மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பட்டு- தயாரிப்பும், பயன்பாடும், பாதுகாப்பும்.

ஆச்சாரி

Dec 28, 2013

உலகமெங்கும் உன்னதமானதாக கருதப்படும் பட்டானது இயற்கையிலேயே கிடைக்கக்கூடிய ஒரு புரதத் தொடர்  நூலிழை ஆகும். இது ஒரு வகையான பட்டு கம்பளிப்புழுவின் (Silkworm) உமிழ்நீரானது காய்ந்து உருவாகும் நூலிழை ஆகும். இது இயற்கையிலேயே மென்மையான, இலகுவான, சாயமேற்ற உகந்த எளிதில் உறிஞ்சும் தன்மை கொண்ட, வெப்பத்தை எளிதில் கடத்தாத, உறுதிமிக்க, எளிதில் மடியும் (Drap) தன்மை போன்ற குணாதியங்களை கொண்டதாகும். இயற்கையிலேயே கிடைக்கக்கூடிய பட்ட வகைகள் மல்பெரி, டசார், எர்ரி மற்றும் மூகா என நான்கு வகையாகும்.

எல்லா வகையான பட்டும் மல்பெரியிலிருந்து வருபவை அல்ல. ஒவ்வொரு வகையும் அவற்றுக்கே உண்டான பிரத்தியேக குணாதிசயங்களை கொண்டவையாகும். இங்கு பல்வேறு பட்டினைப்பற்றிப் பார்ப்போம்.

மல்பெர்ரி:

இது மிகவும் பரவலாக எல்லோரும் அறிந்த பட்டு வகையாகும். மல்பெரி சில்க் இலகுவான, மிளிருகின்ற, மிருதுவான பட்டு வகையாகும். நமது நாட்டில் உற்பத்தியாகும் பெரும்பான்மையான பட்டுத் தயாரிப்புகள் அனைத்தும் இந்த வகை பட்டிலிருந்துதான் தயாரிக்கப்படுகின்றன. மல்பெரி கம்பளிப் புழுவானது (Silkworm) ‘மல்பெரி’ என்ற ஒருவகைச் செடியின் இலைகளையே உணவாக உட்கொள்ளும், பின் அது தன் முழுவளர்ச்சிக்காகத் தன்னைச்சுற்றி தன் உமிழ்நீரினால் ஒரு கூட்டினைக் (Cocoon) கட்டி, அதனுள் இருந்து முழுவளர்ச்சியடைந்து பட்டு பூச்சியாக வெளிவரும். அவ்வாறு பட்டுப் பூச்சியாக வெளிவருமுன்பே அந்த கூட்டினைப் பதப்படுத்தி அதிலிருந்து எடுக்கப்படும் நூலிழையே ‘மல்பெர்ரி சில்க்’ என்று அழைக்கப்படுகின்றது. இந்த வகைப் பட்டு முன்கூறிய பட்டிற்கே உரித்தான அனைத்து பிரத்தியேக குணாதியங்களையும் கொண்டது.

இந்தியாவின் வனப்பட்டு ரகங்கள்:

இந்தியாவின் வனப்பட்டு ரகங்கள், பட்டின் பெருமையினை பறைசாற்றக்கூடிய பதம், தன்மை, நிறம், பளபளப்பு ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியதாகும். இவை ஆடை வடிவமைப்புகள் முதல் வீட்டு ஜவுளிப்பொருட்கள் (Home Furnishing) வரை வடிவமைப்பாளர்களால் உபயோகப்படுத்தப்படுகின்றது. குறிப்பாக இவற்றின் வெப்பம் கடத்தா (Thermal property) குணாதியம் கோடைகாலத்திற்கும், குளிர்காலத்திற்கும், ஏற்ற தயாரிப்புகளைத் தயாரிக்க ஏதுவாக உள்ளது. இந்த வகைப் பட்டு தயாரிப்புகள் குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களிலும், மத்திய இந்திய மலைப்பிரதேசங்களிலும், மற்றும் கிழக்கிந்தியாவிலும் மிகவும் உயர்ந்த வேலைபாடுடன் கூடிய கலாச்சார அடையாளங்களாக உள்ளன. இந்த வனப்பட்டு ரகங்கள் மூன்று வகையாகும். அவையாவன டசார், எர்ரி மற்றும் மூகா ஆகும்.

டசார் பட்டு:

இந்த வகைப்பட்டு இயற்கையிலேயே பல்வேறு நிறங்களில் அதாவது மங்கலான வெண்மை முதல் தங்கப் பழுப்பு நிறம் வரை கிடைக்கிறது. இவ்வகைப்பட்டு சற்றே சொரசொரப்பாக மற்றும் சாயம் ஏற்ற ஏதுவானதாக உள்ளது. இந்த வகைப்பட்டு பருத்தி, கம்பளி மற்றும் பிற வகை பட்டு நூல் இழைகளுடன் கலந்தும் உபயோகப்படுத்தப்படுகிறது. மிகவும் பிரசித்திப் பெற்ற பாஃப்டா (Bafta) என்ற துணிவகை டசார் மற்றும் பருத்தி கலந்த நூல் இழைகளில் இருந்து தயாரிக்கப்பட்டது ஆகும். இந்த வகைப்பட்டு புழுவானது (Silkworm) அர்ஜுன், சால் மற்றும் அசன் போன்ற மரங்களின் இலைகளையே விரும்பி உண்ணுகின்றன. உலகின் இந்த வகைப்பட்டின் உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.

எர்ரி:

இந்தவகைப்பட்டு ‘என்டி’ அல்லது ‘எராண்டி’ எனவும் அழைக்கப்படுகிறது. ஆமணக்கு மற்றும் கேறு என்ற ஒரு வகை தாவரத்தின் இலைகளையே உண்ணும் எர்ரி கம்பளி பூச்சியின் கூட்டிலிருந்து இந்த வகைப்பட்டு கிடைக்கின்றது. இந்த வகைப் பட்டினை பருத்தி, கம்பளி, சணல் போன்ற நூலிழைகளுடன் கலந்தும் உபயோகப்படுத்த முடியும். இந்த வகைப்பட்டு துணிவகைகள் ஒவ்வொரு சலவைக்கு பின்பும் அதிகப் பளபளப்பைப் பெறுகிறது. இதன் வெப்பத்தை தக்க வைத்துக் கொள்ளும் குணாதிசத்தினால் இது பெரும்பாலும் குளிர் கால உடையாக உபயோகப்படுத்தப்படுகின்றது. இதிலிருந்து வீட்டு ஜவுளி உபயோகப் பொருட்களும் (Home Furnishing) மற்றும் பிற வடிவமைப்பு பொருட்களும் தயாரிக்கப்படுகின்றன.

மூகா:

தங்கத்தை போன்று தகதகக்கும் பிரத்தியேகமான நிறம் மற்றும் மென்மையான குணாதிசயத்தினால் இது வீடு ஜவுளி உபயோக பொருட்கள் மற்றும் பிற வடிவமைப்புப் பொருட்கள் தயாரிக்கக ஏதுவாக இருக்கின்றது. மற்ற பட்டு வகைகளை காட்டிலும் இந்த வகை பட்டு விலை மிக்கதாகும். பெரும்பாலும் அசாம் வடகிழக்கு மாநிலங்களில் விளையும் இந்த வகை பட்டின் கம்பளி புழுவானது சோம், சுவாலு என்ற மரவகைகளின் இலைகளையே விரும்பி உண்ணுகின்றன. பெரும்பாலும் வடகிழக்கு மாநில மக்கள் இந்த வகை பட்டினையே தங்கள் ஆடைகள் மற்றும் வீட்டு ஜவுளிப்பொருட்களுக்கு உபயோகப்படுத்துகின்றனர். இந்த வகைப்பட்டில் தயாராகும் பாரம்பரிய ‘சாலக் குச்சி’ வகைச்சேலைகள் மிகவும் பிரபலமானது.

பட்டினைப் பற்றி விவரிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமில்லை. பட்டானது பல்வேறு பிரத்தியேகமான ஒப்பற்ற குணாதியங்களை தன்னகத்தே கொண்டது. எனவேதான் பட்டினைப் பொதுப்படையாக மென்மையான, மிடுக்கான, பளபளக்கும் தோற்றம் உடையது என பல்வேறு வார்த்தைகளால் விவரிக்கிறோம்.

இப்படிப்பட்ட உன்னதமான குணாதிசயங்கள் கொண்ட பட்டினை வாங்கி அணிபவர்களுக்கு இருக்க வேண்டிய மகிழ்ச்சியும், கௌரவத்தையும் போலிப்பட்டு வகைகள் கிடைக்கவிடாமல் செய்து விடுகின்றன. இன்றைய காலகட்டத்தில் ஒருவர் பட்டினைப் பற்றி எவ்வளவு நன்றாக அறிந்தவராக இருப்பினும் ஏமாறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது என்பதும் உண்மை. இப்படிப்பட்ட தருணத்தில்தான் “சில்க் மார்க்” உங்களுக்கு உதவ முன்வருகிறது.

சில்க் மார்க் அமைப்பு எவ்வாறு இயங்குகிறது:

சில்க் மார்க்கினை உபயோகிக்க விரும்பும் எந்த ஒரு சிறு வியாபாரி விற்பனையாளர், நெசவாளர், ஏற்றுமதியாளர், உற்பத்தியாளர் என யாராக இருப்பினும் முதலில் இந்திய சில்க் மார்க் நிறுவனத்தில் உறுப்பினராக வேண்டும். பின்பு அங்கீகரிக்கப்பட்ட உபயோகிப்பாளருக்கான விண்ணப்பபடிவத்துடன், இந்திய சில்க்மார்க் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். விண்ணப்பப் படிவத்தை பதிவுசெய்த பின் இந்திய சில்க் மார்க் நிறுவனத்திலிருந்து சில்க் மார்க் அதிகாரி தங்கள் நிறுவனத்திற்கு வருகை செய்து ஒரு ஆய்வு அறிக்கையைச் சமர்ப்பிப்பார். தங்கள் நிறுவனத்தின் பிரதிநிதிகளுக்கு பட்டு மற்றும் சில்க் மார்க் பற்றிய பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு அங்கீகரிக்கப்பட்ட உபயோகிப்பாளரான பின்பே தாங்கள் சில்க் மார்க்கினை உபயோகிக்க முடியும், மற்றும் சில்க்மார்க் முத்திரையைத் தங்கள் நிறுவன விளம்பரங்களில் உபயோகிக்க முடியும்.

உங்கள் பட்டினை பரிசோதித்துக்கொள்ள…:

நீங்கள் வாங்கிய சில்க் மார்க் இணைக்கப்பட்ட பட்டுத் துணிகளில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் நீங்கள் அதனைச் சில்க் மார்க் நிறுவனத்தின் அலுவலகங்களுக்குச் சென்று இலவசமாகப் பரிசோதித்துக் கொள்ள முடியும். நீங்கள் வாங்கிய சில்க் மார்க் இணைக்கப்பட்ட பட்டுத் துணிகளில் ஏதேனும் மாற்றம் இருப்பின், அதனை உங்களுக்கு விற்பனை செய்த அங்கீகரிக்கப்பட்ட உபயோகிப்பாளர் அதற்கான உரிய இழப்பீட்டினை வழங்க சில்க் மார்க் நிறுவனம் ஆவண செய்யும்.

பட்டு வாடிக்கையாளர்களுக்கான சில குறிப்புகள் – பட்டு வாங்கும்போது:

1.    சில்க்மார்க் முத்திரை இணைக்கப்பட்ட பட்டுத் தயாரிப்புகளையே கேட்டு வாங்கவும்.

2.    ‘பட்டு’ என்ற பெயர் கொண்ட அனைத்து விற்பனை நிலையங்களில் விற்கப்படும் துணிகள் அனைத்தும் பட்டு அல்ல.

3.  பளபளக்கும் அனைத்தும் பட்டு அல்ல, எனவே பட்டு வாங்கும்போது ஏமாறாமல் இருக்க கவனத்துடன் இருக்க வேண்டும்.

4.    குறைந்த விலை உள்ளது என்று பட்டு அல்லாதவற்றை பட்டு என்று எண்ணி வாங்குவதை தவிர்ப்பீர்.

5.    காஞ்சிபுரம், தர்மாவரம், ஆரணி, திருபுவனம் மற்றும் பனாரஸ் போன்ற பாரம்பரிய மிக்க இடங்களில் தயாரிக்கப்படும் பட்டு தயாரிப்புகள் அனைத்தும் அந்த அந்த இடத்திற்கேற்ற கலாச்சாரத் தொழில் நுட்ப வடிவங்களில் தயாரிக்கப்படுகின்றன. ஆனால் அவை அனைத்திலும் உபயோகப்படுத்தப்படுவது ஒரே வகையான பட்டு ஆகும்.

சலவைக் குறிப்புகள்:

1.    எப்போதும் மென் தன்மையுள்ள நீரினையே (Softwater) சலவைக்குப் பயன்படுத்தவும்.

2.    கார அமிலமில்லாத நடுநிலைச் சோப்புக் (Neutral Soap) கரைசலையே உபயோகிக்கவும்.

3.    வெதுவெதுப்பான (LukeWarm water) நீரில் சலவை செய்வதே உகந்தது.

4.    துவைத்த பின் இரண்டு அல்லது மூன்றுமுறை அலசி சோப்பினை முற்றிலுமாக அகற்றிவிட வேண்டும்.

5.    பின் சிறிதளவு சிட்ரிக் அமிலம் அல்லது அசிடிக் அமிலம் கலந்த நீரில் அலசி எடுக்கவும்.

6.    சாயம் போகும் என்ற சந்தேகம் இருப்பின் சிறிதளவு சிட்ரிக் அமிலம் அல்லது அசிடிக் அமிலம் கலந்த நீரில் ஒரு சில நிமிடம் ஊர வைத்து பின் சலவை செய்யவும்.

துணி தேய்க்கும் போது கவனிக்க வேண்டியவை:

1.    எப்போதும் குறைந்த மற்றும் மிதமான வெப்பத்திலேயே இஸ்திரி செய்ய வேண்டும்.

2.    இஸ்திரி செய்யும்போது, பட்டுத் துணியில் நீரினை தெளிக்கவோ அல்லது ஈரத் துணியினால் ஒற்றி எடுக்கவோ கூடாது.

3.    குறிப்பாகப் பட்டுத் துணிகளை எப்போதும் உள்பகுதியிலேயே (Reverse side) இஸ்திரி செய்ய வேண்டும்.

பட்டினைப் பத்திரப்படுத்தும் போது கவனிக்க வேண்டியவை:

1.    பட்டுத் துணிகளை சுத்தமான ஈரபதமற்ற இடங்களிலேயே பாதுகாத்து வைக்க வேண்டும்.

2.    நீண்டநாள் உபயோகத்தில் இல்லாமல் இருப்பின், இடை, இடையே சிறிது நேரம் நிழலில் உலர்த்தி பின் மாற்றி மடித்து வைக்க வேண்டும்.

3.    பட்டினை பூச்சி, தூசி, அதிகப்படியான ஈரப்பதம் மற்றும் அதிக வெளிச்சம் போன்றவற்றிலிருந்து பாதுகாப்பாக வைக்க வேண்டும். மர, இரும்பு மற்றும் பிளாஸ்ட்டிக் போன்றவற்றின் மீது நேரடியாகப் படுமாறு வைக்கக்கூடாது.

4.    நிறத்தினைப் பாதுகாக்க பட்டு துணிகளை வெண்மையான பருத்தித் துணியில் சுற்றி வைக்க வேண்டும்.

5.    பட்டினைப் பத்திரப்படுத்தி வைக்கும் இடங்களில் சிலிக்கா பாக்கெட்டுகளை (Silica Sachets) உபயோகிக்கவும்.

Maintain complete, accurate notes regardless of the format used, any notes you take should include enough information to help you organize ideas and http://www.domyhomework.guru/ locate them instantly in the original text if you need to review them

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பட்டு- தயாரிப்பும், பயன்பாடும், பாதுகாப்பும்.”

அதிகம் படித்தது