை என்று பொருள். இது எல்லோருக்கும் தெரியும். அப்பன் என்று முடிவதால் தந்தை என்று. ஆனால் முற்பகுதி ‘தகு’ என்று வருகிறது. தகு என்றால் தகுதி என்று நினைக்கலாம்.  ஆனால் ஆந்திராவின் வடக்குப் பகுதியில் பேசப்பட்ட போலாமி, நைடிடின் போன்ற மொழிகள். அவற்றில் ‘தாக்’ என்ற சொல்லுக்கு அப்பன் என்று பொருள். அப்பன் என்றால் பெரியவன் என்று பொருள். இந்த ‘தக்’ என்ற சொல்லும்  ‘அப்பன்’ என்ற சொல்லும் சேர்ந்து தகப்பன் என்று நாம் கொண்டுவந்துவிட்டோம். இதுபோல பலவற்றைக் காணலாம். அடுத்தது வேதங்களில் ‘கல்யாணி’ என்ற சொல் வழங்கப்படுகிறது. நாக்கை மடக்கிச் சொல்லும் ‘ன’கரம் போன்றவை சமசுகிருதத்தின் மூலத்தில் கிடையாது. இந்தியத் துணைக் கண்டத்தின் தொடர்பால் ஏற்பட்டது. ‘கல்யாணி’ என்பது திராவிட ஒருபொருள் பன்மொழி. அதாவது ஒரு பொருளில் இரண்டு சொற்கள் அமைந்துள்ளது. ‘கல்’ என்றால் நல்ல என்று பொருள், ‘யாண’ என்றாலும் செழிப்பான என்ற மிகுதி. இங்கு சங்க இலக்கியத்தின் சிறப்பைப் பற்றிச் சொல்ல வேண்டும். அது பழைய மொழி மரபுகளைப் போற்றியுள்ளது. புறநானூற்றில் ‘கலிகொள் யான வென்னிப்பரந்தல்’ என்ற சொற்றொடர் வருகிறது. வென்னிப்பரந்தல் என்பது பெருஞ்சேரலாதனுக்கும் கரிகால் வளவனுக்கும் போர் நடந்த இடம். அந்த ஊரின் செழிப்பைப் பற்றிச் சொல்லும்போது- யான என்றால் செழிப்பு, களி என்றால் செழிப்பு –ஆக செழிப்புகொண்ட வென்னிப்பரந்தல் என்ற ஊர் எனச் சொல்கிறது. இந்த களி, யான போன்ற சொற்கள் சங்க இலக்கியத்தில் பல இடங்களில் வருகிறது. ஆரியர்கள் ரிக் வேதத்தைப் பாடியதற்கு முன்பே இந்தச் சொற்கள் இருந்திருக்கின்றன.

சிறகு- இப்படிப்பட்ட கட்டுரையை வெளியிட்டதற்கு வாழ்த்துக்கள். இந்தக் கட்டுரையின் அடுத்தகட்டமாக நீங்கள் என்ன ஆராய்ச்சி செய்ய விரும்புகிறீர்கள்?

பெரியண்ணன் சந்திரசேகரன்- இந்தக் கட்டுரையை ஒரு கருவியாக வைத்துக்கொண்டு இரண்டு புறங்களிலும் ஆராய்ச்சி செய்ய வேண்டும். பண்டைத் தமிழ்ச் சொற்கள் பல உள்ளன. அவையெல்லாம் சிக்கலான அமைப்புக் கொண்டவை. அந்த அமைப்பை விளக்குவதற்கு இந்தக் கட்டுரை ஒரு கருவி. இந்தக் கட்டுரையின் முக்கிய நோக்கமே வடமேற்கு இந்தியத் துணைக் கண்டத்தில் சிந்து சமவெளி நாகரிகத்தின் மொழிகளை ஆராய்வதற்கு உதவுவதாகும்.

சிறகு- பொதுவாக மேலைநாட்டுப் பல்கலைக் கழகங்களில் தெற்கு ஆசிய ஆய்வுகள் நிறைய நடக்கின்றன. மேலை நாட்டுத் தமிழ் ஆராய்ச்சிக்கும் தமிழகத்தில் உள்ள பல்கலைக் கழகங்களின் ஆராய்ச்சிக்கும் வேறுபாடு உண்டா?

பெரியண்ணன் சந்திரசேகரன்- மேலை நாட்டு ஆராய்ச்சி என்று சொல்வதைவிட பொதுவாக மொழியியல் ஆராய்ச்சி என்று சொல்லலாம். மேலைநாட்டு ஆராய்ச்சி முறை- கண்கூடான சான்றுகளை வைத்துக்கொண்டு ஐயப்பாட்டுக்கு விஞ்சி என்ன முடிவு காண முடியுமோ அதை வைத்துக்கொண்டு செய்வார்கள். ஆனால் தமிழ்ச் சமுதாய ஆராய்ச்சியில் உள்ள கோளாறு என்னவென்றால்- இதுதான் மொழி மூலம் இதுதான் தமிழ் மொழி தொடர்பானது என்று நினைத்துக் கொள்வது. தமிழ் மொழியின் வியக்கத்தக்க சிறப்புகள் எல்லோருமே ஏற்றுக்கொள்வது போல மிக உயந்தவற்றைக் காட்டுகிறது.

சிறகு- அகராதிக்கும் நிகண்டுக்கும் என்ன வேறுபாடு?

பெரியண்ணன் சந்திரசேகரன்- இரண்டுக்கும் வேறுபாடு உண்டு. நிகண்டு பழைய அகராதிபோல, அகராதி ஐரோப்பியர்கள் கண்டுபிடிப்பு. அகராதி என்பது அந்தந்த மொழியின் வரிசையின்படி அமைந்துள்ளது. நிகண்டு என்பது ஒரே பொருளில் அமைந்த பல சொற்களைத் திரட்டிச் சொல்லும். ஒரு சொல்லுக்கு பல பொருள்கள் என்ன என்று விளக்கும்.

சிறகு- இதற்கு உதாரணமாக என்ன நிகண்டுகள் உள்ளன?

பெரியண்ணன் சந்திரசேகரன்- மிகப் பழமையான பிங்கலந்தை, திவாகரம். என்னிடம் பல காலகட்டத்தைச் சேர்ந்த பல நிகண்டுகள் உள்ளன. நிகண்டு ஒரு சொல்லுக்கு பல பொருள்கள், ஒரு பொருளுக்கு பல சொற்கள் இவைகளைக் கண்டவை. உதாரணமாக இடம் என்ற பொருளில் பல சொற்கள் உள்ளன. (பிங்கலந்தை நிகண்டில் இருப்பதைப் படித்துக் காட்டுகிறார்.) இலக்கியம் படிப்பதற்கும் புதுச் சொற்கள் பற்றி தெரிந்துகொள்வதற்கும் நிகண்டு பயன்படும்.

சிறகு- இலக்கியம் படிப்பதால் இளைஞர்களுக்கு என்ன பயன்?

பெரியண்ணன் சந்திரசேகரன் இலக்கியம் பன்முகப் பயன்கொண்டது. மற்ற இலக்கியங்களை விடவும் நமது இலக்கியங்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டி. திருக்குறள், சங்க இலக்கியங்கள். சங்க இலக்கியத்தில் அகப் பாடல்கள் எல்லாம் அன்பு போன்ற உயர்ந்த கருத்துக்களை சொல்கிறது. புறநானூறு நட்பு, அரசாட்சி போன்ற பலவற்றை சொல்கிறது. சமுதாயத்தில் உள்ள குறைகளை சாதி வேறுபாடு போன்றவற்றை போக்க உதவுகின்றன. இலக்கியங்களை படிக்கும்போது இன்று போல அன்று சாதி வேறுபாடுகள் இல்லை என்பது தெரிகிறது.

சிறகு- இளைஞர்களுக்கு, சங்க இலக்கியத்தில் நுண்ணிய காதல் பற்றி சொல்ல முடியுமா?

பெரியண்ணன் சந்திரசேகரன்- பலரும் திருக்குறள் காமத்துப் பால் பற்றி, ஏதோ தலைவன் தலைவி என்று ஒரு சுவை இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். சங்க இலக்கியத்தில் தலைவன் தலைவிக்கு என்று இலக்கணம் இருக்கிறது. ‘உயிரினும் சிறந்தன்று நாணே’என்று தொல்காப்பியம் சொல்கிறது. உயிரை விட நாணம் சிறந்தது, நாணினும் சிறந்தது கற்பு என்று தொல்காப்பியம் சொல்கிறது. தலைவனுக்கு உண்டான இலக்கணத்தை – பெண்களை வற்புறுத்தக் கூடாது என்று தொல்காப்பியம் சொல்கிறது. இப்படி உயர்ந்த நெறிகளைக் காட்டுகிறது.

சிறகு- இன்றைய இளைஞர்கள் உலகம் முழுக்க பல்வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டிய சூழலில் இலக்கியம் படிக்க வேண்டும் என்றால், இவ்வளவு நூல்களை வாங்குவது என்பது சிரமமானது. இலக்கியம் படிக்க இணையத்தில் என்னென்ன வாய்ப்புகள் உள்ளன?

பெரியண்ணன் சந்திரசேகரன்- இணையத்தில் இல்லாததே இல்லை. சங்க இலக்கியத்தை அவற்றின் உரைகளுடன் தமிழ் இணையப் பல்கலைக் கழகம் வைத்துள்ளது. www.tamilvu.org என்ற இணையத்தில் இவையெல்லாம் இருக்கின்றன. காப்புரிமை நீங்கிய நூல்களும் இணையத்தில் உள்ளன. இப்போது மடி கணினியில் ஒரு பெரிய நூலகத்தையே கொண்டு செல்லலாம். உண்மையான ஆர்வமும் உறுதியும் இருந்தால் போதும். அன்றாடம் கொஞ்சம் கொஞ்சமாக படித்துக் கொண்டிருந்தால்… ஓராண்டு இரண்டாண்டு பிறகு பத்து ஆண்டு கழித்துப் பார்த்தால் நமக்கே வியப்பாக இருக்கும்.

சிறகு- இளைஞர்கள் இலக்கியம் படிக்கும்போது சில சொற்கள் வழக்கில் இல்லை என்றால் அதைத் தெரிந்துகொள்வது எப்படி?

பெரியண்ணன் சந்திரசேகரன்- தமிழ் லெக்சிகன் என்ற அகராதி ஏழு தொகுதிகள் உள்ளன. இதை சென்னைப் பல்கலைக் கழகம் வையாபுரிப் பிள்ளை அவர்களின் தலைமையில் 1935 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது. இதில் லட்சக்கணக்கான சொற்கள் உள்ளன. இந்த ஏழு தொகுதிகளும் இணையத்தில் உள்ளன. (பார்க்க-  university of madras- tamil lexicon) ஒரு சொல்லுக்கு பல பொருள்கள் இருக்கும். நாம் கேள்விப்பட்ட சொல்லுக்கு நாம் எதிர்பாராத பொருள்களும் உண்டு.

சிறகு- தமிழிசைப் பாடல்களில் உங்களுக்கு நிறைய ஆர்வமும் பற்றும் இருக்கிறது என்று அறிந்தோம்.அதைப் பற்றி?

பெரியண்ணன் சந்திரசேகரன்- இசையின் அருமையை பயனை உணர்ந்து நான் ஈடுபட்டு வருகிறேன். பண்ணிசை நமக்கு இன்பத்தைத் தருபவை. இசை தானாகவே மொழியையும் உயர்த்துகிறது. ஆபேரி என்று ஒரு ராகம். ‘கங்கைக்கரைத் தோட்டம்’ ‘சிங்காரவேலனே தேவா’  போன்ற பழைய திரைப்படப் பாடல்கள் இந்த ராகத்தில்தான் பாடப்பட்டவை. இந்தப் பாடல்களைக் கேட்டால் ஒரு இனம்புரியாத இன்பம் உண்டாகும். இப்போது இசையும் கொச்சையாகி மொழியும் கொச்சையாகிவிட்டது. நந்தனார் பாடல்களை கோபாலகிருட்டின பாரதியார் தமிழிசையின் மிகச் சிறந்த கீர்த்தனை பாடியவர். இறைவனைப் பாடினாலும் காதலைப் பாடினாலும் தமிழிசையில் வெவ்வேறு சுவைகள் தோன்றும்.

சிறகு- கர்னாடக இசையின் மூலத்தைப் பற்றிச் சொல்லுங்களேன்…..

பெரியண்ணன் சந்திரசேகரன்- அடிப்படை என்னவென்றால் பெயர்கள் மாறியுள்ளன. பாணிகள் மாறியுள்ளன. அடிப்படை இசை ஒன்றுதான். வீ.ப.க.சுந்தரம் முத்தமிழ் அறிஞர். ‘தொல்காப்பியத்தில் இசைக் குறிப்புகள்’ என்ற நூலை எழுதியுள்ளார். இந்த நூல் என் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியது. செம்பாலை என்ற ராகம் இப்போது அறிகாம்போதி என்று கூறப்படுகிறது. படுமலைப்பாலை என்பது நடபைரவி என்றும் கோடிப்பாலை கரகரப்பிரியா என்றும் இப்போது வழங்கப்படுகிறது. என்று அந்த நூலில் அவர் கூறுகிறார். அடிப்படைப் பண்ணிசை ஒன்றுதான் பாணிதான் மாறியிருக்கிறது.

சிறகு- கர்னாடக இசை மேடைகளில் போற்றப்படுகின்ற தியாகய்யர், சியாமா சாஸ்திரி, முத்துசாமி தீட்சிதர் இந்த மூவருக்கு முன்னால் வாழ்ந்த இசை அறிஞர்களைப் பற்றி சொல்ல முடியுமா?

பெரியண்ணன் சந்திரசேகரன்- ஊத்துக்காடு வெங்கட சுப்பைய்யர், சீர்காழி மூவரான மாரிமுத்தாப்பிள்ளை, முத்துத் தாண்டவர், அருணாசலக் கவிராயர் போன்றவர்கள். கோபால கிருட்டின பாரதியாரின் கீர்த்தனைகள் மிக உயர்ந்த கீர்த்தனைகள். இவர்கள் எல்லாம் கர்னாடக இசை மூவருக்கு முன்பு இருந்தவர்கள். கர்னாடக இசை மூவரைப் பற்றி ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தால் அவர்களின் மேடைகளில் மிகவும் உயர்த்தி சொல்லப்பட்டவர்கள். அவ்வளவுதான்.

சிறகு- தமிழிசையை இளைஞர்கள் பழக வேண்டும், படிக்க வேண்டும் என்றால் அவர்கள் என்ன செய்ய வேண்டும்?

பெரியண்ணன் சந்திரசேகரன்- முதலில் இசையின் மீது ஆர்வம் வர வேண்டும். ராகம் தெரிந்திருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. இசையில் தனி மனிதனுக்கு இன்பம் இருக்கிறது. என்ன பாடுகிறார்கள் என்பதைப் பார்க்காமல் எப்படி பாடுகிறார்கள் என்று கவனிக்க வேண்டும்.  சோகமாக இருக்கும்போது ரஞ்சனி ராகத்தில் பாடல் கேட்டால் வேதனை போய்விடும். முகாரி ராகம் சோகமானது அல்ல. வருத்தத்தைப் போக்குவது.

சிறகு- புலம் பெயர்ந்த தமிழர்கள் குறிப்பாக அமெரிக்காவில் தமிழ்ச் சங்கங்கள் உருவாகி இலக்கியக் குழுக்கள் தோன்றி இருக்கின்றன. வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை  (பெட்னா) போன்ற தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்புகள் தமிழை சிறக்க வைக்க வேண்டும் என்றால் அவர்கள் என்னென்ன செய்ய வேண்டும்?

பெரியண்ணன் சந்திரசேகரன்- பல பணிகளுக்கு இடையே பல தமிழ் அறிஞர்களை எல்லாம் அழைத்து வந்து மாநாடு கருத்தரங்கு போன்றவற்றை நடத்துகிறார்கள். நல்ல முயற்சிதான். தமிழ் என்பதை வெறும் மொழி என்று நினைத்துக் கொள்ளாமல்- அது அரும்பெரும் சொத்து- தமிழ் பண்பாட்டை அன்றாட வாழ்க்கையாக வாழவேண்டும். தமிழ் மிகப் பழமை வாய்ந்தது, அதன் பெருமைகளை மட்டும் பேசிக்கொண்டிருக்காமல் வாழ்க்கையில் காட்ட வேண்டும்.

சிறகு- தமிழர் அடையாளம் என்று பார்த்தால் அதன் முக்கியக் கூறுகள் என்ன? புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு இந்தக் குழப்பம் உண்டு. அதனால் அதைப் பற்றி?

பெரியண்ணன் சந்திரசேகரன்- நாம் தமிழ்ப் பண்பாட்டில் ஈடுபட்டிருப்பதால் அது எதற்கும் முரணானது கிடையாது. என்னிடம் சிலபேர் கேட்பார்கள், ஏன் தமிழ்நாட்டுக்குப் போகவில்லையா? என்று.  நமக்கு இரண்டு வகையான நாட்டுத்தன்மை உண்டு. பண்பாட்டின்படி பார்த்தால் தமிழ் நாடு. அரசியலின்படி நாம் அமெரிக்கன். இரண்டுக்கும் முரண்பாடு கிடையாது. திருக்குறள் உலகப் பொதுவானது. ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று சொல்லி இருக்கிறது. அறத்தை சொல்லி இருக்கிறது. இகல் என்பது முக்கியமான அதிகாரம். வேறுபாட்டினால் ஏற்படுகின்ற பகையைத் தடுப்பது எப்படி என்று கூறுகிறது. இப்படிப்பட்ட திருக்குறளை அடையாளமாக வைத்துக்கொண்டு நாம் வாழும்போது உலகத்தில் எங்கு போனாலும் முரண் இன்றி தமிழனாகவும் இருக்கலாம், அமெரிக்கனாகவும் இருக்கலாம் ஜெர்மனியனாகவும் இருக்கலாம், மலேசியனாகவும் இருக்கலாம்.

(தமது இல்லத்தில் இருக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலக்கிய நூல்களைப் பற்றிக் கூறுகிறார். காணொளியில் காண்க)

சிறகு- மிக்க நன்றி. உங்கள் நேரத்தை செலவிட்டு பல அரிய தகவல்களை எங்களுடன் பகிர்ந்துகொண்டீர்கள். ஒரு வேண்டுகோள்- இவ்வளவு புத்தகங்களை உங்கள் வீட்டில் வைத்துள்ளீர்கள். இவையெல்லாம் உலகத் தமிழர்களுக்குப் பயன்தரும்படி நவீன கருவிகள் மூலம் நல்ல சமுதாயத்தை உருவாக்க இளைஞர்கள் சார்பாக –கலிபோர்னியா இளந்தமிழரணி சார்பாகவும் வேண்டுகிறோம்.

பெரியண்ணன் சந்திரசேகரன்- என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்- என்னைத் தேடி இங்கு வந்து கருத்துகளைத் தெரிவிக்க உதவியதற்காக. உங்களின் வேண்டுகோளின்படி தமிழ்ச் சமுதாயத்திற்கு நல்லது செய்ய முயல்வேன். நீங்களும் அதற்கு உதவ வேண்டும். நாம் எல்லோரும் இணையான மக்கள். இன்னும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தமிழ்ப் பண்பாடு, உலகத்தார் இன்புறுமாறு தாமும் இன்புற்று வாழ எல்லோரும் ஒன்றாக நடந்து வெற்றி பெறுவோம்.

Were the means they used inadequate to carry out https://pro-essay-writer.com their intentions

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

5 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “நேர்காணல் திரு.பெரியண்ணன் சந்திரசேகரன்”
  1. Nakkeeran says:

    இசை என்றால் கர்நாடக இசை என்றும் கர்நாடக இசை என்றால் தெலுங்கு இசை என்றும் எண்ணுவோரே தமிழ் சமுதாயத்தில் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். இசை மேடை ஆகட்டும், தொலைக் காட்சி போன்ற ஊடகங்கள் ஆகட்டும் அதில் பாடும் பாடகர்கள் தெலுங்கு கீர்த்தனைகளே பாடுகிறார்கள். கேட்டால் தமிழில் போதிய கீர்த்தனைகள் இல்லை என்கிறார்கள். அதாவது மகாகவி பாரதியார் காலத்து நிலைமையே இன்றும் தொடருக்கிறது. நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பாரதியார் தமிழிசை பற்றி பின்வருமாறு கூறுகிறார்.
    “முத்துசாமி தீக்ஷிதர், தியாகையர், பட்டணம் சுப்பிரமணிய அய்யர் முதலியவர்களின் கீர்த்தனங்களிலே சிலவற்றை அதிக ஸங்கதிகளுடன் பாடுவோரே ‘முதல்தர வித்துவான்’. இந்தக் கீர்த்தனங்களெல்லாம் ஸம்ஸ்கிருதம் அல்லது தெலுங்கு பாஷையில் இருக்கின்றன. ஆகவே, முக்காலே மும்மாகாணி ‘வித்வான்’களுக்கு இந்தக் கீர்த்தனங்களின் அர்த்தம் தெரியாது. எழுத்துக்களையும் பதங்களையும் கொலை செய்தும், விழுங்கியும் பாடுகிறார்கள். அர்த்தமே தெரியாதவனுக்கு ‘ரஸம்’ தெரிய நியாயம் இல்லை.

    நானும் பிறந்தது முதல் இன்றுவரை பார்த்துக் கொண்டே வருகிறேன். பாட்டுக் கச்சேரி தொடங்குகிறது. வித்வான் ‘வாதாபி கணபதிம்’ என்று ஆரம்பஞ் செய்கிறார். ‘ராமநீ ஸமான மெவரு’, ‘மரியாத காதுரா’, ‘வரமுலொஸகி’ ஐயையோ, ஐயையோ, ஒரே கதை.

    எந்த ஜில்லாவுக்குப் போ, எந்த கிராமத்திற்குப் போ, எந்த ‘வித்வான்’ வந்தாலும், இதே கதைதான். தமிழ்நாட்டு ஜனங்களுக்கு இரும்புக் காதாக இருப்பதால், திரும்பத் திரும்பத் திரும்பத் திரும்ப ஏழெட்டு பாட்டுக்களை வருஷக் கணக்காகக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். தோற் காது உள்ள தேசங்களிலே இந்தத் துன்பத்தைப் பொறுத்துக் கொண்டிருக்கமாட்டார்கள்.

    ‘பூர்வீக மகான்களுடைய பாட்டுக்களை மறந்து போய்விட வேண்டும்’ என்பது என்னுடைய கக்ஷியன்று. அவற்றை அர்த்தத்துடன் பாட வேண்டும்; பதங்களைப் பிழையாக உச்சரிக்கக் கூடாது. பதங்களை வாய்விட்டுத் தெளிவாகச் சொல்ல வேண்டும். விழுங்கிவிடக் கூடாது. பத்து முப்பது கீர்த்தனங்களையே ஓயாமற் பாடி ஸங்கீதத்தை ஒரு தொல்லையாகச் செய்து விடக்கூடாது.”
    தமிழில் கீர்த்தனைகளை பெரியசாமி தூரன், சுத்தானந்த பாரதியார் போன்றோர் பாடியிருக்கிறார்கள். ஆனால் எண்ணிக்கை போதாது. உலகளாவிய அளவில் ஒரு இசைப் பாடல் போட்டி வைத்து ஒரு நூறு கீர்த்தனைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். வெற்றிபெறும் கீர்த்தனைகளுக்கு பரிசும் கொடுக்கப்பட வேண்டும். தமிழ் நாடு அரசு இதனை முன்னெடுத்தால் நல்லது. இல்லாவிட்டால் வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை அதனை முன்னெடுக்க வேண்டும்.

    • kasi visvanathan says:

      நண்பரின் சிந்தனை சிறப்பாக உள்ளது. தமிழகத்தில் பல நூற்றாண்டுகளாக தமிழர் ஆட்சி நடைபெறவில்லை. மேலும் தமிழ் முழக்கமிட்டு வந்தவர்கள் எல்லாம் இனம் அழியப்பார்த்திருந்த ஈனப்பெருந்தகைகளாகவே இருந்தனர். ஆகவே இனி அரசு, அரசாங்கம் என்று எல்லாம் பார்க்காமல், தமிழ் வாழவேண்டும் என்று நினைக்கும் தமிழர்கள் ஒன்றிணைந்து தமிழ்ப் பாடல்கள் புணைந்து, அதனைக் கற்று ( இசை முறையும் தான் ) பழகி வழக்கப்படுத்திக்கொண்டால் – தமிழிசையும் தமிழும் வளரும். திருடப்பட்ட தமிழிசைதான் இன்று கர்-நாட்டிக் ( கரு நாட்டுப்பகுதியை குறிப்பது ) என்று நமக்கே கதை சொல்லும் கயமை. உணர்ந்தால் நாம் நம் பறி போன செல்வத்தை கையகப்படுத்தலாம்.
      குறிப்பு : பாவேந்தர் பாரதி தாசன் அவர்கள் எழுதிய ” இசை அமுது ” பகுதி – 1 மற்றும் 2, இசைத்தொகுப்புகளும் தமிழ் இசையின் வளர்ச்சிக்கு ஒரு முன்னோட்டம். இசையினை மக்கள் சார்ந்ததாக கொண்டுவந்த சங்கத்தமிழரின் மீட்சி.
      நிலம் சார்ந்து தரம் பிரித்து வாழ்ந்த தமிழரின் வாழ்வியல் பண்பாடே, தமிழிசையின் தொகுப்பு. இதனை தமிழ் பேசும் ஹிந்தியர்கள் உணர வேண்டும். நீச்ச பாஷை தான் இன்றைய துணைக்கண்டம் முழுமைக்கும் அறிவார்ந்த பண்பாட்டை பாடம் சொல்லியது. திருடியவர்கள் திருவாளர்கள் ஆனார்கள். பறிகொடுத்தவர்கள் தான் தெருவில் நிற்கின்றோம்.

      • சரவணகுமார் முத்துசாமி says:

        உண்மை…// * தமிழ் முழக்கமிட்டு வந்தவர்கள் எல்லாம் இனம் அழியப்பார்த்திருந்த ஈனப்பெருந்தகைகளாகவே இருந்தனர்.

        * பண்பாட்டை திருடியவர்கள் திருவாளர்கள் ஆனார்கள். பறிகொடுத்தவர்கள் தான் தெருவில் நிற்கின்றோம்//

        நேர்காணலில் கூறப்பட்ட கருத்துக்களும், அவற்றுக்கான நக்கீரன், தொல்காப்பியன், காசி.விஸ்வநாதன் ஆகிய நண்பர்களின் விமர்சனக் கருத்துக்களும் ஆக்கபூர்வமானவை…..

    • வே.தொல்காப்பியன் says:

      வரவேற்க வேண்டிய, செயல்படுத்த வேண்டிய அருமையான ஆக்க பூர்வமான திட்டம்.

  2. வே.தொல்காப்பியன் says:

    தமிழ் மொழி வரலாற்றில் புதுத் திருப்பம்

    இருபது ஆண்டுகளுக்கு முன்பு நானும் என் தம்பி திருவள்ளுவனும் தமிழ் மொழியை, அதன் இலக்கண, இலக்கியங்களைத் தமிழ்ப் புலவர், பேராசிரியர்களுக்கு அப்பாற்பட்டு அறிவியல், தொழில் நுட்பத் துறையினர் படித்தால் அவர்களின் பார்வையில் பல அரிய ஆய்வுகள் வெளிப்படலாம் என்று உணர்ந்து பேசிக் கொண்டு இருந்தது, இந்நேர்காணலைப் படிக்கும் போது நினைவுக்கு வந்தது.

    “நாம் தமிழ்ப் பண்பாட்டில் ஈடுபட்டிருப்பதால் அது எதற்கும் முரணானது கிடையாது.” (நேர்காணலில்) – ஆம், பிட்சா (pizza) சாப்பிடுவதற்கு இட்டளியை (இட்டு + அளி), தோசையை (தோயச் செய்வதால் தோசை) வெறுக்க வேண்டியதில்லை.

    பிற மொழி, இன, நாட்டினரின் ஆய்வுகள், கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பச் சாதனைகளை நாம் (நம்முடையது பிறருடையது என்ற உளவியல் உயர்வு தாழ்வுச் சிக்கலுக்குள்ளாகாமல்) கற்றுத் தேர்ந்து, பயிற்சி செய்து அனுபவிப்பது போல் தமிழ் மொழியின் இன்பத்தை போற்றவும் சுவைக்கவும் இயலும்; அதன் பண்பும் வாழ்க்கை அறமும் அன்றாட வாழ்வில் (கார், கை பேசி, கணணி போல்) பயன்படக் காத்திருக்கின்றன.. வாய்ப்பாகப் பிறப்பினால் நமக்குத் தமிழ் தாய்மொழியாக அமைந்து அந்தப் பணியை இலகுவாக்கியுள்ளது.

    தமிழ் ஓர் இன்பம், அதைத் தட்டில்லாது உண்போம்! http://tholthamiz.blogspot.com/2011/09/blog-post.html

    நாம் அறிவியல் செய்திகள், கருத்துகள், நுட்பங்கள், ஆய்வுகளைப் படிக்க ஆங்கில மொழியை நன்கு அறிந்திருப்பது எப்படி அதை இலகுவாக்குகிறதோ அது போல் தமிழ் மொழி நமக்குத் தாய்மொழியாக, வீட்டு மொழியாக அமைந்து, அதன் செல்வங்களைப் பயன்படுத்திக் கொள்வதற்கு வழி வகுத்துள்ளது.

    “அவ்வையார் பாடல்கள் போன்ற இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதை இன்றைக்கும் பள்ளிக்கூட மாணவர்கள் சரளமாகப் பயிலும் அளவிற்கு இருப்பது வியப்புக்குரியது.” (நேர்காணலில்)

    திரு. பெரியண்ணன் சந்திரசேகரன் (மற்றும் பல மொழி அறிஞர்களும் சுட்டிக் காட்டியுள்ளது போல்) தமிழுக்கு உள்ள இந்தத் தொடர்ச்சி (அதிலும் தமிழ் மொழி அரசு மொழியாகத் தொடர்ந்து இருந்து வரவில்லை என்பதையும் சேர்த்துப் பார்க்கும் போது) வியப்பிலும் வியப்பு! அது தமிழுக்கு என்று ஓர் உயிர் ஆற்றல் உள்ளது என்று நம்மை முடிவு செய்யக் கட்டாயப்படுத்துகிறது. அவ்வுயிர் தழைக்கப் பல வாய்ப்புகளில் தமிழைத் தாய்மொழியாய் அல்லாதோரின் உடலங்களையும் பயன்படுத்திக் கொண்டு உள்ளது என்றும் அதை உருவகப்படுத்திக் கொள்ள வைக்கிறது.

    “உண்மையான ஆர்வமும் உறுதியும் இருந்தால் போதும். அன்றாடம் கொஞ்சம் கொஞ்சமாக படித்துக் கொண்டிருந்தால்… ஓராண்டு இரண்டாண்டு பிறகு பத்து ஆண்டு கழித்துப் பார்த்தால் நமக்கே வியப்பாக இருக்கும்.” (நேர்காணலில்)

    இன்றைய துரித உணவுப் (fast food) பண்பாட்டை, அளவறியாப் போக்கை (problems of plenty) திருவள்ளுவர் உணர்ந்து திருக்குறளை (ஒன்றே முக்கால் அடியில் உலக வாழ்விற்கான சூத்திரங்கள்) எழுதியிருப்பாரோ என்று நினைக்கும்படியாக உள்ள திருக்குறளைப் படிப்பதில், கலந்து பேசுவதில், அன்றாட வாழ்வோடு ஒப்பிட்டு உணர்வதில், தமிழ் இலக்கண, இலக்கிய நுகர்வைத் தொடங்கலாம்.

    நல்லினமுடைமை (சிற்றினம் சேராமை – திருக்குறள் அதிகாரம் 46) – http://tholthamiz.blogspot.com/2011/03/blog-post_1157.html

    திரு பெரியண்ணன் சந்திரசேகரன் போன்றோரைத் ‘தமிழ்’ வாழ வைப்பதன் (being alive) மூலம் தான் வாழும், செழிக்கும், ‘சிறகு’ விரித்துப் பறக்கும்!

    வேம்பையன் தொல்காப்பியன்

அதிகம் படித்தது