பள்ளிக் கல்வியும் மாணவர்களும்
ஆச்சாரிFeb 1, 2014
ஒவ்வொரு ஆண்டும் தொடங்கும் பொழுது மூன்று வயது ஆன குழந்தைகளின் பெற்றோர்கள் பெருமளவு மனபாதிப்புக்கு உள்ளாகிறார்கள். குழந்தையை “எந்தப் பள்ளியில் சேர்ப்பது” என்பது தான் அவர்களின் தலையாய பிரச்சனையாக இருக்கிறது. 15 வருடங்களுக்கு முன் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை நிச்சயமாக இல்லை. ஏன் இப்படி ஒரு மாற்றம் என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
25 வருடங்களாக கல்வித்துறையிலேயே இருந்து தேர்ச்சிபெற்ற, ஒரு மனித நேயமிக்க கல்வியாளரை சந்தித்தோம். அப்படி நமக்கு இங்கு அறிமுகமானவர் திருமதி.சுபலா அனந்த நாராயணன் அவர்கள். அடையாரில் உள்ள சங்கரா சீனியர் வித்யாலயாவின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர். பார்த்ததுமே பலநாள் பழகியதைப்போன்றதொரு உணர்வு.
இன்றைய மாற்றங்களுக்கான காரணங்களை அவர் விளக்கிய விதம், அவர் இந்தத் தலைமைப் பொறுப்பிற்கு எவ்வளவு பொருத்தமானவர் என்பதை நமக்கு உணர்த்தியது.
இன்றைய மாற்றத்திற்குக் காரணமாக இருப்பது பெருகிவரும் மக்கள்தொகையும், வளர்ந்து வரும் வசதிகளும், வாய்ப்பும்தான். தன் குழந்தையின் திறமைக்கு ஏற்ற பள்ளியைத் தேர்ந்தெடுப்பது என்பதுதான் குழந்தையின் எதிர்காலத்தை உருவாக்கும் முதல் படியாகும். ஆனால் அதைத் தவிர்த்து தாய், தந்தை இருவரும் வேலைக்குச் செல்பவர்கள், தாங்கள் பணிக்குச் செல்லும்பொழுது குழந்தையை பள்ளிக்குக் கொண்டுபோய் விட்டு, பணியில் இருந்து திரும்பி வரும்பொழுது அழைத்து வர வசதியான பள்ளிகளாக பார்ப்பது, பள்ளிகளில் சேர்க்க நெருக்கடியை ஏற்படுத்துகிறது. அரசு பள்ளியானாலும், தனியார்பள்ளி என்றாலும் பாடத்திட்டம் ஒன்றுதான், நடத்துகிற முறையும் ஒன்றுதான்.
நகரின் பிரபலமான பகுதிகளில் தங்கி, அங்கே உள்ள பள்ளிகளில் சேர்ப்பதை ஒரு பெருமையாக நினைப்பதும் பள்ளிசேர்க்கையில் நெருக்கடியை ஏற்படுத்துகிறது.
அடுத்தபடியாக நாம் கேட்டது பள்ளிமாணவர்கள் வன்முறையில் ஈடுபடக் காரணம் என்ன? ஆசிரியர்கள் மாணவர்களை கடுமையாக தண்டிப்பது, உடல்ரீதியாக பாதிப்பு ஏற்கும் வகையில் நடந்து கொள்வது ஆகியவற்றை எப்படி தவிர்க்கலாம்? என்பது.
பொறுப்பாக தன் மாணவர்களை, எல்லா வகையிலும் கண்காணிப்பதை ஒவ்வொரு ஆசிரியரும் தன் கடமையாகக் கொண்டு ஆர்வமாக செயல்படவேண்டும். அப்படி கண்காணிக்கும் பொழுது காணும் தவறுகளை மிகவும் எளிமையான முறையில் எடுத்துச் சொல்லி அவர்கள் மீண்டும் அந்தத் தவறு செய்யாத மனநிலையை ஏற்படுத்த வேண்டும்.
தான் ஆசிரியர் தன்னை யாரும் அணுகமுடியாது என்ற எண்ணத்தை மாணவர்களிடம் ஏற்படுத்தக்கூடாது. முறையாக ஆசிரியரை அணுகினால், தனக்கு சரியான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையை மாணவர்களிடம் ஏற்படுத்த வேண்டும். மாணவர்கள் பிரச்சனை என்று வரும்பொழுது அவர்கள் தரப்பு நியாயத்தை எடுத்துச் சொல்ல அவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். அவர்கள் பேசிய பின் அதில் உள்ள தவறுகளை மென்மையாக சுட்டிக் காட்டி அவர்கள் செய்தது தவறு என்று புரியவைக்க வேண்டும். பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் விருப்பங்களை குழந்தைகளிடம் வலுக்கட்டாயமாகத் திணிக்கும் பொழுது குழந்தைகள் அதை எதிர்க்க நினைத்து வன்முறையில் ஈடுபடுகிறார்கள்.
தனி மனித ஒழுக்கம் மனிதவள மேம்பாடு (Personality Development) என்பது ஒரு பாடத்திட்டமாகக் கொண்டு வரப்பட்டால் மேற்கூறிய குறைகளை நீக்கமுடியுமா என்ற கேள்வியை வைத்தோம்.
தனியான பாடத்திட்டங்கள் எதுவும் இந்த குணங்களை வளர்க்காது. பள்ளிக்காலம் முழுவதுமே இந்த குணங்களை அடிப்படையாகக் கொண்டு செயல்படவேண்டும். இயற்கை சீற்றங்கள் ஏற்படுத்தும் பாதிப்பை உணரவைத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும். விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக சாலைகளின் வாகனப்போக்குவரத்துப் பணிகளில் மாணவர்களை தகுந்த ஆசிரியர்களின் கண்காணிப்புடன் ஈடுபடுத்த வேண்டும். அவர்களின் தன்னம்பிக்கையைத் தூண்டும் விதமாக பல்வேறு தலைப்புகள் கொடுத்து அவர்களின் திறமையை வெளிக்கொண்டுவரவேண்டும். பிற பள்ளிகளின் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அவர்களின் திறமைகளை வெளிப்படுத்த சந்தர்ப்பம் அமைத்துக்கொடுக்க வேண்டும். ரத்ததானம், உடல் உறுப்புகள் தானம் போன்ற முக்கிய செயல்களின் முக்கியத்துவம் மாணவர்களுக்குக் கற்றுத்தரப்பட வேண்டும். நடைமுறைக்கு ஏற்ப சில சமூக சீர்திருத்தக் கருத்துக்கள் கொண்ட நாடகங்கள், மாணவர்களே தயார் செய்து நடிக்க வேண்டும். அவற்றில் எவ்வகையான திருத்தங்கள் செய்தால் மேலும் நன்றாக அமையும் என்பதை ஆசிரியர்கள் அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.
பாடத்திட்டத்தில் என்ன மாற்றங்கள் கொண்டு வருவதன் மூலம் மாணவர்களின் தரத்தை உயர்த்த முடியும்? என்பது அடுத்த கேள்வியாக இருந்தது.
இதற்கு திருமதி.சுபலா அனந்த நாராயணன் கூறியபதில் மிகவும் என்னை ஆச்சரியப்படுத்தியது.
CBSEயில் (Centre Board of Secondary Education) நமக்கு நிறைய பாடத்திட்டங்களைக் கொடுத்து பாடமாக இருக்கிறது. சி.பி.எஸ்.சி யில் ஆங்கிலத்தைக் கட்டாயப்பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் பொருளாதாரம் (Economics), அறிவியல் (Science) என்று கூட எடுத்துக்கொள்ள முடியும். ஆனால் எங்களிடம் படித்து முடித்து கல்லூரிக்குப் போகும் பொழுது அறிவியல் படிப்பவர்களுக்கு பொருளாதாரம் மறுக்கப்படுகிறது. பள்ளிப் பாடத்திட்டங்கள் மாணவர்களின் விருப்பம்போல படிக்க வழிவகை செய்தாலும் கல்லூரி பாடத்திட்டம் அறிவியல்,பொருளாதாரம்,வணிகவியல்(Commerce) என்று ஏதாவது ஒன்றுதான் கிடைக்கும் படியாக அமைக்கப்பட்டுள்ளது.
கல்லூரிக்கல்விதான் வேலைவாய்ப்புக்கான தளம் என்பதால் எங்கள் மாணவர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வாய்ப்பு எங்களுக்கு இருந்தும் செயல்பட முடியாமல் போகிறது. எனவே மாணவர்களின் கல்வித்தரம் உயரவேண்டுமானால் கல்லூரி பாடத்திட்டத்தில் அறிவியலுடன் வணிகமோ, பொருளாதாரமோ எடுத்துக் கொள்ளலாம் என்ற மாற்றம் வரவேண்டும். கல்லூரி பாடத்திட்டத்தில் மாறுதல் வருமெனின் அதற்கேற்ப பள்ளிகள் செயல்படமுடியும். மேலும் எல்லா பள்ளிகளிலும் அப்பள்ளிக்கான செய்தி இதழ் ஒன்று வெளியிடப்படவேண்டும். தன் திறமைகளை தன் பள்ளியிலும் மற்ற பள்ளிகளின் போட்டிகளிலும் மற்றும் சிறந்த சமூக அமைப்புகளின் பரிசுகளையும் பெறும் மாணவர்களின் படத்துடன் கூடிய செய்திகள் ஆவணப்படுத்தப்பட வேண்டும். இந்த முறை பரிசு பெற்றவர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதுடன் மற்ற மாணவர்கள், தங்களும் இதுபோல் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் என்றார்.
முடிவாக ஆசிரியர்கள் தாங்கள் ஒரு முன் மாதிரியாகத் திகழ்ந்து மாணவ சமுதாயத்திற்கு நல்லஒழுக்கத்தையும், தன்னம்பிக்கையும் கொடுக்க வேண்டும் என்றார். நகரில் உள்ள சிறந்த பள்ளியின் தலைமை பொறுப்பில் இருக்கும் தனக்கு எண்ணம் உங்களுடையது, செயல்பாடு எங்களுடையது என்று ஆர்வமாக சொல்லக்கூடிய ஆசிரியர்கள் அமைந்தது ஒரு பெரியவரம் என்றார்.
மனநிறைவோடும், மகிழ்வோடும் விடைபெற்ற எனக்கு மாணவர்களுக்காகவே தன் சொல், செயல் என்று வாழும் திருமதி.சுபலா அனந்த நாராயணன் அவர்களை வாழ்த்தி வணங்க வேண்டும் என்று தோன்றியது.
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “பள்ளிக் கல்வியும் மாணவர்களும்”