மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பர்பியாய் இரு – பர்பி திரைப்பட விமர்சனம்

ஆச்சாரி

Oct 15, 2012

“பர்பியாய் இரு” (be barfi) என்று செய்தி சொல்கிறார் இப்படத்தின் இயக்குனர் அனுராக் பாசு. அவ்வாறு வாழ முடிந்தால் அது உண்மையிலேயே ஒரு வரம் தான். இந்த திரைப்படத்தில் வரும் பர்பிக்கு, ஒரு சிறந்த அழகியை கண்டவுடன் காதல் வந்துவிடுகிறது. அதை அந்த நிமிடமே அவளிடம் மிகுந்த ரசனையுடன் சொல்லவும் முடிகிறது. அவள் அதை நிராகரிக்கும் நிமிடத்தில், அவளது தோழியிடம் உடனே காதல் மனுவை போடவும் முடிகிறது.

தமிழ் திரைப்படங்களின் போக்கை தொடர்ந்து அவதானித்து வரும் நமக்கு, இந்தியில் வெளிவந்து சக்கை போடு போட்டுக்கொண்டு இருக்கும் பர்பி திரைப்படம் பார்க்கையில், கொஞ்சம் கவலை தோன்றத் தான் செய்கிறது. தமிழில், இப்படி ஒரு படம் வர முடியுமா? என்று.

பர்பி(ரன்பீர் கபூர்) காது கேளாத, வாய் பேச முடியாத ஒரு அழகு இளைஞன். இயற்கை தனது அழகையெல்லாம் கொட்டி வரைந்திருக்கும் மலை முகடுகளில் ஒன்றான டார்ஜிலிங்கில் வசிக்கிறான். தந்தைக்கு ஏற்படும் வேலை மாற்றல் காரணமாக, டார்ஜிலிங் வரும் சுருதியை (இலியானா ) கண்டவுடன் காதல் கொள்கிறான். சுருதி ஏற்கனவே திருமணம் நிச்சயிக்கப்பட்டவள் என்று தெரிந்தும் காதலிக்கிறான். பர்பியின் சாகசங்கள், குறும்பு கொண்ட விளையாட்டுத்தனம் சுருதியை வெகுவாக கவர்கின்றன. அவளும் பர்பியை விரும்புகிறாள்.

விஷயம், சுருதியின் அம்மாவுக்கு தெரியவர, தனது பழைய காதல் அனுபவத்தை அறிவுரையாக சொல்லி, சுருதியின் மனதை மாற்றுகிறாள். அவளுக்கு நிச்சயம் செய்யப்பட்ட மணமகனையே மணம் முடித்து, கொல்கத்தா செல்கிறாள் சுருதி. காதலில் தோற்று விரக்தியுடன் இருக்கும் பர்பியின் தந்தைக்கு சிறுநீரகம் பழுதடைகிறது. ரண சிகிச்சைக்கு பணம் தேடி அலையும் பர்பி, தனது சிறுவயது பணக்காரத் தோழியான, ஆட்டிச பாதிப்புக் கொண்ட ஜில்மில்லை(பிரியங்கா சோப்ரா) கடத்திச் சென்று பணம் பறிக்க திட்டமிடுகிறான். இதில் நடக்கும் குளறுபடிக்கு நடுவில், ஜில்மில்லுக்கு தன் மேல் உள்ள பாசத்தை அறிந்து, அவளை பர்பி நேசிக்க தொடங்குகிறான். டார்ஜிலிங் காவல் அதிகாரி(சௌரப் சுக்லா) இருவரையும் தேடத் துவங்க, ஜில்மில்லும், பர்பியும் கொல்கத்தா வர நேர்கிறது.

தற்செயலாக, கொல்கத்தாவில்  தான் வேலை செய்யும் இடத்தில் பொருள்கள் வாங்க வரும் சுருதியை பர்பி பார்க்க நேர்கிறது. அவளை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று, ஜில்மில்லை அறிமுகம் செய்து வைக்கிறான். ஒருநாள், மூவரும், கடைவீதியில் சிற்றுண்டி சாப்பிடுகையில், ஜில்மில் காணாமல் போகிறாள். ஜில்மில் கிடைத்தாளா? சுருதியின் வாழ்க்கை என்ன ஆனது? பர்பியின் கதி என்ன? என்ற பல கேள்விகளுக்கு விடையுடன் படம் முடிவடைகிறது.

நமது தென்னிந்திய நடனக்குழு ஒன்று, மும்பை சினிமா நட்சத்திரங்களை, அவர்களது படங்களில் குத்தாட்டம் போடவைத்து நகைச்சுவை செய்து கொண்டிருப்பதாக படித்து, பூரித்துக் கிடந்த எனக்கு, பர்பியின் பாடல்களை திரையில் பார்க்கையில் திகிலாக இருந்தது. எப்படி இவரால் மட்டும் கவிதை, கவிதையாய், கவிதைத் தீற்றலாய்(வேறு சரியான வரிகள் அகப்படவில்லை)பாடல்களை காட்சிப்படுத்த முடிந்தது? மற்ற இந்தி நடிகர்கள், தங்களது திரைப்படங்களில், தலையில் பல்வேறு வண்ணங்களில் துண்டை கட்டிக்கொண்டு நொண்டி அடித்துக்கொண்டிருக்க (நன்றி:பிரபு தேவா), ரன்பீர் இந்த படத்தில் கில்லி அடித்திருக்கிறார்.

ரன்பீரின் கதாப்பாத்திரம் ஒரு கனவுப் பெட்டகம். இந்தி(ய) திரைப்படத்தின் காலப் பெட்டகத்தில் பொதிந்து கொண்டு, நெடுங்காலம் வீற்றிருக்கும் வல்லமை இதற்கு உண்டு. சுருதியின் வீட்டிற்கு வெளியே தனது ஏழ்மை நிலையையும், அவளது வருங்கால கணவனின் செல்வச் செழிப்பையும் கோபத்தோடு சைகை மொழியில் சுருதியிடம் சொல்லும்போது, மேகங்கள் திரண்டு இடிக்கும் சின்ன சின்ன இடியோசையே பின்னணி இசையாக, சுருதி கண்ணீர் விட்டு அழுகிறாள், மழை பெய்து கொண்டே இருக்கிறது. நாம் அக்காட்சிக்குள் கரைந்து கொண்டே இருக்கிறோம்.

இலியானாவை தமிழில் நடிக்க வைக்க பிரம்மப்  பிரயத்தனப்பட்டு, நண்பன் படத்தில் நடிக்கச் செய்து, ஒரு துருக்கிய பாணி பாடலுக்கு நடனமாடவிட்டு, நம்மவர் களிப்பேருவகை அடைந்தனர். ஆனால், இந்த படத்தில், அவரை ஒரு தேர்ந்த நடிகையாய் அனுராக் பாசு வார்த்திருக்கிறார்.

இக்கதாபாத்திரத்தில் காத்ரீனா கைபை முதலில் கேட்டு இருக்கிறார்கள். அவருக்கு தேதி இல்லாததால், இலியானாவுக்கு இந்த வாய்ப்பு கிட்டியிருக்கிறது. அதிர்ஷ்டம் தான்.

மூன்றாவதாக, ஜில்மில் சட்டர்ஜி, மன்னிக்கவும், நான் இன்னும் முன்னாள் உலக அழகி பிரியங்கா சோப்ராவை மனதில் கொண்டுவர முடியவில்லை. ஜில்மில் என்ற கதாபாத்திரமே எனக்கு போதுமானதாக இருக்கிறது. நம்மிடையே மிகத் திறமையான நடிகைகள் இருக்கின்றனர். அவர்களை பண்படுத்தி, தேவையான நடிப்பாற்றலை வெளிக்கொணரும் இயக்குனர்களே அவசரத் தேவை. ஆட்டிச பாதிப்பு கொண்ட ஒரு பெண்ணின் உடல் அசைவுகள், குளறும் வார்த்தைகள் என மிகுந்த பின்புல உழைப்பு தேவைப்பட்டு இருக்கும் இந்த கதாபாத்திரத்தை அத்தனை நேர்த்தியாக பிரியங்கா செய்திருக்கிறார்.

தமிழர் ரவிவர்மனின் ஒளிப்பதிவு இப்படத்தை ஒளி ஓவியமாக்கி இருக்கிறது. அதிக வசனங்கள் இல்லாத, பாடல்கள் நிறைந்த, பெரும்பாலும் மழைப் பிரதேசத்தில் எடுக்கப்பட்ட இப்படத்தின் முக்கால்வாசிக் கதையை ரவி வர்மனின் ஒளிப்பதிவே சொல்கிறது.

இவர்களைத் தவிர, டார்ஜிலிங் காவல் அதிகாரியாக வரும் சௌரப் சுக்லா (ஹே ராம், சத்யா படங்களில் நடித்தவர்) தனித்து தெரிகிறார். அவரோடு  சேர்ந்து அவரது தொந்தியும் நடிக்கிறது.

காது கேளாத, வாய் பேச இயலாத ஒரு மனிதனின் வாழ்க்கையில் எத்தனையோ சுவராஸ்யங்கள் அளித்து, நேர்மறை சிந்தனையோடு காட்சிப்படுத்தி,  உடல் ஊனமுற்றவர்களை சுய பச்சாதாபத்திற்குள் தள்ளும் போக்கை சுக்குநூறாக உடைத்து இயக்குனர் அனுராக் பாசு வெற்றி அடைந்திருக்கிறார்.  செய்தி சொல்கிறேன் என்ற போர்வையில் அவர், அறிவுரை -ஆவணப் படத்தை உருவாக்கவில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

அனுராக் பாசு சொல்வதைப் போல, முடிந்தால், ஒரு நாளாவது பர்பியைப் போல் வாழ்வை எதிர்கொள்வோம்.

Be sure to include study time, chores, tv time, sports activities, entertainment, and anything else your character might need or want https://www.pro-academic-writers.com/ to do each day during the week

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

முதற் கருத்து பதிவாகியுள்ளது- “பர்பியாய் இரு – பர்பி திரைப்பட விமர்சனம்”
  1. Muthukumar says:

    This movie does not deserve such a huge credit as given in this review. We have wonderful movies in Tamil like Anjali, Guna, Mozhi, Moondraam pirai, etc on the similar plots… The reviwer seems to be a stranger to tamil films. Sick.

அதிகம் படித்தது