மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அரசியல் வேண்டாம்!

ஆச்சாரி

Apr 15, 2012

நல்லது செய்தல் ஆற்றீராயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்
என்பது நம் பெரியோர் வாக்கு. “உங்களால் நல்லது செய்ய முடியாமல் போனால் போகட்டும், கெட்டதையாவது செய்யாமல் இருங்கள்” என்பது அர்த்தம். எவ்வளவு அர்த்தமுள்ள வாக்கு பாருங்கள்!

அண்ணா நூற்றாண்டு நூலகம் ஏறத்தாழ 170 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு, 2010 இல் அண்ணா பிறந்த நாளன்று திறக்கப்பட்டது. இந்தியாவில் மிகப் பெரிய நூலகம் மட்டுமன்று, தெற்கு ஆசியாவிலேயே இது இரண்டாவது நூலகம் என்கிறார்கள். (முதல் நூலகம் சிங்கப்பூரில் இருக்கிறதாம்.) இப்படிப்பட்ட ஒரு நூலகத்தைப் பெற்றிருக்க நாம் யாவரும் பெருமைப்படவேண்டும்.  தமிழ்நாட்டின் பெருமையே அதன் கல்வித்திறத்தில்தான் இருக்கிறது. முந்தைய  ஆட்சி கடைசியாகச் செய்த நல்ல காரியங்களில் முக்கியமானது இது. இந்த நூலகம் முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. எட்டு அடுக்குகள். ஒவ்வொன்றிலும் அருமையான புத்தகங்கள். மருத்துவமா,பொறியியலா, ஆங்கில இலக்கியமா, கணிப்பொறியியலா, எந்தத் துறையில் நூல் வேண்டும்? ஒரு தளத்திற்கு எழுபதாயிரம் முதல் எண்பதாயிரம் புத்தகங்கள். மொத்தம் ஆறு லட்சம் நூல்கள். குழந்தைகளுக்கென்று தனிப்பகுதி. பத்திரிகைகளுக்குத் தனிப் பகுதி. ஒரு முறை சென்று சுற்றிப்பார்த்து வந்தாலே புத்தகத்தின் அருமை தெரிந்தவர்களுக்கு அப்பா, இவ்வளவு பெரிய நூலகமா, இவ்வளவு வசதிகளுடனா என்ற மலைப்பு ஏற்பட்டுவிடுகிறது. எட்டாவது அடுக்கில் மட்டும் நிர்வாகம். பிற  அடுக்குகளில் எல்லாம் நல்ல நல்ல புத்தகங்கள்.

ஒவ்வொரு கட்டிடத்திற்கும் செல்ல படிகள், தானியங்கி (லிஃப்ட்),  நகர்வுதளம் (எஸ்கலேட்டர்)  உள்ளது. நாளிதழ்கள், சஞ்சிகைகள் என பொது நூல்களுக்கான தளமும் அங்கு உள்ளது. 2-வது தளத்தில் தமிழ் நூல்களும், 3-வது தளத்தில் ஆங்கில நூல்களும், 4-வது தளத்தில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்பட பல்வேறு மொழி நூல்களும் வைக்கப்பட்டுள்ளன. 5-வது தளத்தில் பத்திரிகைகளின் பழைய பதிப்புகளும், 6-வது தளத்தில் அரசு ஆவணங்களும், 7-வது தளத்தில் நன்கொடையாளர்கள் கொடுத்த நூல்கள் மற்றும் காணொளி, ஒலித் தொகுப்புகளும் இடம் பெற்றுள்ளன. புகைப்படத் தொகுப்புகளும், பிறவும் 8-வது மாடியில் அமைந்திருக்கிறன.

மாற்றுத் திறன் உடையோர் எளிதில் வந்து செல்லும் வண்ணம் தனிப் பாதை அமைக்கப்பட்டுள்ளதுடன், பார்வையற்றவர்கள் பிரெய்லி முறையில் படிக்கும் சிறப்பு நூலக அரங்கும் தரைத் தளத்திலேயே அமைந்துள்ளது சிறப்பானது.  பொதுமக்கள் ‘ஸ்மார்ட் கார்டு’ மூலம் இந்நூலகத்தைப் பயன்படுத்தலாம். தானியங்கி வசதி கொண்ட இணைய மின் நூலகம் உள்ளதுடன் யுனெஸ்கோவின் உலக இணைய மின் நூலகத்துடனும் அகலக் கற்றை (பிராட் பேண்ட்) மூலம் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த நூலகத்தின் முக்கியமான சிறப்பு குழந்தைகளுக்கான பகுதிதான். குழந்தைகள் தானாகவே செயல் வழிக் கற்றல் மூலம் படிக்கவும், ஆடிப் பாடி விளையாடவும், கணிணி மூலம் கற்கவும், பொழுது போக்கவும் மிகச் சிறப்பான வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான உள்நாட்டு, வெளிநாட்டுப் புத்தகங்கள் உள்ளன.  கண்ணைக் கவரும் ஓவியங்கள் சிறப்பு. குழந்தைகள் விளையாட தனியாக உள் விளையாட்டு அரங்கம் உள்ளது வெகு சிறப்பு. குழந்தைகளுக்கு வசதியாக முதல் தளத்திலேயே இவை அனைத்தும் அமைந்துள்ளன.

இதெல்லாம் போகட்டும். நீங்களே புத்தகம் கொண்டு சென்றால் அங்கே கீழ்த்தளத்திலேயே வசதியாக உட்கார்ந்து படிக்கலாம். பிற பகுதிகள் எல்லாம்  இரவு எட்டு மணிக்கே மூடப்படுகின்றன. சொந்தப் புத்தகம் கொண்டு செல்வோர்  படிக்கும் பகுதி ஒன்பது மணிக்குத்தான் மூடப்படுகிறது. எல்லாத் துறைகளிலும் அருமையான  நூல்கள் நிரம்பியிருக்கின்றன. எந்தப் படிப்பு படிப்பவர்க்கும் வாய்ப்பாக.
தினசரி சுமார் 1700 பேர் வந்து போகிறார்கள். சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களாக இருந்தால் இரண்டாயிரம் பேருக்குக் கூடக்குறைய வருகிறார்கள். சுமார் ஐந்தாண்டுகளில், இந்தத் தொகை இன்னும் பலமடங்கு பெருகும்.

ஏறத்தாழ நூறு நூலகர்கள் இதில் பணிபுரிகிறார்கள்.  எதை வேண்டுமானாலும் அரசாங்கம் செய்துகொள்ளட்டும், ஆனால் நூலகத்தை இடம் மாற்றுகிறோம் என்று அடாத செயல்களில் இறங்கி இவ்வளவு சிறப்புகள் கொண்ட நூலகத்தை சீரழிக்க வேண்டாம். படித்தவர்கள் அனைவருக்கும் நூலகங்களின் மதிப்பு நன்றாகத் தெரியும். இது தமிழக அரசுக்கும் தெரிந்திருக்கும்.


ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

முதற் கருத்து பதிவாகியுள்ளது- “அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அரசியல் வேண்டாம்!”
  1. kondrai vendhan says:

    //நல்லது செய்தல் ஆற்றீராயினும்
    அல்லது செய்தல் ஓம்புமின்// இதனை தமிழ் படித்தவர்களால் புரிந்து கொள்ள முடியும். எடுத்துச் சொல்ல முடியாது. ஆரிய வெறியன் ஹிட்லறுக்குப்பின் யூதர்களின் கடந்தகாலப் பதிவுகளை எல்லாம் தேடித்தேடி அழித்தது போல் சிங்கள வெறியன் ராஜபட்சேவும் அம்மையாரும் கூட்டணி எதுவும் கொண்டுள்ளார்களோ என்று எண்ணும்படி உள்ளது. யாழ் நூலகம்,சென்னை அண்ணா நூலகம், சமச் சீர் கல்வி,கூடங்குளம்,முதுமலைக் காட்டினை அழித்து உருவாக்கும் நியூற்றினோ தமிழர்களுக்கான முது மக்கள் தாழி, காவிரியும்,முல்லைப்பெரியாரும், சங்கம் வளர்த்த பாண்டியனாரின் மீனவர் குடி என்று பட்டியல் நீளுகிறது. இதுமட்டுமல்ல அம்மையாரைவிட வேகமாய் தன் மானத்தமிழர்கள் கருணா, கலாம் இவர்கள் எல்லாம் மேற்படி பாடல் , நல்லது செய்தல் ஆற்றீராயினும்
    அல்லது செய்தல் ஓம்புமின் என்பது புரிந்தால் சாலவும் நன்று. கட்டுரை மிக அருமை.

அதிகம் படித்தது